மௌனத்தால் உடைந்த காதல் – 13

ஆதி ,’கோபத்தில் வைத்து விட்டாரோ ?’என்று யோசனையில் இருந்தான்.
 

 

அடுத்த நிமிடமே, நேசன் போன் செய்திருந்தார்.” சொல்லுங்கப்பா அம்மா கோச்சிக்கிட்டாங்களா?”
 

 

“இல்லடா. இருந்து இருந்து இப்பதானே நீ லீவு போட்டு இருக்கனு பசங்க சொல்லவும்.சந்தோஷமா இருப்பீங்கனு வச்சிட்டா.அவ உங்களை  தப்பா எதும் எடுத்துக்கல.நீ வேற பட்டுனு போன் வச்சதும் பயந்துடுவியோனு தான் நான் உனக்கு உடனே கூப்பிட்டேன். நீ பாத்துட்டு சீக்கிரமா பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிட்டு பத்திரமா போ” என வைத்து விட்டார்.
 

 

அதன் பிறகே, அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
 

 

இரவு ரொம்ப  நேரம் ஆகுவதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பினர். கிளம்புவதற்கு முன்பு, கமலா சுதாவை தனியாக சமையலறைக்கு அழைத்து சென்றார்.
 

 

” என்னம்மா?” என்று கேட்டபடி வர.
 

 

” நீ வாடி!” என்றபடி ஃப்ரிட்ஜில் இருந்து பூ எடுத்து வைத்து விட்டார். இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது வாங்கி கட்டி வைத்ததை மகளுக்கு தலையில் சூடிவிட்டவர்.
 

 

” பூ வாங்கியிருந்தேன்டி உனக்கு புடிக்கும் இல்ல அதான்” என்றவர் அவள் தலையிலும் வைத்துவிட்டு, சிறிது கவரிலும் போட்டுக் கொடுத்தார்.
 

 

” அப்புறம் இது என்னதுக்கு மா?”
 

 

“இது என்னடி கேள்வி? தினமும் வச்சுக்குவ. புள்ளைக்கும் வச்சு விடு !”என்று கொடுத்தார்.
 

 

பூ வைத்தவுடன் அவள் சிறிது மகிழ்ச்சியாக உணர.. இரண்டு மூன்று டப்பாக்களை எடுத்துக் கொடுத்தார்.
 

 

” இதுல சின்ன வெங்காயம் உரிச்சு வச்சிருக்க. நாளைக்கு சாம்பாருக்கு வச்சுக்க, இதுல பூண்டு இருக்கு, ஒரு வாரத்துக்கு தாக்கு பிடிக்கும், இல்லனா போன் பண்ணு ,அம்மா ஒருத்தி நான் எதுக்கு இருக்கேன்.சரியா ?தனியா கஷ்டப்படாதடி சுதா! தூங்கி ரொம்ப நாள் இருக்கும் போல, நிம்மதியான தூக்கமே இல்ல போல, வேலைக்கும் போயிட்டு வந்து, வீட்டிலயும் அவசர அவசரமா வேலைய முடிச்சுட்டு, புள்ளைங்களையும் பார்த்துட்டு ,தூங்கவே நேரம் எடுக்கும் இல்லையா ?காலையிலேயே எந்திரிச்சு அவசர அவசரமா கிளம்பனும், கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது தூங்கி எழுந்துரு சுதா, உன் முகத்துல அம்புட்டு அசதி, தூங்கி எழுந்த அப்புறம் தான், இப்பதான் பார்க்க நல்லா இருக்க”  
 

 

” அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. தூங்கிட்டு தான் இருக்கேன்”
 

 

” நீ சந்தோஷமா இருக்கறதா தான் சொன்ன. உன் முகமும் நீ சந்தோஷமா இருக்கனு தான் எடுத்து கொடுக்குது. ஆனா” என்றவர் அமைதியாக.
 

 

” திரும்பத் திரும்ப அதையே பேசாதமா. இன்னும் உனக்கு என்னதான் பிரச்சனை? நல்லா தான் இருக்கோம்.சந்தோஷமா தான் இருக்கேன் போதுமா” என்று சிறிது எரிச்சலுடன் கூற,
 

 

இவ்வளவு நேரம் பேசும் பொழுது சாதாரணமாக பேசியவர். இப்பொழுது சுதாவின் கையை இறுக்கி பிடித்தார்.
 

 

“என்னம்மா!”  என்றாள் அவளும் பரிவாக,
 

 

தன் தாய் தனியாக இருக்கும்போது, தன்னை பற்றி கவலைப்பட்டு ,அவருக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற வருத்தம் அவளுக்கு.
 

 

” நீ சந்தோஷமா இருக்கனு எனக்கு தெரியும் சுதா. ஆனா, ஒரு அம்மாவா உனக்கு சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கு  அது மட்டும் இல்லாம ,இது நான் பண்ண தப்பு, சரி பண்ண வேண்டியதும் என்னோட பொறுப்பு தானே” என்றார்.
 

 

அவள் அமைதியாக தாயைப் பார்த்தபடி இருக்க .
 

 

“நீ சந்தோஷமா இருக்கன்னு சொல்லறது எந்த அளவுக்குனு உன் மனசாட்சிக்கு தெரியும் சுதா. என்னால ஒரு சில விஷயம் உடைச்சு பேச முடியாது. ஆனால், நான் என்ன சொல்ல வரேன்னு உன்னால புரிஞ்சுக்க முடியும். புருஷன் ,பொண்டாட்டி வாழ்க்கைல புரிதலும், நம்பிக்கையும் எந்த அளவுக்கு முக்கியமோ ,அதே அளவுக்கு தாம்பத்தியமும் முக்கியம் தான்.
 

 

என்னதான் வெளியே போயிட்டு வர புருஷன் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டாலும், அவங்களுக்குள்ள ஒரு சின்ன இணக்கம் இருந்துச்சுன்னா, நெருக்கம் ஏற்பட்டுச்சுனா அது காணாமல் போயிடும் சுதா. அது புருஷனுக்கு மட்டும் கிடையாது. பொண்ணுங்களுக்கும் சேர்ந்து தான்  வீட்டுல மாமியார், புருஷன் கூட சண்டைனாலும் இல்லை. வெளியே வேலைக்கு போயிட்டு வந்தாலும் ,இல்ல வீட்டிலேயே வேலை செஞ்சு உடம்பு அசதியா இருந்தாலும், புருஷன் கூட நெருக்கமா , இணக்கமா இருந்தா பொம்பளைங்களுக்கும் மன நிறைவா தாண்டி இருக்கும்.
 

 

ரெண்டு பேருக்குமே தான் சொல்றேன். புருஷன் ,பொண்டாட்டி வாழ்க்கையில புரிதல் நம்பிக்கையோடு சேர்ந்து, இந்த தாம்பத்தியமும் வேணும். சுதா நீ மாப்பிள்ளையை ரொம்ப ஏங்க வைக்கிறியோனு எனக்கு தோணுது. உங்க தனிப்பட்ட வாழ்க்கையில நான் தலையிட விரும்பல தான். ஆனால், ஒரு அம்மாவா உனக்கு சொல்ல வேண்டியதும் என் கடமை தான்.
 

 

இது அவருக்காக மட்டும் நான் சொல்லல. உனக்கும் அந்த எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும். இல்லாம இருக்காது சரியா. ஆனா ,உன்னால அந்த விஷயத்தை விட்டு வெளியே வர முடியல, நீ யோசிச்சிட்டு இருக்க. ஆனா ,அவர் கூட நெருக்கமா இருந்து பாரு, கொஞ்சம் அதுல இருந்து வெளியே வர, மனசு இடம் கொடுக்கும்.மனசுல இவ்வளவையும் வச்சுட்டு எப்படி அவர் கூடனு கேட்காத சுதா. அது நல்லா இருக்காது.
 

 

கொஞ்ச நேரம் அதை ஒதுக்கி வச்சிட்டு, உங்களுக்கான வாழ்க்கையை வாழப் போறா, அதுக்கப்புறம் உன்னால அதிலிருந்து மீண்டும் வெளியே வர முடியும். மனசு விட்டு பேசு சுதா. மாப்ள கிட்ட ,உன் மனசுல தோன்றது சரியோ தப்போ இப்படி எனக்கு தோணுது, நீங்க பண்ணதால தானேனு அவர்கிட்ட மனசு விட்டு பேசு. மாப்பிள தப்பா எடுத்துக்கிற ஆள் இல்ல சுதா. உனக்கே தெரியும்.
 

 

இத்தன வருஷமா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். சரியா பொண்ணுங்களுக்கு மதிப்பு கொடுக்காதவரு கிடையாது .நீ பேசினா காது கொடுத்து கேட்பாரு.  நீ உன் மனசுல தோன்றத சொல்லு, அன்னைக்கு நடந்த விஷயத்துல என் மனசு காயப்பட்டு இருக்குன்னு சொல்லி, உன்னோட வலியை சொல்லு தப்பு கிடையாது.
 

 

ஆனா நீ மனசு விட்டு பேசுனா தான் சுதா எதுவும் சரியாகும். நீயும் மனசு விட்டு பேசாம, அவரும் மனசுல ஒன்னு வச்சுட்டு ரெண்டு பேருமே மனசு விட்டு பேசாம இருந்தீங்கன்னா, என்ன சுதா பண்றது. ஒரு சில விஷயம் பேசிட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கும். ஒரு சில விஷயம் வெளிய வாய் திறந்து பேசினா பிரச்சனையாகும் தான். இது நீங்க மனசு விட்டு பேசினால் தான் சுதா சரியாகும். 
 

 

உன் மனசுல இருக்க வலியும் சரி, அவர் மனசுல இருக்க வலியும் சரி வருத்தத்தை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியப்படுத்துங்க. அதுக்கப்புறம் நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, உங்க வாழ்க்கைய ஆரம்பிங்க, தாம்பத்தியம் முக்கியம் சுதா. அது இல்லன்னா புருஷன் , பொண்டாட்டி வாழ்க்கைல சிக்கல் ஆயிடும் டி. நான் சொல்றது புரியும்.
 

 

அது மட்டும் வாழ்க்கை கிடையாது தான். ஆனா ,புருஷன் பொண்டாட்டி வாழ்க்கைல அதுவும் முக்கியமான அம்சம் தான். உன் வாழ்க்கையை நீயே இழந்து நிக்காத சுதா. இப்போ சின்ன பிரச்சினையா இருக்கறது போக போக வெறுப்பா மாறி இருக்கும் டி. இரண்டு பேருக்குமே சொல்றேன். உனக்கு அவர் மேலேயும் சரி, அவருக்கு உன் மேலேயும் சரி, பேசி தீராத பிரச்சனை எதுவும் கிடையாது .வாய் விட்டு பேசுங்க, மனசு விட்டு பேசுங்க, அதுக்கப்புறம் உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்க அவ்வளவுதான்! ஒரு அம்மாவா என்னால உன் கிட்ட சொல்ல முடியும் “என்று மகளின் நெற்றியில் இதழ் பதித்து, “சந்தோசமா இருடி! உனக்கு பிடிக்கும்னு தான் பூ வாங்கினேன்” என்றார் மீண்டும்.
 

 

அவர் ஆரம்பத்தில் பூ வைத்து விடும்போது, பெரிதாக உணராதவள். இப்பொழுது கூறுவதன் அர்த்தம் புரிய, சிறு தலையசைப்புடன் ,சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

இவ்வளவு நேரம் மன நிறைவாக தான்  இருந்தான் காலையிலிருந்து மனைவியுடனே இருப்பது ..ஆனால், அவள் சமையல் அறையில் இருந்து தலையில் பூவுடன் வரவும் ,அவள் தலையில் பூவை பார்த்தவுடன் ,மனது குதியாட்டம் போட்டது . சொல்லென்னா உணர்வில் தத்தளித்தான் .
 

 

காலையில் கூட அவன் கையாலே பூ வாங்கி வைத்து விட்டான் தான். ஆனால், அது அன்பின் வெளிப்பாடு மட்டுமே !ஆனால், இப்பொழுது அவளை பார்க்கும் போது, காதலோடு சேர்ந்து தாபமும் போட்டி போட்டது என்று தான் கூற வேண்டும்.
 

 

தன்னை அடக்கியவன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு ,மாமியாரிடம் கூறிவிட்டு, தன்னவளையும் அழைத்துக் கொண்டு சிறிது விசில் அடித்தபடியே கிளம்பினான்.
 

 

குழந்தைகளும் சந்தோஷமாக மகிழ்ச்சியுடன் கிளம்பினர். இங்கேயே இரவு உணவையும் முடித்துக் கொண்டுதான் கிளம்பினர்.குழந்தைகள் படிக்க இருப்பதை மட்டும் சிறிது நேரம் பார்த்தபடி இருந்தான் .
 

 

அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்ததை எடுத்து வைத்த படி, படுக்கையை சரி செய்து கொண்டு இருந்தாள். குழந்தைகளை அவன் பார்த்து தூங்க வைத்துவிட்டு நிமிர.
 

 

இவளும் அறைக்குள் நுழைந்திருந்தாள்.
 

 

அவளைப் பார்த்தவனின் கண்கள் அவளையே வட்டமிட்டபடி இருந்தது .அவனது பார்வையை உணர்ந்துதான் இருந்தாள். உள்ளுக்குள்  குறுகுறுப்பு தோன்ற அவ்வப்போது அவனை திரும்பிப் பார்த்தபடி இருக்க.
 

 

அவனும்” சுதா” என்றான் .
 

 

வேகமாக எழுந்து உட்கார்ந்தாள்.
 

 

எதுவும் பேசாமல் கண்களாலே கீழே  குறிப்பிட்டு காட்டினான். சுற்றி வந்து கீழே அவளது பக்கமாகவே  ஒரு பெட்ஷீட் விரித்துப் போட்டவன் , தலையணையும் அதில் போட ,எதுவும் பேசாமல் எழுந்து வந்து அமைதியாக கீழே விரித்த போர்வையில் படுத்துக்கொண்டாள்.
 

 

அவனும் அவளை இறுக்கி அணைத்தபடி படுத்தான். மதியம் படுத்தது என்னவோ தூக்க கலக்கத்தில், அவனுக்கு வேண்டுமென்றால் நினைவு இருக்கலாம் .அவள் தூக்கத்தில் தான் இருந்தாள் .இப்பொழுது இருவருமே விழித்திருக்க, மனதில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை என்றாலும் ,மனது நிம்மதியாக இருக்க .
 

 

தானும் அவனை கட்டி அணைத்தபடி படுத்தாள்.” ஐ லவ் யூ ஆதி!” என்றாள் உள்ளம் நிறைந்து ,அவன் நெற்றியில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு தானாக முன்வந்து இதழ் பதித்தாள்.
 

 

அவனும் இன்பமாக அதிர்ந்து, அவளிடம் தன்னை தேட முயன்றான் .ஆனால், இருவருக்கும் இருவரின் உடல் தேவைகளை தாண்டி, மன தேவைகளே அங்கு தேவையானதாக இருந்தது. அவளது கண், காது ,மூக்கு, நெற்றி என இதழ் பதித்தவன். அவளை கட்டி அணைத்தபடியே இருக்க.
 

 

அவளது கண்களோ அவனைக் கேள்வியாக நோக்கியது.’ வேறு எதுவும் வேண்டாமா ?’என்று கேள்வி அதில் தொங்கி இருந்தது.
 

 

அவனோ ,லேசான புன் சிரிப்புடன் “எனக்கு இன்னைக்கு இதுவே போதும் !நீ எனக்கு பழையபடி கிடைச்சதே ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மு!” என்று மீண்டும் ஒருமுறை அவளது இதழ் தேனை பருகியவன் .கட்டியணைத்தபடியே இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தனர்.
 

 

இவ்வளவு நாட்கள் அவர்களுக்கு இடையில் இருந்த திரை  விலகியது போன்ற உணர்வு இருவருக்கும். காலையில் முதலில் எழுந்தது என்னவோ மகிதான் எழுந்தவன் கீழே இறங்குவதற்கு முற்பட, அங்கு தாயும் ,தந்தையும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்தான். 
 

 

நேரத்தை பார்க்க காலை 7:00 மணி காட்டியது. ‘இன்னும் எழுந்திருக்கவில்லையோ ?’என்று யோசித்தவன். வேகமாக மிதுவை எழுப்பினான் .
 

 

அவள்,” என்னடா?” என்று கேட்க .
 

 

“உஷ்!”என்று உதட்டில் கை வைத்தவன்.” சத்தம் போடாம இறங்கி வா” என்றவன். தாய், தந்தையையும் குறிப்பிட்டு காட்டினான்.
 

 

அவளும் கிலுக்கென சிரிக்க. “சத்தம் போடாம வா மிது” என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். 
 

 

“டேய் நேரமாகுதே இப்ப ஸ்கூலுக்கு கிளம்பனும். என்ன செய்ய ?,ஆனா அம்மா இன்னும் எழுந்திருக்கவே இல்லை “என்று கிச்சனுக்கு செல்ல.
 

 

அங்கும் அனைத்தும் போட்டது போட்டபடியே இருந்தது. இரவு  தூங்க வருவதற்கு முன்பாக  பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு வந்திருந்தாள். ஆனால் எதுவும் சாப்பாடு செய்யாமல் இருக்க.
 

 

” என்னடா பண்றது? இப்போ ஸ்கூலுக்கு கெளம்பணுமே.இனிமே லீவு எல்லாம் போட முடியாது” என்று கேட்க.
 

 

” இரு எதாவது பண்ணுவோம். அப்பா ,அம்மா இப்போதான் சிரிச்சு பேசுறாங்க,  அவங்களுக்குள்ள. அதனால நம்ம டிஸ்டர்ப் பண்ணவும் வேணாம். அம்மா பாவம் தானே !நமக்காக சீக்கிரம் எந்திரிச்சு சமைக்கிறாங்க . அப்பாவும் ஹெல்ப் பண்றாரு தானே. இரு !”என்றவன் மெதுவாக பூனை நடையிட்டு ரூமுக்குள் நுழைந்தவன்.
 

 

அங்கு டேபிளில் இருந்த தந்தையின் ஃபோனை மட்டும் எடுத்துக் கொண்டு மெதுவாக வெளியில் வந்து தன் தாத்தா நேசனுக்கு அழைத்தான்.
 

 

தன் மகன்தான் அழைக்கிறான். என்றவுடன் எடுத்தவர் ,”என்னடா காலையிலேயே ஆதி?” என்று கேட்டார்.
 

 

” தாத்தா நான் மகி பேசுறேன்!”
 

 

” சொல்லுடா பேராண்டி ?”என்றார் குதூகலமாக.
 

 

காலை வேளையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் பேரன் போன் செய்ய மாட்டேனே! என்ற எண்ணம் இருந்தாலும், 
 

 

“தாத்தா எனக்கும் மிதுக்கும்  சாப்பாடு மட்டும் செஞ்சி தரீங்களா ?”
 

 

“ஏன் டா என்ன ஆச்சு?”  என்றார் கேள்வியாக, அவருக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
 

 

” தாத்தா ஒன்னும் இல்ல. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அம்மா இன்னும் எழுந்திரிக்கல. தூங்கிட்டு இருக்காங்க  அதனாலதான்”
 

 

” ஏன்டா உடம்பு சரியில்லையா? “
 

 

“இல்ல தாத்தா ,அம்மாவும் அப்பாவும்” என்றவன் மெதுவாக குசு குசு என்று ..”கட்டிப்பிடிச்சு தூங்கிட்டு இருக்காங்க” என்று கூற,
 

 

அவருக்கும் அந்த பக்கம் என்ன தோன்றியதோ சிரித்து விட்டார். “சந்தோஷம் தானே! சரிடா அப்பா,அம்மாவை  டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றவர்,” சரி நான் பாட்டி கிட்ட சொல்லி உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு மட்டும் ரெடி ஆகுங்க. வேற ரூம் இருக்கு இல்ல, அந்த வீட்ல அங்க போய் குளிங்க ,அப்பா அம்மா இருக்க ரூம்ல போய் சத்தம் போட்டு டிஸ்டர்ப் பண்ண வேணாம். சரியா?”  என்றார்.

“சரி தாத்தா!” என்றவர்கள். யூனிபார்மை மட்டும் எடுத்துக் கொண்டு  , குளிக்க சென்று விட்டார்கள்.

இங்கு நேசன் தன் மனைவியை தேடி சென்றார் .

அப்பொழுதுதான் காலை டீ குடித்துவிட்டு, சமையலுக்கு வெங்காயம் உரித்தபடி இருந்தார். நேசன் சென்று விவரத்தை கூற.

” ஏன் என்னவாம் அவளுக்கு? பசங்களுக்கு சாப்பாடு தர சொல்றீங்க?”

“இன்னும் நம்ப சுதா எழுந்துக்கலையாம் சித்ரா அதான்!” என்று ,

” இன்னும் எந்திரிக்கலைன்னா என்ன ஆச்சு உங்க மருமகளுக்கு?” என்ற கேள்வி சாதரணமாக இருந்தாலும் ,மருமகளுக்கு உடல்நிலை சரியில்லையோ ?என்று அக்கறை ஒளிந்து இருந்ததை நேசனும் உணர்வார்.

தன் மனைவியை மேலும், கீழும் பார்த்தவர் .”உன் பையனும், மருமகளும் தூங்கிட்டு இருக்காங்களா டி !”என்று பொதுவாக கூறினார்.

நேற்று இருவரும் வேலைக்கு செல்லவில்லை. தாய் வீட்டிற்கு சென்றது என அனைத்தையும் யோசித்தவர். அவராகவே எதையோ ஒன்றை யூகித்து விட்டு, “சரி சரி பண்ணலாம் .ஆனா ,கூட மாட நீங்களும் செய்யுங்க. நேரமும் ஆயிடுச்சு புள்ளைங்களுக்கு, அவங்க குளிச்சிட்டு அங்க ரெடியா இருப்பாங்களோ? இல்லையோ ?இல்லனா ,நீங்க போய் கிளப்புற மாதிரி இருக்கும். நானும் சீக்கிரம் செஞ்சாதான் சரியா இருக்கும் . அவங்களுக்கு ஆட்டோ வேற எட்டரை மணிக்கே வந்துரும்னு சொல்லுவான்.” என்றவர் வேகமாக கணவனையும் வெங்காயம் ,பூண்டு உரிக்கும் வேலையில் இணைத்துக் கொண்டார்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page