அலை கடல் பெண்ணவள்

அலை 17

 

இந்திரன், “தாயே! நான் செய்த தவறுக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். என் மகளுக்கு எதற்கு?” என்றவனிடம்,

 

கலைமகள், “ஓ… நான் மட்டும் என் மகள்களைப் பிரிந்து தவிக்க வேண்டும். நீ பிரிய மாட்டாய் அப்படித்தானே இந்திரா? இட்ட சாபம் இட்டதே! இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. பூலோகத்தில் அவரவர்களின் கர்ம பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.” என்று சொல்லிச் சென்று விட்டாள் கலைமகள்.

பூட்டி சொல்லிக் கொண்டிருந்த போதே துகிலன், “அழகி, அந்தச் சாபத்திற்கும் ஆண்கள் எங்களுக்கும் என்ன இணைப்பு? இந்திரன் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் இதை அனுபவிக்க வேண்டும்?” என்று கேட்டவனை,

பூட்டி, “தப்பா பேசாதே கிறுக்கா! நீயும் ஆண்தானே பேசாம இரு.” என்றவள் கதையைத் தொடர ஆரம்பித்தாள்.

சப்தகன்னியர் எழுவரும் தீவில் இறங்கியவுடனேயே அந்தத் தீவே பிரகாசித்தது. அந்தத் தீவின் அருகே சென்றவுடன் மயக்கும் ஸ்வர சப்தம் கேட்கும். ஒவ்வொரு பௌர்ணமி இரவும் சப்தகன்னியர் தீவே தேவலோகம் போல் மின்னும்.

“ரதிமஞ்சரி அம்மாவும், அம்பையும் ஒவ்வொரு பௌர்ணமியும் பூஜை செய்து விட்டு வருவாங்க. அவங்களுக்கு படகு ஓட்ட உன் மாமன் மட்டும் தான் போவான். வேற யாரையும் இராசா அனுமதிக்க மாட்டார். ஒருதடவை நீ ஐந்து வயசா இருக்கும்போது உன் மாமா கூட அடம் பண்ணி போன… ரதிமஞ்சரி அம்மா கூடச் சரி அவன் வரட்டும். உங்கிட்டயே வெச்சுக்கன்னு சொல்லி, மாமன் கூட நீ போயி இருக்கிற…” என்றாள் பூட்டி.

துகிலனுக்கோ அதிர்ச்சி! 

“என்ன அழகி நீ சொல்ற, நான் போனேனா?” என்றான் பெருமையாகச் சிங்கனைப் பார்த்துக் கொண்டே.

பூட்டி, “அடேய் மம்முதா! நீ நினைக்கற மாதிரி உள்ள போகல. தீவு வாசலில் விட்டுட்டு உன் மாமன் நாவாய் கரையில் காத்து இருப்பான். வைகறைல அவங்க வந்துடுவாங்க அப்போ அழைச்சிட்டு வருவான். நீ படகுல ஏறினவுடனே தூங்கிட்ட” என்றாள்.

அதைக் கேட்டதும் துகிலனுக்கு சப்பென்று ஆனது. 

துகிலன் அப்போது, “அழகி, நான் தூங்கிட்டேன் சரி. ஆனா நான் ஒன்ன மறக்கல, அம்பை அக்கா கொற்கைக்கு வந்தது.” என்றான்.

பூட்டி, “ஆமா ஆமா, அப்போதான் அம்பைப் பொண்ண ரதிமஞ்சரி அம்மா அழைச்சு வந்தாங்க” என்றாள்.

சிங்கன், “என்ன! அம்பைக் கொற்கை இல்லையா? எனக்குத் தெரியாதே” என்றான்.

துகிலன், “பேரு தான் கொற்கை தலைவன், ஒன்னும் தெரியாது அழகி எங்கள் தலைவருக்கு!” என்றான் ஏளனமாக.

சிங்கனுக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தபோதும் இந்த முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமை என்றுணர்ந்து, “பூட்டி, சொல்லுங்கள். அம்பை யார், உஙகளுக்கு தெரியுமா?” என்றான்.

பூட்டி சிங்கனைப் பார்த்துக் கொண்டே, “ஆமா ராசா! அம்மன் சிலை மாதிரியான பொண்ணு. அது தலையெழுத்தை ஆண்டவன் இப்படியா எழுதுவான்? அந்தப் பௌர்ணமி இரவு ரதிமஞ்சரி அம்மாவும் அப்போ மார்கழியும் தான் பூஜை செய்யப் போனாங்க. வழக்கம்போலச் செங்கனும் நீயும் நாவாய்ல காத்து இருந்தீங்க. எப்பவும்போல வைகறைல உங்க மாமன் போனபோது பதினைந்து வயது சிறுமியோட ரதிமஞ்சரி அம்மா படகுல ஏறினாங்க. உன் மாமன் ‘அம்மா இவங்க யாரு?’ என்றவுடனே அந்தப் பொண்ணு அழ ஆரம்பிச்சிட்டா.”

ரதிமஞ்சரி அம்மா, “செங்கா இந்தப் பெண் தீவுக்குள் மயங்கிக் கரை ஒதுங்கி இருந்தாள். நான் கூட்டிட்டு வந்துட்டேன்.” என்றார்.

அம்பைத் துகிலனை அன்புடன் நோக்கினாள். துகிலன் அம்பையைப் பார்த்து அன்று அக்காவாக ஏற்றுக் கொண்டவன் இன்றும் அதே பாசத்துடனே அம்பையுடன் இருக்கிறான்.

மூவரும் தாழைப்பாக்கம் வந்தவுடன் ரதிமஞ்சரி அம்பையை அழைத்துக் கொண்டு கணீகையர் மாளிகைக்கு வந்தவள் முதலில் அம்பைக்கு உணவைக் கொடுத்துத் தங்குவதற்கு ஒரு அறையைக் கொடுத்து ஓய்வெடுக்கச் சொன்னார். 

அம்பையிடம், “கலங்காதே மகளே! இனி உனக்கு நான் இருக்கிறேன்.” என்றார் தாயன்புடன்.

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அம்பைக்குக் கிடைத்த ஆறுதலும் அரவணைப்பும் அமைதியான நித்திரைக்கு வழிவகுத்தது. ஏதோ சப்தம் கேட்கக் கண்களைத் திறந்த அம்பைக்கு துளசியும், தூப வாசனையும் அதன்கூடவே யாழ் இசையும் கேட்டது. அம்பை நந்தவனத்திற்கு சென்றாள். அங்கே ரதிமஞ்சரி யாழை மீட்டிக் கொண்டே பாடத் தொடங்கினார்.

“திருமால்வரை மேனி மன்னா

பாவை நெஞ்சம் தாங்கும் அருளே

நீயன்றி நாணேன் உலகம்

நீர்மை தரும் நாதனே

யாழ்நாதம் உனக்கே அர்ப்பணம்

உயிர்நாதம் உன்னால் பிறந்தது

உன்பாதம் சரணம் எனப் பாடுவேன்

என் பாவம் கரையும் ஒளியே…”

யாழின் ஒலி குரலைத் தழுவியது. இனிமையாகக் காற்றில் மிதந்தது பாடல். பாடி முடித்தும் பணிப்பெண்கள் யாழை வாங்கிக் கொண்டு போனார்கள்.

ரதிமஞ்சரி, “வா மகளே! நித்திரை கொண்டாயா மகளே?” என்றார்.

அம்பை, “அம்மா, நன்றாக நித்திரை கொண்டேன்.” என்றாள். 

“மகளே, உன்னைப் பற்றிச் சொல்ல முடிந்தால் சொல் மகளே!” என்றார். 

“தங்களிடம் சொல்கிறேன் அம்மா!” என்றவள்,

“அம்மா, எனது ஊர் திருக்கூடலழகர் என்ற கிராமம். அங்கே திருக்கூடலழகர் கோவிலில் பிறந்து அக்ரஹாரத்தில் வளர்ந்தேன். வைகறையில் கூடலழகர் கோவில் மணி ஒலி ஒலித்தவுடன் அக்ரஹாரம் முழுவதும் விழித்துக் கொள்ளும். வீதியின் இருபுறமும் ஒரே மாதிரி பெரிய முற்றமும் பரந்த வாசல்களும் உள்ள வீடுகளே இருக்கும். வீதிதோறும் வாசலில் அக்ரஹாரத்து பெண்டிர்கள் பெரிய பெரிய கோலங்களை இட்டுக் காவிகட்டிக் கொண்டு இருப்பார்கள். பின் வாசலில் துளசிதளமும் கேணியும் நிறைந்தே இருக்கும்.

கூடலழகருக்கு பாதசேவை செய்வதே எங்களின் வாழ்க்கை. அந்த வீதியில் வாழ்ந்தவரே வேங்கடேச ஐயர்.

வைகறையில் எழுந்து ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டியுடன் திருப்பணிக்கு நடந்தே செல்வார். அவருக்கு ஆச்சாரம் என்றால் சுத்தம், நேரம், மரபு இவையே.

வீட்டில் அவரது மனைவி அழர்மங்கை மடியுடன் சமையல்செய்வாள். ஸ்நானம் செய்யாமல் சமையலறையில் அடியெடுத்து வைக்கமாட்டாள். வீட்டில் உள்ள பித்தளைப் பாத்திரங்கள் பளபளக்கும். வீடே நெய் வாசனை வீசும்.

அவர்களின் வீடு ஒரு சிறிய கோவில்போல. அந்த வீட்டில் பிறந்த குழந்தைகள் தான் அச்சுதனும், ஆதிகேசனும். இவர்களுக்கிடையில் உள்ளது இரண்டு அகவைகளே. ஆனாலும் இருவரும் இரு துருவங்கள்.

அச்சுதனுக்கு சிறுவயதிலேயே இசையின் மீது நாட்டம் மிகுந்தது இருந்தது. மாலை நேரம் அவன் வீதியில் விளையாடவில்லை. கூடலழகர் மண்டபத்தில் அமர்ந்து,

 “ச ரி க…” என்று பாடினான். குருகுல ஆச்சாரியார் அவன் குரலைக் கேட்டபோது சொன்னார்.

“இந்தக் குரலில் ஒரு தெய்வீக இசை உள்ளது.” என்று வேங்கடேசரிடம் கூறுவார்.

ஐந்து வயதில் மண்டபத்தில் சரளி வரிசையைக் கற்றுக் கொண்டான். மற்ற பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அச்சுதன் வீணையின் மரத்தைத் தழுவிக்கொண்டிருந்தான். அச்சுதன் வளர வளர ஒரு புறம் இசையில் நன்றாகத் தேறியும், ஒரு புறம் தன் அன்னையின் பின்னே சென்று அன்னையின் அத்துனை பணிகளையும் ஆர்வமாகச் செய்வான் கோலம் போடுவது, கூடல் இழைப்பது இப்படி! அச்சுதன் தன் அன்னையைப் போலவே அழகுடன் இருப்பான். அச்சுதனை பார்ப்பவர்கள் அனைவரும் ‘பெண்ணாய் பிறக்க வேண்டியவன், மங்கையைப் போல எவ்வளவு அழகு!’ என்றே கூறியதைக் கேட்கக் கேட்க அச்சுதன் தன்னைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டான். அக்ரஹாரத்தில் உள்ள பெண்பிள்ளைகள் எல்லோரும் அச்சுதனிடம் கோலம் போடவும், பாடல் கேட்கவும் எப்போதுமே அவனுடனே இருந்தனர். அதனாலோ என்னவோ அச்சுதனுககு பெண்பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து அவர்களின் ஆடை, அலங்காரங்களின் மேலே பற்று உண்டானது.

நல்ல உடல்வாகு உள்ள ஆண் தான் பருவமடைகிறோம் என்பதை உணரும் காலங்களில் மார்பில் முடி வளராது. மார்பு பெரிதாக உணருவார்கள். இடுப்புப்பகுதி பருத்து பின்புறம் வித்தியாசமாகத் தெரியும். கைகளில் முழங்கை பாகம் உள்பக்கம் மெலிதாக வளைந்து காணப்படும். பெண் தன்மை அதிகரிக்கும் ஆண்களிடம் வெட்கம் வந்து ஒதுங்கிப்போக ஆரம்பிப்பார்கள்.

இப்படிப் பல மாற்றங்கள் அச்சுதனுக்கு உண்டானது. என்ன ஏது யாரிடம் கேட்பது என்று தெரியாமலேயே பதினைந்தாம் பிராயத்தை தொடும் முன்பு அந்த மார்கழி மாதமும், ஆண்டாள் நோன்பும் வந்தது.

அக்ரஹாரம் எங்கும் பெண்கள் அழகான ஆடையணிந்து பாவை நோன்புக்கு அதிகாலையில் கோலம் இட்டார்கள். வீடுகள் முன்பு பாவை விளக்குகள் ஏற்றப்பட்டன.

ஆச்சாரியார் அச்சுதனை அழைத்தார். 

“இன்று திருப்பாவை நீ பாடு.” என்றார். 

அச்சுதன் நடுங்கினான். பயபக்தியுடன் கண்களை மூடிப் பாடத் தொடங்கினான்.

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்…”

அந்தப் பாசுரம் இயற்றியவர் ஆண்டாள். அந்தப் பாடல் திருப்பாவை.

அவன், “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று சுரசப்தமாக உயர்ந்தபோது கோவில் மண்டபம் முழுவதும் அமைதியாக இருந்தது. மங்கைக்கும், வேங்கடேசருக்கும் பேரானந்தமாக இருந்தது. ஒரு முதிய பெண் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.

“ஆண்டாளைப் போலப் பாடுறாளே…” என்றாள்.

அந்தத் தருணம் அச்சுதனை எல்லோரும் கொண்டாடினார்கள். இந்தக் குழந்தைக் குரல் வேற மாதிரி இருக்கு. பெண்ணின் மென்மையாய், காற்று போல் சுத்தமாக இருக்கிறது என்று.

ஆனால் மார்கழி முடிந்து பங்குனி வெயில் வந்தபோது அவனுக்கு உடல் மாறத் தொடங்கியது. மற்ற ஆண்பிள்ளைகள் உயரமாகவும் குரல் கரகரப்பாக மாறுவதாகக் கூறினார்கள்.

அச்சுதனுக்கு மட்டும் குரல் மென்மையாகவும், உடல் இளைத்தும் இருந்தது. அவன் கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தான்.

‘என் உள்ளம் பெண்போல இருக்கு. அந்த உணர்வு பயமில்லை, ஆனால் தனிமை.’ அவன் ஆண்டாள் பாசுரத்தை நினைத்தான். ஒரு பெண் தன் உண்மையை மறைக்காமல் பாடிய தைரியம்.

‘நானும் என் உண்மையை மறைக்கமாட்டேன்.’ என்று மனதில் சொன்னான்.

அந்த நாள் அச்சுதன் என்ற பெயர் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது.

“அம்பை” என்ற ஒலி மட்டும் தெளிந்து ஒலித்தது. ஆனால் அக்ரஹாரம் மாறவில்லை. அச்சுதன் தெருவில் நடந்து செல்லும்போது பெரிய பெண்மணிகளும், மற்ற ஆண், பெண் பிள்ளைகள் ஏளனம் செய்ய ஆரம்பித்தனர். அச்சுதனுக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது. கூடலழகர் கோவில், அக்ரஹாரம் இப்படி இருந்தவனின் வாழ்கை சிதற ஆரம்பித்தது.

“நடையைப் பார்…”

“பெண்ணு மாதிரி பேசுறான்…” வீதியெங்கும் சிலாகித்துப் பேசினார்கள்.

அச்சுதனுடன் விளையாடிய பெண்கள் எல்லோரும் ஒதுக்கம் காண்பித்தார்கள். என்ன செய்வது யாரிடம் சொல்வது? என்று தெரியாமல் ஆண்டாளே சரணம் என்று இருந்தான்.

பக்கத்து வீட்டு அன்னப்பாவையும், நம்பியும் மட்டுமே இவனுக்கு நெருங்கியவர்கள். அன்னமும் பருவம் அடைந்ததால் அன்னத்திற்கு அச்சுதனை ஏளனம் செய்ததைத் தாங்க முடியவில்லை.

ஒருநாள் ஆற்றங்கரைக்கு தண்ணீர் எடுக்கச் சென்றவள் படித்துறையில் அந்திசாயும் வேளையில் சோகமே உருவாக அமர்ந்து இருந்தவனிடம் சென்றவள், 

“அச்சு…” என்றாள்.

திரும்பிய அச்சுதனின் கண்களில் ஏக்கமும், வலியும் இருந்ததைக் கண்டவள், 

“அச்சு, எனக்கு உன் வலி புரியும். உன்னைக் கொண்டாடிய இந்த அக்ரஹாரம் இன்றைக்கு உன்னைப் பாடாய் படுத்துகிறது. அச்சு, உனக்கு இங்கே மதிப்பு இருக்காது. இங்கே இருக்காதே, உனக்கு மதிப்பு அளித்துக் கௌரவப்படுத்தும் ஓர் இடத்தை இதோ இந்த அழகர் கொடுப்பார். நீ சென்றுவிடு அச்சு!”என்றவள் அச்சுதனுக்கு ஒருசிறிய வெள்ளிப் பெட்டியைக் கொடுத்தாள்.

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
956 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page