துணிக்கடையில் கவிதா ஒவ்வொரு புடைவையாய் எடுத்து மதுமதியின் மீது போட்டு பிடிச்சு இருக்கா? எனக் கேட்க, அவள் விக்னேஷிடம் கண்களாலேயே கேட்க,விக்னேஷ் இல்லை என்று தலையாட்ட, அவளும் கவிதாவிடம் பிடிக்கவில்லை என்று கூற ஒரு கட்டத்தில் கவிதா இதை கவனித்து விட்டு, மது, நீ போய் விக்னேஷ்யை கூட்டி வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து புடவை தேர்வு செய்யுமா, என்னை ஆளை விடு என்று அவள் நகர்ந்துக் கொள்ள, விக்னேஷும் அவள் அருகில் வந்து அவளுக்கு பொருத்தமான ஆரஞ்சு வண்ண நிறத்தில் ஆங்காங்கே சரிகையில் மயில் வைத்து ஓரத்தில் கோபுர வடிவில் பார்டர் போட்டிருந்த சேலையை எடுத்து அவள் மீது வைக்க, அது அவளுக்கும் பிடித்தும் விட்டது. அதையே எடுத்துக் கொண்டாள். பிற சடங்குகளுக்கும் ஏழு எட்டு புடைவைகள் வாங்கி கொண்டாள். இந்த சைடு கேப்பில் நம்ம கௌரியும் வர்ஷினிக்கு மயில் கழுத்து கலர் பச்சையும் நீலமும் கலந்த அழகான ஒரு சேலையை வாங்கி வைத்துக்கொண்டான்.
அனைவருக்கும் துணிமணி எடுத்த பிறகு நகை கடைக்கு சென்றார்கள். அங்கு மதுமதிக்கு தேவையான பொருத்தமான கல்யாண நகைகளை விக்னேஷ் வாங்கி கொடுத்தான். கௌரியும் வர்ஷினிக்கு குட்டி ஜிமிக்கி வாங்கினான். கௌரி முன்பு கூறியது போலவே ஷாப்பிங் முடிக்க இரவு ஆனதால் அனைவரும் வெளியில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தனர்.
கௌரிக்கு வர்ஷினியை அண்ணனுடைய திருமணத்திற்கு கூப்பிடவேண்டும் என்று ஆசை. ஆனால் அம்மா அவளை அங்கு பார்த்து ஏதாவது அவள் மனது வருந்தும்படி சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று யோசனையாய் இருந்தது. எனவே அவன் வர்ஷினியை கல்யாணத்துக்கு அழைப்பதற்கு முன்பு அம்மாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு கவிதாவின் அருகில் வந்தான். கவிதா கௌரிக்கு பிடிக்கும் என்று வஞ்சரம் மீனை மசாலா உதிராமல் பார்த்து பார்த்து சமைத்துக் கொண்டிருந்தாள். அங்கு வந்த கௌரி அம்மா என்னம்மா செய்யிறீங்க? என்று கேட்க, ஏன்டா பாத்தா தெரியல, நான் என்ன செய்யறேன்னு, இது என்ன கேள்வி , தெரியுதும்மா, எனக்கு பிடிச்சதை சமைச்சுட்டு இருக்க, அது மாதிரி எனக்கு பிடிச்சதை எல்லாம் செய்விங்களாம்மா? என்று அப்பாவியாய் கேட்க, உடனே கவிதா இதுவரைக்கும் உனக்கு பிடிக்காததை நான் என்ன செய்தேன் சொல்லு, எனக்கு நீங்க இரண்டு பேருதாண்டா உயிரே, உங்களுக்கு பிடிக்காததை நான் என்னைக்குமே செய்யமாட்டேன் அது சரி, என்ன இந்த பம்மு பம்முற, விஷயம் இல்லாமே என்கிட்ட இப்படி பேச மாட்டியே என்ன விஷயம் என்கிட்ட சொல்லணும்? என்று அவள் நேரிடையாக கேட்க, அம்மா, அண்ணன் கல்யாணத்திற்கு என் நண்பர்கள் எல்லாரையும் கூப்பிட போறேன் என்றதும், அதுக்கென்ன எல்லோரையும் கூப்பிடு,தாராளமாய் வரட்டும், வந்து சாப்பிட்டு போகட்டும், இதுக்கெல்லாம் என்கிட்ட உத்தரவு கேட்க வேண்டாமே, அது இல்லம்மா! கல்யாணத்திற்கு வர்ஷினியையும் கூப்பிடவா? என்றதும் கவிதா அதிர்ந்து அவனை பார்த்து வர்ஷினியா? அவள் பெங்களூரில் தானே இருக்கா? பெங்களூர் போய் அவளை கூப்பிட போறியா? உனக்கு எப்படி அவளுடைய முகவரி தெரியும்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, இரும்மா கொஞ்சம் மூச்சு விட்டு பேசு. நான் ஒன்னுஒன்னா பதில் சொல்றேன் என்று வர்ஷினியை தான் வேலை செய்யும் அலுவலகத்தில் பார்த்தது, அவளுக்கு விவாகரத்து ஆனது, அவளுடைய அம்மா கஸ்தூரி இறந்தது என்றது வரைக்கும் சுருக்கமாக சொல்லி நிறுத்திக்கொண்டான். கவிதாவுக்கு கஸ்தூரி இறந்ததை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினாள். அவள் இங்கிருந்த கடைசியா போன போதே அவள் முகம் சரியில்லை, ரொம்ப சோர்வா இருந்தா, பாவி மக, தனக்கு இப்படி ஒரு வியாதி இருக்குனு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டா என்று அங்கலாய்த்த பின் அந்த கூறுகெட்ட வர்ஷினி இப்போ எப்படி இருக்கா? என்று கேட்க, ஏம்மா வர்ஷினியை இப்படி பேசற? அவளே பாவம், அம்மாவை இழந்து, வாழ்க்கையை இழந்து, மனசு ஒடிஞ்சு போய் இருக்கா என்று கௌரி வக்காலத்து வர, எதனாலே இப்படி இருக்காடா? அன்னைக்கே அவ உன்னை கல்யாணம் பண்ணி இருந்தா அவளுக்கும் அவ குடுமபத்துக்கும் இந்த நிலமை வந்திருக்குமா? கஸ்தூரி இன்னும் கொஞ்ச நாளாவது சந்தோசமா இருந்திருப்பா. அவ நம்மளையாவது அவ அப்பா அம்மாகிட்ட பேச விட்டாளா, யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கும்னு சொல்லுவாங்க அது மாதிரி உயிரா நேசிக்கிற உன்னை விட்டுவிட்டு வேறொருத்தரை கல்யாணம் பண்ணி போனா, இப்போ வாழ்க்கையும் போய், அவங்க அம்மாவும் போய், இந்த நிலமை எல்லாம் அவளுக்கு தேவையாடா! என்று கண் கலங்கி கூற, அம்மா, இப்ப பழச பத்தி பேசறதாலே எதுவுமே திரும்பி வரப்போறதில்லை. அதை விடுங்கம்மா. வர்ஷினியை கல்யாணத்திற்கு கூப்பிடறது உனக்கு சம்மதம் தானே! நீ கல்யாணத்தில அவளை பார்த்தா அவளை தப்பா எதுவும் பேசிடாதே என்றதும், கவிதா, வர்ஷினியை சின்ன வயசில் இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. அவளை என் பொண்ணு மாதிரி தான் பார்த்தேன், அவ எப்போவும் நம்ம வீட்டிலதான் உன்கூட விளையாடிட்டு இருப்பா, ஆனா நீ அவ்வளவு சொல்லியும் உன்னை வேண்டாம்னு வேறு கல்யாணம் பண்ணிக்கிட்டா கோவம், என்கிட்ட வந்து பேசி இருந்தா கூட நானே அவங்க வீட்டில பேசி உங்க இரண்டு பேரு எப்படியோ கல்யாணத்தை நடத்தி வச்சி இருப்பேன். அவளே ஒரு முடிவு எடுத்து இப்போ வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறப்ப எனக்கும் மனசு கஷ்டமாகத்தான் இருக்கு. அவ தலைவிதி அது தான்னா நாம என்ன செய்ய முடியும் ! என்று கண்களை துடைத்துக் கொண்டு, நீ தாராளமா வர்ஷினியை கூப்பிடு, அவ அப்பாவையும் சேர்த்து கூப்பிட்டு கல்யாணத்திற்கு வர சொல்லு என்று சொன்னவுடன் கௌரி ரொம்ப தேங்க்ஸ் அம்மா என்று சந்தோஷத்தில் அவன் அம்மாவை கட்டி பிடித்துக் கொண்டான்.
மறுநாள் கௌரி தான் வாங்கி வந்த பொருளோடு வர்ஷினி வீட்டுக்கு சென்றான். அங்கு கரண் வந்து கதவை திறக்க, உள்ளே வாங்க! கௌரி என அவனை வரவேற்று அமர வைத்தார். எப்படி இருக்கீங்க? என்று கரண் கேட்க, மாமா என்னை வா, போனே கூப்பிடுங்க, மரியாதையெல்லாம் வேணாமே, அது எப்படி நீங்க இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகா போறீங்க உங்களை எப்படி மரியாதை இல்லாமே அழைக்கிறது? என்று கேட்க , அவன் அவர் அப்படி கூறியதும் உள்ளே எட்டி பார்க்க, வர்ஷினி இங்கு இல்லை தம்பி. பக்கத்தில் இருக்கிற தன் தோழி வீட்டுக்கு நோட்ஸ் ஏதோ வாங்கணும்னு போயிருக்கா என்று பேசிக் கொண்டே இருக்கும்போதே கையில் புத்தகத்தோடு வர்ஷினி வந்தாள். வா சங்கர் வா, வந்து ரொம்ப நேரம் ஆச்சா? இல்ல இப்போ தான் வந்தேன் , காபி குடிக்கிறியா என்று அவள் கேட்டதும் அவன் அன்றய ஞாபகத்தில் நாலா பக்கமும் தலை ஆட்ட, பயப்படாதே , சக்கரை போட்ட காப்பிதான் என்று சிரித்துக் கொண்டே வர்ஷினி உள்ளே போக,
கரணுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்னென்றால் அன்றைக்கு அவருக்கு எதுவும் தெரியாது அல்லவா! அவர் புரியாமல் அவனை பார்க்க, அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் அது ஒன்னுமில்லை மாமா, எனக்கு சர்க்கரை ரொம்ப பிடிக்கும், அது தான் சக்கரை நிறைய போடுவானு கேட்டு விட்டு போறா என்று ஒருவாறு உளறி வைத்தான். வர்ஷினி வந்ததும் காபியை குடித்து விட்டு தான் வாங்கி வந்ததை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, கரண், என்னப்பா என்ன யோசனை என்று அவனை தட்டி எழுப்ப, அவன் ஒண்ணுமில்லை மாமா, என் அண்ணனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் வைச்சிருக்கோம், நீங்களும் வர்ஷினியும் அவசியம் வரணும் என்று கல்யாண பத்திரிகையை நீட்ட, நல்ல விஷயம் தானே, அவசியம் வரோம், இத சொலறதுக்கா இத்தனை தயக்கம் என்று வினவ, உடனே அவன் வர்ஷினிக்கு நான் சேலை எடுத்து வந்திருக்கேன், அந்த சேலையை கட்டிக்கிட்டு வர்ஷினி எங்க அண்ணன் கல்யாணத்திற்கு வந்தா நா ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று சொன்னதும் வர்ஷினி எனக்கெதுக்கு சேலை எல்லாம், வேண்டாமே என மறுக்க, கௌரி கரணை வாங்க சொல்லுங்கள் என்றது போல் அவரை பார்க்க, உடனே கரண், வர்ஷினி, கௌரி ஆசையாய் உனக்கு சேலை வாங்கியிருக்கான் அதுவும் என் முன்னாடி தானே உங்கிட்ட கொடுக்கிறான் வாங்கிக்கோமா, இல்லனா அவன் மனசு வருத்தமா இருக்கும், அவன் உன் சிறு வயது நண்பன் தானே வாங்கிக்கோ என்று வற்புறுத்தி கூறியதும் வர்ஷினி தயக்கத்துடன் தான் வாங்கிக் கொண்டாள். சேலைக்கே இப்படியா, இன்னும் நகை கொடுத்தா என்ன சொல்லுவாளோ என்று எண்ணியவாறே நகை பெட்டியையும் நீட்ட, அதனை திறந்து பார்த்து, என்ன சங்கர் இது, எனக்கு சேலை மட்டும் போதும் இதெல்லாம் வேண்டாம் என்று கூற, ப்ளீஸ் வர்ஷினி உனக்காக ஆசையாய் பார்த்து பார்த்து வாங்கினேன் தயவு செஞ்சி வாங்கிக்கோ என்று அவன் கெஞ்சியதும் அவள் யோசித்து விட்டு சரி வாங்கிக்கிறேன், ஆனா இதற்குறிய பணத்தை நான் கொடுத்துடுவேன், அப்படினா நான் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியதும் இதுவரைக்குமாவது சம்மதித்தாளே என்று நினைத்து கொண்டு சரி என்று தலையாட்டினான்.
கௌரி தடபுடலாக விக்னேஷின் திருமணத்தை ஏற்பாடு செய்து இருந்தான். உறவினர் கூட்டம், நண்பர்கள் கூட்டம் என்று மண்டபமே நிறைந்திருந்தது. மதுமதி விக்னேஷ் வாங்கி கொடுத்த ஆரஞ்சு வண்ண பட்டு புடவை உடுத்தி, அதற்கேற்றாற்போல் பொன் நகைகளை அணிந்து அம்மன் சிலை போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள். விக்னேஷும் பட்டு சட்டை பட்டு வேட்டி அணிந்து மணமேடையில் கம்பீரமாக அமர்ந்து ஐயர் சொல்ல சொன்ன மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தான். அங்கு இரு வேறு மனங்கள் இரு வேறு பேரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. கவிதா தன் உறவினர் பெண் ஒருத்தியை தன் இளைய மகனுக்கு பேசலாம், அவள் வரவேண்டுமே என்று காத்திருக்க, அவருடைய இளைய மகனோ வர்ஷினி வருவாளா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கி வர்ஷினியும் அவள் தந்தையும் வந்து கொண்டிருந்தனர். வர்ஷினி அந்த மண்டபத்தின் அழகை இரசித்துக் கொண்டே வந்துக்கொண்டிருந்தாள். அந்த மயில் கழுத்து வண்ண புடைவையில் நிஜமாகவே மயில் ஒன்று தன் கூந்தல் என்னும் தோகையை விரித்து வருவது போல் இருந்தது கௌரிக்கு. அவன் வாங்கி கொடுத்த ஜிமிக்கி கம்மல் வேறு அவனை, அவள் பக்கம் வா வா என்று அழைப்பது போல் தோன்றியது. அவளை விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். “என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர்கள் கொட்டிய அழகு” என்ற பாடல் அப்போது அவன் நினைவுக்கு வந்தது. இப்பவே இவளை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கலாம் போல இருக்கே, என்று தவிப்புடன் அவளை பார்த்துக்கொண்டிருக்க, அவனுடைய இன்னோர் மனமோ, டேய் ,கௌரி இப்பதான் அவ உங்கிட்ட சகஜமா பேசவே ஆரம்பிச்சு இருக்கா, இப்ப உனக்கு இந்த நினைப்பு எல்லாம் தேவையா என்று அவனை அடக்க தன்னை சுதாரித்துக் கொண்டு அவர்களை வரவேற்றான். சிறிது நேரத்தில் கவிதாவும் அங்கு இருவரையும் வரவேற்று, கரணிடம் மட்டும் பேசிவிட்டு வர்ஷினியிடம் சிறு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு சென்றாள். அவளுக்கு தன் பிள்ளையை வேண்டாம் என்ற ஒதுக்கியது இன்னுமே மனதை உருத்திக் கொண்டு தான் இருந்தது.
கவிதா எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் தான் பெற்றோருடன் வந்தாள். கவிதா சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றாள். அவர்களை அமர வைத்து விட்டு தன் மகனிடம் சென்றாள். அவன் வர்ஷினியின் அருகிலே அமர்ந்து அவள் அறியா வண்ணம் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். கவிதா அவன் அருகில் வந்து முக்கியமான ஒரு நபரை உனக்கு அறிமுகம் படுத்த போகிறேன், வா கௌரி என்று அவளை கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். அந்த பெண் சுடிதார் அணிந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள். இவர்களை பார்த்ததும் அவளின் பெற்றோர்கள் தான் எழுந்து வணக்கம் சொன்னார்கள். இவள் உட்கார்ந்தபடியே ஹாய் ஆண்ட்டி, ஹாய், உங்க பேர் என்னவோ சொன்னார்களே, பெண்பேரு தானே, ம்ம்.. சௌரி இல்ல இல்ல கௌரி, ஹாம் ஐ ரைட் என்று கேட்க கௌரி பல்லை கடித்துக் கொண்டே அவன் அம்மாவை பார்க்க, கவிதா கொஞ்சம் பொறுத்துக்கடா என பார்வையாலே அவனை கெஞ்ச , கௌரி அவளை பார்த்து உங்க பேர் என கேட்க, ஐ யாம் வினோதா என்று சொல்ல, விநோதமாகத்தான் பேசறீங்க என்று அவன் சொல்ல அவள் சிரித்து விட்டாள். பார்க்க அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் மனதில் தான் வர்ஷினி பட்டா போட்டுகொண்டு அமர்ந்து இருகிறாளே, அதனால் அவனுக்கு அவளை பிடிக்கவில்லை. சரிம்மா நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் நம் உறவினர்கள் எல்லாம் விசாரிச்சுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விட்டால் போதும் என்று நழுவி கொண்டான் . கவிதாவுக்கும் அவள் பேசியது என்னவோ போலத்தான் இருந்தது ஆனாலும் தன் மகனுக்கு கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எதையுமே அவள்பொருட்படுத்தவில்லை.
மத்தளம் மேளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, ஐயர் மந்திரம் ஓத பொன் தாலியை எடுத்து மதுமதியின் சங்கு கழுத்தில் கட்டி விக்னேஷ் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டான்.
வர்ஷினி மண்டபத்தை விட்டு செல்லும் வரையிலும் கௌரியின் ஒரு கண் அவள் மேலேயே இருந்தது. மனதிற்குள் அவளை ஆராதித்துக்கொண்டிருந்தான். வர்ஷினியை பல உடைகளில் பார்த்து இருக்கிறான். ஆனால் புடவையில் இன்று தான் பார்த்தான். பார்த்த விழி அவளை அப்படியே பார்த்துக் கொண்டுதான் இருந்தது. அவன் மனம் முழுவதும் அவள் தான் ஆக்கிரமித்திருந்தாள். அந்த புடைவை அவளுக்கு அவ்வளவு அழகாகவும் பாந்தமாகவும் இருந்தது.
நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. விக்னேஷும் மதுமதியும் மன ஒத்த தம்பதிகளாக வாழ்ந்துக்கொண்டிருந்தனர். மதுமதி விக்னேஷோடு அவன் இருக்கும் கிராமத்திற்கே அவனோடு சென்றுவிட்டாள். அங்கு இருக்கும் நீதி மன்றத்தில் மனநல ஆலோசராக தம் பணியை நிறைவாக செய்துக்க கொண்டிருந்தாள். வர்ஷினியும் தம் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தாள். கவிதா தன் இளைய மகனுக்கு பெண் தேடி தேடி அலுத்து விட்டாள். அவன் வேண்டும் என்றே ஒவ்வொரு பெண்ணிடம் ஒவ்வொரு குறைகளை தேடி கண்டு பிடித்து சொல்லிக் கொண்டிருந்தான். அன்று அவன் அலுவலகம் வந்த போது அவன் மேலாளர் அவனிடம் முக்கியமாக பேச வேண்டும் அவனை அறைக்கு வருமாறு அங்கு இருக்கும் பணியாளரிடம் சொல்லி அனுப்பினார். என்ன விஷயமாக இருக்கும் என்று அவனும் யோசித்து கொண்டே அவரின் அறையை நோக்கி சென்றான்.
