அத்தியாயம்- 4

​அத்தியாயம் – 4

​அன்று இரவு மீண்டும் அதே கனவு தான் ஆதிக்கு. ஆனால், சிறு வித்தியாசம் என்னவென்றால் நிழலாக இருந்த பெண்ணின் உருவம் சற்று மங்கலாகத் தெரியத் தொடங்க, அப்பெண்ணின் இதழை நெருங்கிப் போய்க் கொண்டிருந்தவன் மூளையில் ஏதோ மின்னல் வெட்ட, சட்டென்று விழி திறந்து “ஆ” என வாயைத் திறந்து மூச்சை விட்டான் ஆதி.

​மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க எழுந்து அமர்ந்தவன், “அ… அது… அந்த முகம், காலையில் நான் பார்த்த தாமரையின் முகமா?” என்று தனக்குள்ளேயே கேட்டவனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. நிஜ உலகின் கசப்பும் குறுக்கே நின்றது.

​”தாமரையா? இவளா என் கனவில்?” என்ற எண்ணம் வந்ததும், அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

அந்த அதிர்ச்சியில் அவனது உடல் நடுங்க, அறையும் இருட்டாக இருக்க, கடிகாரத்தின் ‘டிக் டிக்’ சத்தமும் அதற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு அவனின் இதயத்தின் ஓசையும் மட்டுமே அந்த அறை முழுவதும் கேட்டது.

​தன் நெஞ்சின் மீது கையை வைத்துப் பார்த்தான். இதயம் தாளமில்லாமல் அடித்துக் கொண்டிருக்க,

கனவில் கண்ட அந்த முத்தத்தின் ஈரம் இன்னும் அவன் இதழ்களில் இருப்பது போன்ற ஒரு பிரமை அவனை வதக்கியது.

தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, “சே! என்ன இது? ஏன் இப்படி ஒரு கனவு?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

​”ஆதித்யா… உனக்கு என்னாச்சு? அவளைப் போய் இப்படி ஒரு கோணத்துல கனவு காண்றியே! நீ என்ன அவ்வளவு பலவீனமானவனா? உன்னையே உன்னால கண்ட்ரோல் பண்ண முடியலையா?” என்று தன்னைத்தானே அருவருப்போடு திட்டிக்கொண்டான் ஆதித்யன்.

​”ச்சைக்! எப்படி இப்படி ஒரு கனவு? அதுவும் தாமரை!” என்று சொல்லும் போதே அவனுக்குள் உணர்வுகள் நெருப்பாகக் கொதிக்க,

பட்டென்று மெத்தையிலிருந்து எழுந்தவன், அமர்ந்த வாக்கிலேயே திரும்பிப் படுத்திருந்த மெத்தையைப் பார்த்தான். எரிச்சலாகத் தோன்றியது அவனுக்கு.

ஏன் இப்படி ஒரு கனவு, அதுவும் அவளுடன்?

பின் குளியலறை நோக்கி நடந்தவன் மனம், “நாளைக்கு முதல் வேலையா வேற கட்டிலை மாத்தச் சொல்லணும்” என்று தான் முடிவெடுத்திருந்தது.

​மணி இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. தாமரையின் அம்மா சரஸ்வதி வாசலிலேயே அமர்ந்து கவலையுடன் காத்திருந்தார்.

தாமரையோ அவரை இயலாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

நித்யா இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதை எண்ணி கவலை மேலிட, வாசலையும் சரஸ்வதியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

​”என்னம்மா, நித்யா இன்னும் வரல? போன் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது,” என்றார் பதற்றமாக சரஸ்வதி.
​தாமரைக்குக் கோபம் தலைக்கேறியது.

ஆனால், அதை வெளிக்காட்ட முடியாமல், “இந்நேரம் வரைக்கும் என்னம்மா அசைன்மென்ட் வொர்க்? நான் போன் பண்ணாலும் எடுக்கல. இப்போ ஆஃப் பண்ணி வச்சிருக்கா. பக்கத்து வீட்டு பத்மா அக்கா பொண்ணு கூட வீட்டுக்கு வந்துட்டா. ஆனா இவளை இன்னும் காணோம். எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான்,” என்றவள் சோபாவில் அமர்ந்தாள்.

தாமரையின் வார்த்தைகளைக் கேட்ட சரஸ்வதிக்குச் சின்ன மகளுக்காகப் பரிந்து பேச முடியாமல், ஊமையாகிக் கைகளைப் பிசைந்தபடி இருந்தார்.

​மேலும் அரைமணி நேரம் கழிய, சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஒரு கார் அவர்கள் வீட்டின் முன்னே வந்து நின்றது. அதிலிருந்து சிரித்துப் பேசிக்கொண்டே இறங்கினாள் நித்யா. அவளை இறக்கிவிட்டு இருந்தான் ரோஷன்.

கார் சத்தம் கேட்டதுமே தாமரை எழுந்து வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

ரோஷன் ஒரு வசதியான வீட்டுப் பையன் என்பது அவனது காரிலேயே தெரிந்தது.

ஆனால், நித்யாவின் நடவடிக்கைகளில் ஒரு பொறுப்பற்றதனம் இருக்க, நித்யா உள்ளே நுழைந்ததும் தாமரை,

“எங்கே போயிட்டு வர்ற நித்யா? டைம் என்ன ஆகுதுன்னு தெரியுமா?” என்று சற்று அதட்டலாகவே கேட்டாள்.

​நித்யா அலட்சியமாகப் பையை மேஜை மீது வைத்து, “ஜஸ்ட் பிரண்ட்ஸ் கூட ஒரு பார்ட்டி… அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்?” என்றவளை அதிர்ந்து பார்த்துவிட்டு,

சரஸ்வதியை நோக்கி, “அசைன்மென்ட் எழுதப் போயிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

​சரஸ்வதியோ இளையவளை முறைத்துவிட்டு, “இல்ல தாமரை, முதல்ல அசைன்மென்ட் முடிச்சிட்டு அப்படியே பிறந்தநாள் விழாவுக்குப் போயிட்டு வரேன்னு சொன்னா. ஆனா இவ்வளவு லேட்டாகும்னு நானே எதிர்பார்க்கல,” என்றார்.

​”பார்ட்டியா? அம்மா இங்கே பயந்துட்டு இருக்காங்க. நீ என்னடான்னா பார்ட்டிக்கு போயிட்டு வரேன்னு சர்வசாதாரணமாகச் சொல்ற? இதெல்லாம் நல்லதுக்கே இல்லை நித்யா,” என்று தாமரை குரலை உயர்த்தினாள்.

​”ஓ.. இந்த வீட்ல இப்போ நீ சம்பாதிக்கிறேன்னு ரொம்பத்தான் அதிகாரமாப் பேசுற? நீ மட்டும் நைட்ல லேட்டா வர்றது தப்பில்லை, நான் ரோஷன் கூடப் போனா தப்பா?” என்று நித்யாவும் எகிறினாள்.

​”நித்யா!” – சரஸ்வதி அவளை அதட்டி, “அவ கஷ்டப்பட்டு வேலை செய்யறதே உன்னைப் படிக்க வைக்கத்தான். இப்படிப் பேசுறதுக்கு உனக்கு வெட்கமா இல்ல?”

​”யாரு இவளா? இவளா என்னைப் படிக்க வைக்கிறா? அட போம்மா, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு,” என்று இளக்காரமாகச் சிரித்த நித்யா, “எல்லாம் என் அண்ணன் இவளுக்குப் போட்ட பிச்சையால… அந்த கடனை எப்படி அடைக்கிறதுன்னு தெரியாம நான் தான் இந்த குடும்பத்துக்காக உழைக்கிறேன், நான் தான் எல்லாம் பண்றேன் இந்த குடும்பத்துக்குன்னு பெருமை பீத்திக்கிறா,” என்று பேசிய மகளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர் அறைக்குச் செல்ல,

தாமரை அப்படியே உறைந்து போய் அந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.

​சட்டென்று விழிகளில் கண்ணீர் திரண்டுவிட்டது. உதடுகள் நடுங்க, உள்ளம் படபடக்க, விழிகள் அலைபாய, தன் கடந்த காலத்தை நினைத்தவளுக்குச் சட்டென்று நெஞ்சம் அடைத்துக்கொண்டது.

நெஞ்சைப் பிடித்துத் தடவிக் கொடுத்தவளின் நிலையைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

பின் சற்றுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், ஒரு காபியைப் போட்டுக் குடித்துவிட்டு அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.

​அத்தனை அழுத்தத்திலும் மறுநாள் ஆதித்யனுக்கு அனுப்ப வேண்டிய டிசைன் எல்லாம் பக்காவாகப் போட்டு அவன் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தாள்.

​காலையில் எழுந்த தாமரைக்கு யாரிடமும் பேச மனம் இல்லாமல், அமைதியாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, அப்போது அவளைத் தேடி வந்த சரஸ்வதி,

“தாமரை, அவ சின்ன பொண்ணும்மா. அவ பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காத தாமரை,” என்றவரை நோக்கி, “ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.

​”தாமரை, இதுல வத்தக் குழம்பு வச்சுச் சாதம் கட்டியிருக்கேன். உனக்குத்தான் பிடிக்குமே, மதியமாச் சாப்பிடும்மா,” என்று உணவுப் பையை அவள் முன் நீட்ட, சரியென்று தலையை அசைத்துவிட்டுப் பையை வாங்கிக்கொண்டு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வேலைக்குக் கிளம்பினாள்.

​தாமரை போகவும் அதுவரை சாந்தமாக இருந்த முகம் கடுமையாக மாற, நேராக நித்யாவின் அறைக்குச் சென்றவர், மணி எட்டாகியும் இன்னும் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளைச் சரமாரியாக முதுகில் அடிக்க,

அதில் அரண்டு எழுந்த நித்யா, “லூசாம்மா நீ?” என்று கேட்டுக் கொண்டே வலியால் முதுகைத் தடவினாள்.

​”ஆமாடி லூசுதான். உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்கேன்ல, நான் லூசுதான். எவன்டி அது? நேத்து நைட் ஒருத்தன் கூட வந்து இறங்கினியே, அது யாரு?”

​”பிரண்ட்ம்மா,” என்று சொன்ன மகளைத் தீயாக முறைத்தவர்,

“நேத்து பிறந்தநாள் விழாவுக்குப் போறேன்னு சொல்லிட்டு எங்கேடி போயிட்டு வந்த?”

​”அம்மா, பர்த்டே பார்ட்டிக்குத்தான் போயிட்டு வந்தேன். நேரமாச்சுன்னு என் பிரண்ட் டிராப் பண்ணான்,” என்று சொல்லிக்கொண்டே எழுந்தவள் அவிழ்ந்திருந்த கூந்தலை முடித்தாள்.

​”பொய் சொல்லாத நித்யா. நேத்து உன் மேல இருந்து தேவையில்லாத நாத்தம் எல்லாம் வந்துச்சு. பிறந்தநாள் விழாவில கேக் மட்டும்தானேடி வெட்டுவாங்க? ஆனா உன் மேல…” என்றவருக்கு இரண்டாவது மகளின் போக்கைக் கண்டு உள்ளுக்குள் பயம் எட்டிப்பார்த்தது.

​”அம்மா, அதெல்லாம் நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் ஆளுங்கதான் கேக் மட்டும் வெட்டுவாங்க. ஆனா ஹை கிளாஸ்ல இருக்கிறவங்க கேக் மட்டும் இல்ல, நம்ம எதிர்பாராத நிறைய விஷயத்தைச் செய்வாங்க. அங்கே எல்லாம் பிறந்தநாள் கொண்டாடினாங்கன்னா சொர்க்கம் மாதிரி இருக்கும்,” என்று கனவுலகில் சஞ்சரித்த மகளின் முதுகில் மீண்டும் ஒரு அடி போட்ட சரஸ்வதி,

“தேவையில்லாத பழக்கத்தை எல்லாம் வளர்த்துக்காதடி. அதுவும் இப்போதான் பள்ளிக்கூடப் படிப்பையே முடிக்கப்போற. படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் இந்த அம்மாவைப் பார்த்துப்பேன்னு நினைச்சா, கண்டமேனிக்குச் சுத்திட்டு வந்ததும் இல்லாம தாமரையையே எதிர்த்துப் பேசுற? நான் மட்டும் உன்னை நேத்து இழுத்துட்டு வராம இருந்திருந்தா, நீ குடிச்சிட்டு வந்ததை அவ கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பா,” என்று சொன்ன தாயை அலட்சியமாகப் பார்த்து,

“வேலைக்குப் போய் உங்களையும் என்னையும் பார்த்துக்கத்தான் ஒரு அடிமை இருக்காளே! அவளுக்குக் கூட தாமரைன்னு ஒரு பெயர் கூட இருக்கா? ஆமா, நேத்து கொஞ்சம் குடிச்சிட்டுத்தான் வந்தேன். ஏன்னா நான் போன இடம் அவ்வளவு பெருசு. அங்க போனா அவங்களுக்கு ஏற்ற மாதிரிதான் நடக்க முடியும். பட்டிக்காட்டு போல எல்லாம் நடக்க முடியாது. நான் குடிச்சிட்டு வந்ததை அந்த அடிமை கண்டுபிடிச்சா எனக்கு என்ன? கண்டுபிடிக்கலைன்னா எனக்கு என்ன? அவளுக்கெல்லாம் என்னால பயப்பட முடியாது,” என்று ஆங்காரமாகப் பேசிவிட்டு குளியலறையை நோக்கிச் சென்ற மகளை வாயைப் பிளந்தபடி நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அதிர்ச்சியுடன் தான் பார்த்தார் சரஸ்வதி.

​அதே சமயம், காலை சோர்ந்த முகத்தோடு அலுவலகம் வந்தவள் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, ‘அப்பாடா’ என்று ரம்யாவுடன் கேன்டீன் சென்று ஒரு காபியை வாங்கிப் பருகியவளுக்கு இதமாக இருக்க,

அவளை நிம்மதியாக அமர்ந்து காபியைக் கூடக் குடிக்க விடாமல் கேபினுக்கு அழைத்திருந்தான் ராகவன்.

​தாமரைக்கோ சலிப்பாக இருந்தது. ஆனாலும் வேறு வழி இல்லையே! ரம்யாவிடம் தலையசைத்துவிட்டு மேனேஜர் அறைக்குச் சென்றாள்.

​”தாமரை, என்ன ஆச்சு? ஆதித்யன் சார் ஆபீஸ்ல இருந்து போன் வந்திருந்தது. நீங்க பண்ணின டிசைன்ல ஏதோ ஒரு கிளாரிஃபிகேஷன் வேணுமாம்.

அவரோட அசிஸ்டென்ட் பேசினாங்க. ‘டிசைனர் நேர்ல வந்து விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும்’னு சார் விருப்பப்படுறாராம்,” என்று ராகவன் சொன்னதைக் கேட்டுத் தாமரை திடுக்கிட்டு,

“நேர்லயா சார்? நான் தான் டிசைன் அனுப்பியதும் அவர்கிட்ட மெயிலிலேயே விளக்கம் சொல்லிட்டேனே?” என்றாள்.

​”இல்ல தாமரை, அவர் ஒரு விஷயத்துல தெளிவா இருக்கணும்னு நினைப்பார். அவர் பெரிய கிளைண்ட், நாம ‘நோ’ சொல்ல முடியாது. நாளைக்கு அவரோட ஹெட் ஆபீஸ்க்குப் போகணும்,” என்றார் மேனேஜர்.

​தாமரைக்கு ஒருவிதத் தயக்கம் ஏற்பட்டது. அந்த வளர்ந்த மனிதனின் கம்பீரமும், அவனது அதிகாரத் தோரணையும் அவளுக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இது வேலை, மறுக்க முடியாது அல்லவா!

“நான் தனியா போகணுமா?” என்று மீண்டும் கேட்டாள்.

​இல்லை என்று தலையை ஆட்டிய ராகவன், “கூட நானும் வரேன். சேர்ந்தே போகலாம்,” என்று சொன்னதைக் கேட்டு மேலும் திடுக்கிட்டுப் போனவள்,

“என்ன சொன்னீங்க?” என்றாள் புரியாமல்.

​”நானும் கூட வரேன்னு சொன்னேன். என்னோட ஸ்டாப்பைத் தனியா போக நான் எப்படி விட முடியும்?”

​”ஆனா உங்களுக்கு இங்கே வேலை…” என்று அவள் இழுக்க,

“அது என் வேலை, நான் பார்த்துப்பேன்,” என்று சொன்னவனைப் புரியாமல் பார்த்த தாமரை, சரியென்று தலையசைத்துவிட்டு நாளைக்கு எத்தனை மணிக்குப் போகணும் என்று கேட்டு நேரத்தைக் குறித்துக்கொண்டு அவள் கேபினுக்குச் சென்றாள்.

​பின் வீட்டிற்கு வந்தவள், அப்பொழுதும் யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் அமைதியாக அவள் அறைக்குள் நுழைந்தவள், இரவு உணவைக் கூடத் தவிர்த்துவிட்டாள்.

இரவு தாமரைக்குச் சரியாகத் தூக்கமும் வரவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து இருட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று காலையில் கட்டிடத்தில் ஆதித்யனின் அந்தப் பார்வை மீண்டும் மீண்டும் அவள் நினைவுக்கு வந்து சென்றது.

அவனிடம் ஒரு முரட்டுத்தனம் இருந்தாலும், அந்தப் பார்வையில் ஏதோ ஒரு தேடல் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

​அதே சமயம் ஆதித்யன் தன் வீட்டு மாடியில் நின்றபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது கைகளில் இருந்த மதுக்கோப்பையை அசைத்தபடி நின்றிருந்தான்.

​”தாமரை… உன்னை நெருங்குறது ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? என் வாழ்க்கையில நான் தொலைச்ச உன்னை எப்படி என்கிட்ட மீண்டும் கொண்டு வர்றது?” என்று அவனது மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது.

​மறுநாள் ஆதித்யனின் ஹெட் ஆபீஸ் ஒரு கண்ணாடி மாளிகை போல மின்னிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த தாமரைக்கு ஒரு நிமிடம் மூச்சு முட்டியது.

அங்கே இருந்த ஒவ்வொரு பொருளும் ஆதித்யனின் அதிகாரத்தையும் செல்வத்தையும் பறைசாற்றின.

வரவேற்பறையில் இருந்த உதவியாளர், அவளையும் அவளுடன் வந்த ராகவனையும் கண்டு இன்முகமாக ஆதித்யனின் தனி அறைக்கு அழைத்துச் சென்றார்.

​ஏற்கனவே ஆதித்யன் விவரத்தைச் சொல்லி இருந்ததால், அவர்கள் இருவராலும் சுலபமாக உள்ளே நுழைய முடிந்திருந்தது.

அறையினுள் நுழைந்த தாமரை, அங்கே ஆதித்யன் ஒரு பெரிய போர்டு மீட்டிங்கில் பிஸியாக இருப்பதைப் பார்த்தாள். அவன் கண்களால் அவளை அமரச் சொன்னான்.

அவனது அந்த ஒற்றைப் பார்வையில் இருந்த அதிகாரம் அவளை அமைதியாக அமர வைத்தது.

​இதைப் பார்த்த ராகவனுக்குத் தான் உள்ளுக்குள் எரியத் தொடங்கியிருந்தது.

தாமரையை ஒட்டியும் ஒட்டாமலும் அவளுடன் அமர்ந்தான் ராகவன்.

மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேறியதும், ஆதித்யன் தாமரையை நோக்கி வர,

ராகவன் தாமரையின் மிக அருகில் அமர்ந்திருப்பதைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன், பின் சாதாரணமாகத் தன்னை மாற்றிக்கொண்டு அவர்கள் அருகில் வந்தான்.

​”குட் மார்னிங் அண்ட் வெயிட் பண்ண வச்சதுக்கு ஸாரி மிஸ் தாமரை.. பிசினஸ் அப்படித்தான்,” என்றான். அவனது குரலில் இப்போது அன்று அதிகாலையில் இருந்த அந்த கர்ஜனை இல்லை. ராகவனை ஏன் என்றும் அவன் சீண்டவில்லை.

தன்னிடமும் ‘குட் மார்னிங்’ சொல்லுவான், ‘ஸாரி’ சொல்லுவான் என்று எதிர்பார்த்த ராகவனுக்கு மூக்கு உடைந்தது போல் இருக்க, பற்களைக் கடித்தபடி அமர்ந்திருந்தான்.

​”பரவாயில்லை சார். என் டிசைன்ல என்ன டவுட்டுன்னு சொன்னீங்கன்னா, சரி பார்த்துட்டு நாங்க கிளம்ப வசதியா இருக்கும்,” என்றாள் தாமரை, தன் வேலையில் மட்டும் கவனமாக.

​ஆதித்யன் அவளது கோப்புகளைப் புரட்டியபடி, “டவுட் இல்ல தாமரை.. உன்னோட இந்த டிசைன்ல ஏதோ ஒரு சின்ன விஷயம் மிஸ் ஆகுது,” என்றான் அவளது கண்களை உற்றுப் பார்த்து.

​தாமரைக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை. அவன் அவளை வேலையைத் தாண்டி ஏதோ ஒரு விதத்தில் கவனிப்பதை அவளால் உணர முடிந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page