வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 24
சமையல் ஒரு கலை. அது மனிதர்களின் விழிகள், நாசி, செவி, நாக்கு ஆகியவற்றை திருப்திப்படுத்தி உண்ண வைக்க வேண்டும். வயிற்றோடு மனதையும் நிரப்பி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும். சமையலை இப்படி சொல்லலாம். சென்சரி ஓவர்லோட் செய்யும் அளவு சமையல் இருக்க வேண்டும். அதைத் தவிர மற்ற எதையும் கவனிக்க வைக்கக் கூடாது. உங்க எதிரியையும் அப்படித்தான் வேற எதிலாவது கவனம் செலுத்த வைத்து விட்டுப் பிறகு பொறுமையாக அடிக்க வேண்டும்.
-ருத்ரசேனா.
மாலைக் கதிரவன் கண்ணாடி ஜன்னல்கள் வழியாகத் தங்க நிறக் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருக்க, அது விடுதியின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த ஆதியின் மீதும் விழுந்தது. அவன் விழிகள் அங்கும் இங்கும் தன் மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. மின் தூக்கியில் தன் மனைவியைப் பார்த்ததும் தான் கண்டது கனவோ எனச் சில நொடிகள் உறைந்து நின்றவன், மின் தூக்கியின் இரும்புக் கதவுகள் மூடியதும் உடனே நிகழ்வுக்கு வந்தவன் அது இறங்கும் தளத்தைப் பார்த்தான்.
தரைத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. உடனே வேகமாகப் பக்கத்தில் இருக்கும் மின் தூக்கியை அழுத்த அதில் ஆட்கள் இல்லை. உடனே மாடிப்படியை நோக்கி ஓட ஆரம்பித்தான். வேக வேகமாக இறங்க வியர்த்து வழிய தரைத்தளத்தில் நின்றான். அங்குத் தன் மனைவியைத் தேடியவனுக்கு மின் தூக்கி மேலே சென்றதற்கு அறிகுறியாக அது சிவப்பு நிறத்தில் காட்டியது. தன் மனைவி இங்குதான் இருக்கிறாள் என்று அவன் மனம் அடித்துக் கூறியது. அவளைக் கண்டுபிடித்து அவளுடன் வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையும் மனதில் உதித்து வளர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் மனைவியோ சிவகாமினியுடன் அலுவலகத்தில் அமர்ந்து நீர் பருகிக்கொண்டிருந்தாள்.
“மெதுவாகக் குடிங்க அக்கா.” எனக் காமினி மெல்ல முகியின் தோள்களைத் தட்டினாள்.
அவளுமே, மின்தூக்கியின் கதவு மூடும்போது ‘முகி’ என்ற ஆடவன் அழைத்த குரலைக் கேட்டிருந்தாள். அதுமட்டுமின்றி ஆதி மனோகரனின் புகைப்படத்தை ஒருதடவை பார்த்திருக்க, காமினிக்கு வந்தது முகியின் கணவன் எனத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து போயிருந்தது.
“காமினி, அவ…ர் இங்க… என்னைத் தேடி…”
அப்போது அபிதா காமினியின் கைப்பேசிக்கு அழைத்தார். காமினி அழைப்பை எடுத்துப் பேசினாள்.
“அக்கா, அபிதாம்மா உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க.” எனக் கைப்பேசியை நீட்ட, முகி அதை வாங்கி காதில் வைத்தாள்.
“சொல்லுங்க மேம்.”
“நேத்து உன்னோட ஹஸ்பண்ட் உன்னைத் தேடி வந்திருந்தார். உன்னோட அட்ரஸ் தரச் சொல்லிக் கேட்டார். நான் கொடுக்கலை. நேத்தே உங்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள சொந்தத்தில் ஒரு டெத். உனக்கு இன்ஃபார்ம் பண்ண முடியலை.”
முகிக்கு வார்த்தைகள் தடுமாறியது.
“முகி, நீ அவர்கிட்ட ஒருதடவை பேசி உனக்குத் தேவையானதைச் சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் நான் அவரோட சைடும் கேட்டேன். நீ ஒருதடவை அவரைச் சந்திக்கிறது நல்லது. அப்படியும் உனக்கு விருப்பமில்லைன்னா நாம டைவர்ஸ் கேஸை ப்ரொசீட் பண்ணிக்கலாம். பட் ஒரு சான்ஸ் குடுத்துப் பாரு. மத்த வக்கீல் மாதிரிக் காசு குடுத்தால் பிரிச்சு விட எனக்கு விருப்பமில்லை. இரண்டு பேருக்கும் உண்மையான காதல் இருந்து, மத்தவங்க அதுக்குத் தடையாய் இருந்தால் அதைத் தாண்டி வொர்க் அவுட் பண்ணினால் நிம்மதியாக வாழலாம். தைரியமாக இரும்மா. அவரை மீட் பண்ண விருப்பம் இருந்தால் சொல்லும்மா.”
“மேம், அவரை இந்த ஹோட்டலில் பார்த்தேன். என்னைத் தேடி வந்தாரா? இல்லை இங்க தங்கி இருக்காரான்னு தெரியலை மேம்.”
“ஓ… இட்ஸ் ஓகே. காமினிகிட்ட கேளு. பார்த்துச் சொல்லுவா. உனக்கு சேஃபா இல்லைன்னா நீ என்னோட வீட்டுக்கோ இல்லை காமினி வீட்டுக்கோ கூட வந்திடலாம்.”
“இல்லை மேம். அதெல்லாம் பிரச்சினை இல்லை.”
“சரி, காமினிட்ட குடும்மா.” காமினி அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்தாள்.
அபிதா கூறியதும், தன் கணவனின் உயிரைத் தீண்டும் அழைப்பும், சற்று முன் பார்த்த அவனின் தோற்றமும் முகியின் மனதை அலைப்புறச் செய்தது. எப்போதும் சுத்தமாக முகத்தைச் சவரம் செய்து வைத்திருப்பவன் தாடியுடன், கண்களுக்குக் கீழே கருவளையத்துடன் விழிகளில் சோகத்துடன் காட்சி அளித்தான்.
தலையைப் பிடித்தபடி முகி அமர்ந்து கொண்டாள்.
அழைப்பைத் துண்டித்த காமினி உடனே தன்னுடைய கையடக்க கணினியை எடுத்து விடுதியின் மென்பொருளின் தேடுபொறியில் ஆதி மனோகரனின் பெயரைத் தேட, அது அவன் இருக்கும் அறை எண்ணைத் துப்பியது.
“அக்கா, ஆதி நேத்து ஈவினிங் செக் இன் பண்ணி இருக்கார்.”
அதோடு ஆதி வந்ததிலிருந்து தன் அறைக்குச் செல்லும் வரை பச்சைத் தண்ணீர் போல் தெரியும் அந்தச் சிசிடிவி ஃபுட்டேஜைக் காட்ட, அதில் ஆதியின் முகபாவனை தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
“அவர் முகத்தில் ஸேட்னஸ் மட்டும்தான் இருக்கு. உங்க மேல் வயலன்ட்டா எந்த இன்டென்ஷனும் இருக்குற மாதிரி இல்லை. மத்தவங்க முன்னாடி ஸேட் எக்ஸ்பிரசன் காட்டினாலும், தனிமையில் உண்மையான முகம் கொஞ்சமாவது வெளிப்படும். ஸோ நீங்கத் தைரியமாக மீட் பண்ணலாம். அபிம்மா வழக்கமாக இந்த மாதிரி பொண்டாட்டியைத் தேடி வரப் புருஷன்களை நம்ப மாட்டாங்க. ஏன்னா நல்லவிதமாகப் பேசி அட்ரஸ் வாங்கிட்டு, வைஃபை ஹர்ட் பண்ண டிரை பண்ணுன ஆம்பளைங்க அதிகம். ஸோ சேஃப்டிக்கு செக் பண்ணிட்டேன். உங்களுக்கு இன்செக்யூரா ஃபீல் ஆச்சுன்னா நம்ம வீட்டுக்குப் போயிடலாம். ஆனால் அபிம்மா உங்களை மீட் பண்ணச் சொல்றாங்கன்னா நீங்க நம்பி மீட் பண்ணலாம்.”
காமினி கூறியதும் முகியின் முகத்தில் விரக்தியான புன்னகை ஒன்று எழுந்தது.
நம்பி தனக்கு வாழ்க்கை முழுக்க இதுதான் உறவு எனத் திருமணம் செய்தால் அவர்களை விட்டே பாதுகாப்பென ஓட வேண்டிய நிலையும் சில பெண்களுக்கு இருக்கிறது என்ற அவல நிலையும் இன்னும் இருக்கிறதே! என்பதை நினைத்துதான் முகி புன்னகைத்தாள்.
அதை வாய்விட்டே கூறியும் விட்டாள்.
காமினி அவள் தோளைத் தட்டிக் கொடுத்தாள்.
“இதுவரைக்கும் ஆதி உங்களை எங்காவது கை ஓங்கி இருக்காரா அக்கா?”
“இல்லை காமினி. ஒருதடவை கூட என்னைக் கோபமாகக் கூடத் திட்டுனதில்லை. ஏதாவது கோபம் வந்தாலும் அமைதியாக வெளியே போயிடுவாரு. மட்டம் தட்டிப் பேசுனது இல்லை.”
“ஓ… செம கிரேட்!”
அதற்குள் காமினியின் கைப்பேசி அழைத்தது.
எரிச்சலுடன் “சொல்லு ருத்ரா.” அவன் பேசியதைக் கேட்டவள், “சரி உடனே வரேன்.” என்றாள்.
முகிக்கும் காமினிக்கு வேலையெனப் புரிந்தது.
“அக்கா, இங்கேயே இருந்து என்ன செய்யறதுன்னு யோசிங்க. நான் கிட்சன் வரை போயிட்டு வந்திடறேன். அப்புறம் சாப்பிடப் போலாம்.”
முகி தலையசைக்க, காமினி தன் அறையை விட்டு வெளியேறி மின் தூக்கியில் முதல் தளத்தில் இருக்கும் சமையலறையை நோக்கிச் சென்றாள். செல்லும்போது உணவுப் பொருட்களின் நறுமணம் நாசியைத் துளைத்தது.
அங்கு வெண்ணிற உடையுடன் சமையல் மேடையில் சாய்ந்தபடி ருத்ரசேனா நின்று தன் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் பின்புறத் தோற்றத்தினைப் பார்த்தபடி காமினியும் உள்ளே சென்று தொண்டையை தான் வந்ததற்கு அறிகுறியாகச் செருமினாள். ஆனால் அவள் வருமுன்னே அவளுடைய பர்ஃப்யூம் அவன் நாசிகளைத் தீண்டி அவள் வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிவித்திருந்தது.
சமையலறையில் யாருமில்லை. அனைவரும் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றிருந்தனர். ருத்ரா மட்டுமே இருந்தான்.
காமினியைத் திரும்பிப் பார்த்தவன் முகத்தில் லேசான புன்னகை.
“சொல்லு ருத்ரா. மெனு ரெடியா?”
“யெஸ். அதோட காம்பிளிமெண்டா இதைக் குடுக்கலாம்னு நினைக்கிறேன்.” என இதுவரை அரைவட்ட பாத்திரத்தில் மூடி வைத்திருந்த தட்டைத் திறந்தான்.
காமினியின் விழிகள் விரிந்தது.
“ஹே சூப்பர்! இந்தச் சர்ப்ரைஸ் மாயாவுக்கு ரொம்ப பிடிக்கும்.”
“டேஸ்ட் பண்ணு.”
காமினி தன்னுடைய கையடக்க கணினி கைப்பேசியென அனைத்தையும் சமையல் மேடையில் காலியாக இருக்கும் இடத்தில் வைத்தவள் அப்படியே பின் பக்கம் கைகளால் பிடித்து மேடையில் அமர்ந்து கொண்டாள். காலையிலிருந்து அங்கும் இங்கும் அலைந்திருந்தவளின் உடலும், காலும் ஓய்வுக்கு ஏங்கியது. உணவு என்று வந்ததும் அமர வேண்டும் என ஏறி அமர்ந்து கொண்டு தட்டையும், கரண்டியையும் எடுத்துக் கொண்டாள்.
வரிசையாகச் சில உணவும், இனிப்பும் இருந்தது.
ஒவ்வொன்றாகச் சுவைக்க ஆரம்பித்தாள். அவள் முகம் கொடுக்கும் ஒவ்வொரு பாவனைகளையும் பார்த்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ருத்ரா.
கடைசியாக ஒரு இனிப்பை வாயில் சுவைத்தபடி தட்டைக் கீழே வைத்தவள் ருத்ரனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு தன் இதழ்களைப் பார்த்துக் கொண்டிப்பவனின் இதழ்கள்மீது தானாகப் பார்வை சென்றது. காமினியின் இதயம் கண நேரத்தில் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து இருந்தது.
“எனக்கு ஸ்வீட் தரவே இல்லை.” ருத்ராவின் குரல் மென்மையாக ஒலிக்க, விழிகள் விரிய அவனைப் பார்த்தவளை மோதியது அவன் இதழ்கள்.
“ம்ம்…” என அவள் பேச முயற்சிக்க ருத்ரா அவளுக்குப் பேசும் வாய்ப்பைத் தராமல் இதழ்களைச் சுவைத்திருந்தான். அவன் வேகத்தில் தடுமாறியவளின் காலணிகள் தரையை தொப்பென்று சத்தத்துடன் தஞ்சமடைய, காமினியும் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அவள் மூளை ஸ்தம்பித்தாலும் இதழ்கள் என்னவோ அவனுக்கு எதிர்வினை புரிந்து கொண்டிருந்தன. கைகள் இரண்டும் ருத்ரனின் கழுத்தை வளைத்துப் பிடித்திருக்க, சமையலறையின் வெப்பமோ அடுப்பெரியாமலே உயர்ந்தது போன்றிருந்தது.
சில நிமிடங்கள் அவன் தாக்குதலுக்கு ஈடுகொடுத்தவளுக்கு, யாரோ பேசிக் கொண்டே வரும் சத்தம் காதில் கேட்டது. உடனே ருத்ராவும் சற்று விலக, அவனைத் தள்ளியவள் சட்டென்று சமையல் மேடையிலிருந்து குதித்தாள்.
தன் காலணிகளை அணியாமல் அங்கிருந்து உடனே ஓட முயல, அவள் கைகளைப் பிடித்து நிறுத்தினான் ருத்ரசேனா.
“நில்லு சிவகாமி.” கட்டளைபோல் ஒலித்தது அவன் குரல். அவன் குரலில் உறைந்தவள் யோசிக்கும் முன் அவளை மீண்டும் தூக்கி சமையல் மேடையில் அமர வைத்திருந்தான்.
அவள் அமர்ந்திருக்க, எதிர்புறம் நின்று இரு கைகளாலும் அணைகட்டி அவளை ஒருமுறை பார்த்தான். சிவந்த உதடுகளின் சாயம் அவன் உபயத்தால் இலேசாகத் தாடையில் தீட்டியிருந்தது.
மூச்சு வாங்க, விழிகளில் பரிதவிப்புடன் அமர்ந்திருந்தவளை ஏறிட்டான்.
“ரு…த்…ரா…”
“உஷ்…” என வலது கையின் ஆள்காட்டி விரலை அவள் உதட்டில் வைத்து மிரட்டினான்.
கீழே குனிந்து அவளுடைய காலணிகளை எடுத்தவன் இரண்டு கால்களிலும் மாட்டி விட்டு, அதன் வெல்குரோ அமைப்பைப் பின்னால் ஒட்டிவிட்டான். தன்னுடைய கைக்குட்டை ஒன்றை உடையிலிருந்து எடுத்தவன், அவள் முகத்தைச் சுத்தம் செய்தான்.
அவன் செய்யும் ஒவ்வொன்றையும் என்ன செய்வதென்று என அறியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காமினி. முத்தம் கொடுத்தால் கூட அடித்து விடலாம். ஆனால் இப்படி நடந்து கொள்பவனை எப்படி எதிர்கொள்வது என அவளுக்குத் தெரியவில்லை. அவனுடைய செய்கைக்கான அர்த்தத்தை அவள் மூளை புரிந்து கொள்ள முயன்றது.
‘ருத்ரா ஏன் இப்படி எல்லாம் செய்யறான்?’ என்ற கேள்வி மூளைப் பிரதேசத்தைத் துளையிட ஆரம்பித்தது.
அவளை இறக்கிவிட்டு, அவளுடைய பொருட்களை எடுத்துக் கையில் கொடுத்தான்.
“நீ…”
“நான்…”
“ஏன் இப்படி செய்யற ருத்ரா? இதுக்கு என்ன அர்த்தம்?” ஒரு வழியாகக் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டாள்.
ருத்ரன் என்ன பதில் கூறி இருப்பான்?
*****
