வலியை சூடிய காதலே – 33

காற்றோடு நம் காதல் பேசிய தருணங்கள் கலைந்து போக

தொலைந்ததே என் நேசம்…!

வலியை சூடிய காதலே – 33

“அப்புறம் என்னப்பா நல்ல முடிவை தானா அந்தப்புள்ள எடுத்திருக்கு, பொறவு என்ன” என்று செல்லத்துரை சொல்ல, கையில் தட்டோடு நின்றிருந்தாள் பூவிதழினி,

ஆரியனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை, அவனின் குடும்பத்தவர்கள் பூவிதழினியின் முடிவில் தலையில் அடித்துக் கொண்டு அழவே ஆரம்பித்தனர் ராமநாதன் கொத்தித்துப் போனார்,

“இவனை பத்தி தெரியாம இந்த முடிவை நீ எடுத்திருந்தாக் கூட பரவாயில்ல, ஆனா எல்லா தெரிஞ்சிருந்தும் நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர்பாக்கல இதழு” என்று விரக்தியில் ஆரி சொல்ல,

“நான் கூட தான் எதிர்பாக்கல மச்சா, இனி பேசுறதுக்கு ஒன்னும் இல்ல, முடிஞ்சது முடிஞ்சது தான, தயவுசெஞ்சு என் வழியில என்னை விட்டிரு மச்சா” என்றாள் இதழு, ஆரியின் மனம் கலங்கிப் போனது,

நிஷா பேசக் கூட முடியாமல் அழுதாள், தன்னால் தான் இப்படி அனைவரும் தங்களை வருத்திக் கொள்கிறார்கள் என்று நினைத்து துடித்தாள்,

அங்கே கூடியிருந்த யாரும் எதிர்பாராத நேரத்தில், பூவிதழினியிடம் இருந்த தட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான் தீரண்,

சுற்றி இருந்தவர்கள் திகைக்க ஆரி அவனை அடிக்க பாய்ந்து வந்தான் அதற்குள் தாலி கட்டி முடித்திருந்தான் தீரண், ஆரி வந்த வேகத்தில் ஓங்கி தீரணின் முகத்தில் குத்த வாயில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது,

சுற்றி நின்ற ஆண்கள் ஆரியை இழுத்துப் பிடிக்க அவர்களை இழுத்துக் கொண்டே வந்து எட்டி உதைத்தான் ஆரி, தீரண் நிலை தடுமாறி தரையில் விழ, 

ஆத்திரம் தாளாமல் காலால் மிதித்தான் ஆரி, அதைக் கண்ட தீரணின் ஆட்கள் ஆரியை அடிக்க வர தடுத்தவர்களை தள்ளி விட்டு விட்டு அடியாட்களைப் பந்தாடினான் ஆரி,

முரட்டு கயை முறுக்கி வயிற்றில் குத்தியதில் வாயில் வழியாக ரத்தம் சொட்ட கீழே விழுந்தனர், ஒருவன் கட்டையால் ஓங்கி ஆரியில் தோளில் அடிக்க அந்த வலியைக் கூட பொருட்படுத்தாமல்,

அதே கட்டையை பிடுக்கி அடித்தவனையும் மேலும் ஓடி வந்தவர்களையும் அடித்து பறக்க விட்டான், கடைசியில் அடி வாங்க ஆளே இல்லாமல் கண் மூடித் தனமான கோபத்தில் இருந்த ஆரி,

தீரணின் கார் கண்ணாடியை வெறும் கையால் உடைத்தான், அவனின் ஆக்ரோஷமும் வெறியும் அனைவரையுமே மிரளச் செய்தது, 

இதுநாள் வரையும் பொறுமையானவன், அதிர்ந்து கூட பேசத் தெரியாதவன், யாரிடமும் வம்பு வழக்கு செய்யாமல் பணிந்து நடப்பவன் என்ற அந்த பிம்பமே இல்லாமல், வெறிபிடித்தவன் போல் சண்டை போடுவதைக் கண்டு பிரமித்துப் போயினர்,

செல்லத்துரை மனதிற்குள் தன் பேரன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டாலும், ஒருபுறம் அவனைப் பார்த்து பின் வாங்கினார் என்றே சொல்லலாம், 

“டேய், நீ ஒரு கேவலமானவன்டா உனக்கு இதழு கேக்குதா, அவ கோவில் கோபுரத்துல இருக்கிற கலசம் மாதிரிடா, அவ்ளோ புனிதமானவ, நீ தெரு சாக்கடையை விட அசிங்கமாவன்டா,

உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே தாலியை கட்டி இருப்ப, அந்த தாலி கட்டுன கையை வெட்டனும்னு அறிவு சொல்லுது, ஆனா என் மனசு தாலி கட்டுன நீ உயிரோடவே இருக்கக் கூடாதுன்னு என் மனசு சொல்லுதுடா,

நான் எப்பவுமே மனசு சொல்றதை மட்டும் தான் செய்யுவேன், அதனால உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்று கர்ஜித்தவாறு, 

தீரணின் அடியாட்கள் வைத்திருந்த ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வேகமாக தீரணை நோக்கி ஓடி வந்தான் ஆரி, தீரண் பயத்தில் வெளவெளத்துப் போயிருக்க,

தீரணை நெருங்கி ஆயுதத்தை அவன் நெஞ்சில் இறக்க இருந்த அந்த நேரத்தில் ஆரியின் கையைப் பிடித்து தடுத்தாள் பூவிதழினி, ஆரி அவளின் தொடுதலுக்கு கட்டுப் பட்டான்,

“இப்ப அவரு எனக்கு தாலி கட்டுன புருஷன், அவர் மேல ஒரு அடி விழுந்தாலும் அது என்னை அடிச்சதுக்கு சமம் மச்சா” என்று பூவிதழினி சொல்ல, 

அதைக் கேட்டும் குறையாத ஆவேசத்தோடு கையில் இருந்த ஆயுதத்தை தீரணின் மிக அருகில் தரையில் குத்தி விட்டு விறுவிறுவென அங்கிருந்து நடந்தான், அவன் குத்திய ஆயுதம் பாதிக்கும் மேல் மண்ணில் புதைந்து நிற்க,

தீரணுக்கு அல்லு கழன்று போனது, விட்டிருந்தால் ஆரியின் கோபத்திற்கு தீரணை நார் நாராக கிழித்து எறிந்திருப்பான், ஏதோ பூவிதழினி புண்ணியத்தில் உயிர் தப்பினான்,

தீரணின் உடல் அதீத பயத்தில் வியர்த்துக் கொட்டியது, கை கால்கள் உதறலெடுக்க இதயம் எக்குத்தப்பாக துடித்து, ஈரக்குலையே  நடுக்கியது, 

நிஷா ஆரியின் பின்னால் ஓட, ரஞ்சிதமும் ராஜதுரையும் நிஷாவின் பின்னால் சென்றனர், செல்லத்துரை பேரனின் ருத்ரதாண்டவத்தில் வெடவெடத்துப் போய் முகம் வெளிறிய நிலையில் மௌனமாக அங்கிருந்து சென்றார்,

சுற்றி நின்ற கூட்டம் சத்தமே இல்லாமல் கலைந்து போக பூவிதழினி அப்படியே சிலையென சமைந்து நின்றாள், 

தனக்காக சண்டையிட்டான் தன் காதலன் என்று ஆனந்தப்படுவதா அல்லது அந்த அவனின் நேசமும் காதலும் இனி தனக்கானது இல்லை என்று அழுவதா என்ற புரியாத மனநிலையில் அவள் கண்கள் குளமாகி வழிந்தது,

 

ஆகாயத்தில் நிலவு மேகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது, சில்வண்டுகளின் ரீங்காரம் கூட ஏதோ ஒரு ஒப்பாரி வைப்பதைப் போலவே அந்த ஊரெங்கும் எதிரொலித்தது,

வீட்டின் விளக்குகள் அணைந்தும், யாருடைய விழிகளிலும் உறக்கம் இல்லை, ஒவ்வொருவரின் மனதிலும் நடந்த நிகழ்வுகள் ரணங்களாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது,

ஆனால் பூவிதழினி எதைப் பற்றியும் சிந்திக்காமல் தன் மணவாழ்விற்கு தாயாரானாள், குளித்து பட்டுப் புடவை கட்டி, தலை நிறையப் பூச்சூடிக் கொண்டு, அடுக்களைக்கு வந்தவள்,

பசும்பாலை சுண்டக் காய்ச்சி ஒரு சொம்பில் ஊற்றிக் கொண்டு தன்னறைக்கு போனாள், அவளை வியப்பாகவும் விநோதமாகவும் பார்த்த வீட்டாரின் பார்வை அவளை சிறிதளவும் சோர்வுறச் செய்யவில்லை,

அறைக்குள் வந்தவள் கதவைச் சாத்தி தாளிட்டுக் கொண்டு திரும்பினாள், அங்கே அவளின் பஞ்சனையில் ஆரியிடம் அடிவாங்கிய வலியோடு அமர்ந்திருந்த தீரணுக்கு, 

பூவிதழினியைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது, அவளின் அந்த உடனடி மாற்றத்தை அவனால் நம்பவே முடியவில்லை, இதே நகரத்து பெண்ணாக இருந்திருந்தாள் இன்றைய அவன் நிலையே வேறு,

ஒருவேளை கிராமத்து பெண் என்பதால் கணவனே கண் கண்ட தெய்வம் என்று தன் மனதை மாற்றிக் கொண்டாளோ என்று எண்ணிக் கொண்டான், அவள் மெல்ல நடந்து வந்து அவனருகில் நிற்க,

தெய்வசிலையென அழகில் தேவதையாக ஜொலித்தவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான் தீரண், 

“அச்சோ என் நீங்க இவ்ளோ வேகமா இருக்கீங்க, ராத்திரிக்கு நீங்க சரியா சாப்பிடவே இல்லல்ல, பசியோட இருப்பீங்க முதல்ல பாலை குடுங்க” என்று அவள் பாலை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுக்க,

அவள் சொன்னது போலவே பசியோடு இருந்திருப்பான் போலும் மொத்த பாலையும் ஒரே மடக்கில் குடித்து விட்டான், அதைப் பார்த்ததும் சிரித்தாள் பூவிதழினி,

“ஏன் சிரிக்கிற, நீதான குடிக்க சொல்லி குடுத்த” என்று தீரண் கேட்க,

“அதுக்காக எனக்கு கொஞ்சம் கூட குடுக்காமலா குடுப்பீங்க” என்று வெள்ளந்தியாக கேட்டாள்,

“ஓ அப்படியா, அப்போ மீதி இருக்கிற பாலை இந்த க்ளாஸ்ல ஊத்து” என்று அவன் சொல்ல 

சொம்பில் இருந்த மொத்த பாலையும் ஊத்தினாள், அதில் பாதியை அவன் குடுத்து விட்டு மீதி பாதியை அவளுக்கு குடுத்தான், அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் குடித்தாள் பூவிதழினி,

அவள் பால் சொம்பையும் டம்ளரையும் டேபிளில் வைத்து விட்டு திரும்பியது தான் தாமதம், தீரண் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்,

“உன்னை மாதிரி ஒரு பொண்ணை என் லைஃப்ல நான் பார்த்ததே இல்ல டார்லிங், யூ ஆர் மோஸ்ட் வொண்டர் ஃபுல் கேர்ள்” என்று அவன் தன் லீலைகளைத் தொடங்கினான், எந்த வித எதிர்ப்பும் சொல்லாமல் சிரித்த முகத்தோடு அவனையே பார்த்தாள் பூவிதழினி, 

தன் கண்ணெதிரே பூவிதழினி கழுத்தில் தீரண் தாலி கட்டிய போது, தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதே என்ற அந்த ஆற்றாமை ஆரியின் நெஞ்சை ரணமாக்கிக் கொண்டிருந்தது. 

அவனது கைகள் இறுகிப் போயிருந்தன, கண்கள் வெறித்துப் பார்த்தபடி சிவந்திருந்தன, அவன் எதிரில் அமர்ந்து அழுது கொண்டிருந்த நிஷாலினியை, மெல்ல  நிமிர்ந்து பார்த்தான் ஆரி, 

அவளுடைய அழுகை அவனது வேதனையை இன்னும் அதிகமாக்கியது, அவளின் கண்களை துடைத்து விட்டு தேற்றினான்,

​”எல்லாம் என்னாலதான் ஆரி, அன்னைக்கு அந்தத் தீரன் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த நீ வராம இருந்திருந்தா, இன்னைக்கு ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கை இப்படிச் சிதைஞ்சு போயிருக்காது” என்று விம்மினாள் நிஷா.

​”அழாத நிஷா, நடந்ததுல உன்னோட தப்பு எதுவுமே இல்ல, நடந்த எல்லாமே அந்தத் தீராணோட கேவலமான ப்ளானால நடந்தது, உன்னைக் காப்பாத்துனது ஒரு மனுஷனா நான் செஞ்ச கடமை, 

அதுக்காக அவன் ஒரு இதழோட வாழ்க்கையை வெச்சு விளையாடுவான்னு நான் நினைக்கல, தீரணை குறைச்சு எடை போட்டுட்டேன், 

நான் மட்டும் இன்னும் கொஞ்சம் உசாரா இருந்திருந்தா இந்த மாதிரி நடந்திருக்காது, எல்லா தப்பும் என் மேல தான்” என்று குரல் கம்மக் கூறினான், 

“இல்ல ஆரி உன் மேல எந்த தப்பும் இல்ல, அப்பாவுக்காக நான் வந்து உங்கிட்ட ஹெல்ப் கேட்டது தான் தப்பு, நான் உங்க லைஃப் க்கு உள்ள வந்திருக்கவே கூடாது, 

அப்படி மட்டும் நடந்திருந்தா உங்க யாருக்குமே எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா இருந்திருப்பீங்க, எனக்கு தெரியும் ஆரி நீயும் இதழும் லவ் பண்ணிட்டு இருந்தீங்க தான” என்று நிஷா கேட்கவும் வெடுக்கென நிமிர்ந்து அவளைப் பார்த்தான்,

“எ… என்ன சொல்ற நிஷா, அது… வந்து… உங்கிட்ட யார் சொன்னது” என்று ஆரி கேட்க,

“யாரும் சொல்லல ஆரி, நானே தெரிஞ்சுக்கிட்டேன், ஒருநாள் தூக்கம் வராம நான் ரூமை விட்டு வெளிய வந்தப்போ நீயும் இதழும் கட்டிபுடிச்சு நின்னுட்டு இருந்தீங்க, 

அப்புறம் நீங்க இரண்டு பேரும் பேசியதையும் கேட்டேன், அப்பவே நீங்க இரண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன், அப்புறம் மாமா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ நீ இதழை தனியா கூட்டுட்டு போனேல்ல,

அதையும் பார்த்தேன், திரும்பி வந்த இதழ் முகமே சரியில்ல, அதுல இருந்து தான் நீ அவகிட்ட நம்ம விஷயத்தை சொல்லிட்டேன்னு நானே புரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் நிஷா, 

இனி மறைத்துப் பயனில்லை என்று நினைத்த ஆரி, பெருமூச்சு விட்டபடியே சொன்னான்,

“எனக்கு சின்ன வயசில இருந்து இதழை ரொம்ப புடிக்கும், ஏன்னா எப்பப்பாரு மச்சா மச்சான்னு என் பின்னாடியே சுத்திட்டு இருப்பா, 

இரண்டு பேருக்குமே ஒருத்தர் மேல ஒருத்தர் பாசம் வச்சிருந்தோம், 

என்னை விட இதழுக்கு என் மேல அன்பு அதிகம், எனக்கு ஒன்னுன்னா முதல்ல துடிச்சுப் போறது அவதான், ஆனா எப்போ உன் கழுத்துல தாலி கட்டினேனோ அப்பவே என் மனசுல நீ வந்துட்ட,

அதற்கப்புறம் இதழுக்கு என் வாழ்க்கையிலயும் மனசிலயும் இடம் கொடுத்தா, அது என்னை நம்பி வந்த உனக்கு நான் பண்ற துரோகம் ஆகிடும், அதான் அவளை விட்டு விலகிட்டேன்,

அதுக்காக அவளுக்கு தீரண் தாலி கட்டும் போது எனக்கென்னன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியல” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான் ஆரி,

நீ இவ்ளோ விளக்கம் சொல்ல தேவையில்ல ஆரி, உன்னைபத்தி எனக்கு தெரியும், நாளைக்கு விடிஞ்சதும் இதழை போய் நேர்ல பார்த்து பேசி தீரணுக்கு ஒரு முடிவு கட்டலாம்” என்று நிஷா சொல்லவும், அவள் கையைப் பற்றினான் ஆரி,

“என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ் நிஷா” என்றான், 

“அதெல்லாம் ஒன்னு இல்ல, விடு பார்த்துக்கலாம்” என்று கண்களால் ஆறுதல் சொன்ன நிஷா மெல்ல அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள், 

தன்னவளை நினைத்து பூரித்தவன், அவள் நெற்றியில் அழகான முத்தம் ஒன்றை பதிவித்து தன்னுள் இணைத்து இறுக்கிக் கொண்டான் ஆரி,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page