வலியை சூடிய காதலே – 35

காதலின் ரணங்களைச் சுமக்கும் மனங்களில் என்றுமே தீராத காதல் ஆறாக ஓடிக் கொண்டே இருக்கும்…!

வலியை சூடிய காதலே  –  35

“இன்னும் எம்புட்டு நாளைக்கு தான் இப்படி இடிஞ்சு போய் இங்கணயே உட்காந்திருப்ப, உன்ன பாத்து பாத்து அவளும் மருகிக்கிட்டே கிடக்கா, முதல்ல எழுந்திரிச்சு ஏதாவது வேலைய பாருய்யா” என்று ரஞ்சிதம் தன் மகனிடம் சொல்ல,

எந்த ஒரு பதிலுமில்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் ஆரி, அவனின் எதிரே கண் நிறைந்த நீரோடு வெறும் தரையில் படுத்திருந்தாள் நிஷா,

“இதழு போனது பெரிய இழப்பு தான் இல்லேன்னு சொல்லல, ஆனா அதென்ன உனக்கு மட்டுந்தானா எனக்கில்லியா, அவ பொறந்து நிலத்துல விழுந்ததுல இருந்து தோள்லயும் மார்லயும் போட்டு வளத்தினவ நான் தானா,

எனக்கு அவ போனது வருத்ததந்தான் அதுக்கு என்ன செய்ய அழுது அழுது மனச ஆத்திக்க வேண்டியது தான், பொறவு நம்மாள என்ன செய்ய முடியும்” என்றாள் ரஞ்சிதம்,

“ஆமாய்யா உன் ஆத்தா சொல்றது சரி தானா, எதையோ பறிகொடுத்தவன் மாதிரியே நீ இருக்கிறத பாக்க முடியலைய்யா, உங்கூடவே சேர்ந்து, 

இந்தா அந்த புள்ளையும் உண்ணாம உறங்காம கிடக்கு, நீ எழுந்து தெம்பா இருந்தா தான அந்த புள்ளைக்கு கொஞ்ச நிம்மதியா இருக்கும், போனவள நினைச்சு இருக்கிறவளை கஷ்டப் படுத்தாதய்யா” என்றார் ராஜதுரை,

நிஷா சோகமே மொத்த வடிவாய் படுத்திருந்தாள் நிஷா, சரியாக சாப்பிடாமல் தூங்காமல் உடல் மெலிந்து பார்க்கவே பாவமாக இருந்தாள், 

அந்நேரம் ஒருவர் ஓடி வந்து வாசலில் நின்று அழுகையோடு அழைத்தார்,

“ஐயா, டாக்டரய்யா சீக்கிரம் வாங்க ஐயா என் மக பேச்சு மூச்சில்லாம மயங்கி கிடக்கா வந்து என்னான்னு பாருங்கய்யா” என்று கத்தியழைக்க, 

ரஞ்சிதமும் ராஜதுரையும் வெளியே ஓடினர், ஆரி அப்படியே அமர்ந்திருந்தான், நிஷா கூட எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு ஓடினாள்,

“ரஞ்சிதம்மா என்னன்னே தெரியல நல்லா இருந்த புள்ளை திடீர்ன்னு கீழ விழுந்துட்டா, டாக்டரு தம்பிய வந்து என்ன ஏதுன்னு பாக்க சொல்லுங்கம்மா” என்று தன் மகளுக்காக கெஞ்சினார் அந்த தகப்பன்,

நிஷாவுக்கு பாவமாக இருந்தது, திரும்பி உள்ளே வந்தாள் அப்போதும் அதே இடத்தில் சிலையென இறுகிப் போய் அமர்ந்திருந்தான் ஆரி,

“என்ன ஆரி இப்படி உட்காந்திருக்க வா வந்து பாரு ஆரி” என்று அவனை அழைத்தாள், அவன் அசையாமல் அப்படியே இருக்கவும், அவனருகே அமர்ந்தாள் நிஷா,

“நீ என்ன மனநிலையில இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது ஆரி, ஆனா அதுக்காக உன்னை நீயே தொலைச்சுட்டு இருக்கிறதை தான் என்னால தாங்க முடியல,

தயவு செய்து இப்படியே உடைஞ்சு போகாத ஆரி, அது எனக்கு மட்டுமில்ல இதழுக்கும் பிடிக்காது, அவளுக்காக நீ துடிக்கிறது சரிதான், அவளை மட்டுமே நினைச்சுட்டு வேதனை படுறது எந்த விதத்துல சரியா இருக்கும்,

இப்போ நீ இப்படி கஷ்டப்படுறதை இதழு பார்த்தா சந்தோஷப்படுவாளா இல்லல்ல, அவளுக்காகவாவது நீயே உன்னை தேத்திக்கப் பாரு ஆரி” என்று தன்னவனை ஆறுதல் படுத்தினாள் நிஷா,

“என்னால இப்ப வரைக்கும் அவ இந்த உலகத்துல இல்லைன்னு ஏத்துக்க முடியல நிஷா, அவளோட கடைசி பேச்சும் மூச்சும் இப்ப வரைக்குமே என் கண் முன்னாடியே இருக்கு” என்று உடைந்து போய் சொன்னான் ஆரி,

“நீ ஏன் இதழு இந்த உலகத்துல இல்லன்னு நினைக்கிற, அவ தான் சொன்னா இல்ல உன் கூடவே இருப்பேன்னு, இப்பவும் இதழு நம்ம கூட தான் இருக்கா, அவ உன்னை பார்த்துட்டு தான் இருப்பா,

நீ சிரிச்சா அவளும் சிரிப்பா, நீ அழுதா அவளும் அழுவா இது நான் சொல்லல, இதழு சொன்னது மறந்திருச்சா, அவளோட கடைசி ஆசையா கேட்டதை நீதான செய்யனும்,

உனக்காக இல்லன்னாலும் அவளுக்காக நீ உடைஞ்சு போகாம, தெம்பா எழுந்திரு ஆரி, உன்னை  கஷ்டப்படுத்தி அவளை அழ வைக்காத” என்றாள் நிஷா, 

தன்னவளின் வார்த்தைகளில் தன்னையே சமாதானம் செய்து கொண்டு எழுந்தான் ஆரி,

தன் ஸ்டெதாஸ்கோப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான், வாசலில் அழுதுகொண்டிருந்த அந்தத் தந்தையைப் பார்த்தவன், 

மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணின் நாடியைப் பரிசோதித்தான், ​

தன் வீட்டிலேயே இருந்த மருத்துவ அறையில் படுக்க வைத்து அவசரச் சிகிச்சைகளை செய்தவன்,

“ஒன்னும் பயப்படாதிங்க பெரியவரே, லோ சுகர் தான், இப்போ சரி ஆகிடும்” என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணை கண் முழிக்கும் வரை காத்திருந்து,

அவள் கண் விழிச்சு எழுந்ததும், மீண்டும் ஒருமுறை பரிசோதித்து விட்டு சில மாத்திரைகளை கொடுத்து அனுப்பி வைத்தான் ஆரி, அந்தப் பெண் போகும் போது, திரும்பி பார்த்து பார்வையால் தன் நன்றியை தெரிவித்துச் சென்றாள்,

அந்த பார்வை ஆரியை என்னவோ செய்தது, என்னென்னவோ செய்தது, ஒரு நொடி அவளின் உருவம் பூவிதழினி போல பிரம்மையாக தோன்றி மறைந்தது,

என்னையும் என் மனதையும் மாற்ற தான் இதழு வந்தாளோ, ஆம் அவளாக தான் இருக்க முடியும், என் நிலையை அவள் பார்க்க முடியாமல் தான் வோறொரு பெண்ணின் உருவில் வந்திருப்பாள்,

நான் பழைய ஆரியாக மாறி சகஜமான நிலையில் இருந்தால் தான் அவளுக்கு சந்தோஷம், நான் மாற வேண்டும் அவளுக்காகவாது என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற, 

நினைவோடு அப்படியே நின்றவன் சிந்தனையை கலைக்க அங்கே ஒரு பெரிய வேன் வந்து நின்றது, சிந்தனையில் இருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்த்தான், அதில் இருந்து இறங்கிய ஒருவன், 

பின்பக்கமாக கதவினைத் திறந்து ஒரு வீல்சேரை வெளியே தள்ளிக் கொண்டு வந்தான் அதில் விஸ்வநாதன் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார் 

கர்மா’ யாரையும் விடாது என்பதற்குச் சான்றாக  சில மாதங்களுக்கு முன்பு வரை கர்வத்தோடு நெஞ்சை நிமிர்த்தி நடந்த விஸ்வநாதனா இது, 

முடவாதத்தின் கோரப் பிடியில் சிக்கிய விஸ்வநாதனின் ஒரு பக்கம் மொத்தமாகச் செயலிழந்து போயிருந்தது, அவரது வலது கை, விறைத்துப் போய் மார்போடு ஒட்டி, விரல்கள் கோணலாக மடிந்து கிடந்தன,

அவரது முகம் ஒரு பக்கமாக இழுக்கப்பட்டு, வாய் கோணலாகிப் போயிருந்தது, ஒரு காலத்தில் அதிகாரமாகப் பேசிய அந்த இதழ்களின் ஓரத்தில், அறியாமல் எச்சில் வடிந்து கொண்டிருந்தது,

அவரது கண்கள் நிலைகுத்திப் போய், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன, அதில் ஒரு துளி கூட உயிர் இல்லை,

அவரது தோல்கள் சுருங்கி, எலும்புகள் துருத்திக் கொண்டு, ஒரு உலர்ந்த மரம் போல வீல்சேரில் சாய்ந்திருந்தார், வார்த்தைகள் வராமல், தொண்டைக்குள் ஏதோ ஒரு சத்தம் மட்டும் உருண்டது,

ஒரு காலத்தில் ஊரையே ஆட்டியவர், இன்று ஒரு கைக்குழந்தையைப் போலப் பிறரின் உதவியை எதிர்பார்த்துக் கிடக்கும் அவரின் உருவத்தைப் பார்த்த ஆரிக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை,

நிஷா கண்களில் அருவியென நீர் பெருக அசையாமல் தகப்பனைப் பார்த்து நிற்க, ராஜதுரை ரஞ்சிதம் இருவருக்கும் சற்று அடையாளம் காணமுடியாமல் விழித்தாலும், 

ஆரி நிஷா இருவரின் உணர்ச்சிகளைக் கண்ட ரஞ்சிதம் வந்திருப்பது தன் உடன்பிறந்தவன் என்று கண்டு கொண்டாள், தன் குடும்பத்தையே சிதைத்தவன் இன்று உயிரோடு சிதைந்து கிடப்பதை பார்க்க அவள் மனம் தாள வில்லை,

எப்பேர்ப்பட்ட எதிரியாக இருந்தாலும் அது எதிர்த்து நிற்கும் வரை தான், அதுவே கலங்கி நின்றால் எதிர்த்து நின்று வாதிட முடியுமா,

ஆரி நிஷாவை அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வந்த நொடியே அதிர்ச்சியும், ஆத்திரமும், அதீத ரத்த அழுத்தமும் ஒன்றுசேர, அவரது மூளைக்குள் இருந்த ஒரு மெல்லிய நரம்பு சட்டென்று விடைத்துக் கொண்டது,

அந்த வினாடி திடீரென விஸ்வநாதனின் தலை சுற்றியது, சுற்றி நின்றிருந்த உருவங்கள் எல்லாம் மங்கலாகத் தெரிந்தன, வலது பக்கம் உடல் பாரமாகத் தெரிந்தது, 

பேச முயன்றார் ஆனால் நாக்குக் குழறியது, அவரது வலது கால் சட்டென்று பலமிழக்க, நிலைகுலைந்து அப்படியே தரை நோக்கிச் சாய்ந்தார், மண்டபத்தில் இருந்தவர்கள் பதறியபடி ஓடி வந்தனர்,

ஆனால் அதற்குள் அந்த முடவாதம் தன் வேலையைக் காட்டியிருந்தது, அவனது வலது கை விறைத்துக் கொண்டு மார்போடு ஒட்டிக்கொண்டது, முகம் ஒரு பக்கமாக இழுக்கப்பட,

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர், அந்த மண்டபத்தின் தரையில் ஒரு அநாதையைப் போலக் கிடந்தார், தீரணின் தகப்பனார் வீரராகவன் உதவியோடு,

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவனது பாதி உடல் செயலிழந்து போனது, அவர் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் சம்பளம் கிடைத்தது,

அதன் பின்பு தீரணின் பிடியில் சிக்கி தன் ஒட்டுமொத்த சொத்துக்களையும் இழந்து படுத்த படுக்கையாக கிடந்தவரை சீண்ட கூட ஆளில்லாமல்,

இப்போது அரைகுறை உயிரோடும் உடலோடும் பிறந்த மண்ணிற்கே கொண்டு வரப்பட்டிருந்தார் விஸ்வநாதன், அவருடன் வந்தவன் மொத்த கதையையும் சொல்லி அவரை அங்கேயே விட்டுச் சென்றான்,

நிஷா அழுது கொண்டே வீட்டிற்கு உள்ளே ஓடிவிட்டாள், ஆரி அப்படியே நின்றிருக்க, ரஞ்சிதம் தான் விஸ்வநாதனின் அருகே சென்றாள்,

அண்ணனின் மடிந்த விரல்களையும், கோணலான முகத்தையும் பார்த்தவள், அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டு கதறி அழுதாள்,

​”உங்க ரத்தம் தானே நானும், ஏன் அண்ணே அவ்வளவு வன்மம் என் மேல, உங்கூட பொறந்ததை தவிர நான் என்ன குத்தம் பண்ணேன்னு என்னை தண்டிச்ச, 

சொத்து சுகம் அம்புட்டையும் கேட்டப்போ கூட உனக்காக தான நின்னு நான் அம்புட்டு பேர்கிட்டயும் மல்லுக்கட்டின, என்னை எப்படி கஷ்டப்படுத்த உனக்கு மனசு வந்துச்சு” என்று விம்மி விம்மி அழுதாள் ரஞ்சிதம்,

 

​விஸ்வநாதனின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து, அவரது கோணலான கன்னத்தில் உருண்டது, பேச முடியாமல் அவர் தொண்டைக்குள் ஒரு விசித்திரமான சத்தம் எழும்பியது,

அது மன்னிப்பு கோரும் சத்தமா அல்லது தன் நிலையை எண்ணி அழுத சத்தமா என்று எவருக்கும் தெரியவில்லை,

​”காசு பணம் கௌரவம்னு சொல்லிச் சொல்லி, பெத்த மகளையே அநாதையாக்கி, கடைசியில எல்லாத்தையும் தொலைச்சுட்டு இப்படி வந்து நிக்கிறீகளே,

நீங்க செஞ்ச துரோகத்தை நினைச்சா உன் முகத்துல முழிக்கிறதே பாவமுன்னு தோனுது, ஆனா, என் அண்ணன் இப்படி அழுதுட்டு நிக்கிறதை பாக்க இந்த பாவி மனசு தாள மாட்டேங்குதே அண்ணே” என்று அவர் மார்பில் சாய்ந்து அழுது தீர்த்தாள்,

ராஜதுரை மெல்ல வந்து ரஞ்சிதத்தின் தோளைத் தொட்டார்,

​”ரஞ்சிதம் போதும் அழாத நடந்ததை எல்லாம் பேசி இப்ப என்ன ஆகப்போகுது, அந்த மனுஷன் செஞ்ச பாவத்துக்கு தான் அந்த ஆண்டவனா பாத்து தண்டனையைக் கொடுத்துட்டாரு, 

எப்பேர்ப்பட்ட எதிரியா இருந்தாலும், கலங்கிப் போய் வந்து வாசல்ல நின்னா, பகையோடு பலி தீக்கிறது நம்ம வம்சத்துக்கு அழகில்ல நல்லவரோ கெட்டவரோ அவரோட நிலமை எதிரிக்கும் வரக்கூடது,

ஆனா அதுக்காக அவரை இப்படியே விட முடியாதுல்ல இனி அவருக்குன்னு யார் இருக்கா நாம தான பாத்துக்கனும், எழுந்திருச்சு வா அவரை உள்ள கூட்டிட்டு போகலாம் என்ற ராஜதுரை,

விஸ்வநாதனை வீல்சேரோடு உள்ளே அழைத்துச் செல்ல ரஞ்சிதம் துணையாக சென்றாள்,

ஆரி சொல்ல முடியா துயரில் மருகி நின்றான், பூவிதழினியை நினைத்து நினைத்து உடைந்தவன் சற்றே தேறி எழுந்து நிற்கையில் விஸ்வநாதனின் வரவு அவனை இன்னமும் சோகத்தில் ஆழ்த்தியது,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page