அத்தியாயம் 9
“ரேணு நீ இருந்து போ உன் அண்ணி கேட்ட கேள்விக்கு நான் பதில்
சொல்றேன் ” என்ற குரல் வாசலில் ஒலிக்க இருவரும் அதிர்ச்சி அடைந்து பார்க்க அங்கே சரஸ்வதி நின்று கொண்டிருந்தார்.
“ரேணுவும் சரி பெரியம்மா” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு ஓடி விட்டாள்.
சரஸ்வதி மெதுவாக அடி எடுத்து பிரதிக்ஷாவின் அருகில் வர பயத்தில் எச்சில் விழுங்கினாள் பிரதிக்ஷா.
“சரி சொல்லு உனக்கு என்ன தெரியனும்” என்று சரஸ்வதி கேட்க, ” அது வந்து…. ” என்று பிரதிக்ஷா தடுமாறினாள்.
“இவ்வளவு நேரம் ரேணு கிட்ட தெளிவாதான கேட்ட, இப்போ நான் வரவும் ஏன் இப்படி தடுமாறுற?” என்று சரஸ்வதி பிரதிக்ஷாவை பார்த்து கேட்க, “மன்னிச்சிடுங்க அத்தை” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“இங்க பாரு பிரதிக்ஷா நீ இந்த வீட்டுக்கு வாழ தான் வந்திருக்க வக்கீலா வரல, உன் வக்கீல் ஸ்மார்ட்னஸ்ஸ இங்க காட்டாத! விதுரன் மனசுல இடம் பிடிச்சு அவனோட சேர்ந்து வாழ்றதுக்கு என்ன செய்யனுமோ அதை பண்ணு அதை விட்டுட்டு, தேவையில்லாம சிஐடி வேல பாக்குறத முதல்ல நிறுத்து! நீ என்னைக்கு விதுரன் மனசுல இடம் புடிச்சு, விதுரனே உன்னோட சேர்ந்து வாழ்றேன்னு சொல்ற அன்னைக்கி இந்த வீட்டுல உள்ள எல்லா ரகசியங்களையும் உனக்கு நானே சொல்றேன்! அது வர அமைதியா இரு, உன்னோட வேலை எதுவோ அதை மட்டும் சரியா செய்!” என்று அழுத்தமாக கூறினார் சரஸ்வதி.
“அத்தை மன்னிச்சிடுங்க” என்று மீண்டும் பிரதிக்ஷா சொல்ல, “நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது! நீ எதுக்கு இந்த வீட்டுக்கு வந்தியோ அந்த வேலையை மட்டும் பாரு, ஐயர் கிட்ட பேசி இன்னைக்கு நைட்டு ஒன்பது மணிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு தேவையான நகை, பூ பட்டு, எல்லாத்தையும் அம்பிகா வந்து உன் கையில கொடுப்பா, நீ எதுவும் சொல்லாம அவ கிட்ட இருந்து வாங்கி ரெடியாகுறதுக்கு வழிய பாரு!” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார் சரஸ்வதி.
சரஸ்வதி பேசி சென்ற பின் அவர் பேசியதை எல்லாம் அசைப் போட்டு பார்த்த பிரதிக்ஷாவின் மனம் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்து போனது. குழப்பத்திலே அமர்ந்திருந்த பிரதிக்ஷாவை வாசலில் நின்று பார்த்தபடி “உள்ளே வரலாமா?” என்று கேட்டார் அம்பிகா.
“வாங்க அத்தை” என்று தன் மனதில் தோன்றிய குழப்பத்தை எல்லாம் மறைத்து விட்டு பிரதிக்ஷா கூறினாள்.
” பிரதிக்ஷா முதலிரவுக்கு நீ கட்ட வேண்டிய பட்டுப் புடவை, பூ, நகை எல்லாம் இருக்கு! இதையெல்லாம் உடுத்தி உன்னைய தயார் பண்ணிக்க! அப்படியே உன் மனசையும்!” என்று அம்பிகா சொல்ல ஒரு கணம் அம்பிகாவை பார்த்து திகைத்தாள் பிரதிக்ஷா.
பிரதிக்ஷாவின் உணர்வுகளை அம்பிகா புரிந்து கொண்டாலும் மேலும் எதுவும் சொல்லாமல், ” இங்க பாரு பிரதிக்ஷா கல்யாணம் முடிஞ்ச கையோட காலம் காலமா தம்பதிகளுக்கு ஏற்பாடு பண்ற சடங்கு தான் தான் .இதுல நீ யோசிக்கிறதுக்கோ புலம்புறதுக்கோ எதுவும் கிடையாது! இன்னைக்கு ஒன்பது மணிக்கு மேல நல்ல நேரம், இன்னைக்கு தம்பதிகள் இருவரும் ஒன்னா கூடுனால் சீக்கிரத்துல குலம் தழைக்கும்னு ஐயர் சொல்லிருக்காரு, இதுக்கு மேல உனக்கு புரியும்னு நினைக்கிறேன்! நீ தயாராகறதுக்கு உதவிக்கு ரேணுவ அனுப்பி வைக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார் அம்பிகா.
“இவங்க எல்லாரும் என்ன இவ்வளவு பாஸ்ட்டா இருக்காங்க! எப்படி விதுரன நேருக்கு நேர் சந்திக்க போறேன்னு ஏற்கனவே பயத்துல இருக்கேன், இவங்க பண்றது எல்லாம் பார்த்தால் இன்னைக்கு நமக்கு கச்சேரி தான் போல, இவங்க முதல் இரவுனு சொன்ன உடனே நம்மளே யோசிக்கிறோம். இந்நேரம் விதுரன் தாண்டவம் ஆடி இருப்பாரே!” என்று யோசித்தாள் பெண்ணவள்.
ஆம்!.. அவள் நினைத்தபடி இங்கு விதுரன் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான்.
“யாரைக் கேட்டு இப்படி ஒரு ஏற்பாட பண்ணுனீங்க, இன்னும் எனக்கு கல்யாணம் முடிஞ்சதையே என்னால ஏத்துக்க முடியல, அதுவும் எவ்வளவு பெரிய பழிய என் மேல போட்டு அவ வலுக்கட்டாயமா அவ கழுத்துல என்னைய தாலி கட்ட வச்சிருக்க, அதையெல்லாம் யோசிக்காம எப்படி உங்களால இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியுது! சரி என்ன நம்பிக்கையில இப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணுனீங்க, அவள பார்த்த உடனே அப்படியே மயங்கி அவளோட வாழ்ந்துருவேன்னு நினைச்சிட்டீங்களோ?” என்று நக்கலாக கேட்டான் விதுரன்.
‘அவனுக்கு என்ன பதில் சொல்வது’ என்று தெரியாமல் அம்பிகா அவன் முன்னால் தன் கைகளை பிசைந்து அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அந்த அறைக்குள் நுழைந்தார் சரஸ்வதி. என்ன இன்னும் மசமசனு நின்னுகிட்டு இருக்க! வீட்ல எவ்வளவு வேலை இருக்கு!”என்று அம்பிகாவை பார்த்து சரஸ்வதி கேட்க, “விதுரன்..” என்று கூறினார் அம்பிகா.
“விதுரன் கிட்ட நம்ம ஏற்பாடு பண்ணுனத சொல்லிட்டியா?” என்று கேட்க அம்பிகாவும் சொல்லிவிட்டேன் என்பதைப் போல் தலையசைத்தார். “சரி நீ இங்கிருந்து கிளம்பு இதுக்கு மேல நான் பாத்துக்கிறேன்” என்று சரஸ்வதி சொல்ல, அம்பிகா சிறு புன்னகையுடன் அங்கிருந்து சந்தோஷமாக கிளம்பினார்.
“இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்பட்டுகிட்டு இருக்க விதுரா! கல்யாணம் முடிஞ்ச பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏற்பாடு பண்ற சடங்கு தான , இதுக்கு எதுக்கு கோபப்பட்டு நீ தையத் தக்கானு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற?”என்று அலட்சியமாக விதுரனை பார்த்து கேட்டார் சரஸ்வதி.
“அம்மா அது நல்ல விதமாக கல்யாணம் முடிஞ்சவங்களுக்கு! எனக்கு இல்ல, என் கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரிய தானே செய்யும்! தெரிஞ்சும் எப்படி இப்படி ஒரு ஏற்பாட்ட பண்றீங்க எனக்கு சுத்தமா புரியவே இல்லை!” என்று கூறினான் விதுரன்.
“விதுரன் நடந்தது நடந்து முடிஞ்சிட்டு, இப்போதைக்கு உனக்கு கல்யாணம் முடிஞ்சிட்டு நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்! பிரதிக்ஷா தான் உன்னுடைய மனைவி அத நல்லா ஞாபகம் வச்சுக்கோ!” என்று சொல்ல சரஸ்வதியை முறைத்தான் விதுரன்.
“என்னம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்கு புடிக்கலைன்னா அந்த பொண்ண டைவர்ஸ் பண்ணிருனு சொன்னீங்க! இப்ப அவதான் என்னோட மனைவின்னு சொல்றீங்க, நீங்க தெரிஞ்சு தான் பேசுறீங்களா?” என்று விதுரன் கேட்க,” நான் என்ன பேசுறேன்னு எனக்கு நல்லா தெரியும்! நீ டைவர்ஸ் கொடுக்குற வரை அவ உன்னோட மனைவிதான், அதுல எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது அதை உன் மனசுல பதிய வச்சுக்க! நீ அவளுக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு அவ உன் பொண்டாட்டி இல்லைன்னு சொல்லு அப்ப நான் அதை ஏத்துகிறேன், நீ அவளுக்கு டைவர்ஸ் கொடுத்து சட்டப்படி பிரியுற வரை அவ உனக்கு பொண்டாட்டி எங்களுக்கு மருமக , அப்படித்தான் நாங்க பாப்போம்! இங்க பாரு விதுரா, நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. இன்னைக்கு நைட்டு முதலிரவுக்கான ஏற்பாடு பண்ணி இருக்கோம். நீ ரெடியாகு!” என்று கோபமாக கூறினார்.
“அம்மா எல்லாம் எங்க ரெண்டு பேருக்குள்ள நடந்து முடிஞ்சிருச்சுன்னு அவ தான் எல்லாரும் முன்னாடியும் சொன்னாலே, அப்புறம் எதுக்கு இப்படி ஒரு ஏற்பாடு!” என்று விதுரன் கிண்டல் தோணியில் சரஸ்வதியை பார்த்து கேட்க
இங்க பாரு, அது உன்னோட சுயநினைவு இல்லாம விபத்து மாதிரி நடந்த ஒரு விஷயம், இப்ப நாங்க பண்ணியிருக்கிற ஏற்பாடு நாள், நட்சத்திரம் நல்ல நேரம் பார்த்து பண்றது! அதனால அதோட இதை கொண்டு முடிச்சு போடாத, அப்புறம் நீ சொல்ற எதையும் நான் கேட்க விரும்பல நான் சொல்றத நீ செய்! ஒருவேளை நான் சொல்றத உன்னால செய்ய முடியாதுன்னா இப்பவே சொல்லிடு, என்னோட முடிவையும் நான் சொல்லிட்டு போறேன்!” என்று சரஸ்வதி கோபமாக உரைக்க சரஸ்வதியை பார்த்தான் விதுரன்.
“என் பேச்சை நீ கேக்க மாட்டேன்னு சொல்லும்போது எனக்கு என்ன மரியாதை! நான் இங்கிருந்து கிளம்புறேன், இனிமேலு உன்னோட எந்த விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன் உன் கிட்ட பேசவும் மாட்டேன், உன் இஷ்டத்துக்கு நீ என்ன செய்யணுமோ அதை செஞ்சுக்கிட்டு இரு!” என்று பிடிவாதமாக கூறினார் சரஸ்வதி.
“அம்மா, எதுக்கு இப்ப கோவப்படுறீங்க! எனக்கு புடிக்கலைனாலும் நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக தான் அவ கழுத்துல தாலியை கட்டினேன்! இப்ப வர நீங்க சொல்றதத்தான் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அப்படி இருந்தும் என்னோட எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன்னு சொல்றீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்று விதுரன் கேட்டான்.
” நான்தான் அவ கழுத்துல உன்னைய தாலி கட்ட சொன்னேன். அவள வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் நான் தான் சொன்னேன். இப்பயும் நாங்க பண்ணுன ஏற்பாட்டுக்கு நீ சம்மதின்னு தான் சொல்றேன். நான் எது செஞ்சாலும் அது உன்னோட நல்லதுக்கு மட்டும்தான். அந்த நம்பிக்கை என் மேல உனக்கு இருந்தா நான் சொல்றத செய். இதுக்கு மேல என்னைய பேச வைக்காத அவ்வளவு தான் சொல்லுவேன்!” என்று கோபத்தோடு அந்த அறையை விட்டு வெளியேற,
” அம்மா இப்ப எதுக்கு கோபப்படுறீங்க, இப்ப என்ன உங்களுக்கு நீங்க ஏற்பாடு பண்ணுனா சடங்குக்கு நான் சம்மதம் சொல்லணும் அவ்வளவு தானே, சரி உங்க இஷ்டபடி ஏற்பாடு பண்ணுங்க! நான் எதுவும் சொல்லல!” என்று விதுரன் சொல்ல சிரித்தார் சரஸ்வதி.
“சரி நாங்க எல்லா ஏற்பாடையும் பார்த்துக்கிறோம். நீ ஒன்பது மணிக்கு தயாராய் இரு!” என்று சொல்லி
விதுரனின் தலையை ஆதுரமாக தடவி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார் சரஸ்வதி.
சரஸ்வதி பேசி சென்ற பின் அப்படியே என்ன செய்வது என்று தெரியாமல் கட்டிலில் அமர்ந்து விட்டான் விதுரன்.
‘என்ன நடக்குது என் வாழ்க்கையில, ரஞ்சித் கல்யாணத்துக்கு போன நான் கல்யாணம் மாப்பிள்ளையாவே ஆயிட்டேன். கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நார்மலா நடந்த கல்யாணம் மாதிரி முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்னு ஈஸியா சொல்லிட்டு போறாங்க, ஏன் யாரும் என்னைய புரிஞ்சுக்கல!’ என்று தலையை பிடித்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.
‘இதுக்கெல்லாம் காரணம் அவ மட்டும் தான்,வந்த முதல் நாளே எனக்கும் சரஸ்வதி அம்மாவுக்கும் சண்டையை இழுத்து விடுற பார்க்கிறா! இவளை மட்டும் என் வாழ்க்கையில பார்க்காமல் இருந்திருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும், என்னோட வாழ்க்கையை ஒரே நாள்ல இப்படி குழப்பத்துல தள்ளுன அவளை சும்மாவே விடமாட்டேன்! இன்னைக்கு இருக்கு அவளுக்கு, இந்த விதுரன் யாருன்னு இனிமேல்தான் தெரிஞ்சிக்குவா? ரஞ்சித் சொன்ன மாதிரி அவளையே அவ வாயால இந்த வீட்டை விட்டு நான் வெளில போறேன்னு சொல்ல வைக்கிறேன்’ என்று வன்மமாக புன்னகை தான் விதுரன்.
