அத்தியாயம் 38

பாகம் – 38

அவள் ஆதியின் முகத்தை பார்க்கிறாள் அவனோ வாங்கிக் கொள் என்கிறான். தன்னுடைய மகனை அவனிடம் கொடுத்து விட்டு குழந்தையை கையில் வாங்கிக் கொள்கிறாள் பத்மா..

அதற்குள் பூங்குழலி, “ஹையா என்னை மாதிரியே ஒரு பாப்பா வந்துட்டு .எனக்கு ஜாலிதான் .. டேய் ஆதவா இனிமே நீ அமிர்தனோட விளையாடுடா.. நான் ரோஜா பாப்பா கூட விளையாடுகிறேன்..” சொன்னதுமே ஆதியும் அரவிந்தும் நல்ல பெயர் தான் என்று நிமிர்ந்து பார்க்கிறார்கள்..

” அண்ணா பாப்பாவுக்கு ரோஜா என்றுதான் பெயர் வைக்க போகிறேன்.. உங்கள் மகள் வைத்த பெயர் தான் .. ” என்றதும் ஆதியும் ஆமாம் என தலையசைத்து சிரிக்கிறான்.. குழந்தையின்  அழகை ரசிக்கிறார்கள்..

மகள் வரவும் அரவிந்தனை கையால் பிடிக்க முடியவில்லை யாராலுமே .. வானமும், பூமியுமே அவனுடையது என்கிறான்…பெண் குழந்தை என்றதும் இன்னும் பொறுப்பாகிறான்.. அதே நேரம் அமிர்தனின் அப்பாவாய் அவனிடமும் பிரியமாய் இருக்கிறான் ..இரண்டு குழந்தைகள் இடையிலும் பாகுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்கிறான். 

மித்ராதான் இதையே சொல்லி மாய்ந்து போகிறாள்.. ” இப்படி என்று தெரிந்திருந்தால் இவனுக்கு இரண்டு வயதாய் இருக்கும் போதே நான் அடுத்த குழந்தையை பெற்றிருப்பேன்..நான் செய்த தவறினால் நம்ம இரண்டு பேருக்கும் இடையில் இத்தனை காலம் சண்டை வந்தது தான் மிச்சம் .. “அவளை அனைத்துக் கொண்டவன் அவளுக்கு தெரியாமல் தனக்குள்ளாகவே சிரித்துக் கொள்கிறான்..

‘நான் தெளிந்தது அமிர்தனின் போன பிறந்த நாளில் இருந்து தானே .. அதிலிருந்து தானே நமக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது.. நல்ல வேளை நீ எதையும் கண்டு பிடிக்கவில்லை …ஆரம்பித்து வைத்தது என்னவோ நீ தான்.. ஆனால் முடித்து வைத்தது நான் என்ற பெருமை எனக்கு இருக்கட்டும் .. எத்தனை காலமாக இருந்தாலும் நான் உங்களிடம் நம் குடும்பத்திடம் இப்படித்தான் இருப்பேன்.. இது என் மேல் சத்தியம் .., அப்படி என்ன தெரிந்து கொண்டானோ தெரியவில்லை..

மித்ராவுக்கு இப்பொழுது ஆதவனின் பிறந்தநாள் தான் ஒரு கேள்விக் குறியாக இருக்கிறது ..என்னதான் தைரியமாக இந்த வேலையை அவள் செய்ய சொன்னாலும் ஆதி அண்ணா என்ன செய்யப் போகிறார்.. இவனால் தான்  என்ன செய்ய முடியும் என்று மலைக்கிறாள்..

  தங்களுக்கும் இரண்டு குழந்தைகள் என்று ஆகி விட்டது .தேவையில்லாத ரிஸ்க்கை எடுக்க சொல்லி விட்டேனோ என்று தன்னால் முடிந்த அளவுக்கு  குடித்தனத்தையும் சிக்கனமாக செய்கிறாள் மித்ரா… ஆனாலும் பிள்ளைகளுக்கு என்ன தேவையோ அதில் மட்டும் எந்த குறைவும் இருக்காது.. 

வயிற்றில் கரு தரித்ததிலிருந்து சந்தோஷமான மனநிலையில் இருந்ததால் ரோஜா குட்டி யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்கிறாள்..

அவளின் அழகான சேட்டைகளாலும் சுலபமாக வளரும் விதத்தாலுமே ஆறு மாதங்கள் ஓடியது தெரியவில்லை ..ஒரு மாத காலம் இருக்கும் போதுதான் அமிர்தனின் ஆறாவது பிறந்தநாள் வருவதே மித்ராவுக்கு தெரிகிறது..

“ஏங்க அமிர்தனின் பூங்குழலின் பிறந்த நாளை அங்கே வைத்துக் கொள்வதாக அண்ணன் சொன்னாங்களே ..மறந்து விட போறாங்க .. ”

“அதெல்லாம் அவங்க மறக்க மாட்டேங்கடி..அப்படியே மறந்தாலும்  நம்ம போயா நினைவு மூட்டுவது ..அதுதான் ரோஜா குட்டி பிறக்கும் போது கூட சொல்லி விட்டு போனாங்களே. இன்னும் ஆறு மாதத்தில் நம்ம எல்லாரும் சந்திக்கலாம் என்று .. பிறந்த நாளுக்காக சேர்த்து வைத்ததை எடுத்து வருகிறீர்களா..”

சிறுக சிறுக மாதம் தோறும் பணம் கட்டி இப்பொழுது கிட்டதட்ட மூன்று பவுனுக்கு மேல் மதிப்பு உள்ள தங்க நாணயங்களை கொண்டு வந்து பத்திரப் படுத்துகிறான் அரவிந்த்..அதன் மொத்தவிலையை கேட்டதும் அசந்து போகிறாள்..

“ இப்போதைக்கு இவ்வளவு மொத்தமாக நம்மால் வாங்கவே முடியாது இல்லைங்க.. இப்படி சிறு சேமிப்பின் மூலமாய் செய்வதுதான் சுலபமான வழி போல.. பரவாயில்லையே நம்ம இல்லா விட்டாலும் இந்த பணத்தையும் செலவு தாங்க செய்து இருப்போம் ..இப்பொழுது பாருங்கள், இது தனியாக நகையாக சேர்ந்து இருக்கிறது.. பெரிய விஷயம் தான் ..நம்ம பாப்பாவுக்கும் இதே போல இப்பொழுது இருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் சேர்க்க தொடங்க வேண்டும்.. ”

“அது முடிந்ததுமே இதை ஆரம்பித்து வைத்து விட்டேன்டி..” என்று அந்த சேமிப்பு அட்டையினை மித்ராவிடம் கொடுக்கிறான்..

“ ஓ இது முடிந்ததுமே அடுத்தது தொடங்கி விட்டீர்களா.. திரும்பவும் சேமிக்க போகிறீர்களா.. நல்ல வேலை தான் கண்ணுக்கு தெரியாமல் சேர்ந்து விடும்ங்க.. ”

“ஆனால் ஆதி அண்ணா தான் என்ன சொல்ல போகிறார்களோ என்று தெரியவில்லை.. நான் கொஞ்சமாய் பணம் போட்டு தொடங்கி வைத்தேன்.. நீ ஏன்டா இவ்வளவு செய்தாய் என்று திட்ட போறாங்க .. ”

“அதெல்லாம் இல்லை அவங்க அதற்கு மேல் நம்ம பாப்பாவுக்கு செய்வாங்க பாருங்க ..அதான் நான் ஏற்கனவே சொன்னேனே.. இது ஒரு புலிவால் என்று…”

“ஆமாடி நீ சொன்ன போது புரியவில்லை.. இப்பொழுது தான் புரிகிறது .பரவாயில்லை நீ சொன்னது மாதிரி இது நல்ல புலி வால் தான் போ.. ” என்கிறான்..

இரவே ஆதி போன் செய்து விடுகிறான்.. “எல்லாம் தயாராக இருக்கிறது .நீங்கள் பிறந்த நாளின் ஒரு வாரத்திற்கு முன்பே புறப்பட்டு வர வேண்டியது தான் .. நான் அப்படித்தான் டிக்கெட் பதிவு செய்து இருக்கிறேன்..”

“ ஏன் அண்ணா நீங்கள் வந்தது போலவே முதல் நாள் வந்தால் என்ன. ஏன் ஒரு வாரத்திற்கு முன்பேயே டிக்கெட் போட்டீர்கள்.. எனக்கும் இங்கே வேலை இருக்கிறது தானே.. ”

“ வேலை தான் எப்போதுமே இருக்குமேடா. நான் தாமதமாக வந்ததற்கு காரணம் என்னவென்றால் சின்ன வயதில் இருந்து வளர்ந்த ஊர்.. அதனால் முதல் நாள் வந்தேன் ..நீங்கள் வந்து கொஞ்சமாவது அங்கே சுற்றி பார்க்க வேண்டாமா.. அம்மா அப்பாவை ஆசை தீர வைத்து பார்த்துக் கொண்டேன்.. உங்களைத் தான் என்னால் அப்படி அழைக்க முடியவில்லை.. ”

அலன் மூச்சு விடாமல் தன் தரப்பு நியாயங்களை கூறவுமே சரி என அரவிந்த் ஒத்துக் கொள்கிறான்..

அமிர்தனுக்கு ஏக குஷி .பிறந்த நாளை அங்கு கொண்டாடுவது என்பது இல்லாமல், ஒரு வாரத்திற்கு முன்பில் இருந்தே விடுமுறை விட்டாயிற்று என்று.. எப்பொழுது ஊருக்கு போவோம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான் …

விமான பயணம் இதுதான் முதல் முறை என்பதால் அமிர்தனுக்கு பயம் கலந்த சந்தோஷமாக இருக்கிறது .. ஆரம்பத்தில் வாந்தி வருவதாக சொல்லி எல்லோரையும் ஒரு வழி செய்து விடுகிறான் .. பிறகு தான் எல்லாருக்குமே நார்மல் ஆகிறது ..இதில் கயல் தான் கொஞ்சம் ஓவர் சீன் போடுகிறார்..ஏற்கனவே ஒரு முறை  போய் வந்தவர் என்பதால்..

“டேய் அரவிந்த் உன் முகம் ஏன்டா இப்படி இங்கு தின்ன குரங்கு மாதிரி இருக்கு.. ஜாலியா வச்சுக்கடா..கொஞ்ச நேரம் தான் இப்படி பிரட்டும். அப்புறம் கண் மூடி கண் திறக்கிறதுக்குள்ள ஊரே வந்து விடும்.. வீட்ல பெரிய பேச்சு பேசுற ..இப்படி பயப்படுகிறாயே.. ஊர் வரும் வரையும் அவனை மட்டம் தட்டிய படியே தான் வருகிறார்..

பொறுத்து பொறுத்து பார்த்தவன் கடைசியில் அம்மாவிடம் சண்டை போட ஆரம்பிக்கிறான் .. “கிழவி என்னமோ பிறந்ததிலிருந்து விமானத்தில் வந்தது மாதிரி ஓவரா சீன் போட்டுக்கிட்டு இருக்க.. எனக்கு முன்னால ஒரு முறை நீ வந்து இருக்க அவ்வளவுதானே..திரும்ப ஊருக்கு தானே வருவ. இல்ல இங்கே இருந்து விடுவியா..  வா அந்த பக்கம் உன் வாய உடைக்கறேனா இல்லையா என்று பார்.. ”

கீழே இறங்கியதுமே இவர்களை அழைத்துச் செல்ல தயாராக வந்திருந்த ஆதியின் குடும்பத்திடம் வேகமாக செல்கிறார் கயல்..பாட்டியை பார்த்ததுமே ஆதவன் தூக்க சொல்லி கையை நீட்டுகிறான்..

“டேய் பேராண்டி இருடா.. முக்கியமான ஒரு பஞ்சாயத்து இருக்கிறது.. அதை முடித்து விட்டு உன்னை தூக்குகிறேன்..” அவனுக்கு புரியவில்லை அழ தொடங்குகிறான். பிறகு அவனை வங்கி இடுப்பில் வைத்துக் கொண்டே புகார் பட்டியலை அடுக்குகிறார்..

” ஆதி தம்பி இவனை என்னன்னு கேளுங்க.. ப்ளைட் ஏறியதில் இருந்து இறங்கிய வரையும் இவன் என்னிடம் வம்பு செய்து கொண்டே வருகிறான். ” அரவிந்த் ஆதியை பார்த்து சிரித்த படியே கை கொடுக்கிறான்..

“நன்றாக இருக்கிறீர்களா அண்ணா. அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க.. ஹாய் குட்டி பசங்களா .. “அதற்குள் பத்மாவும் மித்ராவும் குழந்தைகளை மாற்றிக் கொள்கிறார்கள்..

“கிழவி வந்ததுமே பொய்யா சொல்கிறாய்.. வந்தவர்களை எப்படி இருக்கிறீர்கள் என்று கூட கேட்க நினைவு இல்லை பொய் புகார் பட்டியல் அடுக்குகிறாயா. ஏறியதிலிருந்து யார் வம்பு செய்தது என்று இந்த கிழவியிடம் கேளுங்கள் அண்ணா .. “ஆதிக்கு சிரிப்பாக வருகிறது ..

“சரி சரி நம்ம எல்லாவற்றையும் வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் வாங்க .. ”

வீட்டிற் போனதில் இருந்து இவர்கள் வம்பை பற்றி பேசவே நேரமில்லாமல் போகிறது ..ஊரில் இருக்கும் இண்டு இடுக்குகளை கூட சுற்றிக் காட்ட ஆசைப்படுகிறான் ஆதி..

அது வேறு ஒன்றும் இல்லை ..அவனுடைய அன்பினை இப்படி காட்ட முயற்சிக்கிறான்..திகட்ட திகட்ட அன்பினை ஊட்டுகிறான்..

அதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் வெளி உணவுதான்இரண்டு நாட்கள் அமிர்தன் கொஞ்சம் சிரமப்பட்டான்.. அதற்குப் பிறகு அவனுக்கும் ஹோட்டல் உணவு பிடித்து விடுகிறது.. குட்டிப் பெண் ரோஜாவைத் தவிர மற்ற மூன்று குழந்தைகளும் என்ஜாய் பண்ணுகிறார்கள்..

கயல் மட்டும் வாலை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் அரவிந்திடம் வம்பு செய்கிறார் ..

“இந்த இடத்தை எல்லாம் ஆதி தம்பி எங்களுக்கு முன்பே அழைத்து காண்பித்து விட்டது..  நீ இப்பொழுதுதான் புதிதாக வருகிறாய் ”

“ஆமாம் நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். அதனால் இப்பொழுது தான் பார்க்கிறேன்.. இதில் என்ன வந்தது கிழவி.. ரொம்ப சீன் போடாத .. ”

“உன் கிட்ட வந்து சொல்ல வந்தேன் பாரு.. என் புத்தியை எதால அடிக்கிறது என்று தெரியல. ” கயல் மகனை திட்டியபடியே செல்கிறார்..

ஊருக்கு செல்வதற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கிறது .. நாளை இந்த பசங்களின் பிறந்தநாள்.. அதற்கு மறுநாள் இரவு வரையும் தான் இங்கு இருக்கலாம் . மறுநாள் விடிந்ததுமே ஊருக்கு புறப்பட்டு விட வேண்டியது தான்.. இப்பொழுதே எல்லோருக்கும் முகம் வாடி விடுகிறது…

பத்மா மித்ராவிடம் வருத்தமாய் பேச ஆரம்பிக்கிறாள்.. “இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு போகலாம் தானே. பிறந்தநாள் முடிந்ததுமே கிளம்ப வேண்டுமா ..எவ்வளவு ஆசையாக இருக்கிறது எல்லாரையும் பார்ப்பதற்கு .. நீங்கள் போன பிறகு நாங்கள் அனாதை மாதிரி தனியாக கிடப்போம்.. ”

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page