உன்னில் சிறையாகிறேன் – 17

மரணத்தின் வாசலைக் கூட எளிதில் கடக்க முடிந்த என்னால் உன் சிறு அசைவினைக் கூட கணிக்க முடியவில்லையே…!

உன்னில் சிறையாகிறேன்  –  17        

“மம்மி… மம்மி… வேணும், இப்பவே வேணும் மம்மி” என்ற யாழினியின் அழுகைச் சத்தம் அக்னியனது செவிப்பறையைக் கிழித்தது, 

“ச்ச்…சே… காலங்காத்தால இப்படி ஒப்பாரி வச்சா எப்படி தான் நிம்மதியா இருக்க முடியும்” என்று கத்தினான் அக்னி, 

​சமையல்காரர் ரவி ஓடிவந்துஅருவியின் அறையில் இருந்து குழந்தையை சமாதானப்படுத்த முயன்றார், அவர் என்ன தான் சொன்னாலும் அது குழந்தையின் அழுகையை நிறுத்தவில்லை மாறாக இன்னும் அழுதாள் யாழினி,

“மம்மி… மம்மி…” என்ற யாழினியின் அழுகைச் சத்தம், எதிரே தன் அறையில் இருந்த  அவனது செவிப்பறையைக் கிழித்தது. 

“ச்ச்… ஏய் என்னத்துக்கு கத்திட்டு இருக்க” என்று கதவை திறந்து கத்திக் கொண்டே வந்தான் அக்னி,

​சமையல்காரர் ரவி குழந்தையை சமாதானம் செய்வதை விட்டு விட்டு அக்னியிடம்  ஓடிவந்தான்,

“இது ஏன் காலங்காத்தாலயே ஒப்பாரி வச்சு உசிர வாங்குது” என்று உக்கிரமாக கேட்டான் அக்னி,

“அது.. ஒன்னு இல்ல, சார் அருவி மேடம் இல்ல அதான் குழந்தை அம்மா வேணும் அழுது” என்றார் சமையல்காரர்,

“ஏன் அவ புள்ளையை கூட பாத்துக்க மாட்டாளா, பெத்த புள்ளையை தனியா விட்டுட்டு எங்க போய்த் தொலைஞ்சாங்க அந்த மேடம்” என்று அக்னி கேட்க,

​ரவி தயக்கத்துடன், 

“சார்… அது வந்து… அருவி மேடத்துக்கு உடம்பு முடியாம போயிடுச்சு, ஐயா தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க சார்” என்றான்,

​”உடம்பு முடியலையா, நேத்து நைட்டு நல்லா தான கேக் வெட்டிட்டு, சிரிச்சு பேசிட்டு இருந்தவளுக்கு விடிஞ்ச உடனே எப்படி திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போச்சு, இதுவும்  நாடகமா தான் இருக்கும், நாடகக்காரி” என்று எள்ளி நகையாடினான் அக்னி,

​”இல்ல சார்… அது அம்மா… வசந்தா மேடம் வந்து…” என்று ரவி இழுக்க,

​”அவங்களா, அவங்க இங்க எதுக்கு வந்தாங்க, வந்த இடத்துல என்ன கலாட்டா பண்ணாங்க” என்று சந்தேகமாக கேட்டான் அக்னி 

​”வசந்தா மேடம் வந்து ஐயா கூடவும், அருவி மேடம் கூடவும் சண்டை போட்டு அவங்க அருவி மேடம் கழுத்தைப் பிடிச்சு நெரிச்சதுல அவங்க மயங்கிப் படிக்கட்டுல விழுந்துட்டாங்க, 

படியில உருண்டு விழுந்தப்ப தலையில பலமான அடிபட்டிருச்சு, மயங்கினவங்க கண் திறக்கல சார் அதான் ஐயா பயந்து போய் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டாங்க” என்று நடந்தவற்றை கூற,

​அக்னி ஒரு நிமிடம் திகைத்தான், ஆனால் அடுத்த நொடியே அவன் முகம் கல்லாக மாறியது,

“ஒரு நாளகவது என் நிம்மதியை கெடுக்காம இருக்காங்களா, ச்சே” என்று சளித்துக் கொண்டான் அக்னி,

​அறையினுள் யாழினியின் அழுகை இப்போது விம்மலாக மாறியிருந்தது,

“மம்மி… வேணும்… மம்மி…” என்ற யாழினியின் சத்தம் ​அக்னிக்கு எரிச்சல் தலைக்கு ஏற்றியது,

அக்னிக்கு பொறுமை எல்லை கடந்தது,

“இருக்கிற பிரச்சனையில இது வேற கத்தி கத்தி என்னை இரிடேட் பண்ணது” என்று கறுவியபடி, அருவியின் அறைக்கதவை ஓங்கி உதைத்துவாறு உள்ளே வந்தான்,

​அங்கே கட்டிலின் மூலையில் சுருண்டு அமர்ந்து, கண்ணீர் வழிந்தோட “மம்மி…” என்று விம்மிக் கொண்டிருந்தாள் யாழினி, 

அக்னியின் அந்த அசுர உருவத்தையும், சிவந்த கண்களையும் பார்த்ததும் அந்தப் பிஞ்சு இதயம் ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது,

​”எதுக்குடி கத்துற, உன் அம்மா இங்கே இல்லை, அவ  இங்கே வர்ற வரைக்கும் கத்திட்டு இருந்த உன்னைத் தூக்கி வெளிய வீசிடுவேன் ஜாக்கிரதை” என்று அவன் இடியெனக் கர்ஜித்தான்,

​அக்னி அத்தனை கோபமாக விரலை நீட்டி மிரட்டிய அந்த வேகம், யாழினியின் பிஞ்சு மனதை நிலைகுலையச் செய்தது,

“என்ன அப்படி பாக்குற, இங்க பாரு உன் அம்மா வந்ததும் அவளை கூட்டிட்டு இங்க இருந்து இரண்டு பேரும் ஓடிப் போயிருங்க, இதுக்கும் மேல இங்கயே டேராப் போடலாம்னு நினைச்சீங்க, 

அப்புறம் உன் அம்மாவை கொன்னுட்டு உன்ன ஆர்பனேஜ்ல கொண்டு போய் விட்டிருவேன், அப்புறம் அங்க போய் நீ தினம் தினம் மம்மி மம்மி ன்னு அழுதுட்டு இருக்கனும், 

என்ன புரியுதா, ஒழுங்கா உன் அம்மாவும் நீயும் இந்த வீட்டை விட்டு போயிரனும், இல்ல அப்புறம் உனக்கு இருக்கிற அம்மாவை இல்லாம பண்ணிடுவேன்” என்று கடுங்கோபத்தில் மிரட்டினான்,

அவனின் உருவமும், அவன் பேச்சில் இருந்த சீற்றமும் சின்னஞ் சிறு குழந்தைக்கு அச்சத்தைக் கூட்ட பயம் அவள் நரம்புகளைத் தகித்தது,  அவள் உடல் சட்டென வியர்த்தது,

​அக்னியை அவள் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, யாழினியின் கண்கள் மேல்நோக்கிச் சொருக, “அ… அ…” என்று அவள் வாய் ஏதோ சொல்ல முயல, நுரை மெல்ல அவள் இதழ்களின் ஓரத்தில் அரும்பியது, 

கைகளும் கால்களும் தன்னிச்சையாக வெட்டி இழுத்தது,

​அந்த மென்மையான பிஞ்சு உடல், கட்டிலில் துடித்தது, நரம்புகள் புடைக்க, மூச்சுத் திணற, அவள் உடல் ஒரு வில்லாக வளைந்து பின் அதிர்ந்தது, 

வலிப்பு  சிறுமியவளைச் சுருட்டிப் போட்டது, சில வினாடிகளுக்கு முன்பு “மம்மி” என்று அழுத அந்த மழலை இன்று சத்தமின்றி மரணத்துடன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது,

​”சார், பாப்பாவுக்கு வலிப்பு வந்திடுச்சு சார், ஐயோ பாப்பா… கண்ணைத் திறம்மா” என்று சமையல்காரர் ரவி அலறிக்கொண்டு உள்ளே ஓடிவந்தார்,

​அக்னி அப்படியே சிலையாக உறைந்து நின்றான்,

சார்… என்ன சார் பாத்துட்டு இருக்கீங்க, பாப்பா கை கால் எல்லாம் இழுக்குது சார்… சீக்கிரம் தூக்குங்க சார்” என்று ரவி அலறினான், அக்னி யாழினியை பார்த்துக் கொண்டே நிற்க,

சமையல்காரர் தான் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் போர்வையோடு சேர்த்து யாழினியைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டார்,

குழந்தையைத் தூக்கிக்கொண்டு மாடிப் படிகளில் கீழே ஓடினார், வசந்தராணி என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தாள்

​அக்னியின் காரில் குழந்தையை ஏற்றிக் கொண்டு டிரைவரின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்,

வீட்டுக் கேட்டைத் தாண்டி கார் சீறிப் பாய்ந்தது,

ரவி மடியில் யாழினி சலனமற்று கிடந்தாள், வாயில் வந்த நுரையுடன் ரத்தம் வந்தது, அதைப் பார்த்த சமையல்காரருக்கு இன்னும் பதற்றம் அதிகமானது,

“தம்பி வேகமா போ தம்பி, பாப்பா வாயில இருந்து ரத்தம் வருது, எனக்கு பயமா இருக்குப்பா” என்றார் சமையல்காரர்,

“இதோ அண்ணா போயிரலாம், பக்கத்துல வந்துட்டோம், குழந்தைய நல்லா பிடுச்சுக்கோங்க அண்ணா” என்ற டிரைவரும் பதற்றமாக வண்டியை ஓட்டினான்,

திருவாசகம், அருவிக்கு நினைவு திரும்பாத தவிப்பில் ஐசியூ வாசலில் அமர்ந்திருக்க, அங்கே ரவி குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி வருவதைப் பார்த்துப் பதறி எழுந்தார், 

​”ரவி பாப்பாவுக்கு என்னாச்சு?” என பதற்றமாக கேட்க,

​”ஐயா, பாப்பாவுக்கு ஃபிட்ஸ் வந்திடுச்சு… சார் மிரட்டினதுல பயந்து போய்…” என்று ரவி சொல்லும்போதே ஸ்ட்ரெச்சர் வந்து சேர்ந்தது,

​அருவி அனுமதிக்கப்பட்டிருந்த அதே அவசர சிகிச்சைப் பிரிவின் அடுத்த படுக்கையில், இப்போது அவளது உயிரான யாழினியும் கிடத்தப்பட்டாள்,

இடையில் ஒரு திரைச்சீலை மட்டுமே… ஒரு பக்கம் தாய், மறுபக்கம் சேய். இருவருமே உடலளவிலும் மனதளவிலும் வதைக்கப்பட்டுக் கிடந்தனர்,

அதைக் காணும் போது திருவாசகத்தின் உள்ளமோ துடிதுடித்தது, தன் வார்த்தைகளை நம்பி வந்த பெண்ணையும் குழந்தையையும் காக்க முடியாமல் போன தன் கையறு நிலையை என்று எண்ணி கலங்கி போனார், 

“ரவி, நான் வர்ற வரைக்கும் இரண்டு பேரையும் பத்திரமா பாத்துக்க எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை ஒன்னு இருக்கு அதை முடிச்சுட்டு வரேன்” என்று சொல்லிச் செல்ல, ரவி பவ்வியமாக தலையசைத்தார்,

கட்டுங்கடங்காத கோபத்தோடு அக்னியை தேடி வந்தவர், அவன் ஆபீஸில் இருப்பதாக தெரிந்து கொண்டு அங்கே வந்தார்,

“யூ ப்ளடி இடியட் நீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கேன்னு தெரியுமா, ஒரு சின்னக் குழந்தைய அதுவும் இப்பதான் அவ்ளோ சர்ஜரி முடிஞ்சு தேறி வர்ற குழந்தைய, 

பயமுறுத்தி அவளுக்கு பிட்ஸ் வர்ற அளவுக்கு மிரட்டிருக்க, நீ எல்லாம் மனுஷனா மிருகமா, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இப்படி எல்லாம் பண்ற” என்று திருவாசகம் கத்த,

“அதே கேள்வியை தான் நானும் கேட்குறேன், உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, திடீர்ன்னு யாரோ ஒருத்திய கூட்டிட்டு வந்து தாலி கட்டுன்னு சொன்னீங்க,

நானும் போனா போகுதேன்னு தாலியைக் கட்டுனா, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருந்திருக்கு, ஒரு குழந்தையோட இருக்கிறவளுக்கு இறக்கப்பட்ட எள்வோ பணம் வேணுமோ குடுங்க,

இந்த உலகத்துல வேற ஆம்பளையா, அவளை மாதிரியே இருக்கிற யாரோ ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அழகு பாருங்க,

அதை விட்டுட்டு, எதுக்கு தாத்தா என் தலையில அவளை கட்டி வச்சீங்க, நியாயமா பார்த்தா நீங்க செஞ்ச காரியத்துக்கு நான் தான் கோபப்படனும்” என்று அக்னி வாதிடும் போதே 

திருவாசகம் ஆத்திரத்தில் மேஜையை ஓங்கித் தட்டினார். அந்தச் சத்தம் அந்த அறையையே அதிர வைத்தது,

​”நிறுத்து அக்னி, நியாயம் பேச வந்துட்டாயா, ஒரு பிஞ்சு குழந்தை உயிருக்குப் போராடிட்டு இருக்கு, அதுக்குக் காரணமே நீதான்னு தெரிஞ்சும் உனக்கு இன்னும் குற்ற உணர்ச்சியே இல்லல்ல,

அருவிங்கிற ஒரு நல்ல பொண்ணை, ஒரு தேவதைய தெரியாம உன் கையில பிடிச்சு குடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என்று ஆக்ரோஷமாக பேசினார் திருவாசகம், அக்னி ஏளனமாகச் சிரித்தான்,

“இங்க பாருங்க தாத்தா, உங்க சென்டிமென்ட் எல்லாம் இனிமே என்கிட்ட வச்சுக்காதீங்க, அதை நம்பி நான் படுறதே போதும், நேத்து வந்தவளுக்காக என்னையே எடுத்தெறிஞ்சு பேசுறீங்க இல்லே, 

அது எல்லாமே அவளால வந்தது, அவளால தான் என் நிம்மதியே போச்சு, தேவையில்லாம என் லைஃப்ல வந்து என்னை தினம் தினம் சாவடிக்கிறா” என்று அருவையை சாடினான் அக்னி,

​”நிம்மதி வேணுமா அக்னி, அப்போ ஒன்னு செய் என்னை கொன்னுட்டு நீ நிம்மதியா இரு, நீ பண்றதை எல்லாம் பார்த்து நொந்து சாகுறதை விட ஒரேயடியா போயிட்டா கூட தேவலாம்னு இருக்குடா” என்று உள்ளம் உருக வெதும்பினார் திருவாசகம், 

​”ஒருவேளை… ஒருவேளை அந்தக் குழந்தைக்கோ இல்ல அருவிக்கோ ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்டா” என்று எச்சரிகையாக சொல்ல,

​”சரி இப்ப நான் என்ன பண்ணனும்ங்கிறீங்க? ஹாஸ்பிடல் பில்லைக் கட்டணுமா கட்டுறேன், ஆனா இதுக்கப்புறம் அவ நம்ம வீட்டுக்கு வரக்கூடாது, 

அவளை பாத்தாலே அப்படியே எரியுது தாத்தா, இவளை மாதிரி ஒருத்தி என் லைஃப்ல பாக்கவே விரும்பல, நான் பண்ண தப்பு உங்க பேச்சை கேட்டு அவளை கட்டுனது மட்டும் தான்,

அதுக்கு என்ன காம்பன்ஷேஷன் வேணாலும் தர்றேன், என்னை விட்டு அவளை போக சொல்லுங்க தாத்தா, என் முன்னாடி நிற்க கூட தகுதி இல்லாத ஒரு கேவலமான..” என்று, 

அக்னி தன் சுவாலையை வார்த்தைகளாக குழம்பைக் கக்க, அதை கேட்டு பொறுக்க முடியாத தாத்தா,

“டேய் சும்மா நிறுத்துடா, உன் முன்னாடி நிற்க அவளுக்கு தகுதி இல்லையா, அவ முன்னாடி நிற்க இல்ல, அவளோட பேரை சொல்லக் கூட தகுதி இல்லாத நீ அவளையே குறை சொல்றியா,

டேய் அறிவு கெட்டவனே, அவ யார் தெரியுமா அருவிங்கிறவ தனி ஆள் இல்லடா, அவளோட லைஃப்ல என்ன நடந்ததுன்னு தெரியுமா, அவ இழந்தது கொஞ்ச நஞ்சம் இல்லடா” என்ற திருவாசகத்தின் குரல் அழுகையாக உருவெடுத்தது,

சாதாரணமா ஒரு பெண்ணிற்காக தாத்தா ஏன் இவ்ளோ தூபம் போடுகிறார் என்று எண்ணினான் அக்னி, 

அடுத்து தாத்தா சொல்வதைக் கேட்டு தனக்கு தலையே சுற்றும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page