தூவானம் -32

 

அகல்யாவின் கால்கள் அவளை அறியாமலே அந்தப் பரந்து விரிந்த மெரினா கடற்கரைக்குக் கொண்டு சேர்த்தன. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான மணல் திட்டில் அவள் அமர்ந்தாள்.

சூரியன் மெல்ல மறைந்து அந்திச் சாயும் நேரம். வானம் ரத்தச் சிவப்பாய் மாறிக்கொண்டிருக்க, கடலின் அலைகள் ஒவ்வொன்றும் கரையை நோக்கி வந்து சீறிப் பாய்ந்து பின்வாங்குவது, அகல்யாவின் மனதுக்குள் எழும் எண்ண அலைகளைப் போலவே இருந்தது.

அகல்யா மணலில் தன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தாள். அவளது பார்வையில் உயிர் இல்லை, வெறும் வெறுமை மட்டுமே மிஞ்சியிருந்தது.

“ஏன் ஆகாஷ்? ஏன் இந்த ஏமாற்று வேலை?” அவளது உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

கடல் காற்று பலமாக வீசி அவளது கலைந்த கூந்தலை மேலும் கலைத்தது. அந்த உப்புக் காற்றின் ஈரம் அவளது கண்ணீரோடு கலந்தது. தூரத்தில் கரையைத் தொட்டுத் திரும்பும் அலைகளைப் பார்த்துவள் .. “பார்த்தியா கடலே… உன் அலைகளுக்குத் தெரியும் என் வலி.

ஒவ்வொரு முறையும் கரையைத் தொடும்போது நீ எவ்வளவு ஆர்ப்பரிக்கிறாயோ, அதே போலத்தான் அவனைக் கண்ட போதெல்லாம் என் இதயம் துடித்தது. ஆனா, நீ கரையைத் தொட்டுவிட்டு அடுத்த நொடியே பின்வாங்குவது போல, அவன் காட்டிய அன்பும் ஒரு மாயையாகிவிட்டதே!”

அவளது நினைவுகள் பின்னோக்கிச் செல்ல. அலுவலகத்தில் அவன் செய்த சின்னச் சின்ன குறும்புகள், மழையில் நனைந்தபடி அவன் கொடுத்த அந்த முத்தம், “உன்னை எப்போதும் கண்ணீர் விட வைக்க மாட்டேன்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள்… இப்போது ஒவ்வொன்றும் முள்ளாய் மாறி அவள் இதயத்தைக் குத்தின.

“பணம்… அந்தஸ்து… இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லையே ஆகாஷ்! நீ ஒரு சாதாரண PAவா இருந்தபோது உன்னை நேசித்தது உன்னுடைய அந்தப் பதவிக்காக இல்லையே! உன் கண்கள் காட்டிய அந்த நேர்மைக்காகத்தானே? ஆனால், அந்த நேர்மையே ஒரு வேஷம் ன்னு தெரிந்த அப்பறம், நான் எதை நம்பி வாழ்வது?”

அவள் மணலில் தன் விரல்களால் ஆகாஷ் என்ற பெயரை எழுதிவிட்டு, அடுத்த நொடியே ஆவேசமாக அதை அழித்தாள்.

“திருமணம் ஆகிவிட்டது என்பதை மறைத்தது ஒரு துரோகம் என்றால், நீ ஒரு கோடீஸ்வரன் என்பதை மறைத்தது அதைவிடப் பெரிய அவமானம். என்னை ஒரு ஏமாளியாவா நினைச்சிட்டியா? உன் விளையாட்டில் நான் ஒரு பகடைக்காயா இருந்தனோ ?”

நேரம் கடந்தது.…

நிலவு மெல்ல எட்டிப் பார்த்தது. அப்போது அவளுக்குப் பின்னால் ஒரு நிழல் தெரிந்தது. திடுக்கிட்டுத் திரும்பியவள், அங்கே ஆகாஷ் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டாள். ஆனால், அவன் அருகில் வரவில்லை. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இங்கேயும் வந்துட்டீங்களா ஆகாஷ்? தயவுசெய்து போங்க. உங்க முகத்தைப் பார்க்கக்கூட எனக்குப் பிடிக்கல,” என்ற அகல்யா கண்ணீருடன் கைகளை மார்போடு கட்டிக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“நான் உன்னை ஏமாத்தினேன்னு நினைக்கிறியா? இல்ல உன்னை அடையணும்னு ஆசைப்பட்டேன்னு நினைக்கிறியா அகல்யா?” என்ற ஆகாஷின் கேள்வியில் இருந்த அந்த ஆதங்கம் அவளை இன்னும் ரணப்படுத்த…

சட்டென அவனின் பக்கம் திரும்பியவள், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல், இதயத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டு வந்த வலியை வார்த்தைகளாகக் கொட்ட தொடங்கினாள்…

“ஏமாத்துறதுக்கும் அடையணும்னு ஆசைப்படுறதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை ஆகாஷ்! ரெண்டுமே சுயநலம் தான்!” என்றவவளது குரல் அழுகையினால் கரகரக்க …

“நான் யாருன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் ? அம்மா, அப்பான்னு ஒரு உறவு கூட இல்லாம, ஒரு அனாதை இல்லத்துல மத்தவங்க போடுற பழைய துணியையும் மிச்ச உணவையும் சாப்பிட்டு வளர்ந்தவ நான். எனக்கெல்லாம் இந்த உலகத்துல ஒருத்தர் மேல நம்பிக்கை வர்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனா, உங்ககிட்ட நான் தோத்துப்போனேன் ஆகாஷ். நீங்க காமிச்ச அந்தப் பொய்யான எளிமை, உங்க அப்பா அம்மான்னு நீங்க சொன்ன அந்த நாடகம்… எல்லாத்தையும் ஒரு பைத்தியக்காரி மாதிரி நம்புனேன்.”

“இப்போ வந்து கல்யாணம் ஆன விஷயத்தை கடந்த காலம்னு சிம்பிளா சொல்லிடுவிங்க. அந்த வக்கீல் சொன்ன உங்க மனைவி உங்களை நேசிச்சாளோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனா அவ இடத்துல இப்போ நான் நிக்கிறேன்.

ஒரு அனாதைப் பொண்ணு கிடைச்சா அவகிட்ட எதை வேணும்னாலும் மறைக்கலாம், எப்படி வேணும்னாலும் விளையாடலாம்னு நினைச்சீங்களா? உங்களுக்கு வேணும்னா இது உயிரான காதல்னு பேர் வச்சுக்கலாம்… ஆனா எனக்கு இது பச்சையான துரோகம்!”

“உங்ககிட்ட பணம் இருக்கு, அதிகாரம் இருக்கு, ஆனா என்கிட்ட என்ன இருக்கு? ஒருமுறை உடைஞ்சு போனா ஒட்ட வைக்க முடியாத இந்த மனசு மட்டும்தான் இருக்கு. அனாதையா இருக்கிறது கூட எனக்குப் பெரிய வலியாத் தெரியல… ஆனா இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்தைச் சுமந்துகிட்டு அனாதையா நிக்கிறது தான் நரகமா இருக்கு.”

“கல்யாணம் ஆகி மனைவியை இழந்தவனோ இல்ல பிரிஞ்சவனோ யாரா வேணா இருங்க… அதை என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல? நான் என்ன பணத்துக்காகவா உங்களைக் காதலிச்சேன்? உங்க நேர்மையை நம்பித் தானே என் வாழ்க்கையையே உங்ககிட்ட ஒப்படைச்சேன்! இப்போ என் நம்பிக்கையைச் சுக்குநூறா உடைச்சுட்டு… அடையணும்னு ஆசைப்பட்டேன்னு எந்த தைரியத்துல சொல்றீங்க? நீங்க என்னைக் காதலிக்கல பாஸ்… உங்களோட பணக்காரத் திமிருக்கு ஒரு அப்பாவிப் பொண்ணு கிடைச்சா எப்படி இருக்கும்னு வேடிக்கை பார்த்திருக்கீங்க… அவ்வளவுதான்!” என  மூச்சிரைக்க கோபத்தில் கத்தியவள், அப்படியே தளர்ந்து போய் அந்த கடற்மண்ணில் அப்படியே மண்டியிட்டு விழுந்து அழுதாள்.

அகல்யாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல ஆகாஷின் இதயத்தைத் துளைத்தன. அவளது கண்ணீரில் கரைந்த கோபம், ஒரு எரிமலையைப் போல வெடித்துக் சிதற அவளது ஒவ்வொரு வார்த்தையும் ஆகாஷின் நெஞ்சில் சவுக்கடியாக விழுந்தது.

ஆகாஷ் அவளைத் தொடக் கையை நீட்டினான், ஆனால் அவளது அந்தச் சொல்லொணாத் துயரம் அவனை ஒரு அடி பின்வாங்கச் செய்யவும், “அகல் …” என அவன் பேச முயற்சிதான்…

“போதும் இதற்கு மேல் எதுவும் பேசாதீங்க ப்ளீஸ் … இனி பேச ஒரு வார்த்தை கூட மிச்சமில்லை. எனக்கு நீங்களும் வேண்டாம், இந்த வேலையும் வேண்டாம், இந்த இடமும் வேண்டாம்! நிழல் நிஜமாகிடும்னு கனவு கண்டேன், ஆனா நிஜமே ஒரு நிழல் நாடகம்னு இப்பதான் புரியுது. நான் ஆசைப்பட்டது உங்களை மட்டும்தான்… உங்களைச் சுத்தி இருந்த அந்தப் பொய்களை இல்லை. நீங்க ஏழையா இருந்தாலும் சரி, இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரனா இருந்தாலும் சரி, எனக்கு அது ஒரு பொருட்டாவே இருந்திருக்காது. ஆனா நீங்க ஒரு நடிகனா இருந்துட்டீங்களே… என் உணர்ச்சிகளோட விளையாடிட்டீங்களே!” 

என்றவள் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதபடி, அங்கிருந்து நகர திரும்பியவளைத் தடுக்க ஆகாஷ் நீட்டிய கைகள் அந்தரத்தில் நின்றுவிட்டது.

அவளது வைராக்கியமான நடை, அவள் மீண்டும் திரும்பி வரமாட்டாள் என்பதை அவனுக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்தியது. ஆனால் ஆகாஷ் மெதுவான, கனத்த குரலில்…

“அகல்யா, இப்ப உன்னைத் தொந்தரவு செய்ய நான் வரல. நீ இங்கே தனியா, இவ்வளவு வேதனையோடு உக்காந்துட்டு இருக்கிறது பார்க்க என் மனசு கேட்கல. நான் யார், என் கடந்தகாலம் என்னனு நீ தெரிஞ்சிக்க வேண்டிய நேரம் இது. சுருக்கமா சொல்லிடுறேன்… என் முதல் திருமணம் நான் ஆசைப்பட்டு நடந்ததல்ல, அது ஒரு விபத்து.”

“உனக்குத் தெரியுமா அகல்யா? நான் தேடியது ஒரு பெண்ணை அல்ல, நம் தமிழ் மண்ணின் கலாச்சாரம் மாறாத ஒரு தேவதையை. அப்படி ஒருத்தியாகத்தான் அவளை நான் பார்த்தேன். ஆனா, அந்தத் தாலி ஏறின நிமிஷத்துல இருந்து என் வாழ்க்கை நரகமா மாறிடுச்சு. திருமணமான அன்று இரவு நான் கண்டது ஒரு பெண்ணையே அல்ல… ஒரு பிசாசை! ஆமா, அவளுக்கு நான் ஒரு மனிதனா தெரியல, வெறும் பண இயந்திரமாகத்தான் தெரிஞ்சேன்.

அவளுடன் நான் ஒரு நாள் கூட இல்வாழ்க்கை வாழல அகல்யா. அவளுக்கு என் அன்பு தேவையில்லை, என் அந்தஸ்தும் என் பணமும் மட்டும்தான் தேவைப்பட்டது. அதில் கிடைக்கும் போதைக்காகவே என்னை ஏமாற்றித் திருமணம் செய்துகிட்டா, அந்தத் திருமணத்திற்கு அப்பறம் என் வாழ்க்கையே ஒரு நரகமா ஆகி போயிடுச்சி.

வெளியே பெரிய பிசினஸ்மேன்னு உலகம் என்னைப் பார்த்தாலும், வீட்டுக்குள் நான் ஒவ்வொரு நிமிஷமும் செத்துக்கிட்டு தான் இருந்தேன், என்னைத் தரம் தாழ்ந்து அசிங்கப்படுத்தினா. அதுகூடப் பரவாயில்லை…

ஆனா என் தெய்வங்களான இருக்க என் அம்மா அப்பாவைக் கூட அவ விட்டுவைக்கல. அவர்களையும் இழிவுபடுத்தி, கேவலமா பேசி, ச்ச … என் குடும்பத்தையே சிதைக்கப் பார்த்தா.

அவங்க நிம்மதிக்காக அவளைத் தனியா கூட்டிட்டுப் போய் ஒரு வீட்ல வச்சிருந்தேன். அவளுக்கு தேவையான எல்லா ஆடம்பரமும் செய்து கொடுத்தேன், ஆனாலும் எந்நேரமும் போதை, நண்பர்கள் குடி கூத்து இப்படியே இருந்தா … சுத்தமாப் பிடிக்காமதான் அவ கூடக் காலத்தைத் தள்ளுனேன். 

ஆனா, அவளுடைய அந்தப் பேராசையும், பிடிவாத குணமுமே அவளுக்கு வினையானது. யாருடைய பேச்சையும் கேட்காம, தன் இஷ்டத்திற்கு ஆடியவள், இறுதியில் தன்னைத் தானே அழிச்சிக்கிட்டா. அவ இப்போ உயிரோடு இல்லை அகல்யா… அவள் இறந்துட்டா…

அந்த நரகத்துல இருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாள் ஆச்சு அகல்யா.”

“மீண்டும் ஒரு பெண்ணை நேசிக்க எனக்குப் பயமாக இருந்தது. என் வாழ்க்கையில் வசந்தமே வராது என்று நினைச்சேன்… ஆனால் நீ…

உன் அந்தத் துறுதுறுப்பு, கள்ளங்கபாடமில்லாத உன் வெள்ளந்தியான பேச்சு, எல்லாமே என்னை மாற்றியது. ஒரு மிகப்பெரிய தொழிலதிபனா இல்லாமல், ஒரு சாதாரண மனிதனா உன் அன்பைப் பெற ஆசைப்பட்டேன். அந்த ஆகாஷா தான் நான் உன் கூட பழகினேன்.

நான் உன்னை ஏமாத்தணும்னு எதையும் பண்ணல. எனக்கு அந்த எண்ணமே கிடையாது. ஆனா, முதன்முதல்ல உன்னோட பிறந்தநாள் அன்னைக்கு உன்னைச் சந்திச்ச அந்த நிமிஷம் இருக்கே… அப்போ நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் என் காதுக்குள்ளேயும் மனசுக்குள்ளேயும் ஓடிட்டே தான் இருக்கு. நீ பேசின அந்த இயல்பும், அன்பும்தான் என்னை இந்த அளவுக்குப் பைத்தியமா மாத்துச்சு. நான் வாழுற ஒவ்வொரு நொடியும் உனக்காகவே தான் இருக்கணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.”

“உன்கிட்ட பொய் சொன்னாலும், அந்த ஏமாற்றம் எங்கேயோ என்னை உள்ளுக்குள்ள கொன்னுட்டு தான் இருந்தது. ‘உன்னை ஏமாத்திட்டு இருக்கேன்… உன்கிட்ட பொய் சொல்லிட்டு இருக்கேன்’னு ஒவ்வொரு நிமிஷமும் எனக்குள்ள ஏற்பட்ட வலி… அதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது அகல்யா. ஒரு நிமிஷம் கூட எனக்குள்ள நிம்மதி இல்லை. உன்கிட்ட ஒருநாள் எல்லா உண்மையையும் சொல்லிடணும்னு நான் துடிச்சுட்டே இருந்தேன். ஆனா உன்னை இழந்துடுவேனோன்ற பயம் என் வாய்ல பூட்டைப் போட்டுடுச்சு.”

“உன்னை முதன் முதல்ல பார்த்துப் பழகின அந்த ஆரம்ப நாட்கள்ல, உன்னைக் காதலிக்கணும்னோ இல்ல உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னோ எந்தத் திட்டமும் என்கிட்ட இல்ல. ஆனா, உன்கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒரு புது உலகத்துல நான் தனித்துவமா, ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். அந்தச் சந்தோஷம்தான் என்னை இப்படி எல்லாம் செய்ய வச்சது,”

“இந்தச் சாம்ராஜ்யம், இந்தப் பணம், இந்த அதிகாரம் எதுவுமே உன்னோட அன்புக்கு முன்னாடி பெருசு இல்லைன்னு காட்டத்தான் நான் இந்த நாடகத்தை ஆடினேன். ஆனா, நீ என்னைப் பார்க்கிற அந்தப் பார்வையில இப்போ வெறுப்பு மட்டும் தான் இருக்கு. உனக்காகத் தான் ஆகாஷ் என்ற இந்த CEO பதவியைத் தூக்கிப் போட்டுட்டு, ஒரு சாதாரண PAவா உன்கூடப் பழகினேன். கோயம்புத்தூருக்கு உன்கூட வந்தது, அங்க உன்கூடச் சிரிச்சுப் பேசினது… இதெல்லாம் உன்னை ஏமாத்த நான் பண்ணின நாடகம் கிடையாது அகல்யா. உன் கூட வாழ ஆசைப்பட்டேன், உன் கூடவே இருக்க விரும்பினேன். இதுல என்னோட சந்தோஷம் மட்டும் இல்ல, உன்னோட சந்தோஷமும் கலந்திருக்குன்னு நான் நம்புறேன். கொஞ்சம் யோசிச்சுப் பாரு… நீயும் எவ்வளவு சந்தோஷமா என்கிட்ட பழகின? காதலோ, காமமோ இல்லாம ஒரு அழகான நட்பு நமக்குள்ள ஒரு புரிதலைக் கொடுத்தது இல்லையா?”

உன்னிடம் உண்மையைச் சொல்லப் பலமுறை முயன்றேன் அகல்யா. ஆனால், நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு தெரிந்தா உன்னை இழந்துவிடுவேனோ என்ற பயம் ஒவ்வொரு முறையும் என் நாவைக் கட்டியது. இதை நீ துரோகம்னு நினைச்சா நான் மறுக்க மாட்டேன். ஆனால் இது திட்டமிட்ட துரோகம் இல்லை அகல்யா… உன்னை இழக்க விரும்பாத ஒரு கோழையின் காதல், அவ்வளவுதான்!”

என்ற ஆகாஷ் மெல்லப் பின்வாங்கிச் சென்றுவிட்டான்.

அவன் சென்ற பிறகும் அகல்யா அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள்.

கடல் இப்போது அமைதியாக இருந்தது. அலைகளின் சத்தம் ஒரு தாலாட்டைப் போல மென்மையாக ஒலித்தது. அகல்யாவுக்குள் இருந்த கோபம் மெல்ல வடிந்து, ஒருவித பாரமான அமைதி குடிபுகுந்தது.

“அவன் சொன்னது உண்மையா? இல்லை இதுவும் அடுத்த நாடகமா? என் இதயம் அவனை மன்னிக்கத் துடிக்கிறது, ஆனால் என் அறிவு அவனைத் துரோகி என்கிறது. இந்தக் கடலைப் போல என் மனமும் ஒரு மர்மமாகிவிட்டதே!”

மணலில் இருந்து எழுந்த அகல்யா, தன் உடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டாள். அவள் கண்களில் இப்போது கண்ணீர் இல்லை, ஆனால் ஒரு தெளிவான முடிவுக்கான தேடல் இருந்தது. அவள் எங்கே போகிறாள் என்று அவளுக்கே தெரியாது, ஆனால் அவள் நடை இப்போது தள்ளாடவில்லை.

அந்தப் பரந்த கடற்கரையில், அவளது கால் தடங்கள் மணலில் பதிந்து கொண்டே சென்றன… காலப்போக்கில் அந்தத் தடங்களை அலைகள் அழித்துவிடலாம், ஆனால் அவள் மனதில் ஏற்பட்ட வடுக்கள் ஆறுமா என்பது காலத்தின் கையில் தான் இருந்தது.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page