“அவ கெட்டவ.. ஒழுக்கம் இல்லாதவ.. அருவருப்பானவ.. இது எல்லாமே அவ மட்டும் தானா? அவ அந்த இடத்துல இருந்து வந்துவனு உங்களுக்கு எப்படி மாமா தெரியும்?” என்றான் எள்ளலாக.
“அது.. அது வந்து.. எனக்கு..” என்று அவர் தடுமாறவும்.
அவரைப் பார்த்து இகழ்ச்சியாக தன் இதழை வளைத்தவன், “ஏன்னா, அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போய் உங்களுக்கு நிறையவே பழக்கம் இருக்கு. அதனால தானே?”.
“யஷ்வந்த்!” என்று உச்ச ஸ்தானத்தில் கத்தி இருந்தார் காஞ்சனா.
“எனக்கும் இப்படித்தான் அத்த இருக்கு, என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசும் போது. இதே போல தான் எனக்கும் கோபம் வருது. சுர்ருனு உச்சி மண்டையில யாரோ அடிக்கிற போல அவ்வளவு ஆத்திரம் வருது.
ஆனாலும், உண்மையை சொல்லி தானே ஆகணும். இவர் தான் ரொம்ப யோக்கியமானவராச்சே.. என் பொண்டாட்டி தப்பான இடத்திலிருந்து வந்தானு இவருக்கு எப்படி தெரியும்னு கேட்டு சொல்லுங்க” என்று காஞ்சனாவை நேர் பார்வைப் பார்த்து அவன் கேட்கவும்.
காஞ்சனாவின் விழிகள் தன் கணவனை தான் தஞ்சமடைந்தது.
“எனக்கு எப்படி தெரிஞ்சா உனக்கு என்ன? அவ தப்பானவ தானே.. அது ஒண்ணும் தப்பில்லையே.. நான் சொன்ன விஷயம் சரிதானே.. இவ்வளவு தூரம் நான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்னா.. அது என் தங்கச்சியோட குடும்பத்துக்காக மட்டும் தான். என் கண்ணு முன்னாடியே அவளுடைய குடும்பம் இவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறத தாங்கிக்க முடியாம ஆதங்கத்தோட நான் பேசிட்டு இருக்கேன். நீ என்னடான்னா என்னையே கேள்வி கேக்குறியா?”.
“உங்களுடைய ஆதங்கம், வருத்தம் எல்லாமே எனக்கு புரியுது மாமா. என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்னே ஒன்னு தான். என் பொண்டாட்டிய கெட்டவனு சொல்றீங்க இல்ல.. ஒழுக்கம் இல்லாதவனு சொல்றீங்க இல்ல.. அந்த இடத்துல வளர்ந்த ஒரே காரணத்துக்காக அவ ஒழுக்கம் இல்லாதவனா.. அந்த இடத்துக்கு சுகத்துக்காக போயிட்டு வர நீங்க ரொம்ப ஒழுக்கமானவரா?”.
அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அய்யனாரைக் கூனிக் குறுகச் செய்தது. அதிலும், தன் மனைவி, மகள் முன்பு அவன் இப்படி கேட்டு விடவும் பதறிப் போய்விட்டார்.
“ஏய்.. ஏய்.. என்ன பேசுற நீ?”.
“நான் சொன்னது சரி தானே? அந்த இடத்துக்கு நீங்க போக வர இருந்ததால தானே பவித்ரா அந்த இடத்தில் வளர்ந்த பொண்ணுன்னு உங்களுக்கு தெரிஞ்சுது?”.
அவனின் கிடுக்குப் பிடி கேள்விக்கு பதில் உரைக்க முடியாமல் முகம் சிறுத்துப் போய் பதறிய அய்யனார்.
“ச்ச.. குடும்பமா இதெல்லாம்? தங்கச்சி குடும்பமாச்சேன்னு பாவம் பார்த்து நல்லது பண்ண நினைச்சேன் பாத்தியா, எனக்கு இந்த வீண்பழி எல்லாம் தேவை தான். இவள பார்க்கும் பொழுதே எங்கேயோ பார்த்த போலவே இருக்கேனு மனசுல அடிச்சுக்கிட்டே கிடந்தது.
ஆனா, எங்கன்னு ஞாபகம் வரல. யோசிச்சு யோசிச்சு இவள எங்க பார்த்தேன்னு கண்டுபிடிச்சு உன் குடும்ப நல்லதுக்காக சொன்னேன் பாத்தியா.. அதுக்கு உம்மவன் எனக்கு நல்ல பேரை கொடுத்துட்டான் மா. இப்படி ஒரு அசிங்கம் புடிச்சவ இருக்க வீட்டுல இனி என் கால் படாது” என்று தன் தங்கையிடம் கூறியவர்.
அவரின் கணவரை பார்த்து, “நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க மச்சான். முதல்ல இந்த பொண்ண அடிச்சு விரட்டி விடுற வழிய பாருங்க. நெனச்சு பார்க்கவே உடம்பெல்லாம் கூசுது. அந்த மாதிரி இடத்துல இருந்து வந்தவ நம்ம வீட்டு மருமகளா… ஏய் காஞ்சனா, புள்ளையை கூப்பிட்டு வா கிளம்புவோம்” என்று விறு விறுவென வெளியேறி விட்டார்.
யாருக்கும் அவரை தடுக்கக் கூட தோன்றவில்லை.
ஏதோ புயல் அடித்து ஓய்ந்தார் போல் அப்படி ஒரு அமைதி. அனைவருக்கும் நடந்ததை ஜீரணிக்கவே சற்று நேரம் தேவைப்பட்டது.
பவித்ராவிற்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. கூனிக்குறுகி அறைக்குள் செல்ல முற்பட்டவளை தடுத்திருந்தது பரமேஸ்வரியின் வார்த்தைகள்.
“ஏய் நில்லுடி!” என்றவரின் வார்த்தையில் திடுக்கிட்டு அவள் அறை வாயிலிலேயே சுவற்றோடு ஒன்றி நின்று விடவும்.
“என் அண்ணன் சொன்னதெல்லாம் உண்மையா?”.
“அம்மா..” என்று யஷ்வந்த் எதுவோ கூற வரவும்.
அவனின் முன்பு தன் கையை உயர்த்தி பேசாதே என்பது போல் தடுத்தவர். பவித்ராவை பார்வையாலேயே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டே, “என் அண்ணன் சொன்னதெல்லாம் உண்மையானு கேட்டேன்” என்றார் கத்தியவாறு.
அவரின் கத்தலில் பவித்ராவின் உடல் தூக்கி வாரிப் போட, “ஆ.. ஆமா..” என்றதும், அவளின் கன்னத்தில் இடியென இறங்கி இருந்தது பரமேஸ்வரியின் கரம்.
இதை யாருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவரின் செயலில் நிலை தடுமாறி கீழே விழச் சென்ற பவித்ராவை தாங்கிப் பிடித்திருந்தான் யஷ்வந்த்.
“மா என்ன பண்றீங்க நீங்க?”.
“ச்சீ.. என்னை அப்படி கூப்பிடாதடா! இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கியே உனக்கு அசிங்கமா இல்ல. ஏய், அப்படி ஒரு இடத்துல இருந்துட்டு வந்து என் பையன கல்யாணம் பண்ணிட்டு அவனோட குடும்பம், கல்யாணம்னு வாழ ஆசைப்படுறியே உனக்கெல்லாம் உடம்பு கூசல. நீ எல்லாம் என்னடி பொண்ணு?” என்று வார்த்தைகளாலேயே குத்திக் கிழித்தார் பவித்ராவை.
“அம்மா ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் எல்லாரும் ஒரு நிமிஷம் கேளுங்க. பவித்ரா தப்பானவ கிடையாது. முதல்ல என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா.. நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் நீங்க என்ன முடிவு வேணாலும் எடுங்க. தயவு செஞ்சு என்னை கொஞ்சம் பேச விடுங்க”.
“இருங்கம்மா அவன் என்ன சொல்றான்னு கேப்போம். நீ சொல்லுடா அப்படி என்ன சொல்ல போற?” என்று சேரனும் அவனுக்கு சற்றும் சளைக்காத கோபத்தில் கேட்டான்.
பவித்ராவை பார்த்துக் கொண்டே அனைத்தையும் கூறத் துவங்கினான் யஷ்வந்த்.
****
எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்பது போல் கருமேகங்கள் சூழ்ந்திருக்க. அண்ணாந்து பார்த்தவன் தன் வண்டியை ஒரே அழுத்தில் உயிர்ப்பிக்கவும்.
சடாரென அவன் அருகில் மற்றொரு நண்பனாகிய சாரதியை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கே வந்து நின்று இருந்தான் சுதாகர், யஷ்வந்தின் உயிர்த்தோழன்.
யஷ்வந்த், சுதாகர், சாரதி இவர்கள் மூவரும் சிறு வயது முதலே ஒன்றாகப் படித்து முடித்து, இப்பொழுது ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மற்ற இருவரையும் விட யஷ்வந்த் சற்று திறமையானவன். மற்ற இருவரையும் விட சம்பள உயர்வும் அவனுக்கு தான். ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.
வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டத்தையும் அவன் சந்தித்தது கிடையாது. இப்பொழுது தான் வீட்டில் அவனுக்கு பெண் பார்க்கும் படலமும் துவங்கியிருக்கின்றனர்.
எனவே, எந்த ஒரு கஷ்டமோ, கவலையோ இன்றி தன் வாழ்க்கையை தன் போக்கில் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆறடி ஆண் மகன்.
“என்னடா கிளம்பிட்டியா?” என்ற சாரதியை முறைத்த யஷ்வந்த், “பார்த்தா எப்படி தெரியுது? இங்கேயே பாய் போட்டு படுக்கப் போற மாதிரியா தெரியுது?” என்றான் கிண்டல் கொப்பளிக்க.
“ஏன்டா சும்மா ஒரு பேச்சுக்கு கேட்க கூடாதா டா?”.
“ஒரு பேச்சுக்கு கிளம்பிட்டியான்னு கேட்டா.. அப்போ ரெண்டு பேச்சுக்கு என்ன கேட்ப?” என்றவாறு யஷ்வந்த் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கவும்.
தன் தலைக்கு மேல் கை எடுத்துக் கும்பிட்டவன், “ஐயா சாமி, தெரியாம உன்கிட்ட வாயை விட்டுட்டேன். இன்னைக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்க போலருக்கே”
சட்டென்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த யஷ்வந்த் தன் பற்களை கடித்துக்கொண்டு, “லூசு மாதிரி பேசாதடா. அதெல்லாம் எனக்கு சரி வராது. நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீ எக்கேடோ போய் தொல”.
“என்னடா இப்படி சொல்லிட்ட? நீ நிச்சயம் வருவனு நான் சாரதி கிட்ட சொல்லி கஷ்டப்பட்டு அவனையும் வர வச்சிருக்கேன். ப்ளீஸ் டா, ஒரே ஒரு தடவை.. எங்களுக்கு மட்டும் முன்ன பின்ன இதெல்லாம் பழக்கமா என்ன?” என்ற சுதாகரை முறைத்துப் பார்த்த யஷ்வந்த், “பழக்கம் இல்லல்ல.. அப்புறம் எதுக்கு இப்படி படுத்துற என்னை?”.
“டேய் இதெல்லாம் வாழ்க்கையில ரொம்ப முக்கியம் டா” என்றவனோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “நாளை பின்ன கல்யாணத்துக்கு பிறகு ஒன்னும் தெரியாம பொண்டாட்டி முன்னாடி முழிச்சா அது நமக்கு எவ்வளவு அசிங்கம்? அப்படி இதுல என்ன தான் இருக்குன்னு நாம தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று கிசுகிசுப்போடு சாரதி கூறவும்.
“எனக்கு என்னவோ இதெல்லாம் சரின்னு தோணல. அதோட எனக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்ல. எதுவா இருந்தாலும் நான் கல்யாணம் பண்ணி என் பொண்டாட்டி கூட சேர்ந்தே கத்துக்குறேன்” என்றான் யஷ்வந்த் தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டி சிரித்தவாறு.
அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்த சாரதியும், சுதாகரும் ஒருவரை மற்றொருவர் பார்த்தவாறு, “டேய், இவனுக்கு ஏதோ பிரச்சனை போலருக்கு டா. அதான் நம்மகிட்ட இருந்து எஸ்கேப் ஆக பார்க்குறான். நீயும், நானும் அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு எவ்வளவு இன்ட்ரஸ்டா இருக்கோம். அந்த ஆர்வத்துல பாதியாவது அவன் மூஞ்சில இருக்கான்னு பாரு.. எனக்கு என்னமோ இவனுக்கு எங்கேயோ அடிபட்டு பியூஸ் போயிடுச்சுன்னு நினைக்கிறேன்” என்று அவனை சந்தேகப் பார்வை பார்த்துக்கொண்டு கூறினான் சுதாகர்.
“சாவடிச்சிடுவேன் டா நாயே.. யாரைப் பார்த்து என்ன சொல்ற? அதெல்லாம் எல்லா பார்ட்டும் சரியா தான் ஒர்க் ஆகுது” என்று யஷ்வந்த் திட்டியதும்.
பைக்கில் இருந்து இறங்கிய சாரதி அவனின் தோளில் கையை போட்டவாறு, “எல்லா பார்ட்டும் சரியா வேலை செய்யுதானு செக் பண்ண தானே அங்கே போறோம். அப்புறம் ஏன் மச்சான் இப்படி அடம் பிடிக்கிற? நாங்களும் உன்ன மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத ஆளுங்க தானே.. சேர்ந்து கத்துப்போம்” என்றவாறு வரமாட்டேன் என்று மறுத்தவனை வம்படியாக இழுத்துக்கொண்டு அவ்விடம் நோக்கி சென்று இருந்தனர்.
அவர்கள் அங்கே சென்று சேரும் பொழுது மணி எட்டை கடந்திருந்தது.
அனைவரும் அவரவர் வீட்டிற்கு தொடர்பு கொண்டு மாற்றி மாற்றி நண்பர்களின் வீட்டில் இன்றைய இரவு தங்கப் போவதாக கூறிவிட்டனர்.
எனவே, வீட்டில் எந்த ஒரு கெடுபிடியும் இல்லை.
ஆனாலும், யஷ்வந்துக்கு தான் மனம் சற்று நெருடலாகவே இருந்தது.
சாரதிக்கும், சுதாகருக்கும் கூட இது புது அனுபவம் தான். ஆனாலும், அவர்களிடம் எதையோ புதிதாக தெரிந்து கொள்ளப் போகும் ஆர்வம் நிறையவே இருந்தது.
ஆனால், யஷ்வந்திடம் அந்த ஆர்வம் கூட இருப்பது போல் தோன்றவில்லை.
‘ராணி இல்லம்’ என்ற பெயர் பலகை வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது அவ்வீட்டின் வாசலில்..
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,…