அத்தியாயம் 22

ரேணு சொல்லியதை கேட்கவும் அவரின் மனம் வாடியது. விதுரன் இத்தகைய முடிவை எடுப்பான் என சரஸ்வதிக்கு தெரிந்திருந்தாலும் ஏனோ அவரின் மனம் தவித்தது!

ஏற்கனவே சித்தர் எதுவும் சொல்லாமல் எழுந்து போய் இருக்க, இங்கு இருவரும் வக்கீல் அலுவலகத்திற்கு  சென்றிருப்பது தெரிய அப்படியே உடைந்து விட்டார்.

சில வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தவர் ஒருவழியாக  தன்னை சமன் படுத்திக் கொண்டு,  “அம்பிகாவை எங்க காணோம்?” என்று கேட்க, “அம்மா அவங்க ரூம்ல படுத்திருக்காங்கமா!” என்று கூறினாள் ரேணு.

ஓடி ஆடி எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கும் அம்பிகா படுத்து கிடக்கிறார் என்றால் ஓன்று  அவரின் உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் இல்லை, அவரின் மனம் சரியில்லாமல் இருக்கும் என்பதை புரிந்து கொண்ட சரஸ்வதி,

“சரி நீ காலேஜ் கிளம்பு,  நான் அவளை பாத்துக்குறேன்!” என்று சொல்லிவிட்டு அம்பிகாவின் அறைக்குள் நுழைந்தார் சரஸ்வதி.

அங்கு அம்பிகா அழுது அழுது கண்கள் சிவக்க முகம் வீங்கி படுத்து கிடந்தார். 

எவ்வளவு நேரம் அழுது கொண்டு இருந்திருக்கிறார் என்பதை அம்பிகாவின் முகமே காட்டி கொடுக்க  சரஸ்வதி, தன் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு,

“இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்க, அழுதால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்று அழுத்தமாக கேட்டார் சரஸ்வதி.

அம்பிகா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “இங்க பாரு தேவையில்லாம எதையும் நினைச்சு கற்பனை பண்ணாத! அதான் சித்தரோட சிஷ்யன் சொன்னாரே அருள்வாக்கு சொல்லும் போது சித்தருக்கு ஏதாவது சகுனதடை வந்துச்சுன்னால் எதுவும் சொல்லாமல் எந்திரிச்சு போயிருவாருன்னு! அதனாலதான் சித்தர் எந்திருச்சு போயிருப்பாரு. 

இதுக்கு தான் நான் ஏற்கனவே எந்த அருள்வாக்கும் கேட்க வேண்டாம்னு சொன்னேன். நீ தான் பிடிவாதம் பிடிச்சு எல்லாம் நல்லபடியா நடக்கும்னு சொல்லிட்டு என்னை கூட்டிட்டு போன, 

“இப்ப என்னடானா நீயே உட்கார்ந்து கண்ணீர் வடிச்சுகிட்டு இருக்க?” என்று திட்டினார் சரஸ்வதி. சரஸ்வதி திட்டவும் அமைதியாக இருந்தார் அம்பிகா.

 

“நீ உக்காந்து அழுகுறனாலையோ,  நான் உட்கார்ந்து வருத்தப்பட்டுகிட்டு இருக்கிறனாலையும் இங்கே எதுவும் மாறப் போறது கிடையாது, முடிஞ்ச அளவுக்கு ரெண்டு பேரையும்  சந்தோசமா  வாழ வைக்கிறதுக்கு நம்ம தான்  முயற்சி பண்ணனும்!.

நான் வந்து ரெண்டு நாள் ஆச்சு, அவரு நான் வரதுக்காக அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரு, விதுரன் வந்தால் சொல்லிட்டு போகலாம்னு நெனச்சேன், ஆனால் அவனை ஆள காணோம், நீயும் இப்படி உட்கார்ந்து அழுது கிட்டு இருந்தால் நான் எப்படி போக முடியும்! உன்னைய நம்பி தான் நானே இங்கிருந்து கிளம்ப போறேன்.

நீதான் எல்லாரையும் பார்த்துக்கணும், முக்கியமா பிரதிக்ஷவ, ரஞ்சித்தும், மனிஷாவும்  ஏதாவது பிளான் பண்ணி பிரதிக்ஷாவை இந்த வீட்டை விட்டு வெளியில துரத்த பாப்பாங்க, நீதான் அந்த பிரச்சனை எல்லாத்துலயும் இருந்தும்  பிரதிக்ஷாவை காப்பாத்தணும்!” என்று கூறினார் சரஸ்வதி.

“எனக்கு தெரியுது, ஆனாலும் என் மனசு படபடன்னு அடிக்குது! எதையும் சாதாரணமா எடுத்துக்க முடியல!”என்று தன் மன ஓட்டத்தை அம்பிகா விளக்க,

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த சாமி நம்ம கூட இருப்பாங்க! நீ வேணா பாரு விதுரனும்  பிரதிக்ஷாவும் சேர்ந்து வாழ்றத நீயும் நானும் கண்ணால பாக்க தான் போறோம்!” என்று சொல்லி அம்பிகாவை சமாதானப்படுத்தினார் சரஸ்வதி.

இங்கு,

பிரதிக்ஷாவிற்கு சுண்டல் வாங்கிக் கொடுப்பதற்காக அந்த சுண்டல் வியாபாரியை நோக்கி சென்றான்  விதுரன்.

“ஒரு சுண்டல் கப் குடுங்க!”  என்று விதுரன் கேட்க, ஒரு கப் சுண்டல் போதுமா? ” என்று கேட்டான் அந்த பதினைந்து வயது சிறுவன்.

வாங்கியவன் தன்னுடைய பர்சிலிருந்து  காசை எடுக்க அதில் கார்டுகள் மட்டுமே இருந்தது. காசு என்பதே அவன் பர்சில் இல்லாதிருந்தது. உடனே பதட்டப்பட்டு பிரதிக்ஷாவை பார்க்க அவளோ அந்தச் சிறுவனிடம் சுண்டலை வாங்கி ஒவ்வொன்றாக சுவைத்துக் கொண்டிருந்தாள்.

விதுரன் அவளை முறைக்க “அத்தான் உங்களுக்கும் வேணுமா? இந்தாங்க…” என்று அவள் கையில் வைத்திருந்ததை விதுரனின் வாய்க்கருகே  கொண்டு போனாள். விதுரன் பிரதிக்ஷாவை முறைக்க, “ வேண்டாம்னா போங்க நானே சாப்பிடுகிறேன்!” என்று சொல்லிவிட்டு தன் கையில் வைத்த சுண்டலை அவள் வாயில் போட்டாள் பிரதிக்ஷா.

‘தின்னி பண்டாரம், அவசரப்பட்டு சுண்டலை வாங்கி தின்னுட்டா, காசு வேற இல்லையே!  இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது”   என்று  விதுரன் யோசித்துக்  கொண்டிருக்க,

“சரி சொல்லு தம்பி, நீ எத்தனாவது படிக்கிற?” என்று கேட்டாள் பிரதிக்ஷா.

“படிக்கிறவன் எதுக்கு சுண்டல் விக்க போறான்,  லூசு லூசு மாதிரி கேள்வி கேக்குது!”என்று விதுரன்  தன்னுடைய மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க, பக்கத்துல இருக்கிற கவர்மெண்ட் ஸ்கூல்ல பத்தாம் க்ளாஸ் படிக்கிறேன் அக்கா!” என்று கூறினான் அந்தச் சிறுவன்.

‘விதுரன் எப்படி இவ கண்டுபிடிச்சிருப்பா’ என்பதைப் போல் ஒரு கணம் பிரதிக்ஷாவை பார்த்தான்.

“சூப்பர் தம்பி!  இருபது  நாள்ல எக்ஸாம் வரப்போகுதுல எக்ஸாமுக்கு  நல்லா பிரிப்பேர் பண்ணி இருக்கியா?” என்று பிரதிக்ஷா கேட்க,

“ஓரளவுக்கு பண்ணி இருக்கேன் அக்கா, எங்க அக்கா படிக்கிறதுக்கு நேரமே கிடைக்க மாட்டேங்குது. காலையில வெள்ளனையே எந்திரிச்சு வீடு வீடா பேப்பர் பால் பாக்கெட் போட்டதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்புறதுக்கு தான் சரியா இருக்கு. சாயங்காலம்  வீட்டுக்கு வந்த உடனே அம்மா செஞ்சு வச்சு இருக்கிற சுண்டலை எடுத்துட்டு வந்து எட்டு மணி வரை இங்கே வித்துட்டு, அதுக்கப்புறம் வீட்டுக்கு போயி கொஞ்சம் படிச்சிட்டு தூங்கணும். அதே மாதிரி காலையில வெள்ளையனே எந்திரிக்கணும்! கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா” என்று கூறினான் அந்தச் சிறுவன்.

“எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற,  ஒன்னு காலையில வேலை பாரு,  இல்ல ஈவினிங் வேலைய பாரு!”என்று பிரதிக்ஷா சொல்ல,

“ரெண்டு நேரமும் வேலை செஞ்சா கூட அப்பா இல்லாத என்னுடைய குடும்பத்தை பாத்துக்குறதுக்கு  சரியான வருமானம் கிடைக்க மாட்டேங்குது! இதுல ஒரு நேரம் மட்டும் வேலை பார்த்தால் ஒன்னும் பண்ண முடியாது!”என்று அந்தச் சிறுவன் சொல்லி சலித்துக் கொண்டான்.

இவ்வளவு நேரம் சுண்டலை ரசித்து சாப்பிட்டுக் கொண்டே கேள்வி கேட்டவள் ஒரு கணம் அவனின் வலியை உணர்ந்து,

“சாரி தம்பி! உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு,  எனக்கு தெரிஞ்ச லாயர் ஒருத்தர் இருக்காரு. அவர் வீட்டில அவர் மட்டும்தான். சின்ன சின்ன எடுபுடி வேலைக்கு   ஆள் தேவைப்படுதுன்னு சொன்னாரு.  நான் அவர்கிட்ட பேசி உன்னைய வேலைக்கு சேர்த்து விடுறேன். வேலை நேரம் போக நீ படிக்கலாம். உன்னோட படிப்புக்கு கூட அவர் உதவி செய்வாரு!” என்று கூறினாள் பிரதிக்ஷா.

உடனே விதுரன், “லூசு அந்தப் பையன் எப்படி ஆளுன்னு தெரியாது அவனை கொண்டு போயி யார்கிட்டயோ வேலைக்கு சேர்த்து விடுறேன்னு சொல்ற? அவன் எதையாவது அந்த வீட்டில் இருந்து எடுத்துட்டு ஓடிட்டான்னா என்ன பண்ணுவ!” என்று பிரதிஷாவின்  காதுகளில் எச்சரித்தான் விதுரன்.

சிரித்துக் கொண்டே,” அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆள பாத்து எடை போடாதீங்க. அவன் கண்ண பாருங்க, அதுல அவன் சொல்றது எல்லாம் உண்மை தான்னு தெரியுது!” என்று அழுத்தமாக கூறினாள் பிரதிக்ஷா.

பிரதிக்ஷா சொன்னதும் அவனை அறியாமலேயே விதுரன் பிரதிக்ஷாவின் கண்களை பார்க்க, அந்த பார்வை ஏதோ விதுரனுக்கு உணர்த்துவது போல் தோன்ற சில வினாடிகள் அவள் விழிகளை தன் விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருவர் மற்றவரின்   விழிகளுக்குள் உடுருவி  கண்ணாலே எதையோ இருவரும் உணர்த்தியும் உணர்ந்து கொண்டும் இருக்க  அவர்களின் விழி வச்சு ஒருவரை ஒருவர்   தழுவிக் கொண்டிருந்ததால்  சில வினாடிகள்  இருவரும் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

இருவரின் மோனநிலையை கலைக்கும் விதமாக அந்த சிறுவன் சுண்டல் என்று கூவ  இருவரும் தன்னிலை அடைந்தனர்.

எதிரினில் அந்த சிறுவன் நின்று கொண்டிருக்க இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து 

வெட்கப்பட்டு,”என்ன பாத்துக்கிட்டே இருக்கீங்க,காசு கொடுத்து அனுப்புங்க!” என்று பிரதிக்ஷா சொல்ல தடுமாறினான் விதுரன்.

கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
978 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page