சிதறிய முத்துக்கள் கோர்த்த சரமாய், சிரிப்பொலி சிந்தும் அழகிய உலகம்…
சுயநலம் இல்லா ஒற்றைப் புன்னகையில், சுமைகள் யாவும் துகள்களாய் கரையும் அன்பு நிறைந்த கூடே குடும்பம்…!
உன்னில் சிறையாகிறேன் – 21
பகலின் ஆரவாரங்கள் அடங்கி, வானம் தன் கருநீலப் போர்வையைப் போர்த்திக்கொள்ள, ஊரே அமைதிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது,
தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அங்காங்கே சுற்றும் மின்மினிப் பூச்சிகளும், தூரத்தில் கேட்கும் நாய் குறைக்கும் சத்தமும் அந்த இரவின் அமைதிக்கு ஒரு தாளமிட்டன,
ராகவனின் வீட்டில் கலகலப்பு குறையவில்லை, சமையலறையில் இருந்து வரும் வதக்கும் வாசனையும், ‘டக் டக்’ என கரண்டி பாத்திரத்தில் மோதும் சத்தமும், அந்த வீட்டின் இரவு உணவிற்கான அழைப்பு மணி,
”எல்லாரும் வாங்க… சூடா இருக்கும் போதே சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்,” என்று தாமரையின் குரல் கூடத்தை எட்டியது,
தரையில் பாய் விரிக்கப்பட்டு, அதன் மேல் தட்டுக்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன, அந்த வீட்டில் டைனிங் டேபிள் இருந்தாலும், அனைவரும் தரையில் அமர்ந்து ஒன்றாகச் சாப்பிடுவதில் தான் ஒரு தனி திருப்தி ராகவனுக்கு,
”இன்னைக்கு என்னம்மா ஸ்பெஷல், வாசனை ஆளையே தூக்குது” என்றபடி கேட்டபடியே வந்தான் விஷ்வா,
”உனக்குப் பிடிச்ச கத்திரிக்காய் காரக்குழம்பும், அப்பளமும் தான்பா, அருவிக்கு மட்டும் கொஞ்சம் பருப்புத் துவையல் அரைச்சிருக்கேன்,
ஜனனிக்கு மாங்காய் பச்சடி அப்புறம் தக்காளி மிளகு ரசம், தயிர் அவ்ளோ தான்பா” என்றவாறு தாமரை தட்டில் சோற்றைப் பரிமாறினாள்,
”ஏம்மா எனக்கு மட்டும் ஸ்பெஷல் ஒன்னும் இல்லையா, நான் மட்டும் ஏலத்துக்கா வந்தேன்” என்று சந்துரு வழக்கம்போல தன் பங்கிற்கு வம்பை இழுத்தான்,
”நீ ஸ்பெசல் தான்டா, உனக்கெதுக்கு ஸ்பெசல்” என்று கேட்டான் விஷ்வா,
”விஷ்வா அண்ணா, எங்க என் மோமோஸ், எனக்கு ஏதாவது மிச்சம் இருக்க இல்ல உன் குட்டிம்மா மொத்தத்தையும் அமுக்கிட்டாளா” என்று சந்துரு ஆர்வமாகக் கேட்க,
“நானே இப்ப தான்டா வரேன், அதுக்குள்ள குட்டிம்மா எப்படி சாப்பிட்டிருப்பா, இந்த இதுல எல்லாருக்குமே இருக்கு அவகூட சண்டை போடாம சாப்பிடு” என்ற விஷ்வா சிரித்துக் கொண்டே
அந்தப் பார்சலை நீட்டினான், அதை வாங்கி பிரித்து எல்லாருக்கும் பொதுவாக வைத்தான் சந்துரு,
அருவி ஒரு பக்கம் மோமோஸை மையோனைஸில் முக்கி ருசித்துக் கொண்டிருக்க, ராகவன் தன் தட்டில் இருந்த காரக்குழம்பைப் பிசைந்து கொண்டே,
“விஷ்வா, இன்னைக்கு ஜனனிக்கு செக்கப் எப்படிப் போச்சு, டாக்டர் என்ன சொன்னாங்க” என்று அக்கறையாகக் கேட்டார்,
”எல்லாமே நார்மல் தான்ப்பா, பாப்பா நல்லா ஆரோக்கியமா இருக்கான்னு ஸ்கேன்ல பார்த்து சொன்னாங்க, இன்னும் மூணு மாசம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கச் சொன்னாங்க” என்ற விஷ்வாவின் பதிலில் ஒரு நிம்மதி தெரிந்தது,
ஜனனி தன் மகன் யாழினியனை மடியில் வைத்துக்கொண்டு அவனுக்குச் சோறு ஊட்டிக்கொண்டே,
“ஆமா மாமா, ஆனா மாத்திரை தான் ரொம்பப் பெருசா இருக்கு, முழுங்கவே கஷ்டமா இருக்கு” என்று செல்லமாகப் புகார் கூறினாள்,
”கஷ்டமா இருந்தாலும் சாப்பிட்டு தான் ஆகணும் மருமகளே, அப்போ தான் ராஜாத்தி மாதிரி ஒரு பாப்பா பிறக்கும்” என்று ராகவன் சொல்ல, வீடு முழுதும் ஒரு மெல்லிய சிரிப்பலை பரவியது,
அருவி அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அவளது எண்ணம் முழுவதும் ரோஹித் கொடுத்த டைரி மீதே இருந்தது,
”என்ன குட்டிம்மா ரொம்ப சைலன்டா இருக்க, காலேஜ்ல செமினார் க்ளாஸ் எப்படிப் போச்சு” என்று விஷ்வா கேட்க,
திடுக்கிட்டு நிமிர்ந்த அருவி,
“ஆ… நல்லாப் போச்சுண்ணா. கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவுதான்” என்று மழுப்பினாள், தாமரை அனைவருக்கும் பரிமாறிக் கொண்டே,
“நாளைக்கு மளிகை சாமான் லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன் விஷ்வா, அப்படியே ஆபீஸ் முடிஞ்சு வரும் போது வாங்கிட்டு வந்துடு, அப்புறம் அருவிக்கு ஒரு நோட்டு வாங்கணும்னு சொன்னா அதையும் வாங்கிரு” என்று சொல்ல,
அந்த உரையாடல் அப்படியே குடும்பச் செலவுகளை நோக்கி நகர்ந்தது, கையிருப்புப் பணத்திற்கும், தேவைகளுக்கும் இடையே ஒரு நூலிழைப் பாலத்தில் நடக்கும் அந்த நடுத்தரக் குடும்பத்தின் இரவு உணவு,
ஒரு நீண்ட விவாதத்திற்குப் பின் நாளைக்கு பாத்துக்கலாம் என்ற நம்பிக்கையான வார்த்தையோடு முடிவுக்கு வந்தது,
பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு, தாமரை சமையலறை விளக்கை அணைக்க, அந்த வீடு மெல்ல உறக்கத்திற்குத் தயாரானது,
அனைவரும் அவரவர் அறைக்குச் செல்ல எத்தனித்த போது, விஷ்வா மட்டும் சற்று தயக்கத்தோடு ஹாலிலேயே நின்றான்,
”அப்பா ஒரு நிமிஷம்” என்ற விஷ்வாவின் குரலில் ஒரு முக்கியமான விஷயம் ஒளிந்திருப்பதை உணர்ந்த ராகவன், மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தார்,
”சொல்லுப்பா விஷ்வா, என்ன விஷயம், ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா” என்று ராகவன் கேட்க,
உள்ளே சென்ற தாமரையும் ஜனனியும் கூட என்னவென்று பார்க்க அருகில் வந்தனர்,
”பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லப்பா, இன்னைக்கு ஆபீஸ்ல ஒரு பெர்சனல் லோனுக்கு அப்ளை பண்ணிருக்கேன்” என்றான் விஷ்வா மெதுவான குரலில்,
”லோனா, எதுக்குப்பா இப்ப திடீர்னு, ஜனனியோட டெலிவரி செலவுக்கும், செக்கப்புக்கும் தான் நான் கொஞ்சம் எடுத்து வச்சிருக்கேனே அது பத்தாதா” என்று தாமரை பதற்றத்தோடு கேட்டாள்,
அந்த நடுத்தர வர்க்க மனதிற்கு லோன் என்றாலே ஒரு சின்ன நடுக்கம் வருவது இயற்கைதானே, அடுத்த மாத செலவுக்கு இந்த மாதமே மீதம் பிடித்தால் தான் உண்டு,
என்ற முற்போக்கு சிந்தனையோடு செயல் பட்டால் தான், கொஞ்சமேனும் சிரமம் இல்லாமல் குடும்பம் எனும் வாகனத்தை நகர்த்த முடியும்,
”இல்லம்மா அதுக்கு இல்ல, ஒரு கார் வாங்கலாம்னு இருக்கேன்” என்று விஷ்வா சொல்லி முடிக்கவும், அந்த இடமே ஒரு நிமிடம் நிசப்தமானது,
”கார் வாங்கணுமா, இப்ப இருக்குற விலைவாசியில இது தேவையா விஷ்வா, நம்ம நிலமை உனக்குத் தெரியாதா, வட்டி, தவணைன்னு எதுக்கு தேவையில்லாத சுமை” என்று தாமரை சட்டெனத் தடுத்துப் பேசினாள்,
”அம்மா, நாம புது கார் வாங்கப் போறதில்ல, ஆபீஸ்ல ஒருத்தர் அவரோட காரை விக்கிறதா சொன்னார், ரொம்ப நல்ல கண்டிஷன்ல இருக்கு, பட்ஜெட்டுக்கும் நமக்கு ஏத்த மாதிரி தான் தருவாரு, அதான் யோசிச்சேன்” என்று
தன் தரப்பு நியாயத்தைச் சொன்னான் விஷ்வா, ராகவன் இதுவரை அமைதியாக இருப்பதைக் கண்டு தாமரை அவரிடம் திரும்பினாள்,
“என்னங்க, நீங்களுமாவது சொல்லக்கூடாதா, கார் வாங்குறது பெருசில்ல, அதை பராமரிக்கிற செலவு, பெட்ரோல் விலை எல்லாம் யாரு கட்டுறது” என்று தாமரை கேட்க, ராகவன் விஷ்வாவை நிமிர்ந்து பார்த்தார்,
“காலையில அப்பா கார் வாங்கினா நல்லா இருக்கும்னு சொல்லும் போதே நீங்க எல்லா விஷயத்தையும் சொல்லிட்டீங்கம்மா, அதான் உங்க இரண்டு பேர்கிட்டயும் பர்மிஷன் கேட்காம,
லோனுக்கு அப்ளை பண்ணேன், நாம ஆடம்பரத்துக்காக கார் வாங்கல, நம்ம குடும்பத்தோட தேவைக்காகவும் வசதிக்கும் தான் வாங்குலாம்னு சொல்றேன்,
ஜனனி இப்ப ஏழு மாசம் கன்சீவா இருக்கா, பனி, மழை, வெயில்னு டூவீலர்ல போறது அவளுக்கு கஷ்டமா இருக்கும்மா,” என்று விஷ்வா சொல்ல, ஜனனி நெகிழ்ச்சியோடு தன் கணவனைப் பார்த்தாள்,
”இருந்தாலும் விஷ்வா… அருவிக்கு இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ணனும், அதுக்குன்னு சேத்து வச்சத எல்லாம் இதுக்கே செலவு பண்ணிட்டா” என்று தாமரை இழுக்க,
”அம்மா அருவியோட கல்யாணத்துக்கு நான் இருக்கேன், இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்கு, அதுக்குள்ள லோனை முடிச்சிடலாம்,
சந்துருவும் வேலைக்கு போயிட்டு இருக்கான், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாத்துக்க மாட்டோமா, நாங்க இருக்கும் போது நீங்க ஏன் தேவையில்லாம கவலைப் படுறீங்கம்மா” என்று
விஷ்வா நம்பிக்கையோடு கேட்க, சந்துருவும் பின்னாலிருந்து வந்து விஷ்வாவின் தோளைத் தொட்டான்,
”ஆமாம்மா, அண்ணன் சொல்றது சரிதான், கார் இருந்தா நமக்கும் சொந்த பந்தத்து முன்னாடி கெத்தா இருக்கும்ல” என்று
கலகலப்பாகச் சொல்லிச் சூழலை மாற்ற முயன்றான் சந்துரு,
ராகவன் எழுந்து வந்து விஷ்வாவின் கையைப் பற்றிக்கொண்டார்,
“உன் மனசு எனக்குப் புரியுது விஷ்வா, ஒரு குடும்பத் தலைவனா நீ எடுக்குற இந்த முடிவு சரிதான், எதையும் யோசிக்காதே, லோன் கிடைச்சா தாராளமா வாங்கு, என்னால முடிஞ்ச உதவியை என் பென்ஷன்ல இருந்து நானும் பண்றேன்” என்றார்
தாமரைக்கு இன்னும் முழு சம்மதம் இல்லையென்றாலும், தன் கணவனும் மகனும் கொண்ட அந்த அன்பான பிணைப்பைக் கண்டு,
“சரி எல்லாம் உங்க இஷ்டம். அப்புறம் பின்னாடி கஷ்டம் வரும்போது என்கிட்ட வந்து நிக்காதீங்க” என்று போலியான கோபத்தோடு சொல்லிவிட்டுச் படுக்கையறைக்குள் சென்றாள்,
ஆனால் அவள் மனதிற்குள்ளும் ஒரு சிறு மகிழ்ச்சி இருக்கவே செய்தது, தன் மருமகள் வயிற்றுப் பிள்ளையோடு இனி வெயிலில் அலையத் தேவையில்லை என்ற நிம்மதி,
அருவி இதையெல்லாம் தன் அறையின் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள், தன் குடும்பத்தின் இந்தச் சிறிய ஆசைகளும்,
அதற்காக அவர்கள் சந்திக்கும் விவாதங்களும் அவள் மனதை ஏனோ சலனத்தை ஏற்படுத்தியது,
படித்து முடிந்ததும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், கிடைக்கற பணத்தை,
தன்னால் இயன்ற வரை குடும்பத்திற்காகவும் தன் அண்ணனின் சுமையை குறைப்பதற்காகவும், கொடுக்க வேண்டும், என்ற எண்ணம் மனதில் ஆணிவேராக ஓடியது,
எப்போதும் கலகலப்பாகத் துள்ளித் திரியும் தன் தங்கையின் முகத்தில் இன்று ஏதோ குழப்பம் குடிகொண்டிருப்பதை விஷ்வா கவனிக்கத் தவறவில்லை,
அவளின் முக வாட்டத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று அறிய
மெதுவாக அவளறைக்கு வந்தான் விஷ்வா, அவ்ளோ ஜன்னல் வழியாக இருட்டை வெறித்துக் கொண்டு நின்றாள்,
“என்ன குட்டிமா, என்ன யோசனை, கார் வாங்குறதுல உனக்கு இஷ்டம் இல்லையா, இல்ல அம்மா சொன்னது மாதிரி செலவு அதிகமாகும்னு பயப்படுறியா” என்று அக்கறையாகக் கேட்டான் விஷ்வா,
திடீரென அண்ணனின் குரல் அருகில் கேட்க அருவி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்,
“அப்படி எல்லாம் இல்லண்ணா, அது வந்து…” என்று தயங்கி, மேஜை மேல் இருந்த அந்த டைரியை எடுத்து விஷ்வாவிடம் நீட்டினாள்,
”இது என்னது, நோட்டுப் புத்தகமா” என்று விஷ்வா அதை வாங்கிப் புரட்ட, அருவி மெல்லப் பேசத் தொடங்கினாள்,
அருவி மீதான ரோஹித்தின் காதல் தெரிந்தால் விஷ்வா என்ன செய்வான்?
ரோஹித்தின் காதலை ஏற்கும் மனநிலைக்கு அருவி வந்து விட்டாளா?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
