அத்தியாயம் 12
இப்போதெல்லாம் கௌரி தினமும் வர்ஷினியின் கல்லூரி முன்பு தினமும் ஆஜராகி விடுவான். அவள் கல்லூரியை விட்டு வெளியே வரும் முன்பே அவன் அவளுக்காக அங்கேயே காத்துக் கொண்டு இருப்பான். இதுவும் அவுனுக்கு புதுவித அனுபவத்தையே தந்தது. இவனுக்கு வேற வேலையே இல்லையா என்று அவனை பார்த்தும் பார்க்காதது போல சென்று விடுவாள் வர்ஷினி. கௌரியும் அவளிடம் எந்த தொந்தரவும் செய்ய மாட்டான் இது தினமும் வாடிக்கையாகவே நடந்துக்கொண்டு இருந்தது. அன்றும் அவன் வர்ஷினியின் வரவுக்காக காத்துக்கொண்டிருக்கையில் இடியுடன் கூடிய மழை பிடித்துக் கொண்டது. வர்ஷினி காலையில் நல்லாத்தானே இருந்தது, இப்ப என்ன இப்படி மழை பெய்கிறதே, குடை கூட கொண்டு வரலையே என்று நினைத்துக் கொண்டே பேருந்து நிலையத்தில் வந்து நின்றாள். பேருந்தில் நல்ல கூட்டம். பத்தாத்திற்கு இவளை போல கல்லூரி பெண்களும் ஆண்களும் நிறைய பேர் இருந்ததால் பேருந்து நிலையத்திலும் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைதான். வர்ஷினியால் எந்த பேருந்திலும் ஏறவே முடியவில்லை. அடுத்தடுத்து வந்த பேருந்துகளிலும் கூட்டத்தால் அவளால் ஏற முடியமால் போனது. இருட்டிக் கொண்டும் வந்தது. மழையும் நின்றபாடில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த நிலையில் கௌரி தன் பைக்கை எடுத்துக்கொண்டு அவள் முன் வந்து நின்றான்.
ஏறு வர்ஷினி, உன்னை வீட்டில கொண்டு போய் விட்டுடுறேன் என்று வண்டியை கொண்டு வந்து அவள் அருகில் நிறுத்தியதும், எனக்கு வீட்டுக்கு போக தெரியும், யாருடைய உதவியும் தேவையில்லை என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் அப்படி கூறியதும் கௌரி ஒன்றுமே பேசாமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளுக்கு சற்று தள்ளி நின்றுக்கொண்டான். அவனுக்கும் அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவள் வண்டியில் ஏறமாட்டாள் என்று முன்பே தெரிந்த விஷயம் என்பதால் அவனுக்கு இது ஒன்றும் பெரிய ஏமாற்றமாக இல்லை. அவனால் வர்ஷினியை இந்த நிலைமையில் தனிமையில் விட்டு போகவும் மனது இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். சிறிது நேரம் சென்றவுடன் ஒரு ஆட்டோ வந்தது. வர்ஷினி அதை கை காட்டி நிறுத்தி அதில் ஏறி கொண்டாள். வர்ஷினி ஆட்டோவில் ஏறியதும் கௌரியும் தன் பைக்கை எடுத்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்து சென்றான். சிறிது தூரம் சென்றதும் அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னமா பின்னாடி ஒருத்தர் பைக்கில் நம்மை பின் தொடர்ந்து வராரு, உங்களுக்கு தெரிஞ்சவராம்மா?என்று வினவ, வர்ஷினி திரும்பி பார்த்து, இவன் ஏன் விடாது கருப்பு போல எங்கே போனாலும் என்னையே பின் தொடர்ந்து வரான் என்று மனதில் நினைத்துக்கொண்டு யாருனு தெரியலண்ணா, நீங்க போங்க என்றதும் அந்த ஓட்டுநர் மழைன்னு பார்க்காமல் இந்த பொண்ணு பாதுகாப்புக்காக அந்த பையன் பின்தொடர்ந்து வரான், இவங்க அந்த பையனை தெரியாதுன்னு சொல்றாங்க, இரண்டு பேருக்கும் ஏதாவது சண்டை இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே அவன் தன் வேலையை தொடர்ந்தான்.
வீடு வந்ததும் வர்ஷினி ஆட்டோவில் இருந்து இறங்கிக்கொள்ள, சிறிது தொலைவில் கௌரியும் தன் பைக்கை நிறுத்திவிட்டு அவள் வீட்டுக்குள் போகிறாளா? என்று பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் . அந்த ஓட்டுநர் அவளிடம் அந்த பையன் நீ வீட்டுக்கு பத்திரமா போறியானு பாக்கிறான் பாரும்மா. அந்த பையன் உன்னை காதலிக்கிறானா? உங்களுக்குள் சண்டையா? உன் மேல எவ்வளவு அக்கறையா இருக்கான். நானும் காதலித்து தான் கல்யாணம் செய்துக்கொண்டேன். அதனாலே எனக்கு அவனோட மனசு புரியுதும்மா. என் பொண்டாட்டியும் இது மாதிரி தான் என் மேல ரொம்ப அக்கறையா இருப்பா. காலையிலே எனக்கு டிபன் கொடுக்காம வேலைக்கு அனுப்பவே மாட்டாள். அது போல ராத்திரி நான் வரவரைக்கும் சாப்பிடாம எனக்காக வாசலிலேயே காத்திருப்பா. நான் கூட எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன். எனக்காக காத்து இருக்காதே. நீ சாப்பிட்டு தூங்குன்னு, நானே சாப்பிடுகிறேன்னு. அவ கேட்கவே மாட்டாள். நீ சாப்பிட சரியா சாப்பிடமாட்டே, நான் உனக்கு பரிமாறினா தான் எனக்கு திருப்தியாய் இருக்குனு சொல்லுவா. அதனாலே அவளுக்காகவே நான் ராத்திரி சீக்கிரமா வீட்டுக்கு போய்டுவேன். எனக்கு கல்யாணமாகி இரண்டு பிள்ளை வந்த போதும் அவள் அன்பில் மாற்றமே இல்லை. அதே அன்பைதான் இந்த பையன்கிட்டேயும் பார்க்கிறேன்ம்மா. உனக்காக மழையில் நனைந்துக் கொண்டே பைக்கை ஒட்டிக் கொண்டு நீ வீட்டுக்கு பத்திரமா போய் சேரணும்னு உன் வீடு வரைக்கும் வரான். உங்களுக்குள்ளே என்ன சண்டைனு எனக்கு தெரியாது ஆனா எக்காரணத்தை கொண்டும் அந்த பையனை விட்றாதே, இந்த காலத்திலே இந்த மாதிரி உண்மையான காதலை பாக்கிறது ரொம்ப கஷ்டம்மா. என்று சொல்லிவிட்டு அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார். அந்த காதலுக்கும் அன்புக்கும் நான் தகுதியே இல்லையே என்று வர்ஷினி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் கரண் என்னம்மா இப்படி நனைந்து இருக்கே! ஆட்டோ சத்தம் கேட்டுதே, ஆட்டோவில் வந்தும் இப்படி நனைஞ்சி வந்திருக்கே! இல்லப்பா, ரொம்ப நேரம் பஸ்ஸுக்காக நின்னிட்டு இருந்தேன், எல்லாம் பஸ்ஸும் கூட்டமா இருந்தது, பிறகு தான் ஆட்டோ பிடிச்சு வந்தேன் என்று கூற, சரி போய் உடை மாத்தி தலையை துவட்டிக்கிட்டு வாம்மா, சாப்பிடுலாம். சரி என்று தலையாட்டிவிட்டு தன் அறைக்குள் நுழைந்ததும் அத்தனை நேரம் அடக்கப்பட்டிருந்த கண்ணீர் அவள் கண்களிருந்து வழிந்தது. அப்படியே போய் படுக்கையில் விழுந்தாள் . ஏன்டா, எதுக்கு என் மேல் உனக்கு இத்தனை அன்பு, நான் உன்னை வெறுத்தாலும் மேலும் மேலும் என்கிட்டேயே வரியே, அப்படி நான் உனக்கு ஒரும் நல்லதும் செய்யலையே. அழவே கூடாதுனு முடிவோடு இருக்கிற என்னை ஏன்டா மேலும் மேலும் அழவைக்கிறே! என்று மனதினுள் புலம்பியவரே சிறிது நேரம் அப்படியே கண்மூடி படுத்திருந்தாள். பின் தந்தை அழைத்ததும் குளியலறை நோக்கி சென்றாள்.
அன்று விக்னேஷ் தன் தாய் தந்தையிடம் தான் எடுத்திருந்த முடிவை பற்றி பேச வந்தான். மலை நேரமாதலால் இருவரும் ஓய்வாக தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அன்று கௌரியும் சீக்கிரமாக வீட்டுக்கு வந்திருந்தான். விக்னேஷ் பேச ஆரம்பித்தான், அப்பா உங்களிடம் மாரிமுத்து அய்யா வந்து தன்னுடைய பாதி நிலத்தை உங்களை வாங்க சொன்னதா சொன்னீங்களே அவர் அந்த நிலத்தை வித்துட்டாராப்பா? இல்லை, விக்னேஷ் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வந்து நிலத்தை எங்களுக்கு தாங்க நாங்க தொழிற்சாலை தொடங்குறோம் என்று கேட்டும் கூட நல்ல விளையிற நிலத்தை நான் தொழிற்சாலை கட்ட தரமாட்டேன்னு சொல்லிட்டார். யாராவது விவசாயம் செய்ய கேட்டா மட்டும் கொடுக்கலாம்னு இன்னும் விக்காமத்தான் வச்சியிருக்கிறாரு. இந்த காலத்தில யாருப்பா விவசாயம் செய்ய முன்வராங்க. எல்லாரும் படிச்சி என்ஜினீராகவோ, மருத்துவராகவோ பெரிய நிறுவனத்தில் வேலை பாக்கவோ அல்லது உன்னை மாதிரி வக்கீலாகவோ தான் ஆசைப்படறாங்க என்று கூறியதும் விக்னேஷ் அப்பா நான் அந்த நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய ஆசைப்படறேன்பா. என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. நீங்க எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால், கடனாக தாம்பா, கண்டிப்பா திருப்பி கொடுத்திருவேன், நான் அந்த நிலத்தை வாங்கி விவசாயம் பண்றேன் என்று கூறியதை கேட்டு மாசிலாமணி திகைத்து அவனை பார்த்து, நீயா? விவசாயம் பண்ண போறே? உனக்கு அதை பத்தி என்ன தெரியும். அது லாப நோக்கத்தோடு செய்யற தொழில் இல்லப்பா. அதுவும் இல்லாமல் நீ வக்கீலுக்கு படிச்சிட்டு விவசாயம் பண்ண போறேன்னு சொல்லறது எப்படிப்பா? இது சரிப்பட்டு வருமா! என்று அவர் வினவ, அப்பா நான் உடனேயே அந்த நிலத்தில் விவசாயம் பண்ண போறதில்ல. மாரிமுத்து அய்யா வீட்டில் அவர்கூடவே இருந்து விவசாயம் பற்றிய நிறை குறைகளை தெறிஞ்சிட்டு அப்புறமாகத்தான் பண்ண போறேன். என்னை நம்புக்கப்பா. கண்டிப்பா என்னாலே வெற்றிகரமாக செய்ய முடியும் என்று கூறியதும், மாசிலாமணி சரிப்பா உன் மனசுக்கு எந்த வேலை பிடிச்சிருக்கோ அதை செய். ஆனா உன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து நேசிச்சு செஞ்சா கண்டிப்பாக நீ ஜெயிப்பே என்று கூற உடனே விக்னேஷ் ரொம்ப தேங்க்ஸ்ப்பா. எனக்கு முதலே நீங்க என்ன சொல்லுவீங்களோ என்று தயக்கமாக இருந்தது, நீங்க இப்ப சம்மதிச்சிது எனக்கு ரொம்ப சந்தோஷம்ப்பா என்று முக மலர கூறினான். கௌரியும் அவனை கட்டியணைத்து உன்னுடைய இந்த முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் அண்ணா. உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா இந்த தம்பியை மறந்துவிடாதே என்று கூற, நான் உங்கிட்ட கேட்காம வேரு யார்கிட்ட உதவி கேட்பேன் என்று சொல்லி தந்தையை திரும்பி பார்த்து, அப்பா நாளைக்கே நான் அவரை பார்க்க அவர் இருக்கிற கிராமத்துக்கு போறேன் என்றதும் அவரும் தலையாட்டி தன் சம்மதத்தை தெரிவித்தார். கவிதாவுக்கு தான் இதில் சம்மதம் இல்லை. அவள் வாய் வார்த்தையால் கூறாவிட்டாலும் அவள் முகமே பிடித்தின்மையை காட்டிக் கொடுத்தது.
அன்று வர்ஷினி தன் படிப்பு சம்மந்தமாக மித்ராவின் அப்பாவிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று அவளின் வீட்டுக் செல்ல, அங்கு வீட்டில் வேலைக்காரர்கள் மட்டுமே இருந்தார்கள். மித்ராவின் அம்மாவும் அப்பாவும் உறவினரின் திருமணத்திற்கு திருச்சி சென்றுவிட்டார்கள் என்றும் வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம், மித்ராம்மா வேலைக்கு சென்று இருக்கிறாள் என்றும் கூறிட வர்ஷினியும் தனக்கு கல்லூரி இருப்பதால் மித்ராவிடம் கொடுத்து விட்டால் அவள் கையெழுத்து வாங்கி வைப்பாள், வார இறுதியில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று மித்ரா வேலை செய்யும் இடத்திற்கு கிளம்பினாள். அங்கு சென்றால் கௌரி கண்டிப்பா தன்னை பார்க்க வருவானே என்ன செய்வது, சீக்கிரமாக அவளிடம் கொடுத்து விட்டு வந்துவிடவேண்டும் என்று யோசித்துக் கொண்டே மித்ராவின் அலுவலகத்தை நோக்கி சென்றாள். மதிய உணவு இடைவேளை நேரம் ஆதலால் மித்ராவுக்கு தகவல் கூறிவிட்டு கான்டீன்க்கு சென்று அமர, சிறிது நேரத்தில் மித்ராவும் அங்கு வந்தாள். அவளிடம் விஷயத்தை கூற அவளும் வர்ஷினியிடம் இருந்த ஆவணத்தை வாங்கிக் கொண்டாள். உடனே வர்ஷினி அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாக மித்ரா இருடி, உடனே போறே, வெயிலில் வந்திருக்கே ஜூஸ் சாப்பிட்டு போ என்றதும் வர்ஷினி உடனே அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் கிளம்பறேன் என்று அவசரமாக கிளம்ப, ஏன் கௌரியை இங்கே பார்த்தா அவன் அழகுல மயங்கி அவனை காதலிச்சிடுவோம்னு பயமாய் இருக்கா என்று நமட்டு சிரிப்புடன் கூற, அதெல்லாம் ஒன்னு இல்லையே. எனக்கு அவனை பார்த்து என்ன பயம். நீ ஜூஸ் ஆர்டர் பண்ணு, நான் குடிச்சிட்டே போறேன் என்று அமர்ந்துக் கொண்டாள். அப்படி வாடி வழிக்கு!
இந்த மித்ரா கிட்டேயே வா, உன்னை எப்படியாவது கௌரியுடன் சேர்த்து வைக்காம விடமாட்டேன் என்று மனதினுள் நினைத்துக் கொண்டே ஜூஸ் ஆர்டர் குடுக்கச் சென்றாள். இருவரும் பழ சாறு அருந்திக் கொண்டிருக்கையில்
கௌரி அங்கு வந்தான். அவனை பார்த்து மித்ரா ஹாய் டூட், வா உட்க்காரு, என்று பக்கத்தில் உள்ள இருக்கையை காட்ட அவனும் அதில் அமர்ந்தான். அதை பார்த்த வர்ஷினிக்கு மனதில் சிறு பொறாமை எட்டி பார்த்தது. மித்ரா அவனிடம் கௌரி நீ ஏன் உன்னை வேண்டாம்னு சொன்ன பொண்ணு பின்னாடியே சுத்தற! நீ சரினு சொல்லு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ விரும்புகிறவளை கல்யாணம் பண்ணறதைவிட உன்னை விரும்பிறவங்களை கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. நாம்ம ஏன் அதை முயற்சிக்கக்கூடாது! என்று கேட்க வர்ஷினி எதுவும் பேசாமல் இருவரையும் வெறுமனே பாத்திருக்க,கௌரி உடனே அடிக்கடி ஆளை மாத்திரத்திற்கு மனசு ஒன்னும் நாம் போடும் சட்டை இல்லை. அங்கு ஒருத்தருக்கு தான் இடம் உண்டு. அந்த இடத்தை நான் ஏற்கனவே ஒருத்திக்கு கொடுத்திட்டேன் என்று வர்ஷினியை பார்த்துக் கொண்டே கூற, என்னடா 80ஸ் கிட்ஸ் மாதிரி பேசறே , அவனவன் காலையில லவ் பண்ணறான், மத்தியானம் மேட்டர் பண்ணறான் மறுநாளே நாம இனிமேல் பிரெண்ட்ஸ் தான், பிரிஞ்சிடலாம்னு சொல்றான், என்று சிரித்துக் கொண்டே கூறியவுடன் கௌரி
நம்ம கலாச்சாரம்,உடை, உணவு பழக்க வழக்கங்கள் மாறினாலும் உண்மையான காதல் எப்போதும் எங்கேயும் எந்த சூழ்நிலையிலும் மாறாது. அப்படி மாறினால் அது உண்மையான காதலே இல்லை வெறும் கவர்ச்சி தான் என்று சொல்லிக் கொண்டே அவன் அங்கிருந்து கிளம்ப, வர்ஷினிக்கு தான் அதை கேட்டவுடன் மனதினுள் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. அது இன்பமா துன்பமா என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
