அலை கடல் பெண்ணவள்

அலை 26

 

 

கொற்கை நகரம் முழுவதும் ஒரு விசித்திரமான அமைதியாக இருந்தது. கோவில் முன் பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் நடுவில் நிலத்தில் நன்றாக நட்டிருக்கும் ஒரு ஆலங்கிளை. அதன் அடியில் கண்களை மூடிப் பரமசிவன் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

அந்த ஆலங்கிளையை நோக்கிச் சிறிது தூரத்தில், சொக்கப்பனை போல ஒரு கூம்பு வடிவ அமைப்பு. துவரை மிளார்களால் கட்டப்பட்ட அந்தக் கூம்பின் நடுவில் மன்மதனின் உருவம் வைக்கப்பட்டிருந்தது.

இரண்டிற்கும் இடையில் ஒரு இரட்டைவாணம் கோர்த்த கயிறு கட்டப்பட்டுள்ளது. அது கயிறல்ல நிகழப் போகும் தெய்வீகப் புராணக் கதையின் ஆதாரமாகக் காத்திருக்கிறது.

மக்கள் எல்லாம் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் தீபாராதனை முடிந்தது. அதன் பின்னர் ஊரின் தெருக்களிலிருந்து ஒரு ஊர்வலம் தொடங்கியது.

சகடையில் சக்கரம் அல்லது வெள்ளை நிற யானையின் மேல் ரதி, மன்மதன் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கு முன்னால், ரதி மன்மதன் வேடமிட்ட இளைஞர்கள் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி நடந்தனர். நாதஸ்வரம் முழங்குகிறது. மத்தளம் ஒலிக்கிறது.

மக்கள் “ஹர ஹர மகாதேவா!” என்று முழங்குகின்றனர். அந்த ஊர்வலம் மெதுவாகப் பந்தலுக்குள் திரும்புகிறது. அங்கு இன்னும் பரமசிவன் தவத்தில் ஆழ்ந்திருப்பார் போல அமைதியாக இருந்தது.

அந்த அமைதியை உடைக்க மன்மதன் தயாராகிறார். மன்மதன் வேடமிட்டவர் வில்லைக் கையில் பிடித்து, மலர் அம்பைச் சிவனை நோக்கி எய்வது போல் செய்கிறார். அந்தச் சமயத்தில், மன்மதன் படத்தருகில் தொங்கும் இரட்டைவாணம் பற்ற வைக்கப்படுகிறது.

சிறுநொடியில் அது சீறியபடி ஆலங்கிளையை நோக்கிப் பாய்கிறது. அது சிவனைத் தொடும் முன், மறுபக்கம் தானாகவே பற்றிக்கொண்டு மன்மதனை நோக்கிச் சீறி வரும்.

அந்தத் தருணம் ‘சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தார்!’ என்று மக்கள் மனதில் ஒரு அதிர்ச்சியுடன பார்க்கிறார்கள்.

 

அடுத்த கணம், மன்மதன் உருவத்தின் மீது கற்பூரம் ஏற்றப்படுகிறது. அந்த ஜோதி மெதுவாக உருவத்தைத் தொடுகிறது. ஒரு கணத்தில் உருவம் பற்றியெரிகிறது. அதனைத் தாங்கி நின்ற துவரை மிளாறுகள் சடசடவென்று எரிகின்றன. அதிர்வேட்டு முழங்குகிறது. அந்தச் சத்தம் ஊர் முழுவதும் பரவுகிறது. அது ஊர்மக்களுக்கான ஒரு அறிவிப்பு “காமன் தகனம் முடிந்தது!”

மக்கள் மௌனமாக அந்த ஜோதியை காண்கிறார்கள். அந்த நொடியில் அவர்கள் நினைப்பது ஒரே ஒன்று. ஆசை மனிதனை வழிநடத்தலாம், ஆனால் அதை மீறும் தெய்வீகத் துறவு தான் சிவத்தின் மகிமை. அந்தக் கணம் காமன் சாம்பலாகிறான். காதல் உலகில் என்றும் உயிருடன் இருக்கிறது என்பதற்காகவே இந்தக் காமன் தகனத்தை நடத்துகிறார்கள்.

வீனஸ், துகிலன், சிங்கன் மூவரும் காதல் தகனத்தைப் பார்த்துத் தங்களின் காதல் துயரத்தில் ஆழந்தனர். அந்தி சாயும் நேரத்தில் காமன் தகனம் முடிந்தவுடன் வானில் பூர்ண வெள்ளி நிலா வெளியே வந்தாள்.

மாசி பௌர்ணமி ஆதலால் அவளும் மாசியாகத் தன் வெளிச்சத்தை சற்று குறைத்து ஒளிரச் செய்தாள். இந்திரவிழா முடியும் தருவாயில் இருந்த காதலர்கள் அனைவரும் மூதூர்ப் பொழிலில் கவலையுடன் இருந்தனர்.

காமன் தகனம் நிறைவடைந்த பௌர்ணமி இரவு நிலாச்சோறு என்பதனை தேரோட்டம் என்றும் நிலாப் பிள்ளைக்குச் சோறு மாற்றுதல் என்றும் நிலாச்சிக்கு சோறு மாற்றுதல் என்னும் வழக்கம் இருந்தது.

இவ்விழாவில் ஊரில் உள்ள ஆற்றங்கரை மணலில் ஒவ்வொரு குடும்பங்களும் சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து தேக்குமர இலையிலும், வாழை இலையிலும் விதவிதமான உணவுப்பதார்த்தங்களைக் கொண்டுடு வருவர்கள்.

பௌர்ணமி நிலவு முழுமையாக வெள்ளி ஒளியில் குளிர்ந்த பளிங்குபோலப் பிரகாசிக்கிறது. மூதூர்ப் பொழிலில் உள்ள தண்பொருநை நீர் மெதுவாக ஓடிக்கொண்டே, அதில் நிலாவின் ஒளி நட்சத்திரப் பரிமாணங்களைப் போல ஒளிர்ந்து கொண்டு இருந்தது. ஆற்றங்கரையின் மணல்மேல் குழந்தைகள் அலைந்து நடந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆற்றங்கரையில் சிறிய மண்ணுச் சாணத்தால் மணல் சுத்தம் செய்து, வெள்ளைக் கோலங்கள் வரைந்து, கோலத்தின் நடுவில் சிறிய விநாயகர் சிலையை வைக்கிறார்கள். சிலை மலர்கள், குங்குமம், திருநீர் மற்றும் சிறிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள் வட்டமாக அமர்ந்து, பாடி, நடனமாட ஆரம்பிக்கின்றனர். மரங்களின் காற்றோட்டம் கலந்த சப்தங்களின் இசை உருவாகிறது.

ஒவ்வொரு குடும்பங்களும் கொண்டு வந்த பருத்தித் துணியை விரித்து இது என் பகுதி இது உன் பகுதி என்று பிரித்துக் கொண்டு குழந்தைகளின் விளையாட்டுகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

பௌர்ணமி நிலாச்சோறுக்கு செய்த சிறப்பு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பல வகையான உணவுகள் கொண்டு வந்து பகிர்வது. இதுதான் “சோறு மாற்றுதல்” என்பது.

குழந்தைகள் ஒருவருக்கொருவர் சிரிப்புடன் உணவைக் கொடுக்கும்போது, ஆற்றின் நீரில் வெளிச்சம் விழுந்து ஒளிர்கிறது. நிலாவின் ஒளியோடு கலந்த மண், நீர், உணவின் வாசனை மற்றும் மலர்களின் வாசனை ஒரே நேரத்தில் மூதூர்ப் பொழில் ஆற்றங்கரை முழுவதையும் வாழ்த்தும் காட்சியாக மாற்றுகின்றது.

நிலவின் வெளிச்சத்தில் குழந்தைகள் களிமண் சிலைகளை ஆற்றில் மூழ்கடிக்கின்றனர். அவர்கள் பாடும் பாட்டு, “வாய், வயிறு கட்டி எழுப்பப்பட்ட கணேசா, நீ ஆற்று நீரில் இறங்குகிறாய் கணேசா” என்று பாடிக் கொண்டு, சிரித்துக் கொண்டே ஆற்றின் நீரில் சிலைகள் மெதுவாக மூழ்கும் ஒலியை ரசித்துக் கொண்டே விளையாடினர்.

நிலாவின் ஒளியில் பளிங்குபோல ஒளிரும் களிமண் சிலைகள், குழந்தைகளின் சிரிப்பும், நடனமும், பாட்டும் கலந்த மூதூர்ப் பொழில் ஆற்றங்கரையின் பௌர்ணமி நிலாச்சோறு விழா காட்சி ஒரு இனிமையான நினைவாக அனைவரின் மனதில் நிலாச்சோறு தேரோட்டமாகப் பதிந்து போகிறது.

அந்த இரவின் நீளத்தை அளவிட முடியாமல் தங்கள் விழாக்களைக் குழந்தைகளுக்குப் பழமை மாறாமல் சொல்லிக் கொடுத்தனர். பௌர்ணமி தென்றல் மென்மையாகத் தடவிக் கொடுத்து அவர்களைத் தாலாட்டியது.

 

***

பூமியின் மேல் பரவி நின்ற பூரண நிலவு, கொற்கை கடற்கரையின் கடலின் மீதும் வெள்ளி ஒளியாய் நீர்மேல் ஒளிர்ந்தது.

தாழைப்பாக்கத்தின் மெல்லிய மணற்கரையில் உள்ள அந்த மரத்தோணியில் செங்கன் இருந்தான். அதில் ரதிமஞ்சரி, அம்பை, மார்கழி, மயூரி கூடவே குவளையும் அமர்ந்திருந்தனர்.

மயூரி சோலையில் ஒளிரும் தனது இந்திரகோப வண்ண ஆடை அணிந்திருந்தாள். 

(இந்திரனின் அடர்நத சிவப்பு நிறம் என்பது இந்திர கோப பூச்சியின் வண்ணத்தையே இந்திர கோப வண்ணம் என்பார்கள். இந்தப் பூச்சி பட்டுப் போன்ற சிவந்த தோல் அமைப்பைக் கொண்ட மிகச்சிறிய பூச்சி. பெரும்பாலும் மழை பெய்தவுடன், மண்ணின் ஈரப்பதத்தில் (செம்மண் நிலங்களில்) இவைகளைக் காண முடியும். சித்தர்கள் இதனை இந்திர கோபம் (இந்திரனுக்கு கோபம், வல்லமை தரும் பூச்சி) என்று அழைத்தனர். இந்தப் பூச்சியின் நிறத்தை இயற்கையான சிவப்பு நிறத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். இந்திர கோப வண்ண நிறம் மனிதர்களின் இதயத்தை வசீகரிக்கும் மிகுந்த சக்தி கொண்டது)

இந்திர கோப வண்ண ஆடை முழுவதும் சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாட்டிய உடையாக இருந்தது. சிவந்த ஒளியில் பிரகாசிக்கும் ஒரு மலர்போல மயூரியின் அமைதியையும், அழகையும் வெளிப்படுத்தியது.

குவளை, மயூரி கொடுத்த நீலப்பூவார் ஆடை அணிந்து இருந்தாள். அம்பை வெள்ளை நிற பரதநாட்டிய உடையில் இருந்தாள். கைகளில் நிறைய வெள்ளித் தாம்பாளங்களில் பூஜைக்கான பதார்த்தங்களும் பூஜைப் பொருட்களும் நிறைந்து இருந்தன.

தோணி அலையில் அலை பாய்ந்தபடியே சென்றது. செங்கன் “ஏலேலோ ஐலசா… ஏலேலோ ஐலசா…” என்று பாடிக் கொண்டே படகைச் சப்தகன்னியர் தீவை நோக்கிச் செலுத்தினான்.

கொற்கையின் கடல் காற்று பெண்களைத் தழுவி அவர்களின் உடைகளையும், கூந்தலையும் கலைத்துச் சென்றது. அமைதி என்று சொல்லாமல் சொல்லியது.

கடல் அலையில் பால்நிலா வெளிச்சம் ஆழி நீரில் பிரதிபலித்து இன்னொரு பால்நிலா நீரலையில் தெரிந்தது. மயூரிக்கும், குவளைக்கும் இது முதல் தடவை அல்ல நிறைய முறை வந்து இருக்கிறார்கள். ஆனால் இன்று ஏனோ அவர்களின் இதயம் மிகுந்த கனத்துடன் இருந்தது.

சப்தகன்னியர் தீவுக் கடல் வரைபடங்களில் இல்லை. சேர்ப்பார்கள் பேசுவார்கள், “மூடுபனிக்குள் மறைந்த பெண்களின் தீவு” என்று. சப்தகன்னியர் தீவுக்குள் சென்றவர்கள் எவரும் திரும்பி வந்து வழியைக் கூறியதில்லை.

சப்தகன்னியர் தீவு ஆண்களால் வெளித்தள்ளப்பட்ட மங்கையர்கள், மறுக்கப்பட்ட உடல்கள், உடைந்த மனங்கள் எல்லாம் புதிய உருவம் பெறும் இடம் ஆகும்.

கொற்கை மணற்கரையைத் தாண்டி, தீவின் உள்ளே கற்கோவிலில் ஏழு சிலைகள் மங்கையர் வடிவில் இருந்தது. ஆனால் பார்ப்பதற்கு உயிரோடு இருப்பது போன்று, கண்கள் மூடியவாறு, முகத்தில் தவ அமைதியோடு நின்றார்கள்.

கோவிலின் பின்பகுதி நந்தவனத்தில் நீலக்குவளை மலர்கள் நிரம்பிய குளங்கள், மூலிகை வாசம் வீசும் பாதைகளுடன் நந்தவனம் வாசனைகளுடன் நிரம்பி இருந்தது. வட்டமாகக் கட்டப்பட்ட மண் மண்டபங்கள் கூடிய குளம் அது.

அங்கே காற்று கூட மெதுவாக ஊறும். அதன் ஓசை ச…ரி…க…ம…ப…த…நி… என்றே ஒலிக்கும். அலை கூடத் தீவின் கரையைத் தொடும் முன் அனுமதி கேட்கும்.

சப்தகன்னியர் தீவிற்கு வெளியே பெண்களை இறக்கிவிட்ட செங்கன், “அம்மா, சென்று வாருங்கள். நான் காத்து இருக்கிறேன்.” என்றான் அமைதியாக.

பெண்கள் சப்தகன்னியர் தீவை நோக்கி இதயம் படபடக்கப் பௌர்ணமி ஒளிப் பாதையில் நடந்தனர். சப்தகன்னியர் தீவு முழுவதும் மண்விளக்கால் தீப ஒளியை ஏற்றினர். சப்தகன்னியர் தீவு ஜொலித்தது. தூபங்களை ஏற்றித் தாங்கள் கொண்டு வந்த பொருட்களைச் சப்தகன்னியருக்குப் படைத்தனர். 

மயூரியும், அம்பையும் நாட்டியத்தை ஆரம்பித்தனர். மார்கழியும், ரதிமஞ்சரியும் தாளக்கட்டு வாசித்தனர். ஏழிசையும், நாட்டியமும் அங்கே அழகாகச் சங்கமித்தன. குவளை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். இசைகளின் முழக்கம் கடலின் மீது தெறித்து எதிரொலித்தது. நாட்டியம் முடிந்ததும் எல்லோரும் நந்தவனக் குளத்தை நோக்கி நகர்ந்தனர்.

பௌர்ணமி இரவுத் தீவை வெள்ளி நீரில் நனைத்துக் கொண்டிருந்தது.

மயூரி குளத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது அவளுக்குக் கனவுபோல ஒரு நினைவு வந்து போனது.

குளத்தின் நடுவே நின்றபோது பௌர்ணமி ஒளி எழுந்தது. ஆனால் அந்த ஒளி அவளைச் சுற்றி அல்ல குளக்கரையில் நின்ற அவளைச் சுற்றியே! 

மயூரி, “ஏன் அம்மா இந்த ஒளி என்னைச் சுற்றுகிறது?” என்றாள்.

ரதிமஞ்சரி அதைக் கண்டு மூச்சைப் பிடித்தாள்.

“இது… இது சாத்தியமே இல்லை…” என்று மெதுவாகச் சொன்னாள்.

மயூரியின் பாதத்தின் அடியில் இருந்த மணல் நீல ஒளியாக மாறியது. அவள் நின்ற இடத்தில் குவளை மலர்கள் தானாக மலர்ந்தன. மயூரி நடுங்கினாள்.

“அம்மா… என்ன நடக்கிறது இங்கே? எனக்குப் பெரும் அச்சமாக இருக்கிறது.” என்றாள்.

ரதிமஞ்சரி மண்டியிட்டு விழுந்தாள்.

 

 

அலை வருடும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அலை கடல் பெண்ணவள்
932 101 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page