அலை கடல் பெண்ணவள்

அலை 21

 

வளர்பிறை வீண்மீன்கள் வானத்தில் பளீரிடத் தொடங்கிய நேரம். காமக்கோட்டம், இளவந்திகை, தாழைப்பாக்கம் எங்கும் யவன விளக்குகளும் மக்கள் கூட்டமும் சேர்ந்து விழாவுக்கான அழகினை ஆங்காங்கே பறைசாற்றியது.

காமதேவனுக்காக எடுக்கப்பட்ட அந்த விழா, பங்குனி மாதம் ‘பின்பனிக்காலம்’ என்பது மாசி, பங்குனி மாதக் காலமேயாகும். மாசி மாத முழுமதி (பௌர்ணமி) நாளினையே சொல்லுகின்றன. எனவே இன்றைய மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கோள் கொண்டு கொடியெடுத்துள்ளனர்.

நெற்றிக்கண் உடைய வேங்குழல் நாதன் முதலாகக் கொற்கை நகரில் வாழும் சதுக்கத் தெய்வங்கள்வரை அனைத்துக் கோயில்களிலும் முறைப்படி வழிபாடுகள் நடைபெற ஆரம்பித்தது. நகரின் நடுவே இருந்த சதுக்கப் பூதம் சிறுகோவிலில் ஆச்சாரியார் தீபம் ஏற்றினார். கோவில் வாயிலில் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. வணிகர் தெருவில் யவன வியாபாரிகள் கூடத் தங்கள் கடைகளில் கொடிகளைக் கட்டினர். கடற்கரை மீனவர்கள் வலைகளைச் சுத்தம் செய்து கடலுக்கு முன் தீபம் வைத்தனர். கொற்கையின் குழந்தைகள், “காமன்விழா! காமன்விழா!” என்று குதித்தனர்.

கொற்கை நகரத்தில் காமன் பண்டிகை தொடங்கியதும் அந்த நகரத்தின் இரவுகள் வேறொரு உலகமாக மாறின. பகலில் சந்தைகள், துறைமுகம், வியாபாரிகள் என நகரம் பரபரப்பாக இருந்தாலும், இரவு வந்தவுடன் அனைவரின் மனமும் ஒரே இடத்துக்கே திரும்பும் காமன் விழா அரங்கம்.

மக்கள் இரவு உணவு உண்டு முடித்தபின் மெதுவாகக் காமக்கோட்டத்திற்கு வந்தார்கள். கடற்காற்று வீசியது. வெண்கடம்பும் செண்பகமும் மணம் வீசியது. யவன விளக்குகள் வரிசையாக ஏற்றப்பட்டிருந்தன.

பின்னிரவு நேரம் ஆரம்பித்ததும் கூத்து தொடங்கும். இரவெல்லாம் “காமன் கூத்து” நடத்தப்பட்டது. அந்தக் கூத்தில் காமதேவனின் கதை முழுவதும் படிக்கப்பட்டது.

மக்கள் அரங்கத்தைச் சுற்றி அமர்ந்தனர். குழந்தைகள் ஓடி ஆடி விளையாடினர். பூட்டன்கள், பூட்டிகள் கதையைக் கவனமாகக் கேட்டனர்.

காமன் அரங்கத்தின் பக்கத்தில் பெரிய பானைகள் வைத்து அங்கு வருவோருக்கு சுண்டல், பொரி, கடலை வழங்கினர். சாப்பிட்டுக் கொண்டு மக்கள் கூத்தை ரசித்தனர்.

காமக்கோட்டத்தில் விழா தொடங்கியது. சிங்கனும், வீனஸும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்குப் பழக்கப்பட்ட ஒலி கேட்டது. வீனஸிற்கு இதயத்தில் தென்றல் காற்று சாமரம் வீசியது.

எங்கிருந்தோ வந்த துகிலன், “ஐயா வீனஸ்!” என்றான்.

வீனஸ் துகிலனைப் பார்த்ததும், “என்ன ஐயா, கன்னம் சிவந்து போச்சு? கவலைப்படாதீரும்! உங்கள் நாட்டிய மயூரிதான் வருகிறார்கள்.” என்றான்.

வீனஸ் மட்டுமல்ல, ஏன் சிங்கன் கூட ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தான். அப்போது தாங்கித் தாங்கி வந்த மார்கழியைப் பார்த்ததும் சிங்கனுக்கே கோபம் வந்தது. வீனஸிற்கு சொல்லவே வேண்டாம். முகம் வெளுத்துத் துகிலனை சோகமாகப் பார்த்தான்.

“துகிலா, நீ போட்ட இந்தக் கருஞ்சாந்து உன் பார்வையைக் கெடுத்து விட்டது.” என்றான் சிங்கன்.

“ஐயா! கொற்கை தலைவா, நீ காதலில் குதித்துக் கண்ணை இழந்து விட்டாய். என்னைக் குற்றம் சொல்லாதீர். என் பார்வை ஏழ்கடலையும் துளைக்கும்.” என்றவன், “அங்கே பாரும் ஐயா… பாரும்!” என்றான் துகிலன்.

அப்போது ரதிமஞ்சரியுடன், அம்பையும் மயூரியும் வந்தார்கள்.

ஆரத்தியின் தாளம் மெதுவாக உயர்ந்தது. அந்த ஒலியைப் பிளந்து முதலில் மண்டப வாசலில் இரு அழகிய பெண்கள் உள்ளே வந்தனர்.

மயூரி ஆழ்ந்த நீலத்தின் நீல ஒளி மேல் பொன்மஞ்சளுடன் 

கடலின் அடிப்பகுதியின் ஆழ்ந்த நிறத்தில் மின்னும் சூரிய கதிர் போன்ற உடையுடனும், அம்பை இளமஞ்சள் உடுப்புடன் மென்மையான வான்பச்சை, எல்லையில் பனித்துளிபோல வெள்ளி பொன் பொறிகள் பொறிக்கப்படட நாட்டிய உடையில் வந்தவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிசயமாக இருந்தது.

“ஆஹா… ஆஹா…” காமன்விழா இன்று வேறுமாதிரி இருக்கப் போகிறது என்று பேசிக் கொண்டார்கள்.

மயூரியின் கண்கள் முத்துப்பரல்களை போல நாற்புறமும் சுழன்று ஓரிடத்தில் நிலைபெற்று நின்று சென்றது.

மயூரியின் கண்களில் மென்மை இல்லை. அது கவர்ச்சி அல்ல. அது ஆழமான வலி மிகுந்த அழைப்பாக இருந்தது.

வீனஸைப் பார்த்த கண்கள் அடுத்த வினாடியே காமன் சிலையைப் பார்த்தது. அம்பை வீனஸிடமும், சிங்கனிடமும் நட்புடன் திரும்பித் தலையை அசைத்தவள்,

யாரையோ தேடிக் கொண்டே நடந்தாள். 

துகிலனோ, “ஓ… அக்காவிற்கு நம்மைத் தெரியவில்லை போல!” என்று பெருமிதம் கொண்டான்.

அம்பையும் மயூரியும் காமன் சிலையை வணங்கிவிட்டு அருகே இருந்த கூத்து நடக்கும் இடத்தருகே சென்றார்கள்.

ஒவ்வொரு வருடமும் காமன்விழா கால்கோள் நாளின்போது அம்பை, ரதிமஞ்சரி நாட்டியத்துடனே தொடங்கும்.

ஆனால் இந்த வருட காமன்விழாவில் அம்பையுடன், மயூரமோகினியின் நாட்டியத்தைக் காண வேறு நகரத்திலிருந்து வந்த பருவக்குமாரர்களுக்கு ஆனந்தமாக இருந்தது.

ஏற்கனவே மக்கள் ஆங்காங்கே மண்மேடுகளை உருவாக்கி இடத்தைப் பிடித்து உட்கார்ந்து இருந்தார்கள். இன்று கூத்தில் யார் ஆடுவார்கள் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

காமன் அரங்கத்திற்கு வந்த அம்பையும், மயூரியும் இருவரும் ஒரே நேரத்தில் அஞ்சலி முத்திரையில் கைகளை இணைத்தனர். அந்த ஒரு கணம், மக்கள் கூட்டத்தினர் மூச்சே விடவில்லை. சிலம்பொலி எழுந்ததும் பூமி கூடத் தாளம் பிடித்தது. அவர்கள் கால் சிலம்புகளின் ஒவ்வொரு அடியும் மண் இதயத்தைக் குத்தும் மெதுவான ஒலியுடன் தொடங்கியபோது அம்பைக்கு பதிலாக மயூரி பாடத் தொடங்கினாள்.

அம்பையின் முகத்திலும், ரதிமஞ்சரி முகத்திலுமே ஆச்சரியரேகை ஓடியது. அம்பை மயூரியுடன் அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்.

“பூத்தமலர் பூங்கழல்கள் எரியாதிருக்க

நீயே எனதாவாய் மன்னா

என் மாயத்தில் உயிர்நாதமாய்

ஆடினீர் நீயே மன்னா

திருமேனி நோய் உருக்கும் 

உள்ளம் மிகவே மன்னா

தீண்டாய் மெய் தீண்டினாய் 

சீர்கொய்ய என் மன்னா

யான் இனி பிரிந்தால் என்

பிறப்பறுப்பாயோ மன்னா

ஞாலத்தினுள் யான் புகவே

நீ போகாதே மன்னா

செங்கழுநீர் மலர் பொன்அடிகளில் 

ஆட்பட்டேன் நிற்பீர் மன்னா

பூத்தமலர் பூங்கழல்கள் எரியாதிருக்க

நீயே எனதாவாய் மன்னா

என் மன்னா… எனதாவாய் மன்னா…”

மயூரி பாடலை முடித்தாள். கலீர் என்ற ஒலி சப்தத்தில் அவளின் கடைசிப் பதம் முடிந்து அவளது செஞ்சாந்து பாதம் தரையை தொட்டது. நாட்டியம் ஆடப்பட்டபோது அரங்கமே அமைதியாக இருந்தது. மயூரியின் நாதத்தைக் கேட்டவர்கள் கூட மனம் கனந்தனர். சில பெண்களின் கண்களில் நீரும் வழிந்தது. பருவமங்கைகளுக்கு இப்போதே பிரிவாற்றாமை வரத் தொடங்கியது. மக்கள் கைத்தட்டினர். சிலர் தலைவணங்கினர்.

மயூரியும் அம்பையும் காதலன், காதலி தவிப்புக்களையும், பிரிவுகளின் வலியையும் நாட்டியத்தில் காட்டினார்கள். ரதிமஞ்சரிக்கு ஏதோ புரிவது போல இருந்தது.

கொற்கை நகரம் முழுவதும், அந்தக் காமன் விழாவின் கதையைப் பேசிக்கொண்டே கலைந்தது.

வீனஸிற்கு நன்கு புரிந்தது. விழிகள் கலங்க மயூரியைப் பார்த்துக் கொண்டே நின்றான். சிங்கன் காதல் வயப்பட்டதால் வீனஸ் மயூரியின் நிலைமை நன்றாகப் புரிந்தது.

நாட்டியம் முடிந்ததும் ரதிமஞ்சரி மயூரியின் கையை நன்கு பற்றிக் கொண்டு சென்றாள். மயூரி மக்கள் கூட்டம் கலைய தொடங்கியதால் வீனஸை தேடிக் கொண்டு விழிகள் அலைபாய ரதிமஞ்சரியுடன் சென்றாள்.

அம்பைக்கு உணர்ச்சிப் பெருக்கு அதிகரித்தது. நாட்டியத்தின் நடுவில் அவள் பார்த்த ஒரு உருவத்தைப் பார்த்தாள். அது நிஜமா அல்லது வேறு யாரோவா? என்ற குழப்பத்துடன் நகர்ந்தாள்.

முன்னே வந்து நின்ற உருவத்தைப் பார்த்ததும் நின்றாள். மேலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தாள் எந்த உணர்ச்சியும் இல்லாமலே.

“அக்கா! என்ன என்னைத் தெரியவில்லையா?” என்றவுடன், 

துகிலனைப் பார்த்ததும் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தாள். அவளின் சிரிப்பைக் கண்டதும் ஆம்பல் மலர்போல் சுருங்கியது துகிலனின் முகம்.

“என்ன அக்கா, நீயும் ஏளனம் செய்கிறாயா?” என்றான். அம்பைக்கு சிரிப்பு வந்தாலும், “என்ன நேர்த்திக்கடன் துகிலா இது?” என்றாள்.

துகிலன், “இது நேர்த்திக்கடன் இல்லை, என் ரதிதேவியை தேடுகிறேன் அக்கா” என்றான்.

“ஓ… என் துகிலனுக்கு அவ்வளவு வயது ஆகிவிட்டதா என்ன?” என்றாள் அம்பை.

“ஆமா ஆமா, இப்படியே சொல்லு நான் பூட்டன் ஆயிடுவேன்.” என்றான்.

அப்போது, “அம்பை உனக்குத் தெரியாது, காலையிலேயே துகிலனுக்கு ரதிதேவி கிடைத்து விட்டாள். எல்லாம் காமன்மயம்!” என்றான் சிங்கன்.

அம்பை, “அப்படியா துகிலா! யார் அந்த ரதி? நான் பார்க்கவேண்டுமே எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.” என்றாள்.

சிங்கன், “என்ன? இரண்டாம் ஜாமம் ஆகிவிட்டது. விடியலில் கம்மந்திணையில் பார்க்கலாம்.” என்றான்.

துகிலன் முகம் சுருங்கி கோபத்துடன் நின்றான்.

அம்பை, “ஏன் அந்த ரதியின் இல்லம் அங்கே இருக்கிறதா?” என்றாள்.

சிங்கன், “ஆமாம் ஆமாம். கணவன், குழந்தைகளுடன் வசிக்கிறாள்.” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

அம்பை, “என்ன? திருமணமான பெண்ணா, என்ன துகிலா?” என்றாள் கோபமாகத் திரும்பி.

துகிலன் தலையில் கை வைத்து உட்கார்ந்தான். 

“சிங்கா, வேண்டாம். பின்னால் நீ மிகவும் வருத்தப்படுவாய், 

நடந்ததைச் சொல்.” என்றான்.

சிங்கன் காலையில் நடந்த மயிலின் கதையைச் சொன்னதும் அம்பைச் சிரித்துக் கொண்டே துகிலனின் தலையை வருடி, “என் அழகனுக்கு ஏற்ற அழகி இந்த விழாவில் கிடைப்பாள்.” என்று ஆசீர்வதித்தாள் மிகுந்த தாயன்புடன்.

அம்பை, “ஆமாம், எங்கே வீனஸ்?” என்றாள். 

அப்போது அவளை யாரோ இடித்தது போல் இருந்தது. யார் என்று திரும்பியவளின் பின்னே எராவும் வீனஸும் நின்றிருந்தனர்.

அம்பையை இடித்தது எரா தான். 

“அடடா! எரா எப்படி இருக்கிறாய்?” என்றவளை ஆசையாக உராய்ந்தது.

வீனஸ் அம்பையை நோக்கி, “இன்றைய நாட்டியம் அருமையாக இருந்தது.” என்றான்.

அம்பை வீனஸை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே, “நான் நன்றாக ஆடினேன், மயூரி நன்றாக ஆடவில்லை அப்படித்தானே!” என்றாள்.

வீனஸ் அம்பையின் விழிகளைப் பார்த்துக் கொண்டே, “எங்கள் நாட்டில் நான் பார்த்த நடனம் வேறு. கொற்கையில் பார்த்த நடனம் வேறு. ஆழமான பக்தியை நான் கண்டு கொண்டேன்.” என்றான் அம்பைக்கு புரியும்படி. வீனஸின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காதல் இருந்ததைக் கண்டு கொண்டாள்.

வீனஸ், “நான் கொற்கைக்கு வரும்பொழுது ஒன்றுமே இல்லாமல் வெற்றிடத்துடன் வந்தேன். இப்பொழுது இங்கே அள்ளிச் செல்ல இரு கைகளும் இதயமும் போதவில்லை.” என்றான்.

மூவருக்குமே புரிந்தது வீனஸ் என்ன சொல்ல வருகிறான் என்று! அம்பை வீனஸை பார்த்துக் கொண்டே, “நாளைப் புனலாடும் விழாவில் கலந்து கொள்ளுங்கள். இன்னும் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.” என்றாள் நமட்டுச் சிரிப்புடன்.

துகிலன், “ஆமாம், அப்படியே புரியப் போகுது… ஏன் அக்கா?” என்றான். 

சிங்கன், “நாளை நாங்கள் தாழைப்பாக்கத்தில் கலந்து கொள்வோம்.” என்றான்.

 

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
975 113 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page