வலியை சூடிய காதலே – 32

காற்றின் கைகளில் சிக்கிய

காய்ந்த சருகாய்ப் போன

முடிவில்லா வாழ்க்கைப் பயணத்தில் முற்றுப்புள்ளி தேடியலையுதே என் மனம்…!

வலியை சூடிய காதலே – 32

“இங்க பாருங்க, சக்கிரவர்த்தி குடும்பத்து பொண்ணுக்கும், இந்தா இங்கண நிற்கிற டவுன்கார தம்பிக்கும் ஏற்கனவே நிச்சயம் பண்ணி கல்யாணமும் பேசி முடிவாகிருச்சு, அப்படி இருக்கும் போதே, 

தான் கட்டிக்க இருந்த புள்ளைய இன்னொருத்தன் கூட்டிட்டு போயிட்டா, யாருக்கா இருந்தாலும் கோபம் வர்றது சரிதானுங்களே, அந்த மாதிரி தான் தம்பி கொஞ்சம் கோவப்பட்டு,

அன்னைக்கி இங்க வந்து புள்ளையை கூட்டுட்டு போகப் பாத்திருக்காரு, நம்ம ஊரு பழக்க வழக்கமெல்லாம் தெரியாம தம்பி ஏதோ தப்பு பண்ணிட்டாரு,

அதுக்கு மன்னிப்பும் கேட்குறேன்னு, வந்து நிற்கிறாரு பாத்து கொஞ்சம் மன்னிச்சு அந்தப் புள்ளைய அவரோட அனுப்பி வையுங்க, பரிசம்  போட்டாலே பாதி பொண்டாட்டி,

அது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு அவசியமில்ல, நீங்களே பார்த்து என்ன ஏது பேசி முடிச்சுட்டா எல்லாரும் போய் பொழப்ப பாக்கலாம்,” என்றார் தீரண் கூட்டி வந்த மத்தியஸ்தர்,

“என்னப்பா டாக்டரு இது என்ன திடுதிப்புன்னு வந்து இப்படிச் சொல்லிறாங்க, அப்போ நீ இங்க கூட்டுட்டு வரும்போது அந்தப் புள்ளைக்கு இந்த பையன் பரிசம் போட்டுட்டானா,

அது தெரிஞ்சு கூட்டுட்டு வந்தியா இல்ல தெரியாம கூட்டிட்டு வந்தியா” என்று ஒருவர் கேட்க,

“எப்பா ஏய் எப்படி கூட்டிட்டு வந்திருந்தாலும் தப்பு தப்புதானப்பா, ஊர் வழக்கப்படி அடுத்தவ பரிசம் போட்ட பொண்ணை ஏறெடுத்து பாக்குறதே குத்தந்தான்,

இதுல இங்க கூட்டிட்டு வந்தது மாகா குத்தமப்பா, அதனால அந்தப் பொண்ணை அந்த பையன் கூடவே அனுப்பி வையப்பா” என்று பஞ்சாயத்து பெரியவர் சொல்ல,

தீரண் ஆரியைப் பார்த்து ஏளனமாக சிரித்தான், அதைக் கண்டவனுக்கு உள்ளமெல்லாம் கொதித்தெழுந்தது, நிஷா பயத்தில் நடக்கத்தோடு ஆரியை ஒன்டி நிற்க, 

நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதம் தன் சேலைத் தலைப்பால் முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டு முன்னால் வந்தாள்,

“யார் வீட்டு மருமகளா யாருக்கு தாரை வார்த்து குடுக்கிறது, அவ என் மருமக அவளை யாரும் இங்கண இருந்து அசைக்க முடியாது” என்று பாய்ந்து வந்தாள் ரஞ்சிதம்,

“நீ என்னத்தா அண்ண மவமேல இருக்க பாசத்துல புரிய பேசுற, என்ன இருந்தாலும் நியாயம்னு ஒன்னு இருக்குல்ல” என்று பெரியவர் கேட்க,

“அதே நியாயத்தை தான் நானும் கேக்கேன், பரிசம் போட்டவனுக்கு பாதி பொண்டாட்டின்னா, தாலி கட்டுனவனுக்கு முழு பொண்டாட்டி தான,

அப்படிப் பார்த்தா என் மகன் கட்டுன தாலி என் மருமக கழுத்துல இருக்கும் போது, கட்டுனவனை விட்டுட்டு அதெப்படி கண்டவன் கூட அனுப்ப முடியும்” என்று ஒரு போடு போட்டாளே ரஞ்சிதம்,

மொத்த பஞ்சாயத்தும் ஊர்மக்களும் வாய் மேல் கை வைத்தனர், ஆனால் தீரண் அதற்கு அசரவில்லை இன்னும் அதே ஏளனச் சிரிப்போடு, “என் டார்கெட் இது இல்லடா வேற” என்று நினைத்தவனாக நின்றிருந்தான்,

“என்னத்தா சொல்ற தாலி கட்டியாச்சா, இது எப்போ நடந்துச்சு” என்று கேட்டவாறு வந்த ஜகதாம்பாள், 

நிஷா வின் கழுத்தை தடவி பார்த்து சல்வாரின் காலருக்குள் ஒளிந்திருந்த தாலியை கண்டு பிடித்து வெளியே எடுத்தாள், 

“ஆமாம்டி என் பேரனுக்கும் பேத்திக்கும் கண்ணாலம் முடிஞ்சிருச்சு, இதை ஏன்டி இம்புட்டு நாளும் சொல்லாம மறைச்சீங்க” என்று ஆதங்கத்தோடு கேட்ட பாட்டியிடம்,

“சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூடி வரட்டும்னு தான் பாட்டி சொல்லல” என்று ஆரி சொல்ல, 

“சரி விடு இந்த சேதிய சொல்லி சொந்த பந்தம் அம்புட்டு பேரையும் வரவச்சு, ஊரைக் கூட்டி விருந்து ஆக்கி போடனும்” என்று மகிழ்ந்தாள் பாட்டி,

“என்ன மருமகனே எங்க வீட்டு புள்ளைய எங்ககிட்ட சொல்லாம கொல்லாம கட்டிட்டீக, என்ன பண்றது, மறுபடியும் துரையய்யா குடும்பத்துல தான் சம்பந்தம் பண்ணனும்னு எங்க தலையெழுத்து போல” என்று சிரித்தாள் தங்கமணி,

“அட இவ ஒருத்தி என்னடி நீயி பழைய பஞ்சாங்கத்தைப் பாடுறவ, முதல்ல வீட்டுக்கு கூட்டுட்டு போய் சுத்தி போட்டு அடுத்து நடக்க வேண்டிய சடங்கு சம்பிரதாயத்தை பாக்கலாம்” என்று பாட்டி சொல்ல,

“அதெப்படி பஞ்சாயத்து முடியாம, நீங்க கூட்டிட்டு போக முடியும், இனிமே தான் முக்கியமான விஷயமே பேசனும்” என்ற தீரண், கண்ணைக் காட்ட,

“அட ஆமாப்பா, நாங்க சேதிய முழுசா சொல்லிக்கறேன், டவுன்கார தம்பி கட்டிக்க வேண்டிய புள்ளைய தான் உங்க ஊரு டாக்டரு கட்டிட்டு வந்துட்டாரு, 

அதனால அந்த டாக்டரு கட்டிக்கிற முறையில இருந்து ஒரு பொண்ணைக் கேட்டு தான் நாங்க  வந்தோம்” என்றதும் எதுவும் புரியாமல் குழப்பத்தோடு சுற்றி நின்றவர்கள் சலசலக்க,

குழம்பி நின்ற ஆரியின் பார்வை எதேர்ச்சையாக பூவிதழினி பக்கம் போக, அப்போது தான் தீரணின் திட்டமே அவனுக்கு முழுதாக விளங்கியது,

அதுவரை நிஷாவுக்காக வந்திருக்கிறான் என்று நினைத்து அசால்ட்டாக இருந்த ஆரி, அவன் வந்ததன் நோக்கம் புரிந்ததும் அதிர்ந்து போனான்,

நிஷாவுக்கு பதிலாக பூவிதழினியை பொண்ணு கேட்டு வருவான் என்று ஆரி கனவிலும் நினைக்கவில்லை, அவன் மட்டுமா (நாமும் தானே)

“இது என்னப்பா புது வழக்கா இருக்கு, இதுக்கு முன்னாடி இப்படி ஒரு பிராதை கேள்வி பட்டதே இல்லியேப்பா” என்று ஆளாளுக்கு ஒரு கேள்வியை அடுக்க, தீரணே முன் வந்து பேசலானான்,

“வயசில மூத்தவங்க உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல, சட்டம் படிச்சவங்களை விட மனுஷங்களை படிச்ச உங்கள பெருசா மதிக்கறேன் எனக்கு ஒரு நியாயமான தீர்ப்பை சொல்லுவீங்கன்னு நான் உறுதியா நம்புறேன்” என்று அவன் பவ்வியமாக சொல்ல,

படித்த பகட்டும் பணக்கார தோளணையும் மிகுந்த ஒருவன் தங்களின் முன்னால் பணிந்து நிற்பதைப் பார்த்து பஞ்சாயத்தாரே கொஞ்சம் இறங்கி வந்து பேசினர்,

“உங்க வருத்தம் புரியுதுப்பா, ஆனா நீ என்ன கேக்குறேன்னு தான் சரியா விளங்கல, எதா இருந்தாலும் வெடுக்குனு வெட்டி பேசுப்பா” என்று ஊர் பெரியவர் கேட்க,

“நான் ஒன்னும் அநியாயத்தைக் கேட்கல, உங்க ஊரு நியாயப்படி பார்த்தாலும் நான் கேட்குறது சரிதாங்கய்யா, இந்த ஊரு டாக்டரு, நான் முறைப்படி நிச்சயம் பண்ணி தாலி கட்ட மணமேடை வரைக்கும் போனப்போ,

எனக்கே தெரியாம மயக்க ஊசி போட்டு மயக்கி படுக்க வச்சுட்டு ரூம்ல போட்ட லாக் பண்ணிட்டு, நான் எங்கேயோ ஓடி போயிட்டேன்னு பொய் சொல்லி,

அங்கிருந்த எல்லாரையும் ஏமாத்தி தாலி கட்டிட்டு தட்டி கேட்க வந்தவங்களை அடிச்சுப் போட்டுட்டு என் நிஷாவை கடத்திட்டு வந்துட்டான்” என்று தீரண் சொல்ல, 

அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஆரி மீது கோபமாக திரும்பியது, 

“நான் தாலி செண்டி மெண்ட மதிக்கிறேன், அதான் நடந்ததை மறந்து மன்னிச்சு ஆரி நிஷா இரண்டு பேரும் நல்லா இருக்கட்டுங்கிற முடிவுக்கு வந்துட்டேன், 

ஆனா என் குல வழக்கப்படி ஒரு வீட்டுல பொண்ணை நிச்சயம் பண்ணிட்டு இன்னொரு வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது, அதே வீட்ல தான் இன்னொரு பொண்ணு இருந்தா, 

அவளை தான் கல்யாணம் பண்ணிக்குவோம், அதனால நிஷாவுக்கு தங்கச்சி முறை இருக்கிற பொண்ணை, எனக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கேன்,

நின்னு போன என் கல்யாணத்தை நீங்க எல்லாருமா சேர்ந்து தான் திரும்ப நடத்தி வைக்கனும்” என்று சொல்லி திரும்பி தன் அடியாளைப் பார்க்க,

அவன் பெரிய ஒரு தட்டைக் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி வந்து சபையின் மத்தியில் வைத்தான் தீரண்,

அதில் பூ பழம் வெற்றிலை பாக்கு, ஒரு விலையுயர்ந்த பட்டுப் புடவை, தங்க வைரங்களில் சில நகைகள் கூடவே தங்க தாலியும் இருந்தது,

“அந்த தம்பி சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கு, பாதிகப்பட்ட பைய சொல்ற மாதிரி  சக்கரவர்த்தி ஐயா குடும்பத்துல இருந்து ஒரு பொண்ணை அந்தப் பையனுக்கு தாரை வாக்குறது தான் முறை” என்று பஞ்சாயத்தார் சொல்ல,

“இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், இவனை மாதிரி ஒரு கேவலமானவனுக்கு என் வீட்ல இருந்து பொண்ணு இல்ல ஒருபிடி மண்ணு கூட கிடையாது, 

முதல்ல ஒழுங்கா இங்கிருந்து போகச் சொல்லுங்க, இல்ல இவனை இங்கயே வெட்டிக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போறதுக்கும் தயங்க மாட்டேன் என்று கர்ஜித்தான் ஆரி,

“தடி எடுத்தவனெல்லாம் தண்டகாரன் ஆகட முடியாதுடா, பண்ற குத்தத்த அஞ்சாம பண்ணிட்டு, வாய் இருக்குன்னு பேசிறியோ” என்று கேட்டவாறு அங்கு வந்தார் செல்லத்துரை,

துண்டை உதறி தோளில் போட்டவாறு கூட்டத்தை விட்டு வந்தவர் வரிசையாக கார்கள் வந்து நிற்கவும், என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமென அங்கேயே நின்றிருந்தார்,

அந்த சமயத்தில் சக்கிரவர்த்தி குடும்பத்துக்கு எதிராக ஒருவன் குரல் கொடுக்க, அவனுக்காக வக்காலத்து வாங்க மீண்டும் வந்து களத்தில் நின்றார் செல்லத்துரை,

“என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதீங்க தாத்தா, நிஷாவை கட்டாயப் படுத்தி தான் தாலி கட்டப் பார்த்தான், என் கண்ணெதிர்க்க அவளுக்கு விருப்பமே இல்லாம வலுக்கட்டாயமா கல்யாணம் நடந்தா, 

பார்த்துட்டு எப்படி சும்மா இருக்கிறது, அதான் அவளை காப்பாத்த நான் தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டேன், இதுல எந்த தப்பும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல” என்று தன் பக்க நியாயத்தை வாதிட்டான் ஆரி,

“இவன் சொல்ற மாதிரியே ஒரு பொண்ணுக்கு கட்டாயக் கல்யாணம் நடந்தா, தாலி கட்டித் தான் காப்பாத்துனுமா என்ன, இன்னும் எவ்வளவோ வழி இருக்கு இல்ல,

போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருக்கலாம், இல்லன்னா இவங்களை மாதிரி நாலு பெரியவங்களை வச்சு பேசிருக்கலாம், நீ பண்ற ப்ராடுதனத்தை எல்லாம்,

நல்லா ப்ளான் பண்ணி பண்ணிட்டு, இங்க வந்து என்னமோ நீதான் பெரிய ஹீரோ மாதிரியும் நான் ஏதோ ஹராஸ் பண்ண வந்த கிரிமினல் மாதிரியும் பேசுற,

நீ என்னென்ன பண்ணுனேன்னு வீடியோ ப்ரூப்போட தான், நான் வந்திருக்கேன் மண்டபத்துல நீ பண்ண எல்லாமே எங்கிட்ட இருக்கு” என்று தீரண் சொல்ல,

“நீங்க கோபப்படாம கொஞ்சம் பொறுமையா இருங்க தம்பி, உங்களுக்கு நியாயம் வாங்கி தரவேண்டியது என் பொறுப்பு” என்று செல்லத்துரை சொல்ல

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல அமையும் கூட்டணியைக் கண்ட ஆரிக்கு கட்டுக்கடங்காத கோபம் தான் வந்தது,

“சரிப்பா ஆளாளுக்கு பேசிட்டே இருந்தா அப்படித்தான் இருக்கு, சட்டுபுட்டு பிரச்சனைக்கு முடிவு என்னான்னு பேசி பஞ்சாயத்தை முடிச்சுடுங்கப்பா” என்று பஞ்சாயத்துக்கு வந்தவர்களே சொல்ல,

“இனி முடிவா சொல்ல என்னப்பா இருக்கு, சக்கிரவர்த்தி குடும்பத்துல கடைசியா இருக்கிறது நம்ம ராமநாத சக்கிரவர்த்தியோட மவ இதழு தான்,

அந்த புள்ளையையே இந்த தம்பிக்கு பேசி முடிச்சிடுவோம், என்ன நான் சொல்றது” என்று பஞ்சாயத்தார் சொல்லவும், ஆரிக்கும் அவனது குடும்பத்தாருக்கும் ரத்தம் கொதித்தது,

“என் மவளை ஊர் பேர் தெரியாத ஒருத்தனுக்கு கட்டித்தர முடியாதுய்யா, தீர்ப்ப மாத்தி சொல்லுங்க” என்று ராமநாதன் முன்னே வர,

ஜகதாம்பள் தங்கமணி ரஞ்சிதம் என ஆளாளுக்கு பொங்கி எழுந்து வந்தனர்

“அட என்னப்பா நீ… முறைப்படி பார்த்தா அந்தப் பையன் பாதிக்கப்பட்டு நிக்கிறான், பொண்ணுக்குப் பொண்ணு கொடுக்குறதெல்லாம் காலம் காலமா நடக்குறது தானப்பா,

அதையும் மீறி நீங்க பேசினா, அப்புறம் இந்த ஊரு பஞ்சாயத்துக்கே மரியாதை இல்லாமப் போயிடும், நாளை பின்ன அடுத்த ஊர்காரன் நம்ம பஞ்சாயத்தை மதிச்சு வருவானா” என்று ஒரு பெரியவர்  கேட்க,

“இதழு ஒன்னும்  பொம்மை இல்ல, வர்றவன் போறவன் எல்லாம் வாங்கிட்டு போறதுக்கு, அவ ஒரு மேஜர், அவளோட சம்மதம் இல்லாம இங்க யாருமே அவ கழுத்துல தாலி கட்ட முடியாது,

சட்டம் தெரிஞ்சவன்னு சொன்னான்ல இவன், அப்போ இதுவும் நல்லாத் தெரிஞ்சிருக்கும், பொண்ணு மண்ணும் சாமி மாதிரின்னு சொன்னீங்க இல்ல, இப்ப சொல்லுங்க,  

ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி வச்சு அவ வாழ்க்கையை சீரழிக்கப் போறீங்களா” என்று ஆரி கர்ஜித்தான்,

“டாக்டர் தம்பி சொல்றதும் நியாயந்தான், சரிப்பா அந்த பொண்ணு விருப்பப்பட்டா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும், அதுவும் இப்போ இங்கயே,

இல்ல அந்த புள்ள இதழு இந்த பையனை கட்டிக்க ஒத்துக்கலைன்னா எப்ப டவுன்கார தம்பி நீ எந்த பிரச்சனையும் பண்ணாம இங்கிருந்து போயிடனுமப்பா இதுதான் என் தீர்ப்பு” என்று பஞ்சாயத்தார் சொல்ல, அதற்கு அங்கிருந்த அனைவரும் கட்டுப்பட்டு நின்றனர்,

“ஆத்தா இதழு இப்படி சபைக்கு மத்தியில வந்து நில்லுத்தா” என்று ஊர் பெரியாள் அழைக்க, எதுவும் பேசாமல் வந்து நின்றாள் பூவிதழினி,

“இங்க பாருத்தா இங்க நடந்த எல்லாத்தையும் பாத்துட்டு தான இருந்த, இப்ப கேக்குறேன் முடிவு உன்னோடது தான், நீ எடுக்கிற முடிவுக்கு இங்க யாரும் தடுக்க போறது இல்ல, எதா இருந்தாலும் தைரியமா சொல்லுத்தா,

இங்கண நிற்கிற பையனை கட்டிக்க சம்மதம்னா உன் காலடியில இருக்கிற தட்டை கையில ஏந்து, இல்லன்னா நீ பாட்டுக்கு திரும்பி பாக்காம வீடு போயிச்சேரு அம்புட்டுத் தான்” என்று ஊர் பெரியாள் சொல்லி முடிக்க,

குடும்பத்தார் மற்று மின்றி ஊர்காரர்கள் பஞ்சாயத்துக்காரர்கள் மட்டுமின்றி தீரணே கூட அவள் முடிவிற்காக ஆவலாக இருக்க, ஆரி மட்டும் தான் அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடு நின்றான்,

பூவிதழினி காலடியில் இருந்த தாம்பூலத் தட்டைப் பார்த்தாள், அதில் இருந்த பட்டுப்புடவையும், மின்னும் வைரங்களும், அதைவிட மேலாக அந்தத் தங்கத் தாலியும் அவளைப் பார்த்துப் பரிகசிப்பது போல் இருந்தது,

அடுத்து என்ன நடக்கும்?

பூவிதழினியின் முடிவு என்னவாக இருக்கும்?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page