உயிராக வந்த உறவு – அத்தியாயம் 18
வானம் சற்று இருண்டு கொண்டு இருக்க,சாலையில் வாகனங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. அர்ச்சனா காரை ஓட்டி கொண்டே கைப்பேசியை எடுத்துக் கொண்டு ஒருவருக்கு அழைத்து “நான் சொன்ன விஷயம் எல்லாம் ரெடியா இருக்கணும், அவளை நான் இப்போவே முடிக்கணும்…” என அவள் பேசிக்கொண்டே சாலையை கடக்க ஆரம்பித்தாள்.அவளது மனதில் கோபமும் திட்டமும் மட்டுமே இருந்தது.
சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே அவளுக்குத் தெரியவில்லை.
அந்த நேரத்தில் தூரத்தில் இருந்து ஒரு லாரி மிக வேகமாக வந்தது.ஹார்ன் ஒலி சாலையை கிழித்து வர,“பாம்… பாம்…!”
அர்ச்சனா காரை திருப்பிய படி,ஒரு காதில் போன் பேசிய படி திரும்பிப் பார்த்த அந்த நொடியே அவள் கண்கள் பெரிதாக திறந்தன.ஆனால் அது ஒரு நொடி தாமதம்.“டாாம்…!”ஒரு பெரிய சத்தம்.
அந்த லாரி அவள் காரை மோதி தள்ளியது.அவளது கார் காற்றில் தூக்கி எறியப்பட்டு சாலையில் பல அடிகள் தள்ளி விழுந்தது.அவளது கைப்பேசி ஒரு பக்கம் உருண்டு போய் உடைந்தது.
சுற்றிலும் இருந்த மக்கள் அதிர்ச்சியுடன் ஓடி வந்தார்கள்.
“அய்யோ… ஆக்சிடென்ட்!”
“யாராவது ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க!”என சொல்ல
அர்ச்சனா சாலையில் அசையாமல் கிடந்தாள்.அவளது நெற்றியில் இருந்து இரத்தம் மெதுவாக சாலையில் பரவியது.அந்த நொடியில் அவளது கண்கள் மெல்ல திறந்தன.மங்கலான பார்வையில் வானத்தை பார்த்தாள்.
அவளது மனதில் ஒரு பெயர் மட்டும் ஒலித்தது.“தீரன்…”
அதன் பிறகு அவளது கண்கள் மெதுவாக மூட,ஆம்புலன்ஸ் சத்தம் தூரத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது.
மறுபக்கம் அலுவலகத்தின் தனது கேபினில் தீரன் தனியாக அமர்ந்து கொண்டிருந்தான். தன் நண்பன் சேரன் பேசியதை நினைத்துக் கொண்டே எதையோ யோசித்துக் கொண்டு இருந்தான்.மேசை முழுக்க கோப்புகள் குவிந்திருந்தாலும் அவன் பார்வை அவற்றில் இல்லை. ஜன்னல் வழியாக வெளியில் விழும் மழைத்துளிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மனம் முழுக்க ஏதோ ஒரு கலக்கம். காரணம் தெரியவில்லை. ஆனால் அந்த நாள் முழுக்க அவனுக்கு அமைதி இல்லை.அந்த நேரத்தில் அவன் நினைவில் தாரணி தான் வந்தாள். காலை அலுவலகத்தில் அவளை பார்த்தது முதல் அவள் முகம் அவன் நினைவிலிருந்து போகவில்லை. அவள் அமைதியாக வேலை பார்த்த விதம்… அவள் கண்களில் இருந்த ஏதோ ஒரு வலி… அவன் மனதை கொஞ்சம் குலுக்கியது.
“ஏன் இப்படி மனசு கலங்குது…” என்று தன்னிடமே மெதுவாக சொல்லிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
அந்த நேரத்தில் அவன் மேசையில் இருந்த மொபைல் திடீரென்று அதிர்ந்தது.திரையில் ஒரு அறியாத நம்பர்.சில நொடிகள் தயங்கினான். பிறகு அழைப்பை எடுத்தான்.
“ஹலோ… தீரன் பேசுறீங்களா?” என்று அங்கிருந்து ஒரு அவசரமான ஆண் குரல் கேட்க
“ஆமாம்… யார் பேசுறீங்க?” என்று தீரன் சற்று குழப்பத்துடன் கேட்டான்.
“சார்… நான் சிட்டி ஹாஸ்பிடல் இருந்து பேசுறேன். அர்ச்சனா மேடம்… உங்களுக்கு தெரிந்தவரா?”
அந்த பெயர் கேட்கும் போது தீரன் புருவம் சுருங்கியது.“ஆமாம்… தெரியும். என்ன ஆயிற்று?”என அவன் கேட்க,
அங்கிருந்து வந்த பதில் அவனை முழுக்க அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“சார்… அவர்களுக்கு ரோட்டில் ஒரு பெரிய ஆக்சிடென்ட் ஆயிருக்கு. இப்போ எமர்ஜென்சி வார்ட்ல இருக்காங்க. உடனே அவருடைய குடும்பத்தாரை தொடர்பு கொள்ள சொல்லி இருந்தாங்க. அவருடைய மொபைலில் லாஸ்ட் டயல் லிஸ்ட்ல உங்க நம்பர் இருந்தது… அதனால தான் நாங்க கால் பண்ணோம்.”என சொல்லவும்,
அந்த ஒரு வாக்கியம் தீரனின் இதயத்தைக் குத்தியது போல இருந்தது.
“என்ன… ஆக்சிடென்ட்…?” என்று அவன் திடுக்கிட்டு எழுந்து நின்றான்.
அவன் குரலில் இருந்த அதிர்ச்சியை கேட்டு அங்கிருந்தவர் மீண்டும் பேசினார்.“ஆமாம் சார். காரை ஓட்டிக் கொண்டு வரும்போது ஒரு லாரி நேராக மோதியிருக்கிறது. இப்போ டாக்டர்கள் ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள். நிலைமை கொஞ்சம் சீரியஸா இருக்கு.”என சொல்லவும்
ஒரு நொடி தீரனுக்கு வார்த்தையே வரவில்லை. அர்ச்சனாவுக்கு இப்ப நீ நடந்ததை அவள் தந்தை எப்படித் தாங்குவார் என யோசித்தான்.
அவள் இப்படி உயிர் மரண போராட்டத்தில் இருக்கிறாள் என்ற செய்தி அவன் மனதை அமைதியாக இருக்க விடவில்லை.
“நான்… நான் இப்போவே வர்றேன்,” என்று அவசரமாக சொல்லிவிட்டு போனை வைத்தான்.அவன் சில நொடிகள் அப்படியே நின்றான். மனதில் பல நினைவுகள் ஓடியது.
அர்ச்சனா கல்லூரியில் அவனை பின் தொடர்ந்து வந்த நாட்கள்…அவள் காட்டிய பிடிவாதம்…அவள் தாரணி வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்…
அனைத்தும் ஒரே நேரத்தில் நினைவில் வந்தது.“இது எப்படி நடந்தது…” என்று அவன் மனதிற்குள் கேட்டுக்கொண்டான்.
அந்த நேரத்தில் அவன் திடீரென்று இன்னொரு விஷயம் நினைத்தான்.
“அவள் தாரணி வீட்டுக்கு போயிருந்தாளே…” எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டு அங்க போறதா சொன்னாலே,அந்த எண்ணம் வந்தவுடன் அவன் மனதில் ஒரு பெரிய சந்தேகம் எழுந்தது.அவள் தாரணி வீட்டில் இருந்து கோபமாக வெளியேறிய பிறகு தான் இந்த ஆக்சிடென்ட் நடந்ததா?ஒரு நொடி அவன் கண்களில் கவலை மிளிர்ந்தது.
“தாரணிக்கு இதை தெரிந்தா என்ன ஆகும்…” என்று மனதிற்குள் நினைத்தான்.அவன் விரைவாக தனது கோட்டை எடுத்துக்கொண்டு கேபினை விட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் ஒரு தீவிரம் தெரிந்தது.
அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவனை அப்படி அவசரமாக நடந்து செல்லப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஆனால் தீரனின் மனதில் இப்போது ஒரு விஷயம் மட்டும் தான் இருந்தது.மருத்துவமனை சென்று அர்ச்சனாவை பார்க்க வேண்டும் அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று..
லிப்டில் இறங்கும் அந்த சில விநாடிகளே அவனுக்கு மிகவும் நீண்ட நேரமாக தோன்றியது.அவன் மனதில் இன்னும் ஒரு கேள்வி.“இது சாதாரண ஆக்சிடென்ட்டா…?அல்லது இதற்கு பின்னால் இன்னும் ஏதாவது இருக்கிறதா…?”அந்த சந்தேகத்துடன் தீரன் காரை வேகமாக ஸ்டார்ட் செய்தான்.
கார் வேகமாக சீறிப்பாய்ந்து மருத்துவமனையை அடைந்தது. அங்கே அவசர சிகிச்சை பிரிவின் முன் நீண்ட நாற்காலியில் தீரன் அமைதியாக அமர்ந்திருந்தான். வெள்ளை விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தாலும் அந்த இடம் முழுக்க ஒரு பதற்றமான அமைதி நிலவியது. சில நொடிகளுக்கு ஒருமுறை நர்ஸ், டாக்டர்கள் அவசரமாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால் தீரனின் மனதில் ஓடியது ஒரே ஒரு எண்ணம் தான், அர்ச்சனா எப்படி இருக்கிறாள்?என்று.
சில நிமிடங்களில் ஒரு டாக்டர் வெளியே வந்தார்.“நீங்கதான தீரன்?” என்று கேட்க,
“ஆமாம் டாக்டர்… அவங்க நிலைமை எப்படி இருக்கு?” என்று அவன் பதற்றமாக கேட்டான்.
“கவலைப்படாதீங்க. பெரிய அபாயம் எதுவும் இல்லை. கால் மற்றும் கையில் சிறிய பிராக்சர்… கொஞ்சம் ரத்தம் வேற போயிருக்கு.. ஆனால் இரண்டு நாளில் சரியாகிடும்,” என்று டாக்டர் சொன்னார்.
அந்த வார்த்தைகள் கேட்டவுடன் தீரன் சற்றே நிம்மதி அடைந்தான்.
“நீங்க உள்ளே போய் பார்க்கலாம்,” என்று டாக்டர் அனுமதி கொடுத்ததும்,
தீரன் மெதுவாக அந்த அறைக்குள் நடந்தான்.அறையின் நடுவில் இருந்த படுக்கையில் அர்ச்சனா படுத்திருந்தாள். கையில் பேண்டேஜ்… தலையில் சிறிய கட்டு. முகம் சோர்ந்து இருந்தாலும் அவள் கண்கள் மட்டும் விழித்திருந்தன.
அவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் மெதுவாக தலை திருப்பினாள்.
தீரனை பார்த்த அந்த நொடியில் அவள் கண்களில் ஒரு விசித்திரமான ஒளி தோன்றியது.“தீரன்…” என்று அவள் மெதுவாக அழைத்தாள்.
அவன் அவள் அருகில் வந்து நின்றான்.
“எப்படி இருக்கே அர்ச்சனா?” என்று கேட்க,
அவள் மெதுவாக சிரிக்க முயன்றாள். ஆனால் அந்த சிரிப்பில் வலி கலந்திருந்தது.“நான் நல்ல இருக்கேன்… ஆனா உன்னை பார்க்க முடியாமல் போயிருக்கும் போல இருந்தது…” என்று மெதுவாக சொன்னாள்.அந்த வார்த்தைகள் தீரனுக்கு சற்று சங்கடமாக இருந்தது.“இப்படி பேசாதே. டாக்டர் சொன்னாரு… நீ சீக்கிரம் சரியாகிடுவ,” என்று அவன் சொல்ல,
அர்ச்சனா அவனை கவனமாக பார்த்தாள்.அவன் முகத்தில் இருந்த அந்த அக்கறையை அவள் கவனித்தாள். அதே நேரத்தில் அவள் மனதில் ஒரு வேறு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.
“நான் இப்படி பலவீனமா இருக்கும்போது அவன் என்னை விட்டு போக மாட்டான்…”
அவள் மெதுவாக அவன் கையை பிடித்தாள்.தீரன் சற்றே அதிர்ந்து அவளை பார்த்தான்.“தீரன்… நான் ரொம்ப பயந்துட்டேன்,” என்று அவள் குரல் நடுங்கியபடி சொல்ல
“ரோட்டுல அந்த லாரி வேகமா வந்தப்போ… எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் நினைவுக்கு வந்தது…”
அவன் அமைதியாக பார்த்தான்.
“நான் உனக்கு இல்லாம போயிடுவேனோன்னு…”என அவள் சொல்லும் போதே அந்த வார்த்தைகள் அவள் கண்களில் கண்ணீருடன் வெளியே வந்தது.
தீரன் ஒரு நொடி அமைதியாக நின்றான். அவன் மனதில் ஒரு சிறிய பரிதாபம் தோன்ற,அதை தான் அர்ச்சனா எதிர்பார்த்தாள்.
அவள் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“நான் உன்னை இவ்வளவு விரும்புறதுக்கு காரணம் உனக்கு தெரியுமா தீரன்…?”அவன் பதில் சொல்லவில்லை.“கல்லூரி முதல் நாள்… நான் உன்னை பார்த்த நொடியில் இருந்து தான்…”என சொல்லும் போதே
அவள் குரலில் உண்மையும் பிடிவாதமும் கலந்திருந்தது.
“நான் உன்னை மறக்கவே முடியல.”
அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நீ எவ்வளவு தூரம் போனாலும்… நான் உன்னை விட்டு போக மாட்டேன்.”
அவள் கையை இன்னும் இறுக்கமாக பிடித்தாள்.
“இப்போ பாரு… நான் இப்படி படுக்கையில் இருக்கும் போது கூட நீ வந்துட்ட எனக்காக” என சொல்லி
அவள் மெதுவாக சிரித்தாள்.
“இது எனக்கு போதும் தீரன்… நீ என் பக்கத்தில் இருந்தா போதும்.”
அந்த வார்த்தைகள் தீரனின் மனதில் ஒரு விசித்திரமான அழுத்தத்தை ஏற்படுத்தியது.அவன் எதுவும் பேசாமல் அவள் கையை மெதுவாக விடுவித்தான்.
அதை கவனித்த அர்ச்சனா அவனை கூர்மையாக பார்த்தாள்.ஆனால் அவள் முகத்தில் அந்த உணர்ச்சி வெளியில் தெரியவில்லை.அவள் மனதிற்குள் மட்டும் ஒரு எண்ணம்.
“இப்போ நீ என்னை விட்டு தப்பிக்க முடியாது தீரன்…”நான் பலவீனமா இருக்கிறேன்… அதை பார்த்து நீ என்னை விட்டு போக மாட்ட.”
அவள் கண்களை மெதுவாக மூடியபடி அமைதியாக படுத்துக் கொண்டாள்.ஆனால் அவள் மனதில் ஓடியது ஒரு சதி.இந்த விபத்தையே பயன்படுத்தி,தீரனை மீண்டும் தன் வாழ்க்கைக்குள் கட்டிப் போட வேண்டும் என்று..
அந்த மருத்துவமனை அறையின் அமைதிக்குள் அர்ச்சனா ஒரு புதிய விளையாட்டை ஆரம்பித்திருந்தாள்.
ஆனால் அவளுக்கு தெரியாமல்…
இந்த விளையாட்டில் இன்னும் ஒரு மனிதர் இருந்தார்.
மருத்துவமனை வெளியே திடீரென ஒரு கலக்கம் எழ,வழக்கமாக அமைதியாக இருந்த அந்த இடத்தில் சில நிமிடங்களில் பல கார்கள் வந்து நின்றன. கருப்பு நிற லக்ஷுரி கார்கள் வரிசையாக நின்றதை பார்த்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். பாதுகாப்பு ஆட்கள் வேகமாக இறங்கி வழியை சுத்தப்படுத்த ஆரம்பித்தார்கள்.
அந்த கார்களில் இருந்து மெதுவாக இறங்கியவர் அர்ச்சனாவின் அப்பா,அருணாசலம். நாட்டிலேயே பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர். பல நிறுவனங்கள்… ஆயிரக்கணக்கான ஊழியர்கள்… அரசியல் வரை தொடர்புகள். அவருடைய முகம் எப்போதும் அமைதியாக இருக்கும். ஆனால் இன்று அந்த அமைதிக்குள் ஒரு புயல் மறைந்திருந்தது.
“எங்க இருக்கா என் பொண்ணு?” என்று அவர் கடுமையாக கேட்டார்.
அவசரமாக ஓடிய நர்ஸ் ஒருவர் அவரை அறைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அவர் கண்கள் நேராக படுக்கையில் இருந்த அர்ச்சனாவை பார்த்தது. கையில் பேண்டேஜ்,முகத்தில் சோர்வு,தலையில் கட்டு.அந்த காட்சியை பார்த்த நொடியில் அருணாசலத்தின் முகம் கறுப்பாக மாறியது.
“அர்ச்சனா…” என்று அவர் மெதுவாக அழைத்தார்.
அவள் மெதுவாக கண்களை திறந்து தன் அப்பாவை பார்த்ததும் அவள்
“அப்பா…” என்றாள் மெதுவாக.
அந்த ஒரு வார்த்தை அவரின் மனதை உடைத்தது.அவர் அருகே வந்து அவளது தலையை மெதுவாக தடவினார்.
“என்ன ஆயிற்று? எப்படி இந்த ஆக்சிடென்ட்?” என்று அவர் மெதுவாக கேட்டாலும் அந்த குரலில் அடக்கி வைத்த கோபம் தெளிவாக இருந்தது.அர்ச்சனா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள்.
அந்த நேரத்தில் அவர் பார்வை அறையின் மறுபக்கத்தில் நின்றிருந்த தீரனை நோக்கி திரும்பியது.
“உங்களுக்கு தெரியுமா என் பொண்ணுக்கு எப்படி இப்படி நடந்துச்சு, நீ யாரை பார்க்க போன?”என அவர் கோபமாக கேட்கவும்
அர்ச்சனா உடனே “அப்பா… அவருக்கு ஏதும் தெரியாது” என சொல்ல
தீரன் மரியாதையாக முன் வந்து,
“வணக்கம் சார்,” என்றான்.
அருணாசலம் அவனை ஒரு நொடி முழுவதும் பார்வையால் அளந்தார். அந்த பார்வை சாதாரணமானதல்ல. பல வருடங்கள் மனிதர்களை மதிப்பீடு செய்து பழகியவர் பார்வை.
“ஆக்சிடென்ட் எப்படி நடந்தது?” என்று அவர் மீண்டும் கேட்டார்.
அர்ச்சனா மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“கார் ஓட்டிக்கிட்டு வரும் போது, திடீர்னு ஒரு லாரி வேகமா வந்தது.நான் கண்ட்ரோல் பண்ண முடியல…”என சொல்ல
அவள் பேசினாலும் அருணாசலத்தின் முகத்தில் நம்பிக்கை இல்லை.அவர் மெதுவாக திரும்பி தன் பெர்சனல் அசிஸ்டன்ட்-ஐ பார்த்தார்.
“ரவீந்தர்… இந்த ஆக்சிடென்ட் டீடெயில்ஸ் எல்லாம் முழுசா தெரிஞ்சுக்கணும்.”
“CCTV… போலீஸ் report… லாரி driver யார்… எல்லாம் இரண்டு மணி நேரத்துக்குள்ள எனக்கு வேண்டும்.”என்று அவரின் குரல் கடுமையாக இருந்தது.ஆனால் அவரின் முகத்தில் இருந்தஅமைதிக்குள் இருந்த ஆபத்தை அந்த இடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் உணர்ந்தார்கள்.
“சரி சார்,” என்று உடனே ரவீ வெளியே ஓடினான்.
அருணாசலம் மீண்டும் தனது மகளை பார்த்து “நீ கவலைப்படாதே. உனக்கு ஏதாவது பண்ண நினைச்சவன் யாராக இருந்தாலும் அவனை நான் கண்டுபிடிப்பேன்.”என சொல்ல
அந்த வார்த்தைகள் அந்த அறையில் ஒலித்தது.அந்த நேரத்தில் அர்ச்சனா மட்டும் அமைதியாக இருந்தாள்.
அவள் கண்கள் ஒரு நொடி தீரனை நோக்கி திரும்பின.அந்த பார்வையில் ஒரு விசித்திரமான உணர்ச்சி இருந்தது.
மருத்துவமனை அறையில் இருந்த காற்றே சற்று கனமாக இருந்தது. அர்ச்சனா படுக்கையில் அமைதியாக இருந்தாலும், அவள் அப்பா அருணாசலத்தின் மனம் மட்டும் அமைதியாக இல்லை. பல வருடங்கள் தொழில் உலகில் இருந்த அனுபவம் அவருக்கு ஒரு விஷயத்தை கற்றுத்தந்தது .சில விஷயங்கள் தோன்றுவது போல இருக்காது.அவர் மெதுவாக அறையின் ஜன்னலருகே சென்று நின்றார். கீழே மருத்துவமனை வளாகத்தில் கார்கள் வரிசையாக இருந்தது. ஆனால் அவரது மனதில் ஓடியது ஒரே கேள்வி.
“இது உண்மையிலேயே ஆக்சிடென்ட் தானா?”
அவர் மெதுவாக திரும்பி தீரனை பார்த்தார்.“நீங்க அப்போது எங்கே இருந்தீங்க?” என்று நேராக கேட்டார்.
தீரன் சற்று தயங்கி,
“எனக்கு போன் வந்ததும் தான் தெரியும் சார்… நான் அப்புறம் தான் ஹாஸ்பிடல் வந்தேன்,” என்றான்.
அருணாசலம் அவனை சில நொடிகள் அமைதியாக பார்த்தார்.“ஹூம்…”
அந்த ஒரு ஒலி மட்டும் வந்தது.ஆனால் அந்த பார்வை தீரனுக்கு ஒரு விசாரணை போல் இருந்தது. தீரனுக்கு என்னதான் அர்ச்சனாவை திருமணம் செய்து கொள்ள இஷ்டம் என்றாலும், வாய் நிறைய அவள் அப்பாவை மாமா என்று அழைக்க மாட்டான்.திருமணத்திற்கு பிறகு அப்படி கூப்பிடலாம் என்று சொல்லி சார் என்று அழைப்பான்..
அந்த நேரத்தில் கதவு திறந்து ரவீ உள்ளே வந்தான்.“சார்… நீங்கள் கேட்ட தகவல்கள் சில கிடைச்சிருக்கு,” என்றான்.அருணாசலம் உடனே வெளியே வரச் சைகை செய்தார்.
அவர்கள் இருவரும் அறை வெளியே வந்து நின்றார்கள்.
“சொல்லு,” என்றார் அருணாசலம்.
“சார்… விபத்து நடந்த இடத்துல CCTV இருக்கு. அந்த லாரி திடீர்னு வந்து கார் முன்னாடி பிரேக் போட்ட மாதிரி தெரிகிறது,” என்றான் ரவீ.
அருணாசலத்தின் புருவம் சுருங்கியது.
அந்த டிரைவர்?
“அவன் விபத்து ஆன உடனே ஓடிப்போயிட்டான் சார்.”என சொல்லவும்
அந்த வார்த்தை கேட்டவுடன் அருணாசலத்தின் முகம் கடினமாயிற்று.
“இதெல்லாம் சாதாரண விபத்து மாதிரி தெரியல.”என சொல்ல,ரவீ மெதுவாக தலை அசைத்தான்.
“நானும் அது தான் நினைக்கிறேன் சார்.”
அருணாசலம் சில நொடிகள் யோசித்தார்.
அந்த டிரைவரை கண்டுபிடிக்கணும். யாராவது இதை திட்டமிட்டு பண்ணிருக்கலாம் என்று சொன்ன போதுஅவர் குரலில் ஒரு உறுதி இருந்தது.
“சார்… இன்னொரு விஷயம்.”
“என்ன?”
“அந்த லாரி number fake போல இருக்கு.” என சொல்ல
அந்த வார்த்தைகள் கேட்டவுடன் அருணாசலம் மெதுவாக சிரித்தார்.
ஆனால் அந்த சிரிப்பு மகிழ்ச்சியில்லை.
அது ஒரு ஆபத்தான சிரிப்பு.
“அப்படியா…”என அவர் மெதுவாக சொன்னார்.
“அப்படின்னா இது விபத்து இல்ல.”
“யாரோ விளையாட ஆரம்பிச்சிருக்காங்க.”
அவர் கண்கள் மெதுவாக அறைக்குள் இருந்த அர்ச்சனாவை நோக்கி திரும்பின.
“என் மகளைக் கொண்டு விளையாட நினைச்சவன் யாரா இருந்தாலும்…
அவன் வாழ்க்கை முடிஞ்சது.”என சொல்ல
அந்த நேரத்தில் அறைக்குள் இருந்த அர்ச்சனா அமைதியாக படுத்திருந்தாள்.
ஆனால் அவள் கண்கள் திறந்திருந்தது.
அவள் எல்லா பேச்சையும் கேட்டு கொண்டிருந்தாள்.அவள் உதட்டில் மெதுவாக ஒரு சிரிப்பு வந்தது.
அந்த சிரிப்பை யாரும் பார்க்கவில்லை.
ஏனெனில்…இந்த விபத்து நடந்தது எப்படி என்பதைஅர்ச்சனா மட்டும் தான் முழுவதும் தெரிந்திருந்தாள்.
அது உண்மையிலேயே விபத்தா…?
அல்லது…
அவளே ஆரம்பித்த ஒரு ஆபத்தான நாடகமா?
அந்த உண்மை வெளியில் வந்தால்,
தீரன் வாழ்க்கை மட்டும் அல்ல…
தாரணி வாழ்க்கையும் மீண்டும் கலங்கப் போகிறது.
