மயக்கம் – தயக்கம் 9
சந்தனா தனது அம்மாவிடம் பேசிய பிறகு யாரிடமும் எதுவும் பேசும் மன நிலையில் இல்லை.இன்னமும் சொல்லவேண்டும் என்றால் மனதளவில் அவள் வெகுவாக துவண்டு போயிருந்தாள். ஏற்கனவே மருத்துவமனையில் காலையிலிருந்து வேலை.அதோடு அரவிந்தனிடம் பேசியவை என்று இவற்றிலிருந்து கொஞ்சமாவது தூர நிற்கலாம் என்று வீட்டுக்கு வந்தால் இவளுடன் வாசலில் செருப்பை கழற்றிவிட்டு பிரச்னையும் வந்து நின்று ,’ஹாய் -ஹல்லோ’ என்றால் இவளும் தான் என்ன செய்ய முடியும்?
இன்று அம்மா இப்படி பேசுவார் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை.அது என்ன இவ்வளவு வருஷங்கள் இல்லாமல் இப்போது பெற்றவர்களுக்கு பெண்ணை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஆசை ?இதற்கும் நான் கல்யாணம் செய்துகொண்டு செல்வதற்கும் என்ன தொடர்பு?’ என்றெல்லாம் அவளுக்குள் ஆயிரம் கேள்விகள். பதில் சொல்லும் அளவில்தான் யாரும் இல்லை.
சாப்பிட்ட வேகத்தில் அறைக்குள் சென்று ராகினி தூங்கிவிட்டாள். அம்மாவும் அப்பாவும் கூட தூங்க சென்று விட அடுப்பங்கரையில் தனது யோசனைகளை தொடர்ந்தவாறே மற்ற வேலைகளை செய்துவிட்டு தூங்க செல்லும் பொழுது மணி பத்தரை என்று காட்டியது. காலையில் எட்டாவது மணிக்கு மருத்துவமனையில் இருந்தாக வேண்டும் என்று அவசரமாக உறங்க சென்றவளுக்கு அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் உறக்கம் கண்களை தழுவியது.
வீட்டுக்கு சென்ற அரவிந்தனுக்கு சந்தனா பேசியவைகளே மீண்டும் காதுகளில் எதிரொலிக்க தூக்கம் கண்ணாமூச்சி ஆடியது. மனதின் உணர்வுகள் ஒருபுறம், சந்தனாவுடன் உடல் சார்ந்த கனவுகள் ஒருபுறம் என்று பாடாய்படுத்தி எடுக்க தூங்குவதற்கு பிராயர்த்தனம் தான். சமீப காலமாக இரவில் இந்த வெறுமையை தவிர்க்க முடியவில்லை.
கண்டிப்பாக அப்பா ஒப்புக்கொண்டாலும் அம்மாவை சம்மதிக்க வைப்பது கடினமான ஒன்று என்று அவனுக்கு தெரியும்.மூளைக்குப் புரியும் விஷயங்கள் அநேகமாக மனதிற்குப் புரிவதே இல்லை .அந்த நிலைதான் இப்போது அரவிந்தனுக்கும். மனஅழுத்தம் கூடிப்போனதுதான் மிச்சம்.
தன்னுடைய நுட்பமான நுண்ணுணர்வுகளை சந்தனாவால் மட்டுமே உணர முடியும். அவளுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ளவும் முடியும் என்று தீர்மானமாக நம்புகிறான் அரவிந்த். சந்தனாவின் மனதில் அரவிந் குறித்த எந்த எண்ணமும் இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.ஏனெனில் எனக்கு அவளது மனதின் வார்த்தைகள் மட்டுமல்ல. அவளின் மனமும்,உண்மை நிலையும் தெரியும். எல்ல விஷயங்களையும் எல்லோரிடமும் கடை பரப்புவது இயலாது.அது கூடவும் கூடாது. நம்முடைய ரகசியமும் நம்முடன் மட்டுமே இருப்பது மரியாதை.
இவ்வளவு மறுப்புகளைப் பதிவு செய்யும் சந்தனா தன்னுடைய அந்தரங்கத்தை அவனிடம் சொல்லவே விழையவில்லை.விரும்பவும் இல்லை.இதுதான் அரவிந்தன் மீதான,அவன் திருமணம் குறித்து கேட்டதற்கான அவளது உறுதித் தன்மை. இதை புரிந்துகொள்ளும் சாத்தியங்கள் அரவிந்தனுக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
மறுநாள் காலையில் ராகினிக்கு பள்ளிக்கு செல்ல தயார் செய்து கொண்டே சமையலில் பாதையை முடித்துவிட்டாள் சந்தனா.ஏழு மணிக்கு கிளம்பியவள் ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டாள். இன்று ஏனோ உடம்பு வெகுவாக சோர்ந்து இருக்கிறது. சத்துமாவு கஞ்சி குடித்துவிட்டுதான் கிளம்பினாள். மருத்துவமனைக்குள் நுழைந்து யூனிபோர்ம் போட்டுகொண்டு தனது முடியை கொண்டையாகப் போட்டவள் மேலே தான் வேலை செய்யும் சிறப்புப் பிரிவுக்குள் நுழைந்தாள். டுயூட்டி டாக்டரிடம் சென்று உடம்பு நிலையை சொல்லி பரிசோதனைக்குப் பிறகு மருந்துகளை வாங்கிக்கொண்டாள். அதில் முதல் டோஸ் எடுத்துக்கொண்டுவிட்டு ஒவ்வொரு அறையாக சென்று நோயாளிகளை பார்த்தாள். கேஸ் ஷீட்டுகளை ஒருமுறை படித்தும் மனதுக்குள் பதிய விட்டவள் விஜயனின் மகள் தயா இருக்கும் அறைக்குள் வந்தாள்.
தயா இன்னமும் தூக்கத்தில் இருக்க அவள் அருகே கவலை படிந்த முகத்துடன் விஜயராகவன். அவன் கையில் காபி கோப்பை இருந்தது. ” சார், குட் மார்னிங். இன்னமும் காபி குடிக்கலையா? ” என்று கேட்டவளிடம் ,”ம்ஹும்.. இன்னமும் இல்ல.நீங்க மிஸ்?” என்று மரியாதை நிமித்தமாகக் கேட்டு வைத்தான். குழந்தைக்கு ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் பாட்டில் காலியானதை மாற்றிவிட்டவள்,” தாங்க்யூ, நா குடிச்சாச்சு. யு கேரியோன். பட் ,இங்கே பேஷண்ட் இருக்குற இடத்தில இதெல்லாம் கொண்டுவர அனுமதி இல்ல. உங்க ரூமுக்கு எடுத்து போய் குடிக்கலாமே?” என்றவள் சொன்ன விதத்தை மனதில் சிலாகித்தபடியே,”ஓஹ் .. சாரி .நா என்னோட ரூமுக்கு போறேன் ” என்று அவ்விடம் நகர்ந்தான்.
அந்த அறையிலிருந்து சந்தனாவும் வேலையை முடித்துவிட்டு அடுத்தடுத்த அறைகளுக்கு சென்று பார்வையிட்டாள். பிறகு தனது நர்ஸ் ஸ்டேஷனில் வந்து அமர்ந்து கொண்டாள்.
உடன் அங்கே இன்னும் மூன்று நர்ஸுகள் அமர்ந்து கொண்டு பேஷண்டுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். உடனே அமர்ந்திருந்த சந்தனா அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் வாயை திறந்து ஒன்றும் பேசவில்லை. பொதுவாக இதுபோல பேச்சுக்களில் அவள் உடன் அமர்ந்திருப்பாளே தவிர தனது வார்த்தைகளை விடவே மாட்டாள்.ஆரம்பத்தில் இவளது இந்த குணம் மற்றவர்களுக்கு எரிச்சல் தருவதாகத் தான் இருந்தது.
“என்ன ,சந்தன மகாராணி எதுவும் பேச மாட்டார்களோ?” என்று நக்கல் அடிப்பார்கள்.இவள் எப்படி இங்கே எதுவும் பேசமாட்டாளோ,இவர்கள் பேசுவதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் மாட்டாள்.அதனாலேயே இவளை யாரும் ஒன்றும் சொல்வது இல்லை.
இன்று இவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தாலும் மனமோ தனது வீட்டில் நடந்தவற்றில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்தில் மற்ற துறைகளில் இருக்கும் சிறப்பு மருத்துவர்கள் மேலே தங்களின் பேஷண்டுகளை பார்க்கவென வர அங்கே இருந்த நான்கு செவிலியர்களுக்கும் இறக்கை முளைக்காத குறை. ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு உட்காரகூட முடியவில்லை. அரவிந்தன் இன்னமும் வந்திருக்கவில்லை.மற்ற மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டு சென்று விட்டார்கள். அரவிந்தனுக்கு மேலே இரண்டு கேஸுகள் .ஒன்று தயா.இன்னொரு குழந்தைக்கு பேதி விடாமல் ஆகியதால் முதல்நாள் மாலை தான் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.
மருத்துவரின் அலைபேசி எண்ணிற்கு அழைத்துப்பார்த்தும் எடுக்கவில்லை. கீழே சென்று விசாரித்துவிட்டு வந்ததில் அவர் அரைநாள் விடுப்பு என்று தெரியவந்தது. சந்தனாவுக்குத்தான் மனமே சரியில்லை.தான் முதல் நாள் பேசியதன் தாக்கம் என்று புரிந்தது.அதற்க்காக அவள் என்ன செய்ய முடியும்? தவறான நம்பிக்கையை விதைப்பதைவிட வலித்தாலும் உண்மையை சொல்லிவிடுவது என்று தானே அவ்வளவு தூரம் பேசியது!
இருவருக்கும் திருமணம் செய்துகொள்ள சம்மதம்தான் என்றாலும் இருபக்க பெரியவர்களும் சம்மதிக்காவிட்டால்,அடுத்து என்ன என்று யோசிக்க வேண்டாமா? எப்படியும் தன்னால் வீட்டை விட்டு வரமுடியாது. அதே நிலைமை தான் அங்கேயும். அரவிந்தன் சரியான அம்மா கோண்டு. அம்மாவை பார்க்காமல் ஒரு நாளை கடத்துவதுகூட அவ்வளவு கடினம்.அப்படி இருக்கும்பொழுது வேறே என்னவென்று புரியவைப்பது?
தன்னுள் கேள்விகளைக் கேட்டு அதற்க்கான பதில்களையும் சொல்லிக்கொண்டு என்று ஒரு விசித்தித்திரமான விஷயத்தை செய்துக்கொண்டு இருந்தாள். காலையில் ஒருமுறை மகளை வந்து பார்த்துவிட்டுப் போன விஜயராகவன் மதியம் வரை வெளியே வரவில்லை.மருத்துவர் மாலைதான் வருவார் என்றும் விஜயனுக்கு ஏற்கனவே தெரிய படுத்தியும் ஆகிவிட்டது. நடுவில் விஜயின் பி ஏ சுந்தரம் மட்டும் இரண்டு முறை வந்து குழந்தையை பார்த்துவிட்டு சென்றார்.
விஜயராகவன் ஏதோ முக்கிய மீட்டிங் ஒன்றை நேரே செல்லாமல் ஆன்லைனில் நடத்துவது தெரிந்தது. மதியம் விஜயனுக்கான உணவு அவனது வீட்டிலிருந்து தருவிக்கப் பட்டிருந்தது. மாலை மருத்துவர் வரும் சமயத்தில் தான் விஜயனும் வெளியே வந்தது.
விஜயனின் முகத்தில் அவ்வளவு தவிப்பு.கண்களில் தெரியும் சோர்வு அவன் இன்னமும் சாப்பிடவில்லை என்பதை சொல்வதுபோல இருந்தது. மற்ற நர்ஸுகள் தயங்க மருத்துவர் அரவிந்தன் வந்து சென்ற பிறகு சந்தனா ஒரு ஜூஸை விஜயனின் அறையில் கொடுத்துவிட சொல்லிவிட்டாள்.
பழச்சாறு வரும்பொழுது சுந்தரத்துடன் ஏதோ விவாதம் செய்து கொண்டிருந்தான் விஜயராகவன். பழச்சாறு வந்ததை பார்த்த சுந்தரத்திற்கு வியப்பு தாளவில்லை. அதை எடுத்துக்குடித்தவனுக்குள் கொஞ்சம் புத்துணர்வாக இருந்தது. மதியம் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. காலை ஒருமுறை மட்டும் தயாவை பார்த்துவிட்டு வந்தது என உணவை விடுத்திருந்தான்.
இன்டெர்காமில் சந்தனாவை அழைத்து நன்றி கூறவும் மறக்கவில்லை.சுந்தரம் இன்னமும் சந்தனாவை சரியாக பார்த்தது இல்லை. இவன் கூறும் நன்றி எவ்வளவு முக்கியமானது என்பது சுந்தரத்திற்கு நன்றாகவே தெரியும்.வெளிப் பகட்டுக்காக வார்த்தைகளை சிதற விடமாட்டான்.அப்படிப்பட்டவன் ஒருவருக்கு நன்றி சொல்வது என்றால் அதன் ஆழம் அதிகம்தான்.
மருத்துவர் வந்து சென்றபிறகு விஜய ராகவன் மகளுடன் கொஞ்சநேரம் இருந்துவிட்டு மீண்டும் வேலைகளை பார்க்கவென்று அறைக்குள் நுழைந்து கொண்டான். இரண்டு மணிநேரம் வேலை செய்துவிட்டு அவன் தயாவை பார்க்க சென்ற நேரம் ,சந்தனா தயாவுடன் அமர்ந்தபடிக்கே விளையாடிக் கொண்டிருந்தாள்.குழந்தை அவளது மடியில் அமர்ந்து கொண்டிருக்க அண்ணாந்து அவளை பார்த்து ஏதோ விளையாட, இன்னொரு நர்ஸ் குழந்தையின் கையில் இருந்த ட்ரிப்சின் ஊசியை மற்றொரு கைக்கு மாற்றிக்கொண்டிருந்தார். வலி தெரியாமல் இருக்கத்தான் சந்தனா குழந்தையை திசை திருப்பும் வேலையை செய்துகொண்டிருந்தது.
திடீரென அந்த அறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கே நடக்கும் மற்ற நிகழ்வுகள் உறைக்கவில்லை. தயாவும் சந்தனாவும் அமர்ந்திருந்த நிலை ஒரு கவிதை போல அவன் மனதில் பதிந்தது. ஒருவேளை தயாவின் அம்மா இப்போது இங்கே இருந்திருந்தால் என்று தோன்றிய நிமிஷம்,’நிச்சயம் இப்படி உட்கார்ந்து குழந்தையுடன் நேரம் செலவழிக்க அவளால் முடியவே முடியாது. அப்போதும் யாரவது நர்ஸ் தான் பார்த்தாக வேணும் ‘என்றும் தோன்றி விட்டது. கசந்த முறுவலுடன் அங்கேயே கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு நின்று கொண்டான். குழந்தை தன்னை மறந்த நிலையில் பேசிக்கொண்டிருக்க சந்தனாவும் அவளுக்கு சமமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.தானே இருந்த அந்த மூவருமே விஜய ராகவன் வந்ததை கவனிக்கவில்லை.
நர்ஸ் ஊசியை மாற்றிவிட்டதும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியே செல்ல திரும்பும் பொழுது தான் விஜயனை கவனித்தார். லேசான புன்முறுவலுடன் அவர் வெளியேறிவிட, சந்தனா குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் இருந்தாள். விஜயன் அங்கேயே அமர்ந்து கொண்டான்.சந்தனா விஜயனை பார்த்தாலும் குழந்தையை தன் பக்கமாகவே வைத்து தூங்க வைத்துக்கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு தனக்கும் தயாவுக்குமான இழப்பு பெரியதாக தெரிந்தது.
குழந்தை தூங்கிவிட,தன்னையும் அறியாமல் தனது பாதச் சுவட்டை அங்கே அமர்ந்திருந்த விஜயனின் மனதில் பதித்துவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே சென்றாள் சந்தனா.
சந்தன தென்றல் ஜன்னலை தண்டிக்குமா… இல்லை குளிர்விக்குமா … காலம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும்? தென்றல் புழுங்கி தவிக்கும் நேரம் அதற்க்கு சாமரம் விசுவது யார்?
