மௌனத்தால் உடைந்த காதல் -5
கணவன் ,மனைவி இருவரும் கட்டியணைத்தபடி இருக்க.
காலிங் பெல் சத்தம் கேட்டது. சுதா வேகமாக அவனிடம் இருந்து பிரிந்து நின்று, டீ போடுவதில் மும்மரமானாள்.
இவன் வெளியே செல்ல, ஆர்டர் செய்த உணவு வந்திருந்தது.
குழந்தைகளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான். சுதா டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள். அவனின் அருகில் வைத்துவிட்டு ,குழந்தைகளை பார்க்க ஆரம்பித்தாள் .
அதன் பிறகு, இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். இருவருக்கும் இடையில் பெரிதாக எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
“நீங்க ரெண்டு பேரும் ரூம்ல போயிட்டு தூங்குங்க” என்று கூற.
எங்கு செல்வது என்று புரியாமல் திரு திருவென விழித்தனர்.
” வாங்க!” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு சென்று ஒரு அறையை காட்டினான்.
அங்கு தேவையான ஒரு சில பொருட்கள் இருக்கத்தான் செய்தது. அத்யாவசியமாக தேவையானவை மட்டும்..ஆகையால், அங்கு சென்று படுக்க வைத்து விட்டு வெளியில் வந்தான்.
அவளுக்கு ஏனோ அங்கு இருக்கவே ஒரு மாதிரியாக இருந்தது.. புதிதாக திருமணமானவள் உணரும் அசௌகரியத்தை உணர்ந்தாள்.
“கொஞ்ச நேரம் பசங்களோட நீயும் போய் தூங்கு” என்றான்..
அவளால் இப்போது எதுவும் பேச முடியாத காரணத்தினால், கிச்சனுக்குள் நுழைந்தாள் ..
“இப்போ எதுவும் செய்ய வேணாம். ஓரளவுக்கு மளிகை சாமான் வாங்கி தான் இருக்கு. மத்த திங்ஸ் தான் வாங்கணும் ஒரு சிலது கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கலாம். அவசரமானது எதுவும் கிடையாது.. அத்தியாவசியமான பொருட்கள் வாங்கி வச்சிருக்கேன். போய் ரெஸ்ட் எடு “என்றான்.
அவள் அவனைப் பார்த்துவிட்டு, அமைதியாக இருக்க.
ஒரு முறை திரும்பி பிள்ளைகளை படுக்க வைத்த ரூமைப் பார்த்தான் .
இருவரும் சிறிது நேரத்தில் உண்மையாகவே அசந்து உறங்கி இருந்தனர். இத்தனை நாட்களாக பிரிந்து இருந்த குழந்தைகள் இப்போது ஒன்றாக இருக்கவும், சந்தோஷத்தில் உறங்கி இருந்தனர். கதை பேசியப்படி,
குழந்தைகள் தூங்கிவிட்டார்கள் என்றவுடன் தன்னவளின் கையை வேகமாக பிடித்தவன் .”என்ன மன்னிச்சிடுடி !”என்று அவள் கையை நெற்றியோடு வைத்து மன்னிப்பு வேண்டினான் .
அவளிடம் அமைதியே நிலவியது.
” ப்ளீஸ் டி செத்துட்டேன் .நீ இல்லாம.. ஏன் அம்மு இப்படி பண்ற? எத்தனை நாள் கால் பண்ணேன். உங்க வீட்டு வாசலில் வந்து நின்னேன் . வீட்டுக்கு வந்து பேச கூட எனக்கு வாய்ப்பு கொடுக்காம பண்ணிட்ட..நான் பண்ணது தப்பு தான் .நான் இல்லன்னு சொல்லல.ஆன, அந்த தப்பை எப்படி சரி பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன் ..”
அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க..
“இப்படி இருக்காத அம்மு. இவ்வளவு நாள் எப்படியோ சமாளிச்சுட்டேன். ஆனா, ஒரே வீட்ல இருந்தும் நீ இப்படி மூஞ்சை திருப்பிட்டு போனா உண்மையா செத்துருவேண்டி.!” என்றவுடன் கண்களில் வழியும் நீரை கூட துடைக்க தோன்றாமல் நின்றாள்.
அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க..
“சரி நீ போய் தூங்கு!” என்று கண்களை துடைத்தவன். அவளது கண்ணீரையும் துடைத்துவிட்டான்
அமைதியாக அதை ஏற்றுக் கொண்டாள். எந்த வித எதிர்ப்பும் காட்டாமல். மேற்கொண்டு எதையும் கூற முடியாதவன் அங்கு தான் இருக்க ..
அவளோ, அமைதியாக அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தாள்.
“நான் எங்கயும் போகல. இங்கதான் இருக்கேன்.நீ போயிட்டு பசங்க கூட தூங்கு!” என்றான்..
அவனைத் திரும்பிப் பார்த்தபடி ரூமுக்குள் நுழைந்தவள். ஒரு சில நொடி நின்று, “நீங்களும் வந்து தூங்குங்க !” என்றாள்..
இதே பழைய சுதாவாக இருந்தால் ,”நீயும் வந்து தூங்கு ஆதி!” என கூப்பிட்டு இருப்பாள்.
இப்பொழுது மரியாதை கூட வந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.. எதுவும் கூறாமல் லேசாக சிரித்தவன். அவர்களுடன் வந்து படுத்துக்கொள்ள..
குழந்தைகள் இருவருக்கும் நடுவில் இருக்க. தாயும் ,தந்தையும் ஆளுக்கு ஒரு மூலையில் படுத்து விட்டார்கள்.
அடுத்த சிறிது நேரத்திலேயே குடும்பமாக இருக்கிற மகிழ்ச்சியில் நல்லா தூக்கத்திற்கும் சென்று விட்டார்கள்.
இரவு உணவிற்கு மாவு மட்டும் அருகில் சென்று வாங்கிக்கொண்டு வந்தான். இருக்கும் காய்கறிகளை வைத்து இரவு உணவு செய்து கொண்டார்கள். தோசை வார்த்து கார சட்னி அறைத்திருந்தாள்.
குழந்தைகளுக்கு ஊட்டி விட்டான். அதன் பிறகு, இருவரும் உட்கார்ந்து சாப்பிட்டவுடன் , சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது, குழந்தைகள்” அப்பா ரொம்ப போர் அடிக்குது டிவி இல்லையா?” என்றனர்.
” டிவி ஒரு ஒரு வாரம் போகட்டும் கண்ணா! அதுக்கப்புறம் வாங்கிக்கலாம் “என்றான் தன் மகனிடம் ..”சரி “என்று தலையசைத்தவர்கள். சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க ..
“போயிட்டு படிக்கிற வேல இருக்குல்ல போய் படிங்க!” என்றான்.
ஒரு சில நொடி அமைதியாக.. பிறகு ,சுதா,”நாளைக்கு பசங்க ஸ்கூல் விட்டு வந்தப் பிறகு என்ன பண்ணுவாங்க? அவங்க இங்க இருந்து ஸ்கூலுக்கு எப்படி போவாங்க ?”என கேட்டிருந்தாள்.
பிள்ளைகளையும் வைத்துக் கொண்டே தான் கேட்டாள். இருவருக்கும் அந்த கேள்வி இருக்கத்தான் செய்தது. குழந்தைகளும் ஆதியின் முகத்தை பார்க்க.
தன்னவளை ஒருமுறை பார்த்தவன்.” இங்கிருந்து ஸ்கூல் போக ஒரு ஆட்டோ ரெடி பண்ணி இருக்கேன். என் ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற கொலிக்ஸ் பசங்க அந்த ஆட்டோவுல தான் போறாங்க ,நம்ம பசங்க படிக்கிற அதே ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க, அதே மாதிரி அவரோட ஒய்ஃப் டியூஷன் எடுத்துட்டு இருக்காங்க, இங்க பக்கத்துல தான் ஒரு ரெண்டு தெரு தள்ளி அவங்க வீடு இருக்கு.
அங்க பசங்க ஈவினிங் ஸ்கூல் விட்டு வந்ததுக்கு பிறகு டியூஷன் அவங்க கிட்ட போயிப்பாங்க. ஏதும் பிரச்சினை இல்லை. விசாரிச்சிட்டேன் தெரிஞ்சவங்கதான் ரொம்ப வருஷமா என் கூட ஒர்க் பண்றவர்தான். அவங்க வைஃப் தான். சோ எதுவும் பிரச்சனை கிடையாது. சேப்பான இடம் தான் ஆட்டோலயே பசங்க அவங்க வீட்டுக்கும் போய்டுவாங்க .
ஸ்ட்ரைட்டா அங்க போயிட்டாலும் ஓகே தான். இல்ல, இங்க வந்துட்டு பிரஷ் ஆயிட்டு பசங்க அங்க போனாலும் ஓகே தான்” என அனைத்தையும் கூறி முடித்தவன். பிள்ளைகளை பார்த்தான்.
“உங்களுக்கு ஓகேவா !”என்பது போல், குழந்தைகளோ குதுகலித்தவர்கள்.” ஓகே பா! இங்க வந்துட்டு நாங்க பிரஷ் ஆயிட்டே போறோம் “என்றனர்.
” சரி” என்றவன் வேறு எதுவும் கூறவில்லை. பிள்ளைகளும் ஹோம் ஒர்க் முடித்துவிட்டு, படுத்து விட.
ரொம்ப நேரமாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் ..
அவளும் ரூமுக்குள் நுழைந்து விட.. எவ்வளவு நேரம் தான் ஹாலில் குட்டி போட்ட பூனையாக சுற்றிக் கொண்டு இருப்பது என ரூமுக்கு வந்தான்.
அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான், மெதுவாக அவளின் அருகில் சென்று,” ப்ளீஸ் அம்மு! இப்படி இருக்காது டி. ஒரே வீட்ல இருந்துட்டு, நீ என்கிட்ட முகம் கொடுத்து பேசாம தனியா இருக்கிறது, எனக்கு ஒரு மாதிரி இருக்குடி. நான் செஞ்ச தப்ப எப்படியாவது சரி பண்றேன். பண்ண மாட்டேன்னு சொல்லல. ஆனா, இப்படி என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத. அன்னைக்கு அந்த இடத்துல உன்ன விட்டுக் கொடுத்து இருக்க கூடாது ,உனக்காக பேசி இருந்திருக்கணும் என்னோட தப்பு தான். அவங்க பேசுறதை கேட்டுட்டு அமைதியா இருந்ததும் என்னோட தப்பு தான், அதுக்காக தான் இவ்வளவு நாள் தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்கேன்” அவளது கைகளை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் அவன் கைபிடித்து பேசும்போது, என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தாள். ஆனால், அவன் பேச பேச அதுவும் அவனது இறுதி வாக்கியத்தில் அன்றைய இரவு அவள் கண் முன் நிழலாட மொத்தமாக இறுகி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும் ..
அவளது உடல் மொழியே அதை எடுத்துரைக்க நிமிர்ந்து பார்த்தான் ..கண்களில் நீர் வழிய நின்றாள்.
” அம்மு!” என்றான்..
அவள் வேண்டாம் என்பது போல் கை தூக்கி காட்ட..
” ப்ளீஸ் டி!அன்னைக்கு நான் பேசாம இருந்தது தப்பு.. என்னுடைய அமைதி ரொம்பவே உன்ன பாதிச்சிருச்சு.. ஆனா ,அதுக்காக ..”என்க அவனை ஒரு பார்வை பார்த்தவள்..
அழுகையில் கரைந்தாள்.. ..
‘உன்னை நம்பி தானே அந்த வீட்டிற்கு வந்தேன். எனக்காக ஒரே ஒரு வார்த்தை பேச முடியாத அளவிற்கு போயிட்டேனா ? இத்தனை வருட வாழ்க்கையில் அப்பொழுது நான் சம்பாதித்தது தான் என்ன ?’என்பது போல் தான் இருந்தது. அவள் மனது கூப்பாடிட்டது கத்தி அழ வேண்டும் போல் இருந்தது.
அவள் அழட்டும் என்று விட்டவன். அவள் ரொம்ப நேரமாக அழுது கொண்டே இருக்கவும்,” என்கூட வா !” என்றான்..
அவள் அவனை நிமிர்ந்து ‘எங்கு ?’என்பது போல் பார்க்க.
” வாடி எல்லாத்துக்கும் என்ன இப்படியே பாக்காத. உன் பார்வை கூட என்னை கொல்லுது, உன் கண்ணுல எனக்கான காதலை மட்டும் பார்த்தவன். இப்போ முழுசா வெறும் குற்றம் சாட்டும் பார்வை மட்டும்தான் பார்க்கிறேன்.. என் மேல தப்பு இருக்க போய், தானே குற்றம் சாற்ற ..ஆனாலும் என்னால அதை சகிச்சுக்க முடியலடி.. செத்துடலாம் போல இருக்கு. உங்களுக்காக தாண்டி என் வாழ்க்கையே!” என்றவன் அவளை மெதுவாக வெளியே அழைத்துக்கொண்டு வந்தான் .
பிள்ளைகளின் தூக்கம் கெடாதவாறு கதவை லேசாக தாழிட்டவன். வெளியே தோட்டத்தில் இருக்கும் ஊஞ்சலில் அவளை உட்கார வைத்து, ஆட்டிவிட்டான். அவள் எதுவும் பேசவில்லை .அமைதியாகவே இருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவளுக்கு சிறிது இடைவெளி விட்டு அதே ஊஞ்சலில் உட்கார்ந்து அவனும் சேர்ந்து ஆடியவன். பின்பு அவளது மடியில் தலை சாய்த்தான்.
அவள் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் இருக்க ,”தூங்கலாம் அம்மு. குளிர எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. நாளைக்கு வேலைக்கு வேற போகணும் இல்ல” என அவளை அழைத்துக் கொண்டு ரூமுக்குள் நுழைந்தான் .
அவன் மட்டுமே பேசினான் இவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருந்தாலும் போகப் போக அனைத்தும் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவளை குழந்தைகளுக்கு அந்த பக்கம் படுக்க வைத்தவன்.. இவன் இந்த பக்கம் வந்து படுத்துக் கொண்டான்.
மறுநாள் விடியலில் வேகமாக எழுந்தவள் இருப்பதை வைத்து, மாவு நேற்று வாங்கிக் கொண்டு வந்தது மீதம் இருப்பதை வைத்து தோசை வார்த்து ஹார்ட் பாக்சில் வைத்துவிட்டு, சாம்பார் வைத்துவிட்டு, மதிய உணவிற்கு அனைத்தையும் வெகுவேகமாக ரெடி செய்தாள்.
சத்தத்தில் எழுந்தவன். அப்பொழுதுதான் மனைவி அரக்க பறக்க வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்தவன். என்ன “எழுப்பி இருக்கலாம் இல்ல அம்மு!” என்றான்.
அவள் பதில் சொல்லாமல் வேலையில் கவனத்தை செலுத்த. நேரம் ஆகுவதை உணர்ந்து, அவனும் எதுவும் கூறாமல் பிள்ளைகளை எழுப்பி, பள்ளிக்கு கிளப்பினான் .இருவரும் அவர்களாகவே குளித்துக் கொள்வார்கள். இருந்தாலும், எழுப்பிவிட்டு பிரஷ் செய்ய வைத்து, குளிக்க போ !என்று சொல்வது, யூனிபார்ம் அயர்ன் பண்ணி வைப்பது என்று ஒவ்வொன்றாக பார்த்தான்.
மூவரும் கிளம்பி வெளியில் வர. வெளியே அனைத்தும் ஹாலில் ரெடியாக இருந்தது. பசங்களுக்கு நேரம் ஆகுவதை உணர்ந்து ,அவர்களுக்கு ஊட்டி விடுவதில் கருத்தாக இருந்தவன்.தன்னவளை குளிக்க அனுப்பினான். அவளும் குளித்து முடித்து வர,
பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவன் .நேரமாவது உணர்ந்து இவளுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டான். அவளோ அதிர்ச்சியாக கண்களை விரிக்க.
“சாப்பிடு லேட் ஆகுது. அது இல்லாம பசங்க இருக்காங்கடி!” என்றான்.
எதுவும் கூறாமல் அமைதியாக வாங்கிக் கொண்டாள் . குழந்தைகள் சாப்பிட்டு முடித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஆட்டோ ஹாரன் சத்தம் கேட்க.
” ஆட்டோ வந்துடுச்சுடா.. டேய் ஈவினிங் வீட்டுக்கு வந்துட்டு ஃப்ரெஷ் ஆயிட்டு ரெடியா இருங்க. ஆட்டோ அண்ணன் கிட்ட சொல்லிடுறேன். அவரே உங்களை டியூஷனில் கொண்டு போய் விட்டுருவாரு. ஓகேவா..! ஒரு ஹாஃப் அன் ஹவர் கழிச்சு ஆட்ட வந்தா போதுமா ? ஸ்கூல் விட்டு வந்த பிறகு,” என்றான்..
“சரி” என்று குழந்தைகளும் கூறிய பிறகு, ஆட்டோவில் ஏற்றிவிட்டு பாய் காட்டிவிட்டு உள்ளே அவன் நுழைய..
அவனின் பின்னாலே அவளும் வந்தாள். ஆட்டோ டிரைவரின் நம்பரை அவளுக்கு அனுப்பியவன்.” இது ஆட்டோ டிரைவர் நம்பர் நோட் பண்ணி வச்சுக்கோ” என்று கூறிவிட்டு “அம்மு ஒழுங்கா சாப்பிடு. ஏதாவது வேணும்னா சொல்லுடி. என்ன இல்லைன்னு எனக்கும் தெரியல , எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வாங்கி போட்டு இருக்கேன். அப்படியே ஏதாவது உனக்கு அவசரமா தேவை என்றால் சொல்லு” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போது, வேகமாக அவள் அருகில் வந்து நெற்றியில் இதழ் பதித்து ,” என்ன வெறுக்க மட்டும் செஞ்சிடாதடி கொஞ்சம் கொஞ்சமா என் தப்பை சரி பண்ணிடுறேன்” என்றவன் வேகமாக வெளியே கிளம்பி செருப்பை மாட்டிக் கொண்டு, பசங்க கிட்ட இந்த இடத்துல சாவி வைக்கிறதா சொல்லி இருக்கேன். அந்த இடத்திலேயே வச்சுடு” என்று ஒரு இடத்தை குறிப்பிட்டு கூறிவிட்டு பறக்கும் முத்தம் ஒன்றையும் கொடுத்துவிட்டு வேகமாக கிளம்பிவிட்டான்.
அவன் பசங்களிடம் ஆட்டோ பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அவளுக்கும் இங்கிருந்து செல்வதற்கு பஸ் நம்பரை கூறிவிட்டு சென்றான் .அவனுக்கு இங்கிருந்து ஆபீஸ் ரொம்ப தூரம் அவன் சீக்கிரமாகவே சென்று லேட்டாக தான் வர நேரிடும்.
அவளின் ஆபீசுக்கு பக்கமாக வீடு பார்த்து இருந்தான். அவளுக்கு அலைச்சல் இல்லாமல் இருப்பதற்காகவே.. தன்னவனை எண்ணி யோசனையில் இருந்தவள். அவளும் வேலைக்கு கிளம்பி இருந்தாள்.
