அத்தியாயம் – 6

      பெரிய வீடே விசேஷ வேலையில் மூழ்கியிருக்க, கதிர் மட்டும் ஏதோ ஒரு வேலையாக வெளியே சென்றிருப்பதை மலர் கவனித்தாள். அவளது மனதிற்குள்  நீண்ட நாளாக ஒரு ஆசை. தன்னுடைய கதிர் மாமாவின் அறைக்குள் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும்.  

   அவர் இன்னும் பழைய கதிராகவே இருக்கிறாரா? இல்லை எல்லாம் மறந்துவிட்டாரா? என்ற யோசனையுடன் தன் பாதங்களை ​மெதுவாக எடுத்து வைத்தபடி அவன் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்ததுமே அந்த அறையில் கதிரின் வாசனை அவளை ஒரு நிலைக்கு அழைத்து சென்றது. பாதி சுவற்றை மறைத்தபடி மாட்ட பட்டிருந்தது அவனது பெரிய  புகைப்படம்.

    மலர் மெதுவாக அவனது பீரோவின் அருகில் சென்றவள் அது பூட்டப்படாமல் லேசாகத் திறந்திருக்கவும். ஹப்பாடி என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

     ​உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சட்டைகளை ஆசையாக தடவியவள். கண்களில் அந்த பழைய மரப்பெட்டி தென்பட்டது. ஆர்வம் தாங்காமல் அதை ர. வெளியே எடுத்துத் திறந்தவள். அடுத்த நொடி அப்படியே உறைந்து தான் போனாள்.

​உள்ளே இருந்தது அவளது பொருட்கள் தான் காதலை சொல்லி அவள் கொடுத்த
​அந்த கிரீட்டிங் கார்ட், 3 வருஷத்துக்கு முன்பு அவள் தன் கைப்பட வரைந்து கதிரின் பிறந்தநாளுக்குக் கொடுத்த ஓவியம். அதன் ஓரங்கள் கொஞ்சம் நைந்து போயிருந்தாலும், கதிர் அதைத் தேய்த்துத் தேய்த்துப் பார்த்த தடம் அதில் தெரிந்தது.

   அவளின் ​ஒற்றைக் கால் கொலுசு. ஒருமுறை மழையில் விளையாடும்போது மலர் தொலைத்ததாக நினைத்த அவளது அந்த வெள்ளி கொலுசு. அங்கே ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
​அவள் கொடுத்த ஒரு காய்ந்த ரோஜா பூ . அது இப்போதும் ஒரு புத்தகத்தின் நடுவே பத்திரமாக இருந்தது.

      ​மலரின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டத் தொடங்கியது. ‘யாரும் பார்க்கக் கூடாதுன்னு இதை இவ்வளவு பத்திரமா ஒளிச்சு வச்சிருக்கீங்களா மாமா? ஆனா என்கிட்ட  வேற ஒருத்தன் கூடப் போக சொல்றீங்க. ஆனா உள்ளுக்குள்ள என்னையே சுமந்துட்டு இருக்கீங்க’ என்று விம்மினாள்.

      ​அந்தப் பொக்கிஷங்களைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு மலர் அழ, அப்போதுதான் அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
​திடுக்கிட்டுத் திரும்பிய மலர், வாசலில் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்த கதிரைப் பார்த்தாள். கதிரின் முகம் அப்படியே வெளுத்துப் போனது. தன் ரகசியம் பிடிபட்டுவிட்டதை அவனால் நம்ப முடியவில்லை.

​”ஏட்டி… இங்க நீ என்ன பண்றவ? ”  என்று கதிர் இடி முழக்கமாய் கத்த, ஆனால் அவனது குரலில் கோபத்தை விட, ஒரு குற்ற உணர்ச்சியும் தவிப்பும் அதிகமாக இருந்தது தான் உண்மை.

மலர் அந்தப் பெட்டியில் இருந்த தன் பழைய கொலுசையும், காய்ந்த ரோஜாவையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நிற்க, கதிர் அறையினுள் நுழைந்தான். தன் உயிரே அந்தப் பெட்டிக்குள் இருப்பது போல அவன் அதை மறைத்து வைத்திருந்தான். இப்போது அது மலரின் கைகளில் இருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு ஆத்திரம், தவிப்பு என எல்லாம் ஒன்றாக வந்தது.

​”ஏட்டி இங்க என்ன பண்ணிட்டு இருக்க? உன்னை யாரு என் ரூமுக்கு வரச் சொன்னது? அத முதல்ல கீழே வை ” கதிர் இடி முழக்கமாய் கத்தியபடி வேகமாக அவள் அருகில் வந்து மலரின் கையிலிருந்த அந்த மரப்பெட்டியைப் பிடுங்கியவன் கண்கள் சிவந்து போயிருந்தன.

   ​மலரோ கண்கள் கலங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 
   “மாமா இதெல்லாம் எதுக்கு இங்க இருக்கு? நான் தொலைஞ்சு போச்சுன்னு நினைச்ச என்னோட கொலுசு, நான் வேண்டாம்னு சொல்லி என் மூஞ்சில நீங்க தூக்கி அடிச்ச இந்த  கீரீட்டிங் கார்ட். இதெல்லாம் எதுக்காக இவ்வளவு பத்திரமா வச்சிருக்கீங்க? சொல்லுங்க மாமா…”

   ​கதிர் பெட்டியை அலமாரிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு திரும்ப, அவன் கை விரல்கள் லேசாக நடுங்குவதை மலர் கவனித்து விட்டாள். ஆனால் அவன் திரும்பும்போது முகத்தில் ஒரு வித இறுக்கத்தைக் கொண்டு வந்திருந்தான்.

​”இதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லை. ஏதோ பழைய குப்பை எடுத்துப் போட மனசு இல்லாம அங்கேயே கிடந்துச்சு. அதுக்காக நீ இஷ்டத்துக்குப் கற்பனை பண்ணிக்காத,” என்று அவன் வார்த்தைகளால் அவளைக் காயப்படுத்த முயல . அவள் நம்புவாளா? என்ன?.

    ​”குப்பையா? குப்பையை யாரும் பட்டுத் துணில சுத்தி வைக்க மாட்டாங்க மாமா. உங்க மனசுல எனக்காக ஒரு இடம் இருக்குல்ல? அப்புறம் ஏன் இப்படி நடிக்கிறீங்க?” என்று மலர் விடாமல் கேட்க,

    ​கதிர் அவளுக்கு மிக அருகில் வந்து, அவள் கண்களை நேராகப் பார்த்தான். அவன் காதலைச் சொல்லவில்லை, ஆனால் அவன் பார்வையில் ஒரு எச்சரிக்கை இருந்தது.

​”மலரு… இது கல்யாண வீடு . உன் அக்கா சந்தோஷமா மேடையில நிக்கணும். அந்த ஒரு விஷயத்துக்காகத் தான் நான் இங்க இருக்கேன். தேவையில்லாத பழைய நினைவுகளைத் தோண்டி எடுத்து எனக்கும் உனக்கும் கஷ்டத்தைக் கொடுத்துக்காத. இது வெறும் ஞாபகப் பொருள் அவ்வளவுதான். இரு இப்பவே இதைக் கொண்டு போய் கிணத்துல வீசிட்டு வரேன்!” என்று அவன் அந்தப் பெட்டியை மீண்டும் எடுக்கப் போக,

     விரக்தியாக அவனை பார்த்தவள்.​”வேணாம் மாமா விட்ருங்க. உங்களுக்கு இது குப்பையா இருக்கலாம். என்ன பொருத்தவரை  உங்க மனசுலயும் என் மேல ஆசை இருக்குன்னு புரிய வச்ச பொக்கிஷம் அது. இந்த ஒரு விஷயம் போதும் என் வாழ்க்கை முழுசும் அதை நினைச்சிட்டே வாழ்ந்துடுவேன். நீங்க உங்க காதல இனி சொல்லவே வேணாம் மாமா… உங்க மௌனமே எனக்குப் பதில் சொல்லிருச்சு,” என்று மலர் அழுதுகொண்டே அந்த அறையை விட்டு ஓடினாள்.

    அவள் செல்வதை பார்த்து ​கதிர் அப்படியே சிலையாக சமைந்து நின்றான். அவன் காதலைச் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. அவன் ஒரு பெருமூச்சை விட்டபடி இடது பக்கமாக இருந்த தன் நெஞ்சைத் தடவிக்கொண்டவனுக்கு வலி அதிகமாகி கொண்டே சென்றது.

    ​வாசலில் பந்தல் கால்கள் நடப்படும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க, உள்ளே கூடத்தில் பெரியசாமியும், நடேசனும் வெற்றிலை பாக்குடன் அமர்ந்திருந்தனர்.
​”என்ன பெரியசாமி, கல்யாணம்னு வந்துட்டா இவ்வளவு வேலை இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா என் மருமவன் இருக்கிற தைரியத்துல நான் நிம்மதியா இருக்கேன்,” என்று நடேசன் பெருமையாக கூற….

​    பெரியசாமியும் சிரித்துக்கொண்டே, “ஆமா நடேசா என் புள்ளைன்னு சொல்லல. எம்புள்ள கதிர் ரொம்ப விவரமானவன். சுடரு ரொம்ப அமைதியான புள்ள, இவுக ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா வீடே விசேஷமா இருக்கும் யா . 
     கதிருக்கிட்ட சுடர கல்யாணம் பண்ணிகிறியாடான்னு நான் கேட்டதும் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாம ‘சரிப்பா, நீங்க சொல்றதுதான் என் முடிவு’ன்னு ஒத்துக்கிட்டானே!

      ​மலரின் அம்மா மீனாட்சி அங்கே வந்து, “கதிருக்கு குடும்பத்து மேல அம்புட்டுப் பாசம். சுடரைக் கைப்பிடிச்சு, இந்த ரெண்டு குடும்பத்தையும் ஒன்னா வச்சுக்கணும்னு அவன் நினைக்கிறான் பாருங்க அந்த மனசு யாருக்கும் வராது. ஆனா பாருங்க  அண்ணே, மலரு சென்னைல இருந்து வந்த ஒரு வாரத்துலேயே நம்ம கதிரு அவளுக்கும் சேர்த்தும் பாதுகாப்பா நிக்கிறான்.

    அவளையும் தங்கச்சி மாதிரி எவ்வளவு பொறுப்பா பார்த்துக்கிடுறான்!” என்றாள்.

​”ஆமா மீனாட்சி, கதிர் அப்படித்தான். மலர் படிச்ச பொண்ணு, அவளுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளையை நானே தேடிப் பிடிப்பேன்னு என்கிட்டயும் சொன்னான். ‘மலர் வாழ்க்கை நல்லா அமையணும்ப்பா, அதுதான் என் முதல் வேலை’ன்னும் சொன்னான்.அப்பவே அவன் பக்குவம் எனக்குப் புரிஞ்சுது,” என்றார் பெரியசாமி.

​அவர்கள் பேசுவது எதையும் அறியாமல், கதிர் தன் இதயத்தையே மலருக்குக் கொடுத்துவிட்டு, வெளியே மட்டும் ஒரு பொறுப்பான மாமனாக, மருமகனாக நடித்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்கள் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. கதிர் ,மலர் மேல் வைத்திருக்கும் காதலைக் கடுகளவும் அந்தப் பெரியவர்களுக்கு தெரியவில்லை.

    ஹப்பாடி! சென்னைல இருக்கிற அந்த ஏசி ரூமை விட, இந்த வயல்வெளி காத்து எவ்வளவு சுகமா இருக்கு!” என்று ஆனந்தி கைகளை விரித்து அந்தப் பச்சைப்பசேல் என்ற வயல்வெளியைச் ரசித்துக் கொண்டே ஓடினாள்.

       ​மலரும், ஹரிஷும் அவளுக்குப் பின்னால் மெதுவாக நடந்து வந்தார்கள். வரப்பு ஓரங்களில் தேங்கி நின்ற தண்ணீரில் தவளைகள் குதிக்கும் சத்தம் கேட்டது. மலருக்கு இது பழகிய இடம்தான் என்றாலும், இன்று அவளது மனநிலை அந்தத் தண்ணீரைப் போலக் கலங்கி இருந்தது.

   ​”மலர், இங்க பாரு இந்த நெற்கதிர்கள் எல்லாம் பார்க்க எவ்வளவு அழகா இருக்கு இதைப் பார்க்கும்போதுதான் உங்க ஊரோட அருமை தெரியுது,” என்று ஹரிஷ் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டே ஒரு புகைப்படத்தை எடுக்க முயன்றான்.

​”ஆமா ஹரிஷ்… இங்க இருக்குற எல்லாமே பார்க்க அழகாத்தான் இருக்கும். ஆனா அந்தப் பசுமைக்குள்ள எவ்வளவு ரகசியங்கள் புதைஞ்சிருக்குன்னு நமக்கும் தெரியாது. இந்த நிலத்துக்கும் தெரியாது,” என்று மலர் ஏதோ ஒரு ஆழ்ந்த அர்த்தத்தில் சொன்னாள்.

    ​அப்போது, தூரத்தில் ஒரு கிணற்றடியில் மோட்டார் பம்ப் செட் சத்தம் கேட்டது. அங்கே வெள்ளை வேட்டியைக் கட்டிக் கொண்டு, தலையில் ஒரு துண்டைக் கட்டியபடி கதிர் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு மண்வெட்டி இருந்தது. வேலை செய்ததில் அவனது மேனியெல்லாம் வியர்வைத் துளிகள் மின்னியது.
​தூரத்திலிருந்தே அவர்கள் மூவரையும் கதிர் கவனித்துவிட்டான்.

    அவன் பார்வை மலர் மீதே நிலைத்து நின்றது.
​”ஏய் மலரு! அங்க பாரு உன் மாமா. மாப்ள வெயில்ல அலையாம வீட்டு ரெஸ்ட் எடுக்கலாம் தான”

  ” என்ன நம்மள பார்த்து அங்கேயே நின்னுட்டு இருக்காரு!” என்று ஆனந்தி கிண்டலாக கூறவும்.

   ​கதிர் அவர்களை நோக்கி மெதுவாக அடி எடுத்து  வைத்தான். அவனது அந்த முரட்டுத்தனமான நடையில் ஒரு தனி கம்பீரம் இருந்தது.

     ​”என்ன… சிட்டி பசங்க எல்லாம் வயல் பக்கம் வந்துருக்கிங்க? வரப்புல பார்த்து நடங்க, காலை வழுக்கிப் போட்டுறப் போகுது,” என்று கதிர் ஹரிஷைப் பார்த்துச் சொன்னானே தவிர, மலரின் முகத்தை நேராகப் பார்க்கவில்லை.

​”இல்லைங்க கதிர், சும்மா சுத்திப் பார்க்கலாம்னு வந்தோம். இந்த இடம் ரொம்ப அமைதியா இருக்கு,” என்று ஹரிஷ் சொல்ல,

​கதிர் ஒரு நக்கலான சிரிப்போடு, “அமைதிதான் ஆனா இந்த மண்ணுல வேர் விடணும்னா. அதுக்கு ரொம்ப பொறுமை வேணும். மேலோட்டமா பார்க்குறவங்களுக்கு இது வெறும் அழகு, ஆனா இதுக்காக உழைக்கிறவனுக்குத் தான் இதோட வலி தெரியும்,” என்றான்.

​அவன் பேசியது நிலத்தைப் பற்றியா அல்லது அவனது மறைக்கப்பட்ட காதலைப் பற்றியா? என்பது மலருக்கு மட்டுமே புரிந்தது. அவன் கண்கள் ஒரு நொடி மலரின் கண்களோடு மோதியது. அந்தக் கண்களில் இருந்த அந்தத் தவிப்பு, ‘நீ ஏன் டி இவன் கூட சுத்திட்டு இருக்க?’ என்று கேட்பது போல இருந்தது.

– தொடரும்

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
முத்த மழை
394 7 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page