அத்தியாயம் 12
“பிரதிக்ஷா நீ எதுக்கு இப்படி ஒரு பழியை போட்டு என்னை கல்யாணம் பண்ணுன்னு எனக்கு தெரியாது! ஒருவேளை நீ மண்டபத்துல சொன்ன மாதிரி குடிபோதையில சுயநினைவு இல்லாமல் நான் உன்கிட்ட தப்பா கூட நடந்து இருக்கலாம்! ஆனால் கண்டிப்பா நான் அப்படி ஒரு தப்ப பண்ணி இருக்க மாட்டேன்னு என் உள் மனம் சொல்லிக்கிட்டே இருக்கு, இருந்தாலும் என்னைய நான் உன்கிட்ட நியாயப்படுத்த விரும்பல! ஒருவேளை நான் உன்கிட்ட அப்படி ஏதாவது தப்பா நடந்திருந்தால் என்னை மன்னிச்சிரு! எல்லாரும் சேர்ந்து நான் தப்பு பண்ணிட்டேன்னு வலுக்கட்டாயமா என்னால பாதிக்கப்பட்டனு சொன்ன உன்னைய எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க, நானும் வேற வழி இல்லாம உன் கழுத்துல தாலியை கட்டிட்டேன்! நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் கிடையாது, ஆனால் நடக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,
என் மனசுல ஏற்கனவே மனிஷா தான் நிரம்பி இருக்கா, கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா அவளை நான் காதலிச்சு கிட்டு இருக்கேன், அவளும் என்னைய உயிருக்கு உயிரா காதலிச்சு கிட்டு இருக்கா! நான் இல்லைனா கண்டிப்பா அவ உயிரோட வாழ மாட்டா. என்னாலையும் அவள மறந்துட்டு உன் கூட சந்தோஷமா வாழ முடியாது. அதனால நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்!” என்று விதுரன் சொல்ல அவனை சந்தேகமாக பார்த்தாள் பிரதிக்ஷா.
பிரதிக்ஷாவின் முகத்தை பார்த்துக் கொண்டே மேலும் பேச ஆரம்பித்தான் விதுரன், ” விருப்பம் இல்லாம என் மனசுல வேற ஒருத்தியை நினைச்சுகிட்டு உன் கூட சந்தோசமா வாழ முடியாது! அதனால நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்துடறேன். உன்னோட வாழ்க்கைக்கு தேவையான பெரிய அமௌன்ட் உன் பேர்ல டெபாசிட் பண்ணி விடுறேன். அதே மாதிரி என்னால பாதிக்கப்பட்ட உன்னோட வாழ்க்கைய சரி பண்ற பொறுப்பு என்னோடது, உன்னைய பத்தின உண்மைய சொல்லி, உனக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணமும் பண்ணி வைக்கிறேன்!” என்று கூற அதிர்ந்து போனாள் பிரதிக்ஷா.
“சரிங்க நீங்க என்னோட நலன்ல இவ்வளவு அக்கறையா இருக்கும்போது நானும் உங்களோட நலன்ல அக்கறை காட்டலாம்னு நினைக்கிறேன். நீங்க எதுக்கு என்னை பத்தின உண்மைய சொல்லி ஒரு பையன பார்த்து எனக்கு கட்டி வச்சுக்கிட்டு, ஒருத்தனால கெட்டுப்போன எனக்கு பையன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்! அதுக்கு பதிலா உங்க காதலி அவ பேர் என்ன..ஹான், மனிஷா அவளுக்கு வேறொரு பையன பார்த்து கட்டி வையுங்கள்! கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டமா இருக்காது, எனக்கு வேற ஒருத்தரை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது விட அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கல்யாணம் பண்ணி வச்சா உங்களுக்கு சிரமமா இருக்காது! ஈஸியா வேலை முடிந்துவிடும். நீங்க சொல்ற யோசனை விட நான் சொல்ற யோசனை ரொம்பநல்லது! ஒரு தடவை நான் சொன்னதையும் கன்சிடர் பண்ணி பாருங்க! நான் எதுக்கு சொன்னேன்னு உங்களுக்கு தெளிவா புரியும்!” என்று பிரதிக்ஷா நக்கலாக கூறினாள்.
பிரதிக்ஷாவின் நக்கலான பேச்சு ஆடவனை இன்னும் கோபப்படுத்திட “ஏண்டி நான் கோவப்படாம உனக்கு பொறுமையா சொல்லி புரிய வைக்கணும்னு நினைச்சா நீ என்னையவே நக்கல் பண்றியா? ஒழுங்கா நான் கொடுக்கிற பேப்பர்ல சைன் பண்ணி மியூச்சுவலா டைவர்ஸ் வாங்கிட்டு இங்க இருந்து ஓடிரு! இல்ல உன்னைய இங்க இருந்து ஓட வைப்பேன். இந்த விதுரன பத்தி தெரியாம நீ விளையாண்டுக்கிட்டு இருக்க, எங்க சரஸ்வதி அம்மா ஒருத்தவங்களுக்காக தான் நீ பண்ற எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு பொறுமையா இருக்கேன்! எனக்கு இருக்கிற கோபத்துக்கு இந்நேரம் உன்ன கொன்னு ஆத்துல தூக்கி வீசிட்டு போய்க்கிட்டே இருப்பேன், நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி இந்த விதுரன் நல்லவன் கிடையாது! என்னோட மறுரூபத்தை காட்ட வச்சிறாத நீ தாங்க மாட்ட!” என்று விதுரன் சொல்ல சிரித்தாள் பிரதிக்ஷா.
“என்னடி சொல்லிக்கிட்டே இருக்கேன் நக்கலா சிரிக்கிற?” என்று கோபத்தில் அவளின் கழுத்தை நெறித்தான் விதுரன்.
விதுரன் பிரதிக்ஷாவின் கழுத்தை நெரிக்கும் போது அவள் கண்ணில் தெரிந்த காதல்பார்வை ஆடவனை ஏதோ செய்ய, அவள் கழுத்தில் இருந்து தன் கையை எடுத்துவிட்டு
“என்னைய பாத்தா கேன பையன் மாதிரி இருக்கா! எவ்வளவு தைரியமா நான் பண்ணாத தப்புக்கு நாற்பது பேர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி என் கையாலவே உன் கழுத்துல தாலி கட்ட வச்ச, நானும் சரி போனா போகுதுனு உன் கிட்ட பொறுமையா பேசி உன் மனச மாத்தி உன்னைய வீட்டுக்கு அனுப்பலாம்னு நெனச்சா நீ என்கிட்டயே திமிரா பேசுற! இங்க பாரு உன்னோட உயிர் உனக்கு வேணும்னா இந்த டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டு இங்க இருந்து கிளம்பி விடு அதான் உனக்கு நல்லது எனக்கும் நல்லது. அத விட்டுட்டு நான் டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ண மாட்டேன்னு நீ பிடிவாதம் பிடிச்சா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!” என்று கூறினான் விதுரன்.
“கூல் டவுன் அத்தான் இப்ப எதுக்கு கோபப்படுறீங்க. இப்ப என்ன உங்களுக்கு இந்த டைவர்ஸ் பேப்பர்ல நான் சைன் பண்ணனும். நான் சைன் பண்ணாமயே நீங்க டைவர்ஸ் அப்ளை பண்ண வேண்டியதுதானே!” என்று சிரித்துக்கொண்டே பிரதிக்ஷா கேட்க, “ஏன் உன்னைய டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ண சொல்றன்னு உனக்கு தெரியாதோ நீ வக்கீல் தானே!” என்று நக்கலாக கேட்டான் விதுரன்.
“தெரியும் மியூச்சுவலா பிரியுறோம்னு நானும் ஒத்துக்கிட்டு இந்த பேப்பர்ல சைன் பண்ணுனால் கூடிய சீக்கிரத்துல எந்தப் பிரச்சனையும் இல்லாம நம்ம ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் கிடைச்சுரும்! அதுக்காகத்தான என்னைய கையெழுத்து போடச் சொல்லி வற்புறுத்துறீங்க, அது கூட தெரியாமையா இருக்கேன்! சரி நான் டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடுறேன் ஆனால் ஒரு கண்டிஷன், நான் சொல்றதுக்கு நீங்க ஒத்துக்கிட்டால் நானும் எந்த பிரச்சனையும் பண்ணாம இந்த டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடுறேன்!” என்று பிரதிக்ஷா சொல்ல விதுரன் அதிர்ந்து ‘ அவள் என்ன சொல்ல போகிறாள்’ என்று பிரதிக்ஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
“முதல் ரூல்ஸ்,இங்க பாருங்க டைவர்ஸ் கிடைக்கிற வரை நான் இந்த வீட்டுல தான் இருப்பேன், எக்காரணத்தை கொண்டும் என்னய இந்த வீட்டை விட்டு வெளிய அனுப்பனும்னு நீங்க எந்த திட்டமும் போடக்கூடாது. ரூல்ஸ் நம்பர் ரெண்டு, ஒரு கணவனா மனைவிக்கு என்னவெல்லாம் செய்யணுமோ அதை எல்லாம் நீங்க எனக்கு செய்யணும். ரூல்ஸ் நம்பர் மூணு நம்ம சேர்ந்து வாழ்ற இந்த ஆறு மாசம் காலத்துல என் மேல காதல் வந்தால் அத நீங்க ஒத்துக்கணும்!” என்று பிரதிக்ஷா சொல்ல சிரித்தான் விதுரன்.
“என்ன சிரிக்கிறீங்க! இந்த மூன்று ரூல்ஸுக்கும் நீங்க சம்மதம் சொன்னால் தான் மியூச்சுவலா நான் உங்களுக்கு டைவர்ஸ் கொடுப்பேன். ஒருவேளை நீங்க இது எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லாம எனக்கு டைவர்ஸ் கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா, எனக்கு டைவர்ஸ் வேண்டாம்னு சொல்லி கோர்ட்ல கேஸ் போடுவேன்! அப்படி நான் கோர்ட்ல கேஸ் போட்டால் ஆறு மாசம்ங்கற கால அளவு ஆறு வருஷமா கூட நீட்டிக்கும்! அதுக்கப்புறம் உங்க இஷ்டம்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் பிரதிக்ஷா.
பிரதிக்ஷாவின் ஆணவப் பேச்சு, விதுரனுக்கு கோபத்தை வர வைத்தாலும், இப்போது இவளிடம் கோபப்பட்டால் பிரச்சனை இன்னும் பெரியதாகிவிடும் என்று எண்ணி, அவளுக்கு எதிரே அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் விதுரன்.
“முதல் ரூல்ஸ் என்ன சொன்ன? உன்னைய இந்த வீட்டை விட்டு அனுப்புவதற்கு நான் எந்த திட்டமும் போடக்கூடாதுனு, எங்க வீட்டுல வேலை செய்றவங்க எல்லாரும் இங்கதான் தங்கறாங்க, அவங்களோட ஒருத்தியா நீ இந்த வீட்டில இருக்கிறவரை இங்க தங்கிக்கிறலாம் அது ஒன்னும் பிரச்சனை இல்லை எனக்கு!
இரண்டாவது ரூல்ஸ், என்ன சொன்ன? ஒரு கணவனா மனைவிக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் உனக்கு நான் செய்யணும், அவ்வளவுதானே! அதாவது டிரஸ் எடுத்து கொடுக்கிறது நல்ல சாப்பாடு போடறது நீ ஆசைப்பட்ட இடத்துக்கு உன்னை கூட்டிட்டு போறது! அதுதானே இல்ல அதைத் தவிர வேறு ஏதாவது என்கிட்ட எதிர்பார்க்கிறியா?” என்று பிரதிக்ஷாவை கீழிருந்து மேலாக பார்த்தான் விதுரன். விதுரனின் பார்வை பிரதிக்ஷாவை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக நினைக்கிறான் என்பதை பெண்ணவளுக்கு நன்றாகவே காட்டிக் கொடுத்தது.
ஆனாலும் பிரதிக்ஷா புன்னகை மாறாமல்,” அது உங்க இஷ்டம் அத்தான்!” என்று கண்ணடித்தாள். பிரதிக்ஷாவின் நடவடிக்கைகள் விதுரனை இன்னும் கோபப்படுத்தியது.
“சரி அத விடு, மூணாவது ரூல்ஸ் என்ன சொன்ன? உன்மேல காதல் வந்தால் அதை வெளிப்படையா நான் ஒத்துக்குறன்னு அப்படித்தானே!” என்று அந்த அறை அதிர சிரித்தான் விதுரன்.
“எப்படி இப்படி உன்னால யோசிக்க முடியுது! ஆறு மாசம் இல்ல ஆறு வருஷம் ஆனாலும் உன் மேல சின்ன ஈர்ப்பு கூட எனக்கு வராது, நான் தூங்கும் போது காண்கிற கனவுல கூட நீ ஒரு காலமும் வர மாட்ட, அதனால நீ போட்ட இந்த மூணாவது ரூல்ஸ் தேவையே கிடையாது!” என்று நக்கலாக சிரித்தான் விதுரன்.
“கனவுல நான் வரேன்னா இல்லையான்னு ஆறு மாசம் கழிச்சு நான் கேட்கும்போது எனக்கு பதில் சொல்லுங்க!” என்று அழுத்தமாக உரைத்தாள் பிரதிக்ஷா.
“இந்த மூணுக்கும் நீங்க சம்மதம் சொல்லி நான் கொடுக்கிற அக்ரீமெண்ட்ல சயன் பண்ணினால் நான் நீங்க சொன்னபடி மியூச்சுவல பிரியறதுக்கான டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்றேன்! நீங்க பிடிவாதம் பிடிச்சா நானும் பிடிவாதம் பிடிப்பேன்!” என்று உறுதியாக பிரதிக்ஷா சொல்ல திகைத்தான் விதுரன்.
“சரி இப்ப என்ன சொல்றீங்க அத்தான் அக்ரீமெண்ட்ல சைன் போடுறீங்களா? இல்ல பயப்படுறீங்களா!”என்று பிரதிக்ஷா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“யாருக்குடி பயம், இப்ப என்ன இந்த அக்ரிமெண்ட்ல நான் சைன் பண்ணனும்! நான் சைன் பண்ணால் மியூச்சுவலா டைவர்ஸ் வாங்குவதற்கு நீயும் சைன் பண்ணுவ அப்படித்தானே!” என்று விதுரன் கேட்க, “ஆமா அத்தான்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பிரதிக்ஷா.
‘நீ பண்ற டார்ச்சர்ல ஆறே நாள்ல விதுரா நீ வேண்டாம்னு உன்னை விட்டுட்டு பிரதிக்ஷா ஓடணும்’ என்று ரஞ்சித் சொல்லி வார்த்தைகள் விதுரனின் மனதில் ஒலித்தாலும், பிரதிக்ஷாவின் பேச்சு விதுரனின் ஈகோவை டச் செய்ய ரஞ்சித் சொல்லிய வார்த்தைகளை எல்லாம் பெரிது படுத்தாமல் , பிரதிக்ஷா சொல்லிய அக்ரிமெண்டிற்க்கு ஒப்புக்கொண்டான் விதுரன்.
“நீ சொல்றத நான் ஒத்துக்குறேன்! அதே மாதிரி நான் சொன்னதுக்கும் நீ ஒத்துக்கணும், காலையில வக்கீல போய் பார்ப்போம்!”என்று விதுரன் சொல்ல, ” சரி அத்தான், நாளைக்கு வக்கீல் ஆபீஸ்லயே நான் சொன்ன அக்ரிமெண்ட்ளையும் நீங்க சைன் பண்ணிருங்க!” என்று பிரதிக்ஷா சொல்ல பிரதிக்ஷாவை முறைத்தான் விதுரன்.
“சரி அத்தான் நம்ம ரெண்டு பேரும் பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சு, நேத்து நைட்டு நீங்க என்கிட்ட நடந்தது! இன்னைக்கு காலையில நடந்த பிரச்சனை அதுக்கப்புறம் நடந்த கல்யாணம், அதுக்கப்புறம் நம்ம பண்ண ட்ராவல் எல்லாம் சேர்த்து வச்சு எனக்கு உடம்பு வலிக்குது! அதனால இன்னைக்கு நான் தூங்க போறேன், இப்படி அம்பிகாத்தையும் சரஸ்வதி அத்தையும் சேர்ந்து செஞ்ச அலங்காரம் எல்லாம் வேஸ்ட்டாயிருச்சுன்னு வருத்தப்படாதீங்க! நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய பூ வாங்கிட்டு வந்து இதைவிட அழகா அலங்காரம் பண்ணி இன்னைக்கு தவறவிட்ட சடங்க நாளைக்கு நடத்திடுவோம்!” என்று கண்ணடித்து விட்டு சிரித்து கொண்டே பிரதிக்ஷா சொல்ல அதிர்ந்து போனான் விதுரன்.
