தூவானம் -34

முடிவு பகுதி 

அதிகாலை நான்கு மணி.

சென்னையின் பரபரப்பு இன்னும் கண்விழிக்காத அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில், திருப்போரூர் கந்தசாமி கோவில் வாசலில் பனிப்புகை மெல்லப் படர்ந்திருந்தது. அந்தப் பழமையான கோவிலின் கோபுர கலசங்கள் அதிகாலை மங்கலான வெளிச்சத்தில் ஒரு தீபத்தைப் போல ஜொலித்தன. ராஜசேகரின் அறிவுறுத்தலின்படி, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே அங்கே கூடியிருந்தனர்.

ராஜசேகர் தன் அந்தஸ்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு சாதாரணத் தந்தையாக வேட்டி சட்டையில் கோவிலின் பிரகாரத்தில் நடந்து கொண்டிருந்தார். அவரது கண்கள் தன் மகன் ஆகாஷைத் தேடின.

ஆகாஷ் இன்று ஒரு மாப்பிள்ளையாக அல்ல, ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின் தன் உயிரைக் கண்டடைந்த ஒரு காதலனாக நின்றிருந்தான். சந்தன நிறப் பட்டு வேட்டியும், தோளில் சரிகை பார்டர் போட்ட துண்டும் அணிந்து, அவன் நெற்றியில் திருநீறு தரித்து நின்ற கோலம், அவனை ஒரு மங்கலமான தேஜஸுடன் காட்டியது.

அவன் கைகள் ஆவலில் பிசைந்து கொண்டிருந்தன. “அகல்யா வந்துவிட்டாளா?” என்று அவன் இதயம் ஒவ்வொரு முறை கோவில் மணி ஒலிக்கும் போதும் துடித்தது. நேற்றைய அந்த மதுப் புயல் ஓய்ந்து, இன்று அவன் கண்களில் ஒரு தெளிவான நீரோடை போன்ற அமைதி குடிபுகுந்திருந்தது.

கோவில் வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டதும் ஆகாஷின் பார்வை அங்கே நிலைத்தது.

முதலில் இறங்கியது ஹேமா தான். மஞ்சள் நிறப் பட்டுச் சேலையில், அதிகாலைச் மலரும் சூரியகாந்தி மலரை போல அவள் ஜொலித்தாள். அவளைத் தொடர்ந்து அகல்யா இறங்க, அவள் அணிந்திருந்தது அடர் பச்சை நிறக் காஞ்சிபுரம் பட்டுச் சேலை. அதில் தங்க நிறச் சரிகைகள் விடியல் சூரியனின் கதிர்களை வாங்கிப் பிரதிபலித்தன. அவள் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் சூடப்பட்டிருக்க, அந்த மணம் காற்றுடன் கலந்து ஆகாஷின் நாசிகளை எட்டியது. அவளது முகத்தில் இருந்த அந்தப் பழைய கவலைகள் மறைந்து, இன்று ஒரு புதிய வாழ்வின் நம்பிக்கை பிரகாசித்தது.

அவளது கைகளைத் தழுவிக்கொண்ட ஹேமா, “ஏய் அகல்யா… நிஜமாவே நீ தேவதை மாதிரி இருக்கடி! ஆனா ஒன்னு, அன்னைக்கு ஆபீஸ்ல அழுதுட்டு இருந்த அந்த அகல்யாவா இதுன்னு எனக்கு இன்னும் சந்தேகமாவே இருக்கு,” என்று ஹேமா குறும்பாகக் கிசுகிசுக்க, அகல்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“ஹேமா… சும்மா இருடி, பயமா இருக்கு,” என்று அகல்யா மெல்லிய குரலில் சொல்ல, “பயமா? இன்னைக்கு அந்த ஆகாஷ் சாரோட கதி தான் அதோ கதி! உன்னைப் பார்த்ததும் மனுஷன் மயங்கி விழப்போறாரு பாரு…” என ஹேமா அவளது காதோரம் கேலி பேச, இருவரும் தங்களுக்குள் கலகலப்பாகச் சிரித்துக் கொண்டே பிரகாரத்தில் நடந்த அந்த அழகு, மங்கல நாதஸ்வர இசையோடு இணைந்து அந்த இடத்தையே உயிர்ப்பித்தது.

மணமேடையில் அமர்ந்திருந்த ஆகாஷ், அகல்யாவைப் பார்த்த கணத்தில் தன்னை மறந்தான். அக்னி குண்டத்தின் செந்நிற ஒளியும், அதிகாலை இளவெயிலும் அவளது முகத்தில் பட்டு எதிரொலிக்க, அவள் ஒரு மானுடப் பெண்ணாகத் தெரியவில்லை. அவனது உள்ளம் ஒரு கவிதையை முணுமுணுத்தது:

“செதுக்காத சிற்பமே… என் சிறைப்பட்ட சொப்பனமே! காஞ்சிப் பட்டுடுத்திய காவியமே… உன் புன்னகைச் சுடரில் என் பூர்வ சென்ம வினைகள் அகலுதே! பெண்ணே… உன் மௌனம் இசைக்கும் வீணையில், என் இதயம் இன்று சுதி மீட்டுதே!”

அவளது நெற்றியில் அசைந்த அந்தச் சிறு குங்குமப் பொட்டும், நாணத்தால் தாழ்ந்திருந்த அவளது இமைகளும் ஆகாஷை ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்றன. “இவள் என்னுடையவளா?” என்ற ஆச்சரியம் அவன் கண்களில் ஒரு பிரகாசத்தைத் தந்தது. அவள் அசைந்தால் ஒரு கவிதை அசைவது போலவும், அவள் சிரித்தால் ஒரு சங்கீதம் பிறப்பது போலவும் அவன் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

முருகப் பெருமானின் சன்னதிக்கு முன்னால், ஐயர் வேத மந்திரங்களை ஓதத் தொடங்கினர். நாதஸ்வரத்தின் மெல்லிய இசை அந்தப் பழமையானக் கற்கோவிலின் சுவர்களில் மோதி எதிரொலித்து, ஒரு தெய்வீக அதிர்வை உண்டாக்கியது.

ஆகாஷும் அகல்யாவும் மணமேடையில் அமர்ந்தனர். அங்கே ஹோம குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. அந்த அக்னியின் ஜுவாலைகள், அவர்களின் கடந்த காலக் கசப்புகளை எரித்துச் சாம்பலாக்குவது போலத் தெரிந்தன.

மணப்பெண்ணின் தோழியாக, மஞ்சள் நிறப் பட்டுச் சேலையில் மின்னிக் கொண்டிருந்த ஹேமாவைப் பார்த்த நொடியில் இருந்தே, சித்தார்த்தின் இதயம் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. அவன் பார்வை முழுவதும் ஹேமாவின் மீதே நிலைத்திருந்தது.

அவளது சிரிப்பு, அவள் அகல்யாவோடு சேர்ந்து செய்யும் கேலிகள், அவளது துறுதுறுப்பான அசைவுகள் என ஒவ்வொன்றையும் அவன் கண்கள் கேமராவைப் போலப் படம் பிடித்துக் கொண்டிருந்தன. “என்னடா சித்தார்த்… உனக்கு என்ன ஆச்சு?” என்று அவனது உள்மனம் கேட்டாலும், அவனது கண்கள் மட்டும் ஹேமாவைத் தாண்டி நகர மறுத்தன.

சித்தார்த் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஹேமா கவனிக்காமல் இல்லை. பெண்கள் எப்போதும் ஆறாம் அறிவால் தங்களை ரசிக்கும் பார்வைகளைக் கண்டறிந்துவிடுவார்கள். ஹேமா அவன் பார்ப்பதைக் கவனித்தும், கவனிக்காதது போல ஒரு கள்ளச்சிரிப்பை உதிர்த்தாள்.

அவள் அவ்வப்போது தன் தலைமுடியை ஒதுக்கும் போதும், தாலியை ஆசிர்வதிக்க அட்சதையைத் தயார் செய்யும் போதும், சித்தார்த்தைப் பார்த்து மெல்லக் கண் ஜாடை செய்தாள்.

அந்த ஜாடையில், “என்ன… ரொம்ப நேரமா என்னையே பார்க்கிறீங்க?” என்ற ஒரு குறும்புத்தனமான கேள்வி இருந்தது.

சித்தார்த் மாட்டிக் கொண்ட திருடனைப் போல அசட்டுச் சிரிப்பு சிரிக்க, ஹேமா அவனைப் பார்த்து தலையைச் சிலுப்பி மீண்டும் தன் வேலையில் கவனமாவது போல பாவனை செய்தாள்.

தந்தை இல்லாத அகல்யாவுக்கு, அந்த ஆசிரமத்தின் நிர்வாகி தான் எல்லாமே. இன்று ஒரு தந்தையின் இடத்தில் நின்று அவர் அகல்யாவைத் தாரைவார்த்துக் கொடுத்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

ராஜசேகரின் கைகளைப் பற்றிக்கொண்டு, அகல்யாவின் கரங்களை அவர் ஆகாஷின் கரங்களில் வைத்தார். “ராஜசேகர் சார்… இவள் வெறும் ஒரு எங்க இல்லத்துப் பெண் அல்ல. இவள் எங்களுக்கெல்லாம் ஒரு குலவிளக்கு. இத்தனை வருஷம் இந்தக் கைகளை நான் ஒரு தந்தையாப் பிடிச்சு வழிநடத்தினேன். இன்னைக்கு ஒரு நம்பிக்கையோடு இந்தச் சக்கரவர்த்தியின் கைகளில் ஒப்படைக்கிறேன்,” என்று அவர் குரல் தழுதழுக்கக் கூறினார்.

அகல்யா “ஐயா…” என்று அவரைத் தழுவிக்கொள்ள, அவர் அவளது தலையைத் தடவி, “நல்லா இருமா… உன் சந்தோஷம் தான் இந்த ஆசிரமத்தோட வெற்றி,” என்று ஆசீர்வதித்தார். ஒரு தந்தையின் கடமையைச் செய்த அந்தத் திருப்தியும், மகளைப் பிரிந்த வலியும் அவர் முகத்தில் ஒருசேரத் தெரிந்தன

ஐயர் மாங்கல்யத்தை எடுத்து ஆகாஷின் கையில் கொடுத்தார். அந்தத் தருணம், உலகமே நிசப்தமானது போல இருந்தது. ஆகாஷ் அகல்யாவைப் பார்த்தான். அவளது கண்கள் கலங்கியிருந்தன, ஆனால் அந்தச் சொட்டு நீருக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…”

நாதஸ்வரம் உச்சத்தை எட்ட, ஆகாஷ் அகல்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான். முதல் முடிச்சு அவளது பாதுகாப்பிற்காக, இரண்டாம் முடிச்சு அவளது அன்பிற்காக, மூன்றாம் முடிச்சு அவர்கள் இணைந்து வாழப்போகும் அந்த அழகிய எதிர்காலத்திற்காக.

மலர் தூவி அனைவரும் ஆசீர்வதித்த போது, ஆகாஷ் அகல்யாவின் காதோரம் குனிந்து, “இப்போவாவது நம்பு அகல்யா… இந்த நிமிஷத்துல இருந்து நீயும் நானும் ஒருத்தருக்கொருத்தர் தான். இனி எந்தப் பணமும், எந்த அந்தஸ்தும் நம்மைக் பிரிக்க முடியாது,” என்று உருக்கமாகக் கூறினான்.

அகல்யா அவன் கைகளைப் பற்றிக்கொண்டு, “எனக்கு இந்த முருகப்பெருமான் கொடுத்த பெரிய வரம் நீ தான் ஆகாஷ். அந்தப் மாடி வீட்டில் நான் பார்த்த அதே அன்பை, இந்தத் தாலியிலயும் நான் உணர்றேன்,” என்று நெகிழ்ந்தாள்.

ஆகாஷ் அகல்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்ட அந்த மங்கலமான தருணம்… அனைவரும் மலர்களைத் தூவி ஆசிர்வதித்துக் கொண்டிருக்க, அந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு, ஹேமாவின் மிக அருகிலேயே வந்து நின்றான் சித்தார்த்.

யாரும் கவனிக்காத நேரத்தில், அவன் தன் தோளால் ஹேமாவின் தோளை மென்மையாக இடித்தான். அது தற்செயலாக நடந்தது போலத் தெரிந்தாலும், அந்தத் தீண்டலில் ஒரு சின்னச் சில்மிஷம் இருந்தது.

ஹேமா திடுக்கிட்டுத் திரும்பி அவனைப் பார்க்க, சித்தார்த்தோ ஒன்றுமே தெரியாதவன் போல மேலே பறக்கும் புறாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஹேமா அவன் கையை மெல்லக் கிள்ளி,

“என்ன சார்… ரொம்பத்தான் பண்ணுறீங்க?” என்பது போலத் தன் புருவங்களை உயர்த்திச் சைகை செய்தாள்.

சித்தார்த் அவளது காதோரம் குனிந்து, “மேடம்… இன்னைக்கு மஞ்சப் பை கணக்கா இல்லாம, நிஜமாவே ஒரு மல்லிகைப் பூ கணக்கா இருக்கீங்க,” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.

ஹேமா முகம் முழுக்க வெட்கம் படர, “ஓ… அப்போ மத்த நாள்ல நான் மஞ்சப் பை தானா? இருக்கட்டும் சார்… கல்யாணம் முடியட்டும் அப்பறம் உங்களைக் கவனிச்சுக்கிறேன்,” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அகல்யா, ஆகாஷ் எனும் இரண்டு இதயங்கள் ஒன்று சேர்ந்த அதே வேளையில், சித்தார்த், ஹேமா எனும் இரண்டு துருவங்களுக்கு இடையே ஒரு அழகான காதல் பாலம் அங்கே கட்டப்படத் தொடங்கியது. அந்தத் திருமண மண்டபத்தின் வாசம் இவர்களின் புதிய காதல் கதையிலும் வீசத் தொடங்கியது.

திருமணம் முடிந்ததும் இருவரும் ராஜசேகர், சிவகாமியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர். ராஜசேகர் ஆகாஷின் தோளைத் தட்டி, “மகனே, இந்தச் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கிறதை விட, ஒரு பெண்ணோட மனசைச் சிதையாமப் பார்த்துக்கிறதுதான் ஒரு ஆணுக்குப் பெரிய வெற்றி. அந்த வெற்றியைக் இன்னைக்கு நீ அடைஞ்சுட்ட,” என்றார்.

சிவகாமி அகல்யாவைத் தழுவிக்கொண்டு, “என் மகனுக்கு இனிமே நீதான் எல்லாமே. அவன் வாழ்க்கையில இருந்த இருட்டை நீதான் நீக்கிட்ட,” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

திருமணம் முடிந்து தம்பதிகள் வெளியே வந்தபோது, அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அகல்யா வளர்ந்த ஆசிரமத்திலிருந்த சிறுவர்கள் ஓடி வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

“அகல்யா அக்கா… அகல்யா அக்கா…” என்று கத்திக்கொண்டே கவிதா அவளது சேலையைப் பிடித்து இழுக்க, இன்னொரு சிறுவன் ஆகாஷின் கையைப் பற்றிக்கொண்டான்.

“அக்கா… நீங்க இனிமே எங்க கூட விளையாட வரமாட்டீங்களா?” என்று மழலை மாறாத குரலில் ஒரு குழந்தை கேட்க, அகல்யா மண்டியிட்டு அந்தக் குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொண்டாள்.

ஆகாஷ் அந்தச் சிறுவர்களின் தலையை வருடி, “உங்க அக்கா இனிமே என் கூடத்தான் இருப்பாங்க… ஆனா, உங்களை எல்லாம் பார்க்க அடிக்கடி வருவோம், சரியா?” என்று சொல்ல, குழந்தைகள் குதூகலமாகக் கத்தினார்கள். அந்தப் பிஞ்சு உள்ளங்களின் கலகலப்பும், அவர்களின் நிபந்தனையற்ற அன்பும் அந்தத் திருமண மண்டபத்தை ஒரு நந்தவனமாக மாற்றியது

கோவிலை விட்டு வெளியே வரும்போது, ஆகாஷ் அகல்யாவைப் பார்த்துச் சொன்னான், “அகல்யா, நமக்கு ஹனிமூன் போகணும்னா உலகத்துல எத்தனையோ நாடு இருக்கு. ஆனா உனக்குச் சம்மதம்னா, நாம முதல் ஒரு வாரம் நம்ம அந்தப் வாடகை வீட்டுல போய் தங்குவோமா? அந்தத் கிட்சேனில் உட்கார்ந்து, எந்தப் பகட்டும் இல்லாம ஒரு காபி குடிக்கலாமா?”

அகல்யா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். ஒரு கோடீஸ்வர வாரிசு, தன் திருமணத்திற்குப் பிறகு அத்தனை வசதிகளையும் விட்டுவிட்டு அந்தச் சின்ன வீட்டுக்கு வரத் துணிந்ததே அவளது காதலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகத் தெரிந்தது.

“அதைவிட எனக்கு வேறென்ன சந்தோஷம் வேணும்? அந்தத் வீட்டில் தான் என் ஆகாஷ் பிறந்தான். அங்கேயே நம்ம வாழ்க்கையைத் தொடங்குவோம்,” என்று அவள் அவன் கையைப் பிணைத்துக்கொண்டாள்.

திருப்போரூர் கந்தசாமி கோவிலின் கோபுரத்தில் அமர்ந்திருந்த ஒரு புறா கூட்டமாகப் பறக்க, அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு புது ஜோடியின் காதல் கதை, ஒரு தெய்வீகமான திருப்பத்துடன் இனிதே நிலைபெற்றது.

—நன்றி—

 

வாசகர்களுக்கு வணக்கம்,

இந்தக் கதையில் ஒரு விஷயம் உங்களுக்கு தோன்றியதா…? இது காதல் கதைதான். ஆனால் இதில் காதல் சொல்லப்படவில்லை அது நடந்தது.

ஒரு முறை கூட “I love you” என்று உதடுகள் உச்சரிக்கவில்லை.

ஆனால் ஒவ்வொரு பார்வையிலும் காதல் இருந்தது.

ஒவ்வொரு கவலையிலும் அக்கறை இருந்தது.

ஒவ்வொரு சண்டையிலும் பிரிவின் பயம் இருந்தது.

ஒவ்வொரு அமைதியிலும் புரிதல் இருந்தது.

காதல் என்பது “I love you”  வார்த்தைகளால் மட்டும் நிரூபிக்க வேண்டிய உணர்வு அல்ல.

“நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்லுவது எளிது.

ஆனால்.…

அவன் தளரும்போது தோளாக நின்று விடுவது,

அவள் விழும்போது கைகளால் தாங்குவது,

அவன் கனவுகளை அவள் நம்புவது,

அவள் பயங்களை அவன் பாதுகாப்பது,

இதுவே உண்மையான காதலின் மொழி.

காதல் என்பது சத்தமாக அறிவிப்பதல்ல; அமைதியாக உறுதி கொடுப்பது.

அது மலர்கள் கொடுப்பதல்ல; முள்ளுகளிலும் கை விடாமல் இருப்பது.

அது ஒரு நாளின் பரவசம் அல்ல; ஒரு வாழ்க்கையின் பொறுப்பு.

சில காதல்கள் “I love you” என்று சொல்லிக் கொண்டே உடைந்து விடும்.

சில காதல்கள் ஒருபோதும் சொல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக நிலைத்து நிற்கும்.

உண்மையான காதல் என்பது சொற்களில் இல்லை…

செயல்களில் உள்ளது.

அது வாக்குறுதி அல்ல…

வாழ்க்கையே.

அது உரிமை கேட்பதல்ல…

நம்பிக்கை கொடுப்பது.

இந்த அழகான கருத்துடன் இந்தக் காதலின் பயணத்தை நிறைவு செய்கிறேன்.

இந்தக் கதையின் நிறைவு உங்கள் மனதிற்குத் திருப்தியையும், ஒரு மெல்லிய புன்னகையையும் தந்திருந்தால், அதுவே என் எழுத்திற்கு கிடைக்கும் அங்கீரம். உங்கள் மேலான கருத்துக்களும், நேர்மையான விமர்சனங்களுமே ஒரு எழுத்தாளனாக எனக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த பரிசுகள், அடுத்தடுத்த படைப்புகளை நோக்கி என்னை நகர்த்தும் மிகப்பெரிய ஊக்கவிப்பு.

இந்தக் கதையைத் தொடக்கத்திலிருந்தே வாசித்து, என்னோடு பயணித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் கருத்துக்களுக்காகவும், அன்புக்காகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்!

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page