வலியை சூடிய காதலே – 28

என் இனிய பூங்காற்றே, நீ வீசும் தென்றலாய் மாறி என்மீது மோதிட அக்கணமே இப்பிறவியின் மோட்ஷம் கண்டேனே…!

வலியை சூடிய காதலே  –  28

ஒருவரை ஆயிரம் ஆண்டுகள் அனுவனுவாய் நேசித்து, உயிருக்குயிராய் காதலிக்க வேண்டுமென்பதில்லை, ஒரு நொடி நினைவில் ஓராயிரம் வருடம் வாழ்ந்த இன்பம் தோன்றினாலே போதும்,

அடுத்த கணம் பிரபஞ்சமே அழிந்தாலும் அந்த ஆன்மா மடியாது, காதலெனும் உலகில் உயிர்பெற்று வாழும் மேன்மையை அடையும்…!

தன்னவன் என்று ஆசையோடு சுற்றவந்தவன் தனக்குச் சொந்தமில்லை என்று தெரிந்த பின்பும், அவனோடு வாழ்ந்த அந்தச் சிறு சிறு நொடிகளையும், 

அவனிடம் கொண்ட அன்பையும் வைத்தே அவளால் ஒரு யுகம் வாழ முடிவு எடுத்தாலோ என்னவோ, அவள் கண்களில் இப்போது கண்ணீர் இல்லை,மாறாக விரக்தி நிறைந்த புன்னகையே குடிகொண்டருந்தது,

​”ஏத்தா இதழு இன்னும் அங்கனயே உக்காந்து எந்த கோட்டைய புடிக்க யோசனை செய்யிறவ, உள்ள வந்து கொஞ்சம் கஞ்சி குடி வாத்தா” என்று அவள் அப்பத்தா உள்ளிருந்து கூப்பிட்ட,

​எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிலையென திண்ணையின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பூவிதழினி,

உண்ண உறங்க மனமில்லாமல் நெருப்பிலிட்டு வதங்கிய மலரைப் போல் வாடிப்போயிருந்தாள், தன் மனக்குமுறல்களை யாரிடமும் பகிர முடியாமல் போனதே அவளின் அவலநிலை, 

“என்னடி இது இங்கண ஒருத்தி கூப்பிட்டு கிடக்குற காதுல வாங்கதவாளட்டம் கல்லு கணக்கா அப்படியே உக்காந்திருக்க” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே வாசலுக்கு வந்தாள் தங்கமணி,

“என்னத்தே உம்பட சத்தம் ஊர் எல்ல வரைக்கும் கேக்குது, ஆமா நடந்த சேதி தெரியுமா” என்ற தங்கமணி குரலை தாழ்த்த,

“இவ யாருடி இவ தலையும் புரியாம காலும் புரியாம பேசிட்டு இருக்கிறவ, என்ன சேதின்னு சொன்னா தானே தெரியும்” என்ற ஜகதாம்பாள் பாட்டி வெற்றிலையோட பாக்கை உரலில் போட்டு இடிக்க,

“அந்த கதைய ஏத்தே கேக்குற, நம்ம ரஞ்சிதத்தோட வீட்டுகாரரு அவக அய்யங்கூட அவக வீட்டுக்கு போயிட்டாராம், நம்ம ரஞ்சிதத்தை அவக அய்யனுக்கு பிடிக்காம தான் பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாருன்னு சொல்றாக” என்று தங்கமணி சொல்லவும், பாட்டி ஒப்பாரி வைத்தாள்,

“அய்யோ நான் யாருக்கு என்ன பாவஞ் செஞ்சே என் மக பொழப்பு ஆத்துக்குமில்லாம சேத்துக்குமில்லாம இடையில சிக்கி தவிக்குதே யாத்தே நான் எங்கண போய் சொல்லியழ, 

ஓட்டுக் குடிசையில ஒசந்த கனவு கண்டேனே, அது இப்படி நடுவாந்திரத்துல கருகிப்போச்சே! ‘அறுக்கத் தெரியாதவன் கையில அருவாளைக் கொடுத்த கதையா’ அந்த மனுஷன் என் மக பொழப்ப இப்படி வேரோட அறுத்துப் போட்டுட்டாரே,

என் குலமே கலங்கிப் போச்சே என் மக பொழப்பு ஊர் சிரிச்சு போச்சே, அந்த மனுஷன் மனசு கல்லுன்னு தெரியாம கல்லுக்குப் பால் வார்த்து என்ன புண்ணியம்” என்று 

மாரடித்தாள் பாட்டி,

“சேதி தெரிஞ்சதும் நெஞ்சே உடைஞ்சு போச்சுத்தே அதான் ஓடி வந்தேன்”என்று கவலையோடு சொன்னாள் தங்கமணி,

“ஏன் பெரியம்மா நீ சொல்றது நெசமா, ராசு மாமா அத்தைய வேண்டாமுன்னு சொல்லிட்டு போயிட்டாரா” என்று பூவிதழினி சங்கடமாக கேட்க,

“அது சரியா தெரியல இதழு ஆனா துரையய்யா வீட்ல வேலைபாக்குற பாக்கியம்  சின்னவரு ஹாஸ்பிட்டல்ல இருந்து அவரு மட்டும் தான் வந்தாரு, ரஞ்சிதம் கூட வரலைன்னு சொன்னா” என்று தங்கமணி சொல்ல,

“அப்போ அத்தே எங்கண போயிருக்கும், இம்புட்டு நேரமாகியும் நம்ம வீட்டுக்கு திரும்பி வரலையே” என்று பூவிதழினி கேட்க,

“ரஞ்சிதத்தோட வீட்டுக்காரு போனப்புறம், இருக்கிற மவனையாவது தக்க வச்சுக்கலாமுன்னு நினைச்சு அங்கண போயிட்டாளோ என்னவோ,

பெத்த மவன் சோறு போடுவான்னு ஆசைப்படலாம், ஆனா புகுந்த வீட்டு வாசல்ல நின்னாத்தான் ஒரு பொண்ணுக்குப் பொழப்பு நிமிர்ந்து நிக்கும், அந்த குடுப்பனை அவளுக்கு இல்லாமலே போச்சே” என்று புலம்பினாள் தங்கமணி,

அதைக் கேட்ட பாட்டியின் ஒப்பாரி அந்தத் திண்ணையைத் தாண்டிக் காற்றோடு கலக்க, பூவிதழினியின் உள்ளமோ சுழியில் சிக்கிய துரும்பாய் தவித்தது,

ஆகாயத்தில் மேகக் கூட்டங்கள் கலைந்து கிடக்க, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள், அடர்ந்த இருளின் பிடியில் இரவு  கோலூன்றி தன் ஆட்சியை செவ்வென செய்து கொண்டிருக்க, 

தூரத்தில் தென்னந்தோப்புகளுக்கு இடையே சில்வண்டுகளின் ரீங்காரம் ஒருவித சோக இசையை மீட்டிக் கொண்டிருந்தது, நிலவொளியின் வெளிச்சத்தில் வானத்தையே வெறித்தபடியே கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த ராஜதுரை நினைவு முழுவதும் ரஞ்திதத்தை நாடியது,

இரண்டு நாள்கக தன்னவளை காணாமல் தவித்தவர் மனதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை, நெஞ்சமும் முழுவதும் அவள் நினைவு,

பார்க்குமிடமெல்லாம் அவளின் பிம்பம் என மனதளவில் ரஞ்சிதத்தை தேடித் தோற்றவர் அவரால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை உடனே ரஞ்சிதத்தைக் காணும் ஆவல் எழுந்து இம்சித்தது,

நெஞ்சுக்குள் ரஞ்சிதத்தின் சிரிப்பும், அவள் கடைசியாகப் பார்த்த அந்தப் பார்வை மட்டும் முள்ளாய் தைத்துக் கொண்டிருக்க, ராஜதுரை கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தார், ரஞ்சிதம் இல்லாத அந்த வீட்டில் ஒரு நிமிடம் கூடத் தங்க அவருக்குப் பிடிக்கவில்லை,

ஆனால் அதற்காக தகப்பானரின் சொல்லை மீற முடியாமல் அப்படியே அமர்ந்து கொண்டார், என்ன தான் வளர்ந்து வயதை அடைந்திருந்தாலும், 

தந்தை சொல்லே மந்திரமென வாழ்ந்தே பழக்கப் பட்டவராயிற்றே, தன் கையறு நிலையை எண்ணி முதன்முறையாக கண்களின் ஓரம் நீர் கசிய அதை துடைக்கு கூட தோன்றாமல் அப்படியே கட்டிலில் சரிந்தார், 

இங்க ஆண் கிளியின் நிலை இப்படி என்றால் அங்கே பெண் கிளியின் நிலையோ இன்னும் மோசம், உண்ணாமல் உறங்காமல் நிம்மதி இழந்து, தன்னிலை மறந்து தவித்தாள்,

அவளின் நிலை கண்டு நிஷாவால் பொறுக்க முடியவில்லை, என்ன செய்தேனும் இருவரையும் இணைத்து விட வேண்டும் என்ற மனநிலைக்கே வந்து விட்டாள், 

நள்ளிரவு ஆகியும் விசும்பலோடு படுத்திருந்த ரஞ்சிதத்தின் அருகே படுத்திருந்த நிஷா மெல்ல எழுந்தாள், எந்தவித சத்தமும் போடாமல் வெளியே வந்தாள்,

ஆரி எங்கே இருப்பான் என ஒவ்வொரு இடமாக தேடியவள், இறுதியில் அவனின் அறையில் கண்டு கொண்டாள், தூக்கம் வராமல் வெறுமனே கண்ணை மூடி படுத்திருந்தவன் கதவு திறந்த சத்தம் கேட்டு எழுந்து பார்த்தான்,

“என்ன நிஷா என்னாச்சு இன்னும் தூங்காம என்ன பண்ற” என்று ஆரி கேட்க,

“தூக்கமே வரல ஆரி, உனக்கும் தூக்கம் வரலையா” என்று கேட்டவாறு அவனின் அருகே அமர்ந்தாள் நிஷா,

“மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு அதான் தூக்கம் வரல, அம்மா எப்படி இருக்காங்க” என்றான் ஆரி,

“அவங்க தூங்காம அழுதுட்டே இருக்காங்க ஆரி, பார்க்கவே கஷ்டமா இருக்கு, இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா பயமா இருக்கு ஆரி” என்றவள் குரல் ஆதங்கமாக வெளிப்பட,

“முடிவே இல்லாத பிரச்சனைன்னு எதுவுமே இல்ல நிஷா, இந்த பிரச்சனை தீரனும்ன்னா தாத்தா மனசு மாறனும், ஆனா அவரு மனசை யாராலயும் மாத்த முடியாது, 

அப்பாவும் தாத்தா பேச்சை மீறி வர மாட்டாரு, அதனால நாம தான் ஏதாவது பண்ணனும், அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான் ஆரி,

“இப்படியே யோசிச்சுட்டு இருந்தா எப்படி, ஏதாவது பண்ணு ஆரி, பேசாம உன் அப்பாவை தனியா பாத்து பேசி இங்க கூட்டிட்டு வந்துட்டா” என்றாள் நிஷா,

“தாத்தா சொல்லாம அப்பா அம்மாவை ஏத்துக்க மாட்டார்,  நீ சொல்றது சாத்தியமே இல்ல, தாத்தா ரொம்ப பிடிவாதக்காரர், அவரோட வழியில போய் தான் நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்” என்றான் ஆரி,

“ஏன் ஆரி உன் அப்பாவுக்கு தாத்தாவை பார்த்தா அவ்ளோ பயமா, அத்தைய விட அவரோட அப்பா தான் பெருசுன்னு போயிட்டாரே” என்று நிஷா கேட்க,

“பயம்ன்னு சொல்ல முடியாது, எங்க அப்பாவுக்கு தாத்தா மேல இருக்குற மரியாதை  அது தான் இப்ப பிரச்சனையே” என்று ஆரி சொல்ல,

“அப்போ நம்மாள எதுவும் பண்ண முடியாதா, கடைசி வரைக்கும் அத்தை இப்படியே அழுதுட்டு தான் இருக்கனுமா ஆரி” என்று அவள் கேட்க,

“இது இப்ப நடக்கிற பிரச்சனை இல்ல நிஷா, இத்தனை வருஷமா இப்படி தானே இருந்தாங்க, எப்ப உன் அப்பா விஸ்வநாதன் மொத்த குடும்பத்தையும் ஏமாத்திட்டு போனாரோ அப்போ ஆரம்பிச்ச பிரச்சனை” என்றவன் கண்களில் அத்தனை கோபம் குடிகொண்டது, 

“என்ன சொல்ற ஆரி, என் அப்பாவால தான் எல்லா பிரச்சனையுமா, நீ என்ன சொல்ற” என்று அவள் புரியாமல் கேட்க,

“அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது நிஷா, அதை விடு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என்றான் ஆரி,

“அதெல்லாம் விட முடியாது, என்ன நடந்துச்சுன்னு சொல்லு ஆரி, எனக்கு தெரியனும் என் அப்பா யாருன்னு நான் முழுசா தெரிஞ்சுக்கனும், 

அவரால வந்த பிரச்சனைய என்னால சரி பண்ண முடியுமான்னு பாக்குறேன், ப்ளீஸ் ஆரி எதையும் மறைக்காத” என்று கெஞ்சுதலாக கேட்டாள் நிஷாலினி, ஆழமாக அவளைப் பார்த்த ஆரி பெருமூச்சு விட்டபடியே தொடங்கினான்

“என் தாத்தா செல்லதுரையும் உன் தாத்தா பெரிய சக்கிரவர்த்தியும் ஒருகாலத்துல நல்ல ப்ரண்ஸா இருந்திருக்காங்க, அவங்களோட ப்ரண்ஷிப் முடிஞ்சு போயிடக் கூடாதுன்னு சொல்லி இரண்டு பேரும்,

ரொம்ப ஆசைப்பட்டாங்க அதோட விளைவா இரண்டு குடும்பத்துல இருந்தும் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கலாம்னு பேசி முடிவு பண்ணி, 

சக்கரவர்த்தி குடும்பத்துல இருந்த என் அம்மா ரஞ்சிதத்தை என் அப்பா ராஜதுரைக்கும், துரையய்யா குடும்பத்துல இருந்து உன் அம்மா பரிமளத்தை உன் அப்பா விஸ்வநாதனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க, 

பெரியவங்களோட ஆசைக்கு மறுப்பு சொல்ல முடியாம கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் நல்லா போச்சு, அப்போ என் அம்மா முதல்ல கன்சீவானாங்க 

ஏழாவது மாசம் ஊரையே திரட்டு வளைக்காப்பெல்லாம் பண்ணி கொண்டாடுனாங்க, என் அம்மா அப்பா இரண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம், ஆனா என்ன நான் பொறக்கிறதுக்கு முன்னாடியே,

உன் தாத்தா பெரிய சக்ரவர்த்தி இறந்து போயிட்டாரு, அதுக்கப்புறம் தான் உன் அப்பாவோட சுயரூபமே தெரிய வந்துச்சு, இந்த ஊர்லயே  படிச்ச ஒரே ஆளு விஸ்வநாதன் மட்டும் தான்,

அதனாலயோ என்னவோ இந்த கிராமத்தை விட்டு சிட்டிக்கு போகனும் அங்க போய் பிஸினஸ் பண்ணனும்னு ஆசைப்பாட்டார், அதுக்கு பிஸினஸ் பண்ண பணம் வேணும்,

அதுக்காக சொத்தை பிரிச்சு குடுக்க சொல்லி பஞ்சாயத்தை கூட்டினாரு, அதை பார்த்த ராமநாதன் மாமாவுக்கு கோபம் வந்திடுச்சு, அப்பா செத்து காரியம் கூட முடியல,

அதுக்குள்ள சொத்தை பிரிக்க விடமாட்டேன்னு குறுக்க நின்னாரு, 

அதனாலேயே பிரச்சனை இன்னும் பெருசா வெடிச்சுது, விஸ்வநாதனும் பணம் கிடைக்காத கோபத்துல இருந்தார், 

 

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page