மயக்கம் தயக்கம் 2

நாம் ஏதோ ஒரு வகையில் எதையாவது நோக்கிப் பயணப்படுவதும்,அதை தொலைதூரத்திலிருந்தாலும் விரட்டிக்கொண்டு செல்வதுமாக இருப்பதால் தான் நமது நாட்கள் சுவாரஸ்யமாக செல்கிறது. போராடும் வரை மனிதன் என்பது சாதாரணமான ஒரு வாக்கியமாக என்றுமே முற்றுப்பெறுவது இல்லை. இதோ விஜயராகவனும் கூட அப்படிதான்.அவனது தனிப்பட்ட வாழ்க்கை படுதோல்வியை தழுவிய பிறகும் அவன் தான் தனது சறுக்கல்களில் மீதேறி வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருக்கிறான்.

இரவு வீட்டுக்குள் நுழையும் பொழுது இருந்த களைப்பு நிச்சயம் இப்போது அவனிடம் இல்லை.அந்த இடத்தில இப்போது தனிமை வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.அவனுடைய அம்மா சொல்லிக்கொண்டு இருப்பது தான்.”போனது போகட்டும் விஜூ. அடுத்தது என்னனு யோசி. உனக்கு வேறே யாரையாவது பிடிச்சிருக்கானு பாரு. அப்படி ஒரு பெண் உன்னோட வாழ்க்கைக்குள்ள வந்தா பழைய கசடுகள் போயிரும்.” இப்போதும் அதை நினைக்கும் பொழுது அவனது முகத்தில் கசந்த புன்முறுவல் தான்.

அவளது இடத்தில இன்னொருத்தியை மனைவியாக எளிதாக கொண்டுவந்துவிட முடியும். ஆனால் தயா.இன்னமும் அம்மா என்ற ஒரு உறவு பற்றியே தெரியாமல் அப்பாவை மட்டுமே உறவென்று நினைத்திருக்கும் குழந்தையை என்ன செய்ய முடியும்? வருபவள் எனக்கு மனைவியே தான். அதில் மாற்று இல்லை.  அவளுக்கென்று இருக்கும் எதிர்பார்ப்புகளில் நிச்சயம் ரெடிமேடு குடும்பமும்,அதில் குழந்தையும் இருக்காதே!எப்போதும் போலவே ஒரு மௌனம் அவனிடம்.சொல்லிப்பார்த்து அலுத்துப்போனது அம்மாவுக்கு.

குடும்பம் ,மனைவி என்று வரும்பொழுது முளைக்கும் கேள்விகள் நிச்சயம் இரவின் தேவைகளை ஒப்பிடும்பொழுது சாதகமான பதில்களை தருவதில்லை. என்றாவது ஒருநாள் தனிமையின் ஏக்கங்கள் அவனின் உயிர்த்தின்னும் பொழுதுகளில்  யாராவது ஒரு மாது வந்து அவனது உயிரை மீட்டெடுத்து கொடுத்துச் செல்வாள். அது வருஷத்தில் என்றோ ஒருநாள் அல்லது பல மாதங்களில் ஒரு நாள்.

இன்றும் அவ்வாறாகத்தானே அவனுக்குள் ஒரு பிரளயம். தொழில் மேலாண்மை படிக்கும் பொழுது அவளும் இவனுடன்தான் படித்துக்கொண்டிருந்தாள்.இருவருக்குள்ளும் நட்புக்கூட இல்லை.ஆனாலும் அவள் இவனருகே வந்து ,நிதானமாக கையில் வைத்திருந்த மூன்று ரோஜாக்களை நீட்டி,இவன் தனது கைகளில் வாங்கிக்கொள்ளும் வரை அங்கேயே நின்று,உப்ஸ்…ஆனாலும் அவள் வாயிலிருந்து அந்த மூன்று வார்த்தைகள் மட்டும் வரவே இல்லை.அவள் புன்னகை முகம் அன்று இவனிடம்,”வாங்கிக்கோயேன் ப்ளீஸ் “என்று சொல்வதைப்போல உணர்ந்தவனது கைகள் தன்னையும் அறியாது அந்த பூக்களை பற்றியது.மட்டும் அன்று  நிகழ்வு நடந்திருக்கவிட்டால்?

தலையை உலுக்கிக்கொண்டவனுக்கு கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது. நிதானப்படுத்திக்கொள்ளவும் வழி தெரியவில்லை.எவ்வளவு தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்?

 

சந்தனா தனது காலை நேர பரபரப்பில் வேகமாக எதையோ அடுப்பில் வைத்துக்கிண்டி கொண்டிருந்தாள்.  அவளது பத்து வயது தங்கைக்கு இன்று முதல் தேர்வுகள் தொடக்கம். அவளுக்கு நேற்று இரவு வரை எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தாகிவிட்டது. கடைசி நேர புத்தகப் பார்வை பார்க்க என்றுமே சந்தனா அனுமதித்தது கிடையாது.அதனால் மேடம் கொஞ்சமாக ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன் என்று யு ட்யூபில் பாடல்களை அதிக சப்தத்தில் வைத்து கேட்டுக்கொண்டிருந்தாள். அடுக்களையில் வேலையில் பிசியாக இருந்த சந்தனாவுக்கும் காதுகளில் விழ தானுமே கூடப் பாடிக்கொண்டுதான் வேலை செய்தாள்.

சந்தனாவே பல சமயங்களில் பாத்திரம் துலக்கும் முன்னே குத்துப்பாட்டுகளை தெரிவு செய்து கேட்பதுதான்.அதே பழக்கம் தங்கைக்கும் வந்திருக்கிறது. ஸ்ட்ரெஸ் பஸ்டர்?

சரி , சிறியதாக சந்தனா பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வோம். வயது இருபத்தி ஐந்து. அடர்த்தியான முதுகின் நடுப்பகுதியை தொடும் கூந்தல்.  நீளமான மூக்கு.  ஆனால் ஒற்றைக் கல் மூக்குத்திக்கு இடம் தர மாட்டேன் என்று அங்கே மீடியம் சைஸ் மச்சம். தெளிவான முகம் . பாலில் மிக லேசாக டிகாக்ஷன் விட்டது போன்ற நிறம்.  உயரம் ஐந்தரை அடி.மெல்லியதும் அல்லாமல் பூசிய வாகிலும் இல்லாமல் நடுத்தரமான உடல் அமைப்பு. அதிகம் ஆபரணம் அணியாதவளுக்கு இயற்கையாகவே கண்களும்,உதடுகளும் புன்னகை சிந்தும் தோற்றம்.

அம்மா கீதா ஒரு தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை.அப்பா ரங்கன் ஒரு பிரபல நிறுவனத்தின் பாக்டரியில் சூப்பர்வைசர். ஒரு தங்கை  ,அவள் பெயர் ராகினி. இப்போது ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். அம்மா வேலை செய்யும் பள்ளியில் தான். அதனால் கட்டணச் சலுகை உண்டு.

தங்கைக்கும் இவளுக்கும் பதினைந்து வருஷங்கள் இடைவெளி உண்டு. அதனாலேயே ராகினியை பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பையும் சந்தனா எடுத்துக்கொண்டாள்.அதோடு வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு வேலை நேரத்திற்கு தகுந்தவாறு அடுக்களையில் சமையல் செய்வதையும் தனதாக்கிக் கொண்டாள். இரவு நேரம் வேலை செய்துவிட்டு வரும் சமயங்களில் அவள் அம்மாவே அவளுக்கும் சேர்த்து சமைப்பது.மற்ற நேரங்களில் சந்தனாவின் கைப்பக்குவம்.

சந்தனா என்ன செய்கிறாள் என்று சொல்லவில்லையே! சந்தனா ஒரு பி எஸ் சி நர்சிங் படித்த நர்ஸ். இந்திய அளவில் பிரபலமான மருத்துவமனையில் வேலை. வங்கிக்கணக்கில் ஏற்றம் கொடுக்கும் அளவுக்கு நிறைய சம்பளம். இதுவரை அவள் பார்க்காத பிரபலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நடிகர் நடிகைகள் ,தொழில் புலிகள்,அரசியல் முக்கிய புள்ளிகள், தொலைக்காட்சி பிரபலங்கள் என்று பட்டியல் பெரியது. சந்தனாவுக்கு ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து நடிக்கவும் அழைப்பு வந்திருந்தது. சிரித்தபடியே கடந்து விட்டாள்.

 

 

இதுதான் சந்தனா பற்றிய விபரங்கள் .இதோ சமையலை முடித்தவள் தனது தங்கை ரோகிணியை நோக்கி ஹாலுக்கு வந்தாள்.”என்னடி ராகி . இன்னுமா நீ யூனிபோர்ம் போடல? சரி ,வா தலையை பின்னி விடறேன். அம்மா வரதுக்குள்ள சீக்கிரம் ரெடியாகு. வந்தா திட்டு வாங்குவ நீ “என்று சொல்லியவாறே தேங்காய் எண்ணையில் காய்ச்சிய மருதாணி தைலத்தை எடுத்து தங்கையின் முடியில் தடவினாள். இரவு ஷிப்ட்டுக்கு சென்றிருந்த ரங்கன் வீட்டுக்குள் நுழைந்தார்.

அவரது கண்கள் இரவு தூங்காததால் லேசாக சிவந்து இருந்தது.  அவர் தங்களது அறைக்குள் நுழையவும் அவசரமாக தங்கைக்கு இரட்டை பின்னல்கள் போட்டுவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். தந்தைக்கு காபி கலந்து கொடுத்துவிட்டு , பெண்கள் மூவருக்குமாக மதிய உணவுக்காக பாக்ஸுகளை தயார் செய்து ஹாலில் இருக்கும் டைனிங் டேபிளில் வைத்தவள் ,விரைந்து செண்டு ஒரு குளியலை போட்டவளுக்கு இன்று சீக்கிரமாக கிளம்பவேண்டிய கட்டாயம். இன்று காலை எமெர்ஜெண்சி கேரில் ட்யூட்டி.அடுத்த ஒரு வாரத்திற்கு அப்படிதான்.

விரைவு கதியில் கிளம்பியவளுக்குள் ஆயிரம் யோசனைகள்.கடந்த சில மாதங்களாக மருத்துவமனையிலிருந்து நோயாளிகளுக்காக என்று பிரத்யேகமாக வீட்டுக்கு சென்று உதவிகள் செய்வதற்காக செவிலியர்களை அனுப்புவதும் ஒரு சேவையாக அவர்களது மருத்துவமனை நிர்வாகம் செய்துவருகிறது.  இவளிடம் கூட தலைமை செவிலியர் சொல்லியிருப்பதுதான்,”நல்ல பணம் கொடுக்குறாங்க சந்தனா.அந்த மாதிரி ஏதாச்சும் ஒரு ஆபேர்ச்சுனிடி வந்தா எடுத்துக்க. நல்ல பாதுகாப்பான இடங்களா பார்த்துதான் அனுப்புவாங்க.”என்று நேற்றுதான் சொல்லியிருந்தார்.

இத்தனை மாதங்களாக இல்லாமல் இப்போது இவளிடம் இதுபற்றி பேசவேண்டும் என்றால் நிர்வாகம் தன்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்ற பெரும் குழப்பம்.வேலைக்கு என்று வந்துவிட்டு இப்படியெல்லாம் யோசிப்பது சரி இல்லை என்பது மூளைக்குப் புரிந்தாலும்,பெண்ணாக தனது பாதுகாப்பையும் குருதி செய்துகொள்ள வேண்டும். அத்தோடு ஏற்கனவே செவிலியர் பயிற்சிக்கு சேரும்பொழுதே அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மருத்துவம் படிக்க தேவையான மதிப்பெண்கள் இவளுக்கு வரவில்லை .செலவு செய்து படிக்கவைக்கும் அளவுக்கு வீட்டில் வசதி இல்லை. மருத்துவ துறை சார்ந்த படிப்பு இருக்கவேண்டும்.அதுவும் மருத்துவ அறிவும் கொஞ்சமாவது இருக்கவேண்டும் என்றெல்லாம் ஆயிரம் பேசித்தான் படிக்க வந்ததே!

இதுபோல் வீடுகளுக்கு சென்று வேலை செல்வதை அம்மா என்றுமே அனுமதிக்கப் போவதில்லை ‘என்றெல்லாம் தனக்குளேயே பேசிக்கொண்டு ஒருவழியாக மருத்துவமனைக்கு வந்துவிட்டாள். பிரம்மாண்ட மருத்துவமையின் கட்டிடமும் அதன் நுழைவு வாயிலும் அவளை வழக்கமான பிரமிப்புடன் உள்ளே அழைத்துக்கொண்டது.இன்னமும் வெயில் வந்திருக்கவில்லை. ஆனாலும் ,ஆளையே உறைய செய்யும் ஏசியின் குளிர் நிதானமாக அவளுக்குள் ஊடுருவியது.அந்தக் குளுமையை அனுபவித்தபடிக்கே  உள்ளே நுழைந்தாள்.

செவிலியர்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தவள் தனது பையிலிருந்த சீருடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். முகம் கழுவி லேசான ஒப்பனைகளுடன் தனது முடியை கொண்டையாக்கியவள், உடுப்பையும் அணிந்து கொண்டாள். இன்னமும் அவளது பணி நேரம் ஆரம்பிக்க இருபது நிமிஷங்கள் மீதம் உண்டு.ஒரு கப் காபி குடித்தால் பரவாயில்லை போல இருக்கவே அந்த தலத்தில் இருக்கும் காபிடீரியாவுக்குள் நுழைந்தாள். அவளுடன் மருத்துவர் அரவிந்தனும் இணைந்து கொண்டார். போனவாரம் அவரிடம் தான் சந்தனாவுக்கு ட்யூட்டி.  இருவரும் பரஸ்பரம் சிரித்துக்கொண்டாள். வேகமாக சந்தனா காபியை குடித்தவள் ,அடுத்த டேபிளில் அமர்ந்து நிதானமாக காபியை பருகும் டாக்டரை பார்த்தாள். அவருக்கும் இவள் பார்ப்பது புரியவே இரண்டுபேரும் மீண்டும் சிரித்தார்கள்.அது ஒரு அறிமுகப் புன்னகை மட்டுமே!

சந்தனா சென்றபிறகும் அரவிந்தன் அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் .அவற்றிற்கு உருவம் கொடுக்க முடியாத தவிப்பு. ஏற்கனவே வங்கி கடனில் தான் ஐந்து வருஷ மருத்துவப்படிப்பும்,அதற்க்கு மேலே இரண்டு வருஷங்களும் படித்ததே! வீட்டில் அரவிந்தனை வைத்துதான் நிறையவிஷயங்கள் திட்டமிடப் பட்டிருக்கிறது.அப்படி இருக்கும் பொழுது இதெல்லாம் சரி வராது என்று கலங்கியவருக்கு அவரது பணி நேரம் ஆரம்பிக்க இருப்பதால் அவரும் அங்கிருந்து கிளம்பினார். இதெல்லாம் சரி வருமா என்றெல்லாம் தெரியாது.பார்ப்போம்.!

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page