அத்தியாயம் 17

மன்னன் தந்த மாலை

 

அத்தியாயம் 17

 

“இந்த நேரத்துல தனியா இங்கே என்ன பண்ற ஆத்தா?” என்ற தந்தையின் வார்த்தைகளில் உடல் விதிர்த்து நின்றவளைப் பார்த்தவர் அவளின் பின்னே பார்த்தார்.

அவளும் பயத்துடன் பின்னே பார்க்க அங்கே யாரும் இல்லாமல் இருப்பதை கண்டவளுக்கு அப்போது தான் இயல்பாய் மூச்சுவிட முடிந்தது.

ஏனென்றால் மாணிக்கம் அங்கே இல்லை இப்பொழுது தான் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.

அவளின் தந்தையின் குரல் கேட்டதுமே அங்கிருந்து ஓடி விட்டான் மாணிக்கம்.

தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் தந்தையின் பார்வையை உணர்ந்தாள். இன்னும் தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை என்று உடனே மெல்லப் புன்னகைத்தவள்,

“அது ஒன்னும் இல்லப்பா சும்மா உள்ளே புழுக்கமா இருந்துச்சு அதான் கொஞ்சம் காத்தோட்டமா வெளியே வந்தேன்.” என்றாள் சிரித்தபடி.

“நல்ல பொண்ணும்மா… அதுக்கு இந்த நேரத்திலேயா இங்க வந்து நிப்ப, சீக்கிரம் உள்ள வா ஆத்தா…” என்று மகளிடம் சொல்லியபடி உள்ளே சென்றார்.

சற்று நேரம் அங்கே சுற்றிச் சுற்றி பார்த்துவிட்டுத் தந்தையின் பின்னே உள்ளே சென்றவளை ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் மாணிக்கம்.

அவளின் தந்தையின் குரலைக் கேட்டதுமே அங்கிருந்து விரைவாய் சென்று மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டான். தான் எண்ணி வந்தது ஈடேறவில்லையே என்ற கோபத்துடன் அங்கிருந்து சென்றான்.

என்ன செய்வது கடவுள் எல்லா நிலையிலும் தீயவர்களின் பக்கம் இருப்பதில்லையே! அவ்வப்போது நல்லவர்களின் பக்கமும் இருக்கின்றாரே.

கைலாசநாதனுக்கும் சிவகாமிக்கும் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றது. முன்பு போல் இல்லாமல் இருவரும் சகஜமாகப் பேசிக்கொண்டனர். அதுவும் சிவகாமியின் மென்மையான குணத்தைக் கண்டு கைலாசநாதனின் மனம் மெல்ல
மெல்ல அவளிடம் சரிய ஆரம்பித்தது.

எந்த இடத்தில் எந்த நேரத்தில் அவனின் மனதில் துளியாய் விழுந்தாளோ அவன் அமுதாவை மறந்து மெல்ல சிவகாமியை ஏற்று அவளுடன் உடலாலும் மனதாலும் வாழ ஆரம்பித்தான்.

அதே நேரம் வீட்டிலும் சில சச்சரவுகள் வந்து போனவண்ணம் இருந்தது.

சிவகாமியின் மென்மை குணமும், மனிதனை மனிதனாய் மதிக்கும் பண்பும் கற்பகநாயகிக்கு பிடிக்காமல் அவ்வப்போது மனஸ்தாபம் வந்து போயின. ஆனால் அதைத் தன் பொறுமையால் கடந்துவிடுவாள் சிவகாமி.

இந்த நேரத்தில் பரிமளத்திற்கு ஊரின் பெரிய குடும்பத்திலிருந்து பெண் கேட்டு வர வீட்டில் அனைவருக்கும் பிடித்துவிட அனைவரின் ஆசியோடு பரிமளத்தின் திருமணமும் முடிந்தது.

அமுதாவை அவ்வப்போது எங்கேயாவது பார்க்க நேர்ந்தாலும் அதைச் சிரிப்புடன் கடந்து செல்லக் கற்றுக் கொண்டான் கைலாசநாதன்.

அவன் தான் அவளை விரும்பினானே ஒழிய அவளுக்கு அவன் யாரோ தானே? பெரிய வீட்டு மகன் என்ற நிலையில் மரியாதையுடன் கடந்துவிடுவாள் அவள்.

இத்தனை நாளாகியும் மாணிக்கத்தின் எண்ணம் மட்டும் ஈடேறவில்லை அமுதாவிடம். அவனைத் தனிமையில் சந்திப்பதை முடிந்தவரை தவிர்த்தாள் பெண்ணவள். அவனின் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தில் இயல்பான பெண்களின் குணம் அவளிடம் விழித்துக் கொண்டது.

எல்லாம் சரியாகச் சென்றால் தான் கடவுளுக்குப் பொறுக்காதே!

இந்த நேரத்தில் தான் அமுதாவின் ஜாதியை சேர்ந்த ஒரு இளைஞனைக் கண்டு காதல் கொண்டாள் வசுந்தரா.

உண்மையைச் சொல்லப்போனால் அவள் தான் அவனைக் காதலித்தாளே ஒழிய அவன் அவளைக் காதலிக்கவில்லை. அதன் மூலக்காரணம் அவளின் அந்தஸ்த்தும் படிப்பும் தான். அவனைவிட அதிகமான படிப்பும் வசதியும் கொண்ட ஒரு பெண் தன்னைக் காதல் என்று சுற்றி வருவதை நம்பவில்லை ஆடவன்.

அதனால் அவளிடமிருந்து விலகித் தான் சென்றான். ஆனால் எத்தனை நாள் அவளை விட்டு விலக முடியும்? அவள் தான் அவ்வளவு எளிதில் அவனை விட்டுவிடுவாளா? இல்லையே, பிடிவாதத்தின் மறுபெயர் தானே வசுந்தரா. இந்தக் காதல் தான் எத்தனை எளிதாய் அவள் மனதில் நுழைந்து விட்டது. ஆனால் அதற்கு அவளின் குடும்பம் சம்மதிக்க வேண்டுமே? இந்தச் சமூக கோட்பாடு அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே?

மனிதனில் இரண்டே ஜாதி தான். ஒன்று ஏழை மற்றொன்று பணக்காரன். இங்குப் பணக்காரனால் சூறையாடப்படும் ஏழைகளின் நிலை கீழ் ஜாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தைச் சேர்ந்தவனை தன் வீட்டுப் பெண் காதலித்தால் அந்தக் குடும்பம் அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளுமா? இல்லையே, எத்தனை பாசம் மகள்மேல் வைத்தாலும் அந்தக் காதலை அவர்கள் எதிர்க்கவே துணிந்தார்கள்.

இந்த நிலையில் தான் வசுந்தராவின் காதல் ராஜவேலுக்கும் கற்பகநாயகிக்கும் தெரிய வந்தது. அதில் ஆத்திரமடைந்த ராஜவேலுவும் கற்பகநாயகியும் அவளை வீட்டுச் சிறையில் வைத்தார்கள்.

வீட்டுச் சிறையில் வைத்தால் காதல் கொண்ட மனம் மறந்து போய்விடுமா என்ன? இல்லையே! பெண்ணவளுக்கு அதற்கு மேல் தான் அவனைக் கரம் பிடிக்க வேண்டும் என்ன என்ற எண்ணம் வலுப்பெற்றது.

எப்போதும் நியாயத்திற்காகக் குரல் கொடுப்பவளை அந்த வீட்டில் சற்று பிடிக்காது தான். என்ன செய்வது வீட்டில் செல்லப் பெண்ணாயிற்றே! அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விட முடியுமா என்ன? அதனால் அவள் செய்த அத்தனையும் பொறுத்துக் கொண்டார்கள். ஆனால் இன்று தங்களின் குடும்பத்தின் கௌரவத்திற்கும் மானத்திற்கும் ஒரு இழுக்காக அவளின் காதலை நினைத்தார்கள்.

ஆனால் அவர்கள் அறியவில்லை, காதலைப் பொறுத்தவரை உண்மையான நேசத்திற்கு அது ஒரு வழி பாதை என்பது.

இந்த நிலையில் தான் அவசர அவசரமாக வசுந்தராவிற்கு திருமண ஏற்பாட்டினை செய்தார்கள். அவர்கள் அந்தஸ்துக்கும் கௌரவத்திற்கும் சமமான ஒரு குடும்பத்தைப் பேசி முடித்தார்கள். அந்த அவசர அவசரமான கல்யாணம் அவளின் மனதை மாற்ற என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவள் மனதை யாராலும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்ற முடியாது என்பதை அவர்கள் அறியவில்லை.

எத்தனையோ போராட்டங்களைக் கடந்தவள் தன் காதலுக்காகத் தன் குடும்பத்தை எதிர்க்கத் துணிந்து விட்டாள். அவளின் காதலனை அவளே தேடிச் சென்றாள். இதில் கைலாசநாதனும் சிவகாமியும் அவளின் பக்கம் நிற்க, அவர்களாலும் அவளுக்கு உதவி செய்ய இயலவில்லை. காரணம் அந்தக் குடும்பம் உடையக் கூடாது என்று நினைத்த கைலாசநாதர் எண்ணமும் சிவகாமியின் எண்ணமும் ஒன்றாகவே இருந்தது.

அதற்குப் பின்பு தங்கையைச் சமாதானப்படுத்தினான். ஆனால் அவனின் சமாதானத்திற்கு அவள் செவி சாய்க்கவில்லை. அவளின் முடிவு தன்னவனை தேடிச் செல்ல வேண்டும் என்பதில் நிலைத்திருந்தது.

“வசு, நான் சொல்றதைக் கொஞ்சம் கேளும்மா…” என்ற தமையனின் குரலைக் கேட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சொல்லுங்க அண்ணா என்ன கேக்கணும்? அப்ப என்னோட காதலை விட்டுக் குடுத்துட்டு இருக்க சொல்றீங்களா? என்னால அவரை மறந்துட்டு வேற ஒருத்தனோட குடும்பம் நடத்த முடியாது.” என்றாள் கோபமாய்.

“ஆனா உன்னோட காதலுக்கு நம்ம வீட்டில் சம்மதிப்பாங்கன்னு எப்படி வசு நீ நினைச்ச?” என்றான் ஆதங்கம்மாய்.

எங்கே தங்கை ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காதோ… அது கிடைத்தாலும் குடும்பத்தினால் ஒதுக்கி வைக்கப்படுவாளோ? என்று பயந்தான் அந்தப் பாசமான தமையன்.

“அண்ணா, அவங்களோட சம்மதம் எனக்குத் தேவையில்லை. வாழப் போறது நான், இது என்னோட வாழ்க்கை. அப்ப என்னோட விருப்பம் தானே இதுல முக்கியமா இருக்கணும்? வாழ்ந்து முடிச்சவங்களோட விருப்பத்துக்கு அவசியம் இல்லையே…” என்றாள் கோபமாய்.

அதே நேரத்தில் அங்கே வந்த ராஜவேலுக்கும் கற்பக நாயகிக்கும் ஆத்திரம் தலைக்கேற ராஜவேலு அவளை ஓங்கி அறைந்தார். பிறந்து வளர்ந்ததிலிருந்து இத்தனை வருடங்களில் அவளை எதற்காகவும் அடித்ததில்லை. இன்று முதல் முறையாக அவளை அடித்தார்.

“நான் சின்னப் பிள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்லிட்டு இருக்கேன் நீ பிடிவாதமா இப்படி பேசுற? ஒரு பொம்பளை பிள்ளைக்கு இத்தனை ஆணவப் பேச்சு ஆகாது.” என்றார் கோபமாய்.

“அப்பா, இது என்னோட வாழ்க்கை நான் முடிவு பண்ணிக்கிறேன் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு… நீங்க முடிவு பண்ணனும்னு அவசியம் இல்ல.” என்றாள் அப்போதும் திமிராக.

அவள் திமிரைக் கண்ட ராஜவேலுவின் இரத்த அழுத்தம் எகிறியது.

“வசுந்தரா பாத்துப் பேசு… நீ யாருகிட்ட பேசிட்டு இருக்க தெரியுமா? உன்னைப் பெத்தவங்ககிட்ட… அதை முதல்ல நினைவுல வச்சிக்கோ… உன்னைப் பெத்து வளர்த்த எங்களுக்குத் தெரியாதா யாருக்கு உன்னைக் கட்டிக் குடுக்கணும்னு…?” என்றார் அப்போதும் கோபம் தணியாமல்.

ஆனால் அதற்கெல்லாம் அசறும் ஆளா அவள்.

“உங்க விருப்பத்துக்கு யாரோ ஒருத்தன் கையால என்னால தாலி வாங்கிக்க முடியாது.” என்றாள் அப்போதும் திமிரான குரலில்.

“அப்படி எங்க விருப்பத்துக்கு உன்னோட கல்யாணம் நடக்கல அப்படின்னா நீ இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவளா இருக்க முடியாது. உன்னை இந்தக் குடும்பத்தை விட்டு அனுப்புறதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. இந்தக் குடும்பத்தோட சொத்துல இருந்தும் உனக்கு எதுவும் கிடைக்காது.” என்றார் ராஜவேலு.

அதைக் கேட்டவள் சத்தமாய் சிரித்தபடி, “இது ஒன்னும் உங்களோட சொந்த சம்பாத்தியம் கிடையாது. என் பாட்ட முப்பாட்டனோட சொத்து. அப்போ இதுல எனக்குச் சரிசமமான பங்கு இருக்கு. ஆனா எனக்கு இந்தச் சொத்து தேவையில்லை. என்னோட வாழ்க்கையை எப்படி வாழணும்னு எனக்குத் தெரியும். நீங்கச் சொத்து தந்து தான் நான் பிழைக்கணும் என்கிற அவசியம் எனக்கு இல்லை.” என்றவளின் பேச்சு கணவனுக்கும் மனைவிக்கும் அத்தனை ஆத்திரத்தை உண்டு பண்ணியது.
 
கோபத்துடன் அவர்கள் நின்று கொண்டிருக்கும்பொழுது வசுந்தராவின் தலை முடியைப் பிடித்து அவளின் கன்னத்தில் பளீரென அறை விழுந்தது.

அனைவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கப் பெண்ணவளும் தன்னை அடித்தவனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

யார் அவனோ…? அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page