அலை கடல் பெண்ணவள்

அலை 24

 

கார்கூந்தலுடன் மயூரியை அணைத்துக் கொண்டே நீரினில் விழுந்தான் வீனஸ். மயூரி வீனஸின் மேலே கிடந்தாள். இப்போது வீனஸ் பார்த்தான். மரத்துடன் படர்ந்த பூங்கொடியாய் அவனைச் சுற்றிக் கிடந்தாள் மயூரி.

ஆற்றின் அடிநீரில் விழுந்த இருவரும் யாருமில்லா ஏகாந்தத்தில் சஞ்சரித்த உணர்வுடன் முதல் செவ்வை இதழ்களில் தேனை உண்டனர். நீரின் பெருக்கால் மயூரிக்கு மூச்சு முட்டியது. அனிச்ச மலர்போல் சுருங்கிய மேனியைத் தூக்கி கொண்டு எழுந்தான் வீனஸ்.

வெற்றிடையில் காற்று போல இருந்தவளை சுருட்டி எடுத்து மரத்தின் வேரில் கிடத்தினான். மன்மத தேனை சுவைத்தவளோ தித்திப்பின் சுவை மிகுதியால் கிறங்கிக் கிடந்தாள்.

வீனஸிற்கு பெருமிதம் துளிர்த்தது. முன்அந்தி நேரம் தொடங்கியதால் கூதல் காற்று வீசத் தொடங்கியது. மயூரியின் உடல் நடுங்க தொடங்கியது.

எரா அப்போது கணைத்த சப்தம் கேட்டது. வீனஸிற்கு அப்போதுதான் நினைவு வந்தது ‘எராவை மறந்து விட்டேனே’ என்று.

எதிர் கரையை நோக்கியவன் அங்கே அம்பை, எரா, சிங்கன், துகிலன் நால்வரும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வீனஸைப் பார்த்ததும் தான் எரா கணைத்தது. சிங்கன் எராவிற்கு காய்ந்த நீளமான பயிர்களைக் கொடுத்துப் பசியாற்றிக் கொண்டிருந்தான்.

மயூரியைப் பார்த்த அம்பை சற்றே திடுக்கிட்டு ஓடிவந்தாள். 

“ஐயோ! என்னவாயிற்று?” என்றாள் பதற்றத்துடன். 

வீனஸ், “ஒன்றுமில்லை தண்ணீரில் நழுவிவிட்டார், நான் பிடித்துவிட்டேன்.” என்றான்.

அம்பைப் புரிந்து கொண்டு, “ஓ… சரிசரி, இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் செல்லுங்கள்.” என்றாள்.

வீனஸ், “என்ன நான் செல்ல வேண்டுமா?” என்றான் போக மனம் இல்லாமல். 

அம்பைக் கண்டிப்பான முகத்துடன், “ஆம். செல்லுங்கள் பிறகு பார்க்கலாம்.” என்றாள்.

 

வீனஸ் எதிர் திசைக்கு வந்தான். 

சிங்கன், “வாருங்கள் போகலாம். அம்பைப் பார்த்துக் கொள்வார்.” என்றான்.

மூவரும் மூதூர்ப் பொழிலை நோக்கிச் சென்றனர். மாலைநேரம் மந்தமாய் இருக்க மரங்களின் நிழல் நீளமாக விழுந்தது. மரங்களில பல பறவைகளின் சப்தங்ககள் கேட்டது.

வீனஸை நோக்கித் துகிலன் கேட்டான்.

“போர்க்களம் கண்ட வீரனே, புலிபோல் நின்ற உன் தோள்கள் இன்று மான்போல நடுங்குவதேன்? மாசி காற்றாலா அல்லது மங்கை கண் எய்திய அம்போ அது?”

வீனஸ் மெதுவாய் உரைத்தான். 

“எனது போர்வாளின் காயம் ஆறும் நண்பா, என் காதல் மங்கையின் சிரிப்பின் காயம் ஆறாது. அதுவே என் நெஞ்சம் கவர்ந்தது.” என்றான்.

அதைக் கேட்டு நகைத்துத் துகிலன் சொன்னான்.

“அப்படியெனில் வீனஸ், இனி போர் வாளை மறைத்துவிடு மயூரி சிரிப்பே போதும்

நீ போர்க்களம் வெல்ல!” என்றான்.

அதைக் கேட்ட வீனஸிற்கு கோபம் வந்தது. 

“என்ன?” என்றான். 

அப்போதுதான் துகிலனுக்கு ‘ஐயோ ஏதோ உளறி விட்டேனே’ என்றவன் சுதாரித்து கொண்டு, “ஆமாம், உன் வேதனை எனக்கும் தெரியும். சரி, நீயும் நானும் ஒரே வேதனையில் இருக்கிறோமே என்று ஆறுதல் சொல்ல வந்தால் நீ கோபம் கொள்கிறாய்.” என்றான் பாவமான முகத்துடன்.

“என்ன கிடைத்து விட்டாளா?” என்றனர் சிங்கனும் வீனஸும் சப்தமாக.

துகிலன் இருவரையும் பார்த்துக் கொண்டே, “அட ஏனப்பா! என்ன எதற்கு இந்த அதிர்ச்சி?” என்றான்.

“ஏன் எனக்கு ஒரு ரதிமுல்லை கிடைக்கமாட்டாளா என்ன?” என்றான் அவர்களின் மீது பாயும் வேங்கையைப் போல. 

வீனஸ், “அடடே துகிலா, உன்னோட ரதியைக் கண்டு பிடித்து விட்டாயா எங்கே?” என்றான்.

துகிலன் உடலைக் குறுக்கிக் கொண்டே துகிலன் மெதுவாய் சொன்னான்.

“இப்போது எங்கே இருக்கிறாள் என்று இப்போது நான் சொல்லிவிட்டால் நண்பா என் ரதியும் ஓடி மறைந்து விடுவாள். பிறகு காண்பிக்கிறேன்.” என்றான் சிங்கனைப் பார்த்துக் கொண்டே.

“காமன்விழா ஒவ்வொரு இரவும் முரசு முழங்கினாலும், குழல் இசை ஓங்கினாலும், உண்மையான காமன் விழா காட்டு மல்லிகை பித்திகையின் வாசத்தில்தான் இருந்தது.” என்பதை ஒரு பெண் மெதுவாகத் தன் தோழியிடம் சொன்னாள்.

“இங்கே பார், இந்தக் காட்டு மல்லிகைப் பூக்கள் எப்படி தெரிகிறது? காமன் விழாவிற்கு முன்னே இதோ காட்டுப் பூக்களின் புதர்கள் எங்கும் பூத்துக் கொட்டிக் கிடக்கின்றது. இதன் அரும்புகள் சிவப்பாக இருக்கிறது. ஆனால் இதன் வாசம் என் காதலன் வருகையின் அறிகுறி.” 

ஒரு இளைஞனை மனதில் நினைத்தாள். “இன்று என் அன்பைச் சொல்லாவிட்டால் இந்த வாசம் என்னைத் துரத்தும்.” 

வெள்ளை நட்சத்திரக் காட்டு மல்லிகை மலர்களும் பனித்துளி தாங்கிய நிலவொளியில் மின்னின. அந்த வாசனை காதலர்களின் மனதைத் திறந்தது. பிரிவை உருகச் செய்தது. காதலை நினைவூட்டியது.

காமன் கூத்து ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே பக்கத்திலிருந்த மூதூர்ப் பொழிலில் உள்ள மண்டபத்தில் காதலர்கள் காட்டு மல்லிகை பித்திகை அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு காதலி, தன் மேனியில் பூசி இருந்த செம்பஞ்சுக் குழம்பை அரும்பில் எடுத்துத் தன் காதலனின் மார்பில் ஓவியத்தை வரைந்து விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

பெருவீதியில் காமன் விழா களைகட்டியது. யவன விளக்குகள் உயரமாக எரிந்தன.

முரசின் ஒலி வீதியெங்கும் அதிர்ந்தது. கூத்து மேடையின் முன் மக்கள் கூட்டம் பெருகியது. அந்தக் கூட்டத்தின் நடுவே வீனஸ், துகிலன், சிங்கன் வந்து நின்றனர்.

“அடடா! இன்று மன்மதன் கூத்துபோல” என்று சிங்கன் சொன்னான்.

துகிலன் சிரித்தான். 

“அதனால்தான் இவ்வளவு கூட்டம்” என்றவன், “ஐயோ! எங்கே என் ரதிமுல்லை?” என்றான்.

சிங்கன் துகிலனைப் பார்த்து, “நானும் அப்படி யார் அந்த ரதிமுல்லை என்று புனல் விளையாட்டில் தொடங்கிப் பார்க்கிறேன். துகிலன் கண்ணில் காட்டவில்லை.” என்றான் விளையாட்டாக.

அதைக்கேட்ட வீனஸும், “ஆம் துகிலா, என் தங்கையை எனக்குக் காட்டு. நானும் இந்தக் கொற்கையில் எனக்கு நிறைய தங்கைகள் இருக்கிறார்கள் என்ற நினைவுடன் இருப்பேன்.”

அந்த நேரத்தில் மயூரியும், அம்பையும் ரதிமஞ்சரியுடனும் பணிப்பெண்களுடன் வந்து சற்று தூரத்தில் அமர்ந்தனர்.

வீனஸின் கண்கள் அந்தக் கூட்டத்தில் மயூரியைத் தேடின. சில நொடிகளில்

அவளைக் கண்டான். விளக்கின் ஒளியில் மயூரி செங்காந்தள் மலராக மின்னினாள்.

மாசி இரவு யவன விளக்கின் ஒளியில் காமன் கூத்து நடந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தின் நடுவே இரண்டு இதயங்களில் மன்மதன் அம்பு மெல்ல மெல்ல தன் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தது.

மயூரியும் ஒரு நொடி வீனஸைப் பார்த்தவள் நாணத்துடன் கண்களையும், அந்தப் பார்வையையும் தாழ்த்திக் கொண்டாள். கூட்டத்தின் நடுவிலும் அவர்களின் இதயத்தின் நரம்புகளை இணைத்தது.

துகிலன், வீனஸிடமும் சிங்கனிடமும், “அதோ என் ரதிமுல்லை!” என்று கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணைக் காட்டினான்.

அனைவரும் அந்தத் திசையை நோக்கிப் பார்த்தனர்.

ஒரு பெண்ணின் பின்னாலிருந்து மெல்ல வெளியே வந்தாள் முல்லைப்பூ போன்ற மென்மையான ஒரு மங்கை.

அவளைப் பார்த்த துகிலன் தலையைக் குனிந்து கொண்டே சிரித்தான். சிங்கன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

“இவள்தானோ உன் ரதிமுல்லை!” 

துகிலன் மெதுவாய் சொன்னான்.

“ஆமாம் நண்பர்களே! எனக்கே பூத்த ரதி முல்லை. முல்லைமலர் வாசம்போல மென்மை கொண்டவள். அவள்தான் என் ரதிமுல்லை!” என்று சொன்னவனை, 

வீனஸ், “அட துகிலா! நாங்கள் காதல் துயரத்தில் அழுகிறோம். நீயோ காதல் மலரை எங்கோ மறைத்து வைத்திருக்கிறாய். வாழ்க நீயும் என் தங்கையும்!” என்றான்.

துகிலன் பெருமையுடன் சொன்னான். 

“நண்பர்களே! போர்க்களத்தில் நான் வாளால் வெல்லலாம். ஆனால் காதலில் வெல்ல முல்லைப்பூ போல மென்மை வேண்டும்.” என்று சொன்னதைக் கேட்டதும்,

 

சிங்கன், “என்னது போர்க்களமா? துகிலா, நீ எப்போது எனக்குத் தெரியாமல் போர்க்களம் சென்றாய்? வாள் ஏந்தி போரிட்டாய்?” என்று யோசனை செய்தவனைப் பார்த்த துகிலன்,

“அட! பொறுங்கள் காவல் தலைவரே, ஏன் நான் வரவில்லையா என்ன?” என்றான் சிங்கனைப் பார்த்துக் கூர்மையான பார்வையுடன்.

சிங்கனுக்கு துகிலன் வாள் ஏந்தி போரிட்ட ஞாபகம் வரவில்லை. தலையைத் தட்டிக் கொண்டு யோசனை செய்த வீனஸிற்கு ஒன்றும் புரியவில்லை.

சிங்கன், “துகிலன் ஐயா, நீங்களே கூறிவிடுங்கள் நான் தெரிந்து கொள்கிறேன்.” என்றான்.

“இது கொற்கை தலைவனுக்கு அழகா? போங்கள் ஐயா” என்றான் பரிவான முகத்துடன்.

சிங்கன், “ஐயோ! இது அழகு இல்லைதான், எனக்கே தெரிகிறது நீங்களே சொல்லுங்கள்.” என்றான்.

“வழுவூர் போர்க்களம் ஞாபகம் இருக்கிறதா?” என்றான் துகிலன்.

சிங்கன் நிமிர்ந்து கொண்டே, “ஏன் இல்லை? இதோ என் மார்பில் உள்ள ஆழமான காயம் அந்தப் போரில் நடந்ததே, எப்படி மறக்க முடியும்? அதுசரி அந்தச் சண்டைக்கும் உனக்கும் என்ன இணைப்பு?” என்றான்.

“சிங்கா, இது சரி அல்ல, நன்றி மறப்பது நன்றன்று இது என் பூட்டி சொன்னது.” என்றான்.

சிங்கன், “ஐயா துகிலா, நான் நன்றி மறந்தது என் தவறே! விரைவாகக் கூறுங்கள்.” என்றான்.

“சரிசரி, சொல்கிறேன். அந்தச் சண்டையில் நீ ஒருமுறை உன் வாளை நழுவ விட்டீர், ஞாபகம் வருகிறதா?” என்றான். 

“ஆம், வருகிறது.” என்றான் சிங்கன். 

“அப்போது உங்கள் கைகளுக்கு எப்படி வாள் வந்தது?” என்றான்.

 

சிங்கன் யோசித்துக் கொண்டே, “எப்படி வந்தது?” என்றான்.

“ஐயா! கொற்கை தலைவரே, அந்த வாளை நானே என் கரங்களில் ஏந்தி வந்து உங்களிடம் கொடுத்தேன். எப்படி என் வீரம்? எவ்வளவு தடைகளை நான் உடைத்து உங்களிடம் வந்து அந்த வாளைச் சேர்த்தேன் தெரியுமா?” என்றவனைப் பார்த்த சிங்கனுக்கு தலைக்கு ஏறியது ஆத்திரம்.

“நீ அந்த வாளைக் கொண்டு வராமல் இருந்திருந்தால் இதோ இந்த மார்புக் காயம் எனக்கு ஏற்பட்டே இருக்காது. மல்யுத்தம் புரிந்தாவது நான் ஜெயித்து இருப்பேன். உன்னைக் காப்பாற்றப் போய்தான் இந்தவிழுப்புண் துகிலா!” என்றான்.

அதைக் கேட்ட வீனஸ், “ஆஹா ஆஹா, எப்படிப்பட்ட வீரம் துகிலா!” என்றான் வீனஸ்.

சிங்கன் வீனஸிடம், “வீனஸ், வாளை என் கையில் கொடுத்தவுடன் மூர்ச்சை அடைந்து விட்டான் இந்த வீரன். இவனைக் காப்பாற்ற நான் பட்ட பாடு இருக்கிறதே அது அந்த ஈசனுக்குத் தான் தெரியும்.” என்றான்.

துகிலன் வீனஸிடம், “நான் வாளை எத்தனை தடைகளைத் தாண்டிக் கொடுத்தேன் தெரியுமா? நான் இரத்தத்தைக் கண்டாலே மயங்கி விடுவேன்.” என்றான் சிணுங்கிக் கொண்டே.

துகிலனின் சிணுங்கலைக் கண்ட இருவருக்குமே குழந்தையாக இருந்த துகிலன் மேல் அன்பு பெருகியது. சிங்கனும், வீனஸும் துகிலனைக் கட்டிக் கொண்டனர்.

சிங்கன், “என்உயிர்தோழனடா நீ!” என்றான். 

வீனஸ், “எனது அருமை தம்பி நீயடா!” என்றான். 

துகிலனுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.

 

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
932 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page