அத்தியாயம் 16

மன்னன் தந்த மாலை

 

அத்தியாயம் 16

 

கைலாசத்தின் முகமோ கலையிழந்து எந்நேரமும் ஏதோ சோகத்துடன் இருக்க, வசுந்தராவிற்கோ அண்ணனின் வதனத்தைக் காணக் காண அவளின் மனம் தேவை இல்லாமல் அமுதாவின் மேல் கோபத்தை வளர்த்தது. அவளுக்கும் தெரியும் தன் மேல் தான் தவறு அவளின்‌ மேல் இல்லையென்று, ஆனால் உடன்பிறந்த பாசம் கொஞ்சம் சுயநலமாகத்தான் யோசித்தது.

அதே நேரத்தில் வீட்டிற்கு மூத்த மகனுக்கு வயதாவதை உணர்ந்து அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார் கற்பகநாயகி.

முதலில் எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் வேண்டாம் என்று மறுத்தவன் தம்பி தங்கைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து உயிரை வெறுத்து தன் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தான்.

அதைக் கேட்ட வசுந்தராவோ தன் தமையனிடம் ஆடித் தீர்த்தாள்.

“நான் அமுதாகிட்டே பேசுறேன் அண்ணா… தயவுசெஞ்சு இப்படி செய்யாதீங்க. நீங்க அவளை எவ்வளவு விரும்புனீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு அண்ணா. உங்க வாழ்க்கையில் அமுதா வந்தா நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க…” என்றவளின் கேள்விக்கு ஒரு வெற்றுப் புன்னகையைச் சிந்தியவன்,

“ஆனா அவ என்னை விரும்பலையேம்மா. அவ விரும்பறது மாணிக்கத்தை… மாணிக்கமும் உன்னோட அண்ணன் தான். அவனோட சந்தோஷத்தை நாம பறிக்க வேணாம். விடு, என் வாழ்க்கை இதுதான்னா நான் வாழ்ந்துட்டு போறேன். ஆசைப்பட்ட எதுவும் கிடைக்கலைன்னா கிடைச்சதை வச்சி சந்தோஷமா வாழணும்.” என்றவன் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் சென்றுவிட்டான்.

அவன் சொல்லிச் சென்ற உண்மை அவளைச் சுட்டது. உண்மை தானே, மாணிக்கமும் அவளின் அண்ணன் தானே. விதி என்பது இதுதானே!

‌ஒருவரின் கண்ணீர் மற்றொருவரின் சந்தோஷத்தை நிர்ணயிக்கிறதே! நடப்பதை வலியுடன் மட்டுமே பார்த்திருந்தாள்.

இதற்கு நடுவே சிவகாமி என்ற பெண்ணைக் கற்பகநாயகிக்கு பிடித்து விட அவளின் பணமும், சமூகத்தில் அவளின் குடும்பத்திற்கு இருந்த கௌரவமும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் மகனுக்குப் பேசி முடித்தார்.

ஆனால் அவர் நினைத்தற்கு மாறாகச் சிவகாமி, பணத்தையோ அந்தஸ்தையோ மதிக்காமல் மனிதரை மதிக்கும் குணம் கொண்டிருந்தாள். கைலாசத்தின் விருப்பமே இல்லாமல் தான் சிவகாமி அவனின் மனைவியானாள். ஆனால் அவளோ பொதுவாகத் திருமணம் என்றதும் பெண்களுக்கே உண்டான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தாள்.

*

திருமணம் முடிந்து முதலிரவில் தன்னிடம் பால் சொம்பைக் கொடுத்துத் தன் காலில் விழுந்தவளை படபடப்புடன் தூக்கி விட்டவர்,

“வேணாங்க, எதுக்கு என் கால்ல விழறீங்க?” என்று விதிர்விதிர்க்கக் கேட்டவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகை செய்தவள்,

“இதுல என்னங்க இருக்கு? நீங்க என்னோட கணவர். ஒரு பொண்ணு வாழ்க்கையில் மிக முக்கியமான இடம் அவளோட கணவருக்குத் தான். நான் உங்களில் பாதி. ஒரு கணவனின் பாதி மனைவின்னு உலகுக்கே சொன்னவன் என் அப்பன் பரமேஸ்வரன். தப்பு இல்லைங்க…” என்றவளின் பேச்சிலிருந்த தெளிவில் கைலாசத்தின் மனதில் சிறிதாய் குற்றவுணர்வு தலைதூக்கியது.

அதைப் புறம் தள்ளியவன் அவள் கொடுத்த பால்சொம்பை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு,

“இப்படி உட்காருங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று கட்டிலைக் காட்ட அவளும் வெட்கத்துடன் அவனருகில் அமர்ந்தாள்.

“என்னை மன்னிச்சிருங்க…. உங்களுக்கு நான் கொஞ்சமும் பொருத்தம் இல்லைங்க. என்னால உங்களோட இயல்பா வாழ முடியுமான்னு தெரியலை? ஆனா முடிஞ்சவரைக்கும் நான் மாற முயற்சி பண்றேன். ஆனா அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும்.” என்றபடி அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு மனமெங்கும் பாரமாய் போனது.

இதோ இப்படிச் சிரித்து வெட்கம் சிந்திக் கொண்டிருக்கும் வதனத்தில் இன்னும் சற்று நேரத்தில் கவலையின் ரேகை வரப்போகிறதே என்பதில் ஒரு மனிதனாய் அவன் மனம் வருந்தியது அவளுக்காக.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு மாலைசூட்டியவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாய் இருக்கும். அது பெண்களின் இயல்பான குணம் தான். அதில் தவறில்லையே.

ஆனால் ‘தான் முன்பே மனதில் ஒருவளை நினைத்தவன் அது நிச்சயம் தனக்கு மனைவியானவளுக்கு தெரிந்தாக வேண்டும். அதைத் தானே சொல்வது தான் நியாயமும் கூட’ என்று நினைத்தவன் அவளைப் பார்த்து,

“என்னை மன்னிச்சிருங்க… நான் உங்ககிட்ட ஒரு உண்மையை மறைச்சிட்டேன். ஆனா அதை இப்பவும் நான் சொல்லாமப் போனா என்னையே என்னால மன்னிக்க முடியாது.” என்று நிறுத்தியவன் அவளைப் பார்க்க அவளோ அவனைப் புரியாத பார்வை தான் பார்த்து வைத்தாள்.

அவளுக்கும் ஒன்றும் அவனைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. அவளைப் பொறுத்தவரை அவளின் பெற்றோர் சொல் தான் அவளுக்கு வேதம். அவர்கள் சொன்ன சொல்லை மீறி நடவாதவள்.

அதுமட்டுமில்லை அவள் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்த காரணம். புகைப்படத்தில் பார்த்தவுடனே கைலாசநாதனை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் மனதிற்குப் பிடித்தவனே மணாளனாய் வருவதில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி தான். அதனால் தான் வீட்டில் சொன்னவுடனே அவளும் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

ஆனால் இப்போது அவன் பேசுவதைக் கேட்டதும் அவளின் மனம் சற்று படபடத்தது. எங்கு அவருக்குத் தன்னை பிடிக்கவில்லையோ என்ற பயமே அவளின் கயல்விழிகளில் கரைபுரண்டு ஓடியது.

அவனுக்கோ அதெல்லாம் தெரியாமல் அவளைப் பாராமலே தூரத்தே வெறித்த பார்வையில்,

“என்னை மன்னிச்சிடுங்க! இதை நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நான் சொல்லியிருக்கணும். ஆனா அப்போ உங்களைப் பாக்க யாரும் அனுமதிக்கலை. அதுவந்து நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நான் ஒரு பொண்ணை மனசார விரும்பினேன். ஆனா அவங்க என்னை விரும்பலை. வேற ஒருத்தரை விரும்புனாங்க. என்னோட விருப்பத்தை நான் அவங்ககிட்ட சொல்லவே இல்லை. அவங்களோட காதலைப் பத்தி தெரிஞ்சதுமே நான் அவங்களை விரும்பினதை மறந்துட்டேன். ஆனா மனசுல ஒரு ஓரம் அவங்களோட வாழ்க்கை நல்லாருக்கணும்னு மட்டும் வேண்டிக்குறேன்.

எனக்குக் கல்யாணமே வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா நான் வீட்டுக்கு மூத்த பையன். எனக்கடுத்து தங்கச்சிங்க இருக்காங்க, அவங்களோட வாழ்க்கையை நான் பாக்கணும் இல்ல? நீங்கத் தான் இந்த வீட்டோட மூத்த மருமக… உங்களுக்குப் பொறுப்பு நிறைய இருக்கும்.

அதுவும் இங்கே எல்லாருமே ஒவ்வொரு மாதிரி. நீங்க என்னோட மனைவி. கண்டிப்பா உங்களை யாருகிட்டேயும் விட்டுக் குடுக்கமாட்டேன். ஆனா நம்மோட வாழ்க்கையைத் தொடங்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க…” என்றபடி தன் மனதில் இருந்த விடயங்களை அப்படியே எதையும் மறைக்காமல் இயல்பாய் கூறியவனை அந்த நொடியே பெண்ணவளுக்கு மிகவும் பிடித்துத் தான் போனது.

தான் கூறியதைக் கேட்ட எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் கோபப்படுவாள், ஆத்திரப்படுவாள், கத்துவாள் என்று எண்ணியவன் எண்ணத்தை அவளின் புன்சிரிப்பு அடியோடு அழித்தது.

ஆம். அவனின் முதல் காதலைக் கேட்டதும் அவளுக்கு முதலில் கொஞ்சம் கோபம் வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் தன்னிடம் எதையும் மறைக்கக் கூடாது என்று நினைத்த அவனின் எண்ணத்தில் பெண்ணவளுக்கு அவனை மிகவும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை தான். அதனால் உதட்டில் புன்னகையைத் தாங்கி அவனை‌ப் பார்த்தவள்,

“நான் காத்திருக்கேன்ங்க…” என்ற ஒற்றை வார்த்தையில் அவனின் இதயராணியாய் அமர்ந்துவிட்டாள் பெண்ணவள்.

அதற்காக அவனின் காதலில் உறுதி இல்லை என்று சொல்லிவிட முடியாது. என்று அவள் மனதார நேசித்தவள் வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்ததும் விலகிச் சென்றானோ அதுவும் காதலின் ஆழம் தான்.

அதே நேரத்தில் தன்னையே உலகமாய் நினைத்துத் தன் கையால் தாலியை வாங்கிக் கொண்டவளின் மீது வெறுப்பைக் காட்டுவதோ கோபத்தை காட்டுவதோ தவறு என்று எண்ணுபவன். தன் மனநிலையை மட்டும் பாராமல் அடுத்தவர்களின் மனநிலையையும் எண்ணுபவர்கள் இந்த உலகில் குறைவானவர்களே. அதில் கைலாசநாதனும் ஒருவன்.

சேற்றில் செந்தாமரை மலர்வதில்லையா? அதுபோலத்தான்‌ கற்பகநாயகி ராஜவேலுவின் குடும்பத்தில் தவறி வந்த விழுதுகள் கைலாசநாதனும் வசுந்தராவும்.

நாம் ஒருவரை நேசித்தால் அவர்களும் நம்மை நேசிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் நாம் நேசித்தவர்கள் நன்றாக இருந்தாலே போதும்‌ என்ற நிம்மதியே நம் வாழ்வை நிம்மதியாக்கும். அதுபோல் அமுதாவும் அவள் விரும்பிய வாழ்வை வாழட்டும் என்று நினைத்த கைலாசம் தனக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கையை மனதார ஏற்றுக் கொண்டான்.

சிவகாமியையே இமை சிமிட்டாமல் பார்த்திருந்தவனின் பார்வையில் பெண்ணுக்கே உண்டான இயல்பான கூச்சத்தில் சற்று நெளிந்தவள்,

“ஏன்‌ இப்படி பாக்குறீங்க…?” என்றவளின் பார்வை நிலத்தைத் தாங்கி இருந்தது.

“அது இல்லைம்மா‌ நான் ரொம்ப குடுத்து வச்சவன்… அதைத் தான் பார்த்தேன். சரி படுக்கலாமா?” என்றபடி அவன் எழவும் இவளும் வேகமாய் எழுந்தவள்,

“நீங்கக் கட்டில்ல படுங்க… நான் கீழே படுத்துக்கிறேன்.” என்றபடி போர்வையை எடுக்கச் சென்றவளை,

“எதுக்கு நீங்கக் கீழே படுக்கணும்? கட்டில் தான் இவ்வளவு பெருசா இருக்குல்ல… ஒரே கட்டில்ல ரெண்டு பேரும் படுக்கலாம். நமக்குள்ள தாம்பத்யம் தான் இப்போ வேணாம்னு சொன்னேன். ஆனா எப்பவும் வேணாம்னு சொல்லலை. கட்டில்லேயே படும்மா…” என்றபடி இவன் ஒரு ஓரமாய் படுக்கப் பெண்ணவளும் அவனை‌ப் பார்த்துச் சிரித்து கொண்டே அவனுருகில் நிம்மதியாய்‌ படுத்துக் கண்மூடி உறங்கினாள்.

நிச்சயம் அவனின் மனது விரைவாய் மாறும். அன்று சிவகாமியை முழுமனதாய் தன்னவளாய் மாற்றிக் கொள்வார். அந்த நம்பிக்கை அவளுக்கு அவனின் வார்த்தையால் கிடைத்தது.

*

இதேநேரம் அமுதாவின் குடிசையின் வெளியே போதையேறிய கண்களுடன் அவளையே வெறித்தபடி நின்றிருந்தான் மாணிக்கம்.

அவனின் முன்னே படபடப்புடன் சுற்றியும் தன் விழிகளைப் பதித்தபடி அவனைப் பார்த்தவள்,

“இந்த நேரத்துக்கு இங்கே என்ன‌ பண்றீங்க?” என்றாள் பதட்டத்துடன்.

“உன்னை‌ப் பாக்கத்தான் வந்தேன் செல்லம்…” என்றவனின் குரல் குழறலாய் வெளிவர அதை அதிர்ச்சியுடன் பார்த்தவள்,

“நீங்கக் குடிச்சிருக்கீங்களா?” என்றாள் அதிர்வாய்.

இத்தனை நாள் பழக்கத்தில் அவனுக்கு இப்படி குடிப்பழக்கம் இருப்பதே அவள் அறியாதது.

“சாரி செல்லம்… இன்னைக்கு எங்க அண்ணனுக்குக் கல்யாணம் இல்ல… பசங்க ஜூஸுன்னு மாத்திக் குடுத்துட்டாங்க. அங்கே இருக்க பிடிக்காம தான் உன்னைத் தேடி வந்துட்டேன் செல்லம்.” என்றான் நல்லவனாய்.

அவன் கூறியதை அப்படியே நம்பியவள்,

“சரிங்க இனிமே குடிக்காதீங்க. இப்போ வீட்டுக்குப் போங்க. இங்கே நம்மளை யாராவது பாத்துட்டா பிரச்சனைதாங்க…” என்றாள் பயத்துடன்.

அவள் பயத்தை உண்மையாக்குவது போல, “அமுதா, இங்கே என்னம்மா பண்ற?” என்ற குரலுடன் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தார் அவளின் தந்தை.

அதைக் கண்டவளுக்கு உயிர்கூடு நழுவியது போன்ற பயத்துடன் தனது தந்தையைப் பார்த்தாள்.

 

அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

மாலை வரும்… ✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page