உன்னில் சிறையாகிறேன் – 18

உன் கண்கள் பேசும் மொழி ஒவ்வொன்றிலுமே 

என் நேசம் பித்துக் கொள்கிறதே…!

உன்னில் சிறையாகிறேன்  – 18

அதிகாலையின் அமைதியைக் கலைக்க காகங்கள் கரைந்திட, ஜன்னல் திரைகளுக்கு இடையே புகுந்த கதிரவனின் மங்கலான வெளிச்சம், 

வீட்டின் ஒவ்வொரு மூலையையும் மெதுவாகத் தொட்டு எழுப்பிக் கொண்டிருந்தது, சமையலறையில் இருந்து தாமரையின் கைவண்ணத்தில் எவர்சில்வர் பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இசையெழுப்ப, ஆராவாரத்தோடே இருந்தது வீடு,

அடுக்களையயல் பாத்திரங்களை உருட்டி, வேக வேகமாக வேலை செய்து கொண்டிருந்த தாமரையின் முகத்தில், அன்றைய நாளை விஷேஷமாக பிரதிபலித்தது,

​”தாமரை, காஃபி போட்டாச்சா? இன்னும் எவ்வளவு நேரம்?”  ஹாலில் அமர்ந்திருந்த ராகவனின் குரல், கூடத்தை தாண்டி ஒலித்தது, 

“இப்ப தானே எழுந்தீங்க அதுக்குள்ள என்ன அவசரம், காஃபிக்கு டிகாஷன் இறங்கறதுக்குள்ள பத்து தரம் காஃபி காஃபின்னா ரெடியாகிடுமா, 

காஃபி நல்லா மணக்க மணக்க வேணும்னா கொஞ்சம் பொறுமையா தான் இருக்கனும்” என்று நீட்டி முழக்கி பதிலளித்தாள் தாமரை,

“சரி சரிம்மா நீ காஃபி ரெடியாகுற வரைக்கும் வெய்ட் பண்றேன்,நீ பொறுமையாவே கொண்டு வா” என்று கூறி வீட்டுக்கு வெளியே வந்தார் ராகவன், 

அங்கே அவரின் மருமகள் வாசல் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ராகவன், 

“ஏம்மா ஜனனி இந்த மாதிரி நேரத்துல இப்படி கொட்டுற பனியில வேலை செஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆவறது, வயித்து பிள்ளைக்காரி நீதான்ம்மா உன்னை கவனமா பாத்துக்கனும்” என்று ராகவன் கனிவாக சொல்ல,

“ஏழு மாசம் ஆச்சு மாமா இனிமே  குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சா தான் சுகப்பரசவம் ஆகும்னு அம்மா சொன்னாங்க, அதான் காலையிலேயே கோலம் போடலாம்னு வந்தேன் மாமா” என்று சொன்னவளிடம் இருந்த கோலப்பொடியை ராகவன் பிடிக்கிக் கொண்டு,

“அவங்க அந்த காலத்து ஆளு, அதனால அப்படி சொல்லிருப்பாங்க, நீ எந்த வேலையும் செய்யக் கூடாது, இப்ப என்ன கோலம் போடனும், நான் எதுக்கு இருக்கேன், நானே போட்டுக்கறேன் நீ உள்ள போய் ரெஸ்ட் எடும்மா” என்று மாமனார் ராகவன் சொல்ல,

“போங்க மாமா, எவ்ளோ நேரம் தான் ரெஸ்ட் எடுக்கிறேன் பேர்வழின்னு சும்மாவே இருக்கிறது, அத்தை தான் வீட்ல ஒரு வேலையும் செய்ய விடாமாட்டேங்குறாங்கன்னு,

வெளிய வேலை செய்ய வந்தா நீங்க விட மாட்டேங்குறீங்க, இப்ப நான் என்ன தான் பண்றது” என்று குழந்தை போல முகத்தை தொங்கலில் விட்டு நின்றாள் ஜனனி,

“உனக்கு வேலை தானே செய்யனும் தாராளமா செய்யி, இன்னும் மூனு மாசத்துல ராஜாவோ ராசாத்தியோ பொறந்திருவாங்க, அவங்கள எங்கிட்ட குடுத்திட்டு நீ என்ன வேணாலும் செய்யிம்மா அப்புறம் யாரு கேள்வி கேட்பா” என்றவாறு கோலம் போட தொடங்கினார் ராகவன்,

“மாமா என்க்கு ஒரு டவுட் உங்களுக்கு யார் கோலம் போட சொல்லி குடுத்தா, அழகா போடுறீங்க” என்று ஜனனி கேட்க,

“இதை எல்லாம் யாரும்மா சொல்லி குடுப்பா, கோலம் நோட்டுல வரைஞ்சா டிராயிங் அதையே வாசல்ல போட்டா கோலம் சிம்பிள்” என்று சொன்னவர் அழகான தாமரை பூவை வரைந்திருந்தார், அதை பார்த்த ஜனனி சிரித்தாள்,

“என்ன மாமா காலையிலேயே லவ்ஸா, அத்தைய நினைச்சுட்டே கோலம் போட்டீங்களோ” என்று மருமகள் கலாய்க்க,

“இங்க பாரு மருமகளே ப்ளான் பண்ணி பண்ணல, தானே வந்துச்சு நானும் போட்டுட்டேன், இதை நீ இத்தோட விட்டிறனும் ஓகேயா” என்று ராகவன்,

“ஓகே தான் ஆனா நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காது மாமா சாரி மாமா, எனக்கு உடனே யார்கிட்டயாவது சொல்லியே ஆகனும்” என்றபடி உள்ளே வேகமாக போனவள்,

சட்டென நிலவாசற் படியில் கால் இடற, பிடிமானம் இல்லாமல் குப்புற விழப்போனாள் ஜனனி, அதைப் பார்த்த ராகவன்,

“அய்யோ பாத்தும்மா” என்று கத்தியவாறு ஓடி வர அதற்குள் கடவுளே அனுப்பிய தேவ தூதுவளாக வந்து அவளைத் தாங்கினாள் மகிழருவி,

ஒரு நொடி ஜனனிக்கு வியர்த்து வழிந்தோடியது, அவளால் ஒரு கணம் எதையும் யோசிக்க முடியவில்லை, ராகவனுக்கே மனசெல்லாம் படபடவென அடித்துக் கொண்டது,

ராகவனின் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த தாமரை, குளித்து உடைமாற்றிக் கொண்டிருந்த விஷ்வா என இருவரும் ஓடி வந்தனர், நல்ல தூக்கத்தில் இருந்த யாழினியன் கூட எழுந்து விட்டான்,

“ஏங்க என்னாச்சு, ஏன் இப்படி கத்துனீங்க” என்று கேட்டவாறு வந்த தாமரை, அருவி ஜனனியை தாங்கி பிடிப்பதைப் பார்த்ததும்,

“அம்மாடி என்னாச்சு உனக்கு, ஏம்மா இப்படி வியர்த்து போயிருக்கு, அய்யோ கடவுளே என்னாச்சோ தெரியலையே” என்று புலம்ப,

“ஜனனி என்ன பண்ணுது, வயிறு வலிக்கிதா, இல்ல தலை சுத்துதா ஹாஸ்பிட்டல் போலாமா” என்று அவள் கையை பிடிக்க,

“எல்லாரும் பதறாதீங்க ஒன்னும் இல்ல, முதல்ல அண்ணிய உட்கார வைக்கலாம், அண்ணா நீ போய் தண்ணி கொண்டு வா” என்று கூறியவள் 

ஜனனியை கைத்தாங்கலாக கூட்டி வந்து ஷேரில் அமர வைத்தாள், விஷ்வா ஓடிப் போய் தண்ணீர் சொம்புடன் வர அதை வாங்கி அவளுக்கு புகட்டினாள் மகிழருவி,

“இப்பவாவது சொல்லுங்க என்ன தான் ஆச்சு” என்று தாமரை கேட்க, 

“”அது… அது வந்து தாமரை… ஜனனி உள்ள வேகமா வந்தாளா, கால் தடுக்கி அப்படியே குப்புற விழப் போயிட்டாமா, நல்லவேளையா அருவி கரெக்டான நேரத்துல வந்து தாங்கி புடிச்சுட்டா,

இல்லன்னா என்னவா ஆகியிருக்கும்னு நினைச்சாலே கை கால் எல்லாம் நடுங்குது” என்றார் தன் நடுக்கத்தை மறைக்க முடியாமல் ராகவன் சொல்ல, 

​”ஏன் ம்மா ஜனனி, உனக்கு எத்தனை தரம் சொல்றது, இந்த நேரத்துல மெதுவா நடக்கணும்னு தெரியாதா, உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நாங்க என்ன பண்ணுவோம்” என்று ஆதங்கமாக தாமரை கேட்க

​ஜனனி இன்னும் பேச முடியாமல் மௌனமாக தலைகுனிந்தாள்,

“அம்மா அண்ணிய எதுவும் சொல்லாதீங்க, அது ஏதோ தெரியாம நடந்திருச்சு, இனி பேசி என்னாப் போகுது, பாருங்க அவங்களே பயந்து போய் இருக்காங்க, 

அண்ணி ஒன்னும் இல்ல, ரிலாக்ஸா இருங்க, இப்போ உங்களுக்கு ஓகே தானே” என்று அக்கறையோடு வினவினாள்,

​ஜனனி மெதுவாகத் தலையசைத்து, 

“இப்ப பரவால்ல அருவி… தேங்க்ஸ், நீ மட்டும் வரலன்னா… என்ன ஆகியிருக்குமோ” என்ற ஜனனியின் குரலில் நடுக்கம் அப்பட்டமாக தெரிய,

“என்ன ஆகி இருக்கும், ஒன்னும் ஆகாது, எதையுமே நெகடிவா திங் பண்ணாம, ப்ரீயா விடுங்க அண்ணி” என்று தேற்றினாள் மகிழருவி,

“ஏன் ஜனனி காலங்காத்தாலயே இப்படி பண்ற,  உன் ஒருத்தியால பாரு எல்லாரும் பயந்துட்டோம்” என்று விஷ்வா சொல்ல,

“சாரி சாரி விஷ்வா, நான் வேணும்னு பண்ணல, தெரியாம தான் கால் தடுக்கிடுச்சு” என்றவள் அழும் நிலையானாள்,

“சரி சரி அழாத, இனிமே நடக்கும் போது பார்த்து மெல்ல நட, எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது, நாம தான் கேர்புஃல்லா இருக்கனும்” என்று அறிவுரித்தினான் விஷ்வா,

“போதும் போதும் இனி அவங்களே பார்த்துப்பாங்க, காலையிலயே அட்வைஸ் மழைய பொழியாம எல்லாரும் அவரவர் வேலையை பாருங்க,

அம்மா எனக்கு இன்னும் காபி குடுக்கல, டிபன் ரெடியா எனக்கு காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சு” என்று மகிழருவி சூழ்நிலையை சகஜமாக்க,

“ஆச்சச்சோ அடுப்புல பால் வச்சிருந்தனே என்னாச்சுன்னு தெரியலயே” என்று தாமரை ஓட்டமெடுக்க,

“ஹலோ மிஸ்டர் விஷ்வா டிரஸ் மாத்தலாம்னு இருக்கீங்களா இல்ல இப்படியே அரையும் குறையுமா ஆபீஸ் போறதா உத்தேஷமா” என்று கிண்டலடிக்க,

“ஏய் வாலு ஆரம்பிச்சுப்டியா, உங்கிட்ட பேசி ஜெயிக்க என்னால முடியாது, நான் ஆபீஸ் கிளம்பனும்” என்று விஷ்வா ஜகா வாங்கிக் கொண்டு போக, 

அழும் யாழினியனுக்கு பால் ஆற்றி கொடுக்க சமையலைறைக்கு அழைத்துச் சென்றாள் ஜனனி, ராகவன் நியூஸ் பேப்பரோடு ஹாலில் அமர்ந்து கொள்ள, 

“ஆமா வீட்ல இவ்ளோ பெரிய களேபரமே நடந்து முடிஞ்சிருச்சு, ஆனாலும் இந்த வீட்டோட செல்ல பிள்ளையான சின்னவரு எங்க போனாரு” என்று மகிழருவி கேட்கும் போதே,

வாசலில் இருந்து காதில் ‘ஹெட்செட்’ மாட்டிக் கொண்டு ஜாக்கிங் முடித்து விட்டு வந்தான் சந்துரு, இடுப்பில் கை வைத்த படியே அவனை தடுத்தாள் மகிழருவி,

​”என்ன காலையிலேயே போஃஸ் குடுத்துட்டு வெட்டியா நிக்கிறதுக்கு எங்கூட ஜாக்கிங் வந்தா எப்படி இருக்கும்” என்று கேட்டான் சந்துரு,

“எப்படி இருக்கும்னு தெரியாது, நீயே சொல்லு தெரிஞ்சுக்கறேன் ஏன்னா ஜாக்கிங் போறேன்னு சைட் அடிக்க போறது நீதான” என்று மகிழருவி கேட்க,

“ச்சே யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்ட, ஐயம் அக்மார்க் சிங்கிள் யூ நோ, நானாவது சைட் அடிக்கிறதாவது அப்படின்னா என்னன்னே எனக்கு தெரியாது” என்றவன் கதைப் பிடித்து திருகினாள் மகிழருவி,

“ஏன்டா அண்ணனாச்சேன்னு உனக்கு மரியாதை குடுத்தா நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா” என்றாள் அருவி,

“ஸ்ஸ்… ஆஆ… வலிக்கிதுடி, காதை விட்டுட்டு என்னன்னு சொல்லு நானும் தெரிஞ்சுக்கறேன்” என்று தங்கையிடம் இருந்த காதை காப்பாற்றினான் சந்துரு,

“மூணாவது தெருவுல இருக்கிற ரம்யா வீட்டுப் பக்கம் அடிக்கடி சுத்துறேன்னு கேள்வி பட்டேன், அதுவும் காலையில அவ வீட்டுக்கு பால்காரன் வர்றானோ இல்லையோ நீ கரெக்டா போயிடுறியாமே நிஜமாவா” என்று அருவி கேட்க,

“ரம்யாவா, நீ சொல்ற ரம்யா யாருன்னு தெரியாது, சும்மா கதை சுத்தாத” என்றான் சந்துரு,

“நான் சொல்ற ரம்யா இல்லன்னா, அப்போ நீ எந்த ரம்யா பின்னாடி சுத்துற” என்று கேட்க,

“என்னடா சந்துரு ஜாக்கிங் போறது இதுக்குத்தானா, நான் கூட என் புள்ள உடம்பை ஜம்முன்னு பிஃட்ட வச்சுக்க தான் ஜாக்கிங் போறான்னு நினைச்சா, நீ வேற ஏதோ வேலைக்கு போற மாதிரி தெரியுதே” என்று சந்தேகமாக சொல்ல,

“அம்மா தாயே எனக்கு ரம்யாங்கிற பேர்ல யாரையுமே தெரியாது, தயவு செஞ்சு கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்காத, இது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சா எதால அடிப்பாங்கன்னே தெரியாது, 

நான் யாரையும் பாக்கல, எனக்கு யாரையும் தெரியாது, நீ சொல்ற மூணாவது தெரு இருக்கிற பக்கம் கூட போனது இல்ல, யாரோ என்னைப் பத்தி தப்பா உங்கிட்ட சொல்லிருக்காங்க, நம்பாதம்மா” என்று சரண்டர் ஆனான் சந்துரு,

“அந்த பயம் இருக்கட்டும், இனிமே நான் எது சொன்னாலும் செய்யனும் முடியாதுன்னு சொன்னா, இப்ப இங்க சொன்னதை அப்படியே அம்மாகிட்ட சொல்லிடுவேன்” என்று மிரட்ட,

“ஒரே ஒரு பேரைச் சொல்லி என்னை கதி கலங்க வச்சுட்டாளே, ஆமா யாரு அந்த ரம்யா” என்று அவன் யோசனை குதிரை தறிகெட்டு ஓட, அவன் தலையில் தட்டினாள் மகிழருவி,

“எனக்கு காலேஜூக்கு டைம் ஆச்சு சீக்கிரமா போகனும், பஸ்ல போனா லேட் ஆகிடும், சட்டுன்னு குளிச்சு ரெடியாகிட்டு வந்து என்னை கொண்டு போய் காலேஜ்ல விடு” என்றாள்,

“ஹேய் என்ன என்னை கொண்டு போய் விடச் சொல்ற, எனக்கு வேலை இருக்கு, என்னால முடியாது” என்றான் சந்துரு,

“என்னது முடியாதா, அம்மா அம்மா சந்துரு ஜாக்கிங் போறேன்னு…..” என்று கத்தியவாறு சமையலறையை நோக்கி செல்ல, 

“இதோ இன்னும் அஞ்சே நிமிஷத்துல எப்படி ரெடியாகி வர்றேன்னு மட்டும் பாரேன், ஆமா நீ சாப்பிட்டியா இல்லையா, நீ இரண்டு இட்லி சாப்பிடறதுக்குள்ள அண்ணா ஷார்ப்பா ரெடியாகி வர்றேன் செல்லம்” என்று கூறி விட்டு வேகமாக ஓடினான் சந்துரு,

அவனைப் பார்த்து சிரித்தபடியே உள்ளே சென்றாள் மகிழருவி, 

அன்பு பாசம் நேசம் மிகுந்த அவளின் குடும்பம் தொலைந்தது எங்கே?

அவளாக தொலைத்து விட்டாளா?

 அல்லது சிதைக்கப்பட்டதா?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page