உன்னில் சிறையாகிறேன் – 23

சுற்றிலும் நான்கு சுவர்கள் கொண்டது வெறும் இல்லம்…

சுகம், துக்கம், சந்தோஷம் சங்கடமென எது வந்தாலும் விட்டுக் கொடுக்காத உறவுகள் சேர்ந்ததே இல்லறம்…!

இல்லறம் நல்லறமாக இனிக்க உயிர் கலந்த உறவுகள் இருந்தால் போதுமானது…!

உன்னில் சிறையாகிறேன் – 23

காலை வெயில் மெல்லத் தாளத் தொடங்க, தெருவின் முனையில் ஒரு மெல்லிய ஹாரன் சத்தம் கேட்டது, வாசலில் தவம் கிடந்த அருவி, 

“அப்பா அண்ணா வந்துட்டாங்கப்பா” என்று கத்தியவாறே வீதிக்கு ஓடினாள்,

​தூரத்தில் மின்னும் வெள்ளை நிறத்தில், ஒரு அழகான செகண்ட் ஹேண்ட் கார் மெதுவாகத் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது, விஷ்வா மிக நிதானமாக, ஒரு ராஜகளை பொருந்திய முகத்தோடு வண்டியை ஓட்டி வர, 

பின்னால் சந்துரு தன் பைக்கில் ராஜநடை போட்டுத் துணையாக வந்தான், வண்டி வாசலில் வந்து நின்றதும், அந்தத் தெருவில் இருந்த அக்கம் பக்கத்தினர் மெல்லத் தலைநீட்டிப் பார்க்கத் தொடங்கினர்,

​”அடேங்கப்பா,  ராகவன் வீட்டுக்கு புதுசா ஒரு கார் வந்திருக்கு” என்ற முணுமுணுப்பு காற்றில் பரவியது,

​வண்டியை நிறுத்திவிட்டு விஷ்வா கீழே இறங்கினான், ராகவனும் தாமரையும் ஓடி வந்து வண்டியைத் தடவிப் பார்த்தனர், தாமரை சட்டெனத் திருஷ்டி கழிக்க ஒரு எலுமிச்சம்பழத்தை நசுக்கிப் போட்டாள்,

“விஷ்வா வண்டி பாக்கப் புதுசு மாதிரியே இருக்குப்பா” என்று ராகவன் பூரிப்பில் திளைத்தார்.

​விஷ்வா சிரித்துக்கொண்டே, 

“அருவி அண்ணன் சொன்னேன்ல, நீ தான் முதல்ல ஏறணும்னு, வா ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்,” என்று முன் கதவைத் திறந்து விட்டான்,

​அருவி துள்ளிக் குதித்து ஏறி அமர்ந்தாள், அந்த ஏசி காற்றின் சில்லென்ற ஸ்பரிசமும், அந்தப் புதிய சீட் கவரின் வாசனையும் அவளுக்கு அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது,

விஷ்வா தெருவின் கடைசி வரை அவளை அழைத்துச் சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்தான்,

​”இப்போ எல்லாரும் கிளம்புங்க, கோவிலுக்குப் போகலாம்,” என்றான் விஷ்வா,

​ராகவன், தாமரை, ஜனனி மற்றும் யாழினியன் என அனைவரும் தயாராகி வந்தனர், ஆனால் வண்டி ஐந்து பேர் அமரும் அளவுதான் வசதியாக இருந்தது,

​”எல்லாரும் எப்படி இதுல உட்கார முடியும், அண்ணா நான் பைக்கிலே வர்றேன், நீங்க எல்லாரும் கார்ல வாங்க” என்றான் சந்துரு,

“இல்லண்ணா, நான் கூட கார்ல ஒரு ரவுண்ட் போனேன்ல நீதான் இன்னும் கார்ல போகல, அதனாலநான் பைக்கல வர்றேன் நீ கார்ல வாண்ணா” என்றாள் அருவி

​”இல்ல அருவி, நீ உள்ள வா, சந்துரு பைக்கில வரட்டும்” என்று விஷ்வா சொல்ல, அருவி பிடிவாதமாக மறுத்தாள்,

​”இல்லண்ணா எனக்கு பைக்கில வரனும் போல ஆசையா இருக்கு அண்ணா, நான் இன்னைக்கு ஒருநாள் பைக்கில வர்றேனே, 

சந்துரு அண்ணா உள்ளே போய் உட்காரட்டும் ப்ளீஸ் அண்ணா” என்று அடம் பிடித்துப் பைக்கின் சாவியை வாங்கிக் கொண்டாள்,

​சந்துரு சிரித்துக்கொண்டே, 

“சரிம்மா தாயே உன்கிட்ட வாதம்  பண்ணி யாரால ஜெயிக்க முடியும், நீயே பைக்கில வா, நான் கார்ல ஹாயா வர்றேன்” என்று காரின் உள்ளே புகுந்துகொண்டான்,

​முன்னால் அருவி தன் தலைமுடி காற்றில் பறக்க, பைக்கை ஸ்டார்ட் செய்து சீறிப் பாய்ந்தாள், அவளுக்குப் பின்னால், தன் முழு குடும்பத்தையும் சுமந்து கொண்டு, ஒரு நிதானமான வேகத்தில் அந்தப் புதிய வெள்ளை நிறக் கார் கம்பீரமாக நகர்ந்தது,

​சாலையில் செல்லும் போது, அருவி அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்துத் தன் குடும்பத்தினருக்குக் கையசைத்துக் கொண்டே போனாள், 

காரின் கண்ணாடி வழியாகத் தெரிந்த ராகவனின் சிரிப்பும், தாமரையின் நிம்மதியான முகமும், ஜனனியின் பெருமிதமும் விஷ்வாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது,

​கோவில் கோபுரம் தெரிந்ததும், அருவி தன் பைக்கின் வேகத்தைக் குறைத்து காருக்கு வழி விட்டாள், அந்த நடுத்தரக் குடும்பத்தின் மகிழ்ச்சி, அந்த நான்கு சக்கரங்களில் உருண்டு கொண்டு, இறைவனின் பாதத்தை வந்தடைந்தது,

​ஆடம்பரம் என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, உழைப்பால் கிடைத்த ஒரு சிறிய வசதியைத் தன் குடும்பமே கொண்டாடுவதில் தான் இருக்கிறது என்பதை அருவி அன்று ஆழமாக உணர்ந்தாள்

கோவில் கோபுரம் கம்பீரமாகத் தெரிய, அதன் வாசலில் தன் வெள்ளை நிறக் காரை நிதானமாக நிறுத்தினான் விஷ்வா, பைக் ஸ்டாண்ட் போட்டுவிட்டு இறங்கிய அருவி, 

“அண்ணா… செம்ம ஹேப்பியா இருக்கு” என்று கத்தியபடி காரின் கதவைத் திறந்து விட, 

ஒவ்வொருவராக இறங்கினர்.

​கோவில் அர்ச்சகர் தட்டில் தேங்காய், பழம், பூக்களுடன் தயாராக வந்து நின்றார். காரின் பானட்டின் மேல் சந்தனம், குங்குமம் இட்டு, நான்கு சக்கரங்களுக்கு அடியிலும் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டது,

​”ஓம் கணபதயே நமஹ…” என்று ஐயர் மந்திரம் ஓத, விஷ்வாவும் ஜனனியும் தம்பதியாக நின்று கற்பூர ஆராதனை காட்டினர், 

தேங்காய் உடைத்து, வண்டிக்குத் தீபாராதனை காட்டிய அந்த நொடி, ராகவனின் கண்கள் லேசாகக் கசிந்தன. தன் மகன் தன் உழைப்பில் ஒரு வாகனத்தை வாங்கி, 

அதைத் தன் கண்முன்னே தெய்வத்தின் பாதத்தில் சமர்ப்பிப்பதைப் பார்க்க எந்தத் தகப்பனுக்குத்தான் பெருமையாக இருக்காது, ​பூஜை முடிந்து, அனைவரும் கோவிலுக்குள் சென்று குலதெய்வத்தை மனமார வேண்டிக்கொண்டனர், 

மனநிறைவான தரிசனம் முடிந்து, கோவில் பிரகாரத்தின் கல் தளத்தில் அனைவரும் வரிசையாக அமர்ந்தனர், அந்த மாலை நேரத்துக் குளிர்ந்த காற்று, அனைவரின் மனதையும் வருடிச் சென்றது,

​ராகவன் காரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி பேசத் தொடங்கினார்,

“நிஜமாவே எனக்கு இது ஒரு கனவு மாதிரியே இருக்குப்பா விஷ்வா, நான் வேலை பார்த்த காலத்துல ஒரு செகண்ட் ஹேண்ட் சைக்கிள் வாங்குறதுக்கே மூணு மாசம் யோசிப்பேன்,

ஆனா இன்னைக்கு என் புள்ளை ஒரு காரையே கொண்டு வந்து நிறுத்திட்டான், மனசே நிறைஞ்ச மாதிரி இருக்குடா,” என்று அவர் பிரமிப்புடன் சொல்ல, தாமரை அவர் கையைப் பற்றிக்கொண்டாள்,

​விஷ்வா புன்னகையுடன், 

“எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்ப்பா, கார்ல எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து வர்றதைப் பார்த்தப்போ, நான் பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போயிடுச்சுப்பா” என்றான் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தபடி.

​சந்துரு வழக்கம் போல, 

“அண்ணே கார் வாங்குனது சரி, ஆனா அடுத்த வாரம் நம்ம எல்லாரும் இந்த வண்டில ஒரு லாங் ட்ரிப் போகணும், என்ன அருவி நீ என்ன சொல்ற” என்று கேட்க, அருவி உற்சாகமாகத் தலை அசைத்தாள்.

​”நிச்சயமா போகணும் அண்ணா, ஆனா அந்த ட்ரிப்ல நான் பைக்ல வரமாட்டேன், நான் தான் அண்ணன் பக்கத்துல கோ பேசஞ்சர் சீட்ல உட்கார்ந்து பாட்டுப் போட்டுக்கிட்டே வருவேன்” என்று அருவி சொல்ல, ஜனனி சிரித்துக்கொண்டே, 

“தாராளமா உட்காரு அருவி, உனக்கு இல்லாததா” என்றாள்,

அந்தக் கோவில் பிரகாரத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் சிரிப்புச் சத்தம் எதிரொலித்தது, 

ஆடம்பரமான உணவகங்களோ, விலை உயர்ந்த பொழுது போக்குகளோ தேவையிருக்கவில்லை, ஒரு பழைய கார் தந்த அந்த மகிழ்ச்சியும், 

குடும்பத்தின் ஒற்றுமையும்தான் அவர்களை அந்த நிமிடம் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களாக உணர வைத்தது,

கோவில் பிரகாரத்தின் அமைதியில் திளைத்துவிட்டு, அனைவரும் உற்சாகம் குறையாமல் எழுந்து காரை நோக்கி நடந்தனர், விஷ்வா டிரைவர் சீட்டில் அமர்ந்து இன்ஜினை ஸ்டார்ட் செய்ய, 

அந்த மெல்லிய ரம் என்ற சத்தம் ஒரு சங்கீதமாய் ஒலித்தது,

​அனைவரும் ஏறி அமரத் தயாராக, அருவி மட்டும் பைக்கின் அருகே நின்று யோசித்துக் கொண்டிருந்தாள்,

“என்ன அருவி, ஏறி உட்காரு, கிளம்பலாம்,” என்று சந்துரு அழைக்க,

​”அண்ணா, நீங்க போங்க, நான் அப்படியே தமிழினியைப் பார்த்துட்டு வர்றேனே, அவகிட்ட கார் விசேஷத்தைச் சொல்லிட்டு, அப்படியே ஒரு சின்ன ட்ரீட்டும் வச்சிட்டு வந்துடுறேன்,” என்று அருவி தன் கண்கள் மின்ன கேட்க,

“ஏய், கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு,நேரா வீட்டுக்கு தான் போகனும், அதை விட்டுட்டு இப்ப போய் தமிழ் வீட்டுக்கு போறேன்னு சொல்ற, அதெல்லாம் நாளைக்கு போயிக்கலாம், முதல்ல வந்து கார்ல ஏறு” என்று அதட்டலாகச் சொன்னாள்,

​”அம்மா ப்ளீஸ்மா தமிழ் என் பெஸ்ட் பிரண்ட் இல்லையா, அவகிட்ட இதையெல்லாம் சொல்லாம எனக்குத் தூக்கமே வராது, நான் சீக்கிரமா வந்திடுறேன்,” என்று கெஞ்சும் குரலில் அருவி சொல்ல, 

விஷ்வா அவளைப் பார்த்துப் புன்னகைத்தான், ​ராகவன் தன் மனைவியைத் தடுத்து, 

“விடு தாமரை அவளைப் பத்தி உனக்குத் தெரியாதா, உலகத்துல என்ன நடந்தாலும் அதைத் தமிழ்கிட்ட ஒப்புவிக்காம இவளுக்குச் சோறு இறங்காது, அவளும் இவளைப் பார்த்தா சந்தோஷப் படுவா” என்று சொன்னவர் அருவியைத் திரும்பிப் பார்த்து,

​”நீ போயிட்டு வாம்மா அருவி, ஆனா சொன்ன மாதிரி சீக்கிரம் வந்திடணும், ஜாக்கிரதையா ஓட்டு,” என்று அனுமதி அளித்தார்,

​”தேங்க்ஸ் பா, நீங்க தான் என் செல்லம்,” என்று கத்தியவாறே பைக்கை ஸ்டார்ட் செய்தாள் அருவி,

“குட்டிம்மா, பாத்து பத்திரமா போகனும், தமிழ்கிட்ட பேசிட்டு ரொம்ப டைம் எடுத்துக்காத, அண்ணன் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்” என்ற விஷ்வா காரை நகர்த்த, 

பின்னால் அமர்ந்திருந்த ஜனனியும் யாழினியனும் ஜன்னல் வழியாக அருவிக்குத் டாட்டா காட்டினர், 

ஒட்டுமொத்த குடும்பமும், புதிய காரில் உலகின் மொத்த மகிழ்ச்சியையும் தங்களுடையதாக்கிக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட, அருவி தன் தோழியைச் சந்திக்கும் ஆவலில் எதிர் திசையில் பறந்தாள்,

வழியில் தென்படும் ஒவ்வொரு பூக்களும், மரங்களும் இன்று அவளுக்கு இன்னும் அழகாகத் தெரிந்தது, தன் குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தன் உயிர்த் தோழியுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் அந்தத் தருணத்திற்காக அவள் மனம் சிறகடித்துப் பறந்தது,

சாலை நேராகவும், அமைதியாகவும் இருந்தது, காரின் உள்ளே குளிர்ச்சியான காற்று வீச, விஷ்வா மிக நிதானமாக வண்டியைச் செலுத்தினான். ராகவன் தன் பேரனிடம் ஏதோ ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்க, 

தாமரையும் ஜனனியும் அந்தப் புதிய காரின் வசதிகளைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தனர், சந்துரு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தான்,

​வாழ்க்கையின் மிக உன்னதமான தருணத்தில் இருந்தனர் அவர்கள். அந்த நான்கு சக்கரங்களும் அவர்களின் பல ஆண்டுகாலக் கனவுகளைச் சுமந்து கொண்டு, மகிழ்ச்சியை நோக்கியே உருண்டது,

ஆனால், விதி வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்ததை அறியாமல்,

​தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page