உன்னில் சிறையாகிறேன் – 22

கண்ணில் ஒரு துளி நீர் கசிந்தால்

துடிக்கின்ற முதல் இதயம் அண்ணன்…!

உலகமே கைவிட்ட நேரத்திலும்

உரிமையோடு தோள் கொடுக்கும் உறவு…!

​திருமணம் முடிந்து ஊர் புகுந்தகம் சென்றாலும் பிறந்தகத்தின் பெருமை பேசும் பாசம்…!

இரத்த பந்தம் தாண்டிய ஓர் உன்னதம் அதுவே அண்ணன்  தங்கை நேசம்…!

உன்னில் சிறையாகிறேன் – 22

இன்னைக்கு காலேஜ்ல நடந்த செமினார் முடிஞ்சதும், ரோஹித்ன்னு ஒரு பையன் என்னைப் பார்க்கணும்னு சொன்னான், 

அவன்… அவன் என்னை விரும்புறதா சொன்னான் அண்ணா, இந்த டைரியில என்னைப் பார்த்த நாள்ல இருந்து அவன் நினைச்சதையெல்லாம் எழுதி வச்சிருக்கானாம்,

என்கிட்ட விருப்பம் இருக்கான்னு கேட்டான்…” என்று சொல்லிவிட்டுத் தலைகுனிந்து கொண்டாள்,

​விஷ்வா அந்த டைரியின் சில பக்கங்களை மௌனமாகப் புரட்டினான், அதில் இருந்த வரிகள் ஒரு இளமை நிறைந்த இளைஞனின் கண்ணியமானன காதலைச் சொல்லியது,

விஷ்வா எதையும் பதற்றப்படாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த அருவிக்கு தான் மனசெல்லாம் படபடவென அடித்துக் கொண்டு இருந்தது,

​”நீ என்ன சொன்ன அருவி” என்று விஷ்வா நிதானமாகக் கேட்டான்,

​”எனக்கு அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லண்ணா, எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு, படிச்சு பெரிய ஆளாகணும்னு ஆசைப்படுறேன், 

அதனால முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டேன், ஆனா, அவன் இதைக் குடுத்துட்டுப் போகும்போது அவன் கண்ணுல இருந்த அந்த ஏமாற்றம், அதுதான் என்னவோ பண்ணுது அண்ணா,

நான் பண்ணது தப்பா” என்று அண்ணனின் முகம் பார்த்துக் கேட்டாள்,

​விஷ்வா அந்த டைரியை மூடி மேஜை மேல் வைத்தான், அருவியின் தோளை அணைத்துக் கொண்டு, 

“இங்க பாரு அருவி, நீ இப்போ ஒன்னும் சின்னக் குழந்தை இல்ல. உனக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு முடிவெடுக்கத் தெரிஞ்ச வயசு வந்துடுச்சு, 

ஒருத்தன் உன்னை விரும்புறது தப்பில்லை, ஆனா அதே சமயம் உனக்கு அதுல விருப்பம் இல்லைன்னா நோ சொல்றது உன்னோட உரிமை, அதுக்காக நீ குற்றவுணர்ச்சி பட வேண்டிய அவசியமே இல்லை” என்றான் பெருந்தன்மையாக,

​அருவி நிமிர்ந்து பார்த்தாள்,

“ஆனா அவன் ரொம்ப வருத்தப்பட்டான் அண்ணா…” என்றாள் அருவி

​”வருத்தப்படத்தான் செய்வான், ஆனா காலம் போகப் போக அவனுக்கே புரியும், உன்னோட லட்சியம், உன் படிப்பு இதுதான் இப்போ உனக்கு முக்கியம்னா, நீ எடுத்த முடிவுல உறுதியா இரு,

உன் அண்ணன் நான் எப்பவும் உனக்குத் துணையா இருப்பேன், உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம், ஒருவேளை உனக்கும் அந்த பையன் மேல விருப்பம் இருந்தா,

அப்பவும் நான் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன், என் தங்கச்சியை பத்தி எனக்கு தெரியும், தப்பான பர்ஷனை அவ செலக்ட் பண்ண மாட்டா” என்று விஷ்வா சொல்ல, அருவியின் கண்கள் லேசாகக் கலங்கியது,

​தன் அண்ணன் கோபப்படுவான் அல்லது கண்டிக்கப் போவான் என்று நினைத்த அருவிக்கு, அவன் காட்டிய இந்த முதிர்ச்சியும் அன்பும் ஒரு பெரிய நிம்மதியைத் தந்தது,

​”தேங்க்ஸ் அண்ணா, நீங்க கோபப்படாம என்னை புரிஞ்சுக்குவீங்கன்னு நான் நினைக்கல” என்று அவன் கையைப் பற்றிக்கொண்டாள்,

“சரி சரி… ரொம்ப எமோஷனல் ஆகாத, இப்போ போய் நிம்மதியா தூங்கு, இந்த டைரியைத் திருப்பிக் குடுக்கணுமா இல்ல பத்திரமா வச்சிருக்கணுமாங்கிறதும் உன் இஷ்டம் தான்” என்று சொல்லிச் சிரித்த விஷ்வா, 

அவள் தலையை வருடிவிட்டுச் சென்றான், ​அண்ணனின் அந்த எல்லையில்லா அன்பில் நனைந்த மகிழருவிக்கு, அந்த இரவு மற்ற இரவுகளை விட மிக அழகாகத் தெரிந்தது,

மெல்ல டைரியை கையில் எடுத்தாள், அதன் முதல் பக்கத்தில் அவள் பெயரை அழகாக மிக மிக அழகாக எழுதி இருந்தான் ரோஹித், அதை தொட்டுப் பார்த்தாள்,அவள் உடல் சிலிர்த்தது,

எதுவா இருந்தாலும் படிப்பு முடிஞ்சதும் தான் முடிவெடுக்கனும் அது வரைக்கும் படிப்பு தான் முக்கியம் என்று தன் மனதிற்கு தானே கடிவாளம் இட்டுக் கொண்டு டைரியை அவள் டேபிள் உள்ளே வைத்து சாத்தினாள்,

************

மாலைப் பொழுது, வானம் செந்நிறக் குழம்பைப் பூசிக் கொள்ள, பறவைகள் தன் கூடு நோக்கிச் சிறகடித்துச் சென்றன, 

ராகவன் வீட்டின் முற்றத்தில் அந்தத் தையல் இயந்திரத்தின் தக் தக் சத்தம் மட்டும் சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது, தாமரை ஏதோ ஒரு ஜாக்கெட் துணியில் தீவிரமாகத் தையல் போட்டுக் கொண்டிருக்க, 

அருகில் ஜனனி தன் மகன் யாழினியனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்,

​அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது, விஷ்வாவின் பைக் வேகம் தணிந்து வாசலில் நின்றது, 

வழக்கமாக அலுவலகம் முடிந்து அவன் வர தாமதமாகும், இன்று சற்று நேரத்தோடே வந்து விட்டான், தினமும் அவன் வரும் போது இருக்கும் சோர்வு இன்று அவன் முகத்தில் இல்லை, 

மாறாக, ஒருவிதமான சாதித்த பெருமிதமும், அடக்க முடியாத புன்னகையும் அவன் இதழ்களில் தவழ்ந்தன, ​வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, 

உள்ளே நுழைந்த விஷ்வா நேராகத் தன் தாயின் அருகில் சென்றான், சட்டைப் பையிலிருந்து ஒரு தடிமனான கவரை எடுத்து, தாமரையின் மடியில் வைத்தான்,

​”என்னப்பா இது என்ன விஷ்வா இது” என்று தையல் மிஷினை நிறுத்திவிட்டு ஆச்சரியமாகக் கேட்டாள் தாமரை,

​”அம்மா நான் சொன்னேன்ல, லோன்னுக்கு அப்ளை பண்ணிருக்கேன்னு, இன்னைக்கு சாங்ஷன் ஆகிடுச்சு, கையிலயே பணமா வாங்கிட்டு வந்துட்டேன், 

இதோ இதுல ஒரு லட்சம் ரூபா இருக்கு” என்று விஷ்வா சொல்ல, 

​தாமரை நடுங்கும் கரங்களால் அந்தப் பணக்கவரைத் தொட்டுப் பார்த்தாள், ஒரு நடுத்தர வர்க்கத் தாய்க்கு, தன் மகன் ஒரு பெரும் தொகையைக் கொண்டு வந்து மடியில் வைக்கும்போது ஏற்படும் அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை, கண்ணில் ஒரு மெல்லிய ஈரம் படர, 

“விஷ்வா இவ்வளவு பணமாப்பா, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றாள் நெகிழ்ச்சியுடன்,

​சத்தம் கேட்டு உள்ளேயிருந்து நியூஸ் பேப்பருடன் ஓடி வந்தார் ராகவன்,

“என்னப்பா விஷ்வா, லோன் கிடைச்சிருச்சா, நிஜமாவா,” என்று கேட்க, விஷ்வா தலையசைத்து உறுதிப்படுத்தினான்,

​”ஆமாப்பா, நாளைக்கு காலையிலயே போய் காரை எடுத்துட்டு வந்திடலாம், அந்த ஆபீஸ் ப்ரண்ட் கிட்டயும் பேசிட்டேன், வண்டி ரெடியா இருக்கு” என்று விஷ்வா சொல்ல, 

ஜனனியின் முகத்தில் ஒரு பூரிப்பு. தன் கணவன் தன் பாதுகாப்புக்காக இவ்வளவு தூரம் மெனக்கெடுவதை நினைத்து அவளுக்குள் ஒரு பெருமை,

​”ஹைய்யா… நாளைக்கு நாம கார்ல போறோமா அப்பா” என்று யாழினியன் குதித்துக் குதூகலிக்க, 

அந்த மகிழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது, அருவி அப்போது தான் காலேஜ் முடிந்து சந்துருவுடன் உள்ளே நுழைந்தாள், 

“என்ன விசேஷம், வீடே ஒரே கொண்டாட்டமா இருக்கு,” என்று அருவி கேட்க, 

“இன்னைக்கி என்ன இந்த நேரத்துல மாநாடு நடந்துட்டு இருக்கு” என்ற சந்துரு சட்டெனப் பணக்கவரைப் பார்த்துவிட்டு, 

“ஹே பணமா, லோன் பணம் கிடைச்சிருச்சா, அப்போ சீக்கிரமா நம்ம வீட்டுக்கு கார் வந்திரும்” என்று விஷ்வாவின் தோளைக் கட்டிக்கொண்டான்,

​”தாமரை இந்தப் பணத்தை சாமி படத்துக்கு முன்னாடி வை, நாளைக்கு நல்ல நேரம் பார்த்து கிளம்பலாம்” என்றார் ராகவன் உற்சாகமாக,

​தாமரை அந்தப் பணக்கவரைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துச் சாமி அறையில் வைத்தாள், 

“எல்லாம் நல்லபடியா நடக்கணும் சாமி, நீதாப்பா கூடவே இருந்து என் குடும்பத்தை காப்பாத்தனும்” என்று வேண்டிக் கொண்டவளின் முகத்தில், 

காலையில் இருந்த அந்த எதிர்ப்புக் காணாமல் போய், ஒரு தாய்மையின் பெருமிதம் மட்டுமே எஞ்சியிருந்தது.

“அம்மாவை இந்த மாதிரி பாக்கும் போது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு அண்ணா,” என்று அவள் மெதுவாகச் சொல்ல, விஷ்வா அவளது கன்னத்தைத் தட்டிச் சிரித்தான்,

​ஆடம்பரங்கள் இல்லாத அந்த எளிய வீட்டில், ஒரு பழைய கார் வரப்போகிறது என்ற செய்தி, ஒரு பெரும் திருவிழாவிற்கான அச்சாரத்தைப் போல அனைவரது மனங்களையும் இனிப்பால் நிரப்பியது,

அந்த இரவு, அந்த வீட்டில் உறக்கம் என்பது யாருக்கும் வரவில்லை, ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, 

மறுநாள் காலை, சூரியன் தன் கரங்களை மெல்லப் பரப்புவதற்கு முன்பே ராகவனின் வீட்டில் உற்சாகம் பற்றிக்கொண்டது, வழக்கமாக அலாரம் அடித்து எழுப்ப வேண்டிய சந்துரு கூட, இன்று யாவருக்கும் முன்பே எழுந்துவிட்டான்,

அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் இன்று ஒரு புதிய கொண்டாட்டத்திற்குத் தயாராவது போலத் தெரிந்தது,

​தாமரை அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு, வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுச் சமையலறைக்குள் புகுந்தாள், 

“விஷ்வா சந்துரு சீக்கிரம் வாங்கப்பா, நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பணும்ல” என்று அவள் குரல் கொடுக்க, 

அதற்குள் குளித்து முடித்துவிட்டு நெற்றியில் திருநீறு தரித்து விஷ்வா வெளியே வந்தான்,

​அவனைத் தொடர்ந்து சந்துருவும், 

“இதோ  நான் ரெடி” என்று தன் சட்டையைச் சரி செய்தபடி வந்தான்,

​ஜனனி தன் மகனைத் தயார் செய்துவிட்டு, தானும் ஒரு அழகான புடவையில் மங்கலகரமாகத் தோற்றமளித்தாள், அருவி தன் அண்ணன்களின் உற்சாகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, 

“என்னப்பா… ரெண்டு பேரும் ஏதோ போருக்குக் கிளம்புற மாதிரி இவ்வளவு சீக்கிரம் ரெடி ஆகிட்டீங்க” என்று கிண்டலடித்தாள்,

​”ஏய் வாலு சும்மா இரு, இது நம்ம வீட்டுக்கு வர்ற முதல் கார், இதுக்குக் கூட சீக்கிரமா கிளம்பாம எப்படி” என்று சந்துரு பதிலுக்கு வம்புக்கு இழுக்க, அந்த இடமே கலகலப்பானது,

​தாமரை நேராகச் சாமி அறைக்குச் சென்றாள், அங்கே வைக்கப்பட்டிருந்த அந்தப் பணக்கவரை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள், பிறகு, விஷ்வாவிடம் வந்து பணத்தைக் கொடுக்க, 

“அப்பா, அம்மா பக்கத்துல வந்து நின்னு இரண்டு பேரும் ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா” என்று விஷ்வா சொல்ல, 

ராகவன் தன் மகனைப் பெருமிதத்துடன் பார்த்தார்,ராகவன் தாமரை சேர்ந்து நிற்க விஷ்வாவும் சந்துருவும் ராகவனின் காலில் விழுந்து வணங்க, மகன்கள் இருவரையும் மனதார வாழ்த்தினர்,

​”நல்லா இருங்கப்பா, நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடிவும் நம்ம குடும்பத்தை இன்னும் உயரத்துக்குக் கொண்டு போகட்டும், 

இந்த வண்டி நம்ம வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரணும்,” என்று ராகவன்  வாழ்த்தி அவர்களைத் தூக்கி விட்டார்,

தாமரை தன் மகன்களின் தலைகளை வருடி, 

“பார்த்துப் பத்திரமா ஓட்டிட்டு வாங்கப்பா வண்டி எடுக்கும்போது தேங்காய் உடைச்சு சாமி கும்பிட மறந்துடாதீங்க” என்று சொல்லும்போதே அவள் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன,

தன் மகன்கள் தங்களின் உழைப்பில் ஒரு காரை வாங்கப் போகிறார்கள் என்பது அந்தத் தாய்க்கு எவ்வளவு பெரிய நிம்மதி,

​ஜனனி விஷ்வாவைப் பார்த்துப் புன்னகைக்க, விஷ்வா அவளிடம், 

“சீக்கிரம் வந்திடுறேன் ஜனனி, மதியம் நாம எல்லாரும் புது வண்டில தான் கோவிலுக்குப் போகப்போறோம்” என்று சொல்லிவிட்டு பைக்கின் சாவியை எடுத்தான்,

​”அண்ணா நானும் வரட்டுமா” என்று அருவி ஆசையாகக் கேட்க,

​”இப்போ வேணாம் குட்டிமா, வண்டியைக் கொண்டு வந்து வாசல்ல நிறுத்தினதும் நீ தான் முதல்ல கார்ல ஏறனும், இப்போ அண்ணன் கூட சந்துரு மட்டும் வரட்டும்” என்று விஷ்வா சொல்ல, 

அருவி தலையசைத்து அவர்களை வழியனுப்பினாள், ​வாசலில் நின்ற ராகவனும், தாமரையும் அவர்கள் கண் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தனர், 

அந்தத் தெருவே இன்னும் முழுதாக விழிக்காத அந்த அதிகாலைப் பொழுதில், இரு சகோதரர்களும் ஒரு புதிய கனவைச் சுமந்து கொண்டு உற்சாகமாகப் பறந்தனர்,

​அப்போதிருந்தே வீட்டின் திணணணையில் அமர்ந்து, கார் எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தொடங்கினாள் அருவி,

​தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page