அத்தியாயம் 21
அன்று அபிராமி ஹாலில் தன் மாமியாரோடு பேசி கொண்டிருந்தாள்.
பாரிஜாதத்தின் கைகளில் இருந்தான் சுஜித்.
மாடிப் படியில் இருந்து லொட் லொட் என்ற சத்தம் வர, அபிராமியும் பாரிஜாதமும் திரும்பி பார்க்க, வீர நடை போட்டு நடந்து வந்தான் அஸ்வந்த்.
அவனை பார்த்த பாரிஜாதம் மனம் நிறைந்த நிம்மதியோடு அவனை பார்த்தார்.
அபிராமி கண் இமைக்காமல் தன் கணவனை பார்த்து கொண்டிருந்தாள்.
அவனின் அந்த கம்பீரம் அபிராமியை கவர்ந்தது.
இன்று அவன் அலுவலகம் செல்ல போகிறான். வெகு நாட்களுக்கு பிறகு அலுவலகம் செல்ல தயாராக வந்தான் அஸ்வந்த்.
அம்மா நான் கிளம்புறேன் என்றவனிடம் சாப்பிட்டு போ ப்பா என்றார் பாரிஜாதம்.
அபிராமியும் அதற்கு தான் காத்திருந்தாள். அவனுக்கு பரிமாறி விட்டு தான் தானும் சாப்பிட வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.
சரோஜா வேகமாக வந்து டைனிங் டேபிலில் அனைத்து உணவு வகைகளையும் அடுக்கினார்.
அஸ்வந்த் அபிராமியை பார்த்தான்.
அவளின் விழிகள் ஏதோ அவனிடம் கூற வருவது போல் அவனுக்கு மட்டும் தோன்றியது.
அவளின் செவ்விதழ்களில் அவனின் பார்வை சென்ற நேரம், ” என்னங்க சாப்பிட்டு போங்க ” என்று தன் செவ்விதழ்களை பிரித்து கூறினாள் அபிராமி.
அஸ்வந்த்தின் கால்கள் தானாக டைனிங் டேபிலில் அருகே சென்றது.
அபிராமி முகம் முழுவதும் பிரகாசமாக பளிச்சென்று மாறியது.
அவனுக்கு ஒவ்வொன்றையும் ஆசையாக பரிமாறினாள் அபிராமி.
கொஞ்சம் சீக்கிரமா வந்துருங்க வீட்டுக்கு என்றாள் பரிமாறி கொண்டே.
இன்று மாலை தான் அவர்களின் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடக்க போகிறது.
அதனால் தான் கணவனை சீக்கிரம் அழைக்கிறாள் அபிராமி.
சரி அபி என்றான் அவளின் கணவன்.
அவன் சாப்பிட்டு கை கழுவ செல்ல டவல் எடுத்து நீட்டினாள் அபிராமி.
ஆசிரியர் வேலையை விட்டு ஒரு குடும்ப ஸ்த்ரீ ஆக மாறிவிட்டாளே .
சாமி கும்பிட்டு போ ப்பா. ரொம்ப நாள் கழிச்சி வேலைக்கு போக போற. சாமி கும்பிட்டு போ என்றார் பாரிஜாதம்.
அபிராமி வந்ததும் தன் மகன் முன்பு போல் மாறி விட்டான் என்று நம்பினார் பாரிஜாதம்.
சரோஜா சமையலறையில் வேலை செய்தவாறு அபிராமி அஸ்வந்த் இருவரையும் கவனித்து கொண்டிருந்தார்.
தாய் சொல்லை கேட்டு சாமியை கும்பிட்டு தான் காரை எடுத்து கொண்டு புறப்பட்டான் அஸ்வந்த்.
இங்கு அலுவலகத்தில் அனைவரும் இன்ப துள்ளளோடு இருந்தனர்.
வெகு நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு வருகை தரும் அஸ்வந்த்தை வரவேற்க ஆவலோடு காத்திருந்தனர் ஊழியர்கள்.
அஸ்வந்த் கார் அலுவலகத்தின் வாயிலில் வந்த நேரம் செக்யூரிட்டி கேட்டை திறந்து தன்னுடைய காலை வணக்கத்தை கூறினார் அவனுக்கு.
அஸ்வந்த் புன்னகை முகமாக அவருடைய வணக்கத்தை பெற்று கொண்டு தலை அசைத்தான் அவருக்கு.
ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான் அலுவலகத்தை பார்க்கும் பொழுது.
காரை நிறுத்தி விட்டு அவன் உள்ளே செல்ல ஊழியர்கள் அனைவரும் கையில் பூங்கொத்து கொண்டு நின்றனர்.
வெல்கம் சார் என்று அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, சிரித்த முகமாக அவர்களிடம் பேசினான் அஸ்வந்த்.
சார் நீங்க பழைய மாதிரி ஆபிஸ் வந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம் சார் என்றனர் ஊழியர்கள்.
அகிலா மஞ்சள் நிற ரோஜா பூங்கொத்தை எடுத்து கொண்டு அஸ்வந்த் முன் வந்து நின்றாள்.
வெல்கம் மாமா என்றவள் சட்டென்று நாக்கை கடித்து, வெல்கம் சார் என்றாள்.
அவளின் தலையில் செல்லமாக தட்டிய அஸ்வந்த் சிரித்து கொண்டே பூங்கொத்தை வாங்கி கொண்டான்.
கார்த்திக் அகிலாவை கண் இமைக்காமல் பார்த்தான் .
அவளின் கண்களுக்குள் புகுந்து கொள்ள தோன்றியது அவனுக்கு.
அஸ்வந்த் கெத்தாக அவனின் கேபினுக்குள் சென்றான்.
எவ்வளவு நாள் ஆயிற்று என்று அவனின் மனது எவ்வித சத்தமும் இல்லாமல் கேள்வி கேட்டது.
சீராக மூச்சை இழுத்து விட்டவன் தன் மேஜயை பார்த்து மெல்லிய புண் முறுவல் கொண்டான்.
இதோ அவனும் சுகன்யாவும் சேர்ந்து எடுத்து கொண்ட குட்டி புகைப்படம் பிரேம் செய்து அவனின் மேஜையின் ஓரத்தில் இருந்தது.
இவ்வளவு நாட்கள் இங்கு தான் இருக்குறேன். நீ தான் என்னை கண்டு கொள்ளவில்லை என்னும் விதமாக அந்த புகப்படம் அவனை பார்க்க, அதை கையில் எடுத்து தன் உயிரை சுமந்தவளை ஏக்கமாக பார்த்தான் அஸ்வந்த்.
ஒரு நிமிடம் தன்னை மறந்து அதை பார்த்தவனின் காதில் ” நான் கிளம்புட்டுமா ப்பா ” என்ற குரல் கேட்க, நிமிர்ந்து பார்த்தவனின் முன் சங்கர் நின்று இருந்தார்.
இனிமேல் எனக்கு ஓய்வு தேவை. இதுவரைக்கும் நான் பார்த்துட்டேன். இப்போ தான் நீ வந்துட்டல நீ பாரு என்றார்.
சரி என்று கூற முடியாமல் நின்றிருந்தான் அஸ்வந்த். அவனால் பதில் எதுவும் கூறமுடியவில்லை.
நான் கிளம்புறேன் என்று அவர் இவனின் பதிலை எதிர்பாராமல் சென்றார்.
வயது போன காலத்தில் அவரை எவ்வளவு படுத்தி இருக்குறோம். இனிமேலாவது அவருக்கு ஓய்வு தர வேண்டும் என்று எண்ணி கொண்டான் அஸ்வந்த்.
தன்னுடைய இருக்கையில் அமர்ந்து ஒரு நொடி விழி மூடி திறந்தான் அஸ்வந்த்.
கார்த்திக் என்று அழைத்தான்.
சங்கர் கிளம்புவதற்கு முன் ஒவ்வொருவரிடமும் பேசி விட்டு செல்ல நினைத்து அப்பொழுது தான் கார்த்திக்கிடம் வந்தார்.
சங்கருக்கு அறுபது வயது கடந்து விட்டது. அவரின் பிரியாவிடை விழாவும் கொண்டாடி முடிந்து ஓய்வில் வீட்டில் இருந்தவருக்கு தன் மருமகளின் எதிர்பாராத மரணமும் மருமகள் இறந்ததும் அறைக்குள் முடங்கிய மகனின் பிடிவாதமும் சேர்ந்து அவரை மறுபடி வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தியது.
இப்பொழுது சங்கரிடம் பேசி கொண்டிருந்த கார்த்திக் அஸ்வந்த்தின் குரல் கேட்டு உள்ளே வந்தான்.
சொல்லுங்க சார் என்றான்.
அவனுக்கென்று நியமித்து இருக்கும் அவனின் உதவியாளன் தான் கார்த்திக்.
கடந்த மூன்று மாதங்களாக சங்கர் கார்த்திக்கின் உதவியோடு தான் அலுவலகத்தை பார்த்து கொண்டிருந்தார். அந்த அளவுக்கு நேர்மையானவன் நம் கார்த்திக்.
இந்த கொஞ்ச நாளா என்னன்ன ஒர்க் போய்ட்டு இருந்துனு கொஞ்சம் சொல்லுங்க கார்த்திக். அப்பாகிட்டே கேட்க வேணாம். அவர் இனிமேல் ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன் என்றான்.
கடந்த நாட்களாக அலுவலகத்தில் நடந்த வேலைகளையும் அவற்றின் கோப்புகளையும் எடுத்து அஸ்வந்த்திற்கு காட்டி அவற்றை விளக்கினான் கார்த்திக்.
அன்று முழுவதும் சில கோப்புகளை பற்றி தெரிந்து கொள்வது தான் அஸ்வந்த்திற்கு வேலையாக இருந்தது.
அகிலாவிடம் தொல்லை செய்கிறான் என்றும் தெரிந்தும் சங்கர் அவனை இங்கு வைத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கார்த்திக்கின் நேர்மையும் ஒழுக்கமும் தான்.
அகிலாவிடம் மட்டும் தான் கார்த்திக் இவ்வாறு நடந்து கொள்கிறான் தவிர வேறு பெண்களிடம் இது போல் நடந்து கொண்டதில்லை.
அதுவும் அகிலாவே சங்கரிடம் சென்று புகார் கூறும் பொழுது வெறும் அதட்டலோடு நிறுத்தி கொள்ளுங்கள் சார் என்று தான் கூறுவாள்.
தன்னால் யாருக்கும் கெடுதல் வந்து விடக்கூடாது என்று நினைக்கும் ஒரு ஜீவன் தான் அபிராமியின் தங்கை அகிலா.
இதோ இந்த நாள் முழுவதும் கடந்த மாதங்களாக அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்த வரவு செலவு மற்றும் இதர வேலைகளை பற்றி தெரிந்து கொள்வதிலேயே முடிந்து விட்டது.
அலுவலகம் முடிந்த நேரத்தில் வீட்டிற்கும் வந்து விட்டான். இன்று தானே அவர்களின் மகன் பெயர் சூட்டு விழா அதற்கு தான்.
****
அபிராமி வண்ணத்து பூச்சி போல் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள் வீட்டிற்குள்.
நேரமாகி கொண்டே இருந்தது. விருந்தினர் வீட்டிற்கு வரும் நேரம் நெருங்கி கொண்டே இருக்க அபிராமி றெக்கை முளைத்தது போல் பறந்து பறந்து வேலையை செய்து கொண்டிருந்தாள்.
சரோஜா அக்கா, “இங்க வாங்க “என்று வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை அவள் அழைக்க, அவரும் சொல்லு அபிராமி என்று வந்து நின்றார் அவளின் அழைப்புக்கு.
என்ன அபிராமியா? பெயரை சொல்லி அழைக்கிறார் இந்த சரோஜா. அவ்வளவு தைரியமா இவளுக்கு என்று யாரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.
நம் அபிராமியை சரோஜா அக்கா “அபி அம்மா “என்று அழைக்க, அபிராமி தன்னை பெயர் சொல்லி அழையுங்கள் என்று அன்பு கட்டளை இட்டதால் அதை மறுக்க முடியாமல் சரோஜாவும் அபிராமியை அவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கிறார் .
அக்கா இத கொண்டு போய் வாசலில் கட்டுங்க என்று அவரின் கைகளில் பூ வேலைப்பாடுகளால் ஆன தோரணத்தை கொடுக்க அவர் அதை வாங்கி ரசித்து பார்த்தார்.
ஆஹ்…. அபி இதை எங்க மா வாங்குன? என்று கேட்டார்.
இது வாங்கல அக்கா. நானே நம்ப சுஜித் பெயர் சூட்டு விழாவுக்கு செஞ்சேன் என்றாள்.
உண்மையாகவே மன நெகிழ்வோடு அபிராமியை பார்த்தார் சரோஜா. அவள் பூக்களால் உருவாக்கிய அந்த தோரணம் அவ்வளவு அழகாக இருந்தது.
கைகளில் இருந்த தோரணத்தை வாசலில் கட்டினார்.
ஹால் முழுவதும் வண்ண வண்ண பலூன்கள் காற்றில் உருண்டு ஓடியது. இதுவும் அவளே செய்தது தான் தன் மகனுக்காக.
தன்னால் முடிந்த வரை வீடு முழுவதும் அலங்காரங்கள் செய்தாள் அபிராமி.
அலுவலக ஊழியர்களும் அபிராமியின் தாய் தந்தை மற்றும் அகிலாவும் வீட்டிற்குள் வருகை புரிந்தனர்.
அபிராமி தன் தாய் தந்தையை பார்த்ததும் ஓடி வந்து தந்தையை அணைத்து கொண்டாள்.
அவர் அபிராமியின் தலையை வருடி கொடுத்தார்.
அஸ்வந்த் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டான். ஆனால் அவன் வரும் போது இந்த அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் வீடு வெறுமையாக தான் இருந்தது.
அதற்குள் மனைவி வீடு முழுவதும் அலங்கரித்து விட்டாளா! என்று வியப்பாக இறங்கி வந்தான் அஸ்வந்த்.
அக்கா குட்டி பையனை எங்க? என்று அகிலா விழிகளை சுழட்டி பார்க்க, ” அத்தை அவனை தயார் பண்ணிட்டு இருக்காங்க ” என்றாள் அபிராமி.
ஓ என்றவள் பாரிஜாதத்தை தேடி சென்றாள்.
அபிராமியின் தாய் தந்தை இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர்.
அபிராமியும் அஸ்வந்தும் ஜோடியாக அலுவலக ஊழியர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வரவேற்றனர்.
குட்டி குட்டி மழலைகள் உருண்டு ஓடும் வண்ண வண்ண பலூன்களை அள்ளி விளையாடினர் பலூன்களை கண்ட சந்தோஷத்தில்.
அபிராமி கூறியது போல் தேக்கு மரத்தாலான தொட்டிலில் சுஜித்தை படுக்க வைத்தார் பாரிஜாதம்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
