அத்தியாயம் 32
வாசல் பக்கம் யாரோ கதவை தட்டுகிறார்களே என்று இருவரும் திரும்பி பார்க்க அங்கே கொரியர் எடுத்து வரும் நபர் நின்று கொண்டிருந்தார்.
உடனே வசுந்தரா வாசலுக்கு சென்று என்ன என்று கேட்க.
” மேடம்.. அகமித்ரா அப்படிங்கற பேர்ல ஒரு பார்சல் வந்திருக்கு..”, என்று கூறவும் உடனே தன் மருமகளை திரும்பிப் பார்க்கிறார் அவர்.
“நான் எதுவும் வாங்கலையே அத்தை..யார் பண்ணினார்கள் என்று தெரியலையே”, என்று சொல்லிக் கொண்டு அவளும் வாசலுக்கு வந்தாள்.
அது ஏதோ ஒரு பிரபல கம்பெனியிலிருந்து பார்சல் வந்திருந்தது..
யாரோ ஆன்லைனில் ஆர்டர் போட்டிருப்பார்கள் போல..
ஆனால் அது எதற்காக இவளுடைய பெயரில் வந்தது ?? என்கிற சந்தேகம் தான் அவளுக்கு வந்தது..
உடனே அந்த பார்சலை பிரித்து பார்க்க அதில் ஒரு அழகிய மயில் கழுத்து நிற பட்டுப்புடவை இருந்தது..!!
கூடவே ஒரு கடிதமும் இருந்தது..
” ஹாய் மித்து,
யார் இந்த பார்சல் அனுப்பிச்சிருப்பாங்க அப்படின்னு யோசிச்சிட்டு இருக்க அதானே ??நீ ரொம்ப யோசிக்க கூடாது.. அதனால தான் இந்த லெட்டர் எழுதி அனுப்பி வச்சிருக்கேன்.. இந்த புடவைய கடையில் பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இது உனக்கு ரொம்பவே அழகா இருக்கும்னு தோணுச்சு அதனாலதான் இதை உனக்கு பிறந்தநாள் பரிசா கொடுக்கலாமா என்று நினைத்து வாங்கினேன்.. எனக்காக இதை இன்னைக்கு நீ உடுத்திக் கொண்டால் எனக்கு சந்தோஷம்.. இப்படிக்கு உன் தீரன்..”, என்று எழுதியிருந்தது அந்த கடிதத்தில்..!!
ஆக மொத்தம் இது அவனுடைய வேலை தானா??
என்ன காலையிலிருந்து ஐயா எனக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்சாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்??
” என்னம்மா என்னுடைய பையன் செஞ்ச வேலையோ ??உன்னுடைய கன்னம் எல்லாம் சிவக்குதே??”, என்று கேட்டு குறும்பாக சிரித்து அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளினார் அவர்.
” ஆமா அத்தை அவர் தான் அனுப்பிருக்காரு”, என்று கூறிவிட்டு அந்த புடவையை எடுத்துக் கொண்டு மீண்டும் மாடிக்கு சென்றாள்.
அவளுக்கும் அந்த புடவை மிகவும் பிடித்திருந்தது..
அலுவலகத்திற்கு வேறு நேரம் ஆகிவிட்டது இப்பொழுது இந்த புடவையை கட்டித்தான் ஆக வேண்டுமா?? இன்னொரு நாள் கட்டிக் கொள்ளலாமா ??இதை உடுத்த போனால் நேரமாகிவிடுமே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தாள் அவள்.
இத்தனை பரிசு தனக்காக வாங்கி இவ்வளவு மெனக்கெட்டிருக்கும் அவனுக்காக இதை உடுத்தி கொள்ளலாமா?? என்று ஒரு கணம் யோசித்தாள்..
” அடியே பைத்தியக்காரி.. இரண்டு மூணு கிஃப்ட் கொடுத்தால் உடனே மயங்கிடுவியா?? ஒருவேளை இதெல்லாம் நாடகமாக இருந்தால் என்ன செய்வாய்?? அவசரப்பட்டு நம்பி ஏமாந்து விடாதே மித்ரா..”, என்று சமயம் பார்த்து அவளுடைய மூளை எச்சரித்தது அவளை.
உடனே அந்த புடவையை எடுத்து கட்டில் மீது வைத்துவிட்டு மெதுவாக படி இறங்கி அலுவலகம் நோக்கி கிளம்பி சென்றாள்.
அவ்வாறு செய்வதில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை தான்..
ஆனால் இன்னொரு புறம் காலையிலிருந்து அவன் தரும் ஆச்சர்யம் நிரம்பிய பரிசு பொருட்களை பார்க்கையில் அவளுக்கே ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்துவிட்டது..
அது எப்படி ஒரு மனிதன் சட்டென்று மாறுவான்??
அதுவும் எதனால் மாறினான்?? ஒன்றும் புரியவில்லையே.. இவனை நம்பி மனம் நெகிழ்ந்து அவனிடம் சரணாகதி அடைய கூடாது பொறுத்திருந்து பார்ப்போம்.. அவன் இன்னும் என்ன செய்கிறான்?? எப்படி நடந்து கொள்கிறான் என்று என நினைத்தவளாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்..
இங்கே..
தன் மனதிற்குள் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்ப அவஸ்தைகளை அவளிடம் எப்பொழுதும் சொல்லக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த தீரன் காலையில் உணர்ச்சிவசப்பட்டு அவளிடம் அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டான் அவனை அறியாமல்..
அதை நினைத்து பார்க்கும் பொழுது அவனுக்கே இப்பொழுது லேசாக வெட்கம் வந்தது..
” டேய் மடையா இப்படி மனசுல உள்ளத எல்லாம் அவ கிட்ட கொட்டிட்ட?? அவள் என்ன நினைப்பா?? இத்தனை நாளா போட்டு டார்ச்சர் பண்ணிட்டு திடீர்னு வந்து பெரிய ரோமியோ மாதிரி டயலாக் எல்லாம் பேசினா அவ உடனே நம்பிடுவாளா?? நம்புறாளோ இல்லையோ ஃபஸ்ட் அவ உன்னை பற்றி என்ன நினைப்பா?? நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுகிறானே இவன் என்ன அந்நியனா என்று யோசிக்க மாட்டாளா?? அந்தளவிற்கு அவளிடம் மாறி மாறி உன்னுடைய குணத்தை வெளிப்படுத்திருக்கிறாய் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?? நல்லவேளை எல்லாத்தையும் சொன்ன நீ கடைசியாக ஐ லவ் யூ என்று சொல்லாமல் விட்டாயே.. அதுவரைக்கும் சந்தோஷம் அதையும் சேர்த்து சொல்லிருந்தால் மொத்தமாக அவள் உன்னை நம்பாமல் இன்னும் தூரமாக விலகி சென்றிருப்பாள்.. இவன் சொல்றதெல்லாம் நிஜம் தானா இல்லை பொய்யா என்று சந்தேகம் கூட வந்திருக்கும் ஏன் இப்பொழுது கூட அவளுக்கு சந்தேகம் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது தான்.. நம்மள பாத்து அவ சந்தேகப்படாமல் இருந்தால் தானே அதிசயம்?? இருந்து விட்டுப் போகட்டும் அவளுடைய மனதில் நல்ல எண்ணம் என் மீது வரவேண்டும் என்று நான் பாடுபட வேண்டிய அவசியமில்லை அவளுக்கா என்னைக்கு என் மீது அன்பும் அக்கறையும் வருகிறதோ அப்போ வரட்டும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்னை பொருத்தவரை அவள் எப்போதும் சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்.. அவளுக்கு பிடிச்ச எல்லாமே நான் பார்த்து பார்த்து செய்யணும் இதுவரைக்கும் அவ அனுபவித்த கஷ்டங்கள் எல்லாவற்றையும் மறந்து இனிமேலாவது அவள் சந்தோஷமாக இருக்கணும்”, என்று மனதார நினைத்துக் காதலால் கசிந்துருகினான் தன் மனைவிக்காக..❤️❤️
அன்றொரு நாள் தன் தாயிடம் அவள் கதை பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் அவன் சில விஷயங்களை கேட்க நேர்ந்தது..!!
அப்பொழுதுதான் அவள் தன் மாமியாரிடம்.. சிறுவயதிலிருந்தே அவளுக்கு இந்த ஆசை அதிகமாக இருக்கிறது..தன் தாயுடன் ஒரே ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய வாழ்நாள் ஆசை ஆனால் இதுவரை நிறைவேறவில்லை இனிமேலும் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறி கண்ணீர் வடித்தாள்.. அதை வாசலில் நின்று கொண்டு கேட்ட தீரனுக்கு மனம் வருந்தியது..
அவளுடைய இந்த நிறைவேறாத ஆசையை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று நினைத்துதான் அவளைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக அவளின் தந்தையை பார்த்து பேச போனான்.
போன இடத்தில் தான் அவளுடைய தந்தை பேசிய வார்த்தைகளும் ,அவர் நடந்து கொண்ட விதமும் மீண்டும் ஒரு முறை அவனுடைய மனக்கண் முன் வந்து போனது..
“ அடடே வாங்க தம்பி உங்களை தான் அவ திருமணம் செய்துருப்பதாக சொல்லிருந்தா.. வாங்க வாங்க உட்காருங்க”
“ நல்லா இருக்கீங்களா??”
“ அது எப்படி நல்லா இல்லாமல் போகும் ஆபரேஷனுக்கு நீங்க தானே பணம் கொடுத்திருக்கீங்க அந்த அளவுக்கு பணக்காரரானு கேள்விப்பட்டேன் அப்படியே எனக்கு ஒரு பத்து லட்சம் கொடுத்தீங்கன்னா கொஞ்சம் உதவியா இருக்கும்”
என்ன இது வந்தமர்ந்து ஒரு நிமிடம் கூட முழுதாக முடியவில்லை அதற்குள் பத்து லட்சம் பணம் கேட்கிறாரே என்று அதிர்ந்து பார்த்தான் அவரை..
” என்ன அப்படி பாக்கறீங்க ??அந்த வீணா போன தண்டம் மித்ராவை வளர்ப்பதற்காகவே நான் படாத பாடு பட்டேன் அப்படி வளர்த்தவளை தான் இப்பொழுது உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன் அவளையே உங்களுக்கு கொடுத்தாச்சு 10 லட்சம் கொடுக்க மாட்டீங்களா என்ன?? காலம் முழுக்க உங்களுக்கு உழைத்துக் போடுவா என் மகள்.. அதற்கு ஈடாகுமா இந்த 10 லட்சம்?? சொல்ல போனால் நாங்கள் தான் வரதட்சனை கொடுத்திருக்கணும் ஆனால் எங்களுடைய போதாத காலம் கொடுக்கும் நிலையில் நாங்க இல்லை.. எனக்கு வேற உடம்பு சரியில்ல இல்லன்னா எட்டூரு மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு உங்களுக்கு நான் வரதட்சனை கொடுத்திருப்பேன் சரி விடுங்க அந்த கதை எல்லாம் இப்போ எதுக்கு?? நல்ல உழைப்பாளி குணமுள்ளவள் அழகானவள் எப்பேர்பட்ட தங்க மகளை உங்களுக்கு மனைவியாக பரிசளித்திருக்கிறேன்.. இதற்கு நீங்கள் பத்து லட்சம் தரலாம் தாராளமாக சொல்லப்போனால் என் மகளுடைய குணத்திற்கு இந்த 10 லட்சம் எல்லாம் கால் தூசி கூட பெறாது.. நான் சொல்றது சரிதானே மாப்பிள்ளை நீங்க எனக்கு தராம வேற யாருக்கு தருவீங்க கரெக்டு தானே??”, என்று 32 பல்லையும் காட்டிக்கொண்டு கேட்டார் அவர்.
பெண்ணை கொடுத்த இடத்தில் இப்படியா பேசுவார்கள் ?? அதுவும் கர்வம் ஆணவம் எல்லாம் தலை விரித்து போட்டு ஆடிக் கொண்டிருந்தது அவரிடத்தில்..!!
இப்படிப்பட்ட மனிதருக்கு அவள் மகளாக பிறந்திருக்கிறாளே.. ஐயோ பாவம் என்று நினைத்தது அவனுடைய மனம்.
“ பணம் எல்லாம் தருவது இருக்கட்டும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்காக தான் தேடி வந்தேன்..”
“ என்ன தம்பி என் மகள் எதுவும் பிரச்சனை பண்றாளா ??அவளுக்கு எப்ப பார்த்தாலும் இதே தான் வேலை சொல்ற பேச்சைக் கேட்க மாட்டா.. அதனாலதான் அப்பப்போ அவளுக்கு என் கையாலே அடி விழும்.. அவள் அம்மா இறந்த பிறகு இவளை ஏதாவது அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடத்தான் நினைத்தேன் என்ன பண்றது பெத்துட்டேனே அதனால்தான் கடமைக்கு வளர்த்தேன் முடிஞ்சளவு நானும் பார்த்துக்கிட்டேன் அதுக்கு பிறகு அவளாவே வேலைக்கு போய் சம்பாரிச்சு வர்ற காசில் படிப்பை படிச்சு முடிச்சு வேலைக்கு போய் தன்னை பார்த்துக்கிட்டா.. அந்தளவிற்கு என் மகள் தைரியசாலி மாப்பிள.. கல்யாணம் பண்ணும் போது கூட கொஞ்சம் முரண்டு பண்ணா, நான் தான் என்னை காப்பாற்ற முடியுமா? முடியாதா?? உன்னையெல்லாம் பெற்றதற்கு நான் என்ன செய்வேன் என்று நாலு முறை திட்டினேன் அதற்கு பிறகு தான் அவள் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டாள் அப்பேர்பட்ட பெண் அவள் கொஞ்சம் அடங்காப்பிடாரி சொல்ற பேச்சை கேட்க மாட்டா.. அவள் ஏதாவது உங்ககிட்ட வம்பு பண்ணா என்கிட்ட சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன்”
இதோ தன் மகளை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு தன்னுடைய குணத்தை அவரே படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தார் அவர்.
கொஞ்சம் கூட மகள் மீது அக்கறை அன்பு பாசம் எதுவும் இல்லாமல் பணம் மட்டுமே குறியாக இருக்கும் இவரிடம் எப்படித்தான் இந்த மித்ரா வளர்ந்தாளோ தெரியவில்லை..
அது தான் அவரே சொல்கிறாரே அவளை வேலைக்கு போய் படித்து முடித்து வேலை பார்த்து தன்னுடைய செலவுகளை பார்த்திருக்கிறாள் என்று..
இதற்கு மேலும் சாட்சி வேண்டுமா அவள் வளர்ந்த லட்சணத்தை கேட்டு தெரிந்து கொண்ட பிறகு..
அவளை இந்த பாடு படுத்திருக்கிறாரே ??!!
அவள் பாவம்.. என்னென்ன கஷ்டப்பட்டாளோ என்று தன் மனைவிக்காக அவனுடைய மனம் உருகியது..
“ சரி சரி நீங்க கேட்ட பத்து லட்சத்தை நான் அப்புறமா தரேன் அப்புறம் இன்னொரு விஷயம்.. எனக்கு மித்ரா அம்மாவோட போட்டோ வேணும் உங்ககிட்ட இருக்குமா??”
” என்னது அந்த கழுதையோட போட்டோவா?? அது….”, என்று தீவிரமாக யோசித்தார் அவர்.
“ கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க கண்டிப்பா உங்க கிட்ட ஏதாவது ஒரு போட்டோவாவது இருக்கும் இருந்தால் தயவு செய்து எனக்கு குடுங்க”
“ ஏன் மித்ரா கேட்டு விட்டாளா அவளுக்கு வேற பொழப்பில்ல இங்க தான் அந்த ட்ரங்கு பொட்டிக்குள்ள இருக்கும் நீங்களே பார்த்து எடுத்துக்கோங்க”
அவர் சொன்ன அடுத்த நிமிடமே அந்த பெட்டியை தேடி கண்டுபிடித்து அதிலிருந்து போட்டோவை கைப்பற்றினான்.
மித்ராவின் அம்மா அப்படியே கிட்டத்தட்ட மித்ராவின் ஜாடையில் தான் இருந்தார்..
அமைதியே உருவாக மெல்லிய புன்னகை இதழில் ததும்ப.. பார்த்தவுடனே கையெடுத்து கும்பிடும் அளவில்தான் அவருடைய தோற்றம் கம்பீரமாக இருந்தது..
உடனே அந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
“ என்ன மாப்ள நீங்க பாட்டுக்கு வந்தீங்க போட்டோ எடுத்தீங்க கிளம்பி போயிட்டே இருக்கீங்க ??அப்புறம் நான் கேட்ட பத்து லட்சம்??”
” கண்டிப்பா ஒரு நாள் வரும்..”, என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அங்கிருந்து வேகமாக கிளம்பி போட்டோ ஸ்டுடியோ சென்றான்..
இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சி அதி வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம் அல்லவா??
அதனால் அந்த புகைப்படத்தை கொடுத்து தன் மனைவியும் அவளுடைய அம்மாவும் ஒன்றாக அமர்ந்திருப்பது போன்ற போட்டோவை வடிவமைத்து தர முடியுமா என்று கேட்டு அதை வாங்கினான் தீரன்..
இதேபோல் தான் அந்த பால் கொழுக்கட்டை கதையும் அவளுக்கு பிடித்த ஒவ்வொன்றையும் அவள் தன் அம்மாவிடம் சொல்லும் பொழுதெல்லாம் காதை தீட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.
அதை எல்லாம் மனதிற்குள் குறித்து கொண்டவன் அவளுக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நேரம் வரும் பொழுதெல்லாம் செய்ய தொடங்கினான்.. அதுவும் பிறந்தநாள் வரவே அவன் பரிசளிப்பதற்கு தோதாக போய்விட்டது..!!
பிறந்த வீட்டில் இத்தனை கஷ்டத்தை அனுபவித்து விட்டு வந்திருக்கும் இவளை மேலும் வார்த்தைகளால் துன்புறுத்தி விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவன் மனதில் இருந்தது..!!
முடிந்தளவு அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவன் மனதில் ஆழமாக தோன்றி விட்டது..
மாலை நேரம் நெருங்கும் வேளையில் மீண்டும் தன் மனைவி நினைவு வரவும் உடனே காரை எடுத்துக் கொண்டு அவள் வேலை பார்க்கும் அலுவலகம் நோக்கி சென்றான் தீரன்..!!
– தொடரும்..
