பாகம் – 35
அதற்கு மேல் அங்கே மித்ரா, “ஏங்க இப்படி செய்றீங்க … வயித்துல குழந்தையை வைத்துக் கொண்டு நடு இரவில் என்னை இப்படி எழுப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே.. இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா.. எனக்கு தூக்கம் கெட்டால் உடம்பும் கெட்டுப் போகும் என்று தெரியாதா.. இதுவும் இல்லாமல் வளர்ந்த குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி நிறை குடமாகவா ஊற்றிக் கொண்டு வருவது ..அவன் எழுந்து என்னம்மா நாற்றம் அடிக்கிறது என்று கேட்டால் நான் என்ன என்று சொல்வேன் .எனக்கு ஒரே தலை வேதனையாக இருக்கிறது போங்க.. இதோட இந்த பழக்கம் முடியட்டும் .. ” என்றதும் அவன் போதையிலேயே விவரமாய் சிரிக்கிறான்..
“இல்லைடி அடுத்த வருடம் தம்பி பிறந்த நாளின் போது நம்ம அங்க போக வேண்டும் .. ”
“ஏங்க போதை தலைக்கேறி போச்சா ..ஏன் இப்படி உளறுகிறீர்கள்… ”
” நான் நல்ல தெளிவா தான்டி இருக்கேன். பாப்பா பிறந்த நாளையும் இவன் பிறந்த நாளையும் ஒன்றாக நம்ம எப்படி ஜாலியா கொண்டாடினோம் ..
அவங்க எப்படி மகள் பிறந்த நாளை விட்டுக் கொடுத்து இங்கே வந்து கொண்டாடினார்கள்..அதே மாதிரி அடுத்த வருஷம் அங்கு இவனுக்கும் பூங்குழலிக்கும் ஒன்றாக கொண்டாட வேண்டும் என்று அண்ணன் என்னிடம் கேட்டுக் கொண்டாங்க… என்னால மறுக்க முடியல .உனக்கும் குழந்தை பிறந்து குழந்தைக்கு ஆறு மாதம் ஆகி விடாது.. இதோ ஆறு மாதக் குழந்தை ஆதவனை தூக்கிக் கொண்டு வந்திருக்காங்க .அதே மாதிரி நாமும் தூக்கிக் கொண்டு போவோமா..”
அவன் போதையில் உளறுகிறான் என்று “சரி சரி அடுத்த வருடம் தானே அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது அடுத்த அமைதியாக தூங்குங்கள் .. “என்று அவன் அருகில் படுத்து அவரை தட்டிக் கொடுக்கிறாள்.. அவனும் மனைவிக்காக தூங்குவது போல் நடித்து அவள் தூங்கிய பிறகு கொட்ட கொட்ட விழித்துக் கிடக்கிறான்..
அண்ணன் தம்பியும் நவீனை வைத்துக் கொண்டு அப்படி என்னதான் பேசினார்களோ.. அதே நிலைமை தான் அங்கு ஆதிக்கும் ..அவள் பேசி முடித்து விட்டு இழுத்துப் போர்த்தி தூங்க ஆரம்பித்தவள் தான்.. அவனுக்கும் சொட்டு கூட தூக்கம் வரவில்லை.. எப்பொழுதுடா விடியும் இங்கிருந்து போகலாம் என்று இருக்கிறது..இருவருமே தங்கள் குழந்தையின் மீது பரிவுடன் கையை போட்ட படியே படுத்து கிடக்கிறார்கள்..
மறுநாள் அரவிந்த் எழுவதற்குள்ளேயே ஆதியின் குடும்பம் கிளம்பி தயாராக இருந்தார்கள்.. எழுந்து வந்ததுமே அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்..
“ என்ன அண்ணா அதற்குள் கிளம்பி விட்டீர்கள்.. காலை உணவை சாப்பிட்டு விட்டு மெதுவாக போகலாம் தானே. ”
” இல்லை இவள் விடிகாலையிலேயே புறப்பட்டு விடுவோம் என்று என் மாமியார் வீட்டில் சொல்லி விட்டாள்.. அங்கே காலை உணவு தயார் செய்து ஆசையாய் காத்து இருப்பார்கள் ..நாங்கள் எப்படியும் இப்பொழுது போனாலும் போக பத்து மணியாவது ஆகி விடும் .. போய் அங்கு தான் சாப்பிட வேண்டும். நாங்கள் கிளம்பட்டுமா..” என்றதும் பூங்குழலி அவனிடம் ஏறி கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுக்கிறாள்..அவனும் அவள் நெற்றியில் ஆசையாய் முத்தம் ஒன்றை கொடுக்கிறான்..
அவனுக்கு குழந்தைக்கு கொடுப்பதற்கு என்று எதுவுமே வாங்கி வைக்க வில்லையே என வருத்தமாகிறது .. “இந்த பிள்ளைக்கு நான் ஒரு டிரஸ் கூட வாங்கி கொடுக்கலை அண்ணா..” என்று வருத்தமாக சொல்கிறான் ..
“அதனால் என்ன நேற்றுதான் பிறந்த நாளைக் கோலாகலமாய் கொண்டாடி விட்டோமே.. அவளுக்கு நீங்கள் கிஃடாய் கொடுத்தது என்றே நிறைய பொருள்கள் சேர்ந்து கிடக்கிறது .. அதை வேற தனியாக லக்கேஜ் எடுக்க வேண்டி இருக்கிறது .. ”
“நம்ம தான் இனிமேல் வருசா வருசம் சந்தித்துக் கொள்ள போகிறோமே..” என்றதும் இந்த செய்தியை மித்ரா ஏற்கனவே கேட்டதால் அப்படி என்றால் அவன் அரவிந்த உண்மைதான் சொல்லி இருக்கிறானோ என்று அவன் முகத்தை பார்க்கிறாள் ..
பத்மாவுக்கு எதுவும் புரியவில்லை. அவள்தான் கோபத்துடன் உடனே தூங்கி விட்டாளே.. “ஆமாம் பத்மா ஒரு வருட பிறந்தநாள் இங்கு .அடுத்த வருட பிறந்த நாள் நம்மூரில். நாங்கள் இரண்டு பேரும் நேற்று இரவு தான் ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம்.. ”
இது பத்மாவுக்கும் பிடித்து தான் இருந்தது .. “ஆமாம் நம்ம வீட்டுக்கு யார் தான் விருந்தாளி வராங்க.. இப்படி வந்தால் தான் உண்டு ..எல்லோரும் வந்து ஜாலியாக இருந்தது பாருங்க இந்த பிறந்தநாள் ..பாப்பாவுக்கே ரொம்ப பிடித்து விட்டது ..அடுத்த வருடம் கண்டிப்பாக நம்ம வீட்டில் தான்.. என்ன மித்ரா உனக்கு ஓகே தானே.. ” என்றதும் அவளும் சரி என தலையாட்டிக் கொள்கிறாள் ..
அதற்குள் கயல் வேகமாக வந்தவர், “என்ன ஆதி அம்மா எழுவதற்குள் சொல்லாமலே போய் விடுவாய் போலயே.. இன்னும் இரண்டு நாள் இருந்து விட்டுப் போனால் என்ன.. ” சங்கடமாய் கேட்கிறார் ..
“உங்களிடம் சொல்லாமல் போவேனா அம்மா.. நீங்கள் எழுந்து வருவதற்காக தான் காத்துக் கிடக்கிறோம்.. ”
“என்னமோ பிறந்த நாளை அங்கே கொண்டாடப் போவதாக காதில் செய்தி வந்ததே அப்படியா..என்னையும் என் புருஷனையும் இங்கே விட்டுட்டு போயிடாதீங்க.. நாங்களும் வருவோம் .. ”
“ அம்மா பிறந்த நாளுக்கு முன்பே உங்களை ஒரு முறை அழைத்துப் போக எண்ணி இருக்கிறேன் .. அங்கே ஆசை தீர இருந்து விட்டு நீங்கள் எப்பொழுது திரும்ப வரவேண்டும் என்று சொல்லுங்கள்..அப்பொழுது நான் ரிட்டர்ன் டிக்கெட் போட்டு அனுப்பி விடுகிறேன் .. ”
கயல் ஆதி சொன்னதும் மலர்ச்சி ஆனவர் உடனே பாவமாக அரவிந்தின் முகத்தை பார்க்கிறார் ..
“நான் என்ன சொல்ல போகிறேன்.. நீ தான் இவனை விட்டு போக மாட்டேன் என்று சீன் போட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு போக ஆசை என்றால் போயிட்டு வாயேன் கிழவி .. பிறகு ஏன் என் முகத்தை பார்க்கிற. அப்படியே பிள்ளை பேச்சை தட்டாமல் கேட்கும் அம்மா மாதிரி தான் .. ”
” கேட்டுக்கிட்டியா ஆதி.. அம்மா பேச்சை தான் பிள்ளை கேட்க வேண்டும் ..இங்கே பிள்ளை அம்மா கேட்க வேண்டுமாம்.. நான் எப்பொழுதுமே உன் பேச்சைக் கேட்க மாட்டேன்டா போடா அதி தம்பி நீங்க எப்பொழுது டிக்கெட் போடுகிறீர்களோ சொல்லுங்க .இவன் எங்களை பிளேட்டில் ஏத்தி விடுவான்.. அது மட்டும் தான் இவனுடைய வேலை.. ” என்கிறார் ..
ஒரு வழியாய் பிரிய மனம் இல்லாமல் எல்லோரும் அவர்களை வழி அனுப்பி விடுகிறார்கள்.அமிர்தனுக்கு தான் ஒரே அழுகை ..
“என்னை விட்டுட்டு போகாதீங்க மாமா,நானும் வருகிறேன்..” என்று . அவன் அழவுமே புறப்பட்டு போனவர்கள் அப்படியே நின்று விடுகிறார்கள்..ஆதி அரவிந்தன் முகத்தை கூர்ந்து கவனிக்கிறான்..அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று பார்க்கிறானோ என்னமோ. மித்ராவால் தூக்கி வைத்து சமாதானம் செய்ய முடியாததால் அரவிந்த் அந்த வேலையை கையில் எடுத்துக் கொள்கிறான் ..
“அவர்கள் போனதும் நம்ம மூணு பேரும் கார்ல ஒரு ரவுண்டு அடிச்சுட்டு அப்படியே மதியம் வரை ஊர் சுத்திட்டு ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வருவோமா..”
அவனுக்கும் இந்த ஒப்பந்தம் பிடித்து விடுகிறது . “சரி இது நல்லா இருக்கு.. அப்படின்னா அவங்க ஊருக்கு போகட்டும் .. நான் அழ மாட்டேன்..” என்று வழி அனுப்பி விடுகிறான் ..
ஆதி போகும் போது ” நான் இன்னும் ஒரு வாரம் மாமியார் வீட்டில் இருப்பேன் .. ஊருக்கு திரும்பி வரும் போது உங்களை பார்த்து விட்டு போகிறேன் .. ” இதைக் கேட்டதும் அரவிந்துக்கு கொஞ்சம் மனம் சந்தோசம் ஆகிறது …
“ சரி அண்ணா உங்களை பிரிவதற்கு எனக்கும் மனமே தான் இல்லை.. ஆனாலும் நாம் என்ன செய்வது ..நம்ம அவங்க அவங்க வேலையை பார்க்க வேண்டாமா .. பிறந்தநாள் ஒப்பந்தம் செய்தது கூட நன்றாக இருக்கிறது.. நம்ம வருசா வருஷம் எல்லாரும் சந்தித்துக் கொள்ளலாம் அல்லவா .. ”
“ஆமாம் பூங்குழலியை கல்யாணம் செய்து கொடுக்கும் வரை.. ” திடீரென்று ஆதியை இந்த வார்த்தைகளை கூறுகிறான்..
” ஏன் அண்ணா இப்படி சொல்கிறீர்கள்.. அதற்குப் பிறகும் நம் மாப்பிள்ளையையும் வைத்துக் கொண்டு கொண்டாடுவோம். இதில் என்ன வந்தது … உங்க நல்ல மனசுக்கு பாப்பாவுக்கு நல்ல மாப்பிள்ளை தான் கிடைப்பாங்க பாருங்க.. நம்ம என்ன சொல்றோமோ அதை கேட்பாங்க பாருங்க. ”
அரவிந்தன் நம் மாப்பிள்ளை என்று சொன்னதுமே ஆதிக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிறது .. “நீ சொல்ற வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் .. என் மகள் சந்தோஷமா இருந்தால் எனக்கு அது போதும்டா..” என்ற படியே பை சொல்லி விட்டு கிளம்புகிறார்கள்..
சொன்னது மாதிரியே வீட்டிற்கு வந்ததும் அம்மாவையும் அப்பாவையும் சேர்ந்து கிளம்ப சொல்கிறான்..
” எங்கடா புறப்பட சொல்ற.. ” கயல் தான் கேட்கிறார் ..
” தம்பி கிட்ட சொல்லிட்டேன் காலை சாப்பாடு மதிய சாப்பாடு எல்லாம் வெளியில் தான் என்று. நாங்கள் மூன்று பேரும் போகிறோம்.. இஷ்டம் இருந்தால் நீயும் அப்பாவும் வாங்க.. அப்படி வர முடியவில்லை என்றால் வீட்டில் சாப்பாடு செய்து சாப்பிட்டுக் கொள் கிழவி..” அம்மாவை மிரட்டுகிறான் ..
“ஆங் நீங்க மட்டும் வெளியில் போய் நல்ல சாப்பாடு சாப்பிடுவீங்களாம்.. நாங்க மட்டும் வீட்ல கெட்டுப் போன சாப்பாடையா சாப்பிடறது .நானும் தான் கிளம்புவேன். சீக்கிரமா வாங்க அவங்களுக்கு முன்ன நம்ம போய் புறப்படுவோம் .. “என்று மாறனை பிடித்து இழுத்துக் கொண்டு கயல் உள்ளே செல்கிறார்..
மித்ராவுக்கு தன் அக்காவையும் அக்கா குழந்தையும் பிரிந்தது போல் தோன்றுகிறது..
” பத்மா அக்கா ரொம்ப நன்றாக பழகினாங்க.. என்னங்க எனக்கு என்னமோ அவங்களை எல்லாம் விட்டு பிரிந்தது ரொம்ப வருத்தமா இருக்கு.. நீங்க அதனால தான் எப்பொழுது பார்த்தாலும் ஆதி அண்ணா என்று வாய் ஓயாமல் பேசிக் கொண்டு இருப்பீர்களா. எனக்கு கூட அப்பொழுதெல்லாம் கொஞ்சம் கோபம் வரும் ..இப்பொழுது உங்களை பழி வாங்குவதற்கு நான் எனது பத்மா அக்காவை பற்றி பேச போகிறேன்..” அரவிந்த் சிரிக்கிறான்..
நீ இப்படி பிரியமா சொல்வ என்றுநான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லடி.. உன்னிடம் இது பெரிய மாற்றம் தான்.அது ஏதோ ஒரு போன ஜென்மத்து பந்தம் போல இருக்குடி .. அதனாலதான் இந்த அளவுக்கு நம்ம எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தரா நெருங்கி விட்டோம்.. நேற்று திடீரென ஆதி அண்ணா இந்த வார்த்தைகள் சொன்னாங்க..”
என்னது அது?
தொடரும்..
