மௌனத்தால் உடைந்த காதல் -1
அத்தியாயம் 1
குடும்ப நல நீதிமன்ற வளாகம். அன்றும் வழக்கம்போல கூட்டமாக இருந்தது.
மக்கள் கூட்டம்… வழக்கறிஞர்களின் அவசர நடை… மன அழுத்தம் நிறைந்த முகங்கள்… என மக்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்..
ஒருபக்கம் கணவன்,மனைவி சேர்ந்து வந்திருந்தனர்…
மறுபக்கம் பிரிவதற்காக கையெழுத்திட வந்தவர்கள்…என..கூட்டம் கூடி நின்றது.
அந்த கூட்டத்தில், ஒருவரை ஒருவர் கூட பார்த்துக் கொள்ளாமல் சிறிது தூரம் விட்டு நின்றிருந்தனர் இருவர்.
ஒரு காலத்தில்
நீ இல்லாமல் நான் இல்லை என்று வாழ்ந்தவர்கள்…
இன்று, நீயும் நானும் இனி தனித்தனியாக..நம் வாழ்க்கை பாதை தனி.. என்று முடிவு செய்ய வந்திருந்தனர்..
அவனின் கண்கள் ரொம்ப நேரமாக அவளின் விழிகளையே ஆராய்ந்த படி இருந்தது.
அவளோ, அப்படி ஒருவன் தன்னை பார்ப்பதையே கண்டும் காணாமல் தனக்கும் அங்கு நிற்பவனுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் தன் அருகில் இருக்கும் மகளின் கையை இறுக்கிப்பிடித்தபடி நின்று இருந்தாள் சுதா எனும் சுதர்ஷனா..
அப்பொழுது அவர்களின் அருகில் வேகமாக ,”அம்மா…ஆ…” என்று கூவியப்படி வந்து நின்றான் அவளின் மகன் மகிழ் நிலவன்..
“மகி குட்டி சாப்டியா ?எப்படி டா இருக்க ?”என்றாள் அவனை ஆரத்தழுவி ..
இவ்வளவு நேரம் அவள் முகத்தில் இருந்த இறுக்கம் எங்கோ ஓர் மூலையில் ஓடிச் சென்று, முகம் முழுக்க மலர்ச்சியுடன் அவன் உயரத்திற்கு கீழே குனிந்து, அவனின் கன்னங்களை கைகளில் ஏந்தி முத்தம் இட்டவாறு நலம் விசாரிக்க..
தன் தாயுடனே சேர்ந்து தன்னுடன் ஒட்டி பிறந்தவனின் கையைப் பிடித்த சுதாவின் மகள் மிதுன்யா. “மகி நீ என் கூட வந்துடு டா.. அப்பா வந்துட்டாரா ?” என்றாள் ஏக்கமாக…
அவனோ,வேகமாக தலையசைத்து,” வந்துட்டாரு மித்து தோ அங்க இருக்காரு பாரு..” என்று அவன் கைகாட்டிய திசையில் அவனால் மித்து என்று அழைக்கப்பட்ட மிதுன்யா ஓட ஓரடி எடுத்து வைத்தவள்..
வேகமாக தன் தாயை ஒரு முறை திரும்பி பார்த்தாள் .. அவள் தலையசைக்கவும், அங்கு இருந்து வேக எட்டு வைத்து தன் தந்தையைக் காண ஓடி இருந்தாள் மிதுன்யா..
” டேய் மிது குட்டிமா!” என்று அவளை அள்ளிக் கொஞ்சி தூக்கி கன்னத்தில் இதழ் பதித்தவனின் பார்வை, நொடிக்கு ஒரு முறை தன்னவளை தொட்டு மீண்டது என்று சொன்னால் பொய்யாகாது..
ஆனால், அவளோ அதை பெரிதாக கருத்தில் கொள்ளாது. தன் மகனை பார்க்க ஆரம்பித்தாள் .
உடல் மெலிந்து, முகத்தில் பழைய ஒளி மறைந்து, கண்களை சுற்றி கருவளையம் படர்ந்தபடி இருந்தாள்.
அவளின் அந்த தோற்றத்தை பார்க்கவே அவனின் மனம் கலங்கியது…
அனைத்திற்கும் (அவளின் இந்நிலைக்கு) தான்தான் காரணம் என்று நினைக்கும் போதே மனம் வெம்பி தவித்தது..
“மா … ஏன் மா நீங்க என்ன பாக்க வரல? நீயும் மிதுவும் ஏன் மா அங்க போய் அம்மாச்சி வீட்ல இருக்கீங்க? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ?சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வாங்கம்மா ..!”என்று கண்ணீர் மல்க கூறி முடித்தான்.
ஆனால் , அவளோ அமைதியின் சொரூபமாக நின்றாள்..
“ம்மா …” என்று அவன் மீண்டும் அழைக்க..
“உன்ன ஸ்கூல்ல தினமும் வந்து பார்க்கிறேன். மிதுவை ஸ்கூல்ல விட வருவேன்ல அம்மா அப்போ…”என்று கூற,
” மா . நம்ம வீட்டுக்கு நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டேன். நீங்க மித்துவ ஸ்கூல்ல விடும்போது சொல்றீங்க.. நீங்க ஒரு இடத்தில, நானும் அப்பாவும் ஒரு இடத்துல இருக்கணுமா? நம்ப இவ்வளவு நாள் ஒன்னா தான இருந்தோம்..” என்றான் ஏக்கமாக பத்து வயது சிறுவன்..
அவனுக்கும் ஓரளவுக்கு ஒரு சில விஷயங்கள் புரியத்தான் செய்கிறது .அந்த அளவிற்கு புரியாமல் இல்லை. தன் தாய்க்கும், தந்தைக்கும் ஏதோ சண்டை என்பது வரை புரியும். ஆனால், அதைத் தாண்டி எதுவும் தெரியாது..
இப்பொழுது வீட்டில் தாத்தா, பாட்டி பேசியதை வைத்து தந்தையும், தாயும் இனி ஒரே வீட்டில் இருக்க மாட்டார்கள் .இருவருக்கும் சண்டை அதிகமாகி இருவரும் தனித்தனியாக இருக்க போகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, பிறந்ததிலிருந்து ஒன்றாக இருக்கும் நானும் என்னுடன் ஒட்டிப் பிறந்த என்னுடைய தங்கையுமான மிது என்று அழைக்கப்படும் மிதுன்யாவும் இனி ஒரே வீட்டில் இருக்க மாட்டோம். என்பது புரியவும் ..
இரவில் இருந்து அவனுக்கு சுத்தமாக தூக்கமே இல்லை.அப்பாவுடன் சண்டையில் தாய் சென்றிருக்கிறார்.சீக்கிரம் வந்து விடுவார் என்று தான் நினைத்து இருந்தான். ஆனால் ,நேற்று முழுவதும் இனி தாய் இங்கு வரவே மாட்டார் என்று கூறிய அப்பத்தாவின் பேச்சில் மொத்தமாக உடைந்து இருந்தான் மகி..
அவன் தன் தந்தையிடமும் அதைச் சென்று கேட்டான்.” அப்பா அம்மாவ ஏன்ப்பா நீங்க போயிட்டு கூட்டிட்டு வரல? நம்ம ரெண்டு பேரும் போயிட்டு அம்மாவையும் மிதுவையும் கூட்டிட்டு வரலாம்” என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தான். ஆனால், மசிய வேண்டிய தந்தையோ, “வருவாங்கடா கண்ணா! கொஞ்ச நாள் பொறு..!” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான் .
“அப்ப அம்மா இனி இங்க வரவே மாட்டாங்களா ? நீங்களும் அம்மாவும் பிரிய போறீங்களா?” என்று கேட்க ..
மொத்தமாக உடைந்து விட்டான் தன் மகனின் வார்த்தையில் பாசமிகு தந்தை ஆதித்யா.
“அப்பா உங்கள தான்பா கேட்கிறேன்..” என்று யோசனையில் உழன்று கொண்டிருந்தவனின் கையை அழுத்த பிடித்து உலுக்க..
” என்னடா கண்ணா!” என்றான் அயர்வாக..
“நான் என்ன கேட்கிறேன் நீங்க என்ன யோசிக்கிறீங்க ?எனக்கு மிது வேணும். அவ இல்லாம தூங்கவே முடியல ..சண்டை போட்டுட்டே இருந்தாலும் ,எனக்கு அவ வேணும் தானே! இத்தனை வருஷமா என் கூட தான இருந்தா..” என்றவனின் வார்த்தை அழுகையுடன் வெளிவந்தன.
‘ எனக்கு மட்டும் ஆசையா ?’என்று மனதிற்குள் எண்ணியவன் தன் மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
விடிய விடிய புலம்பியபடியே இருந்தவனை நாளைக்கு அம்மாவை பார்க்கலாம் என்று கூறி தூங்க வைத்து இருந்தான்.
கஷ்டப்பட்டு.. சிறிது நேரத்துக்கு பிறகு தூங்கி இருந்தான் மகி.
இரவு தன் மகனை உறங்க வைக்கப்படாத பாடுபட்ட ஆதி,’எப்படி வருவ ?’என்று தன்னவளை எண்ணித்தான் வருத்தத்தில் ஆழ்ந்தான்..
குடும்பமாக எடுத்துக் கொண்ட சுவரில் தாங்கி நின்ற நிழல் படத்தில் இருப்பவர்களை எண்ணி இரவு முழுவதும் உள்ளுக்குள் புழுங்கினான்..
“நான் பண்ணது தப்புதான் டி… ஆனா, என் பக்கத்துல வந்துரு அம்மு. ப்ளீஸ் டி… கெஞ்சி கேட்கிறேன். இப்படி என்னையும் பையனையும் தவிக்க விடாத. நாங்கனா உனக்கு அவ்வளவு உசுருதானே! இப்போ நம்ம பையனைத் தவிக்க விட்டு வேடிக்கை பாக்கிறியே டி… அங்க நம்ம மிதுவும் இப்படித்தான தவிச்சிட்டு இருப்பா. ஏண்டி இப்படி எங்களை படாதபாடு படுத்துற? ப்ளீஸ் டி அம்மு… சீக்கிரம் உன் ஆதிக்கிட்ட வந்துடு…”
என்று மனம் முழுவதும் வலியோடு வாய் விட்டு புலம்பிக்கொண்டே அந்த இரவை கழித்தான்.
காலையில் நீதிமன்றத்திற்கு சீக்கிரமாகவே கிளம்பினர். அப்பாவும் , மகனும் தன்னவளை ரொம்ப நாட்களுக்கு பிறகு நேரில் பார்ப்பதற்காக..
வீட்டில் இருந்து கிளம்பும்போது அவனது தாயும், உடன் பிறந்தவளும் ஆரம்பித்து விட்டார்கள் ..
அவர்களின் லீலைகளை ,”டேய் ஆதி. அங்க அந்த பசப்புகாரி ஏதாவது பேசி, கண்ணைக் கசக்கிட்டு வந்து நிக்கப் போறா, நீ அய்யோனு மனசு உருகிடாத டா. ஒரே அடியா வேணாம்னு வெட்டி விட்டுட்டு வா அவளை. அதான் உனக்கும் நல்லது, உன் பையனுக்கும் நல்லது, முடிஞ்சா நம்ப மிதுவையும் கூட்டிட்டு வந்துரு. நாமே வளர்த்துக்கலாம்.. பிள்ளைகளை திமிரெடுத்துப் போன கழுதைக்கிட்ட விட வேணாம்…
அதுவும் பொம்பள புள்ளையை அவகிட்ட விட்டு வச்சிருக்க ..!”என்று ஏதோ ஏதோ வாய்க்கு வந்த படி வசைப்பாடினார்..
அவர்கள் பேசிய எதும் அவன் காதில் விழவில்லை. அமைதி காத்தான். அவன் மனதிற்குள் தான் ஒரு முடிவு எடுத்து விட்டானே! இனி எப்படி இவர்களிடம் வீண் வாதம் செய்து கொண்டிருப்பான். பேசுவது வீண் என்று தெரிந்த பின் பேச்சைக் குறைத்தபடி அமைதியாக இருக்க ..
“என்னடா நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்.நீ அமைதியா இருக்க?” என்று அவனிடம் மீண்டும் கத்தத் தொடங்க ..
அப்பொழுது உள்ளிருந்து வந்த அவனது அப்பா சிவனேசன் தான், “செத்த நேரம் அமைதியா இருக்கீங்களா? இன்னும் என்னென்னலாம் இல்லாத பொல்லாததைச் சொல்லிக் கொடுத்து ,அவன் வாழ்க்கையை கெடுக்கலாம்னு அம்மாவும் , மகளும் கங்கணம் கட்டிட்டு அலையுறீங்க? நீங்க எல்லாம் இப்ப இல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டீங்கல்ல..
சீ! நீங்க எல்லாம் என்ன ஜென்மங்களோ? உன்ன தான் கட்டிக் கொடுத்தாச்சு இல்ல, இன்னமும் இங்கேயே வந்து உட்கார்ந்துகிட்டு எதுக்கு அவன் வாழ்க்கையும் சேர்த்து வீணடிச்சிட்டு இருக்க?” என்று தான் பெற்ற மகள் என்றும் பாராமல் சிவனேசன் எதிரில் இருக்கும் தன்மகள் உதயாவை பார்த்து கேள்வி எழுப்ப..
” இங்க பாரு மா.அப்பா எப்படி எல்லாம் பேசுறாருன்னு..” என்று தன் தாயை துணைக்கு அழைத்தபடி நீலிக் கண்ணீர் வடித்தாள் உதயா ..ஆதியின் தங்கை .
” நீ கொஞ்ச நேரம் அமைதியா இருடி ! நான் பேசிக்கிறேன். இந்த மனுஷனுக்கு என்ன வந்துச்சு, எப்ப பாரு மருமக தானே உசத்தி!.. மருமகளை தலையில் தூக்கி வச்சிருந்தா கொஞ்சி இருப்பாரு.. இவர் கிட்ட என்ன பசப்பு காட்டி மழுப்பினாளோ “என்று கூற.
“ஏய்!”என நாக்கை கடித்துக் கொண்டு வந்தார் நேசன்..
” செத்த நேரம் கம்முனு இருக்கீங்களா எல்லாரும் ..”என்று வேகமாக கத்தி விட்டான் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த ஆதி..
“ஆதி இப்பவும் சொல்றேன் இவளுங்க பேச்சை கேட்டுட்டு நீயே உன் வாழ்க்கையில மண்ணள்ளி போட்டுக்காத அவ்வளவு தான் சொல்லுவேன்! ஒன்னுக்கு ரெண்டு புள்ளைங்க கண்ணுக்கு அழகா இருக்காங்க டா..இம்புட்டு நாள்ல சந்தோஷமா தான் இருந்தீங்க. இவளுங்க ஒரு ஆளுனு கேட்டுக்கிட்டு நீ உன் வாழ்க்கையை அழிச்சுக்காதே அம்புட்டு தான் ..சொல்ல முடியும்.. உன் வாழ்க்கையை பார்த்துட்டு, நீ போயிட்டே இரு..
பெத்தவனா இதை மட்டும் தான் உனக்கு சொல்ல முடியும். எங்க தேடுனாலும் உனக்கு நம்ம சுதா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கவே மாட்டாடா. திரும்பத் திரும்ப சொல்ல வைக்காத சுதாவை கெட்டியா புடிச்சுக்கோ! அவ தான் உன் வாழ்க்கை.. என் கண்ணுக்குள்ளயே நிக்கிறா டா என் பேத்தி. பார்த்து ரெண்டு வாரம் மேல ஆகுதடா ..சீக்கிரம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர வழிய பாருடா “என்றவர் கண்களில் வழியும் நீரை துடைத்தபடி அவ்விடம் விட்டு நகர..
சிவனேசனின் மனைவியுமான, ஆதித்யாவின் அம்மாவுமான சித்ராவோ, தன் முடியை தூக்கிக் கொண்டை இட்டப்படி,” எது அந்த எடுபட்ட சிறுக்கி திரும்ப இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வைப்பாளா ?வச்சிருவாளா ? அதையும் நான் பாத்துடறேன்.. பேத்தி வரணும்னு சொன்னீங்களா அதோட நிறுத்திக்கோங்க. கூட்டிட்டு வரட்டும், என் புள்ளையை வளர்த்த எனக்கு, என் பேர புள்ளைங்களை வளர்க்க தெரியாதா ?
எனக்கு தெரியாது நினைச்சு தான் கூட்டிட்டு போய் அங்க உட்கார வச்சி இருக்காளோ?,பேத்தியை கூட்டிட்டு போய் அவ கூட உக்கார வச்சுட்டா என் பையன் அவளை தேடி வருவான்னு நெனப்புல தானே, அவ போய் அங்க உட்கார்ந்து இருக்கா? தோப்பரு நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, இனி அந்த எடுபட்ட சிறுக்கி இந்த வீட்டு வாசல மிதிக்க கூடாது சொல்லிபுட்டேன்.
வரும்போது என் பேத்திய கையோட கூட்டிட்டு வர வழிய பாரு. வேணும்னா நாங்களும் வரோம் உன்கூட..
நேத்தில இருந்து சொல்லிகிட்டு இருக்கோம்.. இல்ல நானே தனியா போய்க்கிறேன் சொல்லிட்டு இருக்க.. சரின்னு அமைதியா இருக்கோம்.
இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க முடியாது ..”என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு சத்தம் போட..
அமைதியாக தன் தாயே பார்த்துக் கொண்டிருந்தவன்.” அம்மா கொஞ்சம் சத்தம் போடாம இருக்கீங்களா ?” என்று அவருக்கு மேல் கத்தினான்..
இவ்வளவு நேரம் வீட்டில் இருப்பவர்கள் போடும் சத்தத்தில் தன்னுடன் ஒட்டி நடுங்கியபடி நிற்கும் தன் மகனை கைகாட்டியவன். “மகி, நம்ம அம்மாவையும் ,மிதுவையும் பார்க்க போலாமா ?”என்று கேட்க..
“டேய் யாருடா அம்மா ?”என்று மீண்டும் எகிரினார்..
“மா உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும், என் பிள்ளைகளுக்கு அம்மா அவ தான்? அதை மறந்துடாதீங்க ?”என்று தனக்கு மனைவி அவள் தான் என்பதை கூற மறந்து விட்டான் போலும்..
