“கேட்டு ரசித்த பாடல்களில் எல்லாம் உன் நினைவு தான் எனக்கு “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -11
கருப்பு நிற காட்டன் புடவை பார்டரில் குங்குமம், தங்க நிறம் கலந்து மயில் உருவம் அழகாய் வரிசையாய் இருந்தது அதே வடிவத்தில் ஜிமிக்கி, குங்கும நிற வட்ட வடிவ பொட்டு, எப்போதும் இரு பக்கம் மட்டும் முடி எடுத்து விரித்த கூந்தலில் வலம் வருபவள் கூந்தலை மொத்தமாய் கிளிப்புக்குள் அடக்கி இருந்தாள். அடர்ந்த புருவத்திற்கு மத்தியில் இருந்த பொட்டிற்கு மேலே கீற்றாய் குங்குமம், நீண்ட கூர் நாசியில் பதுங்கி இருந்த ஒற்றை வெள்ளைக் கல் மூக்குத்தி வர்மாவிடம் ஒளிந்து விளையாடுவது போல் தோன்றியது.
நேற்று வரை கட்டுக்குள் இருந்த உணர்வுகள் இன்று மொட்டவிழும் பூக்கள் போல வாசம் வீசிட தருணம் பார்த்து கொண்டிருந்தது. அவள் அவன் எதிரே நிற்கிறாள் முகம் மாலை நேரத்து தாமரையை போன்று தரையை நோக்கி குனிந்திருந்தது.
பேக்டரிக்கு சென்று இன்றுடன் 2 வாரங்கள் ஆகி விட்டது இன்னும் 1 வாரம் பேக்டரி தான். 2 வாரத்தில் தினமும் அவன் மாலையில் அவள் வீட்டிற்கு கிளம்பும் நேரம் பார்த்து விட்டு தான் செல்வான். அவள் தான் அவன் முகம் பார்க்க முடியாமல் பசலை நோய் படர்ந்த தலைவி போல் வாடி விட்டாள்.
அவனும் வேலை விஷயமாக கேள்விகள் கேட்க அவளும் அவன் முகம் பார்க்காமலே பதில் சொல்லிக் கொண்டிருந்து வர்மாவின் ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருந்தாள்.
“இன்னும் 1 வீக்ல பைனல் பிராசஸ் முடிஞ்சிடுமா”
“முடிஞ்சிடும் சார் பினிஷிங் ஸ்டேஜ் தான் அடுத்த வாரம் பேக்கிங் ஒர்க் தான் சார்”
அடுத்து அவனிடம் கேள்விகள் வராது போகவே, நிமிர்ந்து பார்க்கலாமா என்று குழப்பத்தில் இருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ வேறு ஒரு கோப்பில் மூழ்கி இருந்தான் இவள் கையெழுத்து போடக் கொடுத்த கோப்பு ஓரமாய் இருந்தது. இவளிடம் வாங்கி விட்டு ஓரமாய் வைத்து விட்டான் போலும்,
அவனின் அழுத்தமான கண்களின் கரு விழிகள் இடமும், வலமும் நகர்ந்து, இரும்பிலான உதடுகள் சிறிதாக அசைந்து சத்தமின்றி படித்துக் கொண்டிருந்தன, அந்த அறையில் இருந்த குளிர் மிதமாக அறை முழுவதும் நிரம்பி இருந்தது. அவனுக்கு மட்டுமே உரித்தான அந்த வாசனையை நுகர்ந்தவள் மனம் தன் கூட்டினை அடைந்த பறவையை போல் நிம்மதி அடைந்தது.
அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் அதை உணர்ந்து கொண்டவன் போல அவளைப் பார்த்தான். அவன் பார்க்க மாட்டான் என்று நினைத்து தான் பார்வையை வீசினால், அவனும் நேர் கொண்ட பார்வையை வீசிட விலகிடத் தோன்றவில்லை இருவரின் பார்வைகளும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வது போல் இருக்க,
இரு வாரங்கள் பார்த்திடாத ஏக்கத்தை தீர்த்துக் கொண்டன, கண்ணுக்கு கீழ கொஞ்சம் கரு வளையம் வந்திருக்கே, என்னைப் பார்க்காமா தவிச்சு தூங்காமா இருந்திருப்பாளோ இது வர்மா,
அவர் முகமே டல்லா இருக்கு சாப்பிட்டு இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் இது ஆரண்யா,
இப்பவும் அந்த அழகு குறையல, என்னை மயக்கவே இந்த புடவை கட்டி இருக்காளோ, வர்மா நீ இதுக்குலாம் மயங்கி அவ கிட்ட நெருங்கிடாத, ஏற்கனவே அவ மயங்கி இருந்தப்பவே உன்னை அவ பக்கம் ஈர்த்துகிட்டவ அதனால கொஞ்சம் இல்லை இல்லை நிறையவே ஜாக்கிரதையா இரு, அவ கண்களை பார்க்காத மனம் எவ்வளவு எச்சரித்தும் அவன் பார்வாய் அவளை விட்டு மாற வில்லை.
இவர் ஏன் இன்னைக்கு இப்டி பார்க்குறாரு, திரும்பிக்கலாமா மனசு சொன்னாலும், அவள் கண்கள் சொல் பேச்சு கேட்கவில்லை, இவ்ளோ அழகா இருந்தா எப்படி பார்க்காம இருக்க முடியும், அவர் முடி எப்படி காத்துல அலை பாயுது அப்டியே அதை தொட்டு பார்க்கணும் ஆசை, கற்பனை செய்து பார்த்தவள் கொஞ்சமாய் சிரித்தும் வைக்க,
அவன் மனம் தான் கொள்ளை போனது போல் ஆனது, இன்னைக்கு என்னவோ பண்ண என்னை தூண்டி விட்டுட்டு இருக்கா, இன்னைக்கு மட்டும் தப்பிச்சிட்டா போதும் இனி இவ கண்களை பார்க்குற தப்பை மட்டும் செஞ்சிடவே கூடாது.
வர்மாவின் அலைபேசி சத்தத்தில் இயல்புக்கு வந்தவர்கள் இருவரின் இதழ்களும் வளைந்து சிரித்துக் கொண்டன,
“ஓகே ஓகே நானே வரேன் ” அலைபேசியில் பேசியவன்,
“ஆரண்யா பைல் எடுங்க சைன் போட்டுட்டு நான் கிளம்பனும், உங்களுக்கு இங்க வேலை முடிஞ்சுடுச்சா “
அவள் கொடுத்த பைலில் கையெழுத்து போட்டுக் கொண்டே கேட்டான்.
“வேலை முடிஞ்சுச்சு சார் நான் பேக்டரிக்கு கிளம்புறேன்” அவள் பைலை வாங்கிக் கொண்டு கிளம்ப,
“நானும் அந்த வழி தான் போகணும், வாங்க நானே பேக்டரில விட்டுட்டு போறேன் ” அவளிடம் வருகிறாயா என்று இவன் கேட்கவே இல்லை,
உள்ளுக்குள் அவனின் மாற்றமும் பேச்சும் செயலும் குத்தாட்டம் போட வைத்தது.
பார்த்து பேசி விட்டு செல்லலாம் என்று நினைத்து தான் வந்தாள், அவனோ இலவச இணைப்பாக சிறிது நேர பயணமும் தந்தால் கசக்குமா என்ன, கரும்பைப் போல் இனிக்கத் தானே செய்யும்.
காரில் அவனுக்குப் பக்கத்தில் அவன், பேக்டரிக்கு செல்ல அரை மணி நேரமாவது ஆகும் அவனுடன் இருப்பது மட்டும் ஏன் தான் இப்படி இருக்கிறதோ, இதுவே போதும் அவனை நினைத்துக்கொண்டே அவன் புறம் திரும்பாமல் வந்தாள்.
“பேக்டரி ஒர்க் உங்களுக்கு செட் ஆகிடுச்சா, அங்க எல்லாம் ஓகே தானே”
“ஓகே தான் சார், அங்க சூப்பர் வைசர் அருண், மேனேஜர் கோகுல், எச் ஆர் தினேஷ் எல்லாருமே ஒர்க் நல்லா பண்றாங்க, கேட்குற டீடெய்லும் கரெக்ட்டா கொடுக்குறாங்க, எந்த பிரச்சனையும் இல்லை” அவள் கொடுத்த ரிப்போர்ட் கிளியராக இருந்தது அதிலே அவன் புரிந்துக் கொண்டான்.
“ஆபீஸ்ல இருக்குறத விட அங்க தான் ரொம்ப பிடிச்சிருக்கு போல ” அவள் வருத்தப்பட்டோ, இவனை காணாத ஏக்கத்தையோ அவளிடம் வார்த்தைகளாக எதிர்பார்த்தானோ என்னவோ, அவள் அங்கு எல்லாம் ஓகே என்றது இவனிடம் இருந்து அவளை விலக்கி வைப்பதாக தோன்றியது போல் உணர்ந்தவனுக்கு அந்த நினைப்பே கோவத்தை தந்தது வார்த்தைகளில்,
“அப்டிலாம் இல்லை சார், அங்க பிரச்சனை எதுவும் இல்லைனு சொன்னேன் அவ்ளோ தான் சார், எனக்கு ஆபீஸ் வரது தான் பிடிச்சி இருக்கு ” கடைசி வார்த்தை சொல்லும் போது அவனைப் பார்த்து சொல்ல, தென்றல் வருடியது போல் உணர்ந்தான்.
மீண்டும் ஒரு அழுத்தமான பார்வை இருவருக்குமே, அதை களைக்கும் விதத்தில் அவனின் அலைபேசி சத்தம், இந்த போனை எவன் கண்டுபிடிச்சது மனுஷனை கொஞ்ச நேரம் பிரீயா இருக்க விடுதா, எரிச்சலுடன் பார்க்க, அம்மா என்று இருக்கவே, அழைப்பை ஏற்றான்.
“எப்போ மா “
“….”
“5 மணிக்கு தானே வந்துடறேன் “
பேசி முடித்ததும் அவனின் முகம் இறுக்கத்தை சூடிக் கொள்ள, இவ்வளவு நேரம் இயல்பா பேசுனதே பெரிய விஷயம் தான் இன்னைக்கு வேற 3 முறை சிரிச்சாரு, இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டவள் பேக்டரி முன் இறங்கிக் கொள்ள, அவனிடம் பேசலாம் என்று நினைத்து திரும்ப அவன் அங்கு இல்லை, வேகமாக செல்லும் காரினைப் பார்த்து விட்டு, அவங்க வீட்ல தான் ஏதோ பிரச்சனை, அதான் கோவமா போறாரு, எனக்காக அவருக்கு இருக்குற பிரச்சனையை கொஞ்சம் சரி பண்ணி விட்டுடு பிள்ளையாராப்பாவிடம் அவசர வேண்டுதலை வைத்தவள் உள்ளே சென்றாள்.
மாலை 4 மணிக்கு மேனேஜர், ஆரண்யாவிடம் சிமெண்ட் சாம்பள்ஸ் சோதனைக்காக லேப்பில் கொடுத்து விட்டு வர சொல்லிட, இவளும் கிளம்பினாள். கொடுத்து விட்டு வெளியே வர, வர்மாவின் காரினைப் பார்த்தவள் ‘இவர் எங்க இங்க நிக்குறாரு ‘ யோசனையுடன் பார்த்துக் கொண்டே வர, வர்மாவிடம் இருந்து அழைப்பு, அவன் சொல்லியதால் காருக்குள் ஏறினாள்.
“காலைல சைன் வாங்குன பைல் இப்போ உன்கிட்ட இருக்கா ” அவள் முகம் பார்க்காமல் தான் கேட்டான்.
“இருக்கு சார் வச்சிருக்கேன்” அவனிடம் பைலை காட்டினாள்.
அதற்க்கு மேல் எதுவும் பேசவில்லை, வேகமாக காரினை இயக்கியவன் பெரிய கட்டிடத்திற்கு முன்பு நிறுத்தினான். அவனிடம் இருந்து பைலை வாங்கிக் கொண்டவன் இங்கேயே இருக்குமாறு சொல்லி விட்டு சென்றான்.
காரினை விட்டு கீழே இறங்கியவள் அங்கே அமர்வதற்கு இருக்கைகள் இருக்க அங்கே அமர்ந்தாள். ‘அவர் முகமே சரி இல்லையே, ஏதோ பிரச்சனை மட்டும் தெரியுது, சொன்னா தானே தெரியும். சொல்லாமலே முகத்தை உர்ருன்னு வச்சிக்கிட்டு இருந்தா எனக்கெப்படி தெரியும். இவர் கூட எப்படி தான்…’ அடுத்த வார்த்தையை சொல்லாமல் யோசித்தவளுக்கு வெட்கம் தான் வந்தது,
இப்போ என்ன நினைச்சி பேசுறேன்னு யோசித்தவள் ‘இன்னைக்கு இவர் கூடவே சுத்திட்டு இருக்க, ஒரு பக்கம் சந்தோஷம் அதே சமயம் இன்னொரு பக்கம் பயமா இருக்கு, இதுலாம் தப்பு, மனசுல ஆசையை வளர்க்காத அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனா உன்னால இதை எல்லாம் தாங்கிக்க முடியுமா சொல்லு ‘
மனதின் கேள்விகள் இன்று சரியாய் கேட்டிட, வர்மா வந்ததும் சொல்லி விட்டு கிளம்ப வேண்டும். அவரே வீட்டில் விடுகிறேன் என்று சொன்னாலும் மறுத்து விட வேண்டும் இதையே மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டே இருந்தாள்.
1 மணி நேரம் கழித்து வர்மா வந்தான் போகும் போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை, அவன் முகம் இயல்பாய் இருந்தது பார்த்த பின்பு தான் ஆரண்யாவிற்கு கொஞ்சம் நிம்மதி,
வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்தவள் கார் ரொம்ப நேரமா போயிட்டே இருக்க மாதிரி இருக்கு கண்ணாடி வழியே வெளியே பார்க்க, இது வீட்டுக்கு போகும் வழி இல்லையே
“இது வீட்டுக்கு போற வழி தான் “
அவன் நிறுத்தி இருந்தது அவன் வீட்டின் முன்பு,
எப்போதும் முதலில் இறங்குபவன் அவளை இறங்கச் சொல்லி விட்டு அவளுடன் சேர்ந்தே வீட்டி ற்குள் நுழைந்தான்.
ஹாலில் அனைவரும் இவனுக்காக காத்திருக்க, நிதிஷா, வர்மாவின் அருகில் வந்து “ஹாய் வர்மா ” என்றாள்
“ஹாய் ” என்றான் உயிரிப்பின்றி
வர்மாவின் அம்மாவும், அப்பாவும் வர்மாவையும், நிதிஷா வையும் அழைத்து சென்று ஒன்றாக நிற்கவைக்க
சொல்லாமலே புரிந்து கொண்டாள் இருவரின் திருமண ஏற்பாடுகள் தொடங்கியதை, அவளுக்கு ஒன்று தான் பிரியவில்லை தன்னை ஏன் இங்கே நிறுத்த வேண்டும். அவன் மனது என்ன கல்லா இல்லை இரும்பா,என்னை ஏன் துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.
நிதிஷாவுக்கு மோதிரம் போட சொல்ல வர்மா ஆரண்யாவைப் பார்த்தான் அதே உயிர் உறிஞ்சும் பார்வையால்…
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
