அத்தியாயம்- 23

பாகம் -23

இரண்டு  மூன்று முறை பொறுத்திருந்தவள் அதற்கு அடுத்த முறை இவன், ” என்னடி நான் தூங்குவதை போலவே தூங்கவில்லை. என்ன பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறாய். எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் ,அவள் அப்படியே என்னை மாதிரி செய்திருப்பாள்.. “

அவளுக்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ. ஆத்திரமாய் கத்தத் தொடங்குகிறாள் ..ஏற்கனவே இப்படி கத்தி பிரச்சனை ஆனதால் தான் அவன் கொஞ்சம் விட்டுக் கொடுத்து அந்த பேச்சை எடுக்காமல் இருந்தான்..இதுதான் இரண்டு பேருக்குமே பைத்தியம் பிடித்து விட்டதே…

 அவள் கத்தவும் கயலும் அவர்கள் அறைக்கு ஓடி வந்து விடுகிறார்கள். மித்ரா மாமியாரைக் கண்டதும் இன்னும் வேகமாக கத்துகிறாள் ..

“என்னமோ ஒரே ஒரு பிள்ளையை பெற்று சிரிப்பாய் சிரிக்கிறேன் என்று சொன்னீர்களே அத்தை.. நீங்கள் நன்றாகத் தான் இருக்கிறீர்கள் .நீங்களும் மாமாவும் சமைத்ததை சாப்பிட்டு விட்டு உங்கள் அறையில் இருக்கும் டிவியில் படத்தைப் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறீர்கள். நான் தான் உங்கள் மகனிடம் மாட்டிக் கொண்டு சிரிப்பாய் சிரிக்கிறேன். நீங்கள் சொன்னதை போலவே இவனையும் தனியாக வளர்த்தால் சரி வராது என்று அடுத்த குழந்தை பிறப்பதற்கு இவங்க கிட்ட கேட்டா அதற்கும் பதில் இல்லை.. “

“எதற்கெடுத்தாலும் என்ன என் பிள்ளையை குற்றம் சாட்டிக் கொண்டு.. எனக்கு இங்கே இருப்பதற்கே பிடிக்கவில்லை அத்தை..என் அம்மா வீட்டிற்கும் போய் என்னால் வாழ முடியாது..எனக்கு எங்கும் போக்கிடமும் கிடையாது.. பேசாமல் எனக்கும் என் பிள்ளைக்கும் விஷத்தை வாங்கி கொடுங்கள் ..சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு செத்துப் போய் விடுகிறோம்.. அப்பொழுதாவது நீங்கள் மூன்று பேரும் நிம்மதியாக இருக்கிறீர்களா என்று பார்க்கிறேன்.. “சொல்லி விட்டு ஓவென  அழுகிறாள் ..

“என்னடி பேச வேண்டியது எல்லாம் நீ பேசி விட்டு சும்மா நடிக்கிறாயா.. என்னை பேசியதோடு இல்லாமல் என் அம்மாவையும் அப்பாவையும் வேறு சேர்த்து பேசத் தொடங்கி விட்டாயா..” சொன்னவன் அவளைத் தொடங்குகிறான்.

” உங்களுக்கு என் வாயிலிருந்து இந்த வார்த்தை வர வேண்டும் என்று தானே இதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.. ஆமாம் இவன் உங்கள் பிள்ளை இல்லை. வேறு யாருக்கோ பிறந்தவன் தான். இப்பொழுது என்ன செய்ய முடியும். ” விடாமல் அடித்துக் கொண்டே இருந்தவன் அவள்  சொன்ன செய்தியைக் கேட்டதும் அப்படியே கைகளை கீழே இறக்கி விட்டு விட்டு அவனும் அழத் தொடங்குகிறான் …

” கடைசியா நீ இதைதான்டி சொல்லுவேன்னு நான் நினைச்சேன். அதை சொல்லி விட்டாயேடி..”

ஒரு நிரபராதியை குற்றவாளி என்று சொல்ல வைக்கும் கல்நெஞ்சக்காரர் தானே நீங்க..  நான் இல்லை இல்லை என்று சொன்ன போதெல்லாம் என்னை குத்தி காட்டிக் கொண்டே இருந்தீர்கள்.. நான் இந்த ஒரு வார்த்தை சொன்னதும் நீங்கள் நிஜம் என்று நம்புகிறீர்கள் ..நான் எப்பொழுது என் வாயிலிருந்து இந்த வார்த்தையை சொல்வேன் என்று தானே காத்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள் இத்தனை காலமாய் ..அப்படி என்றால் உங்களுக்கு என் மீது தானே சந்தேகம்.. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் போங்க .. “

இதற்கு மேலும் பேசிக் கொண்டே இருந்தால் இன்னும் பிரச்சினை தான் ஆகும் என்று கயல் அரவிந்தன் முதுகில் இரண்டு அடிகளை போட்டு வெளியே இழுத்து வருகிறார் ..

“ஏன்டா திரும்பத் திரும்ப ஆமாவா ஆமாவா என்று கேட்டால் அந்த பொண்ணு என்னதான் சொல்லும். இப்படித்தான் பதில் சொல்லும்.  நீயும் உண்மை என்று நம்புகிறாயே.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா. அந்த பொண்ணை போய் சந்தேகப்படுகிற.. இப்படி எல்லாம் இருக்காதடா.. இதெல்லாம் சரிப்பட்டு வராது .. “

“இல்லம்மா என் மனவேதனை உனக்கு தெரியாதும்மா.. அவன் என்னுடைய சாயலே இல்லம்மா..”

” மண்ணாங்கட்டி டா இப்போ உனக்கு மட்டும் உன் அப்பாவுடைய சாயலா இருக்கு..பேச வந்துட்டான் பெருசா.. என் புருஷன் என்னிடம் இப்படியா கேட்டுக் கொண்டிருந்தாங்க..

அதற்கு பதிலை அரவிந்த் பாவமாக சொல்கிறான் .. ” அம்மா நான் உன்னுடைய சாயல் மா..”என்ற தும் இதற்கு என்ன பேசுவது என்றே கயலுக்குத் தெரியவில்லை..

டேய் குழந்தைகள் பிறப்பதெல்லாம் கடவுளின் செயல்டா.. இப்படி எல்லாம் சாயல் கேட்டுக் கொண்டிருந்தால் ஒவ்வொரு வீட்டிலும் பிரச்சினைகள் தான் இருக்கும். அப்பா அம்மாவின் ஜெராக்ஸ் மாதிரி எல்லா குழந்தைகளும் இருக்கிறார்கள். யார் வீட்டு பிள்ளைகளைவது அதே அப்பா அதே அம்மா மாதிரி இருக்காங்களா என்று காட்டு. ஏதோ ஒன்று இரண்டு இடங்களில் தான் அது மாதிரி இருக்கும் .அம்மாவுக்கு தங்கை மாதிரி ,அப்பாவுக்கு தம்பி மாதிரியும்.. “

“நீதான் வெளியே  எல்லாம் நிறைய போகிறாயே. கொஞ்சம்  உற்றுக் கவனித்து பாருடா .. சரி  இவ்வளவு பேசுகிறாயே உன்னுடைய ஆதித்யா அண்ணா ..அவருடைய பெண்ணின் போட்டோவை காட்டு பார்க்கிறேன் ..அவங்களுடைய சாயல் அந்தப் பிள்ளைக்கு இருக்கிறதா என்று… அவங்க வீட்ல எல்லாம் இப்படித்தான் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறதா.. நீ மட்டும் தான்டா இப்படி அநியாயம் செய்கிறாய்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்கிறேன் .. மித்ராவை சந்தேகப்பட்டாய் என்றால் நீ நல்லாவே இருக்க மாட்ட.. அதை மட்டும் மனசுல வச்சுக்க..”இவ்வளவும் சொன்னதும் தான் அரவிந்த் கொஞ்சம் யோசிக்கவே தொடங்குகிறான்.. அமைதியாகிறான்.

மித்ரா இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள். அதிசயமாய் அமிர்தன் அம்மா அருகில் சென்று கண்களை துடைத்து விட்டு , “அம்மா அழாதீங்கம்மா. நீங்க அழுதா எனக்கும் அழுகை வருதும்மா .. “என்று அவனும் அழத் தொடங்குகிறான்..அவன் அழவுமே அவனை கட்டிக் கொண்டவள் ஒரு முடிவுக்கு வருகிறாள்..

அம்மா  பேசியதும் கொஞ்சம் அமைதியானவன் மனைவியை எப்படி சமாதானம் செய்வது என்று யோசித்துக் கொண்டு வருகிறான்.

” ஆனாலும் எப்படிதான் இப்படி எல்லாம் விதம் விதமாய்  அந்த பெண்ணை துன்புறுத்துகிறாயோ .இப்பொழுது போய் எப்படி தான்  பிள்ளை முகத்திலும் உன் மனைவி முகத்திலும் விழிப்பாய் அறிவு கெட்டவனே..”  அவன் மனசாட்சியே அவனை குத்திக் காட்டுகிறது ..

” இல்ல இதுதான் கடைசி முறை. இனிமேல் நான் இப்படி பிரச்சனை செய்ய மாட்டேன் . “

“ஆமா டா போடா, இது மாதிரி எத்தனை முறை கடைசியோ தெரியவில்லை.. கொஞ்சம் கூட உனக்கு மனதில் பயமோ பாவமோ இல்லடா ..உன்னை எல்லாம் திருத்தவே முடியாது போ .. “கோபித்துக் கொண்டு செல்கிறது அவனுடைய மனசாட்சி.

” நீ எது வேணா செஞ்சுக்கோ .நான் போய் என் மனைவியை சமாதானம் செய்கிறேன். ” என்று அறைக்குள் போகிறான் .. அவள் இல்லாத அந்த அறை வெறுமையாக இருக்கிறது. பயம் வந்து விடுகிறது .அவசரமாய் பாத்ரூம் ஹால் எங்கும் தேடுகிறான் ..எங்குமே அவள் இல்லை ..

“அம்மா அவளையும் அமிர்தனையும் பார்த்திங்களா. இரண்டு பேரையும் காணோம்.. “

“என்னடா சொல்கிறாய் அவங்க இவ்வளவு நேரம் அறையில் தான் இருந்தாங்க..பாவமாக பசியோட இருப்பா என்று தான் சாப்பாடு எடுத்து வருவதற்கு கீழே வந்தேன்..”

” எங்க போனான்னு தெரியலையே..” சொன்னவன் மாடியில் இருந்து கீழே கவனிக்கிறான். டிராலி பேக்கை தள்ளிய படியே வெளிக் கதவை இழுத்து சாத்துகிறாள் மித்ரா..

” அம்மா அவன் எங்கேயோ போறாம்மா “அரவிந்த் பதறுகிறான்..

” எங்கடா போகப் போகிறா . வேகமா போய் கூட்டிட்டு வா . “அத்தனை வேகமாக எப்படி தான் படியை விட்டு இறங்கினானோ .அவள் கதவை தாழ் போடுவதற்குள் அவள் கையைப் பிடித்து விடுகிறான்..

” எதற்கு திரும்பவும் வம்பு வளர்ப்பதற்கு வருகிறீர்களா .. “

“என்னை விட்டுட்டு எங்கடி போக போகிறாய் .என்னை விட்டுட்டு போகாதடி..” அழுகிறான் ..

“இல்லங்க என்னால முடியல.. நான் என்னை சந்தேக படுத்தி சொன்ன பிறகுதான் நீங்க என்ன நம்புறீங்க ..அப்படி என்றால் என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்..  நான் அதை சொன்ன போது கூட நீ அப்படி சொல்லாதடி என்று சொல்லி விட்டு அடிப்பீங்க என்று நினைத்தேன். அதை சொன்ன பிறகு தான் நீங்கள் எப்பொழுது நான் உண்மையை ஒத்துக் கொள்வேன் என்று கூறி அடிக்கிறீங்க ..அப்படி என்றால் என்னை கல்யாணம் செய்து வந்ததிலிருந்து உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கு தானே .. “

“இல்லடி என் மனசுல ஏதோ சாத்தான் புகுந்துட்டுடி .. அதுதான் என்னை போட்டு பாடாய் படுத்துது..என்னை மன்னிச்சுடுடி..இனிமே நான் இப்படி எல்லாம் பேச மாட்டேன் ..உன்னை அடிக்க மாட்டேன் ..என்னோடு கடைசி வரைக்கும் இருடி..” ரோடு என்று கூட பார்க்காமல் அவள் காலில் விழுவதற்கு போகிறான்..

அவனை தடுத்து நிறுத்தியவள் அழுகிறாள். ” ஏங்க இப்படி எல்லாம் செய்றீங்க .பாருங்க நம்ம பிள்ளையை எப்படி பரிதவிச்சி பயந்து போயிருக்கிறான் .. “

மகனை உடனே அவன் கையில் தூக்கிக் கொள்கிறான் .. அம்மாவை அடித்ததிலிருந்து அவனைப் பார்த்தாலே பயப்படுகிறான் .அவனிடம் வரவே பயந்து கொண்டு அழுகிறான் .. ஆனால் இதுதானே அரவிந்துக்கு எரிச்சலைக் கொடுக்கிறது ..

“அப்பா கிட்ட போடா.. அப்பா எதுவும் செய்ய மாட்டாங்க . “என்று சொன்னதும் தான் அமிர்தன் அமைதியாகிறான்..

ஒரு வாரம் அவன் முகத்தை கவனித்துக் கொண்டே இருந்த நவீன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் திரும்பவும் அவனிடம் சண்டைக்கு போகிறான்..

” ஏன்டா உனக்கு என்னதான்டா பிரச்சனை. அந்த அண்ணன் ஊருக்கு போய்ட்டாங்க அது தெரியும் .அவங்க கிட்ட நீ போன்ல பேசிக்கிட்டு இருக்க.. அதுவும் தெரியும் ..இப்ப திரும்பவும் ஏன் உன் முகம் வாடி வதங்கி போய் கிடக்கு. வீட்டில் மறுபடியும் பிரச்சனை செய்கிறாயா.. யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டியாடா .. “

எதுவும் பேசாமல் அப்படியே தலை கவிழ்ந்த படியே இருக்கிறான் அரவிந்த்.. “வாயை திறந்து பேசினாதான் என்னன்னு தெரியும் .என்ன வீட்ல வம்பு பேசிட்டு வந்துட்டியா. “

” ஆமாடா பெரிய பிரச்சனையா ஆயிட்டு.. அவ கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போக ஆரம்பிச்சிட்டா ..  நடந்த அனைத்தையும் அப்படியே கூறுகிறான்..

“அரவிந்த் உனக்கு உன் மகன் மீது உன் மனைவி மீது சந்தேகம்னு அது பிரச்சனையா. இல்ல உன்னுடைய ஆதி அண்ணா இங்க இல்ல என்பது பிரச்சனையா..எதுன்னு சொல்லு. சரி செய்து பார்ப்போம். “

” இது எதுவுமே சரி செய்ய முடியாதுடா நவீன்.. என் மனசுல இருக்குற சாத்தானை பேய் பிடித்திருக்கிற பேய் எப்படியாவது யாராவது விரட்டினால் தான்டா சரியாகும் .. “

“உம் முகரைக்கட்டை போடா நாயே .. “நவீன் அவனை அடிக்காத குறைதான்…

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page