அத்தியாயம் 30

பூஜையறையில் மருமகளுக்கான சடங்குகளைச் செய்த பின்னர், ராதா நதியாவின் கையில் ஒரு நகைப் பெட்டியைத் தந்தார். அவள் அதைத் திறந்து பார்த்தபோது, அதில் வைரம், வைடூரியம், ரூபி, எமரால்டு எனப் பல வகை இரத்தினங்கள் பதிக்கப்பட்ட, நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட, அழகான வைர அட்டிகையும், மாலையும் இருந்தன.

“இது என்னோட மாமியார் எனக்காகத் தந்தது. ரொம்பக் காலமா இந்தக் குடும்பத்துக்கு வர்ற மூத்த மருமகளுக்குத்தான் இந்த நகைகளைத் தருவாங்க. இதைப் பத்திரமா வெச்சு, உன்னோட முதல் மருமகளுக்குக் கொடுத்திடு” என்று ராதா சொன்னதும் ரூபிணியின் முகத்தில் ஈயாடவில்லை. 

சொந்த அத்தையாக இருந்தாலும் ராதாவிற்குத் தன் கணவர் குடும்பத்தின் கௌரவத்திற்கு  முன்னால், மற்றவையெல்லாம் பெரிய விஷயமில்லை எனப் புரிந்துகொண்டாள் ரூபிணி. 

திருமணமாகி வந்த காலத்திலிருந்தே, சக்கரவர்த்தி குடும்பத்திற்கு ராதா தன்னுடைய கடமையைத் தவறாமல் செய்து வந்தவர், அதனாலேயே கணவரின் இழப்பிலும், உறவுகளின் துரோகத்திலும் அதிகமாய்க் காயமடைந்தார்.

நதியா நகைகளையெல்லாம் எடுத்துப் பார்த்தவள், சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் ரூபிணியின் அருகில் சென்றாள். 

“ரூபி… எனக்கு முன்னாடி இந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமகளா வந்தது நீங்கதான். அதனால இது உங்களுக்குத்தான் சொந்தம்” என்று அவள் ரூபிணியின் கையில் அந்தப் பெட்டியைத் தர, “அது நல்லா இருக்காது. நீயே வச்சுக்கோ நதியா…” என்றனர் ராதாவும், ருக்மணியும்.

“இந்த வீட்ல எல்லாமே பொதுவாதான் இருக்கு. எதுக்கு மூத்த மருமகள்னு புதுசா இதைப் பண்றீங்க? நான் இங்கதானே இருக்கப்போறேன். வேணும்னா ரூபிகிட்ட வாங்கிப் போட்டுக்கிறேன்” நதியா பேசிக்கொண்டிருக்க,  வேகமாகக் குறுக்கிட்ட மிதுன், “நதிமா… பெரியவங்க சொல்றாங்களே நீ ஏன் வழக்கமா நடக்கிறதை மாத்துற” என்றான்.

“என்னோட வாழ்க்கையில எல்லாமே வழக்கத்தை மீறி மாறித்தான் நடந்திருக்கு. பரவாயில்லைங்க. நீங்க அதே மாதிரி எனக்குச் செஞ்சு தரமாட்டீங்களா என்ன? எனக்குத் தெரியும், நீங்க என்னைவிட உங்க குடும்பத்து மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கீங்கன்னு. எனக்காக அதை மாத்திக்காதீங்க” அவன் செய்த அத்தனையும் அவனுக்கு மட்டும் புரியும்படி குத்தலாகச் சொல்லிவிட்டு, அங்கிருந்த தன் தாயின் அறைக்கு சென்றாள். 

இரவு… அறைக்குள் நுழைந்த ரூபிணி பூக்களாலும் வண்ண விளக்குகளாலும், மெத்தையும் அறையும் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து திகைத்து நின்றாள். “தேவ்… என்ன இது?” அவள் விழி விரித்துக் கேட்க, நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்து ரொம்ப நாள் ஆச்சுல. அதான் செகண்ட் நைட் செலிப்ரேட் பண்ணலாம்னு. உனக்கு பிடிச்சிருக்கா ரூபி…” என்றவன் அவளை அணைத்துக் கழுத்தில் வாசம் பிடிக்க ஆரம்பித்தான்.

ஒவ்வொரு முறையும் அவன் தரும் ஆச்சரியங்களில், காதலில் திக்குமுக்காடிப் போகிறாள் ரூபிணி. எந்த நிபந்தனைகளுமற்ற, எதிர்பார்ப்புகளுமற்ற காதலைத் தன் மீது அவன் வைத்திருப்பதை  நினைத்துச் சிலிர்த்தாள்.

அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், “லவ் யூ தேவ்!” என்றதும், அவள் இதழோடு இதழ் பொருத்தி, அவள் சுவாசத்தை மட்டுமின்றி அவளையுமே தனதாக்கிக் கொண்டு காதலெனும் மாயையில் அவளோடு கலந்தான்.

கொலுசுச் சத்தமும், வளையல் ஓசையும் ஒலிக்க, பால் செம்புடன் நடந்து வருபவளை கன்னத்தில் கை வைத்துப் புன்னகைத்தபடி பார்த்திருந்தான் மிதுன். முழு அலங்காரத்துடன் தேவதையாய் நடந்து வருபவளைக் கண்களாலே தழுவிக் கொண்டிருந்தான். 

நிமிர்ந்து அவனை அழுத்தமாகப் பார்த்தவள், அவனிடம் பால் செம்பை நீட்டினாள். இதழ்கள் விரிய புன்னகைத்தவன், அதை வாங்கிக் குடித்துக் கொண்டிருக்க, 

“என்கிட்ட லவ் மேக்கிங் பண்ணனும்னு ஏதேதோ செஞ்சுப் பார்த்தீங்க. கடைசியில கல்யாண டிராமாவும் பண்ணிட்டீங்க. இப்பவும் இந்த கல்யாணத்துல எனக்குச் சம்மதமான்னு கேட்கணும்னு உங்களுக்குத் தோணலையா?” என்று நதியா கேட்டதும், அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான்.

“எப்படி… உங்க தேவையெல்லாம் முடிஞ்ச பிறகு டிவோர்ஸ் என்கிட்ட கேட்டுப் பண்ணுவீங்களா? இல்ல சொல்லாம கொள்ளாம ஒருநாள் கோர்ட்டுக்கு இழுத்துட்டுப் போய் இந்தா… உன் வேலை முடிஞ்சதுன்னு சொல்லிடுவீங்களா?” வெறுப்போடு அவள் கத்திக் கொண்டிருக்க, மிதுன் முகத்திலிருந்த புன்னகை மாறவே இல்லை.

இதையெல்லாம் அவன் எதிர்பார்த்தது தான். “உங்களுக்கு நான்தானே வேணும். என்னை எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க. ஆனா எப்பவும் என்னோட மனசை உங்களால தொடவே முடியாது” என்றவள், அன்று காலை ஊரறிய அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிய, எழுந்து லாவகமாக அதைப் பிடித்தவன், சத்தமாகச் சிரித்தான்.

“ஆமா… எனக்கு நீ வேணும். உன்னை நான் எடுத்துக்கணும், மொத்தமா எடுத்துக்கணும். ஆனா அதுல லஸ்ட் இருக்கக் கூடாது. காதல் மட்டும்தான் இருக்கணும். உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு அதுலதான் நீ தெரிஞ்சுக்கணும். என்னோட மொத்தக் காதலையும் நீ உணரணும்.

“எனக்கு உன்னோட காதல் வேணும்டா நதிமா. நீ என்மேல இருக்கிற கோபத்துல இதை ஏத்துக்க மறுக்கிற. உன் மனசுல இருக்கிற காதலை மறைக்கிற.. ரொம்ப நாள் உன்னால என்னை விட்டுப் பிரிஞ்சு இருக்க முடியாது. என்னோட வாழ்க்கை முழுக்க உனக்காக நான் வெயிட் பண்றேன். லவ் யூ டா நதிமா!” என்றவன், தான் அணிந்திருந்த பட்டு வேஷ்டி சட்டையிலிருந்து டி – ஷர்ட் ஷார்ட்ஸிற்கு மாறியிருந்தான். 

அவனது காதலின் கனத்தைத் தாங்கவியலாமல் நதியா அழுதாள். ‘ஏன் டா அப்படி பண்ண? என்னை செக் பண்ணியா? என்மேல நம்பிக்கை இல்லாம போச்சா?’ உள்ளுக்குள் அவனிடம் மன்றாடினாள். அவன் காதலில் கலந்திருக்கவே விரும்பும் மனதிற்கும், ‘தன்னை ஏமாற்றி விடுவானோ’ என்ற பயத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறாள். 

உடை மாற்றியவன் அவளைத் தொந்தரவு செய்யாமல் பால்கனிக்குச் சென்றான். பெருமூச்சொன்றை விட்டு ஆசுவாசமாக அமர்ந்தவன், காதல் தந்த காயங்களில் மிகுந்த மனச்சோர்வில் இருந்தான். கடந்த காலங்களில் அவன் கடந்து வந்த காயங்களை எல்லாம் மொத்தமாய்த் தந்துவிட்டது இந்தக் காதல். 

‘திருமணம், குழந்தைப்பேறு என  எல்லாத்தையும் மதிக்காமல் என் திமிருக்கு ஒப்பந்தம் போட்டுச் செய்ய நினைத்தேன். இன்று கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் மகிழ்ச்சி எதையும் அனுபவிக்க முடியாமல் போனதே!’ தன்னுடைய விதியை எண்ணித் தானே நொந்து கொண்டான். 

அவளின் விலகலும், தணியாத  கோபத்தோடு அவள் வீசும் வார்த்தைகளும், அவளது பிரிவு நிரந்தரமாகி விடுமோ என்ற தவிப்பை அவனுக்குத் தந்தாலும், ‘நதியாவை எப்படியாவது என் காதல் மாற்றும்’ என்னும் நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்கிறான்.

இயற்கையின் தாலாட்டில் ஆசுவாசமாகக் கண் அயர்ந்தவனுக்குத் திடீரென விழிப்பு வர, எழுந்து அறைக்குள் சென்றான். உடையைக்கூட மாற்றாமல் அழுதபடியே தூங்கியிருந்தாள் நதியா. அவளுக்கருகில் சென்று அமர்ந்தவன், அங்கிருந்த தாலியை எடுத்து மீண்டும் அவள் கழுத்தில் கட்டினான். 

அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு படுத்தவன், “இந்தச் சின்ன மூக்குக்கு மேல உனக்கு எவ்ளோ கோபம் வருது?!” என்று அவள் மூக்கைக் கிள்ளி முத்தமிட்டான். அவளது இதழிலும் அவன் அழுத்தமாய் முத்தம் தர, அவன் மீசை முடி குறுகுறுத்ததில், தூக்கத்திலேயே அவன் ஈரம் செய்த தன் இதழை அவளும் நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள். 

இதையெல்லாம் பார்த்துச் சிரித்தவன், “லவ் யூ நதிமா!” என்று அவளை அணைத்துத் தூங்கிப்போனான். அதிகாலை கண்விழித்தவள், தன் மீது கையும் காலும் போட்டு, அவனது உடல் எடை மொத்தமும் தன்னை அழுத்தத் தூங்கிக் கொண்டிருந்தவனைத் தள்ள முயற்சி செய்தாள். 

“தினமும் இதே வேலையாப் போச்சு” என்றவள், அவன் மார்பில் நறுக்கென்று கிள்ளி வைக்க, துள்ளி எழுந்தவன் கொட்டாவி விட்டபடி “குட் மார்னிங் பொண்டாட்டி!” என்றான்.

ஓர் அலட்சியப் பார்வையை அவனுக்குத் தந்தவள் எழுந்து குளியலறைக்குச் சென்றாள். 

வெறுமையாய் அவர்களது நாட்கள் நகர்ந்தபடி இருக்க, 

அன்று காலை, “அண்ணி… எனக்குக் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்” என்று நதியாவை ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றாள் வைஷாலி. 

அவள் தனக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டிருக்க, மிதுன் அவளுக்குப் போனில் அழைத்ததும், அங்கிருக்கும் மால் அலுவலகத்திற்கு நதியாவுடன் சென்றாள். 

“இவங்க என்னோட மிசஸ்… ஷீ இஸ் மை சிஸ்டர்” என இருவரையும் அவர்களிடம் அறிமுகம் செய்தவன், “என்னோட மிசஸ் நேம்லதான் இந்த மால் வாங்கப்போறேன். டாக்குமெண்ட்ஸ்லாம் ரெடியா இருக்கு” என்றிட, அதிர்ந்து போய் நின்றாள் நதியா.

“வாங்க மேம்… வந்து சைன் பண்ணுங்க” விஷ்ணு அழைக்க, தயங்கியபடி நின்றவளை வைஷு இழுத்துச் சென்றாள். அவள் கையெழுத்துப் போடாமலே நின்றிருக்க, “இரிட்டேட் பண்ணாம சைன் பண்ணு” மிதுன் பற்களைக் கடித்தபடி முணுமுணுத்தான். 

அவள் கையெழுத்துப் போட்டதும், “கங்கிராட்ஸ் மேம்!” மாலின் முந்தைய உரிமையாளர் புன்னகையோடு அவளிடம் கைகுலுக்கக் கையை நீட்டினார். கை நீட்டிய நதியாவைத் தடுத்த மிதுன் “தேங்க் யூ!” என்று அவரிடம் கைகுலுக்கினான். 

விஷ்ணு உதட்டை மடித்துச் சிரிக்க, மிதுன் அவனைச் சற்று கூர்மையாகப் பார்த்தான். “சரி… நீங்க போய் ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க, கிளம்பலாம்” என்று மிதுன் சொன்னதும் இருவரும் மாலில் இருக்கும் ஜவுளிக்கடைக்குள் நுழைந்தனர். வைஷு ஆர்வமாகத் தனக்கும், தன் அண்ணிகளுக்கும் ஆடைகள் எடுத்துக் கொண்டிருக்க, அங்கே ஷாப்பிங் செய்தபடி இருந்த ஆதிராவைப் பார்த்தாள் நதியா. 

அவளைக் கண்டும் காணாமல் நகர்ந்து வேறு பக்கம் செல்ல முயன்ற நதியாவைக் கவனித்தவள், “நதியா…” என்றபடி அருகில் வந்து அணைத்துக் கொண்டாள்.

நதியா திடுக்கிட்டு நிற்க, “ஹேய்… எப்படியிருக்க? லுக்கிங் சோ கூல்! அம்மா எப்படி இருக்காங்க?” சிரித்தபடி கேட்ட ஆதிராவை அழுத்தமாய்ப் பார்த்தாள். 

“சாரி நதியா… அப்போ உனக்கு ஹெல்ப் பண்ற சிச்சுவேஷன்ல நான் இல்ல” என்று ஆதிரா சொன்னதும் திகைத்தவள், “சரி விடு… ஜெய் எப்படி இருக்கான்? மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க?” கோபத்தை மறந்து இயல்பாய்ப் பேசினாள்.

“நானும் ஜெய்யும் இப்ப ஒண்ணா இல்ல. அவன் சரியான பொறுக்கி… நிறைய பொண்ணுங்க கூட காண்டாக்ட்ல இருந்திருக்கான். உன்னோட ஹஸ்பன்ட் மட்டும் அன்னைக்கு அவன் உன்கிட்ட ஃப்ளிர்ட் பண்ணிப் பேசுனதை அனுப்பாம இருந்திருந்தா அவனை நான் இன்னும் நம்பிட்டே இருந்திருப்பேன். 

“நான் அப்புறமா வாட்ச் பண்ணிப் பார்த்தா, என்கூடவே இருந்துக்கிட்டே நிறையப் பொண்ணுங்ககிட்ட பழகிட்டு இருந்திருக்கான். அதான் அவனை விரட்டிவிட்டேன். டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கேன். இன்னும் அவன் திருந்தல. எப்போ பார்த்தாலும் குடி, பொண்ணுங்கன்னு ஏதோ பிரச்சனையாகி ரிமாண்ட்ல இருக்கிறதா சொன்னாங்க. 

“நானே அவனைத் தேர்ந்தெடுத்துத் தப்பு பண்ணிட்டேன். சாரி நதியா… நான் உனக்கு செஞ்ச தப்புக்காகத்தான் இந்தத் தண்டனை. ஐ ஆம் சோ சாரி!” மனதாரத் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள் ஆதிரா.

“உன் ஹஸ்பன்ட் அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்து, அந்த கால் ரெக்கார்டிங் தந்துட்டு, ‘இனிமே ஜெய் என் ஒய்ஃப டிஸ்டர்ப் பண்ணா, அவனை நீங்க உயிரோட பார்க்க முடியாது’னு மிரட்டிட்டுப் போனார். நான் கூட அவர் மேல முதல்ல கோபப்பட்டேன். நல்லவேளை… அவர் சொன்னதாலதான் இப்போ அந்த பொறுக்கிகிட்ட இருந்து தப்பிச்சு நிம்மதியா இருக்கேன். சீக்கிரமே எனக்குப் பிடிச்ச நல்லவனாப் பார்த்து நான் கல்யாணம் பண்ணிப்பேன்” ஆதிரா நீண்டு பேசியபடி இருக்க, நதியா அதிர்ச்சி குறையாமல் அவளையே பார்த்திருந்தாள். 

“நதிமா… ஷாப்பிங் முடிச்சுட்டீங்களா?” நாம கிளம்பலாமா?” மிதுனின் அந்தப் பழக்கமான கம்பீரக் குரலில் மலைப்பு நீங்கி சுயம் மீண்டாள் நதியா. 

“ஹாய் சார்… எப்படி இருக்கீங்க?” ஆதிரா கைகுலுக்க அவனிடம் கையை நீட்ட, வேகமாய் இடைமறித்தவள், அவளுக்குத் தன் கையைத் தந்து குலுக்கினாள். 

“நாங்க நல்லா இருக்கோம். கண்டிப்பா உன்னோட கல்யாணத்துக்குக் கூப்பிடு. ஒருநாள் வீட்டுக்கு வா” – ‘வந்துடாதே’ என்ற தொனியில் சிரித்துக்கொண்டே சொன்ன நதியா, “போலாமா மிதுன்?” என்று அவன் கையோடு கை கோர்த்து அங்கிருந்து நகர, பின்னால் வந்த விஷ்ணு ‘அய்யோ…’ என்றுத் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டான்.

ஆதிரா அங்கிருந்து சென்றதும் கையை விலக்கிக்கொண்டவள், அவனைப் பார்த்து முறைக்க, அடக்க முடியாமல் சத்தமில்லாமல் சிரித்தான் மிதுன். “ஆபீஸ்ல ஒரு ஒர்க் இருக்கு… முடிச்சிட்டு நாம சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம்” என்றவன், அவர்களையும் அழைத்துக்கொண்டு கம்பெனியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றான்.

மிதுனின் நண்பர்கள் அங்கு காத்திருக்க, பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பின், நதியாவும் வைஷாலியும் வெளியே அலுவலகத்தை சுற்றிப் பார்க்க சென்றிட, நண்பர்கள் மூவரும் கம்பெனியின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

ஏதோ வேலை இருக்கிறது என்று வெளியே சென்ற விஷ்ணு, நதியா மற்றும் வைஷாலியுடன் பேசிக்கொண்டிருந்தான். சிசிடிவியில் இதைப் பார்த்த சத்யா, “மித்து… அங்க பாரு” என்று அவர்களுக்கு எதிரிலிருந்த எல்.இ.டி திரையைக் காட்ட, மிதுன் அவர்கள் இருக்கும் கேமராவை கிளிக் செய்து பெரிதாக்க, திரையில் நதியா விஷ்ணுவின் கையைப் பிடித்தபடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். 

“வேலை இருக்குன்னு வெளில போய் என்ன வேலை பண்றான் பாரு” அரவிந்த் கிண்டலாகப் பேச, மிதுனோ கண்கள் சுருக்கித் திரையைப் பார்த்தபடி இருந்தான். “ஏன்டா அரவிந்தா… யாருக்கோ இங்க வயிறு பர்ன் ஆகுற ஸ்மெல் வருதே… உனக்கு வருதா?” சத்யாவின் கேலியைக் கேட்காதவாறு, “ஒருமாதிரி புழுக்கமா இருக்குல்ல” என்றான் மிதுன்.

“ஏசி கொஞ்சம் அதிகமா வைக்கட்டுமா?” என்றவாறு அரவிந்த் அதன் ரிமோட்டை எடுத்து 22-இல் இருந்ததைக் குறைத்து 16-இல் வைக்க, “ஐ நீட் சம் ஃப்ரெஷ் ஏர்!” என்றவன் கோட்டைக் கழற்றி அங்கே இருக்கையில் போட்டுவிட்டு வெளியே சென்றான். 

“என்னடா இவன் என்னென்னமோ பண்றான்” என்று யோசனையோடு நண்பர்கள் அவனைப் பார்த்திருக்க, நதியா இருக்குமிடத்திற்கு சென்றவன், அங்கிருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் அவள் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு, அருகிலிருந்த ஓய்வறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டான். 

“எதுக்கு என்னை இப்படி இழுத்து…” அவளது வார்த்தைகள் அவன் வாய்க்குள் விழுந்திருக்க, அவள் இதழ்களோ அவனது அதரங்களுக்குள் விழுந்திருந்தன!

மிதுன் எதிர்பாராமல் தந்த முத்தத்தில் தடுமாறியவள், அவனை விலக்க முயற்சிக்க, இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். நதியா அவனைத் தடுக்க நினைத்துச் செய்யும் அத்தனைக்கும், அவளின் மீதிருக்கும் தன்னுடைய பிடியை அழுத்தமாக்கினான். 

அவள் இடையோடு கைபோட்டுத் தன் உயரத்திற்கு அவளைத் தூக்கியிருந்தவன், இதழை விட்டு “இட்ஸ் அமேஸிங்… மிஸ் யூ டா நதிமா!” என்றான். பிரிவின் ஆற்றாமையில் கண்கள் கலங்கியவன், அவள் முகமெங்கும் முத்தமிட்டு, மீண்டும் அவள் இதழைப் பற்றிக் கொண்டான். 

அவனது முத்தத்தில் காதலை உணர்ந்தவள் மனதிற்குள் ஏதோ ஒரு வலி. “யூ ஆர் அமேஸிங்… லவ் யூ டா நதிமா!”  இதழ்களில் ததும்பிய புன்னகையோடு அவன் அங்கிருந்து சென்றிட, அங்கேயே அப்படியே அமர்ந்துவிட்டாள் நதியா.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மோகம் தீர்க்கும் நதியவள்
5,917 177 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page