மறுநாள் காலையில் வேகமாக எழுந்து சமைத்துக் கொண்டிருந்தாள் சுதா. ஆதியும் கூடமாட உதவிகள் செய்தான்.
குழந்தைகளும் கிளம்பியுடன் ஆட்டோ ஏற்றிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தவன் அவளின் அருகில் நெருங்கி வந்தான்.
அவளின் கண்களோ நாளா பக்கமா சுற்றியபடி இருக்க, அவனுடைய முத்தத்தை அவளும் விரும்ப தான் செய்கிறாள். ஆனால், வீம்புப் பிடிப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள்.
இதோ ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவனது அந்த ஒற்றை முத்தத்திற்காக..
அவள் அருகில் வந்து நெற்றியில் இதழ் பதித்தவன்.” உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கலாம் அம்மு சீக்கரமே! “
” அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் பஸ்ல போக வர இருந்துப்பேன்”
” ஈவினிங் வர உனக்கு கஷ்டமா இருக்குல்ல. பசங்கள பார்க்க முடியாம இருக்கிறது கஷ்டமா இருக்கு தான.பசங்க கூட உனக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது டி”
உண்மை தானே! அவளுக்கு தூங்கவே நேரம் கிடைக்க மாட்டேங்குது.
“வாரம் முழுவதும் வேலை வேலைன்னு ஓடுற. நைட் என்ன தான் பசங்க டியூஷன் போயிட்டு வந்துச்சுனாலும், பசங்க வர நேரத்துல, நீ இருக்கறது இல்ல. நீ வர நேரத்துல பசங்க இருக்கறது இல்ல, ஸ்கூட்டி வந்துட்டா ஓரளவுக்கு உன்னால சீக்கிரம் வீட்டுக்கு வந்துற முடியும். நீயும் பசங்களை பார்க்கலாம், உனக்கும் பசங்க கூட இருக்கோம்ன்ற சந்தோஷம் இருக்கும்.
நைட் பசங்க வந்ததும், வேலையை பார்த்துட்டு, பசங்க படிச்சிட்டாங்களா ?இல்லையா ?கேக்குறதுக்கு ஃபீல் பண்ற ?அதை முடிச்சிட்டு, தூங்க கரெக்டா இருக்கு. திரும்ப காலையில் எழுந்திருச்சு ஓடுற ,இது எல்லாமே ஸ்கூட்டி வாங்கிட்டா மாறும். உனக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும் இல்ல”
” அதெல்லாம் வேணாம். செட்டாகாது இப்போ இருக்க சூழ்நிலையில” என்றாள் அவளுக்கும் வீட்டின் சூழ்நிலை புரியும் அல்லவா ?
“இ எம் ஐ கட்டிக்கலாம் அம்மு. முழு பணம் கொடுத்து வாங்க வேணாம்”
” அப்படி என்ன அதுக்கு அவசியம்?”
“அது “என்றவன் பேச வர.
” வாங்கிகலாம்.பொறுமையா, இல்லனா ஒரு ரெண்டு வாரம் பொறுங்க ,அம்மா அமௌன்ட் தருவாங்க அப்போ பார்க்கலாம் “
“என்ன? அத்தை பணம் தருவாங்களா? எதுக்கு?”
“இடம் வித்து தரதா சொன்னாங்க”
“என்ன இடம் ?” என்றான் புரியாமல்,
அதன் பிறகே, நேற்று தாய் கூறியதைப் பற்றி இவரிடம் கூறவில்லை என்பதை உணர்ந்தவள் .
“நேத்து வந்துட்டு போனப்ப சொன்னாங்க மறந்துட்டேன்” என நாக்கைக் கடித்தாள் .
அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான்.
“சிட்டி யூனியன் பாங்க் பக்கத்துல இடம் இருக்கு இல்ல” என்று ஒரு இடத்தை குறிப்பிட்டு கூற,
” ஆமா”
” அது தம்பிக்கு புதுசா பிசினஸ் செய்ய பணம் தேவைப்படுதாம் அமௌன்ட் கேட்டிருந்தான் . அம்மா அந்த இடத்தை விக்கிறதா முடிவு பண்ணி இருக்காங்க. அவனுக்கு மட்டும் கொடுக்க முடியாது இல்ல, என்னோட பங்கு இருக்கு, வித்து தராங்க ,நான் வேணான்னு சொன்னேன். இல்ல தரேன்னு சொல்லி இருக்காங்க . அப்போ அந்த பணம் வந்துச்சுன்னா பாக்கலாம்” என்றாள்.
“என்ன விளையாடுறீங்களா ? இப்போ அதை விக்க வேண்டிய அவசியம் என்ன ? அந்த ஒரு இடம் தாண்டி அத்தைக்குனு இருக்கிறது”
அவனை அவள் அமைதியாக பார்க்கவும்..
“என்ன?” என்றான் எரிச்சலாக,
“அவன் சொந்தமா பிசினஸ் பண்ணனும்னு கேட்கிறான் அவன் கேட்கும்போது முடியாதுன்னு சொல்ல முடியாது. அப்புறம் அவன் பொண்டாட்டி அதுக்கும் மூஞ்ச திரும்பிப்பா. அதான்”
“சரி அவனுக்கு தேவையானதை வித்து கொடுத்துட்டு போகட்டும். மீதி பணத்தை அத்தை வச்சுக்கட்டும். அதை எதுக்கு நீ வாங்க போற ?”
“அதை நான் சொல்லி பார்த்துட்டேன். அம்மா கேட்கல”
” அது என்ன அவங்க கேக்கலன்ற?” என்றவன் ஒரு சில நொடி எதையோ யோசித்தவன்,”உனக்கு இன்னைக்கு ரொம்ப இம்பார்ட்டனான வேலை எதும் இருக்கா? வேலைக்கு கன்ஃபார்ம் போயே ஆகணுமா?”என கேட்டான்
அவளோ, ஒன்னும் புரியாமல் அவனைப் பார்க்க ,
“கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா?” என்றவுடன் ,
“சரி “என்று இருவருமே தாங்கள் வேலை செய்யும் ஆபீசுக்கு போன் செய்து, விடுமுறை கேட்க.
என்றும் கேட்காதவர்கள் கேட்கிறார்கள், அதுவும் அவசரமாக இருக்க போய்த்தானே வேலைக்கு வரும் நேரத்தில் கேட்கிறார்கள் என்று யோசித்து விடுமுறை கொடுத்திருந்தார்கள்.
இருவருக்கும்.
வீட்டை பூட்டிவிட்டு ,அவன் நேராக தன்னவளை அழைத்துக்கொண்டு
சென்றது கோவிலுக்கு தான் . போகும் வழியில் கண்ணாடி வழியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடியே சென்றனர்.
வெளியே பூக்கடையில் பூ வாங்கியவன். அடுத்து அர்ச்சனை தட்டு வாங்கி இருந்தான் . பூவை வாங்கி, அவனாகவே அவளுக்கு வைத்து விட்டான்.
அவளுக்கு குண்டுமல்லி என்றால் ரொம்பவே விருப்பம். கிட்டத்தட்ட ரொம்ப மாதங்களுக்குப் பிறகு, இப்பொழுது தான் வாங்கித் தருகிறான். அவளும் ஒருமுறை அவனை திரும்பிப் பார்த்துவிட்டு, வைத்துக் கொண்டாள். எதுவும் சொல்லவில்லை.
இருவரும் ஒன்றாக மலர்ந்த முகத்துடன் கோவிலுக்குள் நுழைந்தனர்.” யார் பெயரில் அர்ச்சனை செய்வது ?”என்று ஐயர் கேட்க ,
“சாமி பேரிலே அர்ச்சனை செய்து விடுங்கள் !”என்று கூறியவர்கள். மனம் உருகி இறைவனை வேண்டி நின்றனர்.
மாதங்களைக் கடந்து இன்று தான் இருவரும் ஒன்றாக வெளியில் வந்திருக்கின்றனர்.இந்த இடைப்பட்ட காலத்தில் கூட குழந்தையுடன் செல்வது போல் தான் இருந்தது .அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் , ஒன்றாக இருந்த இந்த ஒரு மாதத்திலும் கிடைக்காமல் இருந்தது.
இன்று இருவருக்குமான நேரம். இறைவனை தரிசித்து விட்டு, கோயிலை ஒரு வலம் வந்துவிட்டு, ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு, கிளம்பி வெளியே வர .
“எங்க போகிறோம் ?”என்று அவளும் கேட்கவில்லை. அவனும் கூறவில்லை. வேகமாக அடுத்து தன் மாமியார் வீட்டிற்கு வண்டியை விட்டிருந்தான் .
வீட்டைப் பார்த்தப் பிறகே,” இங்க எதுக்கு ?”என்றாள் கேள்வியாக,
“வா சொல்றேன்” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
டிவி பார்த்தபடி உட்கார்ந்து இருந்த கமலா, மகள், மருமகனையும் பார்த்துவிட்டு, “வாங்க மாப்பிள்ளை! வா சுதா! “என்று வரவேற்றார் .
அவருக்கு பயம் வேறு,” என்ன சுதா வேலைக்கு போகலையா ?” என்றார்.அவருக்கு சிறிது மூச்சு முட்டுவது போல் இருந்தது .
நன்றாக இருந்த குடும்பத்தில் நேற்று பேசிவிட்டு வந்ததில் எதும் பிரச்சனை செய்து விட்டோமோ ?என்ற பயம் அவருக்கு ..உள்ளுக்குள் தாயாக அடித்துக் கொண்டது.
அதன் பிறகு ,இருவருக்கும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் .சிறிது நிமிடம் பேசி விட்டு ,காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
“அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ஆதி.
“என்னப்பா ?”என்று கேட்க.
” அந்த இடத்தை விக்கப் போறதா சுதா சொன்னா?”
“ஆமாம் பா.நந்தா சொந்தமாக தொழில் தொடங்க கேட்டிருக்கான். என்கிட்ட அவ்ளோ காசு கிடையாது. வெளியே காசு வாங்கி தந்தாலும் ,அதை அடைக்க கஷ்டப்படணும், அந்த இடத்தை வித்துட்டா கொஞ்சம் அவனுக்கு ஈஸியா இருக்கும். மீதி கையில இருக்க பணத்தை சுதாவுக்கும் கொடுத்த மாதிரி இருக்கும்ல.”என்றார்.
” அத்தை நந்தாவுக்கு தான் அவசியம், கேட்டிருக்கான். தேவையும் கூட ,அவனுக்கு குடுங்க தப்பில்லை .மீதி இருக்க பணத்தை நீங்க உங்க பேர்ல அக்கவுண்ட்ல போட்டு வச்சுக்கோங்க”
” ஏன்பா?” என்றார் பரிதவிப்பாக..
“அத்த நான் கோபத்துல பேசல” என்று அவரின் கையை பிடித்தவன் .”நிதானமா யோசிச்சு தான் சொல்ற. என்ன பொறுத்த அளவு அந்த இடம் விக்கவே வேணாம். நல்ல இடம் பின்னாடி யூஸ் ஆகும். இப்பயுமே ஒரு தேவைக்காக மச்சான் கேட்டிருக்க, அதனால அவனுக்கும் அதுல உரிமை இருக்குன்னு அமைதியா இருக்கேன். சுதாவுக்கு இதுவரைக்கும் நீங்க நிறைய செஞ்சுட்டீங்க, இப்ப வரைக்கும் செஞ்சிட்டு இருக்கீங்க, எனக்கு அதுவே போதும்! அந்த பணம் இருக்கட்டும் ,உங்க பேர்ல அக்கவுண்ட்ல, அப்படி ஏதாவது தேவைனா கூட, நாங்க வாங்கிக்கிறோம் .ஆனா, இப்போ உங்க பேர்ல இருக்கட்டும். உங்க பேருல கொஞ்சம் பணம் இருக்கிறது, உங்களுக்கும் நல்லது தான்!” என்றான்.
“இல்லப்பா அது..”
” நான் சுதாவுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியாதா?” என்றான் ஒற்றை வார்த்தையாக,
” சரி பா ” என்றார்.
” மா. நான் கொஞ்ச நேரம் படுத்து எழுந்திருக்கிறேன் “என்றாள் சுதா அயர்வாக,
ரொம்ப நாட்களுக்கு பிறகு, அவ்வாறு சொல்கிறாள்.. தாயிடம் பேசிவிட்டு, தன்னவனிடம் பார்வை பதித்தாள்.
அவனும் கண் மூடி திறந்தான்.
அதன் பிறகு, சரி என்று ரூமுக்கு சென்று விட்டாள் .
சிறிது நேரம் கழித்து,” நீங்களும் கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரிங்க மாப்ள” என்றார் கமலா.
சரி என எழுந்துக் கொள்ள..
“அசைவம் எடுக்கட்டா மாப்ள ?”என்றார்.
“நேத்து தான அத்தை எடுத்தது .இப்போ அசைவம் வேணாம், சுதாவுக்கு உங்க கையால செஞ்ச எண்ணெய் கத்திரிக்காய்னா ரொம்ப பிடிக்கும் இல்ல ,அதே செஞ்சிடுங்க. தேவையானதெல்லாம் இருக்கா? இல்ல எதும் வாங்கிட்டு வரணுமா ?”
” அதெல்லாம் இருக்கு மாப்பிள்ளை .ஒன்னும் பிரச்சனை இல்ல ”
சரி என்று தலையசைத்தான்.
அப்படி இல்லை என்றாலும் ,பக்கத்திலேயே தான் கடை இருக்க, அவர் சென்று வாங்கிக் கொள்வார் என்ற எண்ணத்தில் சரி என்று தலையசைத்தவன், சுதா இருக்கும் ரூமுக்குள் நுழைந்தான்.
அங்கு அவள் அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளுக்கு தினமும் சரியான தூக்கம் கூட இல்லாமல் தான் போகிறது என்று யோசித்தவன்.. எதுவும் பேசாமல் அவள் அருகில் வந்து ரொம்ப நாட்களுக்கு பிறகு ,அவளை கட்டி அணைத்தபடி உறங்கி விட்டான்.
அவனும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டான்.இருவருக்குமே நல்ல தூக்கம்.. அவளுக்கும் தாய் வீட்டில் வந்து சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்று எந்த அவசர கதியும் இல்லாமல், நிம்மதியான உறக்கம். அவனுக்கோ, தன்னவளின் அருகில் உறங்குகிறோம் என்று ஆனந்தத்தில் அவனுக்கு மகிழ்ச்சியான உறக்கம்.
சேர்ந்து மகளும், மருமகனும் வந்ததே அவருக்கு சந்தோசம் தான். இருவரின் வாழ்க்கையும் பழையபடி மீண்டு வர வேண்டும் என்ற வேண்டுதல் அவருக்கு.அன்று ஏதோ ஒரு வேகத்தில் கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டார் மகளை.
அவர் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. இப்பொழுது வரை மகளை நன்றாகத்தான் மருமகன் பார்த்துக் கொள்கிறார். ஆனால் ,அன்று தன் முன்னாடியே சம்பந்தி அந்த பேச்சு பேச, அதும் மகளின் நடத்தையை குற்றம் சாட்ட, மருமகன் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கவும், கொதித்து விட்டார்.
அவர்களிடம் வாதம் செய்வது வீண் என்று தெரிந்து ,மகளை கையோடு அழைத்துக் கொண்டு வந்தார். அன்று தாயாக அழைத்துக் கொண்டு வந்தது கூட தவறில்லை .ஏதோ ஒரு வேகத்தில் அழைத்துக் கொண்டு வந்து விட்டார் .ஆனால், ஏற்கனவே வேதனையில் இருந்தவளிடம் “இப்படி உன் மாமியார் அவ்ளோ பேச்சு பேசும் போது, உனக்காக நிற்காதவர் உனக்கு வேணுமாடி ?”என்று அன்று இருந்த அதே கோபத்தோடு, வலியோடு மறுநாள் அவளை வக்கீலைப் பார்க்க அழைத்துச் சென்றது தான் அவரது தவறு. இல்லை என்றால் இருவரும் கோர்ட் வாசற்படியை மிதித்திருக்க தேவையில்லை. என எண்ணியவர் இனியாவது தன் மகளின் வாழ்வு நன்றாக இருந்தால் போதும் !என்று எண்ணியபடி சமையல் அறைக்குள் நுழைந்து தன் மகளுக்கு பிடித்தமானது செய்ய ஆரம்பித்து விட்டார்.
மருமகனுக்கும் என்ன பிடிக்கும் என்பதை தெரிந்தவர். இருவருக்கும் பிடித்த உணவினை செய்யத் தொடங்கினார்.
மூன்று மணி வரை ரெண்டு பேருக்கும் நல்ல உறக்கம். மூன்று மணி அளவில், சுதா தான் முதலில் எழுந்தவள். அருகில் தன்னை அணைத்தப்படி உறங்கும் கணவனை பார்த்தாள்.
‘இவர் எப்ப வந்துப் படுத்தாருன்னு தெரியல ?’ மாதங்களைக் கடந்து தன்னருகில் தன்னவனை பார்ப்பவளுக்கு தன்னையும் மீறி குறுகுறுப்பு தோன்ற, அவனை இன்னும் இறுக்கி அணைத்தவள் அவன் நெற்றியில் இதழ் பதித்து விட்டு,” மிஸ் யூ ஆதி! என்னால நீங்க முழிச்சிட்டு இருக்கும்போது உங்க கிட்ட நெருங்க முடியல. என்னால உங்களோட அந்த அமைதியை கடந்து வர கஷ்டமா இருக்கு. ஆனா, சீக்கிரம் கடந்து வரணும். எனக்காகவும் , உங்களுக்காகவும், நம்ம பிள்ளைகளுக்காகவும் சீக்கிரம் கடந்து வரணும். வருவேன்” என வாய்விட்டு கூறியவள்.மீண்டும் ஒருமுறை அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, கீழே இறங்கி இருந்தாள்.
அவன் உண்மையாகவே தூங்கி தான் இருந்தான் .ஆனால், இவள் எழுந்த அசைவில் எழுந்திருந்தான்.ஆனால் கண் விழிக்காமல், அவள் என்னதான் செய்கிறாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தான்.
நேற்று தூக்கத்தில் கிடைத்த வார்த்தை இன்று முழித்துக் கொண்டிருக்கும் போது கிடைக்கவும் இறக்கை இல்லாமல் பறந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.’ சீக்கிரமே சரி பண்றேன்!’என்று மனதோடு பேசிக்கொண்டவன். பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
சுதா வெளியே வந்தவள் ,”சாரிமா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா ?”என்றாள்.
“அப்படிலாம் எதுவும் இல்லடி. தூங்குனா போறீங்க. மாப்பிள்ளை இன்னும் தூங்குறாரா? சாப்பிடுறியா? இல்ல அவர் வரட்டுமா? “என்று கேட்க.
“அவர் வரட்டும் மா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
“அத்தை நீங்க இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்டபடியே வெளியில் வந்தான் ஆதி.
அதன் பிறகு மகளுக்கும், மருமகனுக்கும் பரிமாறியவர் உடன் அவரும் சேர்ந்து சாப்பிட்டார். அப்படியே மாலை பொழுது ஆகிவிட. சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க,” பசங்க வந்துருவாங்க” என்றாள்.
” பசங்களை நான் இங்கே வர சொல்லிடடேன். ஆட்டோ டிரைவருக்கு போன் பண்ணி. அவங்களும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போகட்டும். டியூஷனுக்கு இன்னைக்கு லீவ் சொல்லிக்கலாம்” என்றான்.
சரி என தலையசைத்தாள் .அதன் பிறகு, குழந்தைகளும் வந்துவிட.
குழந்தைகளுடன் ஐக்கியமாகிவிட்டார். சிறிது நேரம் பேசியபடி குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை செய்து கொடுத்தார்.
தன் தாயுடன் சேர்ந்து அவளும் செய்ய வர,” நீ போய் பசங்களோட உட்கார்ந்து இருடி. இன்னைக்கு தானே உனக்கு நேரம் கிடைச்சிருக்கு. அம்மா ஒருநாள் செய்றதுல குறைஞ்சிட மாட்டேன் தினமுமா செய்ய போறேன்”என்றார்.
அதன் பிறகு, அவளும் குழந்தைகளுடன் ஐக்கியமாகி விட்டாள்.
இரவு பிள்ளைகள் டியூஷன் முடித்து வந்திருப்பார்கள் என்று எட்டு மணியை கடந்து, சித்ரா மகனுக்கு போன் செய்திருந்தார்.
தினமும் பார்க்க முடியாத காரணத்தினால், வீடியோ காலில் வருவார்.
போன் அட்டென்ட் செய்தவர்கள் குதூகலமாக,” பாட்டி !”என்றனர்.
“என்னடா பண்றீங்க? சாப்டீங்களா?”
“இல்ல இனிமே தான் ” என்றனர்.
” என்னடா இன்னும் யூனிபார்ம் கூட கழட்டாம உட்கார்ந்து இருக்கீங்க ?ஏன் வரதுக்கு லேட்டாயிடுச்சா ?இன்னைக்கு “என்றவர் அதன் பிறகே சுற்றம் உணர்ந்து ,பின்னணியில் வேறு மாதிரியாக இருக்க ..
“எங்கடா இருக்கீங்க?” என்றார் புருவம் முடிச்சிட கேள்வியாக,
” நாங்க கமலா பாட்டி வீட்டுல இருக்குமே!” என்று இருவரும் வீட்டை சுத்திக் காட்டி குதிக்க .
“அங்க மட்டும் போக முடியுது.இங்க இந்த பாட்டியை பார்க்க வர முடியல சாய்ந்திர நேரத்தில கூட” எனக் குறைப்பட்டுக் கொண்டார்.
“இன்னைக்கு ஸ்கூல் விட்டு நாங்க நேரா இங்க வந்துட்டோமே !”என குழந்தைகள் ஒப்பிக்க..
இவன் தான் “ஐயோ! போச்சு !”என்று தலையில் கை வைத்தான் .
இதில் கமலாவும் சரி ,சுதாவும் சரி பார்வையாளராக மட்டுமே இருந்தனர். எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டே கிச்சனுக்கு வந்துவிட்டார் கமலா.
” அப்பாவும் ,அம்மாவும் கூட இன்னைக்கு ஆபீஸ் போகலையே !”என்றவுடன் சித்ரா மேற்கொண்டு பேச்சு வார்த்தை எதும் வளர்க்காமல்,”சரி பார்த்து இருந்துட்டு வாங்க !”என பட்டென்று வைத்துவிட்டார்.
