மௌனத்தால் உடைந்த காதல் -9

சித்ரா தன் மகளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தவர், “என்ன பேசறேன்னு யோசிச்சு பேசு உதயா. நாக்கை இழுத்து வச்சு அறுத்துடுவேன் ஞாபகத்தில் இருக்கட்டும். அதுவும் சின்ன பிள்ளைங்க முன்னாடி என்ன பேச்சு பேசுற ?இப்போ வரைக்கும் இந்த  வீட்டோட மொத்த செலவையும் என் புள்ள தாண்டி பார்த்துட்டு இருக்கான் .அவன் உழைப்புல தான் இந்த வீடு ஓடிட்டு இருக்கு .

என்ன தான் உன் அப்பா சம்பாதிச்சாலும், அது தனியா பேங்க்ல தான் போட்டு வச்சிருக்கோம். அதிலிருந்து ஒரு நயா பைசா நாங்க எடுக்கறது கிடையாது. அவன் தலையெடுத்ததுக்கப்புறம் எடுக்க விட்டதும் கிடையாது. உன் தேவைக்கே கூட அவன் தான் பாத்துட்டு இருக்கான். அப்படி இருக்க, என்ன வேணும்னாலும் பேசுவியா? அசிங்கமா இல்ல புருஷன் ,பொண்டாட்டி எப்படி இருந்தா உனக்கு என்ன வந்துச்சு ?

இம்புட்டு நாள் கழிச்சு நானே புள்ளைங்க வந்த சந்தோஷத்துல உங்க அப்பா கிட்ட சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டு வர சொல்லி செஞ்சு போட்டேன். பிள்ளைங்களுக்கு பிடிக்குமே என் கையால சமைச்சு போட்டு நாள் ஆகுதுன்னு, அதைக்கூட இப்படி பேசுற ? “

“என்னம்மா ஓவரா பேசிட்டு போற? புருஷனும், பொண்டாட்டியும் சந்தோஷமா இருந்தா போறாங்க. நான் என்ன அவங்க சந்தோஷமா இருக்க வேணாம்னா சொன்னேன். நீதானே அன்னைக்கு அந்த பேச்சு பேசுன உன் மருமகள. இதே வாய் இன்னைக்கு இப்படி பேசுது”

“ஆமாண்டி அன்னைக்கு பேசினது தான் இப்பயும் சொல்றேன் . எனக்கு அவ ஒருத்தன் கூட வந்தது புடிக்கல ,அதுக்காக பேசினேன். அதுக்காக நீ என்ன வேணாலும் என் பேர புள்ளைங்கள பேசுவ வேடிக்கை பார்பேனு நினைச்சியோ?” என்று எகிறிக் கொண்டு வர .

குழந்தைகள் இருவரும் அழுகையில் கரைந்தபடி, நடுங்கி நின்றனர்.

பேரப்பிள்ளைகளை தன்னோடு அணைத்து பிடித்தபடி இருந்தனர் இருவருமே .

குழந்தைகளை பார்க்க இருவருக்குமே கஷ்டமாக இருந்தது.” எதுக்கு வந்தியோ அந்த வேலையை பாத்துட்டு போயிட்டே இரு” என்றார் நேசன்.

“ பிறந்த வீட்டுக்கு வரவே வேணாம்னு அறுத்து விடுவீங்க போல ”

“அதையும் செய்ய தயங்க மாட்டோம் உதயா. நீ இப்படியே பேசிட்டு போனா” என்றார் நேசன்.

” ஓ பண்ணுவீங்க! பண்ணுவீங்க! ஏன் பண்ண மாட்டீங்க?” என்றவள் குழந்தைகளை பார்த்து முறைத்தாள்.

“இதுங்க வந்த உடனே, பெத்த புள்ள நான் உங்க கண்ணை மறைக்குதோ?” 

 

குழந்தைகள் இருவரும் இன்னும் அஞ்சு நடுங்கியபடி ,”தாத்தா உங்க போன் தாங்க” என்று கேட்டனர்.

அவரும் எடுத்துக் கொடுக்க. வேகமாக தன் தந்தைக்கு அழைத்து இருந்தாள் மிது.

அவனும் “சொல்லு குட்டிமா?”  என்றான் அப்பொழுதுதான் அவனும் வீட்டிற்கு வந்தவன். மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்து உட்கார்ந்தான்.

” அப்பா இங்க வீட்டுக்கு வரீங்களா?” என்று குழந்தை கூறிய குரலே அவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்பதை உணர்த்த.

“சரி குட்டிமா.இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்று அவனும் எழுந்து கொள்ள .

“என்ன?” என்று சுதா கேட்டதற்கு கூட,

” வந்து சொல்றேண்டி !”என்றவன் மேற்கொண்டு எதுவும் கூறாமல், அவள் கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்து இருந்தான் .

சொன்னது போலவே பத்து நிமிடங்களில் தன் வீட்டுக்கு வந்திருக்க.

தங்கையின் செருப்பை வெளியே வாசலிலே பார்த்தவன்.’ இவதான் ஏதோ செஞ்சு இருக்கா. இவளை வச்சுக்கிட்டு ‘என்ற பற்களை நரநர வென  கடித்தபடியே வீட்டிற்குள் நுழைய .

குழந்தைகள் இருவரும் தாத்தா, பாட்டியை ஒட்டி நிற்பதை உணர்ந்து ,வேகமாக செல்ல..

 

குழந்தைகள் இருவரும் அவனது இரு கால்களையும் ஆளுக்கு ஒரு பக்கம் கட்டிக் கொண்டன.

இருவரின் தலையையும் வருடியவன். தன் தாய் ,தந்தையை தான் பார்த்தான்.

தங்கையின் புறம் திரும்பவில்லை .

அடுத்தபடியாக அவனது கண் தன் ரூம் கதவை பார்த்தது .

“இந்த ரூம் கதவை திறந்து விட்டது யாரு ?”என்றான்.

” நான் தாண்டா. என்கிட்ட இருந்த சாவிய வச்சு தொறந்து விட்டேன். பிள்ளைங்க அங்க போய் விளையாட கேட்டுச்சுங்க. அங்கதான் ஸ்கெட்ச் பென்சில், நோட்டெல்லாம் இருக்குன்னு “என்றவுடன் குழந்தைகள் கேட்டிருக்க வாய்ப்பிருக்கு. அதேபோல் தன் தாயிடம் சாவி இருப்பது அவனும் அறிவான் .

ஆகையால், மேற்கொண்டு எதுவும் பேசாமல், இப்பொழுது தன் தங்கையை பார்க்க.

அவளோ தனக்கும் , இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல்  நின்றாள்.

அண்ணனை இப்பொழுதுதான் பார்க்கிறாள் ஒரு வாரங்களுக்கு பிறகு ,இருந்தும் பாசமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் முகத்தை வெட்டித் திரும்ப .

“என்னவாம் இவளுக்கு?” என்று நேரடியாக தன் தந்தையிடம் கேட்க.

அப்போது சித்ரா தான் அவள் பேசியதை சொல்ல.

” உன் வீட்ல வந்து என் பிள்ளைங்க உட்காரல இல்ல. உன் புருஷன் சம்பாதித்தில் என் பிள்ளைகளுக்கு எதுவும் வாங்கி போடல. என்னோட அப்பா ,அவங்க பேர பிள்ளைக்கு வாங்கி தருவத கேட்கிற உரிமை உனக்கு கிடையாது .உன் பிள்ளைகளுக்கு ஏன் தரலன்னு கேளு, அந்த உரிமை உனக்கு இருக்கு, என் பிள்ளைகளுக்கு ஏன் செஞ்சாங்கன்னு கேட்காத, அந்த உரிமை உனக்கு கிடையாது. சரியா ?”என்றவன்  ‘வீட்டுக்கு போலாமாடா ?”என்று குழந்தைகளிடம் கேட்க .

“நீ வேற ஏண்டா படுத்துற. நான் பண்ண தப்புக்கு என் பேர புள்ளைங்க ரெண்டுத்தையும் என்கிட்டே இருந்து பிரிச்சது பத்தாதா, வந்ததே இன்னைக்கு தான்டா வந்துச்சு ஒருவா சோறு என் கையால ஊட்டி விட கூட எனக்கு கொடுத்து வைக்காத டா “என்று கண்களில் நீர் வழிய சித்ரா கூற.

எதுவும் பேசாமல் குழந்தைகளை தன் அருகில் உட்கார வைத்தான். டைனிங் டேபிளில், குழந்தைகள் இருவரும் உதயாவை பார்த்து மருண்டு விழித்தபடி இருக்க.

” உங்க அத்தையை ஒன்னும் பாக்க வேணாம் . நீங்க சாப்பிடுங்க, பாட்டி ஊட்டி விடுறாங்க பாரு .உனக்கு மீன் பிடிக்கும் செஞ்சிருக்காங்க பாரு” என்று ஏற்கனவே சாப்பிட்டு வைத்த மீனை குழந்தைக்கு காட்டியபடி தன் தாய் ,தந்தையிடம் கண்காட்ட.

சித்ரா வேகமாக தன் மகளை இழுத்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தவர்.” உதயா இன்னைக்கு சொல்றதுதான் வாராவாரம் புள்ளைங்க வருவாங்க. கெஞ்சி கேக்குறேன், உன்ன கையெடுத்து கும்பிடுறேன் ஞாயிற்றுக்கிழமை இந்த வீட்டு பக்கம் வந்துராத”  

“மா எனக்கு  அம்மா மாதிரி பேசு! கொஞ்சமாச்சும்”

“ உதயா உனக்கு அம்மா மாதிரி தான் பேசுற .அதே சமயம் என் பையனுக்கும் அம்மாதான். என் பேர பசங்களுக்கும் பாட்டி தான்”

“ அப்ப என் பிள்ளைங்களுக்கு?”

“ உன் பிள்ளைகளை நீ தினமும் கூட கூட்டிட்டு வா. உன் பிள்ளைகளுக்கு என்ன பிடிக்குமோ செஞ்சு போடுறேன்”

“ அவங்க ஸ்கூலுக்கு போகலையோ?  என் புள்ளைங்களுக்கு என்னைக்காச்சு இப்படி கூப்பிட்டு சோறு ஆக்கி போட்டு இருக்கியா ?”

” நாக்கு அழுகிப்போயிடும் டி.உன் பிள்ளைகளை இதுக்கு முன்னாடி நீ கூட்டிட்டு வந்தது இல்ல ?நான் ஆக்கி போட்டது இல்ல?  அசைவம் செஞ்சத கொண்டுவந்து கொடுத்ததில்லை உங்க அப்பாவும்,  உன் அண்ணனும்.. ஏண்டி இப்ப கூட முந்தா நேத்து உன் பிள்ளைங்க கேட்டுச்சுன்னு அசைவம் கேட்டன்னு செஞ்சு கொடுத்து அனுப்பினேனே டி எப்படி புளுகுற .என் பேர புள்ளைங்க வரது ஞாயிற்றுக்கிழமை தான்.

அன்னைக்கு ஒரு நாள் ஆச்சும் அவங்க கூட நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன் .அதையும் கெடுத்துடாத உதயா, உன்ன கையெடுத்து கும்பிடுறேன்”

“ஆக மொத்தம் எனக்கு பொறந்த வீட்டு உறவு இல்லன்னு அறுத்து விட்டடலாம்னு எல்லாரும் முடிவு பண்ணி இருக்கீங்க ?நீ,உன் புருஷன் ,உன் புள்ள எல்லாம் சேர்ந்து ,எல்லாம் உங்க மருமகளால தானே.. மகராசி எந்த நேரத்துல வந்தாளோ, வந்தாலும் வந்தா எனக்கு இந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாம ஆக்கிட்ட .சரி எங்கையோ போனா அப்படியே போயிடுவான்னு நினைச்சேன்” என்றவுடன் ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று விட்டு இருந்தார்.

” இப்பதான் சொன்ன உதயா. இங்கு எந்த குட்டையும் குழப்பாதன்னு, நான் அன்னைக்கு பேசுனது சரியா தப்பா? என்று எனக்கு தெரியாது. இப்பயும் சொல்றேன் .அவ ஒருத்தன் கூட வந்தது எனக்கு புடிக்கல. அதுக்காக என் பையனோட வாழ்க்கை நாசமா போகணும்னு நினைச்சது இல்ல.

என் பையனை விட்டு அவளை பிரிக்கணும்னு நினைச்சதும் உண்மைதான். ஆனா, இப்ப என் பையன் அவ தான் வேணும்னு நினைக்கிறான். அது மட்டும் இல்லாம ஒன்னுக்கு ரெண்டு பிள்ளை இருக்கு, எனக்கு என் பேர புள்ளைங்களும் ,என் பையனோட வாழ்க்கையும் முக்கியம். அமைதியா இருக்கேன். என்ன பேச வைக்காத, அவ சரியா தப்பா எதுவும் எனக்கு தேவையில்லை. என் புள்ளைக்கும் சரி ,என் பேரப்பிள்ளைகளுக்கும் சரி அவள புடிச்சிருக்குன்னும் போது நான் அமைதியா இருக்கேன்.

குடும்பத்துல எந்த குட்டையும் குழப்பாத போய்ட்டே இரு. இல்ல உன் அப்பன் சொல்றது என்ன? உன் அண்ணன் சொல்றது எல்லாம் கிடையாது. நானே உன் புருஷனுக்கு போன போட்டு ,இனி உன் பொண்டாட்டி எங்க வீட்டு பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிடுவேன். எப்படி வசதி?” என்று மிரட்டியே இறுதியாக தன் மகளை அங்கு இருந்து விரட்டிவிட்டார் .

அப்பொழுது கூட ,தாய் மனம் கேட்காமல் செய்த அசைவத்தை ஒரு பையில் போட்டு கொடுக்க.

“இதுக்குதான் நாக்க தொங்க போட்டு அங்க இருந்து வந்தேன்னு நினைச்சியோ ?”என்று அவள் முனக .

“நீ இதுக்காக வர வேணாம். ஆனா எனக்கு எல்லா பேர புள்ளையும் ஒன்னு தாண்டி. மகன் வயித்து பேர புள்ள , மக வயித்து பேர புள்ளனு பிரிச்சு பார்த்தது கிடையாது .இனியும் பிரிச்சி பாக்க மாட்டேன் சரியா? உன் பிள்ளைகளை நீ கூட்டிட்டு வா. வரப்போக இரு .நான் வேணான்னு சொல்லல, சாயங்கால நேரத்தில் கூட்டிட்டு வா .ஆனா , ஞாயித்துக்கிழமை இங்க வராத. பேர புள்ளைங்கள மட்டும் கூட நீ கொண்டுவந்து விட்டுட்டு போ. நான் நாலு பேர புள்ளைங்களையும் பாத்துக்குறேன் .ஆனா, நீ வராத” என்றவர் அவளுக்கு பழங்கள் வாங்கி வைத்ததையும் கொடுத்து அனுப்பி விட. 

அங்கு இருக்கும் அண்ணனையும் ,அண்ணன் பிள்ளைகளையும் கருவிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் உதயா. பிள்ளைகள் இருவரும் அத்தையை பார்த்தவுடன் மருண்டு மீண்டும் விழிக்க.

” அங்க பாக்காதீங்க சாப்பிடுங்க. சாப்பிடும்போது வேடிக்கை என்ன ?”என்று தன் பிள்ளைகளை அதட்டியவன் பிள்ளைகளுக்கு ஊட்டுவதில் மும்முரமானன். 

தாயும் வந்து விட .அவரைத்தான் எரிப்பது போல் பார்த்தான்.” அவ வருவான்னு எனக்கு தெரியாதுடா”என்றார் பாவமாக.

” ஏன் உங்க மக. இங்க தானே குத்த வச்சு உட்கார்ந்திருக்கா?” என்று அவன் வாய் திறக்க.

நேசன் தான்,” இப்போ அது ரொம்ப முக்கியமாடா “என்று தன் மகனை அதட்டி விட்டு ,”பிள்ளைகளுக்கு என்ன வேணும் பாருடி “என்றார் மனைவியிடம்

பிள்ளைகளுக்கு இருவரும் ஊட்டி விடவும் .

அம்மாவும் ,அப்பாவும் பேரப்பிள்ளைகள் உடன் இருக்க விருப்பப்பட ,பிள்ளைகள் மருண்டு விழித்தபடி இருக்கவும் , இப்பொழுது அங்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்தவன்.

பிள்ளைகளை கையோடு அழைத்துச் செல்வதுதான் சரியும் என்பதை உணர்ந்து, பிள்ளைகள் சாப்பிட்டு முடித்த பிறகு, சுதாவுக்கு போன் செய்தான்.

” எதுவும் பிரச்சனையா?” என்றாள் எடுத்த எடுப்பில்,

” இல்ல சுதா. ஒன்னும் இல்ல” என்றவன் ஒரு சில நொடி தயக்கத்திற்கு பிறகு, “உதயா வந்திருந்தா “என்றவன் அமைதியாக .

“இப்ப கூட்டிட்டு வரீங்களா ?இல்ல அங்க இருந்து சாயங்காலமாக பிள்ளைகளை கூட்டிட்டு வரீங்களா?”  என்றாள் அவளாகவே .

தன் பக்க நிலைமையும் புரிந்து கொள்கிறாளே !இவளுக்காக தான் அன்று பேசாமல் மௌனமாக நின்று விட்டோமே! என்று உள்ளுக்குள் வலியை உணர்ந்தவன். “அப்பாவும் ,அம்மாவும் பசங்க இருக்கட்டும் என்று ஆசைப்படுறாங்கடி “என்றான்.

“ சரி இருந்து சாயங்காலமா கூட்டிட்டு வாங்க .சாப்பிட்டீங்களா ?”

அவனிடம் அமைதி.

“நான் சாப்பிடுறேன். நீங்க அங்கேயே சாப்பிடுங்க. நான் உண்மையா சாப்பிடுவேன்” என்று வேறு எதுவும் பேசாமல் பட்டென்று வைத்துவிட்டாள். 

மேலும் மேலும் அவனுக்கு வலி கூடிக் கொண்டே சென்றது. அனைவரையும் பார்க்க வேண்டும் என்று எண்ணும்போது, தன்னவளை மட்டும் பார்க்காமல் விட்டுவிடுகிறோமோ? என்ற எண்ணம் அவனை வாட்டி வதைக்காமல் இல்லை.

அவனது தோளில் கைவைத்த நேசன்,” சீக்கிரம் சரியாகும்.ஆன அது உன் கையிலையும் ,உன் அம்மா கையிலையும் இருக்கு..” என தட்டிக் கொடுத்துவிட்டு நகர .

இருவரும் பேசியதை கேட்டாலும் ,சித்ராவால் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதால் ,பேரப் பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page