அத்தியாயம் -23

வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் 23

 

“நாம சிலரை வாழ்க்கையில் எதிர்பாராத விதமாகச் சந்திப்போம். அவங்க எதுவும் எதிர்பார்க்காமல் நம்மை நேசிப்பாங்க. ஆனால் நமக்கு அவங்க மேல் இன்ட்ரெஸ்ட் வந்திருக்காது. நாம எதுவும் செய்யவும் முடியாது. சிலர் எப்பவும் ஃபிரெண்ட் ஜோன்தான். சப்போர்ட்டிங் ரோல் மட்டும்தான்.”
    -சிவகார்த்திக்.

விழிகளை மூடி மயில்போல் கிடந்த பாவையைப் பார்த்தான் சிவகார்த்திக். அப்போது விசிலடித்தபடி சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த தன் தங்கையை அழைத்தான்.

“மினியன், இங்க சீக்கிரம் வா.”

தன் சகோதரனை நிமிர்ந்து பார்க்க அவன் கையில் ஒரு பெண் இருந்தாள். சிவகார்த்திக் சட்டென அவளைத் தூக்கி, அருகில் இருந்த சிமெண்டால் ஆன இருக்கையில் அமர வைத்தான். சிவகாமினி அதற்குள் தன் பேக்குடன் அருகே வந்துவிடவும், அவளிடமிருந்து நீரை வாங்கி கன்யா முகத்தில் தெளித்தான்.

“ஹே கேர்ள், எழுந்திரு.”

கார்த்திக் அவள் கன்னத்தில் தட்ட கன்யா மெதுவாகக் கண்விழித்தாள். மங்கலாய் சிவகார்த்திக்கின் உருவம் தெரிந்தது. மாநிறத்தில் ஒல்லியாக உயரமாக இருந்தான். அப்போது கல்லூரிப் பருவத்தில் சுமார் தோற்றத்தில் மிகவும் ஒல்லியாக இருப்பான் கார்த்திக். சிவகாமினி அப்போது இலேசாகப் பூசிய தோற்றத்தில் இருப்பாள்.

“என்னாச்சு? டாக்டர்கிட்ட போலாமா?”

சிவகார்த்திக் அக்கறையுடன் அவள் விழி திறந்ததும் கேட்டான்.

“சா…ப்…பிடலை… அதான்…” என மெல்லிய குரலில் கூற சிவகாமினியின் பையைத் திறந்து அவள் வைத்திருந்த சில்க் சாக்லேட்டை எடுத்துக் கன்யாவிடம் கொடுத்தான்.

“இதைச் சாப்பிடு.”

கன்யாவுக்கு இப்போது தெளிவு வந்திருந்தது. நிமிர்ந்து அமர்ந்தவள் அவன் கொடுத்த சாக்லேட்டை வாங்கி உண்டதும் இலேசாகத் தெம்பு வந்தது போல் இருந்தது.

இருவரையும் பார்த்துப் புன்னகைத்தவள், “தேங்க்ஸ்” என்றாள்.

“இட்ஸ் ஓகே கேர்ள். இங்கேயே இரு. மினியன் பார்த்துக்கோ.” என்று அங்கிருந்து நகர்ந்தவன் நேராகச் சென்றது கல்லூரியின் உணவகம். ஒரு உணவுப் பொட்டலத்தை வாங்கியவன் கன்யாவின் கையில் அதைத் திணித்தான். ஆனால் அதை அவள் மறுக்க முயன்றாள்.

“சாப்பிடு கன்யா. இன்னொரு நாள் நீ எங்களுக்கு வாங்கிக் கொடு.” எனச் சிவகாமினி கூறினாள். கார்த்திக் சென்றதும் கன்யாவிடம் பேச்சு கொடுத்தவள் அவள் படிக்கும் துறை, பெயர், ஊர் என அனைத்துத் தகவல்களையும் அறிந்திருந்தாள். தங்களைப் பற்றியும் கூறி இருந்தாள்.

“இது மட்டும்தான் இருந்துச்சு. சாப்பிடு.”

முன் பின் தெரியாத அவளுக்கு உதவியவர்களின் மீது கன்யாவுக்கு ஒரு தோழமை உணர்வு எழுந்திருந்தது.

“உங்க நம்பர் கொடுங்க.”

“நான் பொண்ணுங்களுக்கு நம்பர் கொடுக்கறது இல்லைம்மா. வேணும்னா இவளோடதை வாங்கிக்கோ.” என்றவன் நடக்க ஆரம்பிக்க, சிவகாமினி சிரித்தபடி தன்னுடைய எண்ணைக் கொடுத்தாள்.

“நிஜமாவே போன் நம்பர் குடுக்க மாட்டாரா உங்க பிரதர்?”

“ம்கூம். பொண்ணுங்களுக்கு போன் நம்பர் குடுக்கவும் மாட்டான். வாங்கவும் மாட்டான்.” எனக் காமினி தன் எண்ணைக் கொடுத்துவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றாள்.

காமினியின் தோள்மீது கைபோட்டுச் செல்லும் அந்த நெடிய உருவத்தைப் பார்த்தாள். இப்போது இருப்பதற்கும், அப்போது இருந்ததுக்கும் நூறு வித்தியாசங்களைக் கூறிவிட முடியும் கன்யாவால். அவளிடம் கனிவாக, அன்பாக நடந்து கொண்டவன் இன்று முகம் கொடுத்துப் பேசாததின் காரணம் என்னவோ தெரியவில்லை. அவன் பார்வையிலேயே அவளை எட்ட நிறுத்தி இருந்தான். காமினியும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. கார்த்திக்கின் முகத்தைப் பார்த்தாலே அளவு கடந்த கோபம் அவள்மீது இருப்பது தெரிந்தது. கல்லூரியில் கனிவுடன் பார்த்த முகமா அது என்று தோன்றியது. வெகுவாக மாறிப் போயிருந்தான். உடல் அளவில் மாறுவது கூடச் சரி. ஆனால் ஏன் இப்படி மனதளவில் என்று யோசித்தவளுக்கு எதுவும் புலப்படவில்லை, அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.

***

ஆதி மனோகரன் விடுதியின் வரவேற்பில் நின்றுகொண்டிருந்தான்.

“ஸாரி சார். இங்க மேக்ஸிமம் எல்லா ரூமும் புக் ஆகிருச்சு. ஆர்டினரி ரூம்ஸ்தான் இருக்கு. நீங்கக் கேட்ட மாதிரி சூட் ரூம் இல்லை.”

“இட்ஸ் ஓகே. அதுவே குடுங்க.”

தனக்கு அறை கிடைக்கவும் தனது உடைமையை எடுத்துக் கொண்டு நடக்க, அவனுக்கு வழி காட்டினர் விடுதிப் பணியாளர்கள்.

அறைக்குள் வந்தவன் ஜன்னல் திரைச் சீலைகளை விலக்கி, கண்ணாடி ஜன்னலைத் திறக்கவும், கடல் காற்று வந்து முகத்தில் மோதியது. சிலு சிலுவென்று கூந்தல் கலைத்த காற்று அவனுக்கு நிம்மதிக்கு பதிலாக விரக்தியைத் தந்தது.

அவன் மனைவியைப் பற்றி எவ்வளவு கேட்டும் அபிதா வாயைத் திறக்கவில்லை. இனி அவளை எப்படித் தேடுவது என யோசித்தான். அவளாகத் தன்னைப் பார்க்க விரும்பவில்லை. அதனால்தானே சென்று விட்டாள். அவர்கள் திருமண வாழ்க்கை சிலரின் சுயநலத்துக்காகப் பலியாகிக் கொண்டிருக்கிறது. அதை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் நின்று கொண்டிருந்தவனுக்கு முகியின் நினைவுகள் வந்து போனது.

காலையிலேயே இந்த ஊருக்கு வந்திருந்தாலும் இதற்கு முன்பு தங்கி இருந்த விடுதி பிடிக்கவில்லை. அபிதாவை சந்திக்கும் முன் விடுதியைக் காலி செய்து கொண்டு வந்திருக்க, அவர் வீட்டில் நெய்தல் நிழல் விடுதியின் புகைப்படங்கள் இருப்பதைப் பார்த்திருந்தான். அதனால் இங்கு வந்து இரவு நேரம் வந்திருக்க, வெளியில் எங்கும் செல்லப் பிடிக்கவில்லை. இரவு உணவை அறைக்கே கொடுத்து விடும்படி சொல்லி இருந்தான்.

உணவு வந்ததும் உண்ண ஆரம்பித்தவனுக்கு தன் மனைவியின் நினைவு வரத் தொண்டைக் குழியில் உணவை விழுங்க முடியவில்லை.

இரவு நேரம் தாமதமாக வீட்டுக்கு வருபவனை முகி வரவேற்பாள். அவனுக்கு உணவு எடுத்து வைத்து ஆசையாக ஊட்டி விடுவாள். இவனும் அவளுக்கு இடையில் ஊட்டி விடுவான். பழைய நினைவுகள் தானாக எழுந்து அவனை நிலை குலையச் செய்தது. கடந்த சில மாதங்களாக மனைவி தன்னை அவ்வாறு வரவேற்பதில்லை என்று அப்போதுதான் அவனுக்கு உரைத்தது. பல நேரங்களில் அவன் வீட்டுக்கு வரும்போது முகி உறங்கி இருந்தாள். அவளுக்கும் அலுப்பு இருக்குமல்லவா என நினைத்துக் கொள்வான்.

இரவிலும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன் ஒரு வழியாக உறங்கிப் போயிருக்க அடுத்த நாள் பொழுது புலர்ந்தது.

அடுத்த நாள் காலை எழுந்தவன் மீண்டும் காலையிலேயே அபிதாவின் வீட்டுக்குச் செல்ல அங்கு மீண்டும் தோல்வி கிடைத்தது.

***

கன்யாவின் சிவந்து கிடந்த விழிகளை நேரடியாகப் பார்த்தபடி நின்றிருந்தான் கார்த்திக். அவனது அறையில் நின்றுகொண்டிருந்தாள்.

“சிவா, சொல்லுங்க. ஏன் எங்கிட்ட பேசறது இல்லை? என்மேல் எதுக்கு கோபப்படறீங்க?”

“வாட்?” எதிரில் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவன் முகத்தில் ஏளனப் புன்னகை ஒன்று உதித்தது.

“உங்களை நான் இங்க எதிர்பார்க்கலை. உங்க இரண்டு பேரையும் பார்த்ததில் ரொம்ப ஹேப்பி தெரியுமா!”

“உனக்கா? குட் ஜோக். பர்சனல் விஷயங்களைப் பேசாமல் அபிஷியல் விஷயத்தைப் பேசிட்டுப் போங்க.”

“சிவா, உங்ககிட்ட இதைப் பத்தி பேசணும்தான் வந்தேன். ஏன் என்னை இக்னோர் பண்றீங்க? காமினியும் பேச மாட்டேங்கிறாங்க.”

அவள் கேள்வியில் சிவா பொறுமை இழந்து நாற்காலியிலிருந்து எழுந்து நின்றவன் அவள் அருகில் நெருங்கினான்.

“இங்க பாருங்க மிஸ். கன்யா. வந்த வேலையை மட்டும் பாருங்க. உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இப்படி போய் எங்களுக்கு உங்களைத் தெரியும்னு பேசிட்டு இருக்காதீங்க. எங்க பேர் வெளியில் கெட்டுடும்.”

அவன் வார்த்தைகளைக் கொட்டி விடக் கன்யாவின் விழிகளில் நீர் துளிர்த்தது.

“சிவா…” என அவன் முன்னங்கையைப் பற்ற அதை வேகமாக உதற இலேசாகத் தடுமாறி மீண்டும் நின்றாள் கன்யா.

அவனைப் பார்க்க வேண்டும் என்று நேரம் கேட்டு வந்திருக்க, அவனோ இவளை முகத்தில் அறைந்தபடி பேசுகின்றான். காமினியோ அலுவலக வேலைகளைத் தாண்டி எதையும் பேசவில்லை.

“ஏன் சிவா? நான் உங்களைவிட ஸ்டேட்டஸில் கம்மின்னு பேச மாட்டேங்கிறீங்களா? இக்னோர் செய்யறீங்களா? எனக்கு உங்க இரண்டு பேர் பத்தியும் இங்க வந்துதான் தெரியும்.”

தன்னைப் பணம் பார்த்துப் பழகுகிறவன் என்று கூறியதில் சிவகார்த்திக்கின் கோபம் அதிகரித்தது.

“ஏய்! என்ன நினைச்சுட்டு இருக்க? நான் ஸ்டேட்டஸ் பார்த்துப் பழகுறனா? நீதான் பணம், அழகு, பகட்டைப் பார்த்து லவ் பண்ணுவ. என்னை என்னனு நினைச்ச நீ? உன் கூடப் பழகுனதுக்கே நான் வெட்கப்படறேன். வெளில போடி.” என இலேசாகக் கத்தியே விட்டான். அவன் செயலில் கன்யாவின் விழிகளில் கண்ணீர் வழிந்து விட்டது.

“இனிமேல் ஏதாவது வேலைன்னா செகரட்டரிகிட்ட கேளு. எங்கிட்ட வரக் கூடாது நீ.”

“சி…வா…”

“கெட் லாஸ்ட்.” என வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, கன்யா விழிகளைத் துடைக்க முயன்றவள் அப்படியே கால்களைப் பின் வைக்க, புடவையில் கால்களை வைத்தவள் தடுமாற அவளை இடையில் பிடித்து நிறுத்தினான் கார்த்திக். நொடி நேரம் அவள்மீது இருந்த அக்கறை வெளிப்பட்டிருக்க, கன்யாவின் விழிகள் விரிந்து அவனைப் பார்க்க அப்படியே தன் முகபாவனையை மாற்றிக் கொண்டு அவளை விடுவித்தான்.

“பார்…த்து…” என்று அவன் வாயிலிருந்து தன்னை அறியாமல் வார்த்தைகள் வந்திருந்தது.

இந்த முறை அவளை அனுப்ப முயலாமல் தானாக அறையை விட்டு வெளியேறி இருந்தான் கார்த்திக்.

***
மாலை நேரம் சுக்ரீவிடம் அலைபேசியில் பேசி நேரம் சென்றிருக்க, ஆதிக்கு தலைவலித்தது. அறைக்குள் இருக்கப் பிடிக்கவில்லை. வெளியில் செல்லலாம் என்று முடிவெடுத்தவன் மின் தூக்கியின் முன் நின்றிருக்க, அதன் கதவுகள் திறந்தது.

“இல்லைக்கா, நீங்கக் கண்டிப்பாக ஈவினிங் என் கூட இருக்கணும். இரண்டு பேரும் ஜாலியாக இருக்கலாம். இது உங்களுக்கு ஒரு புது எக்ஸ்பிரியன்ஸாக இருக்கும்.” காமினி வாதிட,

“இ…ல்லை…” எனக் கூறிய முகி கதவைத் திறந்ததும் தன் எதிரில் நின்றிருந்தவனைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page