அத்தியாயம் 01…

அத்தியாயம் 01

“ஏய் ஆத்மி சொன்ன கேளு டி வேணாம்…” என பயத்தில் நடுங்கியப்படியே கூறினாள் ரிதன்யா

“இங்க பாரு நீ இப்டி பயந்து சாகுறதுனா என் கூட வரவே வேணாம், என் வேலைய நான் பார்த்துக்குறேன்…” என கோபமாக தன் தோழியை பார்த்து கூறி விட்டு பக்கத்தில் இருந்த ஏணியை எடுத்து சுவரில் சாய்த்தவள் கட கடவென அதில் ஏறி சுவரின் மேலும் ஏறி அமர்ந்திருந்தாள் அனைவராலும் செல்லமாக ஆத்மி என அழைக்கப்படும் நம் கதையின் நாயகி ஆத்மிகா…

“ஏன் டி இப்டி பிடிவாதம் பிடிக்கிற? யாராச்சும் பார்த்த நமக்கு சங்கு தான்…” என தன் தோழியை தடுக்க முயன்ற படியே சுற்றும் முற்றும் பார்த்தவாறு கூறினாள்…

“அது தான் நானும் சொல்லுறேன், யாராச்சும் பார்க்க முன்னாடி சீக்கிரமா வா, இல்லனா உள்ள ஓடி போய்டு, இப்டி நடுவுல நின்னு என் உயிர வாங்காத…” என தன் தோழியை திட்டியப்படியே சுவரின் அடுத்த பக்கம் குதிப்பதற்கான வழியை தேடினாள்…

“அய்யோ என்ன சொன்னாலும் கேக்க மாட்டீக்குறாளே, கடவுளே காப்பாத்து இப்போ நான் என்ன பண்ணுவேன்…” என வாய் விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள் ரித்னயா…

“ரித்து இப்போ நீ வர போறியா? இல்லையா?”என ஆத்மிகா அவளை பார்த்து கத்த, “வாறேன் வாறேன் கத்தி எல்லாரையும் எழும்பி விட்டுறாத…” என்று தன் தோழியை கடிந்தப்படியே அவளும் ஏணியில் ஏறி சுவரி அமர்ந்திருந்தாள்…

“அய்யயோ எவ்வளவு ஹைட்டு இதுல இருந்து எப்டி டி ஆத்மி குதிக்குறது?” என உயரத்தை பார்த்து நடுங்கியப்படியே தன் தோழியின் கையை சுரண்டவே அதில் எரிச்சல் அடைந்த ஆத்மிகா அவளின் கையை தட்டு விட்டவள் அடுத்த நோடி எதும் யோசிக்காது வீதியில் ‘தொம்’ என குதித்திருந்தாள்…

“அடிப்பாவி என்ன விட்டுட்டு குதிச்சிட்டியே இப்போ நான் எப்டி குதிப்பேன்?” என வியர்த்து வடிய பயந்து போய் ரிதன்யா கேட்டாள்…

“நான் எப்டி குதிச்சேனோ அப்டி தான் குதிக்கிறது, யாரும் வர முன்னாடி சீக்கிரமா வாடி…” என ஆத்மிகா தன் தோழியை அவரசரப்படுத்த “அய்யோ கடவுளே படுத்துறாளே, கர்த்தரே என்னைய காப்பாத்துங்க…” என கத்தியவள் கண்களை இறுக்க மூடியப்படியே அவளும் ‘தொம்’ என வீதியில் குதித்திருந்தாள்…

“ஒரு சுவர குதிக்குறதுக்கு எதுக்குடி இவ்ளோ அக்கப்போர் பண்ற?” என தன் தோழியை பார்த்து கோபமாக கேட்டாள் ஆத்மிகா…

“யாரு நானாடி அக்கப்போர் பண்றேன்? நீ தான் டி என்னைய போட்டு பாடா படுத்துற, ஏன்டி இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க?” என்று அழாத குறையாக தன் தோழியை பார்த்து கேட்டாள் ரிதன்யா…

“ஏன் உனக்கு தெரியாது நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னு, எதோ தெரியாத போல புதுசா கேக்குற?” என ஒற்றைப் புருவம் உயர்த்தி தன் தோழியை பார்த்து கேட்டாள் ஆத்மிகா…

“ஆனா நீ பண்ணுறது சரினு நினைக்கிறியா? இதலாம் ரொம்ப தப்பு டி…” என தன் தோழியை பார்த்து கோபமாக கூறினாள்…

“தப்பவே இருக்கட்டும் ஆனா அது எனக்கு பிடிக்கலயே, அப்போ நான் இப்டி தான் பண்ணுவேன்…” என இவளும் ரிதன்யாவுடன் வாக்குவாதம் செய்தாள்…

“ஏன் டி கல்யாணம் பிடிக்கலனு அப்பவே சொல்ல வேண்டியது தானே? இப்போ நடு ராத்திரில சுவரு குதிச்சி ஓடி போறோமே இது தப்பில்லயா?” என ரிதன்யா அவளை பார்த்து கேட்டாள்…

“எங்க டி என்ன சொல்ல விட்டாங்க? அப்போ இருந்த சூழ்நிலைக்கு நான் அத சொல்லுற நிலைமைலயும் இல்லனு உனக்கே தெரியும், என்னால அந்த தடிமாட கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என கோபமாக கூறினாள் ஆத்மிகா…

“எது தடிமாடா? என்னடி நீ மரியாதை இல்லாம பேசுற? இதலாம் ரொம்ப தப்பு டி…” என தன் தோழியை சமாதானப்படுத்த முனைந்தாள் ரிதன்யா…

“ஆமா டி தடிமாடு தான்.. பார்க்க அப்டி தானே இருக்கான் அவன்…” என கோபம் கொப்பளிக்க கூறினாள்…

“ஏன்டி கல்யாணத்துல இருந்து பொண்ணு ஓடி போய்டுச்சினு தெரிஞ்சா வீட்ல உள்ளவங்களுக்கு எவ்வளவு அசிங்கம்னு யோசிச்சி பார்த்தியா?” என அவளுக்கு புரிய வைக்க முயன்றாள்…

“எனக்கு அத பத்திலாம் கவல இல்ல, நான் என்ன பொம்மையா அவங்க சொல்லுறவன்லாம் கல்யாணம் பண்ணுறதுக்கு…” என வெறியாக கேட்டாள்…

“கடவுளே! இதுக்கு மேல உன்னோட என்னால போராடி முடியாது… வா போலாம்…” என அதற்கு மேல் வாதாட முடியாதவளாக வீதியில் நடக்க ஆரம்பித்து விட்டாள் ரிதன்யா..

“இத அப்போவே பண்ணி இருக்கலாம்…” என வாய்க்குள்ள முணுமுணுத்தப்படியே ஆத்மிகாவும் அவளுடன் நடக்க ஆரம்பித்தாள்…

அந்த இருண்ட வானில் நிலவு மட்டும் ஒளி வீசிக் கொண்டிருக்க, யாரும் இல்லா அந்த வீதியில் நடந்து சென்ற இருவரின் நினைவுகளும் இந்த பிரச்சினையின் ஆரம்ப புள்ளியை நோக்கி சென்றது…

ஆத்மிகா, ரிதன்யா இருவரும் சிறிய வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள், இருவருக்கும் தற்போது இருபத்திமூன்று வயது…

படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் மங்கைகள், ரிதன்யா மற்றும் ஆத்மிகா என இருவரின் வீடும் எதிர் எதிரே இருப்பதனால் இவர்கள் இருவரின் உறவு மட்டும் அல்ல இவர்களின் குடும்பமும் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர்…

ஆத்மிகாவிற்கு தாய் இல்லை தந்தை மற்றும் இரு அண்ணன்மார்கள் இருக்க அவர்களின் செல்ல பிள்ளை ஆவாள் பெண்ணவள், அதே நேரம் மிகவும் பொறுப்பானவனளும் கூட வீட்டு வேலையில் இருந்து அனைத்தையும் பொறுப்பாக செய்ய கூடியவள்…

ஆத்மிகாவின் தந்தையின் பெயர் முத்துலிங்கம், அவளின் ஒரு அண்ணன் ஆதேஷ் திருமணம் முடித்து வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டான், அவனின் மனைவியின் பெயர் பூஜா இருவருக்கும் நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது…

அடுத்த அண்ணன் ஆத்விக் இன்னும் திருமணம் ஆகவில்லை காலேஜ்யில் பேராசிரியராக பணி புரியும் இருபத்தி எட்டு வயது ஆண்மகன்… 

அடுத்து ரிதன்யாவின் குடும்பம் அவளின் தாயின் பெயர் காமாட்சி மற்றும் தந்தையின் பெயர் ராமநாதன், ரிதன்யாவிற்கு ஒரு அக்கா இருக்கின்றாள் பெயர் காவியா திருமணம் ஆகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது, ஒன்றரை வருடத்திற்கு முன் அவளின் கணவன் ராஜேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்த கொண்டிருந்த சமயம் அங்கு நடந்த ஒரு தீ விபத்தினால் இறந்து விட்டான், அதனால் தற்போது அவளின் தாய், தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறாள்…

இவர்கள் இருவரின் குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகுபவர்கள், அப்டி இருக்கையில் தான் ஆத்மிகாவிற்கு நல்ல வரன் ஒன்று அமைந்தது, மாப்பிள்ளை வீட்டாரை எல்லாருக்கும் பிடித்து விட திருமணம் இனிதே நிச்சயிக்கப்பட்டது, ஆத்மிகாவிற்கும் காதல் எதும் இல்லாததால் அவளும் சரி என சம்மதித்து விட்டாள்…

இப்டி சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்கையில் தான் பேரிடியாக ஆத்மிகாவின் திருமணத்தில் பெரும் குழப்பம் ஒன்று ஏற்பட்டது…

ஆத்மிகாவுடன் நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு திருமணத்திற்கு ஒரு நாள் முன்னாடி ஓடி விட, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போனார்கள் அனைவரும்…

ஆத்மிகாவோ இந்த நிகழ்வில் இடிந்து போனாள், மாப்பிள்ளையை ஒரு தடவை நேரில் பார்த்து பேசினாள் அவனும் நன்றாக பேசினான், பிறகு வீட்டில் உள்ளவர்களின் அறிவுரை படி திருமணத்திற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என மாப்பிள்ளையுடன் பேசிக் கொள்ளவில்லை ஆனால் அவளின் பல எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் நடக்க இருந்த இந்த திருமணம் திடீர் என்று நின்றதும் பெண்ணவள் உடைந்து போனாள்…

அப்டி இருக்க தான் மாப்பிள்ளையின் தாயே இதை சரி செய்ய எண்ணி அனைவரிடமும் மன்னிப்பு வேண்டியவர் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்று கூறி தனது மூத்த மகனை ஆத்மிகாவிற்கு திருமணம் செய்து வைக்க முன்வந்தார்…

பெண்வீட்டாருக்கும் வேறு வழியில்லை இப்போது திருமணம் நின்று போனால் அடுத்து ஆத்மிகாவிற்கு நல்ல வரன் அமைவது மிகவும் கடினம், அது மட்டும் இல்லாது ஆத்மிகாவை திருமணம் செய்ய ஓப்பு கொண்டவனும் விசாரித்ததில் நல்லவனாக தெரிய வேறு வழி இல்லாது ஆத்மிகா மற்றும் ரித்யாவின் குடும்பம் இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர்…

இது தான் நடந்த நிகழ்வு இதற்கு பிறகு தான் இரவோடு இரவாக ஆத்மிகா திருமணம் செய்ய விருப்பம் இல்லாது மண்டபத்தில் இருந்து தனது தோழி ரிதன்யாவுடன் தப்பி வந்தது, நாளை விடிந்தால் திருமணம் என்றிருக்கும் நிலையில் மண்டபத்தில் இருந்து ஓடி வந்து விட்டாள் பெண்ணவள்…

“ஸ்ஸ் ரொம்ப குளிரா இருக்குதுல?” என கைகள் இரண்டையும் தேய்த்து கன்னத்தில் வைத்தப்படி ரிதன்யா கேட்க, அவளின் கேள்விக்கு ஆத்மிகாவிடம் இருந்து பதில் இல்லை, அவள் தான் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தாள் அல்லவா…

தன் தோழியிடம் இருந்து பதில் வராததால் அவளை ரிதன்யா திரும்பி பார்க்க அவள் எங்கோ வெறித்து பார்த்தப்படியே நடந்து வந்துக் கொண்டிருந்தாள்…

“ஏய் அத்மி…” என அவளின் தோள் தொட்டு உலுகிய பிறகு தான் பெண்ணவள் நிகழ் உலகிற்கே வந்திருந்தாள்…

“ஆஹ் என்னடி? என்ன கேட்ட?” என ஒன்றும் புரியாமல் இவள் வினாவ, “ஒன்னுமில்ல தாயே, ஆமா இப்போ நாம எங்க போறோம்?” என தான் பேசியதை விடுத்து அடுத்த கேள்வியை யோசனையாக கேட்டாள் ரிதன்யா… 

அதற்கு தன் இரு தோள்களையும் குலுக்கிய ஆத்மிகாவோ “யாருக்கு தெரியும், அங்க இருந்து எப்படியாச்சும் வெளிய வரணும்னு மட்டும் தான் யோசிச்சேன், எங்க போறது, என்ன செய்றதுனு இனி தான் யோசிக்கனும்…” என கூலாக கூறினாள் பெண்ணவள்…

அவள் கூறியதை கேட்டு அதிர்ந்த ரிதன்யாவோ “அடிப்பாவி உன்ன நம்பி வந்த என்னைய செருப்பாலயே அடிக்கனும் டி, இப்டி நடு ரோட்டுல நிக்க வைச்சிட்டேயே?” என பயத்தில் புலம்பினாள் காரிகை…

“அதுலாம் பார்த்துக்கலாம் டி வா…” என தன் தோழியின் கைகயை பிடித்தப்படியே நடந்தாள் ஆத்மிகா…

அப்போது எங்கிருந்தது தான் வந்ததோ தெரியவில்லை வேகமாக அவர்கள் இருவரையும் இடிப்பது போல் வந்து நின்றது கருப்பு நிற கார் ஒன்று…

அவர்களை இடிப்பது போல் அந்த கார் வந்து நின்றதால் இருவரும் ஒரு நொடி பயந்து விட, அதில் இருந்து கருப்பு நிற முகமூடி மற்றும் உடைகள் போட்டு கொண்டே  அஜானுபமாக இறங்கினர் இருவர்…

அவர்களை பார்த்து இருவரும் நன்றாக பயந்து விட, தங்களை நோக்கி வந்தவர்கள் பார்த்து “டேய் யாரு டா நீங்க?” என பதற்றமாக இருவரும் கேட்டப்படியே ஓடுவதற்கு தயாராகி சமயம் அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்து இழுத்த அந்த முகமூடிகாரர்களோ நொடியில் மயக்க மருந்து தடவிய துணியை அவர்களின் முகத்தில் வைத்து அழுத்தி இருந்தனர்…

இதை எதிர்பாராத இருவரும் அவர்களிடம் இருந்து விடுபட திணறிய படியே, ஒரு சில விநாடிகளில் மயக்க மருந்தின் வீரியத்தினால் மயங்கி சரிந்திருந்தனர், மயங்கிய இருவரையும் காரின் பின் இருக்கையில் தூக்கி போட்டவர்கள் மின்னல் வேகத்தில் காரை அங்கிருந்து கிளப்பி இருந்தனர்…

யார் இவர்கள்?

ரிதன்யா மற்றும் ஆத்மிகாவை எங்கே கொண்டு செல்கிறார்கள்?

இரு தோழிகளினதும் அடுத்த நிலை என்ன?

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page