பாகம் ..33
அப்படி என்றால் இரண்டு அறைகளே தேவையில்லை .பிறந்தநாள் அன்று காலி செய்ய வேண்டிய அறையை மறுநாளுக்கும் சேர்த்து புக் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான் .. “நவீன் சொல்லும் இந்த யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது ..சரி என இருவரும் ஒத்துக் கொள்கிறார்கள்..
அமிர்தனின் பிறந்தநாள் அன்று விடிகாலையிலேயே ஹோட்டல் அறையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள் அவர்கள் நால்வரும். அவர்கள் வந்ததும் தான் மித்ராவே கண் விழிக்கிறாள். அவர்களை பார்த்ததுமே மித்ராவுக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது .
“அண்ணா நீங்க ஆதி அண்ணா தானே. இவங்க பத்மா அண்ணி, இவள் பூங்குழலி, குட்டி பையனின் பெயர் என்ன.. இவன் பிறந்ததே எனக்கு தெரியவில்லையே. “வியப்புடன் கேட்கிறாள் ..
நான் இப்பொழுதுதான் அவனிடம் சொன்னேன்மா.. நான் உடனே உன்னிடம் சொல்லி இருக்க வேண்டாமா..சரியான மறதி பயல் இவன் .. “என்று அரவிந்தை மாட்டிவிடப் பார்க்கிறார் ஆதி..
“இவனுடைய பெயர்.. “ஆதி சொல்லி முடிப்பதற்குள்ளேயே ஆபத்பாந்தவன் என்று நாங்கள் அமிர்தனுக்கு பெயர் வைத்து மாதிரி சொல்லி விடாதீர்கள் அண்ணா ..பிறகு அவனுக்கு தான் கஷ்டமாகி விடும்.. “என்று கிண்டல் செய்கிறான் ..
அரவிந்தை கண்டதுமே பூங்குழலி குட்டி தாவி குதித்து அவன் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்கிறாள்.. “ஏங்கப்பா வருஷ கணக்குல ஆனாலும் இன்னமும் என்னை இந்த குட்டி மறக்கவே இல்லை பார்த்திங்களா அண்ணா …” மனம் நெகிழ்கிறது அவனுக்கு..
“அவள் உன்னை எங்க மறப்பது ..தினமும் செல்லில் உன்னுடைய போட்டோவை காட்டினால் தான் கண்ணே விழிப்பாள். குட் மார்னிங் மாமா என்று சொல்லி விட்டு தான் அவள் வேலையை தொடங்குவாள் … ”
” ஓகோ அதனால்தான் நான் தூங்கும் போது எனக்கு கொஞ்சம் யாரோ இடைஞ்சல் செய்வது போல இருக்குமா ..ஏ குட்டி என்னை ஏன்டி ஒழுங்கா தூங்க விடாம அடம் செய்ற.. ” என்று குழந்தையை கொஞ்சுகிறான். அவளும் அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுக்கிறாள்..மித்ராவுக்குமே அவர்களின் நேசத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது .பாப்பாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் ஒன்றை கொடுக்கிறாள்..
“அரவிந்த் என்னடா பிறந்தநாள் அதுவுமா இத்தனை தாமதமாக எழுந்து வருகிறாய்.. எவ்வளவு வேலை இருக்கும் .வாங்க வாங்க வேலைகளை பார்க்க தொடங்கலாம் .அம்மாடி மித்ரா நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம். நாங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம். நீ போய் அந்த குட்டி பையன் எழுப்புகிறாயா ..என மனையிடம் கேட்டதும் பத்மா தயங்குகிறாள் …
“ வேண்டாங்க பிறந்த நாளும் அதுவுமாய் என்னை புதிதாக பார்த்து அழப் போகிறான்..”
” அண்ணி “அரவிந்தும் அதேதான் முறை சொல்கிறான் .. “இல்லங்க அண்ணி அவனுக்கு உங்களுடைய புகைப்படங்களை மொபைலில் காட்டி பழக்கம் செய்து இருக்கிறேன் .நீங்கள் எல்லாரும் எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டுக் கொண்டு ஆசையாக காத்து இருந்தான் ..இரவு உங்கள் கதைகளை தான் பேசிக் கொண்டிருந்தோம் …
அதனால் தான் கண் விழிப்பதற்கு தாமதம் ஆகி விட்டது. “
மித்ரா மட்டுமே காரியத்தில் கருத்தாய் இருக்கிறாள்.. ” அண்ணா குட்டி பையனின் பெயரை சொல்லாமல் மறந்து போகிறீர்களே..,
“ இவன் பெயர் ஆதவன்மா .. ”
“நல்ல பெயர் இவன் வாழ்க்கையும் சூரியனைப் போல பிரகாசமாய் ஒளிரட்டும் .. “என்று குழந்தையின் தலையில் கை வைத்து வாழ்த்துகிறாள்.. அவனை கையில் வாங்கிக் கொள்கிறாள்.. அவனும் குட்டி கிருஷ்ணனை போல அழகாக சமர்த்துப் பிள்ளையாய் இருக்கவும்,அந்த நேரத்திலும் தெரியாத் தனமாய் அரவிந்திடம் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொள்கிறாள் ..
“இந்த குட்டிப்பயலை பார்த்தீர்களா. எவ்வளவு சமர்த்தாய் அழாமல் இருக்கான்..”
” ஆமாம் நாலு பேருக்கிட்ட இப்படி கையில் கொடுத்து பழகினால் எல்லா குழந்தைகளும் சமர்த்தாய் தான் இருக்கும் .உன்னை மாதிரி கொடுக்காமல் யாருமே வளர்க்க மாட்டாங்கடி.. இதோ வயிற்றில் இருக்காளே என்னுடைய பாப்பா.. அவளையாவது நல்லா இலகுவாய் வளருடி.. “என்கிறான் … ”
உக்கும் என்று கழுத்தை நொடித்துக் கொண்டு குழந்தையோடு தன் அறைக் செல்கிறாள் .பத்மாவும் அவள் பின்னேயேயே செல்கிறாள்..அமிர்தனை நேரில் பார்ப்பதற்காக..
மித்ராவுக்கே அது ஆச்சரியம் தான்.. கண்களை கசக்கி கொண்டு எழுந்து உட்கார்ந்தவன் பத்மாயை கண்டதும் அத்தை என்று பாய்ந்து அவள் மடியில் உட்கார்ந்து கொள்கிறான் ..பத்மாவுக்கு தன் மகள் கூட மித்ராவை உரிமையாய் முறை சொல்லி கூப்பிடவில்லை .இந்த குட்டி பயல் எத்தனை அழகாக கூப்பிடுகிறான் என்று ஆசையாகி விடுகிறது..
” என்னுடைய செல்ல குட்டி .உன்னை எல்லாரும் என்னென்னமோ சொல்லி பயமுறுத்தி வச்சிட்டாங்கடா ..நீ எத்தனை அழகாக பேசுகிறாய்..வா நாம போய் உங்க மாமாவையும் பாப்பாவையும் பார்த்து விட்டு “வரலாம்.. ” சொன்னதுமே “ஹை ஆதி மாமா, பூங்குழலி பாப்பா வந்திருக்காங்களா .. “என எகிறிக் குதித்து வெளியே ஓடுகிறான். அவன் பின்னேயே இருவரும் சிரித்தபடி விரட்டிக் கொண்டு வருகிறார்கள்..
அரவிந்துக்கு, ‘ இவனுக்கு எப்படி தெரியும்..நான் இவனிடம் இவர்களைப் பற்றி எதுவுமே சொன்னது கிடையாதே.. என்னவோ பல காலமாய் பழகியவன் மாதிரி உரிமையாய் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.பூங்குழலியின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டை சுற்றி சுற்றி வருகிறானே.. வியப்புடன் மனைவியை கண்களாலேயே கேள்வி கேட்கிறான்.. அவளும் பிறகு சொல்கிறேன் என்று ஜாடை காட்டுகிறாள்.. சரி என விட்டு விடுகிறான் ..
” என்ன ஒரே சத்தமாக இருக்கிறது.. நாங்கள் தூங்கி எழுவதற்குள்ளாகவா பிறந்த நாளை ஆரம்பித்து விட்டீர்கள்.. ” என்ற படியே கயலும் , மாறனும் வெளியே வருகிறார்கள்.. பெரியவர்களை பார்த்ததுமே அம்மா, அப்பா இல்லாத ஏக்கத்தினால் தன் மனைவியையும் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக சென்று அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறார்கள்..பூங்குழலியும் அரவிந்திடம் இருந்து கீழே இறங்கிச் சென்று அவர்களுக்கு நடுவில் புகுந்து காலில் விழுகிறாள்..
கயலும் மாறனும் இதை எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லாதது அவர்கள் முகத்திலேயே தெரிகிறது.. தூங்கி முழித்து எழுந்து வந்ததும் தங்கள் காலில் வந்து குடும்பமாய் விழவும் என்ன செய்வது என்று புரியாமல் அதன் பிறகு மனமார வாழ்த்துகிறார்கள்.
குட்டி தேவதை போல காட்சி அளித்த பாப்பாவை மாறன் தூக்கி வைத்துக் கொள்ளவும் அமிர்தன் வேகமாக ஓடி வந்து இந்த பக்கம் தூக்கிக் கொள்ள சொல்கிறான்.அவரும் சிரித்த படியே சேரில் அமர்ந்து இரு குழந்தைகளையும் தன் தொடைகளில் உட்கார வைத்துக் கொள்கிறார் ..
அவனும் அவர்கள் செய்ததைக் கவனித்து நினவாக தாத்தா பாட்டி காலில் விழுந்து வணங்கி விட்டு , “எனக்கு வழக்கம் போல காசு கொடுங்க..” என்கிறான்..
அமிர்தனிடம் இது மாதிரி நிறைய மாற்றங்கள்.. ‘எப்பொழுதில் இருந்து இந்த மாற்றங்கள் நடந்தது .,என்று அரவிந்த் வேடிக்கை பார்க்கிறான்.. மகனுடைய மாற்றம் அவனுக்கு சந்தோஷத்தை தான் தருகிறது..
பிறந்தநாள் அன்று காலையிலேயே ஆதி வரவும் வீடே களை கட்டத் தொடங்கி விடுகிறது .அன்று முழுதுமே மகிழ்ச்சி தான். பிறந்த நாளை கோலாகலமாய் கொண்டாடி முடித்து இரவு அவர்களை ஹோட்டல் அறைக்கு அனுப்பும் வரையுமே குட்டி பசங்களுக்கு ஏகக் குஷி தான்.. அமிர்தனும், பூங்குழலியும் இப்பொழுது மிகவும் பாசமாகி விடுகிறார்கள்..
பிறந்த குட்டி பையனை பாட்டியும் தாத்தாவும் கீழே இறக்கி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.. அதை பார்க்க பார்க்க ஆதிக்கு ஆசையாகிறது.. கயலிடம் தயங்கிய படியே நிற்கிறான்..
“ என்ன ஆதி என்ன வேண்டும் ஏதோ சொல்ல வந்தீங்க.. தயங்குறீங்களே..”
” நான் உங்க இரண்டு பேரையும் அப்பா அம்மா என்று சொல்லலாமா .. ” அனுமதி கேட்கிறான் ..
“அட நீயும் எங்களுடைய பிள்ளை தான். இதில் உறவு முறை சொல்லவா என்று கேட்கிறாயே… உரிமையாய் கூப்பிட வேண்டியதுதானே.. ” என்றதும் அவரை அழுத படியே கட்டிக் கொள்கிறான்..
அதன் பிறகு தான் கயலுக்கு அவனுடைய கதைகளை அரவிந்த் கூறுகிறான்.
உடனே கயல் மகனை திட்டுகிறார்..”இவன் கிட்ட இதே பழக்கம் தான் ஆதி தம்பி ..தன் மனதில் ஏதோ வைத்திருப்பான்.. அதை வெளியிலே சொல்ல மாட்டான் ..இத்தனை வருடங்களாக ..இருவரும் பழகி இருக்கிறீர்கள் உங்களுடைய பெயர் ஆதி என்பது மட்டும் தான் எனக்கு தெரியும். உங்களுக்கு மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது.. எதையும் வீட்டில் எங்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டான். இவனை என்ன என்று கேளுங்கள் தம்பி..” ஆதிக்கு அவர் சொல்வதைக் கேட்க வியப்பாகிறது..
“ ஒரே குடும்பத்தில் இருக்கிறீர்கள். உங்களிடம் எதையுமே சொல்ல மாட்டானா.. எனக்கெல்லாம் இது மாதிரி பொக்கிஷம் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறேன்.. இவன் என்னவென்றால் கிடைத்த பொக்கிஷத்தை அலட்சியப் படுத்துகிறானா..”
“டேய் அம்மா அப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள் ..அப்படி உன்னால் முடியவில்லை என்றால் சொல் .. நான் எங்கள் ஊருக்கு அழைத்துப் போகிறேன்..”
உடனே கயல், ” வாங்க தம்பி நம்ம அடுத்த பிளைட்லயே உங்க ஊருக்கு போவோம் .. “என்று தயாராகிறார்..
அரவிந்த், “ இதெல்லாம் இந்த கயல் கிழவி கிட்ட சொன்னா தேவையில்லாம பேசும் அண்ணா.. அதனால் தான் நான் எதையுமே பகிர்ந்து கொள்ள மாட்டேன்.. இப்பொழுது என்னவென்றால் உங்களிடம் ஓவராக ஒட்டி உறவாடுகிறது..சின்ன வயதில் வீட்டிற்குள் என் நண்பர்களை அழைத்து வந்தால் என்னை ஓட ஓட அடித்து விரட்டும் தெரியுமா..அதனாலதான் நான் யாருகிட்ட பழகினாலும் இது கிட்ட சொல்றது கிடையாது..”
“ அது சின்ன வயசுலடா இப்ப நீ வளர்ந்துட்ட ..உனக்குன்னு ஒரு அறிவு இருக்காதா ..உன் நண்பனை பற்றி சொல்லு.. நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழியே இருக்கிறது .. ”
“இப்பொழுது ஆதி தம்பி சொன்ன மாதிரியே நீ எங்களை ஒதுக்கிட்ட. அதனால நாங்க கண்டிப்பா அவங்களோட ஊருக்கு போகிறோம். ” என்றதும் ஆதி சிரிக்கிறான்..
” கண்டிப்பா அம்மா நம்ம எல்லாருமே எங்க ஊருக்கு போவோம். பெரிய லீவுல எல்லாரும் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வருவோம்…” கயலுக்கு அதுவும் சரியானதாக தான் தோன்றுகிறது.. உடனே அவர் முகம் வாடுகிறது ..
“இந்த முறை முடியாதே தம்பி..”
“ ஏன் அம்மா .. ”
“என் மருமகள்தான் மாசமாக இருக்கிறாளே ..குழந்தை பெற்றால் எங்கே நாங்கள் கிளம்ப முடியும் .. ”
“சரி அப்பாவையும் அம்மாவை மட்டும் நான் இந்த முறை அழைத்துப் போகிறேன். அடுத்த முறை எல்லாரும் போவோமா .. “என்றதும் அரவிந்தும் உங்கள் இஷ்டப்படி செய்யுங்க அண்ணா என்று அனுமதி கொடுக்கிறான்..
அவன் சரி என்று சொன்னதுமே கயல் பின் வாங்குகிறார்..
தொடரும்.
