உயிராக வந்த உறவு – அத்தியாயம் 13
பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் மழை கொட்ட, வானம் முழுக்க கருமையான மேகங்கள் படர்ந்து இருக்க சாலையில் நீர் தேங்கி, விளக்குகள் அதில் பிரதிபலித்து மின்னின. தாரணி துப்பட்டாவை தலையில் போட்டபடி ஓடிப்போய் அவர்கள் தங்கியிருந்த அறையை அடைந்தாள். கதவை மூடியவுடன் வெளியே மழை சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது.
தடதடவென்று ஜன்னல் கம்பிகளில் மோதும் துளிகள் அவள் மனதை சிறகடிக்க செய்தது.தாரணி ஜன்னல் அருகே வந்து நிற்கவும் அவள் தோழி நிஷா,”என்னடி மழையோட வந்திருக்க இதுக்கு என் கூடவே ஒழுங்கா வந்திருக்கலாம்.நீ தான் ஏதோ நோட்ஸ் எடுக்க போறேன்னு அப்புறம் வரேன்னு சொல்லிட்ட.. இப்ப பாரு எவ்வளவு மழை ஆமா உங்க வீட்ல ஊட்டிக்கு போறதுக்கு காசு அனுப்பிட்டாங்களா இல்லையா? நீ பேசாம உங்க அக்கா கிட்ட கேட்க வேண்டியது தானடி உங்க மாமா தான் உனக்காக எல்லாம் பண்ணுவாங்களே” என்று அவள் ஏதோ பேசிக்கொண்டிருந்தாலும், தாரணியின் கவனம் முழுவதும் வெளியே.
மழைத்துளிகள் கண்ணாடி மீது வழிய அந்த வழியும் நீர்த்துளிகளில் அவள் இன்று நடந்த எல்லா தருணங்களையும் பார்த்தாள்.அவன் தயக்கம், அவன் சிரிப்பு, அந்த சடன் பிரேக்,அவள் அவன் மார்பில் சாய்ந்த அந்த நொடி.
அவன் prankக்காக சொன்ன வார்த்தை என அவள் மனதில் அவனின் நினைவலைகளை ஓட விட,
மழை காற்று ஜன்னல் வழியே உள்ளே நுழைந்து அவள் முகத்தை வருடியது. அந்த குளிரில் கூட அவள் கன்னங்கள் சூடாக இருந்தது. அவள் கண்களை மூடியவுடன் தீரன் முகம் தெளிவாக தோன்ற
அவன் கண்களில் இருந்த நேர்மை, அவன் குரல் நான் உன்னை விரும்புகிறேன் என சொன்ன அந்த வாக்கியம்.இது எல்லாம் நினைத்த படி கண்களை மூட,மழை தாளம் போட்டது.
அவள் இதயம் அதற்கு தாளம் பிடித்தது.
நிஷா அருகில் வந்து, “என்ன டி தனியா இப்படி கண்ண மூடி சிரிச்சிகிட்டு இருக்க?” என்று கேட்க, தாரணி திடுக்கிட்டாள். தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்ததை அப்போது தான் கவனித்தாள்.
“ஒன்னுமில்லை…” என்று சொல்லி மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பினாள்.
அவள் பார்த்தது மழை அல்ல.ஒவ்வொரு துளியிலும் அவன் முகம் வந்து வந்து போனது.ஒவ்வொரு இடியிலும் அவன் குரல் ஒலித்தது.அந்த மழை இரவு அவளுக்கு சாதாரணம் இல்லை.
அது ஒரு உணர்வின் தொடக்கமாக மாற,
மழை நின்றாலும்,அவள் மனதில் பெய்த அந்த காதல் மழை அவ்வளவு எளிதில் நின்றுவிடப் போவதில்லை.
“அட போடி நான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன், நீ என்னமோ பண்ற நான் போய் தூங்க போறேன்” என நிஷா சொல்லிவிட்டு அவள் அறைக்கு செல்ல தாரணி கண்ணை மூடினாலும் கண்ணை திறந்தாலும் தீரன் முகம் மட்டுமே அவள் நினைவில் இருந்தது.
ஒரு வாரம் அவளுக்கும் அவனுக்கும் இடையில் வார்த்தைகளில் அதிகம் எதுவும் பேசப்படவில்லை,ஆனால் பார்வைகள் மட்டும் தினமும் பல கதைகள் பேசிக் கொண்டிருந்தன. அந்த வாரம் முடிவில் கல்லூரி டூர் அறிவிப்பு வர, ஊட்டி கிளம்ப எல்லாரும் உற்சாகம். தாரணிக்கு அவள் மாமா பணம் அனுப்பியதால் அவளும் வருவதாக நிஷாவிடம் பேசி கொண்டு இருப்பதை தீரன் கவனித்தான்..
அடுத்த நாள் அதிகாலையில் கல்லூரி பேருந்து கிளம்பும் போது குளிர்ந்த காற்று முகத்தில் மோத மாணவர்கள் அனைவரும் சிரிப்பு குரல், snack packet சத்தம்.அந்த பரபரப்பின் நடுவில் தாரணி ஜன்னல் இருக்கையில் அமர்ந்தாள். சில நிமிடங்களில் தீரன் வந்து அவளுக்கு எதிரே சாய்ந்தபடி அமர்ந்தான்.
அவளுக்கு நேராக அவன் இருக்க பக்கத்தில் அல்ல; ஆனாலும் பார்வை நேராகச் சந்திக்கும் இடம். பேருந்து நகரத் தொடங்க,நகரம் பின்னால் மங்கியது. மலைப் பாதை தொடங்கிய போது காற்று இன்னும் குளிர்ந்தது. அப்போது யாரோ speaker-ல் ஒரு பழைய காதல் பாடலை போட அடேய் நல்ல பாட்டு போடுங்க என பின்னால் இருந்து மாணவர்கள் கத்த
உடனே குத்து பாட்டு ஒலிக்க,அதற்கு ஏற்றார்போல் அனைவரும் ஆட, ஆடி ஆடி ஓய்ந்த பின் காதல் பாடல் ஒலிக்க,மெதுவான இசை, மனதை வருடும் வரிகள். அந்த பாடல் வரிகள்
“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன்”
அந்த நொடியில் இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க,இதழ்கள் பேசவில்லை. ஆனால் அந்த பார்வையில் வார்த்தைகளை விட அதிகம் ஈர்ப்பு இருந்தது. திடீரென பேருந்து ஒரு ஹர்பின் பெண்ட் எடுத்தபோது அவள் சற்று சாய்,அவன் அவளை முன் நிமிர்ந்து பார்த்தான். நண்பர்கள் கத்த மலைமேல் பனி மெதுவாக தெரிந்தது; ஜன்னல் வழியே பச்சை பள்ளத்தாக்குகள் ஓடின. அந்த இயற்கை காட்சிகளுக்கும் மேலாக அவள் மனதில் ஓடிய காட்சி அவன் முகம் தான்.
பாடல்கள் chorus வந்தபோது, நண்பர்கள் சிலர் கூச்சலிட, ஆனாலும் அவர்களுக்கு மட்டும் அந்த இசை மெதுவாகக் கேட்டது. தீரன் சற்றே முன் சாய்ந்து மெதுவாக, “Coldஆ இருக்கா தாரணி?” என்று கேட்க,அவள் தலையசைத்தாள். அவன் தனது jacket-ஐ நீட்டி அவளிடம் கொடுக்க அவள் அதை ஏற்றுக் கொண்டாள்.
நண்பர்கள் இருந்த ஆரவாரத்தில் இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.அந்த jacket-ல் அவன் perfume வாசனை. அவள் முகம் சிவந்தது., அந்த jacket-ஐ அணிந்தபடி மீண்டும் அவனை பார்த்தாள். அந்த பார்வை ஒரு மௌன ஒப்புதல் போல.
ஊட்டி இன்னும் தூரத்தில் இருந்தது. ஆனால் அவர்களின் மனதில் ஒரு புதிய பயணம் தொடங்கிவிட்டது. அந்த பேருந்து மலைமேல் ஏறிக் கொண்டிருக்க, இரு இதயங்கள் மெதுவாக ஒரே உயரத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது.அந்த நாள், அந்த பாடல், அந்த பார்வை அவர்களின் காதலை சொற்கள் இல்லாமல் உறுதிப்படுத்திய தருணமாக மாறியது.
ஊட்டி அவர்களை வரவேற்றது பனி மூடிய காலையுடன். பேருந்து மலைப் பாதையை கடந்து நகரத்தை அடைந்தபோது, குளிர்ந்த காற்று முகத்தில் மோதிய அந்த முதல் நொடியே எல்லாரும் ஆர்ப்பரித்தார்கள். பசுமையாக விரிந்த மலைத் தொடர்கள், சின்ன சின்ன வீடுகள், பனித்துளிகள் படர்ந்த மரங்கள்,அந்த இயற்கை அழகே ஒரு காதல் கவிதை போல இருந்தது.
நண்பர்கள் அனைவரும் முதலில் சென்றது Ooty Lake. ஏரிக்கரையில் நின்று அனைவரும் group photo எடுக்கும்போது, தாரணி நிற்க,தீரன் அவள் அருகே வந்து நின்றான். “Closer… இல்லனா frameல வரமாட்டீங்க,” என்று நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். சிரிப்பின் நடுவே அவர்கள் தோள்கள் மெதுவாக தொட்டது. அந்த சிறிய தொடுதல் கூட இருவருக்கும் பெரிய உணர்வாக இருந்தது.
பிறகு அவர்கள் சென்றது Government Botanical Garden. மலர்களால் நிரம்பிய அந்த தோட்டத்தில் ஒவ்வொரு நிறமும் ஒரு உணர்வை சொன்னது. சிவப்பு ரோஜாக்கள் அருகே நின்றபோது நண்பர்கள், “இது couple photo spot!” என்று கத்த,தாரணி வெட்கத்துடன் சிரித்தாள். தீரன் மெதுவாக அவள் பக்கத்தில் நின்று, camera-வை நோக்கி அல்ல, அவள் முகத்தையே பார்த்தான். “Smile,” என்றான் மெதுவாக. அவள் அவனைப் பார்த்தபடி சிரித்த அந்த candid shot அவர்களின் காதல் மலர்ந்த சாட்சி.
மாலையில் அவர்கள் சென்றது Doddabetta Peak. மேல் இருந்து பார்த்தபோது முழு ஊட்டியும் பனியில் மறைந்து இருந்தது. குளிர் அதிகம். தாரணி கைகளை மார்பில் கட்டிக் கொண்டாள். தீரன் அவள் அருகே வந்து நின்றான். “Cold?” என்று கேட்டான். அவள் தலையசைத்தாள். அவன் அவள் கையை மெதுவாக பிடித்தபடி நண்பர்கள் சுற்றி இருந்தாலும் அந்த பிடியில் ஒரு உரிமை இருந்தது. அவள் கையை விடவில்லை. அந்த பனிக்குள், அந்த உயரத்தில், அவர்கள் இருவரின் இதயமும் ஒரே துடிப்பில் இருந்தது.
நண்பர்கள் எல்லாம் சேர்ந்து selfie, funny poses, jumping shots எல்லாம் எடுத்தார்கள். ஆனாலும் சில புகைப்படங்களில் மட்டும் அவர்கள் கண்கள் ஒன்றை ஒன்று தேடியது. வார்த்தைகள் பேசவில்லை; ஆனாலும் அந்த பார்வை “நான் உன்னோட இருக்கிறேன்” என்று.
அந்த நாள் ஊட்டியின் குளிர் அவர்களை நடுங்கவைக்கவில்லை; அது அவர்களின் காதலை இன்னும் நெருக்கமாக்கியது. பனி மெல்ல கரைந்தாலும், அந்த மலை நகரத்தில் மலர்ந்த அந்த காதல் அவர்களின் நினைவில் என்றும் பசுமையாகவே இருந்தது.
ஊட்டியின் குளிர் இரவு. ஹோட்டல் அறையில் நண்பர்கள் சிரிப்பும் கலகலப்பும் நடந்து கொண்டிருக்க, ஆனால் தாரணி சற்று அமைதியாக ஜன்னல் அருகே நின்று தன் மொபைலை எடுத்தாள். “அக்கா” என்று பதிவு செய்திருந்த பெயரை அழுத்தியவுடன் அவள் முகத்தில் ஒரு வேறு விதமான மென்மை தோன்றியது.
அக்காவின் பெயர் அனன்யா.அவள் கணவர் விக்ரம்.திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை. அந்த விஷயம் வீட்டில் சில நேரம் பேசப்படும்,ஆனால் அனன்யா எப்போதும் சிரித்த முகமாக இருப்பாள். “எல்லாம் நேரம் பார்த்து வரும்” என்று அமைதியாகச் சொல்வாள்.
விக்ரமும் அதே போல ஒரு குறையும் அவளிடம் சொல்லாமல், அவளை ஒரு ராணி போல பார்த்துக் கொள்வான். தாரணியை பார்த்தால் இன்னும் குழந்தை மாதிரி தான் பேசுவான்.
“ஹலோ குட்டி…”அக்காவின் குரல் வந்தவுடன் தாரணியின் கண்கள் பிரகாசித்தது.“அக்கா… என்ன பண்ணுற?”“நாங்க டின்னர் முடிச்சுட்டோம். என சொல்ல
உன் மாமா இங்க தான் இருக்கார், பேசுறாரு…”என சொல்லி
அவன் கையில் மொபைலை குடுக்க,அடுத்த நொடி விக்ரமின் குரல்.ஓஹோ… ஊட்டி princess! எப்படி குளிர்? Sweater போட்டியா? இல்ல again carelessஆ இருக்கியா?”
அவன் குரலில் அன்பும், சின்ன சின்ன கவலையும் கலந்திருந்தது.
“போங்க மாமா…” என சொல்லி தாரணி சிரித்தாள். “நான் பெரியவளாச்சு.”என்ன நான் பாத்துக்க மாமா நீங்க என் அக்காவை மட்டும் நல்லா பாத்துக்கோங்க” என அவள் சொல்ல
“நீ எப்பவுமே பெரியவளாக மாட்டே,” என்று அவன் சொல்லி சிரித்தான். “எங்களுக்கு நீ குழந்தை தான் தாரு என அவன் சொன்ன வார்த்தை தாரணியின் மனதை மெதுவாக வருடியது.
அவளுக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி கொடுத்தது விக்ரம்.
“Tour நல்லா enjoy பண்ணு,” என்று அனன்யா மெதுவாக சொன்னாள்.
“College days once போயிடுச்சுனா திரும்ப வராது.”என விக்ரம் சொல்ல
“அக்கா…”என தாரணி சற்று தயங்கி அழைக்க,
மொபைலை அண்ணன் ஞாபகமாக வாங்கி ஸ்பீக்கரில் போட
“சொல்லு தாரணி” என அவள் சொல்லவும்
“ஒருத்தர்… எனக்கு… லவ் சொன்னா நான் என்ன பண்ணணும்?”என கேட்க
அந்த பக்கம் ஒரு நிமிடம் அமைதி.
“அது உனக்கு சந்தோஷம் கொடுக்கிறதா?”என கோவமாக
அனன்யாவின் குரல் இருக்க,
“தெரியல… ஆனா அவன் பேசும்போது… எனக்கு பயமா இல்ல. சந்தோஷமா இருக்கு.”என அவள் சொல்ல
“உனக்கு அறிவு இருக்கா இல்லையா தாரு நீ எதுக்காக போயிருக்க, படிக்க தான் போயிருக்க ..அந்த வேலையை மட்டும் பாரு. இதுக்கு தான் அந்த டூர் எல்லாம் வேண்டாம் என்று சொன்ன, உங்க மாமா தான் படிக்கிற பொண்ணு பிரண்ட்ஸ் கூட போட்டுன்னு சொல்லி காசு கொடுத்தாங்க” என தன் கணவனை கடிந்து கொண்டாள் அனன்யா..
விக்ரம் சிரித்தபடி மொபைலை வாங்கி “அனுமா கூல்” என தன் மனைவியின் தோலை பிடித்தபடி சொல்லி
தாரணி இந்த வயசுல காதல் வருது சகஜம்தான்.உன் மனசு எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும். Just feel நல்லா இருக்குதுன்னு accept பண்ணாத,Respect இருக்கணும் அந்த காதலை கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் மனசுலயும் இருக்கனும்.”என விக்ரம் சொல்ல
அனன்யா கோவமாக“காதல் அவசரமில்லை, தாரணி. அது நிம்மதி கொடுக்கணும். அழவைக்க கூடாது.”என சொல்லி போனை வைக்க,
அந்த வார்த்தைகள் தாரணியின் உள்ளத்தில் ஆழமாக பதிந்தது.
Phone call முடிந்தபோது அவள் முகத்தில் ஒரு அமைதி இருந்தது. அவள் அக்கா வாழ்க்கையில் இன்னும் குழந்தை வரவில்லை; ஆனாலும் அந்த இருவரின் அன்பு குறையவில்லை. விக்ரம் அனன்யாவை எப்படி கவனிப்பான், அனன்யா எப்படி உறுதியாய் இருக்கிறாள்,அது தாரணிக்கு ஒரு உண்மையான காதலின் உதாரணம்.
ஜன்னல் வழியே ஊட்டியின் பனி தெரிந்தது.அவள் மனதில் தீரன் முகம் மீண்டும் வந்தது.
“Respect இருக்கணும்…” என்ற மாமாவின் வார்த்தை நினைவில் ஒலித்தது.
