மயக்கம் -தயக்கம் 7

மயக்கம் -தயக்கம் 7

 

தயா முதல்நாள் இரவு தூங்கும்பொழுது வழக்கத்திற்கு அதிகமாகவே அப்பாவின் உடல்சூடைத் தேடினாள். அதிகவேலை காரணமாக மூளை சோர்வு அடைந்ததில் தூங்கினால் போதும் என்ற நிலையில்தான் விஜயன் வீட்டுக்கு வந்ததே! எப்படியோ சமாளித்துக்கொண்டு குழந்தையுடன் கொஞ்ச நேரம் செலவிட்டுவிட்டு ,அவளுக்கு இரவு சாப்பாட்டையும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு என்று எப்படியும் அவன் தூங்க செல்ல இரவு பதினொன்றை தாண்டிவிட்டது.சாப்பிட்டவன் கொஞ்சநேரம் அலுவலக வேலைகளை கவனித்தான். கிளையண்ட் மீட்டிங் இரவு பத்தரை மணிக்கு தீர்மானமாகி இருந்தது.அலுப்புதான்.வேறு வழி எதுவும் இல்லை. இரண்டு மணிநேரம் நீண்ட அந்த மீட்டிங்கை முடித்தவன் அப்படியே படுக்கையில் சாய்ந்தான்.

 

அவன் அலுவலகத்தில் வெளிநாட்டு ப்ரொஜெக்ட்டுகள் எடுத்து வேலை செய்பவர்களுக்கெல்லாம் இதுதானே நிலைமை என்று தனக்குத்தானே சொல்லியும் கொண்டான்.இந்த வாழ்க்கையில் வெகுதூரம் வந்து விட்ட பிறகு பல விஷயங்களை யோசிப்பதை விடுவது நல்லது. ஆனாலும் சில விஷயங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை வருமே!

 

பக்கத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தால் குட்டி தயா.அவள் மீது கைகளை அணைப்பாய் போட்டுக்கொண்டு தானும் கண்ணயர்ந்தான்.ஏ சி இருபத்தாறில் வேலை செய்து கொண்டிருந்தது. தயா வழக்கமாக தூங்கிவிட்டால் அதிகம் யாரையும் தேடமாட்டாள்.இன்று வழக்கத்துக்கு மாறாக தகப்பனை அதிகம் நாடினாள். தூக்கக் கலக்கத்தில் முதலில் கவனிக்காதவன் மகளின் உடல் சூடு எழுப்பிவிட அவசரமாக எழுந்து பார்த்தான். உடல் சூடு ஆதிக்கத்தில் குழந்தையின் முகம் கூட சிவந்திருந்தது. ஏசியை குறைத்துவிட்டு ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை ஈரம் செய்து குழந்தைக்கு முதலில் நெற்றியில் வைத்தான்.இன்னொரு ஈரத்துணியை வைத்து udal முழுவதும் துடைத்தான். குழந்தைக்கான ஜூரமருந்தை கொடுத்துவிட்டு அருகிலேயே சாய்ந்து அமர்ந்தும் கொண்டான். விடிய விடிய குழந்தையின் அனத்தலில் பயந்தவன் பொட்டு கண் மூடவில்லை. நடுவில் குழந்தை எழுந்து தகப்பன் மார்பில் தலைவைத்து படுத்துக்கொண்டது.

 

ஒரு சொட்டுக்கண்ணீர் இறங்கி விஜயனது கன்னத்தில் உருண்டு விழுந்தது. குழந்தை மருந்தின் வீரியத்தில் தூங்கிவிட, பொழுது புலர்ந்ததும் முதல் வேலையாக தயாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். இன்னமும் மருத்துவர்கள் வந்திருக்கவில்லை. பயிற்சி மருத்துவர்கள் தான் இருந்தார்கள். குழந்தையை ஸ்பெஷல் கேர் பிரிவில் அனுமதித்துவிட்டு மருத்துவர் அரவிந்தனுக்கு அழைத்து பேசியவர்கள் மருத்துவரின் ஆலோசனையில் முதற்கட்ட சிகிச்சையை தொடங்கினார்கள்.

 

எட்டு மணி அளவில் ட்யூட்டிக்கு வந்த சந்தனாவிடம் அனுமதிக்கப் பட்டிருக்கும் நோயாளிகளின் விபரங்களை கொடுத்துவிட்டு ஸ்பெஷல் கேர் பிரிவில் அப்போது இருந்த நர்ஸ் வீட்டுக்கு கிளம்பினார்.

 

காரிடோரின் மூலையில் தொடையில் கைகளை பதித்து முகத்திற்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருக்கும் தயாவின் தகப்பனைக் காண சந்தனாவுக்கு பாவமாக இருந்தது. நிதானமாக அவனருகில் சென்று ” சார்..சார்… “என்று அழைத்துப் பார்த்தாள்.

 

மூன்று அழைப்புகளுக்கு பிறகு நிதானமாக நிமிர்ந்தவன் கண்கள் சிவந்திருந்தது.அவன் அழுதிருப்பது சந்தனாவுக்குப் புரிந்தது. மனம் முழுவதும் வியப்புதான்! பொதுவாக குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அம்மாக்களின் கண்கள் குளம் கட்டிவிடுவதை அநேகமாக பார்த்திருக்கிறாள். அவ்வளவு ஏன் ராகினிக்கு முடியவில்லை என்றால் சந்தனாவுக்கு கண்கள் கலங்கும்.

 

இங்கே குழந்தையின் தகப்பன் கண்கள் கலங்கியிருப்பது கண்டு சந்தனாவின் மனம் நெகிழ்ந்து போனது.’என்ன’ என்று அவளிடம் பார்வையால் கேட்டவனிடம்.,”ஒண்ணுமில்ல சார்,குழந்தை தானே …உடம்பு படுத்தத்தான் செய்யும். ரெண்டே நாள். நோர்மல் ஆகிடுவா பாருங்க.டாக்டர் ஒன்பது மணிக்கு வந்திடுவாங்க “என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள். செல்லும் முன் விஜயராகவனுக்கு தரச்சொல்லி ஒரு காபியை ஆர்டர் செய்தும் விட்டாள்..

 

ஒன்பது மணிக்கு மேல் அங்கே வந்த குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்தன் குழந்தையை பரிசோதித்துவிட்டு சில டெஸ்ட்டுகளை எடுக்க சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

 

 

ஒருபக்கம் அலுவலகத்திலிருந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க இன்னொருபக்கம் குழந்தை வாடிய மலரை போல மறுத்த்துவமனையின் படுக்கையில் படுத்திருக்க , மனம் நிலைகொள்ளாமல் தவித்தான் விஜயன். அருகில் தனது பெற்றவர்கள் இருந்திருந்தால் இப்போது எவ்வளவு மனதுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருக்கும் என்றும் தோன்றாமல் இல்லை. தனிமை இந்த நேரத்தில் எவ்வளவு கொடுமை என்றுதான் தோன்றியது.

 

குழந்தைக்கு எடுக்கப்பட்ட டெஸ்டுகளின் முடிவுகள் வர மதியம் ஆகிவிடும் என்றுவிட்டார்கள். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருக்க முடியும்? அவனிடம் பேச முயன்ற இரண்டு நர்ஸுகள் வெற்றிகரமாக தோல்வியை தழுவினார்கள். அவர்கள் கேட்ட விஷயம் கூட அவனால் கிரகித்துக்கொள்ள பட்டிருக்கவில்லை. தொடையில் கைகளை ஊன்றி தலையை அதில் தாங்கி அமர்ந்துவிட்டான். மதியம் ஆகியும் சாப்பிடும் எண்ணம் கூட வந்திருக்கவில்லை. அலுவலகத்திலிருந்து பி ஏ சுந்தரம் அழைத்துப்பார்த்துவிட்டு அவன் எடுக்கவில்லை என்றதும் அவனது வீட்டுக்கு சென்றவர் வீட்டில் வேலை செய்பவர்கள் மூலம் விஷயத்தை அறிந்துகொண்டார்.

 

அவனது அறைக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றாலும் வேறு வழி இல்லை என்பதால் அங்கே சென்று அவனது தனிப்பட்ட மற்றும் அலுவலக லப்டோப்புகளை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.

 

அங்கே மருத்துவமனையில் மற்ற நோயாளிகளை பார்த்துவிட்டு அந்தப் பக்கமாக வந்த சந்தனாவுக்கு விஜயராகவன் அமர்ந்திருந்த தோற்றம் பாவமாக இருந்தது. சமூகத்தில் அவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் மனிதன்.அவ்வளவு சாதாரணமாக அருகில் சென்று பேசிவிட முடியாது.

 

ஆனாலும் அவள் செய்யும் வேலையும்,அடிப்படை மனிதாபிமானமும் அவளை அமைதியாக இருக்க அனுமதிக்கவில்லை. விஜய ராகவன் அருகே சென்று “சார்..சார்.. என்று அழைத்தாள். இரண்டு மூன்று முறைகள் அழைத்தபிறகு,அவளது குரல் எட்டியவனாக நிமிர்ந்தவன் கேட்ட முதல் கேள்வி “டெஸ்ட் ரிபோர்ட்ஸ் வந்துடுச்சா?” என்பதுதான்.

 

“ரிப்போர்ட்ஸ் வர நாலுமணி ஆகும் சார்.இப்போதான் மணி பதினொன்னு ஆகுது. நீங்க இங்கே இருந்தாலும் பாப்பாவை நாங்கதான் பாக்கணும். உங்களுக்கு கொடுத்திருக்கிற ரூம்ல போய் ஸ்டே பண்ணிக்கோங்க. உங்களுக்கு அப்டேட் பண்ணுவோம் .” என்றாள்.

 

“புரிஞ்சுக்கோங்க மிஸ். என்னால அங்கே தனியா இருக்கவே முடியாது.குழந்தை நிலைமை பத்தியே யோசனை ஓடும். அங்கே இருந்து என்ன பண்ண? இங்கேயே இருக்கேன்” என்று பிடிவாதம் செய்தான்.

 

” ஓகே சார்.யூர் விஷ். நீங்க …சாரி ..உங்க கூட வேறே யாராச்சும் வந்திருக்கங்களா? நீங்க புட் ஏதாச்சும் எடுத்தீங்களா?” என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள்.

 

” நோ மிஸ்.குழந்தை இப்படி இருக்கும் பொழுது நா எப்படி சாப்பிட முடியும்? அண்ட் நா தனியாத்தான் ஹாண்டில் பண்ணறேன். நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம் “

 

அவனது கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை உருக்கியது. நிச்சயம் இவன் இந்த தனிமையை விரும்பவில்லை என்று புரிந்தவளாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள். சரியாக அரைமணிநேரம் சென்ற பிறகு , அந்த தளத்தின் பி ஆர் ஓ வந்தவர் கைகளில் மூன்று நட்சத்திர ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவு . அதோடு வந்தவர்,” சார், உங்களுக்குனு ரூம் குடுக்கப் பட்டிருக்கு.அட்டெண்டர் அங்கே தான் இருக்கணும். இந்த மாதிரி காரிடார்ல உட்கார அனுமதி இல்லை.அண்ட் உங்களுக்க்காக புட் வந்திருக்கு. சாப்பிடுங்க “என்றவர் அவனை விடாப்பிடியாக அவனுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் அறைக்கு அழைத்துச்சென்றார்.

 

அந்த அறையே ஏதோ நட்சத்திர ஹோட்டலின் அறை போல சகல வசதிகளுடன் இருந்தது. பி ஆர் ஓ இவனிடம் ” சார்,இங்கே வை பைவ் கனெக்ஷன் இருக்கு . இது பாஸ்வோர்ட் ” என்று ஒரு நம்பரை தந்துவிட்டு “ஏதாச்சும் வேணும்னா இன்டெர்க்காம் ல சொல்லுங்க ” என்றுவிட்டு சென்றும் விட்டார்.

 

உணவும் இங்கே அறையில் தான் இருப்பதும் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்த நர்ஸின் வேலைதான் என்று புரிந்துகொண்ட விஜயனின் முகத்தில் லேசாக ஒரு புன்னகை கீற்று.

 

அவன் சாப்பிட்டு முடிக்கும் சமயத்தில் சுந்தரம் வந்து சேர்ந்தார். அதற்குப்பிறகு அவர் அன்றைய வேலைகளை அடுக்க அதில் மூழ்கிப் போனான். நடுவில் இரண்டு முறை சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தான்.இன்னமும் குழந்தை விழிக்கவில்லை. ” பாப்பாவுக்கு ட்ரிப்ஸ் போகுது சார்.நாங்க பார்த்துக்கறோம். டாக்டரும் மானிட்டர் பண்ணிக்கிட்டு இருக்காரு ” என்றார் அங்கே இருந்த நர்ஸ்.

 

லேசான தலையசைப்புடன் அங்கிருந்து சென்று மீண்டும் வேலையை தொடர்ந்தான். மாலை ரிபோர்டுகள் வந்ததில் குழந்தைக்கு வைரல் காய்ச்சல் மற்றும் அஜீரணம். பயம் கொள்ளும் அளவுக்கு பிரச்சனை இல்லை என்றார்கள். ஆனாலும் சரியாகும் வரை குழந்தை மருத்துவமனையில் இருப்பது நலம் என்றும் பரிந்துரை செய்யவே oru பெருமூச்சை வெளிப்படுத்தினான் விஜயராகவன்.

 

சுந்தரத்திடம்,” எனக்கு வீட்டிலேந்து டிரஸ் கொண்டு வர சொல்லுங்க. புட் இங்கே ஹாஸ்பிடல்லேயே கான்டீன் ல அரேன்ஜ் பண்ணிடுங்க.நாளைக்கு மோர்னிங் நீங்க இங்கே வந்து என்னை பார்த்துட்டு ஆபிஸ் போய் வேலை செய்யணும்.எனக்கு ரெகுலர் அப்டேட் வேணும் ” என்றுவிட்டு அவரை அனுப்பி வைத்தான்.

 

அவனுக்கான விஷயங்களை செய்து கொடுத்துவிட்டு சென்றார் சுந்தரம். இரவு வீட்டிலிருந்து அவனுக்கு உணவும்,ஒரு வாரத்திற்கான ஆடைகளும் வந்து சேர்ந்தன.சுந்தரத்தின் அக்கறையில் மனம் ஒருமுறை தளும்பியது விஜயனுக்கு.

 

இரவு அவனது அம்மா அழைத்துவிட்டார்.சுந்தரம் அவனது அப்பா ஆனந்திடம் வேலை செய்தவர்தான்.அதோடு இருவருக்கும் தனிப்பட்ட நட்பும் உண்டு. சுந்தரத்தின் மூலம் விஷயம் அறிந்தவர்களுக்கு பதட்டமே உச்சபட்சமாக இருந்தது. கனடா சென்று இருக்கும் மாப்பிள்ளை இன்னமும் வந்திருக்கவில்லை.மகளையும், அவளது சிறு குழந்தையையும் விட்டு வரவும் யோசனையாக இருந்தது.இப்போது தான் வாணிக்கும் உடல்நிலை கொஞ்சம் பரவாயில்லை.

பேசியவர் குரலில் அவரது உணர்வுகள் அப்பட்டமாக வெளிப்பட்டது.” டேய் விஜய் … அப்பாவை வேணா வர சொல்லவா? தனியா எப்படி மேனேஜ் செய்வ ? என்று வரிசையாக கேள்விகள். அவன் அப்பா கூட கோவத்தை ஓரமாக போட்டுவிட்டு பேசினார்.

” நானே மேனேஜ் செய்திடுவேன். ஹாஸ்பிடல் நல்ல கேர் எடுத்துக்கறாங்க.பார்த்துக்கலாம் ” எண்டு முடித்துவிட்டான்.குரலில் கொட்டிக்கிடக்கும் ஆதங்கம் அதை பெற்றவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

மலையில் கிளம்பும் முன்னர் ஒரு முறை மருத்துவர் அரவிந் வந்து பார்த்துவிட்டு,”ஒண்ணும் வொர்ரி பண்ணிக்க வேணா. இது இந்த சீசன்ல வரதுதான்.மோர்னிங் பாக்கறேன் ” என்றுவிட்டு கிளம்பியும் விட்டார்.

 

காலையில் இவன் வரும் பொழுது டியூட்டியில் இருந்த யாரும் இப்போது இல்லை.எல்லாம் புது முகங்கள் .தானும் தனது அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.தூக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்து விடிகாலையில் தூங்க முடிந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page