நீ அருகே இருந்திருந்தால் உன்னையே நேசித்திருப்பேன்,
நீ என்னை விட்டு வெகு தொலைவு சென்றதால் உன் நினைவுகளை யாசிக்கிறேன் காதலே…
வலியை சூடிய காதலே – 36
வலிகளை வாரிவழங்கும் காலமே அதற்கான அருமருந்தையும் தந்து ஆற்றிச் செல்லும் காயம் ஆறினாலும் அதன் வடுவை அழிக்க காலதேவனாலும் இயலாது தான் ஆனால் வலிகள் குறையுமல்லவா,
இங்கே பல வலிகளைத் தாங்கிய இதயத்தில் ரணங்கள் குறைந்து வடுக்களாக மாறியிருந்தது,
ஆரியின் வீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தோரணங்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது,
வாசலில் நின்றிருந்த பெரிய பந்தலில், ஊர் மக்கள் அனைவரும் கூடியிருக்க, ஆரி ஒரு பட்டாம் பூச்சியாய் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தான்,
பட்டு வேட்டியும், சந்தன நிறச் சட்டையும் அவனது ஆகிருதிக்கு இன்னும் ஒரு கம்பீரத்தைக் கொடுத்திருந்தது,
அவனது அகன்ற தோள்களும், துடிப்பான நடையும், முகம் முழுக்க நிறைந்திருந்த அந்தப் புன்னகையும் அவனைப் பார்ப்பவர்களை அப்படியே கட்டிப் போட்டது,
ராமநாதனும் செல்லத்துரையும் ஒரு பக்கம் அமர்ந்து ஊர் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, ராஜதுரையும் ரஞ்சிதமும் வந்தவர்களை வரவேற்க,
சிவகாமியும் தங்கமணியும் விருந்தாளிகளையும் அங்கே கூடியிருந்தர்களையும் உபசரித்தனர், ஜகதாம்பாள் பாட்டி தன் தலைமகனருகேயே அமர்ந்து கொண்டு அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்தார்,
பிள்ளைகள் என்ன பெரிய தவறு செய்திருந்தாலும் பெற்ற தாயை பொருத்த மட்டிலும் எப்போதும் பிள்ளை தான், வயதே கடந்து முதிர்ந்தாலும் குழந்தை தான்,
தன் இடுப்பு வலி பொறுத்து பெற்றெடுத்த பிள்ளையின் தவற்றை மன்னிக்கும் மறக்கும் மனம் படைத்த தாயாயிற்றே அதான் இன்று விஸ்வநாதனை குழந்தை போல கவனித்துக் கொள்கிறார் ஜகதாம்பாள் பாட்டி,
மன்னித்து விடுங்கள் என்று வாய் விட்டு கதறவோ கை எடுத்து கும்பிடவோ முடியா நிலையில் ஒவ்வொரு நொடியும் மருகித் தவிக்கிறார் விஸ்வநாதன்,
நிஷாவின் தாயார் பரிமளம் பற்றி கேட்டால் கண்ணீர் வடிக்கிறாரே தவிர, பரிமளத்திற்கு என்ன ஆனது என்று அவரால் விளக்க முடியவில்லை,
ஆனால் பரிமளம் உயிரோடு இல்லை என்று மட்டும் உறுதியாக தெரிய அதன் பின் யாரும் பரிமளத்தைப் பற்றி கேட்பதில்லை,
சிறகே இல்லாமல் பறக்கும் ஒருவனின் கண்களில் அவளின் உருவம் இதுவரை தென்படவே இல்லை, யாரிடம் பேசினாலும் அவனின் சிந்தை நொடிக்கொரு முறை தன்னவளைத் தான் தேடிச் செல்ல,
கூட்டத்திலிருந்து நழுவி அவளை நாடிச் சென்றான் ஆரி, நிஷாவின் அறைக் கதவை மெதுவாக திறந்து உள்ளே நுழைந்து தாளிட்டான்,
கண்ணாடியின் முன்பு நின்று தன் தோடுகளைச் சரி செய்து கொண்டிருந்தவளின் பின்னால் சத்தமில்லாமல் வந்து நின்றான் ஆரி,
சந்தன நிற பட்டுப் புடவையில், தலை நிறைய மல்லிகைப் பூ சூடி, காதுகளில் அவளது அசைவுக்கு ஏற்ப ஆடும் ஜிமிக்கிகளோடு அவள் ஒரு தேவதையாய் நின்றிருந்தாள்,
கண்ணாடியின் வழியே அவனது கம்பீரமான உருவத்தைக் கண்டதும் புன்னகைத்தவள் திரும்புவதற்குள், அவளது மெல்லிய இடையைப் பற்றித் தடுத்தான் ஆரி, நிஷாவுக்கு உடல் சிலிர்த்தது,
“என்ன ஆரி, வெளியே அத்தனைப் பேர் இருக்காங்க, யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க, விடு ஆரி” என்றாள் அவள்,
“யார் இருந்தா எனக்கென்ன, என் பொண்டாட்டி நான் கட்டி பிடிப்பேன்” என்று சொன்ன அவனது பிடி இன்னும் இறுகியது, நிஷாவின் முகம் நாணத்தில் சிவந்தது,
அவளது கழுத்தில் விழுந்து கிடந்த கூந்தலை மெல்ல ஒதுக்கிவிட்டு, அவனது நாசி அவளது கழுத்தில் புதைந்து அவளது மணத்தைச் சுவாசித்தான்,
“வர வர உன் தொல்ல தாங்கல ஆரி, முதல்ல என்னை விடு, அத்தையோ சித்தியோ வருவாங்க” என்று அவள் சிணுங்க,
“வந்தா வரட்டும் அதுக்கு நான் ஏன் உன்னை விடனும், அப்படியெல்லாம் விட முடியாது, ஆமா நீ ஏன் இன்னைக்கி இவ்ளோ அழகா இருக்க, அதான் கொஞ்சமா கொஞ்சலாமேன்னு” என்று இழுத்தவன், அவளை தன் புறம் திரும்பி நிறுத்தினான்,
“இப்படி எல்லாம் பேசி மயக்கி நீ கொஞ்சினதெல்லாம் போதும், ஒரு ஆள் ரொம்ப நேரமா உன்னையே பார்க்குது, ஆனா நீதான் ரொமென்ஸ் மூடுல கவனிக்காம இருக்க ஆரி” என்று சொல்லி அருகே கண்ணைக் காட்டினாள் நிஷா,
நிஷா கண் காட்டிய திசையில் ஆரி மெல்லத் திரும்பினான், அங்கே படுக்கையின் நடுவே, பஞ்சு மெத்தைக்கு மேல், நிலவின் ஒரு துண்டு பூமிக்கு வந்து விழுந்தது போல,
ஒரு தேவதை தன் பிஞ்சு கை கால்களை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது, ஆரி மெல்லக் குனிந்து, அந்தப் பூவின் இதழ் போன்ற குழந்தையின் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான்,
ஆரி நிஷா இருவரின் காதலுக்கும் சான்றாக, கடவுள் கொடுத்த பரிசாக தென்றலூரின் இளவரசி பிறந்து விட்டாள், அவளின் அழகும் சிரிப்பும் பேரிழப்புக்கும் பெரும் வலிக்கும் மாமருந்தாகிப் போனது,
தன் தந்தையைக் கண்டதும், ரோஜாப்பூ இதழ்கள் வளைந்து புன்முறுவல் செய்ய, பிஞ்சுக் கைகள் அவன் சட்டையை உரிமையோடு பற்றிக் கொள்ள,
தன் உயிரின் பட்டுடல் மேனி நோகாமல் பார்த்து பக்குவமாய் தூக்கி கைகளில் ஏந்தினான் ஆரி, பொங்கை வாய் திறந்து மெல்ல ஏதோ அதன் பாஷையில் சொல்ல, அதைக் கேட்டு சிரித்தான்,
“சரி சரி இரண்டு பேரும் கொஞ்சுனது போதும், வெளிய எல்லாரும் வெய்ட் பண்றாங்க இப்ப போய் பாப்பாவுக்கு பேர் வைக்கலாமா” என்று நிஷா கேட்கவும்,
“என் செல்லத்துக்கு இன்னைக்கி பேர் வைக்கப் போறோமா, இனிமே பட்டு அம்மு தங்கம் செல்லம்னு சொல்லாம பேர் சொல்லியே கூப்பிடலாம் இல்ல” என்று ஆரி சொல்ல, மெலிதாகப் புன்னகைத்தாள நிஷா,
ஆரி குழந்தையை ஏந்தியபடி அறைக்கதவைத் திறந்து கொண்டு கம்பீரமாக வெளியே வந்தான். கூடத்தில் இருந்த மொத்த கண்களும் ஆரியின் இளவரசியை பார்த்து புன்னகைத்தது,
செல்லத்துரை தன் கொள்ளுப் பேத்தியைக் கண்டதும்,
“என் செல்லத்தைப் பாரேன், துரையய்யா வம்சத்து லட்சணம் அப்படியே இருக்கு” என்று நெகிழ்ந்தார்,
“ஹைய்யோ தாத்தா மறுபடியும் உங்க வம்சத்து பெருமையை பேசி புதுசா ஒரு பிரச்சனையை உருவாக்காதீங்க தாத்தா” என்றான் ஆரி,
“அடப்போடா நீ என்ன சொன்னாலும் அவ இந்த துரையய்யா குடும்பத்தோட அடுத்த தலைமுறையோடு முதல் வாரிசுடா” என்று செல்லத்துரை சொல்லவும்,
ஜகதாம்பாள் பாட்டி தன் வெற்றிலைப் பெட்டியைத் தட்டி ஓரமாக வைத்து விட்டு,
”அது எப்படி உங்களுக்கு மட்டும் வாரிசுன்னு சொல்லுவீக, அவ எங்க சக்கரவர்த்தி குடும்பத்தோட குலசாமி, எங்க ரத்தமும் அவ உடம்புல ஓடுதுல்ல,
இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு ஊரு முழுக்கப் பெருமை பேச எங்களுக்கு உரிமை இருக்குய்யா” என்று விடாக்கண்டியாக ஜகதாம்பாள் பாட்டி சொல்ல,
“வாய் பேச்சுக்கு வேணா உரிமை இருக்குன்னு சொல்லிக்கோங்க, மத்தபடி வாரிசுரிமை எல்லாம் எங்களுக்குத்தான்” என்று வம்பு இழுத்தார் செல்லத்துரை,
“சரி… சரி… ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க. இவ யாருக்கு வாரிசுன்னு இப்போவே முடிவு பண்ணிடலாம்” என்று சொல்லிவிட்டு தூரத்தில் நின்றிருந்த ரஞ்சிதத்தைப் பார்த்து,
“அம்மா, பாட்டி சொல்றது சரியா இல்ல தாத்தா சொல்றது சரியா, நீங்க என்ன சொல்றீங்க?” என்று ஆரி கேட்க, ரஞ்சிதம் ஆரியிடம் வந்து அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கி,
”எனக்கு என்னவோ இவ ரெண்டு பேருக்கும் வாரிசு இல்ல இவ இரண்டு குடும்பத்தோட ஒரே சொத்து, அதனால தனித்தனியா பங்கு போட முடியாது” என்று ரஞ்சிதம் சொல்ல,
“என் ரஞ்சித சொன்னா அது சரியா இருக்கும், இனிமே பரம்பரை பெருமையை விட்டுட்டு குழந்தைய கொஞ்சுறது தான் எல்லாரோட வேலையா இருக்கப் போவுது, இல்லாடா தங்கம்” என்று பேத்தியை செல்லங் கொஞ்சினார் ராஜதுரை
“நாங்க சும்மா பொழுது போகாம விளையாட்டுக்குப் பேசிக்கிட்டு இருந்தோம், இவ நம்ம எல்லாருடைய கண்ணுமணி தான் போதுமா” என்று செல்லத்துரை உடனே இறங்கி வர, ஆரி தன் மகளின் கன்னத்தை வலிக்காதவாறு கிள்ளினான்,
”பாத்தியா செல்லக்குட்டி நீ பிறந்ததுமே இந்த வீட்ல இருக்கிற பெரிய மனுஷங்களை எல்லாம் எப்படி ஆட்டி வைக்கிறன்னு” என்று ஆரி சொல்ல,
“இருக்காத பின்ன இம்புட்டு காலமா என்ன ஆட்டம் போட்டாக, அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அவ வளந்து ஆளாகி இவக எல்லாரையும் ஒரு வழி பண்ணனும்” என்றாள் தங்கமணி, அங்கிருந்த அனைவரும் சிரிக்க அந்த இடமே கலகலப்பானது,
“இன்னும் எம்புட்டு நேரந்தான் பேசிக்கிட்டே இருப்பீக, பச்சப்பிள்ளைய இப்படி கையில வச்சுட்டே இருந்தா, நம்ம சூட்டுல மேலு வலி எடுத்து ராத்திரிக்கு உறங்காது,
முதல்ல பிள்ளைக்கு பேரை வச்சு தொட்டில்ல போடுங்க, அப்புறம் எதுன்னாலும் ஆற அமர பேசிக்கலாம்” என்றாள் சிவகாமி,
“ஆமா சிவகாமி சொல்றதும் சரிதான், பெத்தவக பிள்ளைய வாங்கி பேரை வையுங்க” என்று சொல்ல நிஷா குழந்தையை வாங்கிக் கொள்ள, ஆரி ஒரு கையில் தன் மகளையும், மறு கையில் தன் மனைவியையும் அணைத்துக் கொண்டு நின்றான்
அங்கே கூடியிருந்த உறவுக்காரர்கள் ஊர்காரர்கள் என அனைவர் முன்னிலையிலும் ஆரியும் நிஷாவும் குழந்தையின் காதோரம் குனிந்து, மூன்று முறை சொல்லி பெயரைச் சூட்டினர்
”பூவிதழினி…
பூவிதழினி…
பூவிதழினி…!”
அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் பூவிதழினி பெயர் இசைக்க அதைக் கேட்ட எல்லா கண்களும் பணிந்தது,
கூட்டத்தில் இருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஒரு நிமிடம் மெய்சிலிர்த்து நின்றனர், பூவிதழினி என்ற பெயர் வெறும் பெயராக ஒலிக்கவில்லை,
அது அந்த ஊரின் கௌரவப் பித்துகளால் சிதைக்கப்பட்ட ஒரு உயிர்ப்பாக எதிரொலித்தது,
விஸ்வநாதன் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது, தன் தவற்றால் பறிபோன ஒரு உன்னத உயிரின் பெயரைத் தன் பேத்திக்கு வைத்தது, அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பிராயச்சித்தமாகத் தோன்றியது,
“ரொம்ப நல்ல பேருப்பா அந்தப் புள்ள இதழு இன்னைக்குப் பாப்பா ரூபத்துல மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்துட்டா” என்று ஊர் பெரியவர் ஒருவர் சொல்ல,
அங்கிருந்த ரஞ்சிதமும் சிவகாமியும் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டனர்,
ஆரி நிஷாவின் தோளோடு அணைத்தபடி, தன் கையில் இருந்த பூவிதழினியை (பாப்பாவை) ஆசையோடு பார்த்தான், அந்தப் பிஞ்சுத் தேவதை தன் தந்தையின் முகத்தைப் பார்த்து, ஒரு மழலைப் புன்னகையைச் சிந்தியது,
வடுக்கள் மாறாதது தான், ஆனால், அந்த வடுக்களின் மேல் இன்று ஒரு புதிய செடி முளைத்து அதில் ஒரு அழகான பூ பூத்திருந்தது,
அதன் பெயர் பூவிதழினி.
சுபம் சுபம் சுபம்
காதல் காலமெல்லாம் தன் கதையை காற்றோடு கலந்து உலகெங்கும் பரப்பிக் கொண்டு தான் இருக்கும்…!
