மனிஷாவை நெருங்கி வந்த அம்பிகா, இன்னைக்கு டைனிங் டேபிள்ல விதுரன் உன்கிட்ட நடந்துக்கிட்டது வெறும் சேம்பிள் தான்! இனிமேலு விதுரன் உன்ன அவன் கிட்டயே சேர்க்க மாட்டான் அவன் பிரதிக்ஷாவை காதலிக்க ஆரம்பிச்சுட்டான்.
அதனாலதான் அவ சாப்பிடாம இருக்கிறத பார்த்து அவனுக்கு பிடிக்காத பிரதிக்ஷாவிற்கு புடிச்ச தோசைய செய்யச் சொல்லி அவளை சாப்பிட வைக்க போட்ட திட்டம், ஆனா இடையில வந்து நீ எல்லாத்தையும் கொலாப்ஸ் பண்ணிட்ட! ஆனாலும் விதுரனும் பிரதிக்ஷா சாப்பிடாம போனதுனால சாப்பிடாம அவகூடயே போயிட்டான், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணிட்டாங்க, நீ இடையில இருந்து தேவையில்லாத வேலை பாத்துட்டு இருக்காத! அவங்க ரெண்டு பேரு தான் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து வாழணும்ங்கறது அந்த கடவுளுடைய விதி, அதை நீயும் நானும் யாரும் நினைச்சாலும் மாற்ற முடியாது! அதனால ரெண்டு பேரையும் பிரிக்கலாம்னு நினைக்கிற என்னத்த மாத்திகிட்டு இப்பவே இங்க இருந்து கிளம்பு!” என்று கூறினார் அம்பிகா.
அம்பிகா கூறியதை கேட்டு சிரித்து விட்டு,”நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்கன்னு கற்பனை உலகத்துல மிதக்குறீங்க போல, அது நடக்காது! விதுரனும், பிரதிக்ஷாவும் மியூச்சுவல பிரியறதுக்கு டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டாங்க. ஆறு மாசம் அவங்க சேர்ந்து வாழணும், அதுக்காகத்தான் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்க! அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறத பார்த்துகிட்டு அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கனு நம்பாதீங்க,
விதுரன் எனக்குத்தான், விதுரன் என்னைய தான் காதலிக்கிறான். நான்தான் உங்களுக்கு மருமகளா வரப்போறேன். தேவை இல்லாம விருந்தாளி மாதிரி இந்த வீட்டுக்கு வந்த அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்ன பகைச்சுக்காதீங்க, அதுதான் உங்களுக்கு நல்லது!” என்று கூறினாள் மனிஷா.
மனிஷா சொல்லி சென்ற வார்த்தைகள் எல்லாம் அம்பிகாவின் மனதில் முள்ளாக தைத்தது.
அதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க அம்பிகாவின் அலைபேசியில் அழைப்பு வந்தது.
யார் என்று பார்க்க சரஸ்வதி தான் அழைத்திருந்தார். அம்பிகா அழைப்பை ஏற்று காதில் வைக்க
“எப்படி இருக்க! ரேணு விதுரன் பிரதிக்ஷா எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டார் சரஸ்வதி.
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம், அங்க நீ, அண்ணா எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ” என்று கேட்டார் அம்பிகா.
“நாங்க நல்லா இருக்கோம்,சரி சொல்லு அங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு?” என்று இங்குள்ள நிலவரத்தை சரஸ்வதி விசாரிக்க, இங்கு நடந்ததை எல்லாம் கூறினார் அம்பிகா.
இந்த மனிஷா தான் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கா?” என்று அம்பிகா சொல்ல,
“ரஞ்சித்தும் மனிஷா ரெண்டு பேரும் அங்க இருக்கிறது நல்லதில்லை. இப்போதைக்கு அவர்கிட்ட பேசி ரஞ்சித இங்கே வர வச்சுட்டேன். இப்போ மனிஷா பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிட்டாளா? மனிஷா அங்க இருக்கிறது விதுரனோட வாழ்க்கைக்கு நல்லதில்லை! சீக்கிரத்துல அவளை அங்கிருந்து துரத்தணும்,
நேரடியா மனிஷாவை வீட்டை விட்டு போனு நம்ம சொன்னால் விதுரன் வீம்புக்கே அவள வீட்ல இருக்க சொல்லுவான், அதனால வீட்டில இருந்து அவளை வெளியில துரத்துவதற்கு நம்ம வேற ஏதாவது தான் யோசிக்கணும்!” என்று சரஸ்வதி கூறினார்.
“நானும் அதைத்தான் இவ்வளவு நேரம் யோசிச்சுகிட்டு இருந்தேன்!” என்று அம்பிகா சொல்லிக் கொண்டிருக்க,
“சரி நான் சொல்றத செய்!” என்று சரஸ்வதி சொல்ல அதைக் கேட்ட அம்பிகாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“நான் சொன்னத நல்லபடியா பண்ணு மனிஷா இங்கே இருந்து துண்டை காணோம் துணியை காணோம்னு யாருகிட்டயும் சொல்லாம ஓடிடுவா! ரஞ்சித கொஞ்ச நாளைக்கு அந்தப் பக்கம் வராத மாதிரி ஏதாவது பண்றேன். இவங்க ரெண்டு பேரும் எந்த இடைஞ்சலும் கொடுக்கலைன்னாலே பிரதிக்ஷாவும் விதுரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழ ஆரம்பிச்சிடுவாங்க!” என்று கூறினார் சரஸ்வதி.
“ஆனாலும் ஆறு மாசம் கழிச்சு அவங்களுக்கு கோர்ட்டில் இருந்து டைவர்ஸ் வந்துருமே!” என்று அம்பிகா வருத்தத்தோடு கேட்க,
“சேர்ந்து வாழ ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் எங்களுக்கு டைவர்ஸ் வேண்டான்னு சொல்லிடுவாங்க அதனால நீ எதையும் நினைச்சு கவலைப்படாத! நான் சொன்னதை மட்டும் செய் எல்லாம் நல்லபடியா நடக்கும்!” என்று கூறி அழைப்பை அணைத்தார் சரஸ்வதி.
சரஸ்வதி அழைப்பை அணைத்ததும் அம்பிகா ரேணுவை தேடி அவளுடைய அறைக்கு சென்றார்.
இங்கு,
மனிஷா கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். ‘நீ அவங்க ரெண்டு பேரையும் சாப்பிட விடாமல் போட்ட திட்டம் கூட நல்லது தான். நீ அவங்க ரெண்டு பேரையும் சாப்பிட விடாம ஆக்குன ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஹோட்டல் போய் சாப்பிடுறதுக்காக வெளியில கிளம்பி போயிட்டாங்க, அதுவும் பைக்ல!’ என்று அம்பிகா சொன்ன வார்த்தை மனிஷாவின் காதுகளில் கணீர் கணீர் என்று ஒலித்தது.
அம்பிகா பொய் சொல்கிறார் என்று நினைத்த மனிஷா விதுரனின் அறைக்குச் சென்று பார்க்க அங்கு இருவரும் இல்லாமல் இருந்தனர்.
உடனே மனிஷா தன்னுடைய அலைபேசியில் இருந்து விதுரனுக்கு அழைப்பை மேற்கொள்ள விதுரன் அவளுடைய எண்ணை பார்த்துவிட்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை அழைப்பை கட் செய்தான். அதையெல்லாம் நினைத்து இங்கு கோபத்தில் அறையில் இருந்த பொருள்களை எல்லாம் உடைக்க தொடங்கினாள் மனிஷா.
ரஞ்சித்துக்கு ஏற்கனவே மனிஷா அழைப்பை விடுத்திருந்ததால் ரஞ்சித் அவளுக்கு அழைப்பை விடுக்க, கோபத்தோடு அழைப்பை ஏற்றாள் மனிஷா.
“என்னாச்சு போன் பண்ணி இருக்க?” என்று ரஞ்சித் கேட்டு முடிக்கவில்லை, ” நீ எனக்கு என்னனு அங்க போய் இருந்துட்ட, இங்க என்னென்ன நடக்குதுன்னு தெரியுமா? நம்ம திட்டம் எதுவும் நடக்காது போல!” என்று கோபத்தில் கத்தினாள் மனிஷா.
“முதல்ல கத்தாம அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லு, அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு சொல்றேன்!” என்று ரஞ்சித் சொல்ல, இங்கு நடந்ததை எல்லாம் கூறினாள் மனிஷா.
“அங்க இவ்வளவு நடந்து இருக்கா? இரு அங்க கிளம்பி நான் வாரேன்!” என்று ரஞ்சித் கோபத்தோடு சொல்ல அவனுடைய அறைக்குள் நுழைந்தார் ரஞ்சித்தின் அப்பா ராம் தேவ்
“யார்கிட்ட ரஞ்சித் இவ்வளவு கோபமா பேசிக்கிட்டு இருக்க,எங்க போக போற?” என்று கேட்க ரஞ்சித் தடுமாறினான்.
“ரஞ்சித் இங்க உன்னைய வர சொன்னதுக்கு காரணம் நம்மளோட பிசினஸை இனிமேல் நீ தான் பாத்துக்குறணும்! எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருக்கு, இப்போதைக்கு என்னால பிசினஸ கவனிக்க முடியாது. டாக்டர் என்னைய ஒரு ஆறு மாசம் பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு. இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டு உருவாக்கின சாம்ராஜ்யத்தை யாரையும் நம்பி கைல கொடுக்க முடியாது, அதனால பிஸ்னசை
நீ தான் பாத்துக்கணும். உனக்கு பிசினஸ் மேல இன்ட்ரஸ்ட் இல்லைன்னுதான் வக்கீலுக்கு படிச்சு வக்கீல் ஆகிட்ட. கொஞ்ச நாள் அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நம்ம பிசினஸை மட்டும் பாத்துக்க!”என்று கூற அதிர்ச்சியாகினான் ரஞ்சித்.
“அப்பா பிசினஸ் மேலே எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்று உங்களுக்கு தெரியும் தானே! என்னால பிசினஸ்ச பாத்துக்க முடியாது ” என்று ரஞ்சித் சொல்ல,
“அப்போ சரி நான் விதுரன் கிட்ட சொல்லி பார்க்க சொல்றேன்!” என்று ரஞ்சித்தை பார்த்துக்கொண்டே கூறினார் ராம்தேவ்.
விதுரன் என்ற பெயரை கேட்டதும் கோபமாகி, ” அதெல்லாம் விதுரன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் நானே பிசினஸ் பாத்துக்குவேன்!” என்று எதையும் யோசிக்காமல் அடுத்த நொடியே பதிலை கொடுத்தான்.
‘விதுரன் பார்த்துக் கொள்ளுவான்’ என்று கூறினால் ரஞ்சித் விடாப்பிடியாய் இப்படித்தான் சொல்லுவான் என்பதை உணர்ந்ததால் தான் ராம்தேவ் ரஞ்சித்திடம் இப்படி கூறியிருக்க, ரஞ்சித்தும் தான் நினைத்தது போல் சொல்ல மனதிற்குள் புன்னகைத்தார் ராம்தேவ்.
!சரி ஒரு ஆறு மாசம் மட்டும் நீ பாத்துக்க, அதுக்கப்புறம் அப்பாவே வந்து எல்லாத்தையும் பாத்துக்குறேன், உன்னால முடியலைன்னால் இப்பவே சொல்லு நான் விதுரன் கிட்ட சரஸ்வதியை வச்சு பேசுகிறேன்!” என்று மீண்டும் கூறினார்
“அதான் சொல்லிட்டேனே என்னால முடியும், நான் பார்த்துக்குறேன் நீங்க யார்கிட்டயும் சொல்லி விதுரன் கிட்ட பேச சொல்ல வேண்டாம், எப்போ கம்பெனிக்கு வரணும்னு மட்டும் சொல்லுங்க, நான் வாரேன்!” என்று கூறிவிட்டு விறு விறு என்று தன்னுடைய அறைக்கு சென்று விட்டான் ரஞ்சித்.
அப்பாவும் மகனும் பேசிக்கொண்டிருந்ததை அங்கு வந்த சரஸ்வதி கேட்டுவிட , ரஞ்சித் அங்கிருந்து சென்றவுடன் ராம்தேவை நோக்கி சென்றார் சரஸ்வதி.
“பரவால்ல, நான் கூட ரஞ்சித்த எப்படி ஆறு மாசம் விதுரன் வீட்டுக்கு போக விடாம செய்யலாம்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன், ஆனால் நீங்க நல்லபடியா திட்டம் போட்டு ரஞ்சித போக விடாம பண்ணிட்டீங்க, ரொம்ப நன்றி!” என்று சரஸ்வதி சொல்ல,
“நீயும் அம்பிகாவும் பேசுனத கேட்டேன்! ஆறு மாசம் ரஞ்சித் அவர்களுடைய வாழ்க்கையில எந்த குறுக்கிடும் செய்யாம இருந்தால் அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுவாங்கன்னு நீ சொன்னது என் காதுல விழுந்துச்சு, இத்தனை நாள் தப்பு மேல தப்பு நிறைய பண்ணிட்டேன்.
ரஞ்சித் இப்படி வளர்ந்ததுக்கு காரணம் நான் தான். அவன் பண்ற தப்ப தடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு, அதான் என்னால முடிஞ்சத செஞ்சுருக்கேன், இதுக்கு எனக்கு நன்றி சொல்லணும்னு அவசியம் இல்ல, எல்லா உண்மையும் தெரிஞ்சு இவ்வளவு நாள் அமைதியா நாங்க பண்ற எல்லா தப்பையும் பொறுத்திருந்தா உனக்கு தான் நாங்க நன்றி சொல்லணும், ஆனால் அதுக்கு நாங்க தகுதியானவங்க கூட கிடையாது, எங்கள மன்னிச்சிரு!” என்று கூறிவிட்டு குற்ற உணர்ச்சியில் சரஸ்வதியின் முகத்தை பார்த்து பேச முடியாமல் அங்கிருந்து நகன்றார் ராம்தேவ்.
இங்கு
‘ரஞ்சித் எப்படியும் இங்க வந்துருவான், ரஞ்சித் வந்ததுக்கப்புறம் இவங்க எல்லாருக்கும் இருக்கு ‘ என்று சொல்லி யோசித்துக் கொண்டிருக்க அவளின் அலைபேசியில் அழைப்பு சத்தம் கேட்டது.
யார் என்று பார்க்க முன்பின் தெரியாத புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்க அதை ஏற்று காதில் வைத்தாள் மனிஷா.
“என்ன மனிஷா குட்டி எப்படி இருக்கீங்க? நல்லா தான் இருப்பீங்க, புதுசா ஒரு பணக்காரன வளைச்சு போட்டு சந்தோஷமா இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேனே! அது உண்மையா?”என்ற குரல் கேட்க அப்படியே அதிர்ச்சியில் திகைத்தாள் மனிஷா.
