இருள் மெல்ல மெல்ல அந்தப் பெரிய பங்களாவைச் சூழ்ந்து கொள்ள, உள்ளே ராஜசேகரும் சிவகாமியும் ஒருவிதமான தவிப்புடன் அமர்ந்திருந்தார்கள். அகல்யா தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற சித்தார்த்தும், “அவள் இன்னும் வரவில்லை” என்ற செய்தியோடு திரும்பியபோது, அந்த வீட்டின் அமைதி இன்னும் பாரமானது.
ராஜசேகர் சோபாவில் சாய்ந்து தலையைப் பிடித்துக் கொண்டிருக்க, சிவகாமி வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது …
ஒரு கண்ணாடி பாட்டில் தரையில் உருளும் சத்தம்.
சத்தம் வந்த திசையை நோக்கி மூவரும் ஓடினார்கள். அங்கே, அந்தப் பெரிய வரவேற்பறையின் ஒரு மூலையில், மங்கலான வெளிச்சத்தில் ஆகாஷ் அமர்ந்திருந்தான். எப்போதும் கம்பீரமாக, நேர்த்தியாக இருக்கும் ஆகாஷா இது?
அவன் தலைமுடி கலைந்து நெற்றியில் விழுந்து கிடந்தது. சட்டையின் மேல் பொத்தான்கள் கழன்றிருக்க, கண்கள் ரத்தச் சிவப்பாய் மாறிப் போயிருந்தன. கையில் பாதி காலியான மது பாட்டிலுடன், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அந்தத் தோற்றம் ஒரு உடைந்த சிலையைப் போல இருந்தது
“ஆகாஷ்! என்னடா இது? நீயா இப்படி?” என்று அலறியபடி ஓடிச் சென்று அவன் கையைப் பற்றினாள் சிவகாமி.
மெதுவாகத் தலையைத் தூக்கித் தன் தாயைப் பார்த்த ஆகாஷின் பார்வையில் ஒருவிதமான ஏளனமும், எல்லையற்ற வலியும் கலந்திருந்தது. “ஏன் மா… நான் இப்படி இருக்கக் கூடாதா? நான் ஒரு பெரிய இடத்துப் பிள்ளை இல்லையா? எனக்கு வலிக்காதா?” என்று குழறிய குரலில் கேட்டான்.
ஆத்திரத்துடன் முன்னே வந்த ராஜசேகர், “என்ன காரியம் பண்ணிட்டு இருக்க ஆகாஷ்? ஒரு பொண்ணு காணாமப் போயிருக்கா, அதுக்கு முக்கிய காரணமே நீயும் உன் காதலும் தான், அவளைத் தேடணுங்கிற எண்ணம் இல்லாம இங்க உட்கார்ந்து குடிச்சிட்டு இருக்க?” என்று கத்தவும்.
ஒரு கசப்பான சிரிப்பைச் சிரித்த ஆகாஷ், “தேடவா? எங்கே போய் தேடுவேன் டாட்? என் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பா இருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டா. நான் அவளுக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டதா அவ நினைக்கிறா… ஆனா, அவ மேல நான் வச்சிருக்கிற உண்மையான அன்பு அவளுக்குப் புரியல டாட் … சுத்தமாப் புரியல!” என்றவனின் குரல் உடைந்துப் போக, அப்படியே அழுதுகொண்டே தன் தாயின் மார்பில் சாய்ந்து கொண்டான்.
ஒரு குழந்தையைப் போலத் தேம்பி அழும் தன் மகனைப் பார்க்கவே ராஜசேகருக்கு நெஞ்சு பொறுக்கவில்லை, அவர் மனம் அப்படியே பதறிப்போனது.
மெல்ல அவன் அருகில் வந்த சித்தார்த், “ஆகாஷ், நிதானமா இரு. அகல்யா இன்னும் ஹாஸ்டலுக்குப் போகல. அவ எங்க போயிருப்பான்னு உனக்கு ஏதும் தெரியுமா? ஆபீஸ்ல இருந்து ஓடிப்போன அகல்யாவை தேடிட்டு போனியே, அவளை பார்த்தியா ?”
பாட்டிலை ஓரமாக வைத்துவிட்டு, சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்த ஆகாஷ், “பார்த்தேன் சித்தா.. பீச்ல பார்த்தேன். ஆனா அவகிட்ட நெருங்க முடியல. என்னைப் பார்த்தாலே அவளுக்குக் கோபம் வருது. நான் எதைச் சொன்னாலும் அவ நம்பத் தயாரா இல்லை. என் வாழ்க்கையில நான் செஞ்ச ஒரே தப்பு, அவளைத் தப்பா எடைபோட்டதுதான். அவ பணத்துக்காக என்னைக் காதலிப்பாளோன்னு நான் பயந்த பயம், இன்னைக்கு அவளையே என்கிட்ட இருந்து பிரிச்சிருச்சு,” என்று விம்மி விம்மி அழத் தொடங்கினான்.
சிவகாமியின் கண்கள் கலங்கின. “அப்போ அந்தப் பொண்ணு இப்போ எங்கே போயிருப்பா? இந்த நேரத்துல தனியா…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சித்தார்த்தின் போன் ஒலித்தது.
மறுமுனையில் பேசியவர் ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல, அவனின் முகம் மாறியது.
“என்ன டா… என்ன ஆச்சு? யாரு போன்ல?” என்று ராஜசேகர் பதற…
ஆகாஷைப் பார்த்தவன், “டேய் ஆகாஷ்… எழுந்து முகத்தைக் கழுவு. அகல்யா எங்கே இருக்கான்னு தெரிஞ்சு போச்சு. ஆனா அவ அங்க இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!” என புதிர் போட்டான்
ஆகாஷ் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தவனின் மதுவின் போதை அப்படியே வடிந்துவிட, “எங்கே டா … எங்கே இருக்கா அவ?” என்று துடிப்புடன் கேட்க
“டேய் அவ அந்த பழைய வீட்டுக்குத் தேடிப் போயிருக்கா… நீ முதன்முதலா அவளைக் கூட்டிட்டுப் போனியே, அந்த மதுரைக்கார அப்பா அம்மான்னு பொய் சொன்ன அந்தச் மாடி வீட்டுக்கு முன்னாடி வாசல்ல நின்னு அழுதுட்டு இருக்காளாம்! அந்த பெரியவர் இப்போ தான் போன் பண்ணி சொன்னாரு.”
அந்தச் செய்தி ஆகாஷின் காதுகளில் விழுந்ததும், அவனது மதுவின் மயக்கம் அப்படியே வடிந்து போக, அவனது இதயம் படபடக்கத் தொடங்கியது. கோபத்தில் வெளியேறியவள், ஏன் அவனது போலி வாழ்க்கையின் அடையாளமான அந்த இடத்திற்குச் சென்றாள்?
“அப்பா… நான் உடனே அங்க போகணும்!” என்று தள்ளாடியபடி எழுந்தான் ஆகாஷ்.
“இல்லை ஆகாஷ், இந்த நிலையில நீ வண்டி ஓட்டக்கூடாது. சித்தார்த், நீயும் அவனோடு போ,” என்று ராஜசேகர் கட்டளையிட, இருவரும் அந்த வீட்டை நோக்கி விரைந்தனர்.
அவர்கள் நாடகமாடிய அந்தச் மாடி வீட்டின் கதவு பூட்டியிருந்தது. அந்தத் தெருவின் மங்கலான விளக்கு வெளிச்சத்தில், படிக்கட்டில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் அகல்யா. அவளது கைகள் அந்தப் பழைய மரக்கதவை மென்மையாகத் தடவிக்கொண்டிருந்தன.
வேகமாக வந்து நின்ற காரில் இருந்து பதற்றத்தோடு இறங்கிய ஆகாஷ். எதைப் பற்றியும் யோசிக்காமல் மாடிப் படிகளில் ஓடிச் சென்றவன், வாசலில் அழுதபடி அமர்ந்திருந்த அகல்யாவைப் பார்த்ததும் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டான் அவளை அந்த நிலையில் பார்த்ததும் அவன் நெஞ்சை என்னவோ செய்தது.
அங்கிருந்த பெரியவரைச் சந்தித்த சித்தார்த், அந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டு வந்து ஆகாஷிடம் கொடுக்க, சாவியை வாங்கிக் கொண்ட ஆகாஷ், அகல்யாவைப் பார்த்து மெதுவான குரலில், “உள்ளே வா…” என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்தான்.
அகல்யாவும் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே மௌனமாக அவனுக்குப் பின்னால் உள்ளே சென்றவள், அங்கிருந்த ஒரு நாற்காலியில் போய் அமர, எதையும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். ஆகாஷ் அவளையே பார்த்தபடி ஒரு மூலையில் நின்றிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, மெல்லத் தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அகல்யா. பிறகு, தன் கண்களாலேயே அங்கிருந்த இன்னொரு நாற்காலியைக் காட்டி, “அங்கே உட்காரு” என்பது போல சைகை செய்தாள்.
அவளுடைய அந்தச் சிறு செய்கை ஆகாஷுக்குள் ஒரு மெல்லிய நம்பிக்கையைத் தந்தது. அவன் இதழ் ஓரத்தில் ஒரு சிறு புன்னகை அரும்ப, அந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவளுக்கு இன்னும் நெருக்கமாகவே அமர்ந்தான்.
ஆகாஷ் அவளருகே வந்து அமர்ந்தபோது, அவனிடமிருந்து வீசிய அந்த மதுவின் வாடை அவளுக்குப் பிடிக்கவில்லைதான், ஆனால் அவன் கண்களில் தேங்கியிருந்த அந்தத் தவிப்பு அவளது கோபத்தை மெல்லக் கரைத்தது.
“அகல்யா…” என்று அவன் அழைத்த குரலில் ஆயிரம் யுகங்களின் வலி இருந்தது.
அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். நிலவின் வெளிச்சம் அவளது கண்ணீர் ததும்பும் கண்களில் பிரதிபலித்தது. “ஏன் ஆகாஷ்? பணக்காரன் என்று தெரிஞ்சா நான் உங்களை விட்டுப் போய்விடுவேன் என்று நினைச்சீங்களா? இல்ல உங்க பணத்துக்காக உங்களை நேசிப்பேன்னு என் அன்பைக் கேவலமாகக் கணக்குப் போட்டுட்டீங்களா?”
ஆகாஷ் மெதுவாக அவளது கைகளைப் பற்ற முயன்றான், அவள் இந்த முறை விலகவில்லை. அந்த மௌனத்தையே தனக்கான அனுமதியாக எடுத்துக் கொண்டவன், அவளது விரல்களைத் தன் கரங்களுக்குள் ஏந்தினான். பின்னர், அவளது மென்மையான உள்ளங்கையைத் தன் வலிமையான கரங்களுக்குள் வைத்து அப்படியே இறுக்கமாக மூடிக்கொள்ள,
அந்த ஸ்பரிசத்தில் அகல்யாவின் பிடிவாதம் மெல்ல கரையத் தொடங்க, அவளது கண்களிலிருந்து ததும்பிய ஒரு கண்ணீர்த்துளி, அவர்கள் இணைந்திருந்த கைகளின் மீது நடுக்கத்தோடு வந்து விழுந்தது.
“இல்லை அகல்யா… என் கடந்த காலம் ஒரு சுடுகாடு போல இருந்தது. முதல் திருமணத்தில் நான் சந்தித்தது அன்பை அல்ல, வெறும் பணத்தாசையை மட்டும்தான். அதனால், ஒரு பெண்ணுக்கு என்னைப் பிடிப்பதற்குக் காரணம் என் பணமா இருக்கக்கூடாது, என் குணமா இருக்கணும்னு பிடிவாதமா இருந்தேன். அதுக்காகத்தான் இந்த நாடகம்… உன்னை இழக்கக் கூடாதுங்கிற பயத்துல வந்த பொய் இது, அகல்யா.”
அகல்யா விம்மி விம்மி அழத் தொடங்கினாள். “உங்களுக்கு ஒன்னு தெரியுமா ஆகாஷ்? அலுவலகத்தில் நான் பார்த்த ஆகாஷை விட, இந்தச் சின்ன வீட்டின் அமர்ந்து என்னுடன் இருந்த அந்த ஆகாஷைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க ஒரு சாதாரணப் பையனா இருந்தபோது, நமக்குன்னு ஒரு சின்ன வீடு போதும், அங்க நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்’னு நான் கண்ட கனவுதான் எனக்குப் பெருசு. இப்போ நீங்க ஒரு கோடீஸ்வரன்னு தெரிஞ்சதும், என் கனவு அந்தப் பெரிய பங்களாவுக்குள் தொலைஞ்சு போயிருமோன்னு பயமா இருக்கு!”
அவளின் பயம் ஆகாஷுக்கு புரிய, அவளது முகத்தைத் தன் இரு கைகளாலும் ஏந்தியவனது கண்களிலும் கண்ணீர் திரண்டது.
“அகல்யா… அந்தப் பங்களா எனக்கு ஒரு வெறும் கட்டிடம் தான். ஆனா நீதான் என் உயிர். உனக்காக நான் அந்த ராஜபோகத்தை வேணாம்னு சொல்லிட்டு, இதே சின்ன வீட்டில் உன்னோடு வாழ்றதுக்குக் கூடத் தயார். என் அப்பா சொன்னது போல, என் முதல் கல்யாணம் ஒரு முடிந்து போன அத்தியாயம். அதில் அன்பு இல்லை, வெறும் கசப்புதான் இருந்தது. ஆனா உன்கிட்ட நான் பார்த்த அந்தப் புன்னகை, அந்த அக்கறை… அதுதான் நான் தேடின உண்மையான வாழ்க்கை.”
மெல்ல நகர்ந்து ஆகாஷின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவளுக்கு அவனது இதயத்துடிப்பு ஒரு தீராத சங்கீதமாக ஒலிக்க, கண்ணீர் மல்க அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டவள்,
விம்மலோடு, “இனிமே ஒருவாட்டி கூட என்கிட்ட பொய் சொல்லாத ஆகாஷ்… என்னால அதைத் தாங்கிக்க முடியாது. எனக்கு உன் அந்தஸ்தோ, நீ வச்சிருக்கிற தங்கமோ, பணமோ எதுவுமே தேவையில்லை. எனக்கு உன் அன்போட ஒரு சின்னத் துளி போதும். நீ ஒரு சாதாரண ஏழையா இருந்தாலும் சரி, இல்ல ஊரே வியந்து பார்க்குற பணக்காரனா இருந்தாலும் சரி… நீ எப்பவுமே என் ஆகாஷ் மட்டும்தான். எனக்கு அது போதும்!” என்றவளது ஒவ்வொரு வார்த்தையும் ஆகாஷின் காயப்பட்ட மனதிற்கு மருந்தாக அமைந்தது.
அவளை இன்னும் அரவணைப்போடு தன் நெஞ்சோடு சேர்த்துக் அணைத்துக் கொண்டவன். அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, அவள் கண்ணீரைத் துடைத்தான்.
“சத்தியமா அகல்யா… இனிமே நமக்கிடையே எந்த மறைமுகமும் இருக்காது. என் வாழ்க்கையில நான் பட்ட அத்தனை நரகத்தையும் மறக்கடிக்க வந்த தேவதை நீ. நீதான் என் உலகத்தோட ஒரே ராணி. உன்னைச் சிதைக்கணும்னு நினைச்ச எல்லா காயங்களையும், என் காதலால நான் ஆற்றுவேன். இனி உன் கண்ணுல ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராது, அதுக்கு நான் கேரண்டி!” என்றான் உறுதியுடன்
அந்த வீட்டின் முன்னால் இருந்த வேப்பமரம் மெல்லிய தென்றலை வீச, ஜன்னல் வழியே உள்ளே வந்த சில வேப்ப இலைகள் அவர்கள் மேல் விழுந்தன. அந்த இயற்கையே அட்சதை தூவி அவர்கள் காதலை ஆசீர்வதிப்பது போல இருந்தது.
வெளியே நின்று வாசல் வழியாக இந்த உருக்கமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் கண்களில் தானாகவே கண்ணீர் வழிந்தது. தன் நண்பன் இழந்த வசந்தம் மீண்டும் அவன் வாழ்வில் வந்துவிட்டது என்று தெரிந்ததும், அவனுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கியது.
உடனே தன் மொபைலை எடுத்தவன், ஆகாஷின் தந்தை ராஜசேகருக்கு டயல் செய்தவன். மகிழ்ச்சி ததும்பும் குரலில்,
“அங்கிள்… எல்லா பிரச்சனையும் முடிஞ்சது! ஆகாஷும் அகல்யாவும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. உங்க பையன் முகத்துல இன்னைக்குத்தான் நிஜமான சிரிப்பை நான் பார்க்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க, இனிமே எல்லாமே நல்லபடியா நடக்கும்!” என்றான்
சித்தார்த் சொன்ன அந்தச் செய்தியைக் கேட்டதும், ராஜசேகருக்கும் சிவகாமிக்கும் ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்களின் கண்களில் இருந்து சந்தோஷத்தில் கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. இத்தனை காலமாய் ஆகாஷின் வாழ்க்கை ஒரு இருண்ட குகைக்குள் இருந்தது போல இருந்தது, இப்போதுதான் அந்த இருளை விலக்கி ஒரு மெல்லிய காதல் ஒளி உள்ளே நுழையத் தொடங்கியிருக்கிறது.
“ஒரு வழியா என் புள்ளை வாழ்ந்துட்டான்யா…” என்று சிவகாமி விம்ம, ராஜசேகர் அவர் கையைப் பிடித்துக் கொண்டு மெல்லப் புன்னகைத்தார்.
இனி என்ன? அடுத்தது சுப முகூர்த்தம் தான்!
ஆனால், இந்த முறை ராஜசேகர் ஒரு அதிரடி முடிவு எடுத்தார். வழக்கமான அந்த ஆடம்பரமான நிச்சயதார்த்தம், தேவையில்லாத கூட்டத்தோடு நடக்கும் பிரம்மாண்ட வரவேற்பு என எதற்குமே அவர் இடம் கொடுக்கவில்லை.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், ஆடம்பரத்தை ஒதுக்கிவிட்டு ஒரு மிக எளிமையாக, அவர்களின் உறவை உறுதிப்படுத்த அவர் எடுத்த அந்த முடிவு, அந்தப் பாசமான தந்தையின் முதிர்ச்சியைக் காட்டியது.
அந்தப் புனிதமான அழகிய விடியலையும், அவர்களின் புதிய பயணத்தையும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்!
🌧️தூறல்கள் தொடரும்…
