தூவானம் -30

 

கை அலம்பச் சென்ற இடத்தில் ராஜசேகர் திடீரென அந்தப் பேச்சை எடுக்கவும், ஆகாஷின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. “டாட்… ப்ளீஸ் வேண்டாம்!” என அவன் மெல்லிய குரலில் அலற…

“இன்னும் எவ்வளவு நாள் ஆகாஷ் இந்த விஷயத்தை மறைக்கப் போற? உண்மை என்னைக்கு இருந்தாலும் வெளிய வந்துதானே ஆகணும்?” என ராஜசேகர் அழுத்தமாகக் கேட்க, ஆகாஷ் தன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

“டாட், கொஞ்சம் பொறுமையா இருங்க… எனக்கு பயமா இருக்கு,” என்ற ஆகாஷின் குரலில் ஒரு பிசினஸ் மேக்னட்டின் கம்பீரம் இல்லை, மாறாக, தன் காதலை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் தவிப்பு இருந்தது.

அவனை வியப்பாகப் பார்த்த ராஜசேகர், “ஏண்டா, எவ்வளவு பெரிய ஆளு நீ! எவ்ளோ பெரிய கம்பெனிய நிர்வாகம் பண்ற, உலகமே உன் கையைப் பார்த்து நிக்குது… இதுக்கு போய் இவ்ளோ பயப்படுற?”

“டாட்… அதெல்லாம் எனக்கு சாதாரண விஷயமா தெரியுது. ஆனா இது ஒரு பெண்ணோட மனசு. நான் அகல்யாவை ஏமாத்தல… ஆனா இருந்தாலும், இந்த பெரிய இடத்து அடையாளம் அவளை என்ன செய்யும்னு எனக்குத் தெரியல. எனக்கு அகல்யா வேணும் டாட். இந்த விஷயம் தெரிஞ்சு அவள் என்னை விட்டுப் போயிட்டா நான் என்ன செய்றது? எனக்கு கம்பெனி, அந்தஸ்து எதுவுமே தேவையில்லை… நீங்களும் அம்மாவும் அகல்யாவும் இருந்தா போதும்னு தோணுது, இதோ இந்த வீட்டிலே இந்த சந்தோசமோடு இருக்கலாம் னு தோணுது. என் பழைய வாழ்க்கையைத் தெரிஞ்சு அகல்யா ஒருவேளை என்னை வெறுத்துட்டா என்ன பண்றது?”

அவன் கண்கள் கலங்க … ராஜசேகர் பதிலின்றி நின்றிருந்தார்…. 

 “எனக்கு மட்டுமில்ல டாட்… அகல்யாவுக்கும் நான் தான் எல்லாமே. இப்படி இருக்கிற நேரத்துல, நான் ஒரு பெரிய கோடீஸ்வரன்னு தெரிஞ்சா, என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பெண் இருந்தது தெரிஞ்சா அவளோட இதயம் என்ன பாடுபடும்? அவளுக்கு என்னை விட்டா வேற யாரும் கிடையாது. என் மேல முழு நம்பிக்கையில இருக்கா. அவளுக்கு இருக்குறது அந்த ஆசிரமம் மட்டும்தான். இப்போ உண்மை தெரிஞ்சா, அவளால என்னை வெறுக்கவும் முடியாது, ஆனா ஏத்துக்கவும் முடியாது… அப்படி ஒரு மனநிலையில அவ கஷ்டப்படுவா. அதனாலதான் இந்த விஷயத்தை…” என அவன் இழுக்க…

இடைமறித்த ராஜசேகர், “என்னடா? இந்த விஷயத்தைச் சொல்லாமலே அகல்யாவை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றியா?” என கேட்க, ஆகாஷ் மௌனமாகத் தலையை மட்டும் ஆட்டினான்.

ராஜசேகரின் முகம் இறுகியது. “ஆகாஷ், அது ரொம்பவே தப்பு. ஒரு பெண்ணை நீ இப்படி இருட்டுல வைக்கிறது ஏமாத்துறதுக்குச் சமம். இதுவரைக்கும் நீ அவளை ஏமாத்தல, உன்னைப்பத்தின ஒரு உண்மையை மறைச்சிருக்க… அது காலம் செய்த தப்பு அவ்வளவுதான். ஆனா, இதைச் சொல்லாம கல்யாணம் பண்ணா அது உண்மையிலேயே துரோகம், அது உன்னுடைய முழு தப்பா ஆகிடும். அதனால இந்த விஷயத்தை நீயே சொல்றதுதான் சரி,” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு ராஜசேகர் அங்கிருந்து நகர்ந்தார்.

ஆகாஷ் அங்கே சிலையாக நின்றுவிட்டான். அவனது உலகம் ஒரு நிமிடம் சுழல்வது போல இருந்தது.

வரண்டாவில் நுழைந்த ராஜசேகர் அங்கிருந்த சோபாவில் அமர, பின்னாலே வந்த சிவகாமியும் கணவரின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டு அவர் அருகிலேயே அமர்ந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டு, பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வந்த அகல்யா, அவர்கள் இருவரையும் பார்த்தபடி தயக்கத்துடன் சுவற்றில் ஒட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

அவளது முகத்தில் ஒரு புன்னகை இருந்தாலும், பெரியவர்கள் ஏதோ தீவிரமாகப் பேசுகிறார்கள் என்பதை அவளது உள்ளுணர்வு சொன்னது.

அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்த ராஜசேகர், “அகல்யா… இங்க வந்து எங்க பக்கத்துல உட்காரும்மா,” என அழைக்க, அவளும் மெதுவாக அவர்கள் எதிரில் இருந்த நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்தாள்.

“சாப்பாடு ரொம்ப அருமையா இருந்தது தாயீ. மனசு நிறைஞ்சு போச்சு,” என சிவகாமி அவளது கையைப் பற்றிக்கொள்ள, அகல்யாவின் முகம் மலர்ந்தது. அவளது கண்களில் இன்னும் அந்த ஈரப்பதம் மறையவில்லை. ராஜசேகரையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தவள், தழுதழுத்த குரலில்… 

“ரொம்ப நன்றி ம்மா … வாழ்க்கையில எனக்குன்னு ஒரு சொந்தம் கூட இல்லைன்னு நான் எப்போவும் வருத்தப்பட்டதுண்டு. ஒரு விசேஷம்னா கூட நாலு பேருக்குச் சமைச்சுப் போட ஆள் இல்லாம, அந்த ஆசிரமத்துச் சுவர்களுக்குள்ளயே என் உலகம் முடிஞ்சுடும்னு பயந்திருக்கேன். ஆனா இன்னைக்கு… நீங்க எல்லாரும் என் சமையலைச் சாப்பிட்டுட்டு, என்னை ஒரு மகளா ஏத்துக்கிட்டுப் பேசுறது… இது கனவா நிஜமான்னே எனக்குத் தெரியலப்பா.” என்றாள் 

அவள் சிவகாமியின் கையைப் பற்றிக்கொண்டாள். “இவ்வளவு காலம் அகல்யா என்கிற பேரு எனக்கு ஒரு அடையாளமா இருந்தது இல்லாம ம்மா , வெறும் சுமையாத்தான் இருந்துச்சு. ஆனா இன்னைக்கு நீங்க சூடிவிட்ட இந்த மல்லிகைப் பூவும், நீங்க கூப்பிட்ட அந்த ‘தாயீ’ங்கிற வார்த்தையும் எனக்கு ஒரு புதுப் பிறவியைக் கொடுத்திருக்கு. இனிமே நான் அனாதை இல்லைங்கிற நம்பிக்கையை எனக்குக் கொடுத்துட்டீங்கம்மா.”

பின்பு ஆகாஷைத் திரும்பிப் பார்த்தாள். அவளது பார்வையில் மிக்க நன்றி என்ற மௌனமான மொழி இருந்தது. மீண்டும் பெரியவர்களிடம் திரும்பியவள், “இனிமே உங்க வீட்டுப் பொண்ணா, உங்க ரெண்டு பேரையும் கண்ணு கருத்தாப் பார்த்துப்பேன். எனக்குக் குலம், கோத்திரம் எதுவுமே இல்லாம இருக்கலாம் ம்மா… ஆனா, உங்க மேல காட்டுற அன்புக்கு மட்டும் எப்போவும் குறைவிருக்காதுப்பா,” எனச் சொல்லிவிட்டு அவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள்.

ராஜசேகர் அவளது தலையில் கைவைத்து ஆசீர்வதிக்க, சிவகாமி அவளைத் தூக்கி அணைத்துக்கொண்டார். “நீ எங்க வீட்டு மகாலட்சுமிம்மா… இனிமே உனக்குக் குறையே இருக்காது,” என சிவகாமி சொல்ல, அவள் கண் கலங்கி நின்றாள்

ஆகாஷ் ஒரு ஓரமாக நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தாலும், உள்ளுக்குள் ஒரு பெரிய நிம்மதி. தன் காதலிக்கு ஒரு குடும்பத்தை வாங்கிக் கொடுத்துவிட்ட பெருமிதம் அவன் முகத்தில் தெரிந்தது.

அந்த தருணத்தில், சிவகாமி ஆகாஷைக் கண்ணசைவில் அருகே வரும்படி அழைக்க, அவனும் ஒருவிதத் தவிப்புடன் வந்து, அகல்யாவின் அருகாமையிலேயே தரையில் அமர்ந்தான்.

இருவரையும் அருகருகே ஒரு அழகான ஓவியம் போலப் பார்த்த ராஜசேகரும் சிவகாமியின் கண்களில் அத்தனை வாஞ்சை. சிவகாமி சட்டெனத் தன் கைகளை வளைத்து, இருவருக்கும் திருஷ்டி கழிப்பது போல நெட்டி முறித்தாள். “கண்ணு படப்போகுதுடா… ரெண்டு பேரும் அச்சு அசல் அந்த சொக்கநாதரும் மீனாட்சியும் போல ஜோடிப் பொருத்தமா ரொம்பவே அழகா இருக்கீங்க!” என அவர் சொல்ல, அகல்யா இன்னும் நெகிழ்ந்து போனாள்.

“சீக்கிரம் மதுரைக்கு வந்திடு அகல்யா… அங்க நீ தான் அந்த மதுரையையே ஆளப்போற மகராசி!” எனச் சிவகாமி சொன்ன வார்த்தைகள், அகல்யாவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. ‘மதுரையை ஆளப்போற’ என்று அவர் சொன்னது, அந்த வீட்டின் அதிகாரத்தைச் சொன்னதாக அவள் நினைத்தாள். தனக்கு என்று ஒரு சொந்தம், ஒரு குடும்பம் கிடைத்துவிட்டது என்ற மட்டற்ற மகிழ்ச்சியில் அவளது இதயம் சிறகடித்துப் பறந்தது.

காதலின் மிகுதியால், அவளுக்குத் தெரியாமல் ஆகாஷ் அவளது கையை மென்மையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டான். அந்தத் தீண்டலில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தவள், தன் வாழ்நாள் முழுவதும் இந்த அணைப்பிலேயே இருந்துவிடலாம் என எண்ணினாள்.

ஆனால், அதே நேரம் ராஜசேகரின் கண்கள் ஆகாஷை ஊடுருவின. ‘உண்மையை இப்போதே சொல்லிவிடு, இதுதான் சரியான நேரம்’ என அவர் கண்களாலேயே உத்தரவிட, ஆகாஷோ ‘வேண்டாம் டாட்… ப்ளீஸ்’ என்பது போலப் பதற்றத்துடன் தலையாட்டிக் கொண்டிருந்தான்.

விதி ஒரு விசித்திரமான விளையாட்டை அங்கே அரங்கேற்றியது. அகல்யாவின் கையைப் பற்றிக் கொண்டிருந்த ஆகாஷின் அதே கையில் அவனது மொபைல் போனும் சிக்கியிருந்தது. திடீரென அந்தப் போன் பலமாக அதிர்ந்தது. அந்த அதிர்வில், இருவர் கைகளுக்கும் இடையில் நசுங்கிய மொபைலின் திரை, எதேச்சையாகத் தொடுதலால் அந்த அழைப்பும் ஆன் ஆகி, கீழே நழுவி விழுந்தது.

விழுந்த வேகத்தில் அது ஸ்பீக்கரில் விழுந்துவிட, மறுமுனையில் இருந்து வந்த குரல் அந்தச் சிறிய ஹாலையே அதிர வைத்தது.

 

“சார், நான் மும்பைல இருந்து உங்க லாயர் பேசுறேன். ஒரு அர்ஜெண்டான விஷயம், ஆகாஷா? லைன்ல இருக்காரா?” என்று ஒரு நிதானமான அதேசமயம் அவசரமான குரல் கேட்டது.

அதிர்ச்சியில் உறைந்துபோன ஆகாஷ், அகல்யாவை பார்த்துவிட்டு போனை எடுத்தவன், பதற்றத்தில் ஸ்பீக்கரை ஆஃப் செய்ய மறந்ததுதான் அவன் செய்த தவறு.

“ஆமாம்… சொல்லுங்க சார்,” என்று இயந்திரத்தனமாகச் சொல்ல,

“மிஸ்டர் ஆகாஷ், ஒரு குட் நியூஸ். மூணு வருஷமா இழுத்துட்டு இருந்த அந்த கேஸ் இன்னைக்கு முடிவுக்கு வந்துடுச்சு. உங்களுக்கும் சுபாஷினிக்கும் இருந்த அந்தப் பிரச்சனை இன்னையோட க்ளோஸ். நீங்க நேர்ல வரலைனாலும் பரவாயில்லைன்னு ஜட்ஜ்மென்ட் கொடுத்துட்டாங்க,” மறுபக்கம் வக்கீல் சொல்ல…

ஒரு கணம் திகைத்துப்போன ஆகாஷ், ‘யார் அது? சுபாஷினியா?’ என்று அவன் வார்த்தைகள் தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, அகல்யா அவன் கைகளை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டாள். அவள் கண்களில் ‘யார் அந்த சுபாஷினி?’ என்ற கேள்விக்குறி இருந்தது.

“சார்… என்ன சொல்றீங்க? விவரமா சொல்லுங்க,” என்று ஆகாஷ் பதற்றமாகக் கேட்க, மறுமுனையில் வக்கீல் சொன்ன அந்த அடுத்த வார்த்தைகள் அந்த வீட்டின் அமைதியையே குலைத்தது.

“ஆகாஷ் சார், உங்க வைஃப் சுபாஷினிக்கும் உங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. அவங்க அப்பா போட்ட அந்த Marital Dispute கேஸை கோர்ட் இன்னைக்கு தள்ளுபடி செஞ்சு, உங்களுக்கு ஃபேவரா டிகிரி பாஸ் பண்ணிட்டாங்க. இனி அவங்களால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. யூ ஆர் ஃப்ரீ நவ்!” என்றார் 

அந்த வார்த்தை ஒரு கூர்மையான ஈட்டி போல அகல்யாவின் இதயத்தைத் துளைத்தது. ஆகாஷ் அதிர்ச்சியில் அப்படியே கல்லாய் நின்றான். ராஜசேகரும் சிவகாமியும் இருக்கையை விட்டுப் பதறி எழுந்தனர்.

‘மனைவியா? இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதா?’ என அகல்யாவின் உலகம் சுக்குநூறாக உடைந்தது. ஆகாஷின் பிடியிலிருந்து அவள் கரங்கள் ஒரு காய்ந்த சருகைப் போல நழுவின. அவள் உடல் நடுங்கத் தொடங்கியது.

இத்தனை நேரமாக என்னைத் தேவதை என்று சொல்லி அணைத்த கைகள், சட்டப்படி இன்னொரு பெண்ணுக்குச் சொந்தமானவையா? ஒரு விவாகரத்து கேஸ் நடப்பைக் கூட என்னிடம் மறைத்துவிட்டாரே! என அவள் மனம் கதறியது.

“சார், சுபாஷினி சைடுல இருந்து இனிமே அவங்க அப்பா அப்பீல் போக முடியாது. எல்லா ஃபார்மாலிட்டிஸும் முடிஞ்சது,” என்று வக்கீல் போனை வைக்க, அங்கே மயான அமைதி நிலவியது.

அகல்யாவுக்குத் தொண்டை அடைத்தது. மூச்சு விடக்கூட மறந்தவள் போல நின்றவளது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டியது. “எல்லாமே பொய்யா? என்னிடம் காட்டிய இந்த அன்பும்… மறைக்கப்பட்ட இந்த உண்மையும் ஒரு நாடகமா?”

வாய்விட்டு அழக்கூடத் திராணியின்றி, தன் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு, விம்மல்களைக் கட்டுப்படுத்தியபடி வாசலை நோக்கி ஓடினாள்.

“அகல்யா! நில்லு… நான் சொல்றதைக் கேளு!” என ஆகாஷ் கத்தியபடி அவளைத் துரத்த முயன்றான். ஆனால், அவனது கடந்த காலத்தின் அந்த ஒரு கறுப்புப் பக்கம், அவனது நிகழ்கால ஒளியை அப்படியே விழுங்கிவிட்டது போல அவன் கால்கள் நகர மறுத்தன.

“அகல்யா! நில்லு… நான் சொல்றதைக் கேளு!” என ஆகாஷ் கத்தியபடி அவளைத் துரத்த முயன்றான். ஆனால், அவனது கால்கள் தரையோடு தாரூற்றி ஒட்டவைக்கப்பயது போல கனத்தன. ஒரு சில நொடிகள் அவனது மூளை வேலை செய்ய மறுத்தது. வக்கீல் சொன்ன அந்த டிக்ரி என்ற வார்த்தை, அவனுக்கு விடுதலையைத் தந்திருக்க வேண்டும், ஆனால் அதுவே இன்று அவனது வாழ்வின் ஆதாரத்தையே அசைத்துப் பார்க்கும் என்று அவன் நினைக்கவில்லை.

அகல்யா வாசலை நோக்கி ஓடிய வேகத்தில், அவளது கண்ணீர் தரையில் சிதறியது. ‘யார் இந்த சுபாஷினி? எதற்காக என்னிடம் மறைத்தார்? இத்தனை அன்பாகப் பழகிய மனிதருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய மர்மமா?’ என்ற கேள்விகள் அவளைக் கத்தியால் குத்துவது போல இருந்தன.

ஆகாஷின் நிலைமை பரிதாபமாக இருந்தது. “அகல்யா… ப்ளீஸ்… ஒரு நிமிஷம் நில்லு!” என்று அவன் குரல் உடைந்த நிலையில் கத்தினான்.

ஆனால் அகல்யா திரும்பவில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், தான் ஒரு அனாதை என்பது மட்டுமே. அந்த நிலையில் தன்னைத் தேடி வந்த இந்த அன்பை ஆகாஷ் ஒரு பாதுகாப்பான புகலிடமாகத் தருவார் என்று நம்பினாள். ஆனால், அந்தப் புகலிடத்தின் அஸ்திவாரமே ஒரு திருமண பந்தத்தின் மிச்சங்களில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் வீட்டை விட்டு வெளியேறி இருளில் மறைந்த அந்த நொடி, ஆகாஷ் அப்படியே சோபாவில் சரிந்தான்.

 

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page